🇺🇸 ரஷ்ய ஆயுதங்கள்: அமெரிக்காவின் கோபத்திற்கு ஆளாகுமா இந்தியா? 🇮🇳
In Today's Edition: இந்தியா - ரஷ்யா ஆயுத ஒப்பந்தமும் அமெரிக்க சிக்கலும் | கோவிட் மாத்திரைகளுக்கான லைசென்ஸ் வழங்க ஒப்புக்கொண்ட ஃபைஸர் | சூர்யாவுக்கு குவியும் ஆதரவு | ஜோ பைடனுக்கும், கமலா ஹாரிஸூக்கும் என்ன பிரச்னை? | Reading Time: 4 mins.
ஹாய்… ஹலோ, வணக்கம்! 👋
இன்றைக்கு மூன்று முக்கியமான சர்வதேச விஷயங்கள் பற்றி முதலில் பார்த்திடலாம்.
❶ அமெரிக்காவின் கோபத்துக்கு ஆளாகுமா இந்தியா?
இந்திய விமானப்படையை வலுப்படுத்துவதற்கும், எல்லைகளில் வான்வெளிப் பாதுகாப்பை அதிகரிப்பதற்காகவும் 2018-ம் ஆண்டு 5.4 பில்லியன் டாலர் மதிப்பில் ஐந்து S-400 ட்ரையம்ப் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை ரஷ்யாவிடமிருந்து வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்திருந்தது.
பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான எல்லைப் பிரச்னைகள் தீவிரமடைந்து வருவதாலும், இந்திய விமானப்படையை காலத்திற்கு ஏற்ப அப்டேட் செய்யவேண்டியிருப்பதாலும் S-400 ஏவுகணைகள் இந்தியாவின் பாதுகாப்புக்கு மிக முக்கியமானதாக கருதப்படுகின்றன.
கேம்சேஞ்சர்
எதிரிகளின் ஏவுகணைகள், போர் விமானங்கள், ட்ரோன்கள் ஆகியவற்றை எளிதில் முறியடிக்கும் திறன்பெற்றவை இவை என்பதால் இந்தியாவின் மேற்கு எல்லைப் பகுதிகளில் இவற்றை நிறுவவும் இந்தியா முடிவு செய்திருந்தது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால்தான் பல பாதுகாப்புத்துறை அதிகாரிகளாலும் S-400 ஏவுகணை அமைப்பு, `கேம்சேஞ்சர்’ என அழைக்கப்பட்டது.
தற்போது இந்த ஏவுகணை அமைப்புகளை தயார் செய்து, இந்தியாவிற்கு வழங்கத் தொடங்கிவிட்டது ரஷ்யா. இங்கேதான் ஒரு சிக்கல்.
இந்தியாவின் நிலைப்பாடு என்ன?
ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்காவில் CAATSA (Countering America's Adversaries Through Sanctions Act) எனும் சட்டம் 2017-ல் இயற்றப்பட்டது. இதன்படி அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ரஷ்யாவுடன் ஆயுத வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகள்மீது, அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிக்கும். இது இந்தியாவுக்கும் பொருந்தும். அதுதான் தற்போது பிரச்னையாகியிருக்கிறது.
இந்தியாவின் இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்காவிற்கு உடன்பாடு இல்லை என்பதை பலமுறை அமெரிக்க உயர் அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர். மேலும், இதற்கு பதிலாக அமெரிக்க ஆயுதங்களை வாங்கவும் பரிந்துரைத்தனர். ஆனால், இந்தியா இதற்கெல்லாம் செவிசாய்க்கவில்லை.
காரணம், இந்தியாவிற்கு அமெரிக்க உறவை விடவும், நாட்டின் பாதுகாப்பிற்கு தேவையான S-400 மிக மிக முக்கியம். மேலும், 2019-ல் அமெரிக்க பொருளாதார தடைக்குப் பயந்து, ஈரானிலிருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தியது. அது, சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பைக் குறைத்தது. பொருளாதார ரீதியாகவும் நமக்கு பின்னடைவாக அமைந்தது. எனவே, இந்தமுறையும் அந்த தவறைச் செய்ய இந்தியா தயாராக இல்லை.
அமெரிக்கா என்ன செய்யப்போகிறது?
இந்தியாவுக்குப் பொருளாதார தடை விதித்து, இந்தியாவுடனான உறவை சிக்கலாக்கி கொள்வதை விடவும் அமைதியாகச் செல்வதையே அமெரிக்கா விரும்புகிறது. ஜோ பைடனும் அதையே முன்மொழிவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
காரணம், சீனாவுக்கு எதிராக அமெரிக்கா அமைத்து சர்வதேசக் கூட்டணியில் இந்தியாவின் ஆதரவு அமெரிக்காவுக்கு மிக முக்கியம். மேலும், ரஷ்யாவுடனான ஒப்பந்தம் என்பது அமெரிக்காவை நேரடியாக எந்த வகையிலும் பாதிக்கப்போவதில்லை. எனவே அமெரிக்கா சுமுகமாக செல்லவே வாய்ப்பு அதிகம்.
விரைவில் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் அமெரிக்காவுடன் 2+2 சந்திப்பில் பங்கேற்கவிருக்கின்றனர். அதில், இந்தப் பிரச்னைக்கு அமெரிக்கா விடை சொல்லலாம்.
❷ ஓ.. நண்பனே…!
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் முதல்முறையாக சந்தித்துப் பேசியிருக்கின்றனர். நேற்று இணையம் வழியாக நடந்த இந்த சந்திப்பு சுமார் 3.5 மணி நேரம் நீண்டிருக்கிறது. இதில், ஜின்பிங், ஜோ பைடனை, “என்னுடைய பழைய நண்பர்” என அழைத்தார். பைடன் அமெரிக்க துணை அதிபராக இருந்தபோது, இருவரும் சந்தித்து உரையாடியிருக்கின்றனர். அப்போது ஜின்பிங் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவராக இருந்தார். அதை மனதில் வைத்தே அப்படி குறிப்பிட்டிருந்தார்.
சரி, என்னதான் பேசினார்கள்?
இந்த ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்காவில், இருநாட்டு அதிகாரிகளும் சந்தித்துப் பேசினர். அப்போது, இருதரப்பினரும் ஒருவர் மாறி ஒருவரை குற்றம்சுமத்தவே அந்த சந்திப்பு மோசமாக முடிந்தது. இதையடுத்து சீனாவுக்கு எதிராக ஜோ பைடன் அரசு, இன்னும் வேகமாக செயல்படத் தொடங்கியது. இந்த சூழ்நிலையில்தான் இருவரும் நேற்று சந்தித்துப் பேசியிருக்கிறார்கள்.
ஜோ பைடன் ஜின்பிங்கிடம் சொன்னது:
- தைவான் பிரச்னையை சீனா கவனமாகக் கையாள வேண்டும்.
- இரு நாடுகளுமே சர்வதேச அளவில் சக போட்டியாளர்களே. இந்தப் போட்டி எந்த வகையிலும் சண்டையை வளர்க்கக்கூடாது.
- ஹாங்காங், தைவான், ஜின்ஜியாங்கில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை சீனா கவனத்தில்கொள்ளவேண்டும்.
- அமெரிக்க ஊழியர்கள் மற்றும் நிறுவனங்கள் சீன அரசின் கொள்கைகளால் பாதிக்கப்படக்கூடாது.
பதிலுக்கு ஜின்பிங் பைடனிடம் சொன்னது:
- தைவான் பிரச்னையில் அமெரிக்கா எல்லைமீறக்கூடாது. அது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும்.
- மனித உரிமைப் பிரச்னைகளில் தலையிடுகிறேன் எனச் சொல்லி, யாரும் இன்னொரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடக்கூடாது.
- சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய இருநாடுகளும் இன்னொரு நாட்டின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நல்லுறவைப் பேணவேண்டும்.
- அது இரு நாட்டினருக்கு மட்டுமன்றி, மொத்த உலகத்திற்கும் நன்மை அளிக்கும்.
இருவருமே ஒரே குரலில் சொன்னது,
- காலநிலை மாற்றம் போன்ற முக்கியமான பிரச்னைகளில் இரு நாடுகளுமே இணைந்து பணியாற்றவேண்டும்.
இப்படியாக இவர்களின் சந்திப்பு பெரியளவில் எந்த முன்னேற்றத்தையும் இருநாட்டு உறவில் ஏற்படுத்தவில்லை எனினும், இருவரும் நேருக்கு நேர் சந்தித்து முக்கியமான பிரச்னைகளைப் பேசியது இருநாடுகளின் மோதல் போக்கில் சிறிய அளவில் அமைதியை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.
❸கோவிட் மாத்திரைகளை உற்பத்தி செய்ய அனுமதித்த ஃபைஸர்
ஃபைஸர் நிறுவனத்தின் கோவிட் மாத்திரைகள் லேசான மற்றும் மிதமான கோவிட் பாதிப்பிலிருந்து 90% பாதுகாப்பு அளிப்பதாக அந்நிறுவனம் அண்மையில் அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்த கோவிட் மாத்திரைகளை, பிற நாடுகளில் இருக்கும் ஜெனரிக் மருந்துகள் தயாரிக்கும் நிறுவனங்கள் உற்பத்தி செய்யவும் அனுமதி வழங்கியிருக்கிறது ஃபைஸர்.
இதனால் யாருக்கு என்ன பயன்?
கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டும்கூட அவை இன்னும் உலகம் முழுக்க சென்று சேரவில்லை. குறிப்பாக பல ஏழை நாடுகளில் இன்னும் முதல் டோஸ் கூட போட வழியில்லாமல் லட்சக்கணக்கானோர் இருக்கிறார்கள். இந்நிலையில்தான் ஃபைஸர் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு நம்பிக்கையளிப்பதாக உள்ளது.
இதன்படி ஃபைஸர் நிறுவனம் ஐ.நா அமைப்பின் ஆதரவுடன் இயங்கும் மெடிசின்ஸ் பேடன்ட் பூல் (MPP) நிறுவனத்திற்கு கோவிட் மாத்திரையின் லைசென்ஸை வழங்கியிருக்கிறது. இந்த அமைப்பு, விதிமுறைகளின்படி 95 நாடுகளுக்கு ஃபைஸரின் இந்த மாத்திரையை ஜெனரிக் மருந்தாக உற்பத்தி செய்வதற்கான லைசென்ஸை வழங்கும். இதற்காக ஃபைஸர் நிறுவனம் ராயல்டியும் பெறப்போவதில்லை. எனவே ஏழை மற்றும் குறைவான வருமானம் கொண்ட நாடுகளும்கூட பயன்பெறவிருக்கின்றன.
இந்த மாத்திரையை உற்பத்தி செய்வதும் எளிது என்பதால் பிற நிறுவனங்கள், சில மாதங்களில் இவற்றை உற்பத்தி செய்துவிடமுடியும் எனத் தெரிவித்திருக்கிறது ஃபைஸர். உலக மக்களில் 53% பேர் இதனால் பயனடைவர் என்றும் தெரிவித்துள்ளது.
ஆனால்…
மீதமிருக்கும் 47% மக்கள் இதனால் பயன்பெற முடியாது. அர்ஜென்டினா, பிரேசில், சீனா போன்ற நாடுகள் இந்த மாத்திரையை ஜெனரிக்காக உற்பத்தி செய்யமுடியாமல் போகும். இந்தியாவில் உற்பத்தி செய்வதில் பிரச்னை இல்லை.
இந்தியாவில் இதன் லைசென்ஸ் பெற்று உற்பத்தி செய்ய, டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் அண்மையில் விருப்பம் தெரிவித்திருந்தது.
இந்தியா
நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரெய்டு: சிறார் வதை வீடியோக்களைப் பரப்பியவர்களைக் கைது செய்வதற்காக சி.பி.ஐ சார்பில் உத்தரப்பிரதேசம், டெல்லி, பஞ்சாப், தமிழகம் உள்பட 14 மாநிலங்களில், 76 இடங்களில் நடந்த மிகப்பெரிய ரெய்டில், நாடு முழுக்க மொத்தம் 83 பேர் மீது, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதுவே முதல்முறை: மூத்த வழக்கறிஞர் சௌரப் கிர்பாலை, டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது. இவர் நீதிபதியாக பதவியேற்கும் பட்சத்தில், இந்தியாவில் வெளிப்படையாக தன்பாலின ஈர்ப்பாளராக அறியப்பட்டு, உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்கவிருக்கும் முதல் நபர் சௌரப்தான்.
Congratulations to Saurabh Kripal who is set to become the first gay judge of a High Court in the country . Finally we are set to be an inclusive judiciary ending discrimination based on sexual orientation https://t.co/iKwCAyOMScSC Collegium recommends the name of Saurabh Kirpal, Advocate, as Judge in the Delhi High Court. https://t.co/TpIqN8X4n4The Leaflet @TheLeaflet_inஇதற்கு முன்பு 4 முறை இவருடைய பரிந்துரைகளை உச்சநீதிமன்ற கொலீஜியம் ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.
திறக்கப்படும் கர்தார்பூர் வழித்தடம்: நவம்பர் 19-ம் தேதி சீக்கிய மத நிறுவனரான குருநானக்கின் பிறந்தநாள் வருவதையொட்டி, இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கர்தார்பூர் வழித்தடத்தை இன்று மீண்டும் திறக்க முடிவு செய்திருக்கிறது மத்திய அரசு. இதையடுத்து சீக்கியர்கள் பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூர் குருத்வாரா தர்பார் சாஹிப்பிற்கு விசா இன்றி புனிதப்பயணம் மேற்கொள்ள முடியும். கொரோனா காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்த வழித்தடம் மூடப்பட்டது.
ஆகாசா-விற்கு வரும் போயிங் 737 மேக்ஸ்: ராகேஷ் ஜூன்ஜூன்வாலா தொடங்கவிருக்கும் ஆகாசா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்காக, போயிங் நிறுவனத்துடன் 72 `போயிங் 737 மேக்ஸ்’ விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது.
தமிழகம்
ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளுக்கு 15 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்திருக்கிறார் சூர்யா. சமூக வலைதளங்களிலும், வக்கீல் நோட்டீஸ்கள் மூலமாகவும் சூர்யாவுக்கு இரண்டு நாள்களாக நெருக்கடி தரப்படவே, நேற்று நடிகர்கள் சத்யராஜ், நாசர், இயக்குநர்கள் வெற்றிமாறன், பாரதிராஜா உள்பட பலரும் சூர்யாவுக்கு ஆதரவாக தங்கள் கருத்துகளைப் பதிவு செய்தனர்.
- அச்சுறுத்தல் கருதி சூர்யா வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டியில் வென்றதற்கான பாராட்டுவிழா வரும் 20-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ளவுள்ளார்.
தமிழ்நாடு சிமென்ட்ஸ் கழகத்தின் சார்பில் தயாரிக்கப்படும், `வலிமை’ உயர்தர சிமென்ட் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. ப்ரீமியம் ரகம் ரூ.350-க்கும், சூப்பீரியர் ரகம் ரூ.365-க்கும் விற்பனை செய்யப்படவிருக்கிறது.
பொறியியல், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் உள்பட அனைத்துக் கல்லூரிகளுக்கும் இனி செமஸ்டர் தேர்வுகள் நேரடியாகவே நடைபெறும் என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஆன்லைனில் தேர்வு நடத்தக்கோரி மாணவர்கள் கோரிக்கை விடுத்த நிலையில்தான் இப்படியொரு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
கோவையில் அண்மையில் தற்கொலை செய்துகொண்ட 12-ம் வகுப்பு மாணவியின் அடையாளங்களை வெளியிட்டதற்காக 48 யூடியூப் சேனல்கள் மீது, கோவை மாநகர காவல்துறையினர் போக்சோ சட்டம் 23(2) பிரிவின் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில், முக்கியமான சாட்சியங்களை சேகரித்து, வழக்கில் உறுதியான குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்து, அந்த வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட காரணமாக இருந்தவர் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் முன்னாள் எஸ்.பி-யான நல்லம நாயுடு. இவர் நேற்று சென்னை அருகே பெரவள்ளூரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 83.
அவர் கடைசியாக 2017-ல் விகடன் யூடியூப் சானலுக்கு வழங்கிய நேர்காணல்…
உலகம்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகிய இருவருக்கும் இடையே சுமுகமான உறவு இல்லை என ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்தி அமெரிக்காவில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. கமலா ஹாரிஸின் நிர்வாக செயல்பாடுகள் போதுமான அளவு இல்லை எனவும், அவர் பிரச்னைகளை சரியாகக் கையாள்வதில்லை எனவும் கட்சிக்குள்ளேயே விமர்சனங்கள் கிளம்பியிருப்பதால், கமலா மீது ஜோ பைடன் வைத்திருந்த நம்பிக்கை குறைந்துவிட்டதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வந்தன. ஆனால், இந்த செய்திகளை வெள்ளை மாளிகை முற்றிலுமாக மறுத்திருக்கிறது.
Weather Update:
இன்று மற்றும் நாளைக்கான வானிலை முன்னறிவிப்பு.
அவ்வளவுதான்!
The Subject Line-னோட இன்னைக்கு அப்டேட்ஸ் உங்களுக்குப் பிடிச்சிருக்கும்னு நம்புறேன். பிடிச்சிருந்தா கீழ இருக்க பட்டன் மூலமா உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க… இன்னும் ஏதாச்சும் இந்த லிஸ்ட்ல சேர்க்கணும், இருக்குற விஷயங்கள்ல ஏதாச்சும் மாத்தணும்னா எனக்கு மெசேஜ் பண்ணுங்க!
திரும்ப நாளைக்கு காலைல 7 மணிக்கு சந்திப்போம்!
The Subject Line-ஐ சமூக வலைதளங்கள் மூலம் பின்தொடர: