🤝 ஜெயிக்குமா ஜோ பைடனின் `மாநாடு'?
🎯 இன்றைய TSL-ன் பிற ஹைலைட்ஸ்: உயிரிழந்த வீரர்களுக்கு பிரதமர் மரியாதை | வீடு திரும்பும் விவசாயிகள் | கோலியைத் தூக்கியதற்கு கங்குலி சொன்ன லாஜிக் | அடுத்த முப்படை தலைமைத் தளபதி யார்? | ⏱ Reading Time: 4 Mins
ஹாய், ஹலோ… வணக்கம் 👋
சுமார் 110 நாடுகளின் தலைவர்களை ஒன்றிணைத்து, உலகின் மிகப்பெரிய `ஜனநாயகத்திற்கான மாநாட்டை’ (Summit for Democracy) நேற்றும், இன்றும் ஆன்லைனில் நடத்துகிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். எவ்வளவோ சர்வதேச மாநாடுகள் அவ்வப்போது நடந்துவந்தாலும், பைடனின் இந்த மாநாடு, அமெரிக்க வெளியுறவுக் கொள்கையிலும், உலக அரசியலிலும் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது; ஏன்?
இந்த மாநாடு எதற்கு?
ஜனநாயகம் Vs சர்வாதிகாரம்;
இந்த இரண்டுக்குமான போட்டியில் கடந்த 15 ஆண்டுகளாக ஜனநாயகத்திற்கு இறங்குமுகம்தான் என்கிறது Freedom House அமைப்பின் 2021-ற்கான ஆண்டறிக்கை. உலகின் 195 நாடுகளை ஆராய்ந்ததில் 74 நாடுகளில் ஜனநாயகக் கூறுகள் (நேர்மையான தேர்தல், சுதந்திர ஊடகம், கருத்துரிமை போன்றவை) கடந்த ஓராண்டில் பலத்த அடிவாங்கியிருப்பது தெரியவந்திருக்கிறது.
உலகின் மூத்த ஜனநாயக நாடு எனக்கருதப்படும் அமெரிக்கா உள்பட. அப்படியெனில், சர்வாதிகார போக்குகள் கொஞ்சம் கொஞ்சமாக தலைதூக்குகிறது என்றுதானே பொருள்? அதைத்தான் இந்த நூற்றாண்டின் பெரிய அரசியல் பிரச்னையாகக் கருதுகிறார்கள் நிபுணர்கள்.
இதற்கும் மாநாட்டும் என்ன தொடர்பு?
``இந்த சர்வாதிகாரப் போக்கு (சிரியா, துருக்கி, பெலாரஸ், மியான்மர், சீனா போல) உலகமெங்கும் பரவினால், வளரும் மற்றும் ஏழை நாடுகளில் மீண்டும் மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படும்; தேசங்களின் வளர்ச்சி தடைபடும்; ஏற்றத்தாழ்வு மிக்க சமூகம் உருவாகும்; சில குறிப்பிட்ட தலைவர்களின் நலனுக்காக உலக மக்கள் துயரப்பட நேரிடும். இப்படி பல பிரச்னைகள் இந்த நூற்றாண்டில் மீண்டும் தலைதூக்க, இந்த சர்வாதிகாரப் போக்கு காரணமாக இருக்கும்.
இப்படி திடீரென சர்வாதிகாரத்திற்கு உலகமெங்கும் கொம்பு முளைக்க காரணம், சீனா, ரஷ்யா போன்ற ஜனநாயகம் அற்ற வல்லரசு நாடுகள் தரும் ஊக்கம்தான்” என்கிறது அமெரிக்கா.
``உலகின் பல நாடுகளிலும் ஜனநாயகம் செழிக்காமல் போக இந்த நாடுகளே அனைத்து வகையிலும் உதவி செய்கின்றன (ரஷ்யா பல நாடுகளுக்கும் நிதியுதவி செய்வது போல). இதைத்தொடர்ந்து உருவாகும் பிற சர்வாதிகார நாடுகள், அடுத்து சில சர்வாதிகார நாடுகள் உருவாகக் (துருக்கி வெனிசுலாவுக்கு உதவுவது போல) காரணமாகின்றன. இப்படியாக உலகம் முழுக்க சர்வாதிகார நாடுகள் தங்களுக்குள் வலுவாக இருப்பதால்தான் முன்பு போல, பொருளாதாரத் தடைகள், சர்வதேச கண்டனங்கள் போன்றவை அவற்றை பெரியளவில் பாதிப்பதில்லை. இந்த சர்வாதிகார விரும்பிகளால், பாதிக்கப்படுவது அந்நாட்டு மக்கள் மட்டுமல்ல; உலகின் பிறநாடுகளும்தான் என்கிறது அமெரிக்கா.
இந்த சர்வாதிகார நாடுகளின் குற்றங்கள், உலக அரசியலிலும் தாக்கம் ஏற்படுத்தும்; உதாரணம், தைவான் விவகாரத்தில் சீனாவின் ஆதிக்கம்; உக்ரைனுக்கு ரஷ்யாவால் ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல் போன்றவை.
``அதனால்தான், இந்தப் போக்கை நாம் அனைவரும் சேர்ந்து தடுத்து நிறுத்தியே ஆகவேண்டும்; நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம், அதனால் அடையும் பலன்கள் மூலம், இந்த உலகிற்கு ஜனநாயகத்தினால் என்ன நன்மை என்பதை திரும்பவும் உணர்த்த வேண்டும்; உலகமெங்கும் மீண்டும் ஜனநாயகம் தழைக்கச் செய்யவேண்டும்” என அறைகூவல் விடுத்திருக்கிறார் ஜோ பைடன்.
அமெரிக்காவுக்கு ஏன் இவ்வளவு அக்கறை?
அக்கறையை விடவும், தேவை என்பதுதான் உண்மை. உலக அரங்கில் அந்நாட்டிற்கு சவாலாக வளர்ந்துவரும் சீனா, ரஷ்யா இரண்டையும் சமாளிக்க, பிற நாடுகளின் ஒத்துழைப்பு நிச்சயம் தேவை. அவர்களை ஒரே குடையின் கீழ் ஒன்றிணைக்க ஒரு நோக்கமும், முழக்கமும் தேவை. அதற்குத்தான் இந்த ஜனநாயக பிரசாரம் எல்லாம்.
அமெரிக்கா மொத்தம் 111 நாடுகளுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. அதில் 29 நாடுகளில் ஜனநாயகம் சொல்லிக்கொள்ளும்படியெல்லாம் இல்லை. இருந்தும், அவர்களை ஆட்டத்தில் சேர்க்க காரணம், அவர்களின் ஒத்துழைப்பு அமெரிக்காவிற்கு தேவைப்படுகிறது என்பதற்காகத்தான். இதிலிருந்தே அமெரிக்காவின் `அக்கறை’யைப் புரிந்துகொள்ளலாம்.
எனவேதான் இப்படியொரு உலக மாநாட்டின் மூலம், தன்னை ஜனநாயக காவலனாகவும், உலக அரங்கில் ஜனநாயக நாடுகளின் ஒரே தோழனாகவும் காட்டிக்கொள்ள முயல்கிறது. அதன்மூலம் சீனா மற்றும் ரஷ்யாவுக்கு சவால் அளிக்கமுடியும் எனவும் நம்புகிறது
இந்த மாநாட்டில் என்ன செய்யப்போகிறார் பைடன்?
- சர்வாதிகார நாடுகளின் சவால்களுக்கு ஏற்ப தயாராவது
- உலக அளவில் ஊழலை ஒழிப்பது
- உலக நாடுகள் அனைத்திலும் மனித உரிமைகளைப் பாதுகாப்பது.
இந்த மூன்றும்தான் மாநாட்டின் முக்கிய நோக்கங்கள்.
இவற்றிற்கு உதவும் வகையில், இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் 100-க்கும் மேற்பட்ட தலைவர்கள் தங்கள் நாடுகளின் சார்பில் நிதியுதவி வழங்கலாம்; சிறப்புத் திட்டங்களை அறிவிக்கலாம்; முக்கியமான பிரச்னைகளை எழுப்பலாம்; அல்லது வெறுமனே பேசிவிட்டும் கலையலாம். எந்தவொரு வரையறையும் இல்லை என்பதால், என்ன செய்யவேண்டும் என்பதெல்லாம் அவர்கள் சாய்ஸ்.
அதனால்தான், ``இது அமெரிக்காவிற்கோ, உலகத்திற்கோ பெரியளவில் பயன்படாது. மேலும், 111 நாடுகளை மட்டுமே அழைத்திருப்பதால், மீதமிருக்கும் நாடுகள் சீனா மற்றும் ரஷ்யாவின் பக்கம் சாய்வதில் இன்னும் அதிக முனைப்பு காட்டலாம். இப்படியாக எதிரிகள் ஒன்றுசேர்ந்து வேலைசெய்ய அமெரிக்காவே வழியை ஏற்படுத்தி, சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்டிருக்கிறது” என ஜோ பைடனின் இந்த முடிவுக்கு விமர்சனங்களும் குவிகின்றன. எனவே நீண்டகால நோக்கில் திட்டங்களும், அவற்றை செயல்படுத்தும் முனைப்பும் இல்லையெனில், இந்த மாநாட்டால் யாருக்கும் எந்த வெற்றியும் கிடைக்காது.
→ இன்று இந்தியா சார்பில் பிரதமர் மோடி மாநாட்டில் உரையாற்றவிருக்கிறார்.
ராஜ்நாத் சிங் விளக்கம்:
முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் பலியான ஹெலிகாப்டர் விபத்து குறித்து நேற்று நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்தார் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். விபத்து குறித்து விசாரிக்க, இந்திய விமானப்படையின் சீஃப் மார்ஷல் மன்வேந்தர் சிங் தலைமையில், விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அப்போது தெரிவித்தார்.
பெங்களூரு கொண்டுசெல்லப்பட்ட வருண் சிங்:
ஹெலிகாப்டர் விபத்தில் உயிர்பிழைத்த ஒரே நபரான குரூப் கேப்டன் வருண் சிங், தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார். நீலகிரி வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், நேற்று உயர் சிகிச்சைக்காக பெங்களூரு கொண்டுசெல்லப்பட்டார்.
மீட்கப்பட்ட கறுப்பு பெட்டி:
குன்னூரில் விபத்து நடந்த இடத்திலிருந்து, விபத்துக்குள்ளான Mi-17V5 ஹெலிகாப்டரின் கறுப்பு பெட்டி நேற்று மீட்கப்பட்டது. ஹெலிகாப்டரின் கடைசி நேர தகவல்கள், பைலட்டின் உரையாடல்கள் ஆகியவற்றை இதிலிருந்து மீட்டெடுத்து, விபத்துக்கான காரணங்களை அறிந்துகொள்ள இந்த கறுப்பு பெட்டி உதவும்.
உயிர்நீத்தவர்களுக்கு பிரதமர் மரியாதை:
விபத்தில் உயிரிழந்த 13 பேரின் உடல்களும் நேற்று டெல்லி கொண்டுசெல்லப்பட்டன. அங்குள்ள பாலம் விமானப்படை தளத்தில் வைக்கப்பட்ட உடல்களுக்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். டெல்லியில் உள்ள பிபின் ராவத்தின் இல்லத்தில், அவர் மற்றும் அவர் மனைவியின் உடல் இன்று காலை 11 மணிக்கு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவிருக்கிறது. மாலை 4 மணிக்கு ராணுவ மரியாதையோடு இறுதிச்சடங்குகள் நடைபெறவிருக்கின்றன.
அடையாளம் காணப்படாத உடல்கள்:
விபத்தில் உயிரிழந்த 13 பேரில் பிபின் ராவத், அவர் மனைவி மதுலிகா ராவத், பிரிகேடியர் எல்.எஸ்.லிட்டர், லான்ஸ் நாயக் விவேக் குமார் ஆகிய நால்வரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன. இவர்களின் உடல்கள் மட்டும் இன்று இறுதிச்சடங்கிற்காக குடும்பத்தினரிடம் வழங்கப்படும். பிற உடல்கள் அடையாளம் காணப்பட்ட பிறகு வழங்கப்படும்.
வழியெங்கிலும் மக்கள் மரியாதை:
வீரர்களின் உடல்கள் நேற்று நீலகிரி வெலிங்டனிலிருந்து சூலூர் விமானப்படை தளத்திற்கு சாலை மார்க்கமாக ஆம்புலன்ஸ்களில் கொண்டுசெல்லப்பட்டன. அப்போது வழியெங்கும் மக்கள் திரண்டு நின்று, வீரர்களுக்காக கோஷம் எழுப்பியும், மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தினர். இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நீலகிரி முழுவதும், அனைத்து கடைகளும் மூடப்பட்டு, உயிர்நீத்த வீரர்களுக்காக துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
அடுத்த முப்படை தலைமைத் தளபதி யார்?
பிபின் ராவத்தின் மறைவைத் தொடர்ந்து, அடுத்த முப்படை தலைமைத் தளபதியைத் தேர்வு செய்யும் பணியை மத்திய அரசு விரைவில் தொடங்கவிருக்கிறது. தற்போது ராணுவத்தின் தலைமை தளபதியாக இருக்கும் மனோஜ் முகுந்த் நரவனே அந்தப் பொறுப்பில் நியமிக்கப்பட்ட அதிக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
வீடு திரும்பும் விவசாயிகள்:
டெல்லியில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடந்துவந்த விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது. போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்வதாகவும், பிற கோரிக்கைகளை பரிசீலிப்பதாகவும் மத்திய அரசு உறுதியளித்துள்ளதால் நாளை முதல் போராட்டத்தை முடித்துக்கொண்டு வீடு திரும்பவிருக்கின்றனர் விவசாயிகள். நாளை போராட்டத்தின் வெற்றியை, கொண்டாடிவிட்டு பின்னர் கலைந்துபோக முடிவுசெய்யப்பட்டுள்ளது.
கோலியைத் தூக்கியதற்கு கங்குலி சொன்ன லாஜிக்:
ஒருநாள் போட்டிகளின் கேப்டன்சியிலிருந்து, பி.சி.சி.ஐ விராட் கோலியை திடீரென நீக்கியது நேற்று பெரும் சர்ச்சையானது. இந்நிலையில் அதுதொடர்பாக விளக்கம் அளித்திருக்கும் பி.சி.சி.ஐ தலைவர் கங்குலி, ``விராட் கோலியை T20 கேப்டன்சியிலிருந்து விலகவேண்டாம் எனச் சொன்னோம். ஆனால், அவர் விலகிவிட்டார். அதன்பிறகு ஒயிட் பால் கிரிக்கெட்டுக்கு தனித்தனியாக இரண்டு கேப்டன்கள் இருப்பது சரியாக இருக்காது என தேர்வுக்குழு உறுப்பினர்கள் நினைத்தனர். அதனால்தான் ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன்சியையும் ரோஹித்திடமே கொடுத்தனர். இதுதொடர்பாக நானும், தேர்வுக்குழு உறுப்பினர் சேத்தன் சர்மாவும் கோலியிடம் பேசினோம். அவரும் இதை ஏற்றுக்கொண்டார்” எனத் தெரிவித்திருக்கிறார்.
சிகரெட்களுக்கு தடைவிதித்த நியூசிலாந்து:
2008-ம் ஆண்டுக்குப் பின் பிறந்தவர்கள் சிகரெட் மற்றும் புகையிலைப் பொருள்கள் வாங்குவதை தடைசெய்ய, அடுத்த ஆண்டு ஒரு சட்டம் கொண்டுவரவிருக்கிறது நியூசிலாந்து. அடுத்த தலைமுறையினர் நிக்கோடின்களுக்கு அடிமையாகாமல் தடுப்பதும், அதன்பின் படிப்படியாக புகையிலை பயன்பாட்டை ஒழிப்பதும்தான் இதன் நோக்கமாம்.
ட்விட்டரில் 2021-ல் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட ஹேஷ்டேக்குகள் 👇
தமிழகத்தில் நேற்று பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை: 698
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை: 15
இன்று மற்றும் நாளைக்கான வானிலை முன்னறிவிப்பு: ☔️👇
பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டு, மூன்று ஆண்டுகளாக எந்த விசாரணையும் நடக்காமல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சமூக செயற்பாட்டாளர் சுதா பரத்வாஜ் நேற்று ஜாமீனில் விடுதலையானார்.
வழக்கமான சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடையை ஓமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக, ஜனவரி 31, 2022 வரை நீட்டித்துள்ளது மத்திய அரசு.
On This Day - Dec 10
- உலக மனித உரிமைகள் தினம்
- மூதறிஞர் ராஜாஜி பிறந்தநாள், 1878
- விஞ்ஞானி ஆல்ஃபிரட் நோபலின் நினைவு தினம், 1896. இவரின் நினைவாகவே ஆண்டுதோறும் டிசம்பர் 10 அன்று நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
📣 Note: The Subject Line (TSL) நியூஸ்லெட்டரின் இந்த மெயில் உங்களின் Promotions Tab-ல வந்திருந்தா, அதை அப்படியே Move பண்ணி, Primary Tab-க்கு மாத்திடுங்க. இதன்மூலம் தினமும் TSL-ஐ நீங்க மிஸ் பண்ணாம படிக்கமுடியும். ஒருவேளை இந்த மெயில் உங்க நண்பர்கள் மூலம் வந்திருந்தா, தினமும் உங்க இன்பாக்ஸிற்கு நேரடியாக வர, சப்ஸ்கிரைப் பண்ணிடுங்க. ✅
அவ்வளவுதான்!
The Subject Line-னோட இன்னைக்கு அப்டேட்ஸ் உங்களுக்குப் பிடிச்சிருக்கும்னு நம்புறேன். பிடிச்சிருந்தா கீழ இருக்க பட்டன் மூலமா உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க… இன்னும் ஏதாச்சும் இந்த TSL-ல் மாத்தணும்னா எனக்கு மெசேஜ் பண்ணுங்க! உங்க கருத்துகள் எங்களுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். 🤞
திரும்ப நாளைக்கு காலைல 7 மணிக்கு சந்திப்போம்!
Have a Nice day! ☕️
The Subject Line-ஐ சமூக வலைதளங்களில் பின்தொடர: