🗳 Voter ID + Aadhaar; நிச்சயம் இணையத்தான் வேண்டுமா?
இன்றைய TSL-ன் பிற ஹைலைட்ஸ்: ஓமிக்ரான் அச்சத்தால் சரிந்த பங்குச்சந்தை | சிக்குவாரா ராஜேந்திர பாலாஜி? | ஐஸ்வர்யா ராயை ஏன் விசாரித்தது அமலாக்கத்துறை? | Reading Time: ⏱ 5 Mins
ஹாய், ஹலோ… வணக்கம் 👋
இன்றைய தினத்தின் டாப் அப்டேட்ஸ் இதோ…
போதிய விவாதங்களின்றி, அவசர கதியில் நேற்று லோக் சபாவில் நிறைவேற்றப்பட்ட, தேர்தல் சட்டங்கள் திருத்த மசோதா, அரசியல் கட்சியினரிடையே பெரும் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது. காரணம், அதில் இடம்பெற்றிருந்த வாக்காளர் அடையாள அட்டையையும், ஆதார் எண்ணையும் இணைக்கும் ஒரு அம்சம்தான்.
என்ன பிரச்னை அதில்?
தேர்தல் சட்டங்கள் திருத்த மசோதாவில் மொத்தம் 4 புதிய திருத்தங்கள் இடம்பெற்றிருந்தன. அதில் ஒன்றுதான் இந்த ஆதார், வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு. இது என்ன சொல்கிறது?
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1950-ன், பிரிவு 23-ல் திருத்தம் செய்து, தேர்தல் ஆணையம் ஆதார் மற்றும் வாக்காளர் விவரங்களை இணைப்பதற்கான அதிகாரத்தை வழங்குகிறது இந்த மசோதா.
இதன்மூலம், புதிதாக வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பவர்களிடம், அதிகாரிகள் அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த ஆதார் எண்ணை கேட்கலாம். ஏற்கெனவே வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரு வாக்காளர், வெவ்வேறு தொகுதிகளில் பதிவு செய்யாமல் இருப்பதை உறுதிசெய்யவும், ஒரே தொகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்டமுறை பதிவு செய்யாமல் இருப்பதை உறுதிசெய்யவும்கூட, அவரின் ஆதார் தகவல்களைக் கேட்டு பயன்படுத்தலாம்.
ஆனால், ஆதார் இல்லை என்பதாலேயே ஒருவரின் பெயரை பட்டியலில் இருந்து நீக்கவோ, அவரை பட்டியலில் சேர்க்காமல் இருக்கவோ கூடாது. அதற்கு பதிலாக டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட வேறு அடையாள அட்டைகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்த ஆதார் விவரங்களை, வாக்காளர் அடையாள அட்டையோடு இணைப்பது என்பது கட்டாயமல்ல; வாக்காளர் தன் சுயவிருப்பத்தின் பெயரில் மட்டுமே இதைச் செய்யலாம்.
இந்த நான்கும்தான் அந்த முக்கிய அம்சங்கள்.
ஏன் இதைச் செய்கிறது தேர்தல் ஆணையம்?
ஒரே ஒரு காரணத்தைதான் பல ஆண்டுகளாகச் சொல்கிறது தேர்தல் ஆணையம். அது, வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் போலி வாக்காளர்களைக் கண்டறிந்து நீக்குவது.
சரி, இதை ஏன் எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன?
காரணம், தேர்தல் ஆணையம் மற்றும் ஆதார் ஆணையத்தின் (UIDAI) கடந்தகால வரலாறு அப்படி. உண்மையில் தேர்தல் ஆணையம் நினைத்தவுடன் சுமுகமாக முடிய இந்த ஆதார், வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு என்பது அவ்வளவு சாதாரணமானது அல்ல.
அதில் சட்டசிக்கல்கள், தொழில்நுட்ப சிக்கல்கள், பிரைவசி சிக்கல்கள், அரசியல் சிக்கல்கள் என அனைத்துமே இருக்கின்றன. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னையில் ஏன் அரசும், தேர்தல் ஆணையமும் அவசரப்படுகின்றன என்பதுதான் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு.
என்னதான் பிரச்னை இதில்?
👨🏽⚖️ சட்ட சிக்கல்:
குடிமக்களின் பிரைவசி தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த மிக முக்கியமான தீர்ப்பு 2017-ல் வழங்கப்பட்ட புட்டசாமி வழக்கின் தீர்ப்பு. அதில், ``ஆதாரை அரசின் சேவைகள் வழங்குவது தொடர்பாக மற்றும் வருமான வரி கண்காணிப்புக்காக பான் கார்டுடன் இணைப்பதை தவிர்த்து வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது” என்றது உச்சநீதிமன்றம். ஆனால், பின்னர் வங்கிகளும், தனியார் நிறுவனங்களும் ஆதாரைப் பயன்படுத்திக் கொள்ள சட்டத்திருத்தம் கொண்டுவந்தது மத்திய அரசு. தற்போது இதேபோல வாக்காளர் அடையாள அட்டைக்கும் கொண்டுவந்திருக்கிறது.
ஆனால், இப்படி சட்டம் இயற்றுவதால் மட்டுமே, அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பிலிருந்து தப்பிவிட முடியாது என்கின்றனர் நிபுணர்கள். காரணம், ஆதாரை அரசு நினைப்பதற்கெல்லாம் பயன்படுத்த முடியாது. அதற்கு வலுவான, தகுந்த காரணங்கள் வேண்டும். இந்த விவகாரத்தில், தேர்தல் ஆணையம் சொல்லும் போலி வாக்காளர்களை நீக்குவது என்பது அப்படிப்பட்ட ஒன்றல்ல என்பது அவர்களின் வாதம்.
மேலும், தேர்தல் ஆணையம் சொல்லும், வாக்காளர் பட்டியல் சிக்கல்களுக்கு ஆதார்தான் வேண்டுமென்று இல்லை. வேறு தொழில்நுட்ப முயற்சிகள் மூலமாகவும் தீர்வுகண்டு விட முடியும் என்கின்றனர்.
🗳 அரசியல் & தொழில்நுட்ப சிக்கல்:
எல்லாவற்றிற்கும், அரசாங்கம் ஆதாரையே கேட்பதால், அது மட்டுமே மிகத்துல்லியமான, மதிப்புவாய்ந்த அடையாள அட்டையாக பலரால் கருதப்படுகிறது; ஆனால், உண்மையில் அதுவும் பல்வேறு தகவல் பிழைகளைக் கொண்ட ஒரு Database-தான். ஆதார் பயனாளர்கள் பலர் தங்கள் விவரங்களில் இருக்கும் பிழைகளை மற்ற அடையாள அட்டை போலவே சுட்டிக்காட்டி திருத்திக்கொண்டிருக்கின்றனர். இப்படியிருக்கையில், இந்த டேட்டாவை வைத்து, வாக்காளர் அடையாள அட்டையை மதிப்பீடு செய்தால், அதிலும் நிறைய குளறுபடிகள் ஏற்படவே வாய்ப்பு அதிகம்.
இதுபோன்ற தொழில்நுட்பக் கோளாறுகளால்தான், 2015-ல் தேர்தல் ஆணையம் சுமார் 30 கோடி ஆதார் தகவல்களை, வாக்காளர் அடையாள அட்டையோடு இணைக்க முயற்சி செய்தபோது பெரிய குழப்பம் விளைந்து, தெலங்கானா மற்றும் ஆந்திராவில் சுமார் 55 லட்சம் பேர் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து ஏன், எதற்கென்றே தெரியாமல் நீக்கப்பட்டன. 2018 சட்டமன்றத் தேர்தலின்போது, தெலங்கானாவில் இந்தப் பிரச்னை அங்கு விஸ்வரூபம் எடுக்கவே, தொழில்நுட்பத்தை கைகாட்டி தப்பிக்க பார்த்தது தேர்தல் ஆணையம்.
இப்படி, லட்சக்கணக்கான மக்களின் வாக்குரிமை ஆதாரை காரணம் காட்டி பறிபோவது எவ்வளவு ஆபத்தான விஷயம்? இது சிறுபான்மை மற்றும் விளிம்புநிலை மக்களை அதிகம் பாதிக்கும் என்கின்றனர் ஆர்வலர்கள். இப்படிப்பட்ட நடவடிக்கைகள், அவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்துவதில் சிக்கல்களை ஏற்படுத்தி, வாக்கு அளிப்பதில் அவர்களின் பங்களிப்பை குறைக்கும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்கள்.
மேலும், ``ஆதார் என்பது வெறும் அடையாளச் சான்று மட்டுமே; அதைக் குடியுரிமைச் சான்றாகக் கருதமுடியாது; ஆனால், வாக்காளர் அடையாள அட்டை என்பது இந்தியக் குடிமகன் மட்டுமே பெறக்கூடிய ஒன்று. இந்தியக் குடிமகன்கள் அல்லாதோர் கூட, ஆதார் வைத்திருக்க முடியும். நிலைமை இப்படியிருக்க, ஆதாரை முதன்மை ஆவணமாக வைத்து ஒப்பிட்டால், குடிமகன்கள் அல்லாதோர்கூட ஆதாரைக் காட்டி வாக்குரிமை பெற்றுவிட முடியுமே?” என்றும் கேள்வியெழுப்புகின்றனர் எதிர்க்கட்சியினர்.
🕵🏼♂️ பிரைவசி சிக்கல்:
வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் இரண்டிலுமே நம்மைப் பற்றிய பொதுவான Demographic தகவல்கள்தான் இருக்கும். ஆனால், இதில் ஆதார் இன்னும் கொஞ்சம் ஸ்பெஷல். காரணம், கூடுதலாக வைத்திருக்கும் பயோமெட்ரிக் தகவல்கள் மட்டுமல்ல. மாநில / மத்திய அரசுகளின் பிற துறை Database-களுடன் இணைந்திருப்பதும் கூட. இப்படியிருக்கையில் ஆதாரை, வாக்காளர்களின் Database-ல் இணைத்து, அதில் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட்டு, தகவல்கள் தவறாக கையாளப்பட்டால் அது இன்னும் ஆபத்தாக முடியலாம்.
அரசியல் கட்சிகள் மக்களை உளவுபார்க்கவோ, திட்டமிட்டு விளம்பரம் செய்யவோ கூட இந்த தரவுகள் பயன்படுத்தப்படலாம். இன்னும் நம் நாட்டில் Data Protection Law எதுவுமே செயல் வடிவம் பெறாதபோது, இப்படியொரு முடிவை எடுப்பது இன்னும் ஆபத்தானது என்கின்றனர் நிபுணர்கள்.
அதான், இரண்டையும் இணைப்பது கட்டாயமல்ல எனச் சொல்லிவிட்டார்களே?
``ஆமாம். ஆதாருக்கும் இதையேதானே 2013-ல் சொன்னார்கள்? உச்சநீதிமன்றம், ஆதாரை கட்டாயமாக்கக்கூடாது என உத்தரவுகூட இட்டது; ஆனால், இன்றைக்கு நிலை என்ன? மேலும், 2015-லும் கூட தேர்தல் ஆணையம் ஆதாரை, வாக்காளர் அடையாள அட்டையோடு இணைப்பது கட்டாயம் இல்லை என்றுதான் சொன்னது; ஆனால், 30 கோடி தகவல்கள் யார் அனுமதியும் இன்றிதான் இணைக்கப்பட்டன.
எனவேதான், இது கட்டாயமா, கட்டாயம் இல்லையா என்பதைத் தாண்டி, ``ஆதார் தகவல்களை, வாக்காளர் தகவல்களோடு இணைப்பதில் அரசு மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு இருந்த சட்டத்தடை இந்த மசோதா மூலம் நீங்கவிருக்கிறது; எனவே, அடுத்து எப்போது வேண்டுமானாலும் இதைக் கட்டாயமாக்குவதற்கான முயற்சிகள் நடக்கலாம்” எனச் சுட்டிக்காட்டுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.
இப்படியாக வாக்காளர்களின் பிரச்னைகளைத் தீர்க்க மேற்கொள்ளப்படும் ஒரு முயற்சி, வாக்காளர்களுக்கே சிக்கலை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதுதான் அனைவரின் அச்சமாக இருக்கிறது. அடுத்து ராஜ்ய சபாவிலாவது, அரசு விரிவான விவாதங்களுக்கு வழிவகை செய்யவேண்டும்.
இந்தியா
சரிந்த பங்குச்சந்தை 📉
சென்செக்ஸ் குறியீட்டு எண் 1189 புள்ளிகளும் (-2.09%), நிஃப்டி குறியீட்டு எண் 371 புள்ளிகளும் (-2.18%) நேற்று ஒரே நாளில் சரிந்திருக்கின்றன. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் டிசம்பர் மாதத்தில் அதிகளவில் முதலீட்டை வெளியே எடுத்திருக்கின்றனர். அமெரிக்கா உள்பட உலகின் பல நாட்டு வங்கிகளும் பணவீக்கத்தை சமாளிக்க வட்டி விகிதங்களை உயர்த்தப்போகிறார்கள். மேலும், ஓமிக்ரான் பரவல் கடந்த சில தினங்களாக அதிகரித்து வருவதால், மீண்டும் பொருளாதாரம் சுணங்குமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்தக் காரணங்களால்தான், நேற்று பங்குச்சந்தைகள் பெரியளவில் இறக்கம் கண்டிருக்கின்றன.
ஐஸ்வர்யா ராயை விசாரித்த அமலாக்கத்துறை
உலகின் முன்னணி தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், பிரபலங்கள் உள்பட பலரும் எப்படி வரி ஏய்ப்புக்காக, வெளிநாடுகளில் முதலீடு செய்திருக்கின்றனர் என்பதை 2016-ம் ஆண்டு பனாமா பேப்பர்ஸ் என்ற பெயரில் ஊடகங்கள் வெளியிட்டன. அந்தப் பட்டியலில் 300-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இருந்தனர். அவர்களை அது தொடர்பாக விசாரித்து வருகிறது அமலாக்கத்துறை. அதன் ஒரு பகுதியாகத்தான், நேற்று ஐஸ்வர்யா ராய் டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் சுமார் 5 மணி நேரம் விசாரிக்கப்பட்டார். 2004-ல் பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகளில் ஐஸ்வர்யா செய்த முதலீடுகள் குறித்து நேற்று விசாரணை நடந்துள்ளது.
தமிழகம்
சிக்குவாரா ராஜேந்திர பாலாஜி?
ஆவினில் வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்த குற்றத்திற்காக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகரில் குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில், ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை கடந்த 17-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்யவே, கைதிலிருந்து தப்பிப்பதற்காக தலைமறைவாகிவிட்டார். இவரைப் பிடிக்க ஏற்கெனவே 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், அவர் கேரளாவில் பதுங்கியிருக்கலாம் என கிடைத்த தகவலையடுத்து, நேற்று மேலும் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஊருக்கு அனுப்பப்பட்ட ஃபாக்ஸ்கான் பெண் ஊழியர்கள்
காஞ்சிபுரம், ஶ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் பணியாற்றிவந்த 1000-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் கடந்த சனிக்கிழமை ஓரகடம், ஸ்ரீபெரும்புதூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். விடுதியில் தங்களுக்கு வழங்கப்பட்டு வந்த உணவினால் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பாதிக்கப்பட்டும், அதுகுறித்து ஆலை நிர்வாகம் எதுவும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை எனக்கூறி இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் போராடி வந்த 67 பெண்களை சனிக்கிழமையன்று காவல்துறையினர் கைது செய்து, தனியார் மண்டபத்தில் தங்கவைத்தனர். பின்னர், ஞாயிரன்று அவர்கள் விடுவிக்கப்பட்டு, யாரிடமும் பேசக்கூடாது என்ற நிபந்தனையுடன் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றனர். நேற்றைய நிலவரப்படி ஒரே ஒரு ஊழியர் மட்டும் இன்னும் மருத்துவமனை சிகிச்சையில் இருப்பதாக தகவல். மாவட்ட நிர்வாகம் சார்பில் வேறு எந்த தகவலும் வரவில்லை.
தமிழகத்தில் நேற்று பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை: 605
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை: 6
இரும்பு, அலுமினியம் உள்ளிட்ட மூலப்பொருள்களின் விலையைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி, கோவை, பெல்காம், மைசூரு உள்ளிட்ட நாட்டின் முக்கிய தொழில்நகரங்களில் சுமார் 10 லட்சம் சிறு குறு தொழில்நிறுவனங்கள் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன.
முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான 16 இடங்களில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். ஏற்கெனவே கடந்த 15-ம் தேதி நடத்தப்பட்ட சோதனையில் 2.15 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட நிலையில், நேற்றும் சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்துவரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவ, எய்ம்ஸ் மருத்துவர்களையும் குழுவில் இணைக்கச் சொல்லி, டெல்லி எய்ம்ஸ் இயக்குநருக்கு நேற்று உத்தரவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம். ஜெயலலிதா மருத்துவ சிகிச்சை தொடர்பான ஆவணங்களை இந்த மருத்துவக்குழு ஆய்வு செய்யும்.
கடந்த 14-ம் தேதி, சேலம் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 15.8 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் நேற்று காவல்துறையினரால் மீட்கப்பட்டன. கொள்ளையன் இவற்றை ஆற்றங்கரையோரம் இருந்த சுடுகாட்டில் மறைந்து வைத்திருந்த நிலையில், நேற்று காவல் துறையினர் மீட்டிருக்கின்றனர்.
பொது பட்ஜெட், வரும் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்படுவதையடுத்து, நேற்று பிரதமர் மோடி, இந்தியாவின் பல்வேறு துறைகளைச் சார்ந்த முன்னணி தொழில்துறை நிர்வாகிகளை சந்தித்துப் பேசியிருக்கிறார். தொழில்துறை செயல்பாட்டு விதிமுறைகளில் சீர்திருத்தங்கள் கொண்டுவருவது குறித்து இதில் விவாதிக்கப்பட்டுள்ளது.
கடன்களைச் செலுத்தாமல், வெளிநாடுகளுக்கு தப்பியோடிய விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெஹூல் சோக்ஸி ஆகியோரின் சொத்துக்களை விற்று, இதுவரை 13,109.17 ரூபாய் மீட்கப்பட்டுள்ளதாக நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
- பொங்கல் சிறப்பு பேருந்துகள் 📆
பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழகம் முழுக்க ஜனவரி 11, 12, 13 ஆகிய நாட்களில் 16,788 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது தமிழக போக்குவரத்து துறை. பேருந்து விவரங்கள் குறித்து அறிய மற்றும் புகார் அளிக்க 94450 14450, 94450 14436 ஆகிய எண்களை 24 மணி நேரமும் தொடர்புகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- உயர்த்தப்பட்ட வருமான வரம்பு 🏥
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டின் கீழ் சிகிச்சைபெற ஆண்டு வருமான வரம்பு ₹72,000 ஆக இருந்தது. அதை ₹1,20,000 ஆக உயர்த்தியிருக்கிறது தமிழக அரசு.
🔴 இதுவரைக்கும் TSL-ஐ தொடர்ந்து படிச்சிட்டு வர்றீங்க; எனவே இதுபற்றிய உங்க கருத்தை தெரிஞ்சுக்க விரும்புறோம். அதனால், இந்த லிங்கை க்ளிக் பண்ணி உங்களோட ரேட்டிங்கைப் பதிவு பண்ணிடுங்க. TSL-ஐ மேம்படுத்த இது எங்களுக்கு உதவியா இருக்கும்!
அவ்வளவுதான்!
திரும்ப நாளைக்கு காலைல 7 மணிக்கு சந்திப்போம்!
Have a Nice day! ☕️
The Subject Line-ஐ சமூக வலைதளங்களில் பின்தொடர: