💉 மூன்றாவது டோஸூக்கு என்ன தடுப்பூசி?
இன்றைய TSL-ன் பிற ஹைலைட்ஸ்: எழுத்தாளர் அம்பைக்கு சாகித்ய அகாடமி விருது | `சமநிலை தவறிய' சென்னை வானிலை | செஞ்சுரியனில் முதல் வெற்றி | டெஸ்ட்டிலிருந்து ஓய்வுபெற்ற டி-காக் | Reading Time: ⏱ 5 Mins
ஹாய், ஹலோ… வணக்கம் 👋
வரும் ஜனவரி 10-ம் தேதி முதல் இணை நோய் உள்ள முதியோர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகள் தொடங்கவிருக்கின்றன.
இந்த பூஸ்டர் டோஸ் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாமா அல்லது ஏற்கெனவே இரண்டு டோஸ்கள் எடுத்துக்கொண்ட தடுப்பூசியையேதான் எடுத்துக்கொள்ள வேண்டுமா?
இந்தக் கேள்விக்கு, ``பல்வேறு ஆராய்ச்சி முடிவுகளை பரிசீலித்து, ஜனவரி 10-ம் தேதிக்கு முன்பாகவே பதில் சொல்லிவிடுவோம்” எனத் தெரிவித்திருக்கிறார் ஐ.சி.எம்.ஆர் இயக்குநர் டாக்டர் பல்ராம் பார்கவா.
ஏன் இதில் தயக்கம்?
இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக் V ஆகிய 3 தடுப்பூசிகளை மட்டும்தான் அரசு இதுவரை செலுத்தி வருகிறது. இந்த தடுப்பூசிகளை ஏற்கெனவே இரண்டு டோஸ்களாக எடுத்துக்கொண்டவர்கள், மீண்டும் மூன்றாவதாக அதையே பூஸ்டர் டோஸாகவும் எடுத்துக்கொண்டால் எந்தப் பிரச்னையும் இல்லைதான். வழக்கம்போல மீண்டும் குறிப்பிட்ட சில காலத்திற்கு எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
ஆனால், இதுவே வேறு தடுப்பூசி என்றால், அந்த எதிர்ப்பு சக்தி இன்னும் கூடுதலாக இருக்கும் என்கின்றன சில ஆய்வுகள். அப்படியெனில், எந்த தடுப்பூசிகளையெல்லாம் அப்படி கூடுதல் பூஸ்டராக செலுத்தலாம், இதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன, எந்த தடுப்பூசி காம்போ அதிக செயல்திறன் கொண்டது என்பதையெல்லாம் இன்னும் நம்மால் தெளிவாகச் சொல்ல முடியவில்லை முடியவில்லை. அதனால்தான் இந்திய அரசு இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை.
வேறு தடுப்பூசிகள் மட்டும் எப்படி அதிகமாக எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றன?
எந்தவொரு தடுப்பூசியின் நோக்கமும் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்தை, குறிப்பிட்ட நோய்க்கு எதிராக தயார் படுத்துவதுதான். இதில், ஒவ்வொரு தடுப்பூசியும் ஒவ்வொரு விதத்தில் செயல்படுபவை.
இந்நிலையில், இரண்டு வெவ்வேறு தடுப்பூசிகளைப் பயன்படுத்துகையில், இரண்டு விதங்களில் நோய் எதிர்ப்பு சக்தி மண்டலம் தூண்டப்பட்டு, அது கூடுதல் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
இதுவரை உலக அளவில் இப்படி இரண்டு வெவ்வேறு தடுப்பூசிகளை செலுத்தி பயன்படுத்தப்பட்ட இடங்களிலெல்லாம், ஆஸ்ட்ராஜெனிகா (அடினோவைரஸ் தடுப்பூசி) + ஃபைஸர் (அ) மாடர்னா (mRNA தடுப்பூசிகள்)-வை வைத்து சோதனை நடத்தப்பட்டிருக்கின்றன. அதில், வழக்கமான தடுப்பூசி பூஸ்டர்களைவிட, இந்த மாற்று தடுப்பூசி பூஸ்டர்கள் சிறப்பாக செயல்படுவது தெரியவந்திருக்கிறது.
எனவேதான், ஓமிக்ரானுக்கு எதிராக அதிக எதிர்ப்பு சக்தியை உருவாக்க, இப்படி வேறு தடுப்பூசிகளை பரிந்துரைக்கலாமா என நிபுணர்கள் பரிசீலிக்கின்றனர்.
அப்படியெனில் உடனே அனுமதித்து விடலாமே?
ஏற்கெனவே மேலே பார்த்ததுபோல, இன்னும் இந்த தடுப்பூசி முறைக்கு கூடுதல் ஆய்வு முடிவுகள் தேவைப்படுகின்றன. இந்தியாவில், வேலூர் சி.எம்.சி மருத்துவக் கல்லூரியில் இதுதொடர்பாக நடந்து வரும் ஆய்விலும் இன்னும் முடிவுகள் வெளிவரவில்லை.
மேலும், வெளிநாடுகளைப் போல நம் நாட்டில் mRNA தடுப்பூசிகளைப் பயன்படுத்த முடியாது முடியாது. எனவே கோவாக்சின் + கோவிஷீல்டு, கோவாக்சின் + கோவோவேக்ஸ், கோவிஷீல்டு + கோவோவேக்ஸ் போன்ற காம்போவைத்தான் பயன்படுத்த முடியும்.
அப்படி, மூன்றாவதாக பரிந்துரைக்கப்படும் தடுப்பூசி மக்களுக்கு உடனே கிடைக்கும்படியும், ஒமிக்ரானுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவதாகவும் இருக்கவேண்டும்.
எனவே இந்தப் பிரச்னைகளையும், அறிவியல் ஆய்வு முடிவுகளையும் பொறுத்தே அந்த மூன்றாவது டோஸ் என்னவாக இருக்கலாம் எனத் தெரியவரும்.
இந்தியா
செஞ்சுரியனில் முதல் வெற்றி
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில், செஞ்சுரியனில் நடந்த முதல் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருக்கிறது இந்தியா.
- முதல் இன்னிங்ஸில் இந்தியா 327 ரன்கள் எடுத்திருந்தது. தென்னாப்பிரிக்கா, 197 ரன்களில் சுருண்டது. பின்னர் இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் 174 ரன்கள் சேர்த்து, தென்னாப்பிரிக்காவுக்கு 305 ரன்கள் இலக்காக நிர்ணயித்திருந்தது.
- ஆனால், அந்த அணி 191 ரன்களுக்கே ஆல் அவுட் ஆகவே, இந்தியா செஞ்சுரியனில் முதல் முறையாக வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது.
- முதல் இன்னிங்ஸில் சதமடித்த கே.எல்.ராகுல் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
ஆர்டர்களை அப்கிரேடு செய்த ஓலா
என்ட்ரி லெவல் ஸ்கூட்டரான S1 மற்றும் ஹை எண்ட் எடிஷனான S1 Pro ஆகிய இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களுக்கு, சில மாதங்களுக்கு முன் புக்கிங்கை ஓப்பன் செய்திருந்தது ஓலா நிறுவனம். இதில் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் S1 Pro-வையே ஆர்டர் செய்திருப்பதாலும், மிகக்குறைவானவர்களே S1 மாடலை தேர்வு செய்திருப்பதாலும், தற்போது S1 தேர்வு செய்தவர்களுக்கும், S1 Pro-வையே இலவசமாக அப்கிரேடு செய்து வழங்குவதாகத் தெரிவித்துள்ளது ஓலா. அப்படியெனில், S1 Pro-வை அதிக விலையில் ஆர்டர் செய்தவர்கள் ஏமாற மாட்டார்களா எனக் கேட்கிறீர்களா? வெயிட்! இந்த அப்கிரேடு, வெறும் ஸ்கூட்டரின் ஹார்டுவேருக்கு மட்டும்தானாம். S1 Pro-வின் அனைத்து வசதிகளையும் பெற வேண்டுமென்றால், சாஃப்ட்வேருக்கு தனியாக ₹30,000 ரூபாய் செலுத்த வேண்டுமாம்.
தமிழகம்
சென்னையில் கொட்டித் தீர்த்த மழை
சென்னையில் எதிர்பாராத விதமாக நேற்று மதியம் முதல் இரவு வரை கனமழை கொட்டித் தீர்த்தது. மிகக் குறைவான நேரத்தில் பெய்த அதீத மழையால், சென்னை நகரின் சாலைகள் எங்கும் தண்ணீர் தேங்கின. மழையால் ஏற்பட்ட மின்கசிவு விபத்துகளால் நேற்று இரவு வரை 3 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மதியம் லேசாகத் தொடங்கிய மழை, மாலை முதல் கனமழையாக மாறியது. அதிகபட்சமாக எம்.ஆர்.சி நகரில் 20 செ.மீ வரை மழை பதிவாகியிருக்கிறது. மிதமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென இவ்வளவு பெரிய மழை பெய்ததும், இதற்கேற்ற முன்னெச்சரிக்கைகளை ஏன் வானிலை ஆராய்ச்சி மையம் கொடுக்காமல் போனது என்பதும்தான் சென்னைவாசிகளின் நேற்றைய கேள்வி. ``மிகக்குறைந்த நேரத்தில் இதுபோல பெய்யக்கூடிய அதிதீவிர மழையை கணிப்பது கடினம்" எனத் தெரிவித்திருக்கின்றனர் வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள். அடுத்த 3 நாள்களுக்கும் மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளனர்.
பி.டி.ஆர் பேசியது என்ன?
2022-23 மத்திய பட்ஜெட்டிற்கு முந்தைய மாநில நிதியமைச்சர்களின் கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. அதில் கலந்துகொண்ட பேசிய தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் 20-க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை மத்திய அரசிடம் வைத்தார். அதில் முக்கியமான 4-ன் சுருக்கம் இங்கே…
மத்திய அரசால் விதிக்கப்படும், செஸ் & சர்சார்ஜ் ஆனது 2010-11 மற்றும் 2020-21 காலகட்டத்தில் இது மும்மடங்காக உயர்ந்திருக்கிறது. ஆனால், இவை மாநிலங்களுடன் பகிர்ந்துகொள்ளப்படுவதில்லை; இது கூட்டாட்சி தத்துவத்தை பாதிக்கும் விஷயம் என்பதால், மத்திய அரசு செஸ் & சர்சார்ஜை வரிக்கட்டமைப்புக்குள் கொண்டுவரவேண்டும்.
ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்ட பிறகு மாநிலங்களின் வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. பெருந்தொற்றுக் காலத்தில் இன்னும் பாதித்திருக்கிறது எனவே ஜூன், 2022-க்குப் பிறகும் மத்திய அரசு குறைந்தது 2 ஆண்டுகளுக்காவது மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும்.
மத்திய அரசின் திட்டங்களுக்கும், பொதுத்துறை நிறுவனங்களுக்கும் தமிழக அரசு கடந்த காலங்களில் இலவசமாக நிலங்களை வழங்கியிருக்கிறது. ஆனால், இவை தனியார்வசம் செல்லும்போது, அந்த நிலங்களுக்கான இழப்பீட்டை மத்திய அரசு வழங்குவதில்லை. இதற்கான திட்டத்தை மத்திய அரசு வகுக்க வேண்டும்.
ஜவுளித்துறைக்கு ஜி.எஸ்.டி வரியானது 5%-லிருந்து 12% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது சிறு குறு தொழில்நிறுவனங்களையும், கைத்தறி நெசவாளர்களையும் பாதிக்கும் என்பதால் உடனே அரசு திரும்பப் பெறவேண்டும். இரும்பு, தாமிரம், அலுமினியம் உள்ளிட்ட தொழிற்சாலைகளின் மூலப்பொருள் விலை உயர்வை, மத்திய அரசு உடனே தலையிட்டு குறைக்கவேண்டும்.
எழுத்தாளர் அம்பைக்கு சாகித்ய அகாடமி விருது
தமிழ் நவீனப் பெண்ணிலக்கியத்தின் மிக முக்கியமான எழுத்தாளரான அம்பைக்கு, ‘சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை' என்ற அவரது சிறுகதைத் தொகுப்புக்காக இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 1955-ம் ஆண்டிலிருந்து சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் அம்பைதான், இந்த விருது பெறும் 4-வது தமிழ் பெண் எழுத்தாளர்.
- இதேபோல, சிறார் இலக்கியத்திற்கான பால புரஸ்கார் விருது, `அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’ என்ற நூலுக்காக மு.முருகேஷுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சி மையத்தால் பாதிக்கப்பட்ட சிறுவன்
புதுக்கோட்டை மாவட்டம், பசுமலைப்பட்டியில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கடந்த சில தினங்களாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று வழக்கம்போல வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும்போது, இங்கிருந்து பாய்ந்த தோட்டா, குடியிருப்பு பகுதியில் இருந்த 11 வயது சிறுவன் புகழேந்தியின் தலையில் பாய்ந்து பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைபெற்று வருகிறார் புகழேந்தி. இதையடுத்து சிறுவனின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினரும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் நேற்று பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை: 890
- உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை: 7
இந்தியாவில் நேற்றைய கொரோனா பாதிப்பு: 13,154
- இதுவரை பதிவான ஓமிக்ரான் பாதிப்பு: 961
இன்று மற்றும் நாளைக்கான வானிலை முன்னறிவிப்பு ☔️
2019-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக பதவி வகித்து வந்த ரூபா குருநாத், நேற்று அந்தப் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில், கூடுதல் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளதால், ராஜினாமா செய்வதாக அறிவித்திருக்கிறார்.
2021-ம் ஆண்டில் உலகம் முழுக்க 45 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக, சர்வதேச ஊடகவியல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் 6 பேர் இந்தியாவில் கொல்லப்பட்டவர்கள். பத்திரிகையாளர்கள் பணி செய்ய மோசமான நாடுகளின் பட்டியலில், மெக்சிகோ முதலிடத்திலும், ஆப்கானிஸ்தான் இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளன.
இந்த மாத தொடக்கத்தில் நாகலாந்தில் 14 அப்பாவிகள், ராணுவத்தினரால் தவறுதலாக சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் அமலில் இருக்கும், AFSPA சட்டத்தை திரும்பப் பெற வேண்டுமென கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில், அடுத்த 6 மாதங்களுக்கு AFSPA சட்டத்தை நாகலாந்தில் நீட்டித்திருக்கிறது மத்திய அரசு.
நாடு முழுவதும் கொரோனா எண்ணிக்கை உயர்ந்து வருவதால், உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலை ஒத்திவைக்கும்படி, தேர்தல் ஆணையத்தையும் பிரதமரையும் கேட்டுக்கொண்டிருந்தது அலகாபாத் உயர்நீதிமன்றம். இதுகுறித்து கடந்த சில நாள்களாக ஆலோசனை நடத்திய தேர்தல் ஆணையம், நேற்று அம்மாநில அரசியல் கட்சிகளிடமும் ஆலோசனை நடத்தியது. இதில், அனைத்து கட்சிகளும் தேர்தலை ஒத்திவைக்க வேண்டாம் என்றே கருத்து தெரிவித்துள்ளன. எனவே தேர்தல் திட்டமிட்டபடியே நடக்கவிருக்கிறது.
இந்தியாவின் ஒரு அங்கமாக இருக்கும் அருணாசலப் பிரதேசத்தை, அது தெற்கு திபெத் பகுதி என்றும் தன்னுடைய நாட்டின் பகுதியென்றும் கூறி சொந்தம் கொண்டாடி வருகிறது சீனா. இந்நிலையில் அருணாசலப் பிரதேசத்தில் இருக்கும் 15 இடங்களுக்கு நேற்று அதிகாரபூர்வ சீனப் பெயர்களை அறிவித்து சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. இதற்கு முன்பு 2017-ம் ஆண்டு இதேபோல 6 இடங்களுக்கு பெயர்களை அறிவித்திருந்தது.
தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் தகவல்படி, இந்த ஆண்டு இதுவரை நாடு முழுவதும் 126 புலிகள் உயிரிழந்துள்ளன. அதிகபட்சமாக மத்தியப் பிரதேசத்தில் 44 புலிகள் உயிரிழந்துள்ளன.
ஹீரோ, டிவிஎஸ் வரிசையில் பஜாஜ் நிறுவனமும் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அதன் அடுத்தகட்டமாக, புனேவில் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஆலையைத் தொடங்கியிருக்கிறது பஜாஜ். 2022-ன் ஜூன் மாதம், முதல் வாகனம் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
29 வயதே ஆகும், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் குயின்ட்டன் டி-காக் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து உடனடியாக ஓய்வுபெறுவதாக தெரிவித்திருக்கிறார். விரைவில், தந்தையாகப் போகும் டி-காக், ``என் குடும்பத்துடன் இனி நான் அதிக நேரம் செலவிட விரும்புகிறேன்; அதனால்தான் இந்த முடிவு" என்று அறிவித்திருக்கிறார். ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார்.
- KYC-க்கு நீட்டிக்கப்பட்ட கால அவகாசம்:
கொரோனா காரணமாக, வாடிக்கையாளர்கள், தங்கள் வங்கிகளில் KYC (Know Your customer) விவரங்களைக் கொடுத்து அப்டேட் செய்வதற்கான கால அவகாசத்தை மார்ச் 31, 2022 வரை நீட்டித்திருக்கிறது ரிசர்வ் வங்கி. அதுவரை, அவர்களின் வங்கி சேவைகளை முடக்கவேண்டாம் எனவும் வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
🔴 இதுவரைக்கும் TSL-ஐ தொடர்ந்து படிச்சிட்டு வர்றீங்க; எனவே இதுபற்றிய உங்க கருத்தை தெரிஞ்சுக்க விரும்புறோம். அதனால், இந்த லிங்கை க்ளிக் பண்ணி உங்களோட ரேட்டிங்கைப் பதிவு பண்ணிடுங்க. TSL-ஐ மேம்படுத்த இது எங்களுக்கு உதவியா இருக்கும்!
அவ்வளவுதான்!
The Subject Line-னோட இன்னைக்கு அப்டேட்ஸ் உங்களுக்குப் பிடிச்சிருக்கும்னு நம்புறேன். பிடிச்சிருந்தா கீழ இருக்க பட்டன் மூலமா உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க… இன்னும் ஏதாச்சும் இந்த TSL-ல் மாத்தணும்னா எனக்கு மெசேஜ் பண்ணுங்க! உங்க கருத்துகள் எங்களுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். 🤞
திரும்ப நாளைக்கு காலைல 7 மணிக்கு சந்திப்போம்!
Have a Nice day & Happy New year 🎉 🥳
The Subject Line-ஐ சமூக வலைதளங்களில் பின்தொடர: