The Subject Line

Share this post
📈 ஏன் மொபைல் கட்டணங்களை ஏற்றுகிறது ஏர்டெல்?
www.thesubjectline.in

📈 ஏன் மொபைல் கட்டணங்களை ஏற்றுகிறது ஏர்டெல்?

In Today's Edition: உயரும் ஏர்டெல் கட்டணங்கள் | சீனாவின் ஹைப்பர்சோனிக் சோதனையைக் கண்டு அமெரிக்கா ஏன் கலங்குகிறது? | உச்சத்தில் தக்காளி விலை | Reading Time: 4 Mins ⏳

ஞா.சுதாகர்
Nov 23, 2021
Comment
Share

ஹாய், ஹலோ… வணக்கம். 👋

இன்றைக்கான Weather Alert ☔️

  • நேற்று தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் கனமழையும், பிற இடங்களில் லேசான மழையும் பெய்திருக்கு. இன்றைக்கு கனமழை எச்சரிக்கை, மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய தென் மாவட்டங்களுக்குத்தான். பிற இடங்கள்ல லேசான மற்றும் மிதமான மழையை மட்டும் எதிர்பார்க்கலாம்.

  • நாளையும் கிட்டத்தட்ட இதே மாதிரிதான். ஆனால், அதற்கு அடுத்து வியாழன் மற்றும் வெள்ளி இரண்டு (25, 26) நாள்களிலும் கடலோர மாவட்டங்கள்ல மிக அதிக கனமழை கணிக்கப்பட்டிருக்கு. பிற மாவட்டங்கள்ல மிதமான மழை எதிர்பார்க்கப்படுது. எனவே அந்த இரு நாள்களுக்கு மட்டும் வானிலைக்கு ஏற்ப சரியா திட்டமிட்டுக்கோங்க மக்களே..! ⚠️

25 மற்றும் 26-ம் தேதிக்கான கணிப்பு. Source: IMD Chennai

1. உயரும் ஏர்டெல் கட்டணம்; என்ன காரணம்? 📶

ப்ரீபெய்டு பிளான்களுக்கான கட்டணங்களை 20 முதல் 25% வரை உயர்த்தியிருக்கிறது ஏர்டெல். வரும் 26-ம் தேதி முதல் இந்தக் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.

எவ்ளோ உயர்த்துறாங்க?

  • ஏர்டெல்லின் ப்ரீபெய்டு பிளான்கள்,

    - Voice Plan,

    - Unlimited Voice Bundle,

    - Data Top-Ups என மூன்றாகப் பிரிக்கப்பட்டிருக்கும்.

இதில் முதலாவதுதான் பலரும் பயன்படுத்தும் அடிப்படை பிளான். இதன் விலை ₹79-லிருந்து ₹99 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.

Unlimited Voice Bundle-ல் ஆரம்ப பிளானாக இருந்த ₹149 பிளான் ₹179 ஆக விலை உயர்த்தப்பட்டிருக்கிறது.

இதன்மூலம் ஒரு சராசரி ஏர்டெல் பயனாளர் இனி 28 நாள்களுக்கு ஒருமுறை குறைந்தது, 99 ரூபாய் செலவழிக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இல்லையெனில், அவர் இன்கமிங் கால்களைக் கூடப் பெறமுடியாது. (முதலில் இந்த பிளான் ₹35-க்கு தொடங்கப்பட்டு, பின் ₹49, ₹79 என உயர்த்தப்பட்டது. தற்போது ₹99-க்கு வந்திருக்கிறது)

ஏன் உயருது? 🧐

  • 2016-ல் ஜியோவின் வருகைக்குப் பின்னர் இந்திய டெலிகாம் சந்தை நிறைய மாற்றங்களைச் சந்தித்தது. அப்போது, ஜியோ மிகக்குறைவான விலையில் சேவைகளை வழங்கவே வாடிக்கையாளர்களைத் தக்கவைக்க ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களும் விலையைக் குறைத்தன. இது அதன் வருமானத்தைப் பெருமளவில் பாதித்தது. பின்னர் நஷ்டத்தை சமாளிக்க முடியாமல், 2018-ல் ப்ரீபெய்டு பிளான்களில் புதுப்புது மாற்றங்களைக் கொண்டுவந்தன ஏர்டெல், வோடஃபோன் உள்ளிட்ட நிறுவனங்கள்.

  • அதுவரையிலும் புழக்கத்தில் இல்லாத, வேலிடிட்டி அடிப்படையிலான ரீசார்ச் முறையையும் கொண்டுவந்தன. இதனால், ஒருவர் குறைந்தபட்ச ரீசார்ஜ் தொகைக்கு ரீசார்ஜ் செய்யவில்லை எனில், அடுத்த சில நாட்களில் இன்கமிங் கால்களைக் கூட பெற முடியாது.

  • இந்த மாற்றங்கள் அனைத்தையும் டெலிகாம் நிறுவனங்கள் செய்ய காரணம், தங்களின் ARPU (Average Revenue Per User)-ஐ உயர்த்துவதற்காகத்தான். ARPU என்பது, ஒரு வாடிக்கையாளரிடமிருந்து நான்கு மாதங்களில் (ஒரு காலாண்டு) ஒரு டெலிகாம் நிறுவனம் சம்பாதிக்கும் தொகை.

  • இந்த ப்ரீபெய்டு பிளான் மாற்றங்கள் நடந்த ஆண்டான 2018-ன் இரண்டாம் காலாண்டில்

    - ஏர்டெல்லின் ARPU - ₹101,

    - ஜியோவின் ARPU - ₹135

    தற்போது 2021-ன் இரண்டாம் காலாண்டில்,

    - ஏர்டெல்லின் ARPU - ₹153,

    - ஜியோவின் ARPU - ₹144

ஆனால், இந்த ARPU போதாது என்கிறது ஏர்டெல். ஜியோவின் வருகைக்கு முன்பான 2015-ன் இரண்டாம் காலாண்டில் ஏர்டெல்லின் APRU ₹181 ஆக இருந்தது. இது ₹200 ஆக உயர்ந்தால்தான் வாடிக்கையாளர்களுக்குத் தரமான சேவை வழங்கமுடியும் என்பது ஏர்டெல்லின் வாதம். அதற்கும் மேலாக ₹300-க்கு உயர்ந்தால்தான், நிறுவனம் நல்ல லாபம் ஈட்டவும், நெட்வொர்க், ஸ்பெக்ட்ரம், 5G போன்றவற்றில் முதலீடு செய்யவும் முடியும் என்கிறது அந்நிறுவனம். 💰

ஜியோவுடன் ஒப்பிடும்போது வாடிக்கையாளர்களைத் தக்கவைப்பதிலும், புதிய வாடிக்கையாளர்களை ஈர்ப்பதிலும் அண்மைக்காலமாக சிறப்பாக செயல்படுவதால் இந்த முடிவை தைரியமாக எடுத்திருக்கிறது. அதனால்தான், முதல் நிறுவனமாக தற்போது கட்டணங்களை உயர்த்தியிருக்கிறது.

சரி… பிற நிறுவனங்களின் நிலவரம்?

Vi-ஐயும் (Vodafone - Idea) ஏர்டெல் போலவே ₹79 பிளானை அடிப்படை பிளானாக வைத்திருக்கிறது. ஜியோவில் ஜியோபோனுக்கான அடிப்படை பிளான் ₹75. ஏர்டெல் குறிப்பிட்டிருக்கும் முதலீடு, நெட்வொர்க் விரிவாக்கம் போன்ற காரணங்கள் இவற்றிற்கும் பொருந்தும். எனவே ஏர்டெல்லின் அடியொற்றி விரைவில் இவையும் விரைவில் விலைகளை ஏற்றலாம். 📈

Share


2. சீனாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளுக்கு அமெரிக்கா அஞ்சுவது ஏன்? 🇨🇳

ஒரே ஒரு ஏவுகணை சோதனை மூலம் அமெரிக்காவின் பி.பியை ஏற்றியிருக்கிறது சீனா. ``அமெரிக்காவை சீனா விஞ்சிவிட்டது எனச் சொல்ல இதுவே போதுமே?” என இந்த சோதனைக்கு எக்கச்சக்க பில்ட் அப் ஏற்றுகிறார்கள் பாதுகாப்பு நிபுணர்கள்.

அப்படி என்னதான் செஞ்சது சீனா?

கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்பு `பைனான்ஷியல் டைம்ஸ்’ பத்திரிகை சீனாவின் புதிய சோதனை குறித்து எக்ஸ்க்ளூசிவ் கட்டுரை ஒன்று வெளியிட்டது. அந்த செய்தியின் சாராம்சம் இதுதான்.

  • ``கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில், அணு ஆயுதத்தை தாங்கிச் செல்லக்கூடிய ஹைப்பர்சோனிக் (ஒலியை விட 5 மடங்கு வேகத்தில் பயனிக்கும் திறன்கொண்ட) ஏவுகணைகளை ரகசியமாகப் பரிசோதனை செய்திருக்கிறது சீனா. இந்த சோதனைகள் அமெரிக்காவை வியப்பில் ஆழ்த்தியிருக்கின்றன. ஏனெனில், இந்த தொழில்நுட்பத்துடன் தற்போது உலகில் இருக்கும் ஒரே நாடு சீனாதான்”

  • அமெரிக்காவின் வியப்புக்கும், அச்சத்திற்கும் காரணம் இந்தப் புதிய தொழில்நுட்பத்தின் செயல்திறன்தான்.

அமெரிக்கா அச்சப்பட என்ன இருக்கிறது? 🌎

  • அணு ஆயுதங்களை ஏந்திச் செல்வதில் Ballistic Missile, Hypersonic Glide Vehicle என இரண்டு இருக்கின்றன. இரண்டுமே கண்டம்விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் திறன்பெற்றவைதான். ஆனால், Ballistic வகையைப் பொறுத்தவரை, இது முதலில் புவியிலிருந்து கிளம்பி, பின்னர் விண்வெளிக்குச் சென்று, பின்னர் அங்கிருந்து (பரவளைய பாதையில்) இலக்கை நோக்கிச் செல்லும். ஆனால், Hypersonic-ஐப் பொறுத்தவரை இது வளிமண்டலத்திற்குள் நுழைந்து, புவியின் சுற்றுவட்டப்பாதையிலேயே பயணம் செய்து, அங்கிருந்து இலக்கை நோக்கி அதிவேகமாகச் செல்லும். மேலே இருக்கும், நான்கு வரிகள் புரிந்துகொள்ள கடினமாக இருப்பது புரிகிறது. 😉 கீழே இருக்கும் படத்தைப் பார்த்தால் இன்னும் எளிதில் புரியும்.

  • இதில் Ballistic ஏவுகணைகளை எளிதில் தரையில் இருக்கும் ரேடார்கள் கண்டுபிடித்துவிடும். ஆனால், Hypersonic-ஐ மிக நெருக்கத்தில்தான் அவை உணரும். அதிவேகத்தில் வரும் Hypersonic-ஐ அவ்வளவு குறைந்த தூரத்திலிருந்து எதிர்கொள்வது மிகக் கடினம். இதுபோக இன்னொரு காரணமும் உள்ளது.

  • ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் Ballistic ஏவுகணைகளை அமெரிக்காவை நோக்கி ஏவினால், அவை வடதுருவத்தில்தான் (கனடா இருக்கும் மேற்பகுதி) வந்து தாக்கும். அங்கே அமெரிக்கா வலிமையான ரேடார் மற்றும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை வைத்திருக்கிறது. ஆனால், இந்த Hypersonic Glider-ஐப் பொறுத்தவரை இதனால் அமெரிக்காவின் தென்துருவத்தையும் தாக்கமுடியும். அங்கு அமெரிக்காவின் ஏவுகணை பாதுகாப்பு சொல்லிக்கொள்ளும்படி இல்லை.

இப்படியாக, அமெரிக்காவின் வலிமையான ஏவுகணை அரண்களைத் தாண்டியும் தாக்கும் ஆயுதம் ஒன்றை, தற்போது சீனா தயாராக வைத்திருக்கிறது. இதனால்தான், ``சீனாவின் இந்த ஏவுகணை குறித்து அமெரிக்கா கவலை கொள்கிறதா?” எனக் கேட்டதற்கு, ``ஆம்” எனத் தலையசைத்திருக்கிறார் அந்நாட்டு அதிபர் ஜோ பைடன்.

சீனாவின் ரியாக்‌ஷன் என்ன? 🚀

  • சீனா இதுவரையிலும் இப்படியொரு ஏவுகணை சோதனை நடந்ததை ஒப்புக்கொள்ளவே இல்லை. ஆனால், அமெரிக்க உயர் அதிகாரிகள் பலரும் இதை உறுதி செய்திருக்கின்றனர். இந்நிலையில், இந்த Hypersonic ஏவுகணை அமைப்பில் சீனா, இன்னும் சில நவீன மாற்றங்களைச் செய்யவிருப்பதும் தற்போது தெரியவந்திருக்கிறது.

  • எனவே சீனாவுக்கு ஈடாக அமெரிக்காவும் Hypersonic ஏவுகணை விஷயத்தில் அப்டேட் ஆகவேண்டும் என நகம் கடித்துக்கொண்டிருக்கிறது.


இந்தியா

  1. அபிநந்தனுக்கு வீர் சக்ரா:

    2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்திய பாகிஸ்தான் எல்லையில் நடந்த வான்வெளி சண்டையில் சாமர்த்தியமாக செயல்பட்டு, எதிரியின் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்காகவும், பின்னர் எதிரிகளின் பிடியில் சிக்கியபோதும் துணிச்சலுடன் சூழ்நிலையை எதிர்கொண்டதற்காகவும், இந்திய விமானப்படையின் குரூப் கேப்டன் அபிநந்தன் வர்தமானுக்கு, நேற்று குடியரசுத்தலைவரால் `வீர் சக்ரா விருது’ வழங்கப்பட்டது.

  2. ஆந்திராவுக்கு 3 தலைநகரங்களை நிர்மாணிக்கும் மசோதா வாபஸ்:

    ஆந்திராவுக்கு அமராவதி, கர்நூல், விசாகப்பட்டினம் என மூன்று தலைநகரங்களை நிர்மாணிப்பதற்கு முடிவு செய்த ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு, 2019-ல் அதற்கான மசோதாவைக் கொண்டுவந்தது. ஆனால், இதற்கு எதிர்க்கட்சிகள், விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆந்திர உயர்நீதிமன்றமும் இந்த முடிவுக்கு தடை விதித்தது. இந்நிலையில், நேற்று இந்த சட்டத்தை திரும்பப்பெறுவதாக ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது. ``ஆந்திராவில் பரவலான வளர்ச்சியை ஏற்படுத்த கொண்டுவரப்பட்ட இந்த முயற்சி தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது. எனவே, அனைத்து சந்தேகங்களுக்கும் விடையளிக்கும் வகையில் விரிவான புதிய மசோதாவை கொண்டுவருகிறோம்” எனவும் ஜெகன் அறிவித்துள்ளார்.

  3. தலித் மாணவருக்கு உதவிய உச்சநீதிமன்றம்:

    பிரின்ஸ் ஜெய்பீர் சிங் என்ற மாணவர் இந்த ஆண்டு ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வில் தேர்ச்சிபெற்று 25,894 ரேங்க்கையும், பட்டியலினத்தவர்களுக்கான தரவரிசையில் 864 ரேங்க்கையும் பெற்றிருந்தார். இவருக்கு ஐ.ஐ.டி பாம்பேயில் சிவில் இன்ஜினீயரிங் படிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இதற்கான கட்டணத் தொகையை, தொழில்நுட்பக் கோளாறுகளால் உரிய நேரத்தில் கட்டமுடியாமல் அந்த வாய்ப்பை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. எனவே, கல்லூரியில் சேர உதவுமாறு உச்சநீதிமன்றத்தை நாடினார்.

    அப்போது, உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட் மற்றும் ஏ.எஸ்.போபண்ணா அடங்கிய அமர்வு, அந்த மாணவர் கல்லூரியில் சேர உதவுமாறு அரசைக் கேட்டுக்கொண்டது. ஆனால், அரசு தரப்பினரோ, ``ஏற்கெனவே எல்லா சீட்களும் நிரம்பிவிட்டன. இனி சேர்க்கமுடியாது” எனக் கைவிரிக்கவே, ``இந்த இளம் தலித் மாணவன், பலமுறை முயன்றும் பணம் கட்ட முடியாமல் போனதற்காக ஐ.ஐ.டி-யில் படிக்கும் வாய்ப்பை இழந்தால் அது அநீதியாகும். எனவே, இந்த மாணவருக்காக கூடுதலாக ஒரு சீட்டை உருவாக்குங்கள்” என அரசுக்கு உத்தரவிட்டிருக்கின்றனர் உச்சநீதிமன்ற நீதிபதிகள். இதனால், பல தடைகளுக்குப் பிறகு அந்த மாணவர் தற்போது ஐ.ஐ.டி-யில் சேர்வது உறுதியாகியுள்ளது.


தமிழகம்

  1. உச்சம் தொட்ட தக்காளி விலை 🍅

    தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் பெய்த கடும் மழை காரணமாக சந்தைகளுக்கு தக்காளியின் வரத்து குறைந்துள்ளது. இதனால் விலை கடுமையாக ஏறியிருக்கிறது. அதிகபட்சமாக நேற்று திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் கிலோ ₹150-க்கு விற்பனையாகியிருக்கிறது. சென்னை கோயம்பேட்டில் கிலோ ₹90 முதல் ₹120-க்கு விற்பனையாகியிருக்கிறது.

உங்கள் ஊரில் என்ன விலை?

  1. கமலுக்கு கொரோனா:

    நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருக்கிறது. இதனால் வரும்வாரம் பிக்பாஸில் கலந்துகொள்வாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில், கமலை விர்ச்சுவலாக கலந்துகொள்ள வைப்பது, எவிக்‌ஷன் இன்றி வீட்டில் நடந்தவற்றையே வார இறுதியிலும் ஒளிபரப்புவது, ஒருவாரம் மட்டும் வேறு ஒருவரை தற்காலிகமாக தொகுத்து வழங்க வைப்பது மொத்தம் 3 ஆப்ஷன்களை சேனல் தரப்பினர் பரிசீலித்து வருகிறார்களாம்.

  2. கொலை வழக்கில் நால்வர் கைது:

    திருச்சி எஸ்.ஐ.பூமிநாதன் கொலைவழக்கில் இரண்டு சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  3. தமிழ்நாடு கொரோனா பாதிப்பு: 😷

    நேற்றைய கொரோனா பாதிப்பு: 750

    உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை: 13

அவ்வளவுதான்!

The Subject Line-னோட இன்னைக்கு அப்டேட்ஸ் உங்களுக்குப் பிடிச்சிருக்கும்னு நம்புறேன். பிடிச்சிருந்தா கீழ இருக்க பட்டன் மூலமா உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க… இன்னும் ஏதாச்சும் இந்த லிஸ்ட்ல சேர்க்கணும், இருக்குற விஷயங்கள்ல ஏதாச்சும் மாத்தணும்னா எனக்கு மெசேஜ் பண்ணுங்க!

திரும்ப நாளைக்கு காலைல 7 மணிக்கு சந்திப்போம்!

Have a Nice day! ☕️

The Subject Line-ஐ சமூக வலைதளங்கள் மூலம் பின்தொடர:

Telegram | Twitter | Facebook | Insta

CommentComment
ShareShare

Create your profile

0 subscriptions will be displayed on your profile (edit)

Skip for now

Only paid subscribers can comment on this post

Already a paid subscriber? Sign in

Check your email

For your security, we need to re-authenticate you.

Click the link we sent to , or click here to sign in.

TopNewCommunity

No posts

Ready for more?

© 2022 The Subject Line
Privacy ∙ Terms ∙ Collection notice
Publish on Substack Get the app
Substack is the home for great writing