🧐 இவர் வேற ரமணா?!
In Today's Edition: இந்திய உச்சநீதிமன்றத்தின் முக்கியமான உத்தரவு | சீனாவின் புதிய சீண்டல் | அமரீந்தர் சிங்கின் அடுத்த மூவ் | அப்புறம் சில அப்டேட்ஸ்!
ஹாய், ஹலோ… வணக்கம்! 🙋🏽♂️
Pegasus Case
ரஃபேல் விவகாரம், பீமா கோரேகான் விசாரணைன்னு கடந்த காலங்கள்ல பல வழக்குகள்ல, மத்திய அரசு, ``இது தேசப்பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம்"ன்னு சொல்லி, உச்சநீதிமன்றத்தோட கண்காணிப்புல இருந்து எஸ்கேப் ஆனது; ஆனா, பெகாசஸ் வழக்குல அதை நடக்கவிடாம பண்ணியிருக்கார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா. இத்தனைக்கும் அரசுக்கு எதிரான தீர்ப்புகூட இல்லை; வெறும் விசாரணைக் குழு மட்டும்தான் இப்போதைக்கு அமைக்கப்பட்டிருக்கு. அதுக்கே உச்சநீதிமன்றத்தைப் பாராட்டுறாங்க பலரும்… ஏன்னா இந்த நீதிமன்றத்தோட அண்மைக்கால வரலாறு அப்படி!
சரி, பெகாசஸ் வழக்குல ஏன் இந்த உத்தரவு முக்கியமா பார்க்கப்படுது?
கடந்த ஜூலை மாதம் உலகின் பல முன்னணி ஊடகங்கள் சேர்ந்து இஸ்ரேல் நிறுவனத்தின் பெகாசஸ் உளவு மென்பொருள் பற்றிய புலனாய்வு செய்திகளை வெளியிட்டாங்க. இதன்படி சுமார் 50,000-க்கும் மேற்பட்ட நபர்கள் வெவ்வேறு நாடுகள்ல சட்டவிரோதமாக அந்தந்த நாட்டு அரசாங்கங்களால் உளவு பார்க்கப்பட்டிருக்கலாம்னு கண்டுபிடிச்சாங்க.
இந்தியாவில் இந்தப் புலனாய்வு கட்டுரைகளை `தி வயர்’ இணையதளம் வெளியிட்டது. அந்த நிறுவனத்தின் புலனாய்வு படி இந்தியாவில் மட்டும் 161 பேர் அந்த உளவுப்பட்டியலில் இருந்தாங்க. உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஊடகவியலாளர்கள், செயற்பாட்டாளர்கள், ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல்வாதிகள்னு அந்தப் பட்டியல்ல பல முக்கிய நபர்கள் இருக்கவே, இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இந்த செய்தி வெளியானப்போதான் நாடாளுமன்றக் கூட்டத்தொடரும் நடந்தது. அங்கயும் இந்தப் பிரச்னை எதிரொலிச்சது.
``அரசு எங்களை பெகாசஸ் மூலமா உளவு பார்த்தது உண்மையா, இல்லையா? உண்மைன்னா அந்த அதிகாரத்தைக் கொடுத்தது யார்?”
இந்தக் கேள்விகளைத்தான் பாதிக்கப்பட்ட எல்லாரும் அரசை நோக்கி கேட்டாங்க; ரொம்ப எளிமையான கேள்விகள்ல?
- எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கேட்டாங்க; பதில் சொல்லல.
- ஊடகங்கள் கேட்டாங்க; பதில் சொல்லல.
- அரசால் உளவுபார்க்கப்பட்டது தொடர்பாக ஊடகவியலாளர்கள் என்.ராம், சசிகுமார் உள்பட இன்னும் சிலரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தாங்க. அங்க இதே கேள்விகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே கேட்டார்; ஆனா, அங்கயும் மத்திய அரசு பதில் சொல்லல!
வழக்கம்போல இது தேசப்பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம், அதுன்னு இதுன்னு மத்திய அரசு சொல்லி தப்பிக்க பார்த்தது. இதையடுத்துதான் அந்த வழக்கில் விசாரணையை நடத்தி, அப்புறம் வழக்கை ஒத்திவச்சது உச்சநீதிமன்றம். இந்நிலையில்தான் நேற்று இந்த வழக்கு தொடர்பா முக்கியமான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கு.
உத்தரவில் இருக்கும் விஷயம் இதுதான்!
``தேசப்பாதுகாப்புன்னு சொல்லியே எப்பவும் அரசு தப்பிக்கக்கூடாது. குடிமக்களின் சுதந்திரம், தனியுரிமை, ஊடகங்களின் பணி எல்லாம் இந்த நாட்டில் ரொம்ப முக்கியம்.”
``நாங்க பல தடவை கேட்டும் பெகாசஸ் மூலமா குடிமக்களை உளவு பார்த்ததான்னு நீங்க சொல்லவே இல்லை; அரசின் நிலைப்பாட்டை எங்களால புரிஞ்சிக்க முடியல. நீங்க கொடுத்த விளக்கங்கள் போதுமானதாகவும் இல்லை. அதனால் நாங்கள் இதற்காக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் தலைமையில் ஒரு நிபுணர் குழு அமைக்கிறோம். இந்த வழக்கில் விடை தெரியாம இருக்கும் கேள்விகளுக்கு இவங்க விடைசொல்லட்டும்!”
இந்த விவகாரத்துல எதிர்க்கட்சிகள், ஊடகங்கள், செயற்பாட்டாளர்கள்னு பலரும் கேட்டு அரசு பதில் சொல்லாம ஓடிட்டே இருந்த நிலைல, இப்ப உச்சநீதிமன்றத்தின் செயல்பாட்டால அரசுக்கு ஒரு நெருக்கடி ஏற்பட்டிருக்கு. வழக்கில் நீண்ட தாமதம் இருந்தாலும்கூட, நீதிமன்றத்தின் தற்போதைய இந்த நடவடிக்கை ஓரளவு திருப்தியளிக்கும் வகைல இருப்பதால்தான் இந்த உத்தரவை பலரும் வரவேற்கிறாங்க. இனி இந்த வழக்கு 8 வாரங்கள் கழிச்சு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்.
Facebook Papers
ஃபேஸ்புக் சி.இ.ஓ மார்க் ஸக்கர்பெர்க்கிற்கு திரும்பவும் ஒரு போதாத காலம். அந்த நிறுவனத்தில் வேலைபார்த்துட்டு, தற்போது விசில்ப்ளோயராக மாறியிருக்கும் ஃபிரான்சஸ் ஹாகன் என்பவர் ஃபேஸ்புக் நிறுவனத்தின் பல ரகசிய ஆய்வறிக்கைகளை சில வாரங்களுக்கு முன்பு ஊடகங்களிடம் பகிர்ந்துக்கிட்டார். அவர் முதலில் தொடங்குனது, `வால்ஸ்ட்ரீட் ஜர்னல்’ ஊடகத்தில்.
அவங்க இந்த ரகசியங்களை ‘Facebook Files’-னு வெளியிடவே ஃபேஸ்புக்கோட பல மோசமான முகங்கள் வெளிவந்துச்சு. அதைத் தொடர்ந்து அந்த ஆவணங்களை இன்னும் பல ஊடகங்களிடமும் பகிர்ந்துகிட்டார். ஆயிரக்கணக்கான பக்கங்கள்கொண்ட அந்த ஆய்வறிக்கைகளை பல ஊடகங்களும் ஆராய்ச்சி செஞ்சு, அது தொடர்பா முன்னாள் / இந்நாள் ஃபேஸ்புக் ஊழியர்கள்ட்ட பேசி தொடர்ந்து கட்டுரைகள் வெளியிட்டுட்டு வர்றாங்க. இதுதான் இப்ப ‘Facebook Papers’ன்ற பேர்ல ட்ரெண்டிங்ல இருக்கு.
அப்படியென்ன ரகசியங்கள் வெளியாச்சு?
ஃபேஸ்புக் நிறுவனம் ஃபேஸ்புக்கோட சேவைகள் மற்றும் இன்ஸ்டாகிராம் குறித்து நிறைய ஆய்வுகள் செஞ்சிருக்காங்க. அதில் இந்த சேவைகள் குறித்து நிறைய எதிர்மறையான, மோசமான விஷயங்கள் தெரியவந்திருக்கு. சில உதாரணங்கள்…
- இன்ஸ்டாகிராம்னால நிறைய பதின்பருவ பெண்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகுறாங்க;
- ஃபேஸ்புக் அல்காரிதம்கள் வெறுப்புப் பேச்சுகளைக் கையாள்வதில் சரியா செயல்படலை…. இப்படி இன்னும் சில!
“இந்த தகவல்களை ஃபேஸ்புக் நிறுவனம் பொதுவெளியில இருந்து மறைச்சதோட, இதை சரிசெய்றதுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கல; மாறா நிறுவனத்தின் லாபம் பாதிக்கக்கூடாதுன்றது மட்டும்தான் ஃபேஸ்புக்கின் நோக்கமா இருந்தது”ன்றதுதான் ஹாகனோட முக்கியக் குற்றச்சாட்டு.
இதோட, பிற ஊடகங்களோட புலனாய்வுக்கட்டுரைகளும் ஃபேஸ்புக், அதோட சேவைகள்ல, பிறழ்தகவல்கள் (Disinformations), வெறுப்புப்பேச்சுகள், மனிதக்கடத்தல் விவகாரம் உள்பட பல பிரச்னைக்குரிய விஷயங்களைக் கையாள்வதில் தோல்வியடைஞ்சிருப்பதை உறுதிப்படுத்திட்டு வருது.
இந்தப் பிரச்னைகள் அந்த நிறுவனத்தை இப்போதைக்கு பெரிய அளவில் பாதிக்கலைன்னாலும்கூட, மார்க் குறைஞ்சிட்டே வர்ற இளம் பயனாளர்களைத் தக்கவைக்க ஃபேஸ்புக்கோட பாதையை மாற்றியே ஆகவேண்டிய கட்டாயத்துல இருக்கார். அதனால், நிறுவனத்தின் பெயர் மாற்றம் உள்பட சில சில மாற்றங்களை மார்க் கிட்டயிருந்து எதிர்பார்க்கலாம்.
மீண்டும் சீண்டும் சீனா
கடந்த 23-ம் தேதி சீன நாடாளுமன்றம் நிறைவேற்றியிருக்க புதிய சட்டம் ஒன்று, இந்தியாவை ரொம்பவே கோபப்படுத்தியிருக்கு. அந்த சட்டம் சொல்றது இதுதான்…
‘‘சீனாவின் இறையாண்மையும், அதன் எல்லைகளும் புனிதமானவை. இவற்றிற்கு ஆபத்து வர்ற எதையும் சீன அரசு அனுமதிக்கக்கூடாது. இதை பலப்படுத்தும் வேலைகளை அரசு தீவிரமாக்கணும்!”
இது ஏன் இந்தியாவை கோபப்படுத்தியிருக்குன்னா…
2020 மே மாதம் சீன எல்லைக்கோட்டுப் பகுதியில இந்திய - சீன வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டதுல இருந்தே இருநாட்டுக்கும் இடையேயான உறவு சரியில்ல. அதுவும் சீனா, வழக்கத்துக்கு மாறாக இந்திய சீன எல்லைகள்ல கண்காணிப்பை அதிகப்படுத்தவும், வீரர்களைக் குவிக்கவும் பிரச்னை இன்னும் தீவிரமாச்சு. நிலைமையை சுமுகமாக்க இருதரப்பும் இதுவரை 13 முறை பேச்சு வார்த்தை நடத்தியிருக்காங்க. ஆனாலும், எந்த முன்னேற்றமும் இல்லை. இதனால் இந்திய - சீன எல்லைகள்ல பதற்றம் குறையாம இருக்கு. இந்நிலையில்தான் இப்படியொரு சட்டம்… “சீன எல்லைகளைக் காக்க என்ன வேணாலும் பண்ணுங்கன்னு!”
சீனா தன்னோட எல்லைகளை மொத்தம் 14 நாடுகளோட பகிர்ந்துக்குது. அதில் எல்லைப் பிரச்னைகள் இருக்குறது இந்தியா, பூடான் ஆகிய இரண்டு நாடுகளுடன் மட்டும்தான். இதில் இந்தியாவோட இப்ப எல்லைப் பிரச்னை தொடர்பா பேச்சுவார்த்தை நடந்திட்டிருக்கு. இப்படியொரு சூழ்நிலைல, சீனா இப்படியொரு சட்டம்போட்டால் அதற்கு என்ன அர்த்தம்? அதைத்தான் நேற்று காட்டமா அறிக்கைல சொல்லியிருக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்.
“இந்திய எல்லைகளை ஊடுருவவதற்கு இந்த சட்டத்தையெல்லாம் காரணமா சொல்லலாம்னு நினைக்காதீங்க. அதுவும் இல்லாம, சீன எல்லைகள் பற்றிப் பேசும் இந்த சட்டம் இந்தியாவோட இருக்கும் எல்லைப் பிரச்னைகள் பற்றி தன்னிச்சையான பார்வையைக் கொண்டிருக்கு. இதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் நடந்திட்டிருக்கும் பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயங்களை இந்த சட்டம் எந்தவிதத்திலும் பாதிக்காது”ன்னு விரிவாக எதிர்ப்பைப் பதிவு பண்ணியிருக்கு இந்தியா.
அமரீந்தர் சிங்கின் புதிய கட்சி
“எனக்காடா போட்றீங்க எண்டு கார்டு”னு ஒரு மாசமா மனசுக்குள்ளயே பேசிக்கொண்டிருந்த அமரீந்தர் சிங் ஒரு வழியா தன்னோட முடிவை வெளிப்படையா சொல்லிட்டார். பஞ்சாப் மாநில முதல்வர் பதவியிலிருந்து விலகியவர், சுமார் ஒரு மாதம் கழிச்சு நேத்துதான் பத்திரிகையாளர்களை சந்திச்சிருக்கார். அதில் சில விஷயங்களை மட்டும் உறுதிப்படுத்திருக்கார். அவை…
“புதிய கட்சி தொடங்குறது உறுதி; தேர்தல் கமிஷன் சின்னம் மற்றும் பெயருக்கு அனுமதி கொடுத்ததும் அறிவிச்சுடுவேன்.
சட்டமன்றத் தேர்தல் வர்றதுக்கு முன்னாடி கட்சியை ஆரம்பிச்சிருவேன். பஞ்சாப்பின் 117 தொகுதிகள்லயும் போட்டியிடுவது உறுதி. நிச்சயமாக பி.ஜே.பி கூட தொகுதிப்பங்கீடும் இருக்கும்.
நிறைய காங்கிரஸ் தலைவர்களே என்கூட வரத் தயாரா இருக்குறாங்க!”
ஆக, காங்கிரஸிலிருந்து உதயமாகும் இன்னொரு கட்சி ரெடி!
லாலு ரிட்டர்ன்ஸ்
சுமார் 6 வருஷம் கழிச்சு திரும்பவும் தேர்தல் பிரசார களத்திற்கு திரும்பியிருக்கிறார் ராஷ்ட்ரிய ஜனதா தள் தலைவர் லாலு பிரசாத் யாதவ். கடைசியாக லாலு பிரசாரம் செய்தது 2015-ல் சட்டமன்றத் தேர்தலுக்குத்தான். அதற்குப் பிறகு ஊழல் வழக்கில் சிறைக்குப் போனதாலும், உடல்நலக்குறைவாலும் தேர்தல் களத்திற்கு வராமல் இருந்தார். இந்நிலையில்தான் பீகாரில் நடைபெறவிருக்கும் தாராபூர் இடைத்தேர்தலுக்காக 6 வருஷம் கழிச்சு, நேற்று பிரசாரத்தில் களமிறங்கியிருக்கிறார்.
பீகாரில் தாராபூர் மற்றும் குசேஷ்வர் அஸ்தான் ஆகிய இரு தொகுதிகளுக்கு அக்டோபர் 30-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவிருக்கு. இதில் நிதிஷ் குமாரின் ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் ஆகிய இருகட்சிகளையும் எதிர்த்து ராஷ்ட்ரிய ஜனதா தளம் போட்டியிடுது. இதற்கான பிரசாரத்தில்தான் இப்ப லாலு பேசியிருக்கார். மக்களை ஈர்க்கும் வகையிலான அரசியல் பேச்சுகளுக்கு, ரொம்பவும் பேர் போனவர் லாலு!
ஏர் இந்தியாவை டாடாவுக்கு இந்தியா அரசு விற்பனை செய்றதால, அந்நிறுவனத்திற்கு செலுத்தவேண்டிய பாக்கித்தொகையை எல்லாம் சீக்கிரம் செலுத்தச் சொல்லி அனைத்து துறைகளுக்கும் உத்தரவிட்டிருக்கு மத்திய நிதியமைச்சகம்.
ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் வழக்குல, ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்குவது தொடர்பான விசாரணை 2 நாளா நடந்துட்டு இருக்கு. இன்னைக்கு முடிவு தெரியவரலாம்.
சுமார் 5,000 கி.மீ வரை துல்லியமாக (சீனாவின் பல பகுதிகள் உள்பட) சென்று தாக்கும் திறன்பெற்ற அக்னி 5 ஏவுகணை சோதனை நேற்று வெற்றிகரமா நடந்துருக்கு.
தடகள வீரர் நீரஜ் சோப்ரா உள்பட மொத்தம் 11 விளையாட்டு வீரர்கள் மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருதுக்காகவும், 35 பேர் அர்ஜூனா விருதுக்காகவும் பரிந்துரைக்கப்பட்டிருக்காங்க.
பாரத் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசிக்கு நேற்று WHO-வின் அனுமதி கிடைக்கும்னு எதிர்பார்க்கப்பட்டது. ஆனா, இன்னும் கிடைக்கல. `பாரத் பயோடெக்கிடம் கூடுதல் தரவுகள் கேட்டிருக்கோம்’னு இந்த தாமதத்திற்கு விளக்கம் கொடுத்துருக்கு WHO. இந்த விவகாரத்தில் அடுத்த முடிவு நவம்பர் 3-ம் தேதி எடுக்கப்படும்.
Rain Alert: 28/11/2021
கனமழை பெய்யும் மாவட்டங்கள்:
ராமநாதபுரம்,
துாத்துக்குடி,
திருநெல்வேலி,
கன்னியாகுமரி,
மயிலாடுதுறை,
நாகப்பட்டினம்,
காரைக்கால்
மிதமான மழை பெய்யும் மாவட்டங்கள்
சென்னை
டெல்டா மாவட்டங்கள்
தென் மாவட்டங்கள்
இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த துக்ளக் ஆண்டு விழாவில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி நீதிபதிகள் நியமனம் பற்றி தரக்குறைவா பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையாச்சு. இதற்காக அவர்மேல அவமதிப்பு வழக்கு தொடரணும்னு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த எஸ்.துரைசாமி என்பவர், அப்போதைய தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண்கிட்ட அனுமதி கேட்டிருந்தார். ஆனால், விஜய் நாராயண் அனுமதி மறுத்துட்டார்.
இந்நிலையில், தற்போதைய தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் அந்த மறுப்பை திரும்பப்பெற்றுக்கொண்டு, எஸ்.துரைசாமியின் மனுவை மறுபரிசீலனை செய்யப்போவதா சொல்லியிருக்கார். காரணம்? ஏன்னா, விஜய் நாராயண், முறையாக பரிசீலிக்காம தவறுதலாக அந்த மனுவை நிராகரிச்சிருக்காராம்.
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்டவங்கள்ல 129 பேர், அண்மைல நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல்ல வெற்றி பெற்றிருந்தாங்க. அவங்களை நேற்று நேரில் சந்திச்சிருக்கார் விஜய்.
9. ICC T20 வீரர்களுக்கான தரவரிசைப்பட்டியல் நேற்று வெளியாகியிருக்கு. ஷகிப் அல் ஹசன், ஆல்ரவுண்டர்களுக்கான பட்டியல்ல முதலிடம் பிடிச்சிருக்கார்.
10. டிடிவி தினகரன் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று தஞ்சாவூர் பூண்டியில் நடந்துச்சு. சசிகலா உள்பட தினகரன் வீட்டு சொந்தங்கள் பலரும் இதில் கலந்துகிட்டாங்க. இந்த நிகழ்ச்சியின் சர்ப்ரைஸ் என்ட்ரி ஓ.பி.எஸ்ஸின் தம்பியான ஒ.ராஜா!
அவ்வளவுதான்… திரும்ப நாளைக்கு காலைல 7 மணிக்கு சந்திப்போம்!
The Subject Line-னோட இன்னைக்கு அப்டேட்ஸ் உங்களுக்குப் பிடிச்சிருக்கும்னு நம்புறேன். பிடிச்சிருந்தா கீழ இருக்க பட்டன் மூலமா உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க… ஏதாச்சும் விஷயங்களை மாத்தணும்னா எனக்கு மெசேஜ் பண்ணுங்க!
Create your profile
Only paid subscribers can comment on this post
Check your email
For your security, we need to re-authenticate you.
Click the link we sent to , or click here to sign in.