🌱 `ஆல் இஸ் வெல்' சொல்கிறாரா எடப்பாடி?
In Today's Edition: அ.தி.மு.க-வின் சட்டவிதிகளில் திருத்தங்கள் ஏன்? | கொரோனாவிலிருந்து மீண்ட கமல் | உயரும் கமர்ஷியல் சிலிண்டர் விலை | காங்கிரஸை சீண்டிய மம்தா | 24 நாடுகளில் உறுதியான ஓமிக்ரான் | Reading Time: 4 Mins ⏳
Dec 2, 2021
ஹாய், ஹலோ… வணக்கம் ☕️
📣 Note: The Subject Line (TSL) நியூஸ்லெட்டரின் இந்த மெயில் உங்களின் Promotions Tab-ல வந்திருந்தா, அதை அப்படியே Move பண்ணி, Primary Tab-க்கு மாத்திடுங்க. இதன்மூலம் தினமும் TSL-ஐ நீங்க மிஸ் பண்ணாம படிக்கமுடியும். ஒருவேளை இந்த மெயில் உங்க நண்பர்கள் மூலம் வந்திருந்தா, தினமும் உங்க இன்பாக்ஸிற்கு நேரடியாக வர, சப்ஸ்கிரைப் பண்ணிடுங்க. Happy Reading! 😊
1️⃣ ஏன் உட்கட்சி விதிகளைத் திருத்தியது அ.தி.மு.க?
நேற்று நடந்த அ.தி.மு.க செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் மூன்று சட்டவிதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சசிகலாவை கட்சிக்குள் மீண்டும் கொண்டுவர வேண்டும் என கட்சிக்குள்ளேயே குரல்கள் எழுந்த நிலையில்தான் இப்படியொரு மாற்றம் நடந்திருக்கிறது. எதற்காக இந்த திருத்தங்கள்? என்ன சொல்கின்றன புதிய விதிகள்? இதைப் புரிந்துகொள்ள அ.தி.மு.க-வின் உட்கட்சித் தேர்தல் முறை பற்றி கொஞ்சம் சுருக்கமாகப் பார்க்கவேண்டும்.
எப்படி நடக்கும் அ.தி.மு.க உட்கட்சித் தேர்தல்? 🗳
பொதுச் செயலாளர் பதவிதான் அ.தி.மு.க-வின் அதிகாரம் மிக்க பதவி. 1972-ல் அ.தி.மு.க-வின் முதல் பொதுச்செயலாளராக எம்.ஜி.ஆர் தேர்வானதில் இருந்து 1976 வரைக்கும், பொதுச்செயலாளரை கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களே தேர்வு செய்து வந்தனர். ஆனால், 1976-ல் இதை திருத்தி, இனி கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள்தான் பொதுச்செயலாளரைத் தேர்வு செய்யவேண்டும் என மாற்றினார் எம்.ஜி.ஆர்.
அன்றிலிருந்து 2014-ல் ஜெயலலிதா கடைசியாக பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது வரைக்கும் இந்த விதியின் கீழ்தான் தேர்தல் நடந்தது. 2016-ல் சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டபோதுகூட தற்காலிகமாகத்தான், பொதுக்குழு உறுப்பினர்களால் நியமிக்கப்பட்டார்.
இதை 2017-ல் முதன்முதலாக மாற்றினர் எடப்பாடியும் பன்னீரும். தர்மயுத்தத்திற்குப் பிறகு இரு அணிகளும் ஒன்று சேர்ந்தபோது, அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளர் பதவியை கட்சி விதிகளிலிருந்து நீக்கிவிட்டு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற கூட்டு அதிகாரம் கொண்ட பதவிகளைத் தோற்றுவித்தனர். இந்த ஒருங்கிணைப்பாளர் (ஓ.பன்னீர்செல்வம்) மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரை (எடப்பாடி பழனிசாமி) கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களே தேர்வு செய்யலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது. அந்த விதிகளைத்தான் தற்போது மீண்டும் திருத்தியிருக்கிறது அ.தி.மு.க.
என்ன காரணம்? 🧐
முதல் காரணம், சசிகலா. இரண்டாவது, தேர்தல் தோல்விகளால் ஏற்பட்ட உட்கட்சிப் பூசல். மூன்றாவது, வரவிருக்கும் உட்கட்சித் தேர்தல். ஏன்?
இப்போது திருத்தப்பட்டுள்ள விதிகளின்படி, கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும், கட்சியின் பொதுக்குழுவுக்கு பதிலாக இனிமேல் அடிப்படை உறுப்பினர்களால்தான் (தொடர்ந்து 5 வருடங்கள் அ.தி.மு.க-வில் தொண்டர்களாக இருப்பவர்கள் அனைவருமே அடிப்படை உறுப்பினர்கள்தான்) தேர்ந்தெடுக்கப்படுவர். இந்த விதியை பொதுக்குழு உறுப்பினர்களாலோ (சுமார் 3,000 பேர்), மேற்கண்ட இரு ஒருங்கிணைப்பாளர்களாலோ கூட மாற்ற முடியாது.
மேலும், இரு ஒருங்கிணைப்பாளர்களையும், அடிப்படை உறுப்பினர்கள் ஒரே வாக்குச்சீட்டில், ஒரே ஒரு வாக்கு மூலமாகத்தான் தேர்ந்தெடுப்பர். (இருவரில் ஒருவருக்கு மட்டும் ஆதரவு என்ற கதையெல்லாம் கிடையாது!)
இப்படியாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவருக்கும் சம அதிகாரம் கொடுக்கப்பட்டு, அ.தி.மு.க-வின் `இரட்டைத் தலைமை’ என்னும் நோக்கத்திற்கு கட்சியில் ஒரு அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. ✌️
கட்சிக்கு உதவுமா இது?
தெரியவில்லை. ஆனால், எடப்பாடிக்கும், பன்னீருக்கும் நிச்சயம் உதவும். எப்படி?
2014-க்குப் பிறகு அ.தி.மு.க-வில் உட்கட்சித் தேர்தலே நடத்தப்படவில்லை. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கவேண்டிய இந்த தேர்தலை கொரோனாவைக் காரணம் காட்டி நடத்தாமல் தப்பித்துக்கொண்டிருந்தது அ.தி.மு.க. ஆனால், எப்படியும் இன்னும் சில மாதங்களில் இதை நடத்தியாக வேண்டும். அப்போது, இரண்டு பதவிகளுக்குமான, தேர்தலில் பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும் என்றால், அதில் சிலர் சசிகலாவுக்கு சாதகமாக செயல்படவும் வாய்ப்புண்டு. ஆனால், அடிப்படை உறுப்பினர்கள் என்றால், அந்த வாய்ப்பு மிகவும் குறைவு.
மேலும், கடந்த நவம்பர் 24-ம் தேதி நடந்த அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நடந்த வாக்குவாதத்தில் எடப்பாடியின் தலைமை மீதும் பல விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. ``இப்படியே போனால், ஓ.பி.எஸ்ஸூம், இ.பி.எஸ்ஸூம் மட்டுமே கட்சியைக் காப்பாற்ற முடியாது போல” என்ற நிலைக்குப் பலரும் புலம்ப, அதுவும் ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சசிகலாவால் இனியும் பிரச்னையா?
குறிப்பாக, கட்சிக்குள்ளேயே பலர் சசிகலாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்த நிலையில், அவரை எக்காரணம் கொண்டும் உள்ளே அனுமதிக்காது தடுக்கவேண்டிய நிலைக்கு இருவரும் தள்ளப்பட்டிருக்கின்றனர். இதற்கு முன்பு, பன்னீரை ஓரம்கட்டிவிட்டு தலைமைப் பொறுப்பில் முன்னேற எடப்பாடி கணக்குப் போட்டிருந்தார். ஆனால், சசிகலா விவகாரத்தாலும், கட்சிக்குள் தேர்தல் தோல்விகளால் ஏற்பட்ட அதிருப்தியாலும் அந்தக் கணக்குப் பலிக்கவில்லை.
இதையடுத்துதான் தற்போது விதிகளில் மாற்றம் கொண்டுவந்து, தங்கள் இருவருக்குமான ஒற்றுமையைக் காட்டி, ``கட்சிக்குள்ள எல்லாம் நல்லாதான இருக்கு” என ̀ஆல் இஸ் வெல்’ சொல்லியிருக்கிறார் எடப்பாடி. அதை அமைதியாக ஆமோதிக்கிறார் ஓ.பி.எஸ். இப்படியாக கட்சிக்குள் மீண்டும் தங்கள் அதிகாரத்தை வலுப்படுத்திக்கொண்டிருக்கின்றனர் இருவரும். 🤝
மேலும், கட்சியின் உறுப்பினராகக்கூட சசிகலா இல்லாததால் அவராலும் எதுவும் செய்யமுடியாது. ஆனால், 2017-ல் அ.தி.மு.க-வின் விதிகளிலிருந்து பொதுச்செயலாளர் பதவியை நீக்கியது சட்டவிரோதம் என அவர் தொடர்ந்த வழக்கு மட்டும் இன்னும் நடந்துவருகிறது. விரைவில் அடுத்தகட்ட விசாரணைக்கும் வருகிறது.
24 நாடுகளில் ஓமிக்ரான் பாதிப்பு: 😷
நேற்று வரைக்கும் 23 நாடுகளில் கொரோனாவின் புதிய ஓமிக்ரான் வேரியன்ட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக WHO அறிவித்திருந்தது. நேற்று இரவு அமெரிக்காவிலும் முதல் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த எண்ணிக்கை 24 ஆக உயர்ந்திருக்கிறது.
6 பயணிகளுக்கு பாசிட்டிவ்: 🎒
இந்தியாவில் ஓமிக்ரான் பரவலைத் தடுக்க, மத்திய அரசு வெளிநாடுகளிலிருந்து வருவோர்க்கு விதித்த கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்திருக்கின்றன. இதன்படி, ஓமிக்ரான் ஆபத்துள்ள நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வந்த 11 விமானங்களில் 3,476 பயணிகளுக்கு RT-PCR பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 6 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் எனத் தெரியவந்துள்ளது. தற்போது இவர்களின் மாதிரிகள் ஜீனோம் கண்காணிப்புக்காக அனுப்பப்பட்டிருக்கின்றன. முடிவுகள் வந்த பின்பே, பிறகே ஓமிக்ரான் பாதிப்பா என்பது தெரியவரும்.
சர்வதேச விமானங்களுக்கு தொடரும் கட்டுப்பாடுகள்: 🛫
வரும் டிசம்பர் 15-ம் தேதி முதல் இந்தியாவில் சர்வதேச விமானப் போக்குவரத்து முழுமையாக இயங்கலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால், தற்போது ஓமிக்ரான் அச்சம் காரணமாக இந்த முடிவை ஒத்திவைத்திருக்கிறது. எனவே, இப்போதைக்கு Bio-Bubble கட்டுப்பாடுகளுடன் கூடிய 31 நாடுகளுக்கு மட்டுமே, மிகக்குறைந்த அளவுக்கு விமானங்கள் இயங்கும்.
நிறுத்தப்பட்ட குணால் காம்ராவின் நிகழ்ச்சி: 😕
பெங்களூருவில் வலதுசாரி குண்டர்களின் அச்சுறுத்தலால், சில நாள்களுக்கு முன்பு ஸ்டேண்ட்அப் காமெடியன் முனாவர் ஃபரூக்கி தன்னுடைய நிகழ்ச்சியை ரத்து செய்திருந்தார். இதேபோல குணால் காம்ராவும் நேற்று தன் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருப்பதாக அறிவித்திருக்கிறார். பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படாதது மற்றும் நிகழ்ச்சிக்கு விடுக்கப்பட்ட மிரட்டல் ஆகியவற்றைத் தொடர்ந்து, இந்த முடிவை எடுத்திருப்பதாக அறிவித்திருக்கிறார் குணால்.
காங்கிரஸை சீண்டிய மம்தா: 😯
பா.ஜ.க-விற்கு எதிராக தேசிய அளவில் வலுவான கூட்டணியை உருவாக்கும் முயற்சிகளில் ஒன்றாக, நேற்று மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சந்தித்துப் பேசியிருக்கிறார் மம்தா பானர்ஜி. அப்போது, காங்கிரஸை உள்ளடக்கிய ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு சரத் பவார் தலைமை தாங்குவாரா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், ``இப்போதைக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி என ஒன்று இருக்கிறதா என்ன?” எனக் கேள்வியெழுப்பியிருக்கிறார். மேலும், பல மாநிலங்களில் காங்கிரஸ் பா.ஜ.க-வை எதிர்க்கமுடியாமல் திணறுவதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார். காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணியை கட்டமைக்கும் முயற்சியில் மம்தா தீவிரமாக இருப்பது, இதன் மூலம் இன்னும் உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு: 718
உயிரிழந்தோர் எண்ணிக்கை: 11
மாநிலம் முழுவதும் நீர்நிலைகளில் நடந்திருக்கும் ஆக்கிரமிப்புகள் குறித்து ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக மாற்ற, முந்தைய அ.தி.மு.க அரசு பிறப்பித்த உத்தரவு செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்திருந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக நவம்பர் 22-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் நடிகர் கமல்ஹாசன். இந்நிலையில், அவர் முழுவதும் குணமாகிவிட்டதாகவும், டிசம்பர் 4-க்குப் பிறகு வழக்கமான பணிகளைத் தொடங்கலாம் எனவும் அவர் சிகிச்சை பெற்றுவந்த தனியார் மருத்துவமனை தெரிவித்திருக்கிறது.
கடந்த நவம்பர் மாதத்தில் மொத்தமாக 1,31,526 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வரியாக வசூலாகியிருக்கிறது. 2017-ல் ஜி.எஸ்.டி அமலானதில் இருந்து, ஒரு மாதத்தில் வசூலான தொகையில் இதுதான் இரண்டாவது அதிகபட்ச தொகை. உச்சபட்சமாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1,39,708 கோடி ரூபாய் வசூலாகியிருந்தது.
- வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை 101.50 ரூபாய் உயர்ந்துள்ளது. இதன்மூலம் சென்னையில் 2,133 ரூபாயாக இருந்த சிலிண்டரின் விலை, 2,234.50 ரூபாயாக உயர்ந்திருக்கிறது. எனவே உணவகங்கள், தேநீர் கடைகளில் விரைவில் விலை உயர்வை எதிர்பார்க்கலாம். வீட்டுத்தேவைக்கான சிலிண்டரின் விலை மாற்றப்படவில்லை. அது 915.50 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
On This Day - Dec 02
- போபால் விஷவாயு விபத்தின் 37-ம் ஆண்டு நினைவுதினம் இன்று, 1984
- அதன்பொருட்டு, தேசிய மாசுக்கட்டுப்பாட்டு தினமாகவும் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.
அவ்வளவுதான்!
The Subject Line-னோட இன்னைக்கு அப்டேட்ஸ் உங்களுக்குப் பிடிச்சிருக்கும்னு நம்புறேன். பிடிச்சிருந்தா கீழ இருக்க பட்டன் மூலமா உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க… இன்னும் ஏதாச்சும் இந்த TSL-ல் மாத்தணும்னா எனக்கு மெசேஜ் பண்ணுங்க! உங்க கருத்துகள் எங்களுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். 🤞
திரும்ப நாளைக்கு காலைல 7 மணிக்கு சந்திப்போம்!
Have a Nice day! ☕️
The Subject Line-ஐ சமூக வலைதளங்கள் மூலம் பின்தொடர: