🛕கர்நாடகாவின் மதமாற்று தடைச்சட்டம் சரியானதா?
இன்றைய TSL-ன் ஹைலைட்ஸ்: பூஸ்டர் டோஸ்கள் குறித்த WHO அப்டேட் | சீன மொபைல் நிறுவனங்களில் நடந்த ரெய்டு | பொது வாக்காளர் பட்டியலைக் கொண்டுவருமா தேர்தல் ஆணையம்? | ⏱ Reading Time: 5 Mins
ஹாய், ஹலோ… வணக்கம் 👋
தினமும் காலை 7 மணிக்கு வரும் TSL இன்று தாமதமாக வெளியாகியிருக்கு. தவிர்க்கமுடியாத காரணங்களால் ஏற்பட்ட இந்த தாமதத்திற்கு வருந்துகிறோம்.😔
வாங்க… இன்றைய அப்டேட்ஸைப் பார்த்துடலாம்.
கர்நாடக அரசு நேற்று முன்தினம் சட்டசபையில் தாக்கல் செய்திருக்கும், மதச்சுதந்திர பாதுகாப்பு மசோதா 2021, அம்மாநிலம் மட்டுமன்றி, நாடு முழுக்கவே விவாதங்களைக் கிளப்பியிருக்கிறது; அம்மாநில எதிர்க்கட்சிகள் உள்பட நாடு முழுவதும் பல தரப்பிலிருந்து எதிர்ப்புகளையும் சந்தித்து வருகிறது. என்ன பிரச்னை இதில்? ஏன் இதை எதிர்க்கிறார்கள்?
என்ன சொல்கிறது இந்த மசோதா?
கர்நாடக மாநிலத்தில் கட்டாய மதமாற்றங்களைத் தடைசெய்வதும், வலதுசாரிகளால் தொடர்ந்து பயன்படுத்தப்படும், `லவ் ஜிஹாத்’ என்ற மதமறுப்பு திருமணங்களையும் கட்டுப்படுத்துவதும்தான் இந்த மசோதாவின் நோக்கம்.
இந்த மசோதாவின் பிரிவு 3-ன் படி, ஒருவரை ஏமாற்றியோ, கட்டாயப்படுத்தியோ, ஆசைகாட்டியோ, வன்முறையைப் பிரயோகித்தோ, திருமணம் செய்தோ, ஒரு மதத்திலிருந்து இன்னொரு மதத்திற்கு மாற்றினால், அது சட்டவிரோதம். இதை செய்பவருக்கு 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ₹25,000 அபராதமும் விதிக்கப்படும்.
இதில் மதம் மாற்றப்படுபவர் சிறாராகவோ, மனநலம் குன்றியவராகவோ, பட்டியலின அல்லது பழங்குடியினராகவோ இருந்தால், சிறைத்தண்டனை 10 ஆண்டுகள் வரைகூட நீட்டிக்கப்படலாம். கூடவே, ₹25,000 அபராதமும்!
இந்த மதமாற்றம் குறித்து மதம் மாறியவர்களின் உறவினர்கள் மட்டுமல்ல; உடனிருப்பவர்கள், பணியிட நண்பர்கள் என யார் வேண்டுமானாலும் காவல் துறையில் புகார் அளிக்கமுடியும். இந்த மதமாற்றம், ஜாமீனில் வரமுடியாத குற்றமாக கருதப்படும்.
அப்படியெனில் எப்படி ஒருவர் மதம் மாற முடியும்?
அதற்கு இந்த மசோதா கூறும் வழிமுறை இதுதான்….
மதம் மாற விரும்புபவர், மதம் மாறுவதற்கான காரணத்தைக் குறிப்பிட்டு, அதற்கு 30 நாள்கள் முன்பாகவே மாவட்ட மாஜிஸ்திரேட்டிடம் தகவல் தெரிவிக்கவேண்டும். அவர் அந்த விவரங்களை மாஜிஸ்திரேட் அலுவலகம் மற்றும் தாசில்தார் அலுவலகத்தின் நோட்டீஸ் போர்டில் வெளியிட்டு, யாருக்கேனும் ஆட்சேபனை இருக்கிறதா எனக் கேட்பார். 30 நாள்களுக்குள் ஏதேனும் புகார்கள் வந்தால், வருவாய்த்துறையினர் சார்பில் விசாரணை மேற்கொள்ள உத்தரவிடுவார். அதில், மேற்கண்ட வழிகளில் மதமாற்றம் நடப்பது தெரியவந்தால், அது குற்றமாக கருதப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். எந்தப் புகாரும் வரவில்லையெனில், மதமாற்றம் செய்யலாம்.
இந்த விதிமுறைகளைத் தவிர்த்துவிட்டு யார் மதம் மாறினாலும், அது செல்லாது; அவர்கள்மீது, வழக்கு பதியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த மதமாற்றமானது, முறையற்ற வழிகளில் நடக்கவில்லை என்பதை, மதமாற்றம் செய்ய உதவும் நபரோ அல்லது செய்துவைக்கும் நபரோதான் நீதிமன்றத்தில் நிரூபிக்கவேண்டும். மதம் மாறியவரோ, அரசோ அதைச் செய்யவேண்டியதில்லை. மதம் மாறும் நபரின் சம்மதம் மட்டுமே இதற்கு போதாது.
இவையெல்லாம்தான் இந்த மசோதாவின் முக்கிய அம்சங்கள்.
இந்த சட்டத்தை ஏன் எதிர்க்கிறார்கள்?
கர்நாடக மாநில எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல; இதுபோன்ற மதமாற்ற தடுப்பு சட்டங்களை நாடு முழுவதுமுள்ள சமூக செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். அதற்கு அவர்கள் முக்கியமாகக் குறிப்பிடும் விஷயங்கள்,
இது மக்களின் மத சுதந்திரத்தைப் பறிக்கிறது;
திருமணம், கடவுள் நம்பிக்கை உள்ளிட்ட அவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் அரசு மூக்கை நுழைக்க உதவுகிறது.
மேலும், இந்த சட்டங்கள் நம் அரசியலமைப்புச் சட்டம் நமக்கு வழங்கியிருக்கும் உரிமைகளுக்கே விரோதமானது என்பது அவர்களின் வாதம்.
அரசாங்கங்கள் இதுபோன்ற சட்டங்களை ஏன் கொண்டு வருகின்றன?
பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களான உத்தரப்பிரதேசம், இமாசலப்பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அண்மையில், மதமாற்று தடுப்புச்சட்டங்கள் அரசியல் பிரச்னைகளாக கையில் எடுக்கப்பட்டு, இவை மதவெறுப்பு பிரசாரத்தின் ஒருபகுதியாகவே கையாளப்படுகின்ற்ன.
ஆனால், இந்தியாவின் வரலாற்றை எடுத்துப் பார்த்தால் இதுபோன்ற மதமாற்று தடுப்புச்சட்டங்கள் சுதந்திரத்திற்கு முன்பே பல மாகாணங்களில் இருந்திருக்கின்றன.
சுதந்திரத்திற்குப் பிறகு, நாடு முழுவதற்கும் ஒரே மாதிரியான மதமாற்று தடுப்புச்சட்டங்களைக் கொண்டுவரும் முயற்சிகளும்கூட (1954 & 1960) நடந்திருக்கின்றன. ஆனால், அவை கைகூடாத நிலையில்தான், மாநில அரசுகள் இவற்றைக் கையில் எடுத்தன.
முதன்முதலாக ஒடிசா அரசு, 1967-ல் ஒரு மதமாற்று தடைச்சட்டத்தை இயற்றியது. அதற்கடுத்த வருடம் 1968-ல் மத்தியப் பிரதேசமும் ஒரு சட்டம் இயற்றியது. பின்னர் சட்டிஸ்கர், அருணாச்சலப் பிரதேசம், குஜராத், ஜார்க்கண்ட் எனப் பல மாநிலங்களும் இதே ரூட்டில் பயணிக்கத் தொடங்கின.
இதில் பல மாநிலங்களின் முதன்மை நோக்கமாக இருந்தது, பழங்குடியினர் மற்றும் ஏழை மக்கள் கிறிஸ்துவத்தை நோக்கி சென்றுவிடக்கூடாது என்பதே. ஆரம்பத்தில் இதற்காக மட்டுமே கொண்டுவரப்பட்ட மதமாற்று தடைச் சட்டங்கள், லவ் ஜிஹாத், மதம் மாறி செய்துகொள்ளும் திருமணங்கள் ஆகியவை அரசியல் பிரச்னைகளாக்கப்பட்டதற்குப் பிறகு, அவற்றையும் உடன் சேர்த்துக்கொண்டன.
இப்படித்தான், அண்மையில் இயற்றப்பட்ட உத்தரப்பிரதேச சட்டமும், தற்போது கர்நாடகா கொண்டுவந்திருக்கும் மசோதாவும் தனிநபர்களின் பல்வேறு விஷயங்களில் தலையிடுகின்றன.
நீதிமன்றங்கள் தடுத்து நிறுத்துமா?
மேலும், பழைய மாநில மதமாற்றுச் சட்டங்களுக்கும், இதற்கும் இருக்கும் இன்னொரு வேறுபாடு, 2017-ல் பிரைவசி மக்களின் அடிப்படை உரிமை என வழங்கப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பு.
திருமணம், மதம் ஆகியவற்றில் தலையிடும் அரசின் இதுபோன்ற சட்டங்கள் தனிநபர்களின் பிரைவசியை மீறுபவை; ஆனால், பழைய மதமாற்று தடுப்புச்சட்டங்கள் தொடர்பாக வழங்கப்பட்ட பழைய தீர்ப்புகள் பலவும், இதை கவனத்தில் கொள்ளவில்லை. ஆனால், நீதிமன்றங்கள் இனியும் அப்படி இருக்கமுடியாது. பிரைவசி விஷயத்தில் நிச்சயம் கூடுதல் செலுத்தவேண்டும்; அப்படியிருக்கையில் இதுபோன்ற சட்டங்கள் நீதிமன்றத்தின் பிடியிலிருந்து தப்பிக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
தண்டனைகள் அளவில், விதிமுறைகள் அளவில், இதுவரை இயற்றப்பட்ட மதமாற்று தடைச்சட்டங்களிலேயே கர்நாடக மாநிலத்தின் இந்த மசோதாதான் மிகக் கடுமையானது. நாடு முழுக்க இந்த மசோதா கவனம்பெற இதுவும் ஒரு காரணம்.
இந்தியா
சீன மொபைல் நிறுவனங்கள் அலுவலகங்களில் ரெய்டு:
ஒப்போ, ஒன்ப்ளஸ், ஷியோமி ஆகிய நிறுவனங்களின் அலுவலகங்கள், தொழிற்சாலைகள், அந்தக் கம்பெனியின் நிர்வாகிகள் இல்லங்கள் என நாடு முழுவதும் நேற்று 20 இடங்களுக்கும் மேல், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருக்கின்றனர். சீன மொபைல் நிறுவனங்கள், அவற்றின் விநியோக நிறுவனங்கள் ஆகியவை வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த ரெய்டு நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒப்போ, விவோ போன்ற நிறுவனங்கள் தங்களை மொபைலை விநியோகிக்க சீன நிறுவனங்களையே இந்தியாவில் பயன்படுத்துகின்றன. இதற்கு பதிலாக இந்திய நிறுவனங்களைப் பயன்படுத்தச் சொல்லி, அரசு தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும், அதன் காரணமாகவே இந்த ரெய்டு நடந்திருக்கலாம் எனவும் சொல்கிறது, தி எக்னாமிக் டைம்ஸ் செய்தி.
- `மாஸ்டர்’ திரைப்பட தயாரிப்பாளரான சேவியர் பிரிட்டோவின் வீடுகளிலும் நேற்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருக்கின்றனர். அவரது நிறுவனம் சீன மொபைல் நிறுவனத்தின் லாஜிஸ்டிக்ஸ் பிசினஸில் ஈடுபட்டிருப்பதால், இந்த சோதனை நடந்திருக்கிறது.
சர்ச்சையில் அயோத்தி அதிகாரிகள்:
2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம், அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அனுமதி கொடுத்ததற்குப் பிறகு அப்பகுதியில் ரியல் எஸ்டேட்டின் மதிப்பு வெகுவாக உயர்ந்திருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தனிநபர்கள் மட்டுமல்ல; எம்.எல்.ஏ, மேயர், மாவட்ட மாஜிஸ்திரேட், டி.ஐ.ஜி, இவர்களின் உறவினர்கள் எனப் பலரும் ராமர் கோயில் அமையவுள்ள இடத்தின், 5 கிலோ மீட்டரைச் சுற்றி அவசர அவசரமாக நிலங்களை வாங்கியிருக்கின்றனர். இவர்களில் சிலர் சர்ச்சைக்குரிய நில விற்பனை விவகாரம் ஒன்று குறித்து விசாரித்து வரும் அதிகாரிகளின் உறவினர்கள் என்பதால், இதில் அதிகார துஷ்பிரயோகம் நடந்திருக்கிறது என விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து உ.பி அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
பொது வாக்காளர் பட்டியல்?
தற்போது நாடாளுமன்ற / சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றிற்கு தனித்தனி வாக்காளர் பட்டியல்கள் இருக்கின்றன. முதலாவதை இந்திய தேர்தல் ஆணையமும், இரண்டாவதை மாநில தேர்தல் ஆணையமும் வெளியிடுகின்றன. இவற்றை மாற்றி அனைத்து தேர்தல்களுக்கும் ஒரே வாக்காளர் பட்டியலை வெளியிட மத்திய அரசு முயற்சி செய்துவருகிறது. இதற்காக விரைவில் மாநில தேர்தல் ஆணையங்களுடன் கலந்தாலோசிக்கவுள்ளது. இந்த முடிவுக்கு தி.மு.க உள்ளிட்ட கட்சிகள், மாநில உரிமையில் தலையிடும் செயல் என எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அண்மையில் இதுகுறித்த ஆன்லைன் மீட்டிங்கில்தான், தேர்தல் ஆணையர்கள் பிரதமரைச் சந்தித்தது சர்ச்சையானது.
உத்தரகண்ட் காங்கிரஸூக்கு சிக்கல்?
விரைவில் உத்தரகண்ட் மாநிலத்திற்கும் சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கிறது. இந்நிலையில் அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ஹரிஷ் ராவத், அக்கட்சியின் தலைமை குறித்து விமர்சித்து ட்வீட் செய்திருப்பது காங்கிரஸூக்கு சிக்கலை உண்டாக்கியிருக்கிறது. வரும் தேர்தலில் காங்கிரஸின் முகமாக இருக்கவேண்டியர் ஹரிஷ் ராவத்; ஆனால் தற்போது, கட்சியில் தான் தனிமைப்படுத்தப்படுவதாகவும், இறைவன்தான் தனக்கு வழிகாட்ட வேண்டும் என ட்வீட் செய்திருக்கிறார்.
முடிவுக்கு வந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர்:
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் திட்டமிடப்பட்டதற்கு ஒருநாள் முன்பாகவே நேற்று நிறைவடைந்தது. மொத்தம் 13 மசோதாக்கள் இந்தக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 11 மசோதாக்கள் இரு அவைகளிலும் நிறைவேறியுள்ளன. எதிர்க்கட்சிகளின் கடும் அமளிகளுக்கு மத்தியிலும் லோக் சபா 82 சதவீதமும், ராஜ்ய சபா 48 சதவீதமும் இயங்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால், மசோதாக்கள் போதிய விவாதங்களின்றி, அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டுள்ளன எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருக்கின்றன.
தமிழகம்
கம்யூனிட்டி கிச்சன்கள் திட்டம்:
மக்கள் பசியினால் இறப்பதை தவிர்க்க, நாடு முழுவதும் மாநில அரசுகளுடன் இணைந்து கம்யூனிட்டி கிச்சன்களை அமைக்கச் சொல்லி மத்திய அரசை அண்மையில் வலியுறுத்தியிருந்தது உச்சநீதிமன்றம். இதையொட்டி, நேற்று மாநில உணவுத்துறை அமைச்சர்களுக்கான கூட்டம் டெல்லியில் நடந்தது. அதில் இதுகுறித்து மாநிலங்கள் தரப்பிலிருந்து தருத்துகள் பரிமாறப்பட்டன. இதில் கலந்துகொண்டு பேசிய தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, ``கம்யூனிட்டி கிச்சன்களுக்கான இடத்தை மாநில அரசு வழங்கலாம்; ஆனால், ஊழியர்களின் சம்பளம், உணவு தானியங்கள் மற்றும் பிற நிர்வாக செலவுகளை மத்திய அரசுதான் வழங்கவேண்டும். அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே கொள்கை என இல்லாமல், மாநில அரசுகள் இந்த கம்யூனிட்டி கிச்சன்களை சுதந்திரமாக நடத்த வழிவகை செய்யவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
உலகம்:
பூஸ்டர் டோஸ்கள் குறித்து WHO
கொரோனாவிற்கு எதிரான பூஸ்டர் டோஸ்கள் வழங்குவது குறித்து உலக சுகாதார மையம் சார்பில் இதுவரை எந்த பரிந்துரையும் அளிக்கப்படாமலேயே இருந்துவந்தது. இந்நிலையில் முதல்முறையாக நேற்று, ``அதிக ரிஸ்க் உள்ள முதியோர்கள், இணை நோய் உள்ளவர்கள், முன்களப் பணியாளர்கள் ஆகியோருக்கு பூஸ்டர் டோஸ்கள் வழங்குவது குறித்து ஆதாரங்களின் அடிப்படையில் முடிவெடுக்கலாம்” எனத் தெரிவித்துள்ளது. இதையடுத்து இந்தியாவும் விரைவில் பூஸ்டர் டோஸ் குறித்து தன் நிலைப்பாட்டை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், உலகில் இன்னும் பல ஏழை நாடுகளில் தடுப்பூசிகள் போதிய அளவு தடுப்பூசி செலுத்தப்படாததால், பெருந்தொற்றிலிருந்து நாம் விரைவாக மீள்வது கடினம் எனவும் எச்சரித்துள்ளது. பூஸ்டர் டோஸ்களில் மட்டுமே கவனம் செலுத்தும் நாடுகளால், பெருந்தொற்று இன்னும் நீள்வதற்கே வாய்ப்பு உள்ளது எனவும் எச்சரித்துள்ளது.
ஃபைஸர் மாத்திரைகளுக்கு அனுமதி:
மீண்டும் கொரோனா பாதிப்புகள் வேகமாக உயர்ந்துவரும் நிலையில், ஃபைஸர் நிறுவனத்தின் கோவிட் மாத்திரைகளின் அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி அளித்திருக்கிறது அமெரிக்கா. அதிக ரிஸ்க் பிரிவில் உள்ள நோயாளிகளிடையே தீவிர நோய் பாதிப்பையும், மரணத்தையும் இது 88% குறைப்பதாக முன்பு பரிசோதனைகளில் தெரியவந்திருந்தது. இருப்பினும், ``இது தடுப்பூசிக்கு மாற்று அல்ல; எனவே அதற்கே முன்னுரிமை கொடுங்கள்” என்றும் அந்நாட்டு மக்களை அறிவுறுத்தியிருக்கிறது.
தமிழகத்தில் நேற்று பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை: 604
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை: 8
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 6-வது அணு உலைக்கான கட்டுமானப் பணிகள் நேற்று தொடங்கப்பட்டுள்ளன.
2022-ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுக்கு, சிறந்த சர்வதேசப் படத்திற்கான பிரிவில் இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்ட `கூழாங்கல்’ திரைப்படம் ஆஸ்கர் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது. நேற்று வெளியான இறுதிப்பட்டியலில் இப்படம் இடம்பெறவில்லை.
இந்தியாவில் ஓமிக்ரான் தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை 213-ஐத் தொட்டிருக்கிறது. இந்நிலையில், ஓமிக்ரானை சமாளிப்பதற்காக பிரதமர் தலைமையிலான ஆலோசனைக் கூட்டமும் இன்று நடக்கிறது.
ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு, கொரோனாவிற்கு எதிரான எதிர்ப்பு திறன் 3 மாதங்களுக்குப் பிறகு குறைவதாக, பிரேசில் மற்றும் ஸ்காட்லாந்தில் `தி லான்செட்’ நடத்திய ஆய்வில் தெரியவந்திருக்கிறது.
உத்தரப்பிரதேசத்தில் எதிர்க்கட்சிகளுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனைகள் தொடர்பாகவும், அரசு எதிர்க்கட்சித் தலைவர்களை உளவு பார்ப்பது தொடர்பாகவும் கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி, ``அரசு என் பிள்ளைகளைக் கூட விட்டுவைப்பதில்லை. அவர்களின் இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட்களைக் கூட ஹேக் செய்திருக்கின்றனர். அரசுக்கு வேறு வேலையே இல்லையா?” எனக் கூறியிருந்தார். இந்த இன்ஸ்டாகிராம் ஹேக்கிங் குறித்து அவர் எந்தப் புகாரும் இதுவரை அளிக்கவில்லை. ஆனாலும், சர்ச்சைக்குரிய இந்தக் குற்றச்சாட்டை விசாரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாம்.
நேற்று வெளியான ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில், பேட்ஸ்மேன்களில் முதல்முறையாக நம்பர் 1 இடத்தைப் பிடித்திருக்கிறார் ஆஸ்திரேலியாவின் லாபுஷான். இவர் இதுவரை விளையாண்டது வெறும் இருபதே டெஸ்ட் போட்டிகள்தான். இங்கிலாந்தின் ஜோ ரூட் முதலிடத்திலிருந்து இரண்டாம் இடத்திற்கு இறங்கியுள்ளார். இந்திய வீரர்களில் ரோஹித் ஷர்மா 5-வது இடத்திலும், கோலி 7-வது இடத்திலும் உள்ளனர்.
- மீண்டும் மஞ்சப்பை
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டைக் குறைக்கவும், அதற்கு பதிலாக மாற்றுப்பொருள்களைப் பயன்படுத்தவும் தமிழக சுற்றுச்சூழல் துறை சார்பில் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒருபகுதியாக பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக, துணிப்பை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் நோக்கில், `மீண்டும் மஞ்சப்பை’ என்ற பிரசாரம் தமிழக முதலமைச்சரால் இன்று தொடங்கி வைக்கப்படுகிறது.
On This Day - Dec 23
- தேசிய விவசாயிகள் தினம்
- இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் நினைவு தினம்.
🔴 இதுவரைக்கும் TSL-ஐ தொடர்ந்து படிச்சிட்டு வர்றீங்க; எனவே இதுபற்றிய உங்க கருத்தை தெரிஞ்சுக்க விரும்புறோம். அதனால், இந்த லிங்கை க்ளிக் பண்ணி உங்களோட ரேட்டிங்கைப் பதிவு பண்ணிடுங்க. TSL-ஐ மேம்படுத்த இது எங்களுக்கு உதவியா இருக்கும்!
அவ்வளவுதான்!
The Subject Line-னோட இன்னைக்கு அப்டேட்ஸ் உங்களுக்குப் பிடிச்சிருக்கும்னு நம்புறேன். பிடிச்சிருந்தா கீழ இருக்க பட்டன் மூலமா உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க… இன்னும் ஏதாச்சும் இந்த TSL-ல் மாத்தணும்னா எனக்கு மெசேஜ் பண்ணுங்க! உங்க கருத்துகள் எங்களுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். 🤞
திரும்ப நாளைக்கு காலைல 7 மணிக்கு சந்திப்போம்!
Have a Nice day! ☕️
The Subject Line-ஐ சமூக வலைதளங்களில் பின்தொடர: