The Subject Line

Share this post
🧕 அரசியல் + மதம்; கர்நாடகா ஹிஜாப் சர்ச்சை ஏன்?
www.thesubjectline.in

🧕 அரசியல் + மதம்; கர்நாடகா ஹிஜாப் சர்ச்சை ஏன்?

Today Edition Highlights: தனியார் மருத்துவக்கல்லூரிகளுக்கு கட்டுப்பாடு | மதுரை எய்ம்ஸ் எப்போது? | அனுமதி வழங்கப்பட்ட புதிய தடுப்பூசி | சர்ச்சையில் ஹூண்டாய் நிறுவனம் | Reading Time: ⏱ 6 Mins

ஞா.சுதாகர்
Feb 7, 2022
2
Share this post
🧕 அரசியல் + மதம்; கர்நாடகா ஹிஜாப் சர்ச்சை ஏன்?
www.thesubjectline.in

Good Morning ☕️

இன்றைய தினத்தின் டாப் அப்டேட்ஸ் இதோ…

- ஹிஜாப் அணிந்து வரும் மாணவிகளை பள்ளிக்குள் அனுமதிக்கலாமா?

- சீருடை விதிகள் அதற்கு இடம் தரலாமா?

- சீருடை விதிகள் அனுமதி மறுத்தாலும், அதைத் தாண்டி ஹிஜாப் அணிய மாணவிகளுக்கு சட்டப்படி உரிமை உண்டா?

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கர்நாடகாவில் விவாதமாகியிருக்கும் கேள்விகள் இவை. உடுப்பியில் உள்ள ஒரு அரசுப்பள்ளியில், 8 மாணவிகளை வைத்து தொடங்கப்பட்ட இந்தப் பிரச்னை, இன்று கர்நாடகாவின் பல மாவட்டங்களில் இந்து மாணவர்கள் vs இஸ்லாமிய மாணவர்கள் என்பது வரை நீண்டிருக்கிறது.

Representational Image | Photo by Milad Fakurian on Unsplash

எங்கே தொடங்கியது பிரச்னை?

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27-ம் தேதி தொடங்கியது இந்தப் பிரச்னை.

கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசின் PU கல்லூரியில் (Pre-university College) 11 மற்றும் 12-ம் வகுப்பைச் சேர்ந்த 8 மாணவிகளுக்கு, ஹிஜாப் அணிந்து வந்ததால் வகுப்புகளில் பங்கேற்க அனுமதி (கல்லூரிக்குள் நுழையலாம்) மறுக்கப்பட்டது. வருகைப்பதிவேடுகளிலும் ஆப்சென்ட் என மார்க் செய்யப்பட்டது.

  • இந்த மாணவிகள் பள்ளியின் சீருடை அணிந்து, அதற்கு மேல் ஹிஜாப் அணிந்திருந்தனர். டிசம்பர் 27 அன்றுதான் முதன்முதலில் அணியத் தொடங்கியிருந்தனர். அதற்கு முன் இல்லை.

இதற்காக அவர்கள் சொன்ன காரணம், ``கல்லூரியில் அதிகமான ஆண் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். வெளியிலிருந்தும் நிறைய ஆண்கள் வருகின்றனர். எனவேதான் ஹிஜாப் அணிகிறோம். இதுகுறித்து ஏற்கெனவே எங்கள் பெற்றோர் மூலம் பள்ளி தலைமையாசிரியரிடம் கோரிக்கை வைத்தோம். ஆனால், எந்த பதிலும் இல்லை. அதனால்தான் நாங்களே அணிந்துகொண்டோம். 76 முஸ்லிம் மாணவிகள் படிக்கும் இந்தக் கல்லூரியில் நாங்கள் 8 பேர் மட்டும்தான் ஹிஜாப் அணிகிறோம். நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை; இதைத் தடைசெய்ய கல்லூரிகளில் எந்த விதிமுறையும் இல்லாதபோது எங்களை உரிமையை ஏன் தடைசெய்கிறீர்கள்?”

இதற்கு அந்தக் கல்லூரியின் தலைமையாசிரியர் சொன்ன பதில், ``இந்தப் பள்ளியின் 37 ஆண்டுகால வரலாற்றில் யாரும் வகுப்பறைக்குள் ஹிஜாப் அணிந்ததில்லை. இதை அனுமதிப்பது மாணவர்களிடையேயான சமச்சீர் தன்மையை பாதிக்கும் என்பதால் நாங்கள் தடைசெய்தோம்.”

இந்தப் பிரச்னையில் கர்நாடக அரசு என்ன சொல்கிறது?

பள்ளி மாணவர்களின் சீருடை குறித்து ஒட்டுமொத்த மாநிலத்திற்கும் என எந்தவொரு விதிமுறையும் அங்கு இல்லை. மாறாக, அதை அந்தந்தப் பள்ளிகளோ அல்லது மாவட்ட கல்லூரி வளர்ச்சி குழுக்களோ அதை முடிவு செய்யலாம் என்பதுதான் இந்தப் பிரச்னைக்கு முன்புவரை அரசின் நிலைப்பாடு.

  • மேலும், இந்த 8 மாணவிகளும் பள்ளி சீருடையை அணிந்து அதற்கு மேல்தான் ஹிஜாப் அணிகிறார்கள் என்பதால் அதை விதிமீறல் என்றுகூடச் சொல்லமுடியாது எனவும் மாணவிகளுக்கு ஆதரவாக குரல்கள் எழுந்தன. ஆனால், பிரச்னை இந்த 8 பேரோடு மட்டும் நிற்கவில்லை.

பிறகு என்ன நடந்தது?

உடுப்பியில் இந்தப் பிரச்னை நடந்துகொண்டிருக்கும்போதே, கர்நாடாவின் சிக்மக்ளூர் மற்றும் மங்களூரில் வேறு இரண்டு கல்லூரிகளில் ABVP அமைப்பைச் (பா.ஜ.க-வின் மாணவர்கள் அணி) சேர்ந்த இந்து மாணவர்கள் சிலர், காவித்துண்டுகளுடன் வகுப்புகளுக்கு வந்தனர். இதையடுத்து, அந்தக் கல்லூரிகள் காவித்துண்டு மற்றும் ஹிஜாப் இரண்டையும் ஒரு சேரத் தடை செய்தன.

  • இப்படி முதலில் ஒரு பள்ளியில் தொடங்கிய பிரச்னை, பிற கல்லூரிகளுக்குப் பரவவும், அவை மாநிலம் முழுவதும் விவாதங்களைக் கிளப்பவும் கர்நாடகா அரசு உடனே செயலாற்றவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டது.

  • ஹிஜாப்பை வகுப்புகளுக்குள் அனுமதிப்பது குறித்து ஆராயவும், விதிமுறைகள் வகுக்கவும் ஒரு நிபுணர் குழுவை அமைத்தது. அந்தக் குழு அறிக்கை அளிக்கும் வரையில், இதற்கு முன் இருந்த நிலையே தொடரவேண்டும் என்றது.

இந்த நடவடிக்கை பிரச்னையைத் தணிக்கும் எனக் கருதப்பட்டது. ஆனால், அடுத்த சில நாள்களில் இன்னும் தீவிரமானது.

எப்படி?

இதுவரைக்கும் உடுப்பி கல்லூரியில் புதிதாக ஹிஜாப் அணிந்த மாணவிகளைத் தடை செய்ததை மட்டும் பார்த்தோம் அல்லவா? இது அப்படியே வேறு கதை.

  • அதே உடுப்பி மாவட்டத்தில், குந்தாபூர் நகரில் உள்ள மற்றொரு கல்லூரியில் ABVP அமைப்பைச் சேர்ந்த சில மாணவர்கள், பிப்ரவரி 2-ம் தேதி காவித்துண்டுகளுடன் வகுப்புகளுக்கு வந்தனர். இதைத்தொடர்ந்து, முன்பு பார்த்தைப் போலவே இங்கேயும் காவித்துண்டுகள் மற்றும் ஹிஜாப் ஆகிய இரண்டும் தடைசெய்யப்பட்டன.

  • ஆனால், இங்கு பாதிக்கப்பட்டது புதிதாக ஹிஜாப் அணிந்துவந்த மாணவிகள் அல்ல; ஏற்கெனவே பல ஆண்டுகளாக ஹிஜாப் அணிந்துகொண்டு பள்ளிகளுக்கு வந்தவர்கள். இங்கு ஹிஜாப் அணிந்துகொள்ள கல்லூரி விதிமுறைகளும் அனுமதிக்கின்றன.

  • இவர்களில் சுமார் 20 மாணவிகள் பிப்ரவரி 3-ம் தேதி பள்ளிக்குள் நுழைவதை தலைமையாசிரியர் தடை செய்ததும், அதையடுத்து மாணவிகள் அவர்களிடம் கெஞ்சுவதுமான வீடியோதான் அண்மையில் சமூக வலைதளங்களில் வைரலானது.

Twitter avatar for @dpkBopanna
Deepak Bopanna @dpkBopanna
Deplorable scenes unfolding in Karnataka, another govt college not allowing Girls with #hijab to enter classrooms. The students are crying and requesting the principal not to ruin their future with just 2 months to go for exams.
6:04 AM ∙ Feb 3, 2022
24,309Likes11,459Retweets
  • இதேபோல உடுப்பி மாவட்டத்தின் இன்னும் சில கல்லூரிகளுக்கும் காவித்துண்டு போராட்டங்கள் பரவின.

    Twitter avatar for @KeypadGuerilla
    Imran Khan @KeypadGuerilla
    Protest against #Hijab continued even today also at #Bhandarkar private college at #Kundapura. This time #Hindu girl students wearing #saffronshawls came to college protesting against hijab.
    6:36 AM ∙ Feb 5, 2022
    6,825Likes2,464Retweets
  • முதலில் மாணவர்கள் மட்டுமே கலந்துகொண்ட இந்தப் போராட்டத்தில் மாணவிகளும் காவித்துண்டு அணிந்து பங்கேற்றனர். இந்தப் போராட்டங்களுக்கு முஸ்லிம் மாணவிகளின் பதில்,

``ஹிஜாப் என்பது எங்கள் மதக்கோட்பாட்டில் உள்ள ஒரு விஷயம். ஆனால், காவித்துண்டு இந்துக்களுக்கு அப்படி இல்லையே? ஏன் இரண்டையும் ஒப்பிடுகிறார்கள்?” என்பதே.

சட்டம் சொல்வது என்ன?

முதலில் 8 மாணவிகள் தடைசெய்யப்பட்டதைப் பார்த்தோம் அல்லவா? அந்த மாணவி ஹிஜாப் தடையை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

  • இஸ்லாமின் அடிப்படை கூறுகளில் ஒன்றாக ஹிஜாப் இருப்பதால், அரசியலலமைப்புச் சட்டத்தின்படி (சட்டப்பிரிவு 14 & 25) அதை அணிய தனக்கு உரிமை இருப்பதாக அந்த மனுவில் தெரிவித்திருக்கிறார். இந்த வழக்கு இன்னும் விசாரணைக்கு வரவில்லை. சரி, இதுவரையிலுமான சட்டம் என்ன?

மாணவியின் மனு குறிப்பிடுவதுபோலவே, சட்டப்பிரிவு 25 அனைத்து மதத்தினரும் தங்கள் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவதை அனுமதிக்கிறது. அதேசமயம், சில இடங்களில் கட்டுப்பாடுகளையும் விதிக்க அரசை அனுமதிக்கிறது.

  • தற்போது இந்த ஹிஜாப் சர்ச்சையைப் பொறுத்தவரை, இரண்டு கேரள உயர்நீதிமன்ற தீர்ப்புகள் நம் முன் இருக்கின்றன. ஒன்று, 2016-ம் ஆண்டு மருத்துவ நுழைவுத்தேர்வின் போது, முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதைத் தடைசெய்தது குறித்த வழக்கு.

  • இந்த வழக்கில் தீர்ப்பளித்த கேரள உயர்நீதிமன்றம், மாணவிகள் முஸ்லிம் முறைப்படி ஆடை அணிவதற்கு தடை இல்லை எனவும், ஒருவேளை இது தேர்வு முறைகேடுகளில் ஈடுபட உதவலாம் என CBSE நினைத்தால், மாணவிகளை சோதனையிட்டுக்கொள்ள வழிசெய்யலாம் எனவும் தீர்ப்பளித்தது.

  • இதேபோல 2018-ம் ஆண்டு பள்ளிகளில் ஹிஜாப் அணிவதைத் தடைசெய்வது குறித்த வழக்கில் (வேறு நீதிபதி), தனிநபர்களின் உரிமையைவிடவும், பள்ளியின் விதிமுறைகளே முதன்மையாகப் பின்பற்றப்படவேண்டும் எனத் தீர்ப்பளித்தது. எனவே இந்த விவகாரத்தில் இன்னும் தெளிவான நிலைப்பாடு இல்லை.

  • ஆனால், அதேசமயம் ஹிஜாபை காரணம் காட்டி, கல்வி மறுக்கப்படுவது என்பது சட்டப்பிரிவு 21-A-க்கு (கல்வி பெறும் உரிமை) எதிரானது என்கின்றனர் நிபுணர்கள்.

ஹிஜாப் விவகாரம் ஏன் இவ்வளவு பெரிதானது?

இதைப் புரிந்துகொள்ள கர்நாடகாவின் கடலோரப் பிரதேசத்தின் (Coastel Karnataka) அரசியலையும் (தக்‌ஷிண கன்னடா, உத்தர கன்னடா, உடுப்பி ஆகிய மூன்று மாவட்டங்கள்) புரிந்துகொள்ளவேண்டும். இந்துத்துவ இயக்கங்கள் வலுவாக காலூன்றியிருக்கும் மாவட்டமான உடுப்பியில் மொத்தம் 5 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் 2013-ம் ஆண்டு காங்கிரஸ் 4 இடங்களையும், பா.ஜ.க 1 இடத்தையும் வென்றிருந்தன.

  • இதுவே 2018-ல் 5 இடங்களையும் பா.ஜ.க வென்றது. இதற்கு காரணமாக அப்போது குறிப்பிடப்பட்டது இந்த 3 மாவட்டங்களிலும் பா.ஜ.க மேற்கொண்ட மத அரசியல்தான். (அது பெரிய கதை என்பதால் இத்துடன் இங்கே நிறுத்திக்கொள்ளலாம்)

  • இந்நிலையில் அண்மையில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் Popular Front of India (PFI) (இஸ்லாமிய அமைப்பு) மொத்தம் 3 இடங்களைக் கைப்பற்றியிருந்தது. இவை காங்கிரஸ் ஆதிக்கம் செலுத்திய இடங்கள். எப்படி பா.ஜ.க மத அரசியல் மூலம் இந்தப் பகுதியில் ஆதிக்கம் செலுத்தியதோ அதேபோல தற்போது PFI-யும் செய்கிறது என்பது இந்தப் பிரச்னையில் வைக்கப்படும் குற்றச்சாட்டு. இதற்கு எதிராக ஹிஜாப் விவகாரத்தை இன்னும் பெரிதாக்க பா.ஜ.க முயற்சி செய்கிறது என்பது இன்னொரு குற்றச்சாட்டு.

  • ஆனால், ``முதன்முதலில் உடுப்பி கல்லூரியில் பிரச்னை வந்தபோது பள்ளி நிர்வாகத்திடம் மட்டுமே முறையிட்டோம்; அவர்கள் வகுப்பில் நுழைய தடைவிதித்ததும்தான் CFI (PFI-ன் மாணவர் அணி)-யிடம் முறையிட்டோம் என்கின்றனர்” மாணவிகள்.

  • மேலும், ``அந்த ஒரு கல்லூரியைத் தாண்டி, பிற கல்லூரிகளுக்கும் காவித்துண்டு vs ஹிஜாப் என பிரச்னையைக் கொண்டு சென்றது வலதுசாரி இயக்கங்களே. இதற்கு முன்பே பலமுறை ஹிஜாப், புர்கா ஆகியவற்றிற்கு எதிராக வலதுசாரி இயக்கங்கள் போராடிய வரலாறும் இந்தப் பிரதேசத்தில் உண்டு” என்கின்றனர் இன்னொரு சாரார்.

சரி, அடுத்து என்ன?

பிரச்னை உச்சத்தில் இருக்கும் இந்த சமயத்தில் கடந்த சனிக்கிழமையன்று புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருக்கிறது கர்நாடக அரசு. அதில், கல்லூரிகள் நிர்ணயித்திருக்கும் சீருடை அல்லது கல்லூரி வளர்ச்சிக் குழுக்கள் நிர்ணயிக்கும் சீருடையைக் கட்டாயம் அணியும்படி மாணவர்களுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. (இன்னும் நிபுணர்குழுவின் அறிக்கை வெளியாகவில்லை).

  • மேலும், சமத்துவத்தை, பொது அமைதியைக் குலைக்கும் உடைகள் வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது. இது ஹிஜாப் பிரச்னையில் மேலும் குழப்பத்தையே விளைவித்திருக்கிறது. காரணம், கல்லூரி வளர்ச்சிக் குழுவில் பெரும்பாலும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-க்களே தலைவராக இருப்பார்கள். அவர்களும் இந்த ஹிஜாப் பிரச்னைக்கு காரணம்.

  • இன்னொன்று, சீருடைக்கு மேலே ஹிஜாப் அணிய தடையா இல்லையா என்பதை இது தெளிவுபடுத்தவில்லை.

எனவே இனி நீதிமன்ற உத்தரவுகள் வரும் வரையோ அல்லது அரசு தலையிட்டு பிரச்னையை முடித்துவைக்கும் வரையிலோ, இந்த விவகாரம் கர்நாடகாவில் ஓயப்போவதில்லை.

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் ட்வீட் 👇

Twitter avatar for @RahulGandhi
Rahul Gandhi @RahulGandhi
By letting students’ hijab come in the way of their education, we are robbing the future of the daughters of India. Ma Saraswati gives knowledge to all. She doesn’t differentiate. #SaraswatiPuja
5:07 AM ∙ Feb 5, 2022
61,134Likes15,704Retweets

Share The Subject Line


1. விடைபெற்ற இந்தியாவின் இசைக்குயில்!

கோவிட் காரணமாக மும்பை மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த இந்தியாவின் பழம்பெரும் பின்னணி பாடகரான லதா மங்கேஷ்கர், நேற்று காலை மறைந்தார். அவருக்கு வயது 92.

13 வயதில் இசைத்துறைக்குள் நுழைந்த அவர் 73 ஆண்டுகளில், 50,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியவர். இசைத்துறையில் செய்த பங்களிப்பிற்காக 1969-ல் பத்ம பூஷண், மற்றும் 1999-ல் பத்ம விபூஷண் விருதுகளைப் பெற்றவர், 2001-ம் ஆண்டு நாட்டின் உயரிய விருதான `பாரத ரத்னா’ கௌரவத்தையும் பெற்றார்.

Twitter avatar for @ilaiyaraaja
Ilaiyaraaja @ilaiyaraaja
Heartbroken, but blessed to have known her & for having worked with her.. loved this incredible voice & soul... Lataji holds a place in our hearts that is irreplaceable…. That's how profoundly she has impacted our lives with her voice.
10:11 AM ∙ Feb 6, 2022
8,557Likes1,454Retweets

நேற்று மும்பை சிவாஜி பார்க்கில் வைக்கப்பட்ட லதா மங்கேஷ்கரின் உடலுக்கு பிரதமர் உள்பட பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. லதாவின் மறைவையொட்டி இரு நாட்களுக்கு தேசிய துக்கம் அனுசரிக்கப்படுகிறது. மகாராஷ்டிராவில் இன்று பொது விடுமுறை விடப்பட்டுள்ளது.

2. நீட் விலக்கு மசோதா: கூடும் சட்டமன்றம்

நீட் விலக்கு மசோதாவை மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றி, மீண்டும் குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு ஆளுநர் வழியாக அனுப்ப, தமிழக அனைத்துக் கட்சிக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து நாளை சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது.

  • இந்த அனைத்துக் கட்சிக்கூட்டத்தில் பா.ஜ.க, அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளும் பங்கேற்கவில்லை. அ.தி.மு.க-வின் இந்த நடவடிக்கை விமர்சிக்கப்பட்ட நிலையில், அன்று மாலையே இதுகுறித்து விளக்கமளித்திருக்கிறார் ஓ.பி.எஸ்.

  • ஏற்கெனவே நீட் பற்றி நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்திலேயே அ.தி.மு.க தன் நிலைப்பாட்டை விளக்கிவிட்டதாகவும், சட்டப்படி நீட் தேர்விலிருந்து தமிழகம் விலக்குபெற, தமிழக அரசுக்கு அ.தி.மு.க துணை நிற்கும் எனவும் அதில் தெரிவித்துள்ளார்.

3. 1000-வது ஒருநாள் போட்டி; இந்திய அணி வெற்றி

தன்னுடைய 1000-வது ஒருநாள் போட்டியில், நேற்று வெஸ்ட் இண்டீஸை எதிர்கொண்டது இந்திய அணி. முதலில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

  • இதைத்தொடர்ந்து முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ், 176 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வாஷிங்டன் சுந்தர் 3, சஹல் 4 என 7 விக்கெட்டுகளை ஸ்பின்னர்கள் மட்டுமே வீழ்த்தினர். 2019 ஜனவரிக்குப் பிறகு இந்திய ஸ்பின்னர்கள் 5 விக்கெட்டிற்கு மேல் எடுத்தது நேற்றுதான்.

  • பிரசித் 2 விக்கெட்டுகளும், சிராஜ் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதில் சிராஜின் கட்டுக்கோப்பான பந்துவீச்சால் பவர் ப்ளேயில் மட்டுமே 46 டாட் பால்கள் வீசப்பட்டன. அந்த அணியில் அதிகபட்சமாக ஹோல்டர் மட்டும் 51 ரன்கள் எடுத்திருந்தார்.

  • 177 என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்தியாவுக்கு, ரோஹித் சிறப்பான தொடக்கம் கொடுத்து, 60 ரன்களில் அவுட் ஆனார். அதன்பின்னர் இஷான், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா ஆகியோர் கைகொடுக்க 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது இந்தியா.

Score Board: WI - 176/10 (43.5 Overs), India - 178/4 (28 Overs)

4. இந்தியா வென்ற 5-வது உலகக்கோப்பை

இங்கிலாந்து அணியை இறுதிப்போட்டியில் வீழ்த்தி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையை 5-வது முறையாக வென்றிருக்கிறது இந்தியா.

  • முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியாவின் ராஜ் பவா 5 விக்கெட்டுகளும், ரவிக்குமார் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

  • அடுத்து விளையாடிய இந்திய அணியில், ஷேக் ரஷீத் - 50, நிஷாந்த் சிந்து - 50, ராஜ் பவா - 35 அடிக்க எளிதாக 47.4-வது ஓவரில் இலக்கை எட்டியது. அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் பனா, சிக்ஸ் அடித்து சாம்பியன்ஷிப்பை தூக்க, உடனே 2011 உலககோப்பை ஃபைனலின் தோனி இன்னிங்ஸை வைத்து மீம்கள் பறந்தன.

Twitter avatar for @Cricketracker
CricTracker @Cricketracker
Indian wicketkeeper finishing a world cup final with a six: Then - MS Dhoni (ODI WC 2011) Now - Dinesh Bana (U19 WC 2022) 📸: Disney+Hotstar
Image
Image
8:06 PM ∙ Feb 5, 2022
10,384Likes1,313Retweets

  • தமிழகத்தில் நேற்று பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை: 6,120 (நேற்று முன்தினம்: 7,524) 🔻

    - அதிகபட்சமாக, சென்னையில்: 972 (1,223) 🔻

    - தமிழகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை: 26 (37) 🔻

  • இந்தியாவில் நேற்று பதிவான கொரோனா பாதிப்பு: 1,07,474 (1,27,952) 🔻

  • 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வைணவத்துறவியும், சமூக சீர்திருத்தவாதியுமான மகான் ராமானுஜரின் 216 அடி சிலையை நேற்று முன்தினம் தெலங்கானாவில் திறந்துவைத்தார் பிரதமர் மோடி. சமத்துவத்திற்கான சிலை (Statue of Equality) என அழைக்கப்படும் இது, ராமானுஜரின் 1000-வது பிறந்தநாள் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலை திறப்பு விழாவில் தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் கலந்துகொள்ளாதது அங்கு அரசியல் சர்ச்சையாகியிருக்கிறது. சில மாதங்களாக பா.ஜ.க-வுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கிறார் சந்திரசேகர ராவ்.

  • 2019-ம் ஆண்டு பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ் திட்டம், அதன்பின் எவ்விதக் கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளப்படாமல் உள்ளது. இந்நிலையில், இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பதிலளித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, 2026-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இதன் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் எனத் தெரிவித்துள்ளார்.

  • தற்போதைய பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியையே, வரும் சட்டமன்றத் தேர்தலிலும் முதல்வர் வேட்பாளராக அறிவித்திருக்கிறது காங்கிரஸ் கட்சி. நவ்ஜோத் சிங்கின் முதல்வர் கனவு இந்த தேர்தலில் இத்துடன் முடிவுக்கு வந்திருக்கிறது.

  • ஒரே டோஸாக செலுத்தக்கூடிய `ஸ்புட்னிக் லைட்’ கோவிட் தடுப்பூசிக்கு நேற்று அவசர கால பயன்பாடு அடிப்படையில் அனுமதி வழங்கியிருக்கிறது மத்திய சுகாதாரத்துறை. இது இந்தியாவில் அனுமதிக்கப்படும் 9-வது தடுப்பூசியாகும். ரஷ்யாவில் நடத்தப்பட்ட பரிசோதனைகளில் இதன் செயல்திறன் 65.4% என உறுதிசெய்யப்பட்டுள்ளது.

  • தனியார் மருத்துவக்கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் அரசு ஒதுக்கீட்டில், UG / PG படிப்புகளில் சேரும் 50% மாணவர்களுக்கு, அந்த மாநில அரசுக்கல்லூரிகளில் வசூலிக்கப்படும் தொகையையே வசூலிக்கவேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் (NMC) உத்தரவிட்டுள்ளது. ஒருவேளை அந்தக் கல்லூரியின் மொத்த இடங்களில், அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 50%-க்கும் கீழ் இருந்தால், அந்த காலியிடங்களுக்கு பிற மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.

  • ஹூண்டாய் நிறுவனம் நேற்று ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 5-ம் தேதியை, காஷ்மீர் ஒருமைப்பாடு தினமாக அனுசரிப்பது பாகிஸ்தானின் வழக்கம். இந்தியாவின் அங்கமான காஷ்மீருக்கு, எதிர்நிலைப்பாடு கொண்ட இந்த தினத்திற்கு பாகிஸ்தானில் இயங்கிவரும் ஹூண்டாய் நிறுவனம் தன் சமூக வலைதளங்களில் வாழ்த்துச் சொல்லியிருக்கிறது.

    Twitter avatar for @AskAnshul
    Anshul Saxena @AskAnshul
    Hyundai in Pakistan is asking for freedom of Kashmir. Hyundai Pakistan also posted them same on its Facebook page. Link: facebook.com/13128830424132…
    Image
    Image
    8:14 AM ∙ Feb 6, 2022
    31,695Likes17,600Retweets

    இதற்கு சமூகவலைதளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவிக்கவே, #BoycottHyundai என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது. இதையடுத்து விளக்கம் அளித்திருக்கும் ஹூண்டாய் இந்தியா, அந்த தேவையற்ற ஒரு பதிவை வைத்து இந்தியாவுடனான தங்கள் உறவை மதிப்பிட வேண்டாம் எனவும் அதுபோன்ற முதிர்ச்சியற்ற பதிவுகளை எதிர்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.


- தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் பிப்ரவரி 4-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதுவரை 74,416 பேர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். இதில் உங்கள் வார்டு / மாநகராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளரின் வேட்புமனுவைப் பார்வையிட tnsec.tn.nic.in என்ற தளத்திற்குச் செல்லலாம்.


அவ்வளவுதான்!

The Subject Line-னோட இன்னைக்கு அப்டேட்ஸ் உங்களுக்குப் பிடிச்சிருக்கும்னு நம்புறேன். பிடிச்சிருந்தா கீழ இருக்க பட்டன் மூலமா உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க… இன்னும் ஏதாச்சும் இந்த TSL-ல் மாத்தணும்னா எனக்கு மெசேஜ் பண்ணுங்க! உங்க கருத்துகள் எங்களுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். 🤞

திரும்ப நாளைக்கு காலைல 7 மணிக்கு சந்திப்போம்!

Have a Nice day ☕️

The Subject Line-ஐ சமூக வலைதளங்களில் பின்தொடர:

Telegram | Twitter | Facebook | Insta

Today Edition பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க! ❤️

Share this post
🧕 அரசியல் + மதம்; கர்நாடகா ஹிஜாப் சர்ச்சை ஏன்?
www.thesubjectline.in
Comments
TopNewCommunity

No posts

Ready for more?

© 2023 The Subject Line
Privacy ∙ Terms ∙ Collection notice
Start WritingGet the app
Substack is the home for great writing