🌏 COP26: இந்தியா செய்தது சரிதானா? 🇮🇳
In Today's Edition: கர்நாடக பா.ஜ.க-வை மிரட்டும் கிரிப்டோகரன்சி ஊழல் | கோவை மாணவியின் வழக்கு; இதுவரை நடந்தது என்ன? | மகாராஷ்டிராவின் மாவோயிஸ்ட் என்கவுன்ட்டர் | COP26-ல் இந்தியாவின் முடிவு சரியா? | Reading Time: 6½ Mins 🎯
ஹாய், ஹலோ… வணக்கம்! 👋
The Subject Line-ன் இந்த முதல் எடிஷனுக்கு உங்களை வரவேற்கிறேன். 💐
இனி, இதுவே உங்களின் தினசரி நியூஸ் டயட்.
வாங்க… நேரா இன்றைய Subjects-க்குள்ள போயிடலாம்.
❶ கோவை பள்ளி மாணவி வழக்கு - இதுவரை
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதி பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்துவந்த மாணவி ஒருவர் கடந்த வியாழன் அன்று வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். சில மாதங்களுக்கு முன்பு வரை, அந்த மாணவி படித்துக்கொண்டிருந்த சின்மயா வித்யாலயா பள்ளியில், இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி பாலியல் துன்புறுத்தல் அளித்ததுதான் மாணவியின் இந்த முடிவுக்கு காரணம் என அம்மாணவியின் பெற்றோர் குற்றம்சாட்டினர்.
இந்த வழக்கில் இதுவரை…
தற்கொலைக்கு காரணமாக கருதப்படும் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி வெள்ளிக்கிழமை இரவு போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.
மாணவி இந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து முன்பே, பள்ளி முதல்வரிடம் புகார் அளித்தும் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை; மாறாக,`` பஸ்ல போறப்ப இந்த மாதிரில நடக்கும்ல... அப்படி நினைச்சுக்கோ. வீட்ல சொல்லாதே” என மாணவியை சமாதானம் செய்து அனுப்பியிருக்கிறார். இதையடுத்து அவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தலைமறைவாக இருந்த அவரைக் கைது செய்ய 2 தனிப்படைகளும் அமைக்கப்பட்டன.
பள்ளி முதல்வர் கைது
இந்நிலையில் நேற்று அவரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
``குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம்; பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்!” என முதல்வர் மு.க. ஸ்டாலின் இதுகுறித்து ஏற்கெனவே கருத்து தெரிவித்திருந்தார். நேற்று அமைச்சர்கள் மகேஷ் பொய்யாமொழி, செந்தில் பாலாஜி ஆகியோரும் மாணவியின் பெற்றோர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்திருக்கின்றனர்.
மாணவி குறிப்பிட்ட மற்ற இருவர் யார்?
மாணவி எழுதியிருந்த கடிதத்தில், ”ரீத்தாவோட தாத்தா, எலிசா சாரோட அப்பா, இந்த சார் யாரையும் விடக் கூடாது” என எழுதப்பட்டிருந்தது. இதில் `சார்’ எனக் குறிப்பிட்டிருந்தது மிதுன் சக்கரவர்த்தி என பெற்றோர் தரப்பில் சொல்லப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டுவிட்டார். மற்ற இருவர் யார்?
``சிறுவயதில் மாணவிக்கு துன்புறுத்தல் அளித்தவர்களாக இருக்கலாம்; அவரின் தோழியின் தந்தையாகவோ, தாத்தாவாகவோ இருக்கலாம்” என்கின்றனர் மாணவியின் உறவினர்கள். காவல்துறை தரப்பும் இதுகுறித்து இன்னும் உறுதியான தகவல்களைத் தெரிவிக்கவில்லை. இந்த கடிதம் குறித்த கூடுதல் விவகாரங்களை இங்கு படிக்கலாம்.
❷ கர்நாடகா பிட்காயின் ஊழல்
கர்நாடக மாநிலத்தில், பிட்காயின் ஊழல் ஒன்று ஆளும் பா.ஜ.கவுக்கு தலைவலியா மாறியிருக்கு. அதுவும் “பிட்காயின் ஊழலைவிடவும், இந்த ஊழலை மறைக்க நடக்கும் வேலைகள் பெரிய ஊழலா இருக்கே?!”ன்னு ராகுல் காந்தி நேற்று முன்தினம் ட்வீட் போடவும் திரும்பவும் பிரச்னை பெருசாகியிருக்கு.
என்ன ஊழல்? யார் பண்ணது? 💰
இந்தக் கதையின் வில்லன் ஶ்ரீகிருஷ்ணா என்ற 26 வயது இளைஞர்தான். 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம், இந்த ஶ்ரீகிருஷ்ணாவை பெங்களூரு மத்திய குற்றப் புலனாய்வுத் துறையினர் (CCB) போதைப்பொருள் பயன்படுத்தியதற்காகவும், அவற்றை இணையத்தில் விற்றதற்காகவும் கைது செய்கின்றனர். அப்போது நடந்த விசாரணையில்தான், ஶ்ரீகிருஷ்ணா போதைப்பொருள் பயன்படுத்தியதோடு மட்டுமன்றி, மிகப்பெரிய ஹேக்கராக இருந்ததும், பல நிறுவனங்கள் மற்றும் அரசு இணையதளங்களில் புகுந்து விளையாடியிருப்பதும் தெரியவருகிறது. அதில் முக்கியமாக தெரியவந்தவை…
2019-ம் ஆண்டு கர்நாடக அரசுக்குச் சொந்தமான ஆன்லைன் கொள்முதல் தளத்திலிருந்து சுமார் 11.5 கோடி ரூபாய் சுருட்டியிருக்கிறார். இதற்கான புகாரும் ஏற்கெனவே பதிவாகியிருக்கிறது.
பல ஆன்லைன் கேமிங் தளங்கள், சூதாட்ட தளங்களை ஹேக் செய்து அவர்களை மிரட்டியும் பணம் பறித்திருக்கிறார்.
Bitfinex எனப்படும் பிட்காயின் சந்தையை 2016-ல் ஹேக் செய்து அங்கிருந்து 2,000 பிட்காயின்களையும், BTC-e.com என்னும் பிட்காயின் சந்தையை ஹேக் செய்து அங்கிருந்து 3,000 பிட்காயின்களையும் தன்னுடைய கணக்கிற்கு மாற்றி, சுமார் 3 முதல் 3.5 மில்லியன் டாலர்கள் வரை சம்பாதித்திருக்கிறார்.
ஆனால்…
இவ்வளவு குற்றங்களையும் காவல்துறையினரோ, அமலாக்கத் துறையினரோ கண்டுபிடிக்கவில்லை; மாறாக, ஶ்ரீகிருஷ்ணா தானாக முன்வந்து வாக்குமூலம் அளித்ததில் சொன்னவையே இவை.
“அப்புறமென்ன… தூக்கி உள்ள போடுங்க சார்!” என்கிறீர்களா? அங்கேயும் சிக்கல். காரணம், ஒரு குற்றவாளிக்கு தண்டனை வாங்கிக்கொடுக்க, அவரின் வாக்குமூலம் மட்டும் போதாது. அந்தக் குற்றங்களை நிரூபிக்க தகுந்த ஆதாரமும் வேண்டும். இங்குதான் பிரச்னை இப்போது.
இதுவரை CID, CCB, ED என பலதுறை அதிகாரிகள் விசாரித்ததில், ஶ்ரீகிருஷ்ணாவின் கேட்ஜெட்களை ஆராய்ந்ததில், இந்த எல்லா குற்றங்களுக்கும் தகுந்த ஆதாரங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
ஒன்று, அதிகாரிகள் ஆதாரங்களை சேகரித்து குற்றங்களை நிரூபிக்காமலோ அல்லது ஆதாரங்கள் இன்றி நிரூபிக்க முடியாமலோ இருக்கவேண்டும்.
இல்லையெனில், ஶ்ரீகிருஷ்ணா வெறும் விளம்பரத்திற்காக செய்யாத குற்றங்களையும் செய்ததாக பொய் சொல்லியிருக்கவேண்டும்.
இந்த இரண்டில் ஏதோ ஒன்றுதானே உண்மையாக இருக்கமுடியும்? இதில் முதலாவதைப் பிடித்துக்கொண்டுதான் கர்நாடகாவில் ஆளும் பா.ஜ.க-வை ஆட்டிப்பார்க்கிறது காங்கிரஸ்.
இதுவரை, ஶ்ரீகிருஷ்ணா ஒப்புக்கொண்ட ஹேக்கிங் குற்றங்களின்படி நடந்த மோசடியின் மதிப்பு - ₹72.9 கோடி.
CID மற்றும் CCB இரண்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பது வெறும் ₹13.7 கோடிக்கு மட்டுமே!
இதுவரை, எந்த பிட்காயின்களும் ஶ்ரீகிருஷ்ணாவிடமிருந்து மீட்கப்படவும் இல்லை. Bitfinex பிட்காயின் சந்தையை ஶ்ரீகிருஷ்ணா ஹேக் செய்ததற்கு ஆதாரமும் இல்லை.
“இப்படி குற்றவாளியே ஒப்புக்கொண்ட குற்றத்தை, காவல்துறையினர் ஏதேதோ சொல்லி மழுப்புகிறார்கள் என்றால், இதில் அவர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் நிச்சயம் தொடர்பிருக்கிறது. அவர்களைக் காப்பாற்ற பார்க்கிறார்கள். மேலும், பிட்காயின் திருட்டு என்பது சர்வதேசக் குற்றம். ஶ்ரீகிருஷ்ணாவை 2020 நவம்பரில் கைது செய்துவிட்டு, 2021 ஏப்ரல் வரை இதுகுறித்து கர்நாடகா அரசு இன்டர்போலுக்கு தெரிவிக்காதது ஏன்?” என்பது காங்கிரஸின் குற்றச்சாட்டு.
இதனால்தான், பிட்காயின் விவகாரத்தில் ஊழலைக் கண்டுபிடிப்பதைவிடவும், இவற்றை மூடிமறைப்பதில் குறியாக இருக்கின்றனர் என விமர்சித்திருக்கிறார் ராகுல் காந்தி. ஆனால், இன்டர்போலுக்கு தெரிவித்த பின்னருமேகூட எந்த பதிலுமே அங்கிருந்து இல்லை என்பதுதான் கர்நாடக காவல்துறையினரின் பதிலாக இருக்கிறது.
``2020-ல் ஶ்ரீகிருஷ்ணா கைது செய்யப்பட்டபோது, மாநிலத்தின் உள்துறை அமைச்சராக இருந்தவர், தற்போதைய முதல்வராக இருக்கும் பசவராஜ் பொம்மையே. எனவே நிச்சயம் அவருக்கும் இதற்கும் தொடர்பிருக்கிறது. உச்சநீதிமன்ற கண்காணிப்பில் ஒரு விசாரணைக் குழுவை அமைக்காமல் உண்மை வெளியே வராது” எனவும் காங்கிரஸ் குற்றம்சாட்டியிருக்கிறது.
பசவராஜ் பொம்மையின் பதவிக்கு ஆபத்தா? 👎
உறுதியான ஆதாரங்கள் வெளிவராதவரை பொம்மைக்கு பிரச்னையில்லை. ஆனால், இந்த விவகாரம் கர்நாடகா பா.ஜ.க மட்டுமன்றி தேசிய தலைவர்கள் வரை, குறிப்பாக பிரதமர் அலுவலகமும் இதைக் கவனிப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் அவரின் அரசுக்கு கூடுதல் நெருக்கடி.
இப்போதுவரைக்கும், “நாங்கள் முறைப்படி விசாரணை நடத்துகிறோம். ஏதாவது உருப்படியான ஆதாரங்கள் இருந்தால் அதை காங்கிரஸே தரட்டும். சும்மா குற்றம்சாட்டக்கூடாது” என இதுவரைக்கும் சமாளித்து வருகிறார் பசவராஜ் பொம்மை.
எனவே இன்னும் சில வாரங்களாவது பிட்காயின் விவகாரம் பா.ஜ.க-வுக்கு தீராத தலைவலியாக இருப்பது உறுதி.
❸ நிறைவடைந்த COP26; இந்தியா செய்தது சரியா? 🌏
ஸ்காட்லாந்தில் கிளாஸ்கோவில் கடந்த 2 வாரங்களாக நடைபெற்ற சர்வதேச காலநிலை மாற்ற மாநாடு நேற்று நிறைவடைந்திருக்கிறது. இறுதியாக, புவியின் வெப்பநிலையை 1.5° செல்சியஸ்க்குள் கொண்டுவருவதற்கான ஒப்பந்தமும் 200 நாடுகளின் ஒப்புதலுடன் கையெழுத்தாகியிருக்கிறது. இதற்கு முன்பு 2015-ல் பாரிஸில் நடந்த காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டிற்குப் பின் இந்த COP26-க்குதான் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. காரணம், உலக நாடுகள் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த மிகப்பெரிய வாக்குறுதிகளை வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதில் சில விஷயங்களில் ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. இதற்கு பல வளர்ந்த நாடுகளே காரணம் எனினும் இந்தியாவின் மீதும் ஒரு குற்றச்சாட்டு கிளம்பியிருக்கிறது.
என்ன குற்றச்சாட்டு? 🤔
COP26-ன் இறுதி ஒப்பந்தத்தில், உலக நாடுகள் நிலக்கரி பயன்பாட்டை விரைவில் நிறுத்துவதையும், மரபுசார் எரிசக்தியான பெட்ரோல், டீசல் போன்றவற்றிற்கு மானியம் வழங்குவதை நிறுத்துவதையும் உறுதிசெய்யும் வகையில் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.
இதற்கு இந்தியா, சீனா, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் இறுதிநாளில் எதிர்ப்பு தெரிவிக்கவே, இந்த வரிகள், நிலக்கரி பயன்பாடு குறைக்கப்படும் என மாற்றப்பட்டிருக்கிறது.
நிலக்கரி பயன்பாட்டுக்கு இப்படி நேரடியாக ஒரு சர்வதேச ஒப்பந்தத்தில் தடைவிதிப்பது இதுவே முதல்முறை. எனவே இதை மிகப்பெரிய மாற்றமாக பார்த்தார்கள் காலநிலை ஆய்வாளர்கள். ஆனால், அவர்களுக்கு இந்தியாவின் இந்த எதிர்ப்பு ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கிறது. சில நாடுகள் அதிருப்தியும் தெரிவித்திருக்கின்றன.
சரி, இந்தியா ஏன் எதிர்க்கவேண்டும்? 🧐
இந்தியா இன்னுமேகூட வளர்ந்த நாடு கிடையாது. வளரும் நாடுதான். எனவே இந்தியாவிற்கு குறைந்த விலையில் எரிசக்தி தேவையைப் பூர்த்தி செய்யும் நிலக்கரியின் தேவை அதிகமாகவே இருக்கிறது. அதேபோல LPG போன்றவற்றிற்கு வழங்கப்படும் மானியமும் மக்களை வறுமையிலிருந்து மீட்க உதவியாக இருக்கிறது.
இப்படி நிலக்கரியின் தேவையும், மரபுசார் எரிபொருளுக்கான மானியமும் அவசியமாக இருக்கும்போது எப்படி அவற்றை உடனே நிறுத்த ஓகே சொல்லமுடியும்? அதுதான் சிக்கல்.
இந்தியாவின் பக்கம் இன்னொரு நியாயமும் இருக்கிறது. மரபுசார் எரிபொருளில் நிலக்கரிக்கு மட்டும்தான் தற்போது தடைவிதிக்கப்படுகிறது. நிலக்கரியின் பங்கு மொத்த பங்கில் 21 சதவீதம்தான். மீதம் இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய் போன்றவையே. இதில் நிலக்கரிக்கு மட்டும் எப்படி உடனே ‘நோ’ சொல்லமுடியும்? இதுவும் சரியான முறையல்ல என்பதுதான் இந்தியாவின் வாதம்.
அத்துடன், வளர்ந்த மற்றும் பணக்கார நாடுகள் 2020 முதல் ஏழை மற்றும் வளரும் நாடுகளுக்கு ஆண்டுதோறும் 100 பில்லியன் டாலர்கள் நிதியை காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள வழங்குவதாக பல ஆண்டுகளுக்கு முன்பு வாக்குறுதி கொடுத்திருந்தன. அந்த வாக்கை அவர்கள் காப்பாற்றவே இல்லை. மேலும், வளர்ந்த நாடுகளோடு ஒப்பிடும்போது, இந்தியா உள்பட வளர்ந்தநாடுகள் வெளியிட்ட கார்பனின் அளவு மிகக்குறைவே. எனவே முதலில் வளர்ந்த நாடுகள்தான் பூமியைக் காக்க, பணிகளைச் செய்யவேண்டும். ஆனால், அவர்கள் அதற்காக எந்த தியாகத்தையும் செய்வதில்லை. அப்படியிருக்க, வளர்ந்த நாடுகள் மட்டும் எப்படி தாங்களே சூடுபோட்டுக்கொள்ள முடியும்?
இதனால்தான் இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை சில நாடுகள் விமர்சித்தாலும், பெரியளவில் அது எடுபடவில்லை.
இந்தியா
மூத்த மாவோயிஸ்ட் தலைவர் பலி: மகாராஷ்டிராவில் நேற்று முன்தினம் நடந்த என்கவுன்ட்டரில் 26 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் மாவோயிஸ்ட்களின் மூத்த தலைவரான மிலிந்த் டெல்டும்டேவும் ஒருவர் என நேற்று உறுதியாகியுள்ளது. மாவோயிஸ்ட்களுக்கு பெரியளவில் சேதம் ஏற்படுத்திய என்கவுன்ட்டர் என்பதால், ஆந்திரா, ஒடிஷா, சட்டிஸ்கர், மகாராஷ்டிராவில் எல்லைகளில் கண்காணிப்பும், பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சோனு சூட்டின் தங்கை மாளவிகா அரசியலில் களமிறங்குகிறார். வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது உறுதி என்றாலும், இன்னும் எந்தக் கட்சியில் இணைவது என்பதை மாளவிகா முடிவு செய்யவில்லையாம்.
அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ இயக்குநரின் பதவிக்காலம் என்பது 2 ஆண்டுகள்தான். இதை 5 ஆண்டுகளாக நீட்டிப்பதற்கான அவசர சட்டத்தை நேற்று கொண்டுவந்திருக்கிறது மத்திய அரசு. நாடாளுமன்ற கூட்டத்தொடர் எதுவும் தற்போது நடக்காத நிலையில், இது ஒப்புதலுக்காக குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படவிருக்கிறது. அமலாக்கத்துறை இயக்குநரின் பதவிக்காலம் முடிய 3 நாள்களே இருக்கும் நிலையில் இந்த அவசர சட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறது.
கிரிப்டோவுக்கு புதிய விதிமுறைகள்?: பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோகரன்சிகளை முறைப்படுத்துவது தொடர்பான உயர்மட்ட ஆலோசனைக்கூட்டம் ஒன்று, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடந்துள்ளது. மிகையான, வெளிப்படைத் தன்மையற்ற விளம்பரங்கள் மூலம் இளைஞர்களை ஈர்ப்பது முதல் மறைமுக பாதிப்புகள் வரை பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டிருக்கின்றன. விரைவில் கிரிப்டோகரன்சிகளுக்கான புதிய விதிமுறைகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்திராவில் நேற்று நடைபெற்ற, தென்மண்டல கவுன்சில் மீட்டிங்கில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு பேசினார்.
இதில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஆகியோர் கலந்துகொண்டனர். தமிழகம், தெலங்கானா மற்றும் கேரள முதல்வர்கள் வெவ்வேறு காரணங்களால் இதில் கலந்துகொள்ளவில்லை. மாறாக, அவர்கள் சார்பாக பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். தமிழக முதல்வர் சார்பில் அமைச்சர் சேகர் பாபு கலந்துகொண்டார். முதல்வர் சார்பில் அவரது உரையையும் வாசித்தார். அந்த உரை…
Spotlight 🚨
உத்தரப்பிரதேசத்தில் ஒரு ராஜாக்கண்ணு: ஜெய்பீம் படத்தில் ராஜாக்கண்ணுவின் லாக்கப் டெத் உங்களை உலுக்கியதுதானே? அதேபோன்றதொரு லாக்கப் டெத் உத்தரப்பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. காவல்துறையால் கடந்த செவ்வாய்க்கிழமையன்று அழைத்துச்சென்று விசாரிக்கப்பட்ட அல்டாப் என்னும் இளைஞர், காவல் துறையின் கட்டுப்பாட்டில் இருந்தபோதே இறந்துவிட்டார். இதற்கு காரணமாக உத்தரப்பிரதேச காவல்துறையினர் சொன்னதுதான் கொடுமையின் உச்சம்.
“விசாரணையின்போது அவர் கழிவறைக்கு சென்றார். அங்கு இருந்த பைப்பில் தூக்கு மாட்டி இறந்துவிட்டார்”
இப்படி உத்தரப்பிரதேச காவல்துறை சொன்ன, அந்த பைப்பின் உயரம் தரையிலிருந்து 2 அடி கூட இல்லை! இந்தப் பிரச்னை விஸ்வரூபம் எடுக்கவே இதுவரை 5 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கின்றனர்.
தமிழகம்
தமிழக அரசின் புதிய துறை: உங்கள் தொகுதியில் முதலமைச்சர், முதலமைச்சர் உதவி மையம், குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பு ஒருங்கிணைப்பு ஆகிய துறைகள் ஒன்றிணைக்கப்பட்டு, `முதல்வரின் முகவரி’ என்ற புதிய துறை தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் சிறப்பு அலுவலராக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
வெள்ளத்தில் கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒன்றரை மாதங்களாகவே மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. மாவட்டத்தின் அனைத்து அணைகளும், குளங்களும் கடந்த மாதமே நிரம்பிவிட்டன. இந்நிலையில் நேற்று முன்தினம் அதிதீவிர கனமழை பெய்ததால் மாவட்டமே வெள்ளத்தில் தத்தளிக்கிறது. இன்றும் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்கிறார்.
இரண்டு நாள்களுக்கான வானிலை அறிக்கை: ☔️
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜியை மேகாலயாவுக்கும், மற்றொரு நீதிபதி டி.எஸ்.சிவஞானத்தை கொல்கத்தாவுக்கு இடமாறுதல் செய்வதை உச்சநீதிமன்ற கொலிஜீயம் மறுபரிசீலனை செய்யக்கோரி மெட்ராஸ் பார் கவுன்சில் நேற்று தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. இந்த இடமாறுதல்களில் வெளிப்படைத்தன்மை இல்லை எனவும் குற்றம் சாட்டியிருக்கிறது. இதே கோரிக்கையை வலியுறுத்தி 31 மூத்த வழக்கறிஞர்களும் கொலிஜீயத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.
ஜெய்பீம் படத்தில் இடம்பெற்ற செங்கேணி கதாபாத்திரம், ராஜாக்கண்ணுவின் மனைவியான பார்வதியின் போராட்டத்தை தழுவியே எடுக்கப்பட்டது. இந்நிலையில் வறுமையில் வாடும் பார்வதிக்கு உதவும் வகையில், அவருக்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவிருப்பதாக நடிகர் சூர்யா தெரிவித்திருக்கிறார். பழங்குடி மக்களின் கல்விக்கு உதவவும் திட்டமிட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
உலகம்
“கோவிட் 19-க்கு எதிராக பூஸ்டர் டோஸ்கள் வழங்குவது ஒரு மோசடியாகும். இதனை உடனே நிறுத்தவேண்டும். உலகின் பல ஏழை நாடுகளில் இன்னும் முதியவர்கள், முன்களப்பணியாளர்கள் முதல் டோஸே கிடைக்காமல் அவதியுறும் நிலையில் பிற நாடுகளில் பூஸ்டர் டோஸ்கள் போடுவதில் எந்த அர்த்தமும் இல்லை” என உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் விமர்சித்துள்ளார்.
T20 உலகக்கோப்பை ஃபைனலில், நியூஸிலாந்தை வீழ்த்தி முதல்முறையாக T20 சாம்பியன் ஆகியிருக்கிறது ஆஸ்திரேலியா.
NZ - 172/4 (20)
AUS - 173/2 (18.5)
Player Of the Match - மிட்செல் மார்ஷ் 77(50)*,
Player Of the Series - டேவிட் வார்னர்.
நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதையடுத்து, தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்களுக்கு மட்டும் சிறப்பு லாக்டௌன் ஒன்றை அறிவித்திருக்கிறது ஆஸ்திரியா. இதன்படி சுமார் 20 லட்சம் பேர், அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு எதற்கும் வெளியே வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.
ஜோ பைடன் - ஜின்பிங் சந்திப்பு: பரபரப்பான சர்வதேச அரசியல் சூழலுக்கு இடையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் இன்று இணையம் மூலம் சந்தித்து உரையாடவிருக்கின்றனர். ஜோ பைடன் அதிபராகப் பொறுப்பேற்றதும் இதுவரை 2 முறை ஜின்பிங்குடன் தொலைபேசியில் பேசியிருக்கிறார். விரிவான உரையாடல் நடக்கவிருப்பது இதுவே முதல்முறை. தைவான் பிரச்னை, இருநாட்டு வர்த்தகம் ஆகியவை பற்றி விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்கள் இப்படிச் சொன்னார்கள்..!
“பசுவோ, எருமையோ இல்லாவிட்டால் நிறைய வேலைகள் நடக்காது. எனவே அவை மிக மிக முக்கியமானவை. நம்மிடைய சரியான திட்டம் மட்டும் இருந்தால் போதும்; பசுவின் சிறுநீர் மற்றும் சாணம் மூலம் நம் மாநில மற்றும் தேசத்தின் பொருளாதாரத்தையே வலுப்படுத்தலாம்.”
- அரசு நிகழ்ச்சி ஒன்றில் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான்
நம்மூர்ல பல இடங்கள்ல தேங்காய் உரிக்கும் கருவிய பார்த்திருப்பீங்க. அந்த De-Husker Machine-னுக்கும் கேரள பேராசிரியர் ஒருத்தருக்கும் இருக்கும் தொடர்பை விளக்கும் ஒரு சுவாரஸ்யமான ட்விட்டர் த்ரெட் இது. படிச்சுப் பாருங்க!
அவ்வளவுதான்!
The Subject Line-னோட இன்னைக்கு அப்டேட்ஸ் உங்களுக்குப் பிடிச்சிருக்கும்னு நம்புறேன். பிடிச்சிருந்தா கீழ இருக்க பட்டன் மூலமா உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க… இன்னும் ஏதாச்சும் இந்த லிஸ்ட்ல சேர்க்கணும், இருக்குற விஷயங்கள்ல ஏதாச்சும் மாத்தணும்னா எனக்கு மெசேஜ் பண்ணுங்க!
திரும்ப நாளைக்கு காலைல 7 மணிக்கு சந்திப்போம்!

















