🔭 `விடியல்' ரகசியம் சொல்லுமா ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப்?
இன்றைய TSL-ன் பிற ஹைலைட்ஸ்: பஞ்சாப் தேர்தலில் போட்டியிடும் விவசாய சங்கங்கள் | காங்கிரஸில் ஹர்பஜன்? | பூஸ்டர் டோஸ் தடுப்பூசி எது? | Reading Time: ⏱ 5 Mins
ஹாய், ஹலோ… வணக்கம் 👋
கடந்த சனிக்கிழமையன்று தென் அமெரிக்காவின் ஃபிரெஞ்ச் கியானாவிலிருந்து ஏவப்பட்ட ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் (James Webb Space Telescope) அடுத்தடுத்த நாள்களை, ஒட்டுமொத்த உலகமும் உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது. இது மட்டும் அடுத்த 2 வாரங்களுக்கு எந்தப் பிரச்னையும் செய்யாமல், சமர்த்தாக சுற்றுவட்டப்பாதையில் நின்று, தன் பணியைத் தொடங்கிவிட்டால் போதும்; நாம் இதுவரைக்கும் இந்தப் பிரபஞ்சம் பற்றி அறியாத பல ரகசியங்கள் வெளிவருவது உறுதி. அப்படி என்ன சொல்லப்போகிறது இந்த தொலைநோக்கி?
எதற்காக இந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி? 🔭
வெப் தொலைநோக்கி பற்றி தெரிந்துகொள்ளும் முன், ஹப்பிள் (Hubble) தொலைநோக்கி பற்றியும் கொஞ்சம் தெரிந்துகொண்டால், இதன் அருமையை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.
1990-ம் ஆண்டு நாசாவால் அனுப்பப்பட்ட தொலைநோக்கிதான் ஹப்பிள். இன்றைக்கு விண்வெளி ஆராய்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் பல தகவல்கள் ஹப்பிள் நமக்கு கண்டுபிடித்து சொன்னதுதான். இந்த தொலைநோக்கி தந்த தகவல்களை வைத்து நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளிலிருந்து மட்டும் இதுவரை 18,000-க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. 30 ஆண்டுகளில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்வெளி புகைப்படங்கள் கிடைத்துள்ளன. இன்று நீங்கள் பார்க்கும் பெரும்பாலான விண்வெளி புகைப்படங்களின் உபயம், ஹப்பிளாகவே இருக்கும்.
அவ்வளவு ஏன்… இந்த பிரபஞ்சத்தின் வயது 1380 கோடி ஆண்டுகள் எனக் கண்டுபிடிக்க உதவியதுகூட ஹப்பிள்தான். 30 ஆண்டுகள் ஆனாலும் இது இன்னமும் ஓய்வுபெறவில்லை. புவியின் சுற்றுவட்டப்பாதையில் நின்று ட்யூட்டியில்தான் இருக்கிறது. அப்புறம் எதற்கு இந்த வெப் தொலைநோக்கி?
காரணம், ஓர் ஆதி ரகசியம்!
ஹப்பிள் எவ்வளவுதான் நமக்காக உழைத்தாலும் அதனால் குறிப்பிட்ட எல்லைக்கு மேல் நமக்கு உதவ முடியாது. அதனால், ``பாஸ்.. இதை வச்சிகிட்டு கீழ்த்திருப்பதி வரைக்கும்தான போகமுடியும்?” என நாசா விஞ்ஞானிகள் 1996-லிருந்தே திட்டமிட்ட அடுத்த புராஜெக்ட்தான் இந்த வெப் தொலைநோக்கி. ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி மையம், கனடிய விண்வெளி ஆராய்ச்சி மையம் மற்றும் நாசா ஆகிய மூன்றும் சேர்ந்துதான் இந்த புராஜெக்ட்டிற்கு உயிர்கொடுத்துள்ளன.
ஹப்பிள், நம் பிரபஞ்சத்தின் வயதை 1380 கோடி ஆண்டுகள் என கண்டுபிடித்தது எனப் பார்த்தோம் அல்லவா? இப்போது அதை இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.
நாம் இருப்பது பூமி (கோள்), பூமி இருப்பது சூரியக்குடும்பத்தில். சூரியக்குடும்பம் இருப்பது பால்வெளி மண்டலத்தில் (அண்டம்); பால்வெளி மண்டலம் இருப்பது பேரண்டத்தில் (Universe).
இந்தப் பேரண்டம் / பிரபஞ்சம் எல்லாம் உருவானது Big Bang Theory (பெருவெடிப்பு கோட்பாடு) காரணமாக என்பது விஞ்ஞானிகளின் கருத்து. அந்த பெருவெடிப்பு நிகழ்ந்துதான் 1380 கோடி ஆண்டுகள் ஆகின்றன.
அந்தப் பெருவெடிப்பு நடந்து சுமார் 10 கோடி ஆண்டுகளுக்கு பிரபஞ்சத்தில் நட்சத்திரங்களோ, வேறு அண்டங்களோ தோன்றவில்லை. ஆற்றல் மூலமாக விளங்கிய அந்தப் பெருவெடிப்பு நடந்த இடத்திலிருந்து எந்த ஒளியும் வெளிவரவில்லை. இதை, `Dark Age’ என்கின்றனர் விஞ்ஞானிகள் (விண்வெளி மொத்தமும் இருட்டில் இருந்திருக்கிறது!). அதற்குப் பிறகு பிரபஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடையவே, திடீரேன பிரபஞ்ச மூலத்திலிருந்து ஒளி வீசத்தொடங்கியது; அதன் ஆற்றலில், நட்சத்திரங்கள், அண்டங்கள், கோள்கள் அனைத்தும் அடுத்த கோடிக்கணக்கான ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக உருவாகின.
நட்சத்திரங்கள் இணைந்து அண்டக்கூட்டங்கள் உருவாகின; அண்டக்கூட்டத்தில் கோள்கள் உருவாகின. அதில் ஒன்றான இந்தப் பூமியில் உயிர்களும் உருவாகின. இப்படி அனைத்துக்கும் காரணமான அந்த ஒளி பிறந்த நிகழ்வைத்தான், Cosmic Dawn (காஸ்மிக் விடியல்) என்கின்றனர் விஞ்ஞானிகள். இது ஏன் நடந்தது என்பதற்கு அவர்களிடம் விடையில்லை.
ஹப்பிள் விட்டதும், வெப் தொடப்போவதும் இங்குதான். அதாவது, ஹப்பிள் தொலைநோக்கியால் 1340 கோடி ஒளி ஆண்டுகள் வரைதான் பார்க்கமுடியும். ஆனால், வெப்-பால் 1360 கோடி ஒளி ஆண்டுகள் வரையிலும் பார்க்கமுடியும்.
இதிலென்ன அவ்வளவு பெரிய வித்தியாசம்?
விஷயம் இருக்கிறது!
அண்டங்கள், கோள்கள் எல்லாம் எப்படி வரிசையாகப் பிறந்தது எனப் பார்த்தோம் அல்லவா? அதில், தற்போதைய நிகழ்கால அண்டங்கள் பற்றி நம்மிடம் ஓரளவு தகவல்கள் இருக்கின்றன; உபயம்: ஹப்பிள்.
ஆனால், அதற்கு முன்பு இருந்த ஆதிகால அண்டங்கள், பிரபஞ்சத்தின் ஆரம்பத்தில் உருவான நட்சத்திரங்கள், அப்புறம் அந்த Dark Age பற்றியெல்லாம் நம்மிடம் எந்த தகவலும் இல்லை. ஒரு சுவாரஸ்யமான நாவலை, முதல் அத்தியாயத்தை விட்டுவிட்டு படித்தால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருக்கிறது விண்வெளி ஆராய்ச்சியாளர்களின் நிலைமையும்.
அந்த அத்தியாயத்தை அடுத்த 10 ஆண்டுகளுக்கு நமக்காக எழுதுவதுதான் வெப் தொலைநோக்கியின் வேலை.
இந்த பிரபஞ்சம் எப்படி பிறந்தது என்பதற்கான விடையையும், அந்த காஸ்மிக் விடியலின்போது என்ன நடந்தது என்பதையும் விளக்கிச் சொல்வதுதான் வெப்பின் முதல் டாஸ்க். அதனால்தான் ஹப்பிளை விட 100 மடங்கு திறன்மிகுந்ததாக இதை வடிவமைத்துள்ளனர் விஞ்ஞானிகள்.
எப்படி இது மட்டும் இவ்வளவு திறன்மிகுந்ததாக இருக்கிறது?
காரணம், வெப் தொலைநோக்கியின் தொழில்நுட்பம்தான்.
தொலைநோக்கிகளின் முக்கிய அம்சம், இதிலிருக்கும் கண்ணாடிகள்தான். பொதுவாக நாம் ஒரு பொருளைக் கண்டால் என்ன நடக்கிறது? அதன் ஒளி நம் கண்ணில் புகுந்து, ரெட்டினாவில் விழுகிறது; இதேதான் இந்த தொலைநோக்கி கண்ணாடிகளின் வேலையும். அண்டத்தில் விழும் ஒளியை சேமித்து வைத்துக்கொள்ளும்; ஒரு கேமரா போல.
ஹப்பிளின் கண்ணாடிகளால் நாம் கண்ணால் காணும் அளவிலான ஒளியை மட்டுமே சேமிக்க முடியும். ஆனால், வெப் தொலைநோக்கியின் கண்ணாடிகள், அகச்சிவப்பு கதிர்களைக்கூட சேமிக்க முடியும். (நைட் விஷன் கண்ணாடிகள் போல).
இப்போது திரும்பவும் அந்த ஆதி ரகசியத்திற்கு வருவோம்.
சூரிய ஒளியானது நம் பூமிக்கு வருவதற்கு 8 நிமிடம் ஆகும் எனப் படித்திருப்போம் அல்லவா? அதாவது, நாம் இப்போது சூரியனைப் பார்த்தால் அது 8 நிமிடத்திற்கு முந்தைய சூரியனின் வெர்ஷன். அதேபோலத்தான் பிரபஞ்ச வெளியிலும்.
அப்படி, 1360 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய பிரபஞ்சத்தைத்தான் வெப் தொலைநோக்கி பார்க்கப்போகிறது. (அதாவது, நம் குழந்தைப் பருவத்திற்கே சென்று நம்மைப் பார்ப்பது போல.) எப்படி கடந்தகாலத்தில் நிகழ்ந்ததைப் பார்க்க முடியும் என்கிறீர்களா?
அந்த பிரபஞ்ச மூலத்திலிருந்து கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு உமிழப்பட்ட ஒளி இன்னும் நம்மை வந்தடைந்து கொண்டுதான் இருக்கும். சூரியன், சந்திரன் அளவுக்கெல்லாம் ஒளி நமக்கு வராது. மாறாக, அகச்சிவப்பு கதிர்களாக விண்வெளியில் சிதறிக்கொண்டு நம்மை நோக்கி வரும். அவற்றை அள்ளிப்போட்டு, பூமிக்கு அனுப்புவதுதான் வெப்-பின் சாமர்த்தியம்.
இதனால் என்ன நன்மை?
வெப் தொலைநோக்கியின் இன்னொரு டாஸ்க், Exoplanets எனப்படும் சூரியக் குடும்பத்திற்கு அப்பால் இருக்கும் கோள்களில் உயிர்கள் இருக்கிறதா என ஆராய்வது. இதற்காக வெவ்வேறு கோள்களின் வளிமண்டலத்தை ஸ்கேன் செய்யப்போகின்றனர் விஞ்ஞானிகள்.
மேலே பார்த்த இரண்டு டாஸ்க்குகளுமே வெப் தொலைநோக்கியிடம் விஞ்ஞானிகள் எதிர்பார்க்கும் விடைகள். ஆனால், அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் இவற்றைத் தாண்டியும் வெப் நமக்கு பல புதிர்களை அவிழ்க்கலாம். அவை இந்தப் பிரபஞ்சம் பற்றிய புரிதலில் நம்மை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்லலாம் என நம்புகின்றனர் விஞ்ஞானிகள்.
மேலும், இந்த வெப் தொலைநோக்கியின் பயணம் என்பது, நம்முடைய கதையை, நாமே முழுமையாகத் தெரிந்துகொள்வது போல. யோசித்துப் பாருங்கள்…
1360 கோடி ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு நிகழ்வினால் அண்டங்கள், கோள்கள் எல்லாம் தோன்றுகின்றன. அதில் ஒன்றில், உயிரினங்கள் தோன்றுகின்றன. அதில் ஒரு இனம், பரிணாம வளர்ச்சியால் மேலெழுந்து, அறிவியல் வளர்ச்சி காண்கிறது. இன்று, அந்த இனம், அதன் ஆதியைத் தேடி ஒரு கருவியை பிரபஞ்ச வெளிக்கு அனுப்புகிறது.
சுமார் 1360 கோடி ஆண்டுகளுக்கு முன் நம்மை உருவாக்க வந்த அந்த ஒளியை, இன்று நாம் தேடிப்போகிறோம். பிரமிப்பாக இருக்கிறதல்லவா? அதனால்தான், இதை மனிதனின் கடந்த காலத்திற்கான ஒரு பயணம் என்றும் வர்ணிக்கின்றனர் விஞ்ஞானிகள்!
ஓமிக்ரான் அலர்ட்:
இந்தியா முழுவதும் ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்றுடன் 422-ஐ தொட்டிருக்கிறது. இதுவரைக்கும் உத்தரப்பிரதேசம், கர்நாடகா, ஹரியானா, குஜராத் (8 நகரங்களில் மட்டும்), மத்தியப் பிரதேசம், ம்காராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும், டெல்லியிலும் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
யாருக்கு என்ன தடுப்பூசி?
நேற்று முன்தினம் நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, வரும் ஜனவரி 3-ம் தேதி முதல் 15-18 வயது வரையிலான சிறார்களுக்கும் கோவிட் தடுப்பூசி போடப்படும் என அறிவித்தார். மேலும், சுகாதாரப்பணியாளர்களுக்கும், இணை நோய் உள்ளவர்களுக்கும் ஜனவரி 10-ம் தேதி, 3-வது டோஸ் போடப்படும் எனவும் அறிவித்தார். இதில் சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி போடப்படலாம் என தகவல்கள் வந்துள்ளன. ஆனால், பெரியவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசிகள் என்னவாக இருக்கும் என்பது குறித்து குழப்பம் நிலவுகிறது. ஏற்கெனவே போட்ட கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டுக்கு பதிலாக வேறொரு டோஸாக இருக்கவே வாய்ப்பு அதிகம் என `இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.
காங்கிரஸில் ஹர்பஜன்?
கடந்த வெள்ளிக்கிழமையன்று தன் ஓய்வை அறிவிப்பதற்கு 10 நாள்களுக்கு முன்புதான், பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவை சந்தித்துவிட்டு திரும்பியிருந்தார் ஹர்பஜன் சிங். இதனால், வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸில் இணைந்து போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதில் ஹர்பஜன் தரப்பிலிருந்து எந்த உறுதியான தகவலும் தெரியவில்லை. ஆனால், காங்கிரஸ் தரப்பிலிருந்து ஹர்பஜன் மற்றும் யுவராஜ் சிங்கை கட்சிப்பக்கம் இழுக்க முயற்சிகள் நடக்கின்றனவாம்.
அரசியலில் குதிக்கும் விவசாய சங்கங்கள்
டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் 32 விவசாய சங்கங்கள் சேர்ந்து, `சம்யுக்த கிசான் மோர்ச்சா’ என்ற ஒருங்கிணைந்த அமைப்பை தோற்றுவித்திருந்தன. இதில் தற்போது 22 சங்கங்கள் ஒன்றிணைந்து `சம்யுக்த சமாஜ் மோர்ச்சா’ என்ற பெயரில் வரும் பஞ்சாப் தேர்தலில் போட்டியிடவிருக்கின்றன. பஞ்சாப்பின் 117 தொகுதிகளில் போட்டியிடப்போவதாக நேற்று இந்த அமைப்பு விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் நேற்று பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை: 610
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை: 10
தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராகப் போராடியவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான பேராயர் டெஸ்மாண்ட் டுட்டு நேற்று காலமானார். உள்நாட்டுப் போரில், தமிழர்களை இலங்கை அரசு கொன்று குவித்ததற்காக 2013-ம் ஆண்டு அந்நாட்டில் நடந்த காமன்வெல்த் மாநாட்டை உலகத் தலைவர்கள் புறக்கணிக்க வேண்டும் எனப் பேசியவர் டுட்டு.
பிரபல பின்னணி பாடகரும், நடிகருமான மாணிக்க விநாயகம் நேற்று உடல்நலக் குறைவால் காலமானார்.
ஆவினில் வேலைவாங்கித் தருவதாகக் கூறி, மோசடி செய்ததாக எழுந்த புகாரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை காவல்துறையினர் தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர். இந்நிலையில், அவர்மீது இதேபோல நேற்று மேலும் 3 மோசடி புகார்கள் வந்துள்ளன.
பாதுகாப்பு காரணங்களுக்காக வாடிக்கையாளர்களின் கால் ரெக்கார்டு, இன்டர்நெட் பயன்பாடு ரெக்கார்டு போன்றவற்றை டெலிகாம் நிறுவனங்கள் ஓராண்டு வரை சேமித்து வைத்திருக்கவேண்டும் என்பது மத்திய அரசின் உத்தரவு. இதை அண்மையில் 2 ஆண்டுகளாக உயர்த்தியிருக்கிறது அரசு.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி, நேற்று செஞ்சுரியனில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில், இந்திய வீரர் கே.எல்.ராகுல் சதமடித்தார். முதல் நாள் ஆட்ட முடிவில்,
- India - 272/3 (90)
கே.எல்.ராகுல் - 122 (248)
ரஹானே - 40* (81)
- South Africa
லுங்கி இங்கிடி - 17-4-45-3
- 2022-ம் ஆண்டுக்கான விடுமுறைப் பட்டியல்:
வரும் 2022-க்கான அரசு விடுமுறைப் பட்டியலை நேற்று முன்தினம் வெளியிட்டிருக்கிறது மத்திய அரசு. இதன்படி 2022-ல் மொத்தம் 25 நாள்கள் (17 மட்டுமே கட்டாய விடுமுறை நாள்கள்). அதில் 4 ஞாயிற்றுக்கிழமைகள். தமிழக அரசு கடந்த மாதமே மாநிலங்களுக்கான விடுமுறை பட்டியலை வெளியிட்டுவிட்டது. மொத்தம் 23 நாள்கள். அதில் 6 ஞாயிற்றுக்கிழமைகள்!
- EPF கணக்குகளுக்கு நாமினியை நியமித்துவிட்டீர்களா?
இந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்குள், EPF முதலீட்டாளர்கள் தங்கள் கணக்குகளுக்கு நாமினியை நியமிக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இல்லையெனில், EPF உறுப்பினர் மறைந்தால், அந்த முதலீட்டை குடும்பத்தினர் எடுப்பதில் சிக்கல் ஏற்படும். எனவே உங்கள் கணக்குகளை செக் செய்துகொள்ளுங்கள்.
🔴 இதுவரைக்கும் TSL-ஐ தொடர்ந்து படிச்சிட்டு வர்றீங்க; எனவே இதுபற்றிய உங்க கருத்தை தெரிஞ்சுக்க விரும்புறோம். அதனால், இந்த லிங்கை க்ளிக் பண்ணி உங்களோட ரேட்டிங்கைப் பதிவு பண்ணிடுங்க. TSL-ஐ மேம்படுத்த இது எங்களுக்கு உதவியா இருக்கும்!
அவ்வளவுதான்!
The Subject Line-னோட இன்னைக்கு அப்டேட்ஸ் உங்களுக்குப் பிடிச்சிருக்கும்னு நம்புறேன். பிடிச்சிருந்தா கீழ இருக்க பட்டன் மூலமா உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க… இன்னும் ஏதாச்சும் இந்த TSL-ல் மாத்தணும்னா எனக்கு மெசேஜ் பண்ணுங்க! உங்க கருத்துகள் எங்களுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். 🤞
திரும்ப நாளைக்கு காலைல 7 மணிக்கு சந்திப்போம்!
Have a Nice day! ☕️
The Subject Line-ஐ சமூக வலைதளங்களில் பின்தொடர: