🧬 HIV குணமான முதல் பெண்; உலகின் புதிய நம்பிக்கையா?
Also in Today's Edition: ஐ.பி.எல் ஏலத்தில் மோதும் ரிலையன்ஸ் & அமேசான் | மொபைல் எண்களை இழந்த 1.3 கோடி இந்தியர்கள் | உ.பி பா.ஜ.க-வுக்கு தலைவலியான கால்நடைகள் | Reading Time: ⏱ 6 Mins
Good Morning ☕️
இன்றைய தினத்தின் டாப் அப்டேட்ஸ் இதோ…
HIV-யால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை, உலக அளவில் முதல்முறையாக சிகிச்சை மூலம் குணப்படுத்தியிருக்கின்றனர் அமெரிக்க விஞ்ஞானிகள். ஸ்டெம்செல் சிகிச்சையின் அடுத்தகட்ட பாய்ச்சலாகவும், HIV ஆராய்ச்சியில் புதிய நம்பிக்கையையும் அளித்துள்ளது இந்த செய்தி.
எப்படி நடந்தது இது?
நியூயார்க்கைச் சேர்ந்த அந்தப் பெண்ணுக்கு 2013-ம் ஆண்டு HIV தொற்று உறுதியானது. தொடர்ந்து 2017-ம் ஆண்டு ரத்தப்புற்றுநோயும் (லூக்கேமியா) உறுதியானது. இரட்டை பாதிப்புகளால் துவண்டிருந்த அந்தப் பெண்ணை ஸ்டெம்செல் சிகிச்சை மூலம் குணப்படுத்த முடிவானது. ஆனால், அங்கே ஒரு சிக்கல். என்ன?
ஸ்டெம்செல் சிகிச்சையில் பொதுவாக, நோயாளியின் மரபணுவோடு முழுமையாக ஒத்துப்போகும் கொடையாளியின் செல்களை எடுத்து, எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்வார்கள்.
இதற்கு முன்பு இதுவரை 2 பேர் மேற்கண்ட ஸ்டெம்செல் சிகிச்சைமூலம், HIV-யிலிருந்து மீண்டிருக்கின்றனர். இருவருமே ஆண்கள். பெர்லினைச் சேர்ந்த டிமோத்தி என்பவர் 2011-லும், லண்டனைச் சேர்ந்த ஆடம்ஸ் என்பவர் 2020-லும் இதேபோல HIV-யிலிருந்து குணமானதாக அறிவிக்கப்பட்டனர். அவர்கள் இருவருக்குமே, பொருத்தமான கொடையாளிகள் கிடைத்திருந்தனர்.
ஆனால், இந்தப் பெண்ணிற்கு அப்படியொரு கொடையாளி கிடைப்பது கடினமாக இருந்தது. இதைத் தீர்க்க, விஞ்ஞானிகள் மாற்றுமுறையைத் தேர்ந்தெடுத்தனர். அதன்படி, சிகிச்சையில் முதலில் குழந்தையின் தொப்புள்கொடியிலிருந்து கிடைக்கும் புதிய ஸ்டெம்செல்களைப் பயன்படுத்துவது எனவும், பின்னர் அந்தப் பெண்ணின் உறவினரிடமிருந்து (ஓரளவு பொருந்திப்போகும்) எடுக்கப்பட்ட ஸ்டெம்செல்லைப் பயன்படுத்துவது எனவும் முடிவெடுத்தனர். இதுவரைக்கும் AIDS & Cancer நோயாளிகளிடம் பயன்படுத்தப்படாத முறை இது. 2017-ம் ஆண்டு சிகிச்சை முடிந்தது.
ஆபரேஷன் சக்சஸா?
இந்த சிகிச்சை முடிந்து 3 வருடங்கள் கழித்து, 2020-ல் வழக்கமாக AIDS-க்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகளைக் கைவிட்டார் அந்தப் பெண். அதன்பிறகு ஓராண்டாகியும் உடலில் HIV வைரஸ் அதிகரிக்கவில்லை. ஆச்சர்யம் என்னவென்றால், அதன்பிறகு அவரது உடலில் ஒரு HIV வைரஸ்கூட இல்லை.
இதையடுத்துதான், ``அவர் முழுமையாக குணமாகிவிட்டார். இருப்பினும் எதிர்காலத்தில் மீண்டும் வைரஸ் பாதிப்பு ஏற்படுமா என மட்டும் பார்க்கவேண்டும்” எனக் கடந்த வாரம் அறிவித்திருக்கின்றனர் விஞ்ஞானிகள்.
அப்படியெனில் HIV-க்கு தீர்வு கிடைத்துவிட்டதா?
இல்லை! இப்படிச் சொல்ல பல காரணங்கள் உண்டு. அவற்றில் முக்கியமானவை சில…
இந்த ஸ்டெம்செல் சிகிச்சையானது அதிக ரிஸ்க் கொண்டது; எனவேதான், உயிரிழப்பைத் தவிர்க்க வேறு வழியே இல்லாத நபர்களுக்கு மட்டும் (உதாரணம்: அதிக புற்றுநோய் பாதிப்பு கொண்டவர்கள்) பரிந்துரைக்கப்படுகிறது.
இது மிக மிக அதிக செலவு பிடிக்கும் சிகிச்சையும் கூட. எனவே HIV-யால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டிருக்கும் 3.8 கோடி பேரையும் இதனால் குணப்படுத்த முடியாது. அதுவும் HIV-யால் அதிகம் பாதிக்கப்பட்ட ஆப்பிரிக்காவில், இந்த சிகிச்சைகள் எந்தவொரு முன்னேற்றத்தையும் ஏற்படுத்தாது.
இந்த சிகிச்சை HIV-யை மையப்படுத்தியதே அல்ல. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட, AIDS நோயாளிகளுக்கான சிகிச்சை மட்டுமே. இதுவரை மீண்ட 3 பேருமே புற்றுநோய் சிகிச்சையில்தான், HIV-யிலிருந்தும் குணமாகியிருக்கின்றனர். எனவே இதையே அனைத்து HIV நோயாளிகளிடமும் பயன்படுத்த முடியாது.
அப்படியெனில், இதில் கொண்டாட எதுவுமே இல்லையா?
கொண்டாடவும் சில காரணங்கள் உண்டு. அவற்றில் சில…
HIV-க்கு எதிரான ஸ்டெம்செல் சிகிச்சையில் CCR5 delta 32 ஜீன் (HIV பாதிப்பை தடுக்கும் தன்மையுள்ளது இது) கொண்ட மற்றும் நோயாளியின் மரபணுவோடு முழுமையாக ஒத்துப்போகும் கொடையாளிகள் மிக முக்கியம். ஆனால், இந்தப் பெண்ணிற்கு அப்படிப்பட்ட கொடையாளிகள் இல்லாமலே சிகிச்சை வெற்றிகரமாக முடிந்திருக்கிறது.
இதற்கு முன்பு ஸ்டெம்செல் சிகிச்சை மூலம் HIV-யிலிருந்து குணமான இரண்டுபேருக்குமே, சிகிச்சைக்குப் பின் கடுமையான பக்கவிளைவுகள் இருந்திருக்கின்றன. உடல்நலமும் குன்றியிருக்கிறது. ஸ்டெம்செல் சிகிச்சையில் இருக்கும் முக்கியமான பிரச்னை இது. ஆனால், மாற்றுமுறை ஸ்டெம்செல் சிகிச்சை பெற்ற இந்தப் பெண்ணிற்கு அப்படி எதுவுமே நடக்கவில்லை. சிகிச்சை முடிந்த 17-வது நாளே வீடு திரும்பிவிட்டார். இப்போது வரை ஆரோக்கியமாக இருக்கிறார். இந்த இரண்டும் விஞ்ஞானிகள் மத்தியில் புதிய நம்பிக்கையை உருவாக்கியிருக்கிறது. ஸ்டெம்செல் சிகிச்சையில் இது புதிய மைல்கல் என்றே பார்க்கப்படுகிறது.
HIV-யானது ஆண் / பெண் இருபாலினரிடையேயும் ஒரே மாதிரி பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. உலக அளவில் HIV நோயாளிகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள்தான். இருப்பினும், HIV தொடர்பான ஆராய்ச்சிகளில் பெண் நோயாளிகளை ஈடுபடுத்தும் விகிதம் மிகக்குறைவாகவே (11% மட்டுமே) இருக்கிறது. இப்படியொரு சூழலில் நிகழ்ந்திருக்கும் இந்தப் பெண்ணின் வெற்றி, HIV ஆராய்ச்சியில் விஞ்ஞானிகளுக்கு புதிய தரவுகளைக் கொடுக்கவிருக்கிறது.
சரி, HIV-க்கு எப்போதுதான் மருந்து வரும்?
HIV-யை முழுமையாக உடலிலிருந்து விரட்ட அல்லது முன்கூட்டியே தடுக்க இதுவரைக்கும் எந்த தடுப்பு மருந்தும் இல்லை. ஆனால், அவற்றைக் கட்டுப்படுத்த ART (Anti-retroviral) மருந்துகள் உள்ளன. இவை வைரஸை வாழ்நால் முழுக்க கட்டுக்குள் வைத்திருக்கும். இவற்றின்மூலம் AIDS நோயாளி ஒருவர், சராசரி நபர் அளவுக்கான ஆயுட்காலத்தோடு வாழமுடியும். தற்போது இதுதான் HIV நோயாளிகளைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது.
முழுமையாக HIV-க்கு மருந்து கண்டுபிடிப்பதில் இருக்கும் சவாலே, அந்த வைரஸின் தன்மைதான். கொரோனா போல மொத்தமாக ஒரே அடியாக, ஆன்டிபாடிகளுடன் போராடி அழியும் வைரஸ் அல்ல இது. பல நாள்கள் எந்த சத்தமும் இன்றி, மறைந்துகொண்டு இருந்து பின்னர் திருப்பித் தாக்கும் தன்மை கொண்டது.
இதனால்தான், ART மருந்துகளால் ஒரேயடியாக HIV செல்களை உடலிலிருந்து வெளியேற்ற முடிவதில்லை.
இந்த `மறைந்திருக்கும் தாக்கும் மர்மத்திற்கு’ புதிய ஸ்டெம்செல் சிகிச்சை விடையளித்தால், நிச்சயம் HIV-க்கும் விரைவில் `குட்பை’ சொல்லலாம்.
அதுவரைக்கும், HIV-யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய ART சிகிச்சைகள் கிடைக்கச் செய்வதும், மக்களிடையே தடுப்பு முறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும்தான் உலக நாடுகளின் முக்கிய பணி!
1. உக்ரைனில் தற்போதைய நிலவரம் என்ன? அப்டேட்ஸ்
கடந்த இரண்டு நாள்களாக கிழக்கு உக்ரைன் பகுதியில் சிறிய அளவிலான தாக்குதல்கள் நடந்துவருகின்றன. ரஷ்யாவின் ஆதரவு பெற்ற கிளர்ச்சி படைகள், கிழக்கு உக்ரைனில் ஆங்காங்கே வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து அப்பகுதியிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
``புடினுக்கு என்ன வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள அவரை மீண்டும் நேரில் சந்தித்துப் பேசவும் தயார்” எனத் தெரிவித்திருக்கிறார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி. ஆனால், இதற்கு ரஷ்யாவிடமிருந்து எந்த பதிலும் இன்னும் வரவில்லை.
``ரஷ்யா உக்ரைனைத் தாக்கினால், ரஷ்ய நிறுவனங்கள் டாலர் மற்றும் பிரிட்டிஷ் பவுண்டுகளை வைத்து வர்த்தகம் செய்வது தடைசெய்யப்படும்; இது ரஷ்யாவுக்கு மிகப்பெரிய பொருளாதார சேதத்தை உண்டாக்கும்” என நேற்று புதிய எச்சரிக்கை விடுத்திருக்கிறார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்.
பிரான்ஸ் அதிபர் மேக்ரான் மற்றும் ரஷ்ய அதிபர் புடின் இருவரும் நேற்று தொலைபேசியில் பேசியிருக்கின்றனர். மோதலைத் தவிர்த்து மீண்டும் பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்துவது குறித்து இருவரும் விவாதித்தனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் உக்ரைனில் தங்கியிருக்கும் இந்தியர்கள் அனைவரையும் தற்காலிகமாக அங்கிருந்து வெளியேற அறிவுறுத்தியிருக்கிறது இந்திய வெளியுறவுத்துறை.
அண்மைய நிகழ்வுகளால் உக்ரைன் எல்லைகளில் இன்னமும் பதற்றம் கூடியிருக்கிறது.
2. நிறைவுற்ற உள்ளாட்சித் தேர்தல்
தமிழகத்தின் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 10 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்து முடிந்துள்ளது. மொத்தம் 12,838 இடங்களுக்கு இதிலிருந்து நிர்வாகிகள் தேர்வு செய்யப்படவிருக்கின்றனர்.
தமிழகம் முழுவதுமாக மொத்தம் 60.7% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. மாநகராட்சிகளில் அதிகபட்சமாக கரூரில் 75.84 சதவிகிதமும், குறைந்தபட்சமாக சென்னையில் 43.59% சதவிகித வாக்குகளும் பதிவாகியிருக்கின்றன.
கடந்த 2011 உள்ளாட்சித் தேர்தல் அன்று 6 கொலைகள் நடந்திருக்கின்றன. ஆனால், இந்தமுறை அப்படி பெரியளவில் எந்தக் குற்றச்சம்பவங்களும் நடைபெறவில்லை. அதேசமயம் மொத்தமாக அமைதியாகவும் இல்லை. ஆங்காங்கே சில சலசலப்புகள் இருந்துள்ளன.
தேர்தல் தொடர்பாக அன்றைய தினம் மொத்தம் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் ஒன்று, மதுரை மேலூரில் ஹிஜாப் அணிந்துவந்த பெண்ணை, ஹிஜாபை கழற்றச் சொல்லி வாக்குவாதம் செய்த பா.ஜ.க பூத் ஏஜென்ட்டுடையது. மீதி வழக்குகள் வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆங்காங்கே ஆளுங்கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சியினர் சேதப்படுத்தியது தொடர்பானது.
நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
3. `மாட்டுச் சாணத்திலிருந்தும் வருமானம் பெறலாம்!’ - பிரதமர் மோடி
தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி அளித்த ஏதோவொரு வாக்குறுதி அல்ல இது. உத்தரப்பிரதேச விவசாயிகளின் இன்றைய தலையாய பிரச்னையும்கூட.
2017-ம் ஆண்டு யோகியின் அரசு உ.பி-யில் பதவியேற்றதும், இறைச்சிக்காக பசுக்கள் கொல்லப்படுவதை தடைசெய்தது. இது இறைச்சி உற்பத்தியாளர்களை முதலில் நேரடியாகப் பாதித்தது. ஆனால், பிரச்னை அதோடு நிற்கவில்லை.
அதுவரைக்கும் பால் கறக்காத, வயதான மாடுகளை அடிமாடாக இறைச்சிக்காக அனுப்பிய அனைத்து விவசாயிகளையும் பாதித்தது. இதனால், வருமானம் தராத கால்நடைகளைப் பல விவசாயிகளும் கைவிட, அவை ஊருக்குள் பல்கிப்பெருகி அட்டகாசம் செய்யத்தொடங்கின.
வயல்களில் பயிர்களை நாசம் செய்வது, மக்களைத் தாக்கி உயிரிழப்புகளை ஏற்படுத்துவது, சாலைகளைல் விபத்தை ஏற்படுத்துவது என உ.பி-யின் கிராமங்களில் இவற்றின் அட்டகாசம் எல்லை மீறிப்போய்க்கொண்டிருக்கிறது.
மூன்று வேளாண்சட்டங்கள் விவசாயிகள் ஏற்படுத்திய அதிர்வுக்கு அடுத்து, இந்தப் பிரச்னை அங்கு விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இதைப் பயன்படுத்திக்கொண்ட சமாஜ்வாதி, காங்கிரஸ் கட்சிகள், கால்நடைகளால் உயிரிழந்தவர்களுக்கு நஷ்ட ஈடும், கால்நடைகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த திட்டங்களையும் அறிவித்திருக்கின்றன.
இந்நிலையில்தான், நேற்று மோடியும் முதல்முறையாக இந்தப் பிரச்னை குறித்து மேடையில் பேசியிருக்கிறார். தேர்தல் முடிந்ததும் இந்தப் பிரச்னையைக் கையாள புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் எனவும், அதன்பின்னர் பால் தராத மாடுகளின் சாணத்திலிருந்துகூட வருமானம் பெறலாம் எனவும் வாக்குறுதியளித்திருக்கிறார். ஆனால், என்ன திட்டம், எப்படி செயல்படுத்தப்படும் என எதுவும் சொல்லவில்லை.
தமிழகத்தில் நேற்று பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை: 949 (நேற்று முன்தினம்: 1,051) 🔻
50 நாள்களுக்குப் பிறகு மீண்டும் தொற்று பாதிப்பு 1000-க்கு கீழ் வந்திருக்கிறது.
- அதிகபட்சமாக, சென்னையில்: 223 (238) 🔻
- தமிழகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை: 3 (7) 🔻
இந்தியாவில் நேற்று பதிவான கொரோனா பாதிப்பு: 19,968 (22,270) 🔻
🌦 இன்று மற்றும் நாளைக்கான வானிலை முன்னறிவிப்பு ☔️
தேசிய அளவில் பா.ஜ.க-விற்கு எதிரான அணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் தெலங்கானா முதல்வர் கே.சி.சந்திரசேகர ராவ். கே.சி.ஆரின் இந்த முயற்சிக்கு ஏற்கெனவே மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின், தேவகவுடா ஆகியோர் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், நேற்று மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரேவையும், சரத் பவாரையும் சந்தித்து அவர்களின் ஆதரவையும் பெற்றிருக்கிறார்.
பஞ்சாபில் நேற்று ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. 65.32% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. இது கடந்த தேர்தலை விடவும் 12% (77.40%) குறைவு. உ.பி-யில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவும் நேற்று நடந்துமுடிந்திருக்கிறது. அங்கு இன்னும் 4 கட்டங்கள் மிச்சமிருக்கின்றன.
ஏர்டெல், வோடஃபோன், ஜியோ நிறுவனங்கள், கடந்தாண்டு நவம்பர் மாதம் தங்கள் ப்ரீபெய்டு மொபைல் கட்டணங்களை 20 முதல் 25% வரை உயர்த்தியிருந்தன. இதனால், தங்கள் மொபைல் எண்களுக்கு கட்டணம் செலுத்தமுடியாமல், கடந்தாண்டு டிசம்பர் மாதம் மட்டும் நாடு முழுவதும் சுமார் 1.3 கோடி பேர் தங்கள் மொபைல் எண்களை இழந்துள்ளனர்.
ஐ.பி.எல் தொடரின் டிவி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமத்தை வைத்திருக்கும் ஸ்டார் இந்தியாவின் ஒப்பந்தம் இந்த ஆண்டுடன் முடிகிறது. இதையடுத்து அந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக சோனி நிறுவனத்துடன் சேர்ந்து, புதிதாக ரிலையன்ஸ் மற்றும் அமேசான் நிறுவனங்களும் களத்தில் குதித்திருக்கின்றன. 2017-ம் ஆண்டு இரண்டு உரிமங்களையும் சேர்த்து, 5 ஆண்டுகளுக்கு 16,348 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்திருந்தது ஸ்டார் நிறுவனம். ஆனால், இந்தாண்டு போட்டியில் இதன் மதிப்பு 50,000 கோடி ரூபாயைத் தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய பங்குச்சந்தையில் (NSE) சில புரோக்கர்களுக்கு மட்டும் லாபம் தரும் வகையில் நடைபெற்ற கோலொகேஷன் முறைகேடு குறித்து 2018-ம் ஆண்டிலிருந்து விசாரித்து வருகிறது சி.பி.ஐ. ஆனால், எந்த ஆதாரமும் கிடைக்காமல் இருந்ததால் விசாரணையில் முன்னேற்றமே இல்லாமல் இருந்தது. இந்நிலையில் கடந்தவாரம் சித்ரா ராமகிருஷ்ணன் விவகாரம் குறித்து செபி அளித்திருக்கும் அறிக்கை, சி.பி.ஐ விசாரணைக்கு மீண்டும் உயிர்கொடுத்திருக்கிறது. NSE-ன் முன்னணி நிர்வாகிகளை விரைவில் விசாரிக்கவிருக்கிறது.
விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன்ஷிப்பிலிருந்து விலகியதற்குப் பின் யார் அடுத்த டெஸ்ட் கேப்டன் எனக் கேள்வி எழுந்தது. இந்நிலையில், அதற்கும் ரோஹித் ஷர்மாவையே நியமித்திருக்கிறது பி.சி.சி.ஐ.
Test squad - Rohit Sharma (C), Priyank Panchal, Mayank Agarwal, Virat Kohli, Shreyas Iyer, Hanuma Vihari, Shubhman Gill, Rishabh Pant (wk), KS Bharath, R Jadeja, Jayant Yadav, R Ashwin, Kuldeep Yadav, Sourabh Kumar, Mohd. Siraj, Umesh Yadav, Mohd. Shami, Jasprit Bumrah (VC).இதன்மூலம் 3 ஃபார்மேட்களுக்கும் ரோஹித் கேப்டனாகிறார். டெஸ்ட் போட்டியில் துணை கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட்டிருக்கிறார். இலங்கைக்கு எதிரான டெஸ்ட் அணியில் ரஹானே, புஜாரா இருவருக்கும் இடமில்லை.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக நேற்று நடந்த 3-வது T20 போட்டியிலும் வென்று, தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றியது இந்தியா. முதலில் விளையாடிய இந்தியா 184 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள், 20 ஓவர்களில் 167 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.
கனடாவின் தலைநகரான ஒட்டாவாவில் கடந்த சில வாரங்களாக நடைபெற்றுவரும் தடுப்பூசி மற்றும் கோவிட் கட்டுப்பாட்டுக்கு எதிரான போராட்டங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. போராட்டத்தின் மையமாக, அந்நாட்டின் பாராளுமன்றத்தின் முன் சாலைகளில் நிறுத்தப்பட்டிருக்கும் டிரக்குகள் மற்றும் அங்கு கூடியிருந்த போராட்டக் காரர்களை வெளியேற்றும் இறுதி முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது அந்நாட்டு காவல்துறை. இதன்பிறகு மீண்டும் அனைத்து சாலைகளும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் வந்துவிடும்.
அவ்வளவுதான்!
The Subject Line-னோட இன்னைக்கு அப்டேட்ஸ் உங்களுக்குப் பிடிச்சிருக்கும்னு நம்புறேன். பிடிச்சிருந்தா கீழ இருக்க பட்டன் மூலமா உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க… இன்னும் ஏதாச்சும் இந்த TSL-ல் மாத்தணும்னா எனக்கு மெசேஜ் பண்ணுங்க! உங்க கருத்துகள் எங்களுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். 🤞
திரும்ப நாளைக்கு காலைல 7 மணிக்கு சந்திப்போம்!
Have a Nice day ☕️
The Subject Line-ஐ சமூக வலைதளங்களில் பின்தொடர:
Telegram | Twitter | Facebook | Insta
Today Edition பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க! ❤️