🎊 இன்னைக்கு கொண்டாடலாமா வேணாமா? 🎉
In Today's Edition: உலகத் தலைவர்கள் ஒன்றுகூடிய COP26 | சுமார் 600 நாள்களுக்குப் பிறகு திறக்கப்படும் பள்ளிகள் | பாட்டி குறித்த ராகுல் காந்தியின் நினைவுகள்
ஹாய், ஹலோ வணக்கம் ☕️
தமிழ்நாட்டின் தினத்தந்தி, தினமலர் போல, மகாராஷ்டிராவின் முன்னணி நாளிதழ் லோக்மத். இந்த நாளிதழோட ஒரு செய்தி தலைப்பை ட்விட்டர்ல படிச்சதும், ‘அட.. ஆமால்ல’ன்னு சொல்லவச்சது. அந்த செய்தி என்னன்னா, “ஆர்யன் கான் கைது செய்யப்பட்டதிலிருந்து இதுவரை பெட்ரோலின் விலை ₹X ரூபாய் வரை உயர்ந்திருக்கிறது”.
ஆமாம்… இதேதான்.
“ஆர்யன் கான் கைது செய்யப்பட்ட அக்டோபர் 2-ம் தேதில இருந்து அவர் ரிலீஸான அக்டோபர் 30-ம் தேதி வரைக்கும் அவர் மேலதான் மீடியா வெளிச்சம் அதிகம் இருந்துச்சு. ஆனா, அதேசமயத்துலதான் பெட்ரோல், டீசல் விலையும் இவ்ளோ உயர்ந்திருக்கு; இதை மறந்திடாதீங்க மக்களே”ன்றதுதான் அந்த செய்தியின் சாராம்சம்.
சரி, எவ்வளவு உயர்ந்திருக்குனு சொல்லவே இல்லயேன்னுதானா பார்க்குறீங்க? பதில், இன்றைய The Subject Line Edition-னோட கடைசில இருக்கு..! அங்க தெரிஞ்சுக்குறதுக்கு முன்னாடி நீங்களே 30 நாள் கேப்ல எவ்ளோ உயர்ந்திருக்கும்னு யூகிங்க பார்ப்போம் 😉.
❶ இன்னைக்கு தமிழ்நாடு தினமா, இல்லையா?
பல ஆண்டுகளாக சென்னை மாகாணமாக ஒன்றுபட்டு இருந்துவந்த நிலப்பரப்பு, 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்டு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட தனித்தனி மாநிலங்களா பிரிஞ்சது. இப்படி தனி மாநிலங்களாக உருவான நாளைத்தான் அந்த மாநிலங்களில், நவம்பர் 1 அன்று மாநில தினங்களாகவும் கொண்டாடிட்டு இருக்காங்க. இதேமாதிரி தமிழ்நாடும் 2019-ம் ஆண்டிலிருந்து தமிழ்நாடு தினமா நவம்பர் 1-ஐ கொண்டாடிட்டு இருக்கு. ஆனா, இந்த ஆண்டு நவம்பர் 1-ஐ எல்லைப்போராட்டங்களில் ஈடுபட்ட தியாகிகளை கௌரவிக்கும் தினமாக மட்டுமே தமிழக அரசால் அனுசரிக்கப்படும் எனவும், இதற்கு பதிலா ஜூலை 18-ம் தேதியை தமிழ்நாடு நாளாக அறிவிக்க விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் அறிவிச்சிருந்தார்.
ஜூலை 18-ம் தேதி மாற்றத்திற்கு, “பல தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் அறிஞர் அண்ணா இந்த நிலப்பரப்புக்கு `தமிழ்நாடு’ எனப்பெயரிட வேண்டும்னு தீர்மானம் நிறைவேற்றுன ஜூலை 18-ஐதான் தமிழ்நாடு தினமாக கொண்டாட கோரிக்கை வச்சதாகவும், அதனாலேயே இந்த முடிவு”ன்னும் காரணம் சொன்னார் முதல்வர். இதுதான் இப்ப விவாதங்களைக் கிளப்பியிருக்கு.
தி.மு.க கூட்டணிக் கட்சிகள்ல ம.தி.மு.க மட்டும் இதை வரவேற்றிருக்கு. வி.சி.க தலைவர் திருமாவளவன், “அரசாணை வெளியிடுவதற்கு முன் அறிஞர்கள், எல்லைப் மீட்பு போராளிகள் மற்றும் எதிர்க்கட்சிகளை ஆலோசித்து முடிவெடுங்கள்”னு சொல்லிருக்கார். ஆனா, அ.தி.மு.க, பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் கடுமையா எதிர்த்திருக்காங்க.
‘தமிழ்நாடு தனி மாநிலமாக உருவான நவம்பர் 1-ஐ தமிழ்நாடு தினமாக கொண்டாடுவதுதான் பொருத்தமே தவிர, அதற்கு பெயரிட்ட ஜூலை 18 பொருத்தமல்ல’ன்னு இதைக் கண்டிச்சிருக்கார் ராமதாஸ்.
இதனால, இன்னைக்கு தமிழ்நாட்டுக்கு பிறந்தநாள் கொண்டாடலாமா, வேண்டாமானு திடீர் குழப்பம் உருவாகியிருக்கு. முதல்வர் ஸ்டாலின்தான் இனி முடிவு சொல்லணும்!
சரி, இந்த விவகாரத்துல உங்க என்ன கருத்து என்ன?
❷COP26: என்னங்க சார் உங்க திட்டம்?
COP26 (Conference of the Parties to the UN Convention on Climate Change 26), கிளாஸ்கோ மாநாடு போன்ற வார்த்தைகளை இன்னும் 2 வாரத்திற்கு ஊடகங்களில் அதிகம் பார்ப்பீங்க. இந்த மாநாடு எதற்கு, இதில் இந்தியாவோட பங்கு என்னனு தெரிஞ்சுப்போமா?
`நிச்சயதார்த்தம் டு திருமணம்’
காலநிலை மாற்றத்தை எப்படி சிறப்பா எதிர்கொள்வது, அதனால ஏற்படும் பிரச்னைகளை எப்படி கையாள்வதுன்னு ஆண்டுதோறும் இப்படி உலக நாடுகள் ஒன்றுகூடி பேசுறது வழக்கம். கொரோனா காரணமாக கடந்த ஆண்டு நடக்கவிருந்த மாநாடு தள்ளிவைக்கப்பட்டு, அதுதான் இந்த ஆண்டில் நேற்று தொடங்கியிருக்கு. இப்படி வருடந்தோறும் நடந்த மாநாடுகள்ல இது 26-வது மாநாடு; அதான் COP26.
இதேமாதிரி 2015-ல் நடந்த பாரிஸ் மாநாட்டில்தான் மிக முக்கியமான ‘பாரிஸ் ஒப்பந்தம்’ கையெழுத்தாச்சு. அதன்படி, இந்த பூமியின் வெப்பநிலையை 2°C-க்குள்ளேயே கட்டுப்படுத்தவும், முடிஞ்சா 1.5°C-க்கு கொண்டுவரவும் உலக நாடுகள் தங்களோட பங்களிப்பைத் தரணும்னு முடிவாச்சு. பல நாடுகளும் இதற்காக அவர்களோட இலக்குகளை அறிவிச்சாங்க. அதோட நிலை இப்ப என்ன, இனிமேல் உலக நாடுகள் என்ன செய்யணும், இந்த 5 ஆண்டுல நாம தவறவிட்ட விஷயங்கள் என்னென்னனு விவாதிப்பதுதான் இந்த ஆண்டின் மையமா இருக்கப்போகுது.
இதைத்தான் கிரீன்பீஸ் அமைப்பின் தலைவர் ஜெனிஃபர் மோர்கன், “உலக வெப்பநிலையை 1.5°C-க்கு கொண்டு வர்றதுதான் இலக்கு. அதற்காக, 2015-ல பாரிஸ்ல நடந்தது நிச்சயதார்த்தம். இப்ப 2021-ல நடக்கப்போறது கல்யாணம். அந்த இலக்குக்காக எவ்வளவு நாடுகள், கார்பரேட் நிறுவனங்கள் தயாரா இருக்காங்கன்றதைத்தான் இந்த மாநாட்டுல பார்க்கப்போறோம்”னு சொல்லியிருக்கார்.
என்ன இலக்குகள்?
2015-ல் பாரிஸ் ஒப்பந்தத்தில் முக்கியமா 2 விஷயங்கள் பேசப்பட்டது. முதலாவது, ஒவ்வொரு நாடும் தாங்கள் வெளியிடும் பசுமை இல்ல வாயுக்களின் அளவைக் குறைக்கணும், அதற்கான இலக்குகளை நிர்ணயிக்கணும். 2050-க்குள்ள Net Zero நிலையை அடையணும்.
இரண்டாவது, அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் பிற ஏழை நாடுகள் தங்கள் மாசுபாட்டைக் குறைக்க ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர் நிதியுதவி செய்யணும்.
பல நாடுகள் இந்த இலக்குகளை நிர்ணயித்தாலும்கூட, அதை யாரும் சரியா பின்பற்றலை. குறிப்பா நிதியுதவி விவகாரத்தில் அமெரிக்கா உள்பட எந்த நாடும் அவங்க வார்த்தையை காப்பத்தலை. இதையெல்லாம் திரும்ப ஒழுங்குபடுத்துறதுதான் இந்த ஆண்டு மாநாட்டின் சவால்.
இந்தியா என்ன செய்யப்போகுது?
காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படப்போகிற நாடுகளின் பட்டியல்ல இந்தியா 7-வது இடத்துல இருக்கு. பசுமை இல்ல வாயு உற்பத்தி வெளியீட்டில் 3-வது இடத்தில் இருக்கு. ஆனாலும், இந்தியா இன்னும் தன்னுடைய Net Zero இலக்கை நிர்ணயிக்கல.
அமெரிக்கா, சீனாவோட ஒப்பிட்டா நாம வெளியிடும் மாசு குறைவுன்னாலும், இந்தியா எப்போ தன் அந்த நாடுகளை மாதிரியே Net Zero இலக்கை வெளியிடுவாங்கன்னு பலரும் எதிர்பார்த்திட்டு இருக்காங்க. ஒருவேளை இந்தியா இந்த மாநாட்டில் அதை அறிவிக்கலாம்.
இந்த Net Zero-ன்னா என்னன்னு கேட்கிறீங்களா? ஒரு நாடு எவ்வளவு கார்பனை வளிமண்டலத்தில் வெளியிடுதோ, அதே அளவு கார்பனை வளிமண்டத்திலிருந்து உட்கிரகிக்கணும் (காடுகள் வளர்ப்பு, கார்பன் நுகர்வு தொழில்நுட்பங்கள் மூலம்). அப்போதான் கார்பன் நியூட்ரல் நிலையை அடைய முடியும்.
அமெரிக்கா 2050-ம் ஆண்டையும், சீனா 2060-ம் ஆண்டையும் அவங்களோட Net Zero இலக்கா நிர்ணயிச்சிருக்காங்க.
❸ 600 நாட்களுக்குப் பிறகு..!
9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் மாதமே பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், இன்று முதல் 1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகளில் வகுப்புகள் தொடங்கப்படுது.
முதல் நாளான இன்று பிள்ளைகளுக்கு பள்ளிகளுக்கு பூங்கொத்துகள் மற்றும் இனிப்புகள் கொடுத்து உற்சாகமாக வரவேற்பு கொடுங்கன்னு ஆசிரியர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு நேற்று முன்தினம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இவர்களுக்கு வழக்காம போடப்பட வேண்டிய, தொண்டை அடைப்பான் (டிப்தீரியா), கக்குவான் இருமல் (பெர்ட்டூசிஸ்), ரணஜன்னி (டெட்டன்ஸ்) தடுப்பூசிகள் நவம்பர் 5-ம் தேதில இருந்து போடப்படவிருக்கு.
ட்ரான்சியென்ட் இஸ்கெமிக் அட்டாக் காரணமாக கடந்த சில நாள்களாக மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த சூப்பர்ஸ்டார் நேத்து வீடு திரும்பிட்டார். இப்போ நலமா இருப்பதாகவும், அவருக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றின்னும் Hoote-ல அப்டேட்டும் பண்ணிட்டார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - நியூஸிலாந்து T20 போட்டியில இந்தியா மோசமான தோல்வியை சந்திச்சிருக்கு.
India - 110/7 (20 Overs)
New zealand - 111/2 (14.3 Overs)
“நாங்கள் தைரியமா விளையாடதுதான் தோல்விக்கு காரணம்”ன்றது தோல்விக்கான கேப்டன் கோலியின் பதில்.
இனி அடுத்து வரவிருக்கும் ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமீபியா-வுக்கு எதிரான போட்டிகள்ல பெரிய வெற்றி பெற்று நெட் ரன் ரேட்டை உயர்த்துனா மட்டும்தான், லீக் போட்டிகளின் முடிவில் அரையிறுதிக்காக இருக்கும் சின்ன வாய்ப்ப பற்றியாவது பரிசீலிக்க முடியும். அதுவும் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளின் பங்களிப்பை பொருத்துதான்றதால், ஏறக்குறைய இந்தியாவுக்கான வாய்ப்பு முடிவுக்கு வந்தாச்சு.
முன்னாள் இந்தியப் பிரதமர், இந்திரா காந்தியின் இறுதிச்சடங்கின்போது எடுக்கப்பட்ட படம்தான் இது. இதில் சோனியா காந்தியின் தோளில் முகம்புதைத்து நின்றுகொண்டிருக்கும் அந்த சிறுவன், ராகுல்காந்தி.
இந்திரா காந்தியின் நினைவுதினமான நேற்று, இந்த சம்பவம் குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார் ராகுல் காந்தி. அதில் இப்படி முகத்தை மறைத்து நிற்பது ஏன் என்பதற்கும் ஒரு உணர்ச்சிபூர்வமான காரணமும் சொல்லியிருக்கார்.
இந்திரா காந்தி கொல்லப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே ராகுல் காந்தியிடம், `எனக்கு என்ன ஆனாலும் நீ அழக்கூடாது’ என சொன்னதாகவும், அவங்களுக்கு அப்படி ஒரு பயங்கரம் நடக்கும்னு முன்னமே உணர்ந்திருக்காங்க போலன்னும் வீடியோவில் பேசியிருக்கார். அந்த வார்த்தைகள்தான் இப்படி அழாம முகத்தை மறைக்கவும் காரணமாம்.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நேற்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியிருக்கார்.
Rain Updates:
சரி, இப்ப ஆரம்பத்துல கேட்ட கேள்விக்கான விடைக்கு வருவோம். இதுதான் அந்த செய்தி
விடை: 6.62 ரூபாய்.
அதாவது, ஆர்யன் கைது செய்யப்பட்ட அக்டோபர் 2-ம் தேதியிலிருந்து (₹108.19) விடுதலையான அக்டோபர் 30-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் (₹114.81) மட்டும் மும்பையில் 6.62 ரூபாய் பெட்ரோல் விலை ஏறியிருக்கு.
இதே கணக்கை சென்னை பெட்ரோல் விலைக்கு போட்டு பார்த்தா, விடை = 5.94 ரூபாய்.
மும்பையோ, சென்னையோ… தினமும் 30-35 காசுகள் கொஞ்சம் கொஞ்சமா பெட்ரோல், டீசல் ஏற்றப்படுது. இதற்கு மத்திய அரசு யாரை குறைசொல்லும்ணுதான் தெரியல!
அவ்வளவுதான்…
The Subject Line-னோட இன்னைக்கு அப்டேட்ஸ் உங்களுக்குப் பிடிச்சிருக்கும்னு நம்புறேன். பிடிச்சிருந்தா கீழ இருக்க பட்டன் மூலமா உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க… இன்னும் ஏதாச்சும் இந்த லிஸ்ட்ல சேர்க்கணும், இருக்குற விஷயங்கள்ல ஏதாச்சும் மாத்தணும்னா எனக்கு மெசேஜ் பண்ணுங்க!
திரும்ப நாளைக்கு காலைல 7 மணிக்கு சந்திப்போம்!