🛩 `தாய் வீடு' திரும்பிய ஏர் இந்தியா; அடுத்து என்ன?
Today Edition highlights: தஞ்சை மாணவி வழக்கில் திருப்பம் | முடிவுக்கு வந்த ஊரடங்கு | தேர்தலில் களமிறங்கும் விஜய் மக்கள் இயக்கம் | ராகுலின் ஃபாலோயர்களுக்கு என்ன பிரச்னை? | Reading Time: ⏱ 5 Mins
ஹாய், ஹலோ… வணக்கம் 👋
இன்றைய தினத்தின் டாப் அப்டேட்ஸ் இதோ…
அனைத்து அலுவல் வேலைகளையும் முடித்து, மொத்தமாக ஏர் இந்தியா நிறுவனத்தின் சாவிக்கொத்தை டாடா குழுமத்திடம் நேற்று ஒப்படைத்திருக்கிறது மத்திய அரசு. 68 ஆண்டுகளுக்குப் பிறகு, ஏர் இந்தியா மீண்டும் தாய் வீடு திரும்பியிருப்பதை மனப்பூர்வமாக மகிழ்ச்சியோடு வரவேற்றிருக்கிறார் டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன்.
சரி, இனி ஏர் இந்தியா என்னவாகும்?
ஏர் இந்தியாவை அரசு விற்க காரணமே அதிலிருந்து அரசால் வருவாய் ஈட்ட முடியாததும், தொடர்ந்து கடனையும் நஷ்டத்தைச் சந்தித்துக்கொண்டிருந்ததும்தான். 2009-2010-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரைக்கும் 1,10,277 கோடி ரூபாயை ஏர் இந்தியாவின் கடன் பிரச்னைகளைத் தீர்க்க செலவளித்திருக்கிறது அரசு. கடந்தாண்டு நாளொன்றுக்கு 20 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கியது ஏர் இந்தியா (வருடத்திற்கு ~7,300 கோடி ரூபாய்).
இதனால்தான் 18,000 கோடிக்கு கடந்த ஆண்டு டாடா குழுமத்திடம் (முறையான ஏலத்திற்குப் பிறகு) விற்றது மத்திய அரசு. 💰
கடந்தாண்டு அக்டோபர் நிலவரப்படி ஏர் இந்தியாவின் மொத்த கடன், 61,562 கோடி ரூபாய். இதில் 15,300 கோடி ரூபாய்க்கு டாடா பொறுப்பேற்றுக்கொண்டுள்ளது. 2,700 கோடி ரூபாயை நேரடியாக அரசுக்கு செலுத்தியிருக்கிறது (மொத்தம் 18,000 கோடி). மீதமிருப்பது 43,562 கோடி ரூபாய்.
இதில் ஏர் இந்தியா சார்பாக இருக்கும் சொத்துக்கள் மூலம் அரசு 14,718 கோடி ரூபாயைத் திரட்டிவிடும். மீதமிருப்பது 28,844 கோடி ரூபாய். இதை அரசுதான் செலுத்தியாக வேண்டும்.
இப்போது டாடாவின் சவால்கள், அதன் பங்கான 15,300 கோடி ரூபாய் கடனை சமாளிப்பது மற்றும் நிறுவனத்தின் செலவினங்கள், நஷ்டத்தைக் குறைத்து அதை லாபப் பாதைக்கு திருப்புவது ஆகிய இரண்டும்தான்.
இதை எப்படி செய்யப்போகிறது டாடா? 🛬
புதிய முதலீடுகளை மேற்கொண்டு தற்போது இருக்கும் விமானங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி சந்தையில் புதிய வாடிக்கையாளர்களைப் பெறவேண்டும். இது எதிர்காலத்திற்கு ஏர் இந்தியா தயாராக உதவும்.
இரண்டாவது, நிர்வாகச் செலவுகள். விஸ்தாரா, ஏர் ஏசியா, ஏர் இந்தியா ஆகிய மூன்றையும் சேர்த்து இந்திய விமானப் போக்குவரத்தில் சுமார் 27% சந்தையை வைத்திருக்கிறது டாடா. இண்டிகோவிற்கு அடுத்து இரண்டாவது பெரிய ஏர்லைன்ஸ் குடும்பமாக இந்தக் கூட்டணி மாறியிருக்கிறது. இதை வைத்து புதிய விமானங்கள், எரிபொருள்கள் போன்ற விஷயங்களில் பிற நிறுவனங்களுடன் டாடா கூடுதல் பலத்துடன் பேரம்பேசி, நிர்வாகச் செலவுகளைக் கட்டுக்குள் கொண்டுவரமுடியும்.
இந்த இரண்டு மட்டும்தான் டாடாவின் நோக்கமா? இல்லை. டாடாவின் டி.சி.எஸ், இந்தியன் ஹோட்டல்ஸ் (தாஜ், விவான்டா குழும ஹோட்டல்கள்), டாடா கேப்பிட்டல்ஸ் என அந்தக் குழுமத்தின் பிற சேவைகளுக்கும் ஏர் இந்தியாவின் வரவு, `தனலாபம்’ என்கின்றனர் நிபுணர்கள்.
இந்த சவால்களைக் கடந்து, ஏர் இந்தியா அடுத்த சில வருடங்களில் சாதித்தால்தான், இது டாடாவுக்கு நல்வரவாக அமையும். 💐
தஞ்சை மாணவி வழக்கில் புதிய திருப்பம்
கடந்த ஜனவரி 19-ம் தேதி உயிரிழந்த தஞ்சாவூர் பள்ளி மாணவி பேசிய புதிய வீடியோ ஒன்று நேற்று ஊடகங்களில் வெளியானது. இதற்கு முன்பு வெளியான வீடியோவில், பள்ளியில் ரக்கேல் மேரி என்பவர் 2 வருடங்களுக்கு முன்பு மதம் மாற வலியுறுத்தியதாகவும் அதனால்கூட தான் துன்புறுத்தப்பட்டிருக்கலாம் எனவும் அந்த மாணவி தெரிவித்திருந்தார். ஆனால், நேற்று வெளியான வீடியோவில் வேறு விஷயங்கள் வெளிவந்திருக்கின்றன.
அதில், பள்ளி விடுதிக்காப்பாளர் சகாயமேரி என்பவர் விடுதியின் கணக்கு வழக்குகளைப் பார்க்கச்சொல்லி துன்புறுத்தியதாவும், தினமும் விடுதியின் பணிகளை கவனிக்கச் சொன்னதாகவும், இதனால் படிப்பில் கவனம் செலுத்தமுடியாமல்தான் தற்கொலைக்கு முயன்றதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும், பள்ளியில் பொட்டு வைக்கக்கூடாது என யாரேனும் கட்டாயப்படுத்தினார்களா என்ற கேள்விக்கு இல்லை என பதிலளித்துள்ளார். மதமாற்றம் பற்றி எங்கேயும் குறிப்பிடவில்லை.
மொத்தம் 4 வீடியோக்கள்: இந்த வீடியோக்களைப் பதிவு செய்தது விஷ்வ இந்து பரிஷத்தின் அரியலூர் மாவட்டச் செயலாளர் முத்துவேல். இவர் மொத்தம் 4 வீடியோக்களைப் பதிவு செய்ததும், அதில் 3-வது வீடியோ மட்டுமே சமூக வலைதளங்களில் வெளியானதும் நேற்று தெரியவந்துள்ளது.
மேலும், நேற்று வெளியான வீடியோ முத்துவேலின் மொபைலிலிருந்து அழிக்கப்பட்டிருந்ததாகவும், காவல்துறையினர் அதை மீட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிக்கை: இதேபோல மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் அறிக்கையும் நேற்று ஊடகங்களில் வெளியானது. அதில், 2011-ம் ஆண்டு முதல் மொத்தம் 16 ஆய்வுகள் அந்தப் பள்ளியில் நடத்தப்பட்டுள்ளதாகவும், எப்போதுமே மதத்திணிப்பு சார்ந்த புகார்கள் அங்கு வந்ததில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்தவ சிறுபான்மையினர் நடத்தும் பள்ளியென்றாலும், அங்கு இந்து மாணவர்களே அதிகம் படிப்பதாகவும், அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் மீதோ, தலைமை ஆசிரியர் மீதோ மதம் சார்ந்து எந்தவொரு புகாரும் வரவில்லை எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வருகிறது.
1. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம்
இதற்கு முன்பு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட 129 பேர் வெற்றி பெற்றிருந்தனர்.
இந்நிலையில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிடலாம் என அந்த இயக்கத்தின் பொதுச்செயலாளர், புஸ்ஸி ஆனந்த் அறிவித்திருக்கிறார்.
விஜய்யின் படங்களையும், விஜய் மக்கள் இயக்க கொடியையும் பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும், வேட்பாளர்களை மாவட்ட பொறுப்பாளர்கள் முடிவு செய்வார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
2. முடிவுக்கு வந்த இரவு ஊரடங்கு
இன்று முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் இல்லை என அறிவித்திருக்கிறார் தமிழக முதல்வர்.
வரும் திங்கள் முதல் 1 - 12-ம் வகுப்பு மாணவர்கள் வரை அனைவருக்குக்கும் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்குகிறது. கல்லூரிகளும் திறக்கப்படுகின்றன. ஆனால், செமஸ்டர் தேர்வுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி ஆன்லைனில்தான் நடக்கும்.
வழிபாட்டுத்தலங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும் நீக்கிக்கொள்ளப்பட்டு, இந்த வாரத்தின் வெள்ளி, சனி, ஞாயிறு 3 நாள்களும் வழிபாட்டுத்தலங்களுக்குள் மக்கள் அனுமதிக்கப்படவிருக்கின்றனர்.
இவைதவிர, திரையரங்கங்கள், பொதுநிகழ்ச்சிகள் ஆகியவற்றிற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் பிப்ரவரி 15-ம் தேதி வரை தொடரும்.
3. வருத்தம் தெரிவித்த ரிசர்வ் வங்கி
குடியரசு தினத்தன்று சென்னை ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு சில அதிகாரிகள் எழுந்து நிற்காதது நேற்று முன்தினம் சர்ச்சையானது.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்திருக்கிறார் ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் எஸ்.எம்.என்.சுவாமி.
மேலும் இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ``தமிழ்த்தாய் வாழ்த்து மாநில பாடல் என்பதை நாங்கள் நன்கு அறிவோம். நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் பின்பற்றப்படும் கலாசாரங்களை நாங்கள் மதிப்பவர்கள்தான். இதுதொடர்பாக குடியரசு தினத்தன்று நடந்த நிகழ்வு வருந்தத்தக்கது” எனத் தெரிவித்துள்ளது.
4. ராகுலின் ட்விட்டர் ஃபாலோயர்கள் என்ன ஆனார்கள்?
மாதந்தோறும் சராசரியாக 2 லட்சத்திலிருந்து 3 லட்சம் பேர் புதிதாகப் பின்தொடரும் ட்விட்டர் கணக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியுடையது. ஆனால், இந்த அக்கவுன்ட்டில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் புதிய ஃபாலோயர்களின் எண்ணிக்கை பூஜ்யத்திற்கும் கீழே சென்று -1,327-ஐத் தொட்டிருக்கிறது.
அதற்கடுத்த மாதங்களிலும் 2,000, 3,000 என்று மட்டுமே ஃபாலோயர்கள் வந்துகொண்டிருக்க, உடனே கடந்த டிசம்பர் மாதம் ட்விட்டர் சி.இ.ஓ பராக் அக்ரவாலுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார் ராகுல்.
``அரசுக்கு எதிராகப் பல முக்கியமான விஷயங்களின் நான் குரல் கொடுத்திருக்கும் இந்த நேரத்தில் என் அக்கவுன்ட்டின் ஃபாலோயர்கள் குறைவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது” என்ற தொனியில் அதில் குறிப்பிட்டிருந்தார் ராகுல்.
அந்தக் கடிதமும், ட்விட்டரின் விளக்கமும் தற்போது ஊடகங்களில் வந்துள்ளன. ``நிறைய Bot அக்கவுன்ட்களை நீக்கும்போது ஏற்பட்ட பிரச்னையாக இருக்கலாம். மற்றபடி ஃபாலோயர்கள் விஷயத்தில் நாங்கள் எதுவும் செய்யவில்லை” என விளக்கம் கொடுத்திருக்கிறது ட்விட்டர்.
ஆனால், டிசம்பர் மாதம் எழுதப்பட்ட இந்தக் கடிதத்திற்குப்பிறகு, ஜனவரி மாதம் மீண்டும் ராகுலின் ஃபாலோயர்கள் ஏறத்தொடங்கியிருக்கிறார்கள். இதைக் குறிப்பிட்டு காங்கிரஸார் ட்விட்டரை விமர்சித்து வருகிறார்கள்.
தமிழகத்தில் நேற்று பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை: 28,515 (நேற்று முன்தினம்: 29,976) 🔻
- அதிகபட்சமாக, சென்னையில்: 5,591 (5,973) 🔻
- தமிழகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை: 53 (47) 🔺
இந்தியாவில் நேற்று பதிவான கொரோனா பாதிப்பு: 2,86,384 (2,85,914) 🔺
இன்று மற்றும் நாளைக்கான வானிலை முன்னறிவிப்பு 🌦 ☔️
பொங்கல் பரிசு மூலம் மக்களுக்கு வழங்கப்பட்ட பொருள்களின் தரத்தைப் பரிசோதிப்பதில் மெத்தனமாக செயல்பட்டதாகக் கூறி, குடிமைப்பொருள் வழங்கல் முதுநிலை தரக்கட்டுப்பாட்டு மேலாளரை பணியிடை நீக்கம் செய்திருக்கிறது தமிழக அரசு.
தஞ்சை மாணவி உயிரிழந்த விவகாரம் குறித்து நேரில் சென்று விசாரித்து அறிக்கை வழங்குவதற்காக 4 பேர் கொண்ட குழுவை அமைத்திருக்கிறது பா.ஜ.க. அக்கட்சியின் எம்.பி சந்தியா ராவ், கட்சித் தலைவர்கள் விஜயசாந்தி, சித்ரா வாக், கீதா விவேகானந்தா ஆகிய நால்வர் இந்தக் குழுவில் உறுப்பினர்கள்களாக இடம்பெற்றுள்ளனர்.
மாற்றுத்திறனாளி பயணிகளை புறக்கணிக்காமல் அவர்களைப் பேருந்துகளில் ஏற்றிச்செல்லவேண்டும் எனவும், அவர்கள் அமர்வதற்கு ஏற்பாடு செய்து, கோபப்படாமல் அன்புடனும் உபசரிப்புடனும் நடந்துகொள்ளவேண்டும் என தமிழக அரசு ஓட்டுநர்களுக்கும் நடத்துநர்களுக்கும் அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியிருக்கிறது.
பஞ்சாப் மாநிலத்திற்குச் சென்று பொதுவாழ்க்கையில் ஈடுபட விரும்புவதாகக் கூறி, அண்மையில் தமிழக அரசிடம் விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்திருக்கிறார் ஜக்மோகன் சிங் ஐ.ஏ.எஸ். இவர் டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் ஆணையராக பணியாற்றி வந்தவர். இவருடைய கடிதத்தை தமிழக அரசு நேற்று ஏற்றுக்கொண்ட நிலையில், இவரை பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியின் வேட்பாளராக அறிவித்திருக்கிறது பா.ஜ.க. காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சித்துவை எதிர்த்து இவர் போட்டியிடுகிறார்.
நீர்நிலை என வரையறுக்கப்பட்ட நிலங்களைப் பதிவு செய்ய, பத்திரப்பதிவுத்துறை இனி அனுமதி வழங்கக்கூடாது எனவும், நிலங்களைப் பதிவுசெய்பவர் அந்த நிலம் இதற்கு முன்பு நீர்நிலையாக இருந்ததில்லை என உறுதிமொழி அளித்தபிறகே அதைப் பதிவு செய்யவேண்டும் எனவும் நேற்று உத்தரவிட்டிருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். மேலும், அப்படி உறுதிமொழி வழங்காதவர்களுக்கு குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு போன்றவற்றை சம்பந்தப்பட்ட துறையினர் வழங்கக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளனர்.
கடந்த ஜனவரி 19-ம் தேதியன்று சீன ராணுவத்தினரால், அருணாசலப்பிரதேசத்திலிருந்து கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட இந்திய சிறுவன், 9 நாள்களுக்குப் பிறகு நேற்று சீனாவால் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளான்.
அந்த சிறுவனின் உறவினர்கள், சீன ராணுவம் அவனைக் கைது செய்துவிட்டது எனக்கூற, சீனாவோ அந்த சிறுவன் சீன எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்தான் எனக் குறிப்பிட்டிருக்கிறது. இந்திய அரசு தரப்பிலிருந்து இதுகுறித்து முழுமையான விளக்கமளிக்கப்படவில்லை.
- புகார் அளிக்க எண்கள்:
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலானது அடுத்த மாதம் பிப்ரவரி 19-ம் தேதி நடக்கவிருக்கிறது. இந்த சமயத்தில் பொது மக்களுக்கு தேர்தல் குறித்து ஏதேனும் புகார்கள் இருப்பின் அதைப் பதிவு செய்ய 24*7 புகார் மையம் ஒன்றை அமைத்திருக்கிறது மாநில தேர்தல் ஆணையம்.
1800 425 7072,
1800 425 7073,
1800 425 7074 ஆகிய 3 கட்டணமில்லா எண்களிலும் பொதுமக்கள் தங்கள் புகார்களைப் பதிவு செய்யலாம்.
- ரேஷன் கடையில் சிறுதானியங்கள்:
சென்னை மற்றும் கோவை ரேஷன் கடைகளில் சோதனை முறையில், முதல்கட்டமாக சிறுதானியங்ளையும் விற்பனை செய்ய தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ராகி, கம்பு, திணை, குதிரைவாலி, சாமை மற்றும் வரகு ஆகிய சிறுதானியங்களை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
அவ்வளவுதான்!
The Subject Line-னோட இன்னைக்கு அப்டேட்ஸ் உங்களுக்குப் பிடிச்சிருக்கும்னு நம்புறேன். பிடிச்சிருந்தா கீழ இருக்க பட்டன் மூலமா உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க… இன்னும் ஏதாச்சும் இந்த TSL-ல் மாத்தணும்னா எனக்கு மெசேஜ் பண்ணுங்க! உங்க கருத்துகள் எங்களுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். 🤞
திரும்ப நாளைக்கு காலைல 7 மணிக்கு சந்திப்போம்!
Have a Nice day ☕️
The Subject Line-ஐ சமூக வலைதளங்களில் பின்தொடர:
Telegram | Twitter | Facebook | Insta
Today Edition பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க! ❤️