🎖 பிபின் ராவத் விட்டுச்சென்ற இமாலய சவால்!
இன்றைய TSL-ன் பிற ஹைலைட்ஸ்: ODI கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்ட விராட் கோலி | பொய் சொல்கிறாரா அமித்ஷா? | கூகுளில் அதிகம் தேடப்பட்ட தமிழ்ப்படம் | ஒப்புதல் வழங்கப்பட்ட முதல் நதிநீர் இணைப்பு திட்டம் 🔴 Reading Time: 4 Mins ⏳
ஹாய், ஹலோ… வணக்கம் 👋
சந்தேகமே இல்லை;
இந்திய பாதுகாப்புத்துறைக்கும் நாட்டிற்கும் ஈடுசெய்யா முடியா இழப்பு, முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்தின் மரணம். 💔
நேற்று மதியம் ஊட்டி ராணுவ ஊழியர்கள் கல்லூரியில் நடக்கவிருந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக, Mi-17V5 ஹெலிகாப்டரில் சென்றிருக்கிறார் பிபின் ராவத்.
அந்த ஹெலிகாப்டர் எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளாகவே, அதிலிருந்த பிபின் ராவத், அவர் மனைவி மதுலிகா ராவத் உள்பட 13 பேரும் உயிரிழந்திருக்கின்றனர். குரூப் கேப்டன் வருண் சிங் மட்டும் கடுமையான தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இவர்களின் உடல்கள் இன்று டெல்லி கொண்டுசெல்லப்படுகின்றன.
இந்தியாவின் முதல் முப்படை தலைமை தளபதியாக (Chief Of Defence Staff) விளங்கிய பிபின் ராவத், சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய ராணுவ சீர்திருத்தமாகக் கருதப்பட்ட, முப்படைகளின் ஒருங்கிணைப்பு பணிகளில் அதிவேகம் காட்டியவர். இந்திய பாதுகாப்பு படையை முற்றிலுமாக மாற்றியமைக்க, இரண்டு ஆண்டுகளாக தீவிரமாக திட்டம் தீட்டிவந்தார். மிகவும் சவாலான அந்தப் பணியை, உறுதியுடன் செய்துவந்த நிலையில் நிகழ்ந்த, பிபினின் இந்த திடீர் மறைவு, அந்தப் பணிகளை இமாலய சவால்களாக இந்தியா முன் மீண்டும் நிறுத்தியிருக்கிறது.
என்னென்ன சவால்கள்?
உலகின் மிகப்பெரிய பாதுகாப்பு படையைக் கொண்டிருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால், அமெரிக்கா, சீனா, பிரிட்டன் போன்ற நாடுகள் தங்கள் பாதுகாப்பு படைகளை காலத்திற்கேற்ப சீரமைத்தது போல, இந்தியா சீரமைக்கவில்லை. அதில் முக்கியமான அம்சம், Integrated theatre commands.
இந்தியாவின் பாதுகாப்பு படைகளின் மூன்று பெரும்பிரிவாக இருப்பவை ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை. இந்த மூன்றுமே மூன்று வெவ்வேறு தலைமைகளின் கீழ் இயங்குவதால், பல நேரங்களில் ஒன்றிணைந்து சிறப்பாக செயல்பட முடியாமல் போகிறது.
ஆயுதங்கள் கொள்முதல், வீரர்களுக்கான பயிற்சி, ஆபரேஷன்களின் திட்டமிடல் எனப் பல விவகாரங்களில் இந்த முப்படைகளின் ஒருங்கிணைப்பு மிக மிக முக்கியம். ஆனால், நம்முடைய பாதுகாப்பு படைகளின் நிர்வாக முறைகளில் அது சாத்தியம் இல்லை என்பதால்தான், முப்படைகளின் தளபதிகளுக்கு மேல், புதிதாக முப்படைகளின் தலைமைத் தளபதி என்ற பதவி உருவாக்கப்பட்டு அதில் பிபின் ராவத் நியமிக்கப்பட்டார். அவருக்கு கொடுக்கப்பட்ட முக்கியமான மூன்று வேலைகள்,
- முப்படைகளையும் ஒருங்கிணைத்து Integrated theatre command-களை உருவாக்குவது
- முப்படைகளுக்குத் தேவையான கொள்முதல்களை ஒருங்கிணைத்து தேவையற்ற செலவுகளைக் குறைப்பது
- இவற்றை நவீனப்படுத்துவதற்கான பணிகளைத் தொடங்குவது
Integrated theatre commands என்றால் என்ன?
இந்தியாவில் முப்படைகளுக்கும் சேர்த்து மொத்தம் 17 தனித்தனி Command-கள் இருக்கின்றன. ஒரு Command என்பது ஒரு பிராந்தியத்தில் ராணுவ / கடற்படை / விமானப்படை சார்பில் செயல்படும் தளம். அதன்படி ராணுவத்திற்கும், விமானப்படைக்கும் 7 Command-களும், கடற்படைக்கு 3 Command-களும் இருக்கின்றன.

இதில் ஒவ்வொரு Command-க்கும் வீரர்களுக்குப் பயிற்சியளிப்பது, பாதுகாப்பு பணியில் ஈடுபது, தளவாடங்களை தயார்படுத்துவது என தனித்தனி நோக்கம் இருக்கும். ஆனால், ஒருங்கிணைப்பு இருக்காது. ஒரே பகுதியில், உதாரணமாக இந்தியாவின் கிழக்குப் பகுதியில் செயல்படும் ராணுவ Command-க்கும், விமானப்படை Command-க்குமே கூட ஒருங்கிணைப்பு இருக்காது.
இப்படி 17 Command-களாக மற்றும் 3 பாதுகாப்பு படைகளாக பிரிந்திருக்கும் படைப்பிரிவுகளை ஒருங்கிணைத்து, மொத்தம் ஐந்தே ஐந்து படைப்பிரிவுகளை, 3 பாதுகாப்பு படைகளையும் சேர்த்து உருவாக்குவதே, Integrated theatre command. (உதாரணமாக, இந்தியாவை 5 பிராந்தியங்களாக பிரித்து நிர்வகிப்பது)
இதன்படி, ஒரே ஒரு Command-ல் முப்படை வீரர்களும் இருப்பார்கள்; முப்படை ஆயுதங்களும் இருக்கும். அவர்களுக்கு உதவ முப்படைகளிலிருந்தும் அதிகாரிகள் இருப்பார்கள். இவர்கள் அனைவருக்கும் சேர்த்து ஒரு தளபதி இருப்பார். நாளை போர் என வரும்போது, இந்த தளபதியின் கீழ் அனைவரும் ஒருங்கிணைத்து செயல்பட்டால் போதும். இப்போது இருக்கும் முப்படை தளபதிகளின் உத்தரவுக்காக காத்திருக்க வேண்டியதில்லை.
இப்படி முப்படைகளை ஒருங்கிணைத்து, இந்திய பாதுகாப்பு படைகளின் பலத்தைக் கூட்டுவதும், பாதுகாப்புத்துறையின் செலவைக் குறைப்பதும்தான் theatre command-களின் சிறப்பே. இந்தியா போல மிகப்பெரிய ராணுவத்தைக் கொண்டிருக்கும் நாட்டிற்கு காலத்திற்கேற்ற தேவையும் கூட.
ஆனால், இந்தப் பணிகள் அவ்வளவு சுலபமானவை அல்ல. அதனால்தான் ஆளும் அரசு மற்றும் இதற்கு முந்தைய அரசுகள் உள்பட அனைவரும் இதை நடைமுறைப்படுத்த தயக்கம் காட்டினர்.
தற்போது இருப்பது போலவே மூன்று படைகளின் நிர்வாகமும், அதிகாரமும் சீராகப் பிரிக்கப்பட வேண்டும். நாட்டின் பாதுகாப்பு தேவைகளும் பூர்த்தியாகவேண்டும். எதிர்காலத் தேவைகளுக்கேற்பவும் படைகள் தயாராகவேண்டும். எவ்வளவு சிக்கலான வேலை? இதைத்தான் கடந்த இரண்டு ஆண்டுகளாக பிபின் ராவத்திடம் ஒப்படைத்திருந்தது மத்திய அரசு.
என்ன ஆனது இதுவரைக்கும்?
அவரும் முப்படைகளைக் கூட்டி இதற்கான திட்டங்களை தீவிரமாக வகுத்துவந்தார். 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் திட்ட அளவில் இந்தப் பணிகளை நிறைவு செய்து, அதன்பின் மாற்றங்களை நடைமுறைக்கு கொண்டுவரவும் திட்டமிட்டிருந்தார். ஆனால், தற்போது பிபினின் எதிர்பாராத மறைவால், இந்தப் பணிகள் மத்திய அரசுக்கு மீண்டும் சவாலாகவே தொக்கி நிற்கின்றன. பிபின் ராவத் செய்த அளவுக்கு இனி பணிகள் வேகமெடுப்பதும் சந்தேகமே. எனவே பிபின் ராவத்தின் வெற்றிடத்தை நிரப்புவது மத்திய அரசுக்கு மிக சவாலான காரியமாகவே இருக்கும்.
இப்படியாக, இந்திய பாதுகாப்பு படைகளின் எதிர்காலம் அடுத்து வரும் புதிய முப்படை தலைமைத் தளபதியை எதிர்நோக்கி காத்திருக்கிறது.
பொய் சொல்கிறாரா அமித்ஷா?
நாகலாந்தில் கடந்த சனிக்கிழமை, 8 அப்பாவி சுரங்கத் தொழிலாளர்கள் மீது ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் மட்டும் உயிர்பிழைத்தனர். அவர்களை அசாம் மருத்துவக்கல்லூரியில் சேர்த்து, அங்கு சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்திருக்கிறது அரசு. அவர்களில், ஒருவரான ஷெய்வாங்கை, நேற்று முன்தினம் மாலை நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம். அப்போது அவர், ராணுவம் சுடுவதற்கு முன்பே தொழிலாளர்களை எச்சரிக்கவில்லை எனவும், திடீரென்றே துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், அவர்கள் தப்பி ஓட முயலவில்லை எனவும் குறிப்பிட்டிருக்கிறார். அண்மையில், நாடாளுமன்றத்தில் இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்த அமித்ஷா, ராணுவ வீரர்கள் தொழிலாளிகளின் வாகனத்தை நிற்கச்சொல்லி எச்சரித்ததாகவும், அவர்கள் ஓட முயற்சி செய்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், ஷெய்வாங் சொல்வது அதற்கு முரணாக இருக்கிறது. இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இருவரின் குடும்பத்தினரும் ஊடகங்களிடம் பேசக்கூடாது என கட்டுப்பாடு விதித்திருக்கிறது நாகலாந்து அரசு.
பெண்களுக்கென தனி தேர்தல் அறிக்கை: 🗳
உத்தரப்பிரதேச தேர்தலை முன்னிட்டு, அம்மாநிலத்தில் பெண்களுக்கென தனி பிங்க் தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது காங்கிரஸ். சட்டமன்றத் தேர்தலில் 40% இட ஒதுக்கீடு, அரசுப்பேருந்தில் கட்டணமில்லா பயணம், இளங்கலைப் படிப்பில் சேரும் மாணவிகளுக்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், 10 மற்றும் 12-வது படிக்கும் மாணவிகளுக்கு ஸ்மார்ட்போன், பாலியல் குற்றங்களில் பெண்கள் புகார் அளித்து 10 நாள்களில் நடவடிக்கை எடுக்கவில்லையெனில் அதிகாரிகள் சஸ்பெண்ட் உள்ளிட்ட வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறது கட்சி.
இந்தியாவின் சமச்சீரற்ற வளர்ச்சி 💰
ஒருநாட்டின் மொத்த வருமானம், அந்நாட்டு மக்களால் எந்தளவு சமமாகப் பகிர்ந்துகொள்ளப்படுகிறது எனச் சொல்லும் World Inequality Report 2022 நேற்று வெளியாகியிருக்கிறது. இதில்,
- இந்தியாவின் 1% பேரிடமே நாட்டின் 22% வருமானம் செல்கிறது எனவும்,
- டாப் 10% பேரிடமே நாட்டின் 57% வருமானம் செல்கிறது எனவும்,
- பின்தங்கியிருக்கும் 50% மக்களுக்கு, நாட்டின் வெறும் 13% வருமானம் மட்டுமே கிடைக்கிறது எனவும் தெரியவந்துள்ளது.
முதல் நதிநீர் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கிய கேபினட்:
தேசிய நதிநீர் இணைப்பு திட்டத்தின் முதல் திட்டமான, கென் - பெட்வா நதிகளை இணைக்கும் திட்டத்திற்கு நேற்று ஒப்புதல் வழங்கியிருக்கிறது மத்திய அமைச்சரவை. உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசத்திற்கு பயனளிக்கும் எனக்கூறப்படும் இந்த திட்டம் 8 ஆண்டுகளில் நிறைவேற்றப்படவிருக்கிறது. பன்னா புலிகள் சரணாலயத்திற்கு ஏற்படவிருக்கும் சூழலியல் பாதிப்புகள் காரணமாக, இந்த திட்டத்திற்கு சூழலியாளர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், உத்தரப்பிரதேச தேர்தல் நெருங்கும் இவ்வேளையில் இதற்கு ஒப்புதல் அளித்திருக்கிறது அரசு.
சீனாவை எதிர்க்கும் பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா: 🏅
சீனாவின் மனித உரிமை மீறல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பிப்ரவரி மாதம் நடக்கவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகளில், அரசு சார்பில் பிரதிநிதிகள் யாரையும் அனுப்பப்போவதில்லை என அண்மையில் அறிவித்திருந்தது அமெரிக்கா. தற்போது கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் ஆகிய நாடுகளும் இதேபோல அதிகாரிகள் அளவில் பீஜிங் ஒலிம்பிக்ஸைப் புறக்கணிக்கப்போவதாக அறிவித்திருக்கின்றன.
விவசாயிகள் போராட்டம்:
இன்று இறுதி முடிவு! டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் 6 கோரிக்கைகள் தொடர்பாக நேற்று பேச்சுவார்த்தை நடத்தியிருக்கும் மத்திய அரசு, அவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டுள்ளது. போராடிய விவசாயிகளின் மீது கடந்த ஓராண்டில் போடப்பட்ட சுமார் 48,000 வழக்குகளைத் திரும்பப்பெறவும் ஒப்புக்கொண்டுள்ளது. விவசாயிகளின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கான எழுத்துப்பூர்வ உறுதிமொழியையும் அளித்துவிட்டால், போராட்டம் இன்றுடன் முடித்துக்கொள்ளப்படும் என விவசாயிகள் தெரிவித்திருக்கின்றனர்.
தமிழகத்தில் நேற்று பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை: 703
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை: 11
இன்று மற்றும் அடுத்த இரு நாள்களுக்கான வானிலை முன்னறிவிப்பு: ☔️👇
ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதம் 4% ஆகவும், ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3.35% ஆகவும் இருக்கிறது. இதை 9-வது முறையாக மாற்றாமல் தொடர்கிறது ரிசர்வ் வங்கி. இதன்மூலம் இன்னும் சில மாதங்களுக்கு வங்கிகள், குறைந்த வட்டியில் பொதுமக்களுக்கு கடன் வழங்குவது தொடரும்.
ODI கேப்டன் ரோஹித்: தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கான 18 பேர் அணியை நேற்று அறிவித்திருக்கிறது பி.சி.சி.ஐ. அத்துடன், இனிமேல் ஒருநாள் போட்டிகளுக்கும் ரோஹித் ஷர்மாவே கேப்டனாக இருப்பார் என்றும் அறிவித்திருக்கிறது. இதன்மூலம் விராட் கோலியின் ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன்சியும் முடிவுக்கு வருகிறது.
2021-ம் ஆண்டில் இந்தியர்கள் அதிகம் தேடிய விஷயங்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது கூகுள். அதன்படி,
அதிகம் தேடப்பட்ட விஷயம்: Indian Premier League 🏏
அதிகம் தேடப்பட்ட படம்: Jai Bhim ✊
அதிகம் தேடப்பட்ட கேள்வி: What is black fungus 🤔
அதிகம் தேடப்பட்ட பிரபலம்: Neeraj Chopra 🥇
📣 Note: The Subject Line (TSL) நியூஸ்லெட்டரின் இந்த மெயில் உங்களின் Promotions Tab-ல வந்திருந்தா, அதை அப்படியே Move பண்ணி, Primary Tab-க்கு மாத்திடுங்க. இதன்மூலம் தினமும் TSL-ஐ நீங்க மிஸ் பண்ணாம படிக்கமுடியும். ஒருவேளை இந்த மெயில் உங்க நண்பர்கள் மூலம் வந்திருந்தா, தினமும் உங்க இன்பாக்ஸிற்கு நேரடியாக வர, சப்ஸ்கிரைப் பண்ணிடுங்க. ✅
அவ்வளவுதான்!
The Subject Line-னோட இன்னைக்கு அப்டேட்ஸ் உங்களுக்குப் பிடிச்சிருக்கும்னு நம்புறேன். பிடிச்சிருந்தா கீழ இருக்க பட்டன் மூலமா உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க… இன்னும் ஏதாச்சும் இந்த TSL-ல் மாத்தணும்னா எனக்கு மெசேஜ் பண்ணுங்க! உங்க கருத்துகள் எங்களுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். 🤞
திரும்ப நாளைக்கு காலைல 7 மணிக்கு சந்திப்போம்!
Have a Nice day! ☕️
The Subject Line-ஐ சமூக வலைதளங்களில் பின்தொடர: