📈 உங்கள் சிபில் ஸ்கோர் பத்திரமா?
Today Edition Highlights: அமெரிக்காவை கலாய்த்த ரஷ்யா | முடிவுக்கு வரும் மூன்றாம் அலை | வெளியாகும் ஸ்டாலினின் சுயசரிதை | Reading Time: ⏱ 4 Mins
Good Morning ☕️
இன்றைய தினத்தின் டாப் அப்டேட்ஸ் இதோ…
ஆன்லைனில் சிறு கடன்கள் வழங்கும் ஸ்டார்ட்அப் நிறுவனம் தனி (Dhani). இந்நிறுவனத்தின் ஆப் மூலமாகப் பலரது பான் எண்களும் தவறாகப் பயன்படுத்தப்பட்டு, ஆள்மாறாட்டம் செய்து கடன்கள் வாங்கப்பட்டுள்ளது அண்மையில் தெரியவந்துள்ளது.
என்ன நடந்தது?
ஊடகவியலாளரான ஆதித்யா கல்ரா, அண்மையில் தன்னுடைய கிரெடிட் ரிப்போர்ட்டை செக் செய்திருக்கிறார். அப்போது, அவருக்குத் தெரியாமலேயே IVL Finance (Dhani-யின் தாய் நிறுவனம்) என்ற நிறுவனத்தில், அவரின் பான் எண்ணைப் பயன்படுத்தி கடன் வழங்கப்பட்டுள்ளதும், அந்தக் கடன் இன்னமும் பாக்கி இருப்பதும் தெரியவந்திருக்கிறது.
இதை அவர் உடனே ட்விட்டரில் சொல்ல, இதேபோல பாதிக்கப்பட்ட பலரும் அவரின் ட்வீட்டில் ரிப்ளை செய்தனர். அதன்பின்புதான் இந்த விவகாரத்தில் மிகப்பெரிய `அடையாளத் திருட்டு’ (Identity Theft) நடந்திருப்பது உறுதியானது.
இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள் Dhani வாடிக்கையாளர் சேவை மையம், சைபர் கிரைம், ரிசர்வ் வங்கி எனப் பல இடங்களிலும் புகார் அளித்திருக்கின்றனர்.


எப்படி பான் எண் தவறாகப் பயன்படுத்தப்பட்டது?
பொதுவாக ஆன்லைன் சேவைகளில் பான் எண்ணை Verify செய்யவேண்டுமென்றால், பான் கார்டை போட்டோ எடுத்து அப்லோடு செய்யச் சொல்வார்கள். ஆதாருடன் இணைந்த சேவை என்றால் மொபைல் OTP வரும். அதன்பிறகே பான் எண்ணைப் பயன்படுத்த முடியும்.
ஆனால், Dhani நிறுவனம் சில விண்ணப்பங்களில் அப்படி எந்த Verification-ம் செய்யாமல், பான் எண்ணை மட்டும் வைத்துக்கொண்டே கடன்களை வழங்கியிருப்பதாகத் தெரிகிறது. இதனால், குற்றவாளிகள் வேறொரு நபரின் பான் எண்ணைப் பயன்படுத்தி, தவறான மொபைல் எண், தவறான முகவரி ஆகியவற்றைக் கொடுத்து கடன்களைப் பெற்றிருக்கின்றனர்.
சம்பந்தப்பட்டவர்களுக்கு என்ன பாதிப்பு?
இதில் அடையாளத் திருட்டு மட்டுமே பிரச்னையில்லை. யாரின் பான் எண் கொடுக்கப்பட்டு கடன் வாங்கப்பட்டுள்ளதோ, அவர்களின் வீட்டுக்கே சென்று, Dhani ஏஜென்ட்கள் கடன்களை திரும்ப வசூலிக்க முயற்சி செய்திருக்கின்றனர். யாரோ வாங்கிய கடனுக்கு, வங்கிகள் உங்கள் வீட்டுக்கதவைத் தட்டினால் எப்படியிருக்கும்? அப்படித்தான் இதிலும் நடந்திருக்கிறது.
இன்னொன்று, இப்படி யாரின் பான் எண்ணெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளதோ, அவர்களின் கிரெடிட் ஸ்கோர் (சிபில் ஸ்கோர்) இந்த கடன் பாக்கியால் குறைந்திருக்கிறது. இது அவர்கள் எதிர்காலத்தில் நிஜமாகவே கடன்வாங்கச் செல்லும்போது சிக்கலை ஏற்படுத்தும்.
என்ன சொல்கிறது Dhani?
கடந்த ஒரு வருடத்தில் சுமார் 35 லட்சம் பேருக்கு சிறுகடன்கள் வழங்கியிருப்பதாகவும், அதில் 99.9% சரியான நபர்களுக்கே வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது அந்நிறுவனம். ஆனால், மொத்தம் எத்தனைபேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கவில்லை.
தற்போது இந்தப் பிரச்னையை பெரிதானதை அடுத்து வாடிக்கையாளர்களின் புகார்களைப் பெற்று நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. விரைவில் ரிசர்வ் வங்கியும் Dhani நிறுவனம் மீது விசாரணை நடத்த வாய்ப்புள்ளது.
உங்கள் பான் எண் பத்திரமா?
அண்மைக்காலங்களில் உங்களின் கிரெடிட் ஸ்கோர் திடீரென குறைந்திருப்பதாக உணர்ந்தாலோ அல்லது Dhani நிறுவனத்திடமிருந்து கடன் குறித்து ஏதேனும் சந்தேகத்துக்குரிய மெசேஜ்கள் வந்திருந்தாலோ, நீங்களும் உங்கள் கிரெடிட் ரிப்போர்ட்டை செக் செய்துகொள்ளலாம்.
Cibil, Experian, Equifax உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த கிரெடிட் ரிப்போர்ட் வசதியை அளிக்கின்றன. இவற்றின் இணையதளங்களுக்குச் சென்று ரிப்போர்ட்டைப் பார்க்கலாம்.
ஒருவேளை உங்கள் ரிப்போர்ட்டில் தேவையற்ற கடன்கள் ஏதேனும் இடம்பெற்றிருப்பின், அதை உடனே சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு புகாராக அனுப்பலாம். பெரியளவிலான பிரச்னைகள் எனில் நேரடியாக ரிசர்வ் வங்கிக்கும் ஆன்லைனில் புகார் செய்யலாம்.
1. முடிவை நோக்கி மூன்றாம் அலை
`மூன்றாம் அலைக்கான நாட்கள் வெகுதொலைவில் இல்லை!’ எனக் கடந்த டிசம்பர் 30-ம் தேதி TSL-ல் குறிப்பிட்டிருந்தோம். அன்றிலிருந்து தொடர்ந்து உயர்ந்த இந்தியாவின் கொரோனா தொற்று எண்ணிக்கை, ஜனவரி 20-ம் தேதி அன்று 3,47,254 ஆக உச்சம் தொட்டது.
அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இறங்குமுகம்தான். தமிழ்நாட்டிலும் ஜனவரி 26-ம் தேதியிலிருந்து தொற்று எண்ணிக்கை குறைந்துவருகிறது.
இதையடுத்து, கள நிலவரத்தைப் பரிசீலித்து, மூன்றாம் அலைக்காக விதிக்கப்பட்ட கூடுதல் கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு, மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது மத்திய சுகாதாரத்துறை.
உலக சுகாதார நிறுவனமும் (WHO) உலகளவில் முந்தைய வாரத்தைவிட, கடந்த வாரம் 19% கொரோனா தொற்றுகள் குறைந்துள்ளதை உறுதிசெய்துள்ளது. முந்தைய கொரோனா வேரியன்ட்களைவிடவும், ஓமிக்ரான் குறைந்தளவே பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் உலகம் முழுவதும் 70% பேருக்கு தடுப்பூசி செலுத்திவிட்டால், இனிமேல் வரும் வேரியன்ட்களுக்குப் பெரியளவில் அஞ்சத் தேவையிருக்காது எனச் சொல்லியிருக்கிறார் WHO இயக்குநர் டெட்ரோஸ்.
இது சாத்தியமாவது வளர்ந்த நாடுகளின் கைகளில்தான் இருக்கிறது.
2. அமெரிக்காவை கலாய்க்கும் ரஷ்யா
இந்த வாரம் முழுக்க உலகை பதற்றத்தில் வைத்திருந்த ரஷ்யா, தற்போது அந்தப் பழியை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஊடகங்கள் மீது போட்டுள்ளது. ``பிப்ரவரி 16-ம் தேதி நாங்கள் உக்ரைனைத் தாக்குவோம் என்றார்கள்; ஆனால், எதுவும் நடக்கவில்லையே?” எனக் கேட்டிருக்கிறது ரஷ்யா.
அதுவும் ரஷ்ய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளரான மரியா ஸக்கரோவா, ``நாங்கள் எப்போதெல்லாம், இந்த வருடம் உக்ரைன் மீது படையெடுப்போம் என்ற பட்டியலை வெளியிட்டால், நான் அதற்கேற்ப விடுமுறை எடுக்க வசதியாக இருக்கும்” என ஊடகங்களைக் கலாய்த்திருக்கிறார்.
இன்னொருபுறம், ரஷ்யா தான் சொன்னபடி நடந்துகொள்ளவில்லை எனக் குற்றம்சாட்டியிருக்கின்றன மேலை நாடுகள். உக்ரைன் எல்லைகளிலிருந்து, குறிப்பிட்ட அளவிலான படைகளைத் திரும்பப்பெற்றுக்கொள்வதாக ரஷ்யா நேற்று முன்தினம் அறிவித்திருந்தது.
ஆனால், இப்போதுவரை அப்படி ரஷ்யா செய்யவே இல்லை. வெறுமனே பொய் சொல்லியிருக்கிறது எனக் குற்றம்சாட்டியிருக்கிறது அமெரிக்கா. NATO-வும் இதையே சொல்லியிருக்கிறது.
ரஷ்ய அதிபர் புடின், மீண்டும் பேச்சுவார்த்தைகளில் மும்முரம் காட்டி வருவதால் இப்போதைக்கு உடனே, தாக்குதல் எதுவும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் நேற்று பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை: 1,310 (நேற்று முன்தினம்: 1,325) 🔻
- அதிகபட்சமாக, சென்னையில்: 296 (303) 🔻
- தமிழகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை: 10 (14) 🔻
இந்தியாவில் நேற்று பதிவான கொரோனா பாதிப்பு: 30,615 (27,409) 🔺
45-வது சென்னை புத்தகக் காட்சியை நேற்று நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தொடங்கிவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்த விழாவில் புதிய தகவல் ஒன்றையும் பகிர்ந்துகொண்டார் அவர். இந்த பிப்ரவரி மாத இறுதியில் தன்னுடைய சுயசரிதையான, `உங்களில் ஒருவன்’-ஐ வெளியிடவிருப்பதாகவும், பள்ளிப்பருவம் முதல் மிசாவில் சிறை சென்றது வரையிலான அனுபவங்கள் இந்த முதல் பாகத்தில் இருக்கும் எனவும் தெரிவித்திருக்கிறார்.
நேற்று நடைபெற்ற, குளிர்கால ஒலிம்பிக் பனிச்சறுக்கு போட்டியில், இந்திய வீரரான ஆரிஃப் கான் முழு பந்தய தூரத்தையும் கடக்கத் தவறினார். இதையடுத்து இந்தியாவுக்கு இருந்த ஒரே பதக்க வாய்ப்பு முடிவுக்கு வந்தது. 13 தங்கப் பதக்கங்களுடன் நார்வே பதக்கப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது.
பாலிவுட்டின் `டிஸ்கோ கிங்’ என அறியப்பட்ட பப்பி லஹிரி நேற்று மும்பையில் காலமானார். அவருக்கு வயது 69. உடல்நலக்குறைவு காரணமாக, 29 நாள்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சைபெற்றுவந்தார் பப்பி. டிஸ்கோ இசையை இந்தியாவில் பிரபலப்படுத்தியதில் முக்கியமானவர் இவர். `பாடும் வானம்பாடி’, `அபூர்வ சகோதரிகள்’ ஆகிய தமிழ்ப்படங்களுக்கும் 80-களில் இசையமைத்துள்ளார்.
டெல்லி, பெங்களூரு மற்றும் குர்கானில் உள்ள வாவே (Huawei) மொபைல் நிறுவன அலுவலகங்களில் நேற்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். ஆனால், எதற்காக இது என்பது குறித்து எதுவும் சொல்லவில்லை. இதற்கு முன்பே ஷியோமி, ஒப்போ ஆகிய சீன நிறுவனங்களில் இதேபோல வருமான வரித்துறையினர் வரி ஏய்ப்பு தொடர்பாக ரெய்டு நடத்தினர். தற்போது வாவே-வும் வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில்தான் ரெய்டு நடந்துள்ளது.
நேற்று கொல்கத்தாவில் நடந்த, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் T20 போட்டியில், இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் 7 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக பூரன் 61 ரன்கள் எடுத்திருந்தார். 158 ரன்களை சேஸ் செய்த இந்தியாவுக்கு ரோஹித்தும் (40), இஷான் கிஷனும் (35) நல்ல ஓப்பனிங் தர, 18.5 ஓவர்களில் இந்தியா இலக்கை எட்டியது. தன்னுடைய முதல் போட்டியிலேயே கட்டுக்கோப்பாக பந்துவீசி (4-0-17-2), ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார் ரவி பிஷ்னோய். அடுத்த போட்டி நாளை நடக்கிறது.
- பிரசாரம் இன்றுடன் நிறைவு: உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரசாரங்கள் இன்று மாலை 6 மணியுடன் முடிவுக்கு வருகின்றன. வாக்குப்பதிவு ஜனவரி 19-ம் தேதி நடக்கிறது.
- ஹெல்மெட் கட்டாயம்: மத்திய மோட்டார் வாகன திருத்தச்சட்டம் 2022-ன்படி, இனிமேல் டூவிலர்களில் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என அறிவித்துள்ளது மத்திய போக்குவரத்து துறை அமைச்சகம். மேலும், 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இருந்தால், டூவிலரின் வேகம் 40 கி.மீ-க்குள் மட்டுமே இருக்கவேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
அவ்வளவுதான்!
The Subject Line-னோட இன்னைக்கு அப்டேட்ஸ் உங்களுக்குப் பிடிச்சிருக்கும்னு நம்புறேன். பிடிச்சிருந்தா கீழ இருக்க பட்டன் மூலமா உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க… இன்னும் ஏதாச்சும் இந்த TSL-ல் மாத்தணும்னா எனக்கு மெசேஜ் பண்ணுங்க! உங்க கருத்துகள் எங்களுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். 🤞
திரும்ப நாளைக்கு காலைல 7 மணிக்கு சந்திப்போம்!
Have a Nice day ☕️
The Subject Line-ஐ சமூக வலைதளங்களில் பின்தொடர:
Telegram | Twitter | Facebook | Insta
Today Edition பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க! ❤️