🚧 தொடங்கும் இந்தியாவின் முதல் நதிநீர் இணைப்பு திட்டம்!
👉இன்றைய TSL-ன் பிற ஹைலைட்ஸ்: ஹேக் செய்யப்பட்ட மோடியின் ட்விட்டர் கணக்கு | ஒப்படைக்கப்பட்ட வீரர்களின் உடல்கள் | கேரளாவில் முதல் ஓமிக்ரான் தொற்று | இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு ரெட் கார்டு போட்ட அமெரிக்கா |⏱ Reading Time: 5 Mins
ஹாய், ஹலோ… வணக்கம் 👋
மத்திய நீர்ப்பாசனத்துறை அமைச்சகமானது, 1980-ல் உபரி நீர் அதிகமுள்ள நதிகளிலிருந்து, நீர்ப்பற்றாக்குறை நிலவும் நதிகளுக்கு தண்ணீரை திருப்பிவிட்டு அவை சார்ந்த பகுதிகளை பசுமையாக்க, தேசிய முன்னோக்கு திட்டம் ஒன்றை வகுத்தது. இதன்கீழ் இமயமலைப் பிராந்தியத்தில் 14 நதிகளையும், விந்திய மலைக்கு தெற்கே தீபகற்ப பிராந்தியத்தில் 16 நதிகளையும் இணைக்க முடிவு செய்யப்பட்டது. எந்தெந்த நதிகள் இணைக்கப்பட வேண்டும் என திட்டமும் தீட்டப்பட்டது. அதுதான் தேசிய நதிநீர் இணைப்புத் திட்டத்திற்கான முதல் விதை. ஆனால், அதற்கடுத்து 40 ஆண்டுகள் ஆகிவிட்டன. பலகட்ட ஆய்வுப்பணிகளும் நடந்திருக்கின்றன. ஆனால், இதுவரை ஒரே ஒரு நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு கூட நிதி ஒதுக்கி, அவை முழுமையாக செயல்பாட்டுக்கு வந்ததில்லை. இந்நிலையில், முதல்முறையாக மத்தியப் பிரதேசத்தின் கென் நதியை, உத்தரப்பிரதேசத்தின் பெட்வா நதியுடன் இணைக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருக்கிறது மத்திய அரசு. அடுத்த 8 ஆண்டுகளில் இந்தப் பணிகள் நிறைவடையுமாம்.
இதனால் என்ன நன்மை?
மத்தியப் பிரதேசம் - உத்தரப்பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களின் மாவட்டங்களையும் உள்ளடக்கிய புந்தேல்கண்ட் பகுதி இதனால் பெரும் பயன் அடையும் என்கிறது அரசு.
அடுத்த 8 ஆண்டுகளில், சுமார் 44,605 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் இந்த திட்டம் மூலம்,
13 மாவட்டங்களில், 10.62 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதியும்,
62 லட்சம் மக்களுக்கு குடிநீர் வசதியும்,
103 மெகாவாட் நீர் மின் உற்பத்தி மற்றும் 27 மெகாவாட் சோலார் மின் உற்பத்தி வசதிகளும் கிடைக்கும் என்கிறது மத்திய அரசு.
நதிநீர் இணைப்பு திட்டங்கள் சாத்தியமாவதில் பெரிய சிக்கலே மாநிலங்களுக்கு இடையேயான புரிந்துணர்வுதான். இதனால்தான் திட்டங்கள் தாமதமாகிக் கொண்டிருந்தன. ஆனால், இந்த திட்டத்தில், கடந்த மார்ச் மாதம்தான், மத்தியப்பிரதேச மற்றும் உத்தரப்பிரதேச முதல்வர்கள் இருவரும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தனர். இதையடுத்தே மத்திய அமைச்சரவையும் தற்போது ஒப்புதல் அளித்திருக்கிறது.
நாட்டின் முதல் நதிநீர் இணைப்பு திட்டம்; நல்ல விஷயம்தானே?
`இல்லை’ என்கின்றனர் சூழலியல் நிபுணர்கள். பொதுவாகவே நதிநீர் இணைப்புத் திட்டங்களை சூழலியாளர்கள் எதிர்ப்பதற்கு சில முக்கியமான காரணங்கள் இருக்கின்றன. அவை,
- நதிநீர் இணைப்பு திட்டங்களுக்காக அழிக்கப்படும் காடுகள்
- அதனால் ஏற்படும் சூழலியல் பாதிப்புகள் / மக்கள் இடப்பெயர்வுகள்
- நதிநீர் இணைப்புத் திட்டத்திற்கு செலவிடுவதைவிடவும், ஏற்கெனவே இருக்கும் நீர்நிலைகளை மேம்படுத்தினால், அது இதை விடவும் பயனுள்ளதாக இருக்கும்; செலவும் மிக மிகக் குறைவு.
- நதிகள் இணைக்கப்பட்டாலும், அரசியல் வாதிகள் சொல்வதுபோல அனைத்து பிரச்னைகளும் தீர்ந்துவிடாது; இதனால் வேறு சில சூழலியல் பாதிப்புகள் ஏற்படும்.
இந்த எல்லா பிரச்னைகளும் கென் - பெட்வா நதிநீர் இணைப்பு திட்டத்திலும் இருக்கின்றன.
இங்கே என்ன பிரச்னைகள் ஏற்படும்?
முதல் பெரிய பிரச்னை பன்னா புலிகள் காப்பகம். மத்தியப் பிரதேசத்தில் ஓடும் கென் நதியில், டௌதான் என்னும் இடத்தில் ஒரு பெரிய அணை கட்டவேண்டும் என்பதும் இந்த கென் - பெட்வா இணைப்பின் ஒரு அங்கம். தேசிய நீர்வள அமைப்பின் கணக்குப்படி, இந்த அணையைக் கட்டினால், சுமார் 9,000 ஹெக்டேர் நிலங்கள் நீரில் மூழ்கும். இதில், 5803 ஹெக்டேர் நிலங்கள், பன்னா புலிகள் காப்பகத்திற்குள் வருகிறது.
சுமார் 23 லட்சம் மரங்கள் அழியும். இது அப்பகுதியில் இருக்கும் புலிகள், பருந்துகள் மற்றும் வன உயிர்கள் அனைத்திற்கும் பேரழிவாக அமையும்.
இதுபோக, கென் நதியில் இருக்கும் உபரிநீரை வைத்துதான் இந்த திட்டமே போடப்பட்டிருக்கிறது. ஆனால், அந்தக் கணக்கீட்டிலேயே தவறு இருக்கின்றது எனச் சொல்கின்றனர் நிபுணர்கள். மேலும் இதற்காக அரசு 18 ஆண்டுகள் பழைய டேட்டாவை பயன்படுத்தியது தெரியவந்திருக்கிறது. இப்படி, எவ்வளவு உபரிநீர் இருக்கிறது என்பதே தெரியாமல் எதற்கு ஒரு திட்டம் என்பது அவர்கள் கேள்வி.
மேலும், இந்த திட்டத்திற்கு மத்திய வனத்துறை அமைச்சகம் அளித்திருந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையையும், உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு செல்லாது என அறிவித்திருந்தது. பல முக்கியமான சூழலியல் பிரச்னைகளை அரசு கருத்தில் கொள்ளவில்லை என வல்லுநர் குழு தெரிவித்திருந்தது. இந்த விவகாரமும், உச்சநீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் இருக்கிறது.
இதுபோன்ற சூழலியல் அபாயங்கள் மிகுந்த திட்டங்களை செயல்படுத்துகையில், மிகுந்த கவனத்தோடு இயங்கவேண்டும் என்பதுதான் சூழலியல் ஆர்வலர்களின் கோரிக்கை; ஆனாலும், அரசுகள் செவிமடுப்பதில்லை. அவசரம் காட்டுகிறார்கள்.
ஏன் இப்படி அவசரப்படுகிறார்கள்?
காரணம், விரைவில் வரவிருக்கும் உ.பி சட்டமன்றத் தேர்தல் 😉.
இப்படி, நதிநீர் இணைப்பு திட்டங்கள் அரசியல் விளம்பரங்களுக்காகப் பயன்படுத்தப்படுவது இது முதல்முறை அல்ல; எப்போதெல்லாம் வறட்சி, விவசாயம் பொய்ப்பது, விவசாயிகள் போராட்டம் என சூழலியல் சார்ந்த பிரச்னைகள் தலைதூக்குகிறதோ, அப்போதெல்லாம் `நதிநீர் இணைப்பு திட்டங்களை’ தீர்வாக முன்வைப்பது அரசியல்வாதிகளின் வழக்கமாக இருக்கிறது.
இப்படித்தான், நாட்டின் முதல் நதிநீர் இணைப்பு திட்டம் எனச் சொல்லி தொடங்கப்பட்ட, கோதாவரி - கிருஷ்ணா நதிநீர் இணைப்பு (போலவரம்) திட்டம் தள்ளிப்போகையில், அதற்கு பதிலாக பட்டிசீமா திட்டத்தைக் கையில் எடுத்து விளம்பரம் செய்தார் சந்திரபாபு நாயுடு. காரணம், விவசாயிகளின் வாக்கு.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், கோதாவரி - காவிரியை இணைக்கும் பணிகளைத் தொடங்கிவிட்டோம் என்றார் அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. காரணம், தமிழக சட்டமன்றத் தேர்தல்.
அந்த வரிசையில் இது யோகி மற்றும் மோடியின் டர்ன்!
இந்தியா
விவசாயிகள் போராட்டம்: அடுத்த கட்டம் என்ன?
தங்களின் 378 நாள் நெடிய போராட்டத்தை முடித்துக்கொண்டு, கடந்த வெள்ளிக்கிழமை முதல் வீடு திரும்ப தொடங்கிவிட்டனர் டெல்லி எல்லைகளில் போராடி வந்த விவசாயிகள். காஸிபூர், சிங்கு, டிக்ரி என மூன்று இடங்களில் பெரியளவில் நடந்துவந்த போராட்டங்களிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விவசாயிகள் வெளியேறிவருகின்றனர். வரும் டிசம்பர் 15-க்குள் அனைவரும் வீடு திரும்பிவிடுவார்கள் என அறிவித்திருக்கிறார் விவசாய சங்கங்களின் பிரதிநிதி ராகேஷ் டிகாயத்.
இதையடுத்து டெல்லி எல்லைகளில் வைக்கப்பட்டிருந்த பேரிகாடுகள் அகற்றப்பட்டு வருகின்றன. அடுத்து வரும் ஜனவரி 15-ம் தேதி விவசாய சங்க பிரதிநிதிகள் ஒன்றுகூடி, தங்கள் கோரிக்கைகள் மீதான அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கவிருக்கின்றனர்.
ஹேக் செய்யப்பட்ட மோடியின் ட்விட்டர் கணக்கு:
பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கானது, நேற்று அதிகாலை 2 மணியளவில் ஹேக் செய்யப்பட்டிருக்கிறது. ஹேக் செய்தவர்கள், ``பிட்காயின் இந்தியாவில் சட்டபூர்வ கரன்சியாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது” என ட்வீட்டும் செய்திருக்கின்றனர். உடனே பிரதமர் அலுவலகம் ட்விட்டர் நிறுவனத்தை தொடர்புகொள்ளவே, பின்னர் கணக்கு மீட்கப்பட்டிருக்கிறது. ``எங்கள் தரப்பில் எவ்வித பாதுகாப்பு குறைபாடுகளாலும் இந்த ஹேக்கிங் சம்பவம் நடைபெறவில்லை” என விளக்கம் அளித்திருக்கிறது ட்விட்டர்.
ஒப்படைக்கப்பட்ட வீரர்கள் உடல்கள்:
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 13 பேரில், நால்வரின் உடல்கள் மட்டுமே கடந்த வெள்ளிக்கிழமை வரை அடையாளம் காணப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், DNA பரிசோதனைகள் முடிந்து மற்ற 9 பேரின் உடல்களும் சனிக்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளன. அதையடுத்து குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு, ராணுவ மரியாதையுடன் இறுதிச்சடங்குகள் நடந்திருக்கின்றன. விபத்தில் உயிர்பிழைத்த ஒரே வீரரான குரூப் கேப்டன் வருண் சிங், பெங்களூரு மருத்துவமனையில் இன்னும் தீவிர சிகிச்சையில் இருக்கிறார்.
கோவா தேர்தலில் பெண் வாக்காளர்களைக் கவர போட்டி:
கோவாவில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க அரசு, கிரிஹ ஆதார் திட்டம் மூலம் மாதந்தோறும் 1.5 லட்சம் குடும்பங்களுக்கு பெண்களுக்காக 1,500 ரூபாய் வழங்கி வருகிறது. இந்நிலையில், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் கிரிஹ லக்ஷ்மி என்னும் திட்டம் மூலம் 3.5 லட்சம் குடும்பங்களுக்கு பெண்களுக்காக மாதம் 5,000 ரூபாய் வழங்குவோம் என அறிவித்திருக்கிறது திரிணமுல் காங்கிரஸ். அண்மையில், அரவிந்த் கெஜ்ரிவாலும் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால், மாதம் பெண்களுக்கு 2,500 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இப்படியாக பெண் வாக்காளர்களைக் கவர அங்கு போட்டி கடுமையாகியிருக்கிறது.
இலங்கை ராணுவ அதிகாரிகள் மீது தடைவிதித்த அமெரிக்கா:
- இலங்கை கடற்படை அதிகாரி சந்தனா ஹெட்டியராச்சி, ராணுவ அதிகாரி சுனில் ரத்னநாயகே ஆகிய இருவர் மீதும், தமிழ் மக்கள் மீது நிகழ்த்திய மனித உரிமை வன்கொடுமை குற்றங்களுக்காக, இவர்களும் இவர்களின் குடும்ப உறுப்பினர்களும் அமெரிக்காவில் நுழைய தடை விதித்திருக்கிறது அந்நாடு.
- திரிகோணமலையில் 11 பேரை கஸ்டடியில் வைத்து கொலைசெய்த குற்றச்சாட்டு சந்தனா மீதும், 4 குழந்தைகள் உள்பட 8 பேரைக் கொன்ற வழக்கு சுனில் மீதும் இருந்தது. இந்த வழக்கில் சுனிலுக்கு இலங்கை நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்தது. ஆனால், 2020-ல் ராஜபக்சேவால் மன்னிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்தார். தற்போது இலங்கை ராணுவத்தின் தளபதியாக இருக்கும், ஷவேந்திர செல்வா மீதே 2020-ல் அமெரிக்கா இதேபோல போரின் போது செய்த மனித உரிமைக் குற்றங்களுக்காக தடைவிதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகம்
போக்குவரத்து ஊழியர்கள் மீதான நடவடிக்கை வாபஸ்:
கன்னியாகுமரி, வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பிய பேருந்திலிருந்து நாடோடி பழங்குடியின குடும்பத்தினரை போக்குவரத்து ஊழியர்கள் இறக்கிவிட்ட வீடியோ அண்மையில் வைரலானது. உடனே ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதுகுறித்து நடத்திய விசாரணையில், அந்தக் குடும்பத்தினர் மது அருந்திவிட்டு, தகராறு செய்ததாலேயே ஊழியர்கள் இறக்கிவிட்டது தெரியவந்திருக்கிறது. இதையடுத்து அவர்கள் மீதான நடவடிக்கை ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
வீடியோவை ஆய்வு செய்யும் காவல்துறை:
முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் கடந்த வாரம் குன்னூரில் விபத்துக்குள்ளானதின் ஒரே நேரடி பதிவாக, புகைப்படக்கலைஞர் ஒருவர் மொபைலில் எடுத்திருந்த வீடியோ வெளியானது. ஹெலிகாப்டர் பனிமூட்டத்தில் மறைவதுபோல முடிந்தது அந்த வீடியோ. அந்த வீடியோவின் உண்மைத் தன்மையை ஆராய, அந்த மொபைலை தடவியல் ஆய்வுக்காக அனுப்பியிருக்கின்றனர் தமிழக காவல்துறையினர். மேலும், தடைசெய்யப்பட்ட காட்டேரி வனப்பகுதிக்குள் அன்று சென்றது ஏன் எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குரங்குக்கு முதலுதவி அளித்த மனிதர்: தெருநாய்களால் தாக்குதலுக்குள்ளாகி, மரத்திலிருந்து கீழே விழுந்த குரங்கு ஒன்றுக்கு முதலுதவி (CPR) செய்து, அதன் உயிரைக் காப்பாற்றியிருக்கிறார் பெரம்பலூரைச் சேர்ந்த பிரபு. இவரின் முதலுதவிக்குப் பின் குரங்கு உயிர்த்தெழவே, பின்னர் கால்நடை மருத்துவரிடம் உடனே அழைத்துச் சென்றும் சிகிச்சையளித்திருக்கிறார்.
A 38-year-old man from #Perambalur tried to resuscitate a wounded monkey by breathing into its mouth. @NewIndianXpress @xpresstn #humanitywithheartபிரபு குரங்குக்கு முதலுதவி செய்யும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல்.
தமிழகத்தில் நேற்று பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை: 674
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை: 13
இன்று மற்றும் நாளைக்கான வானிலை முன்னறிவிப்பு: ☔️👇

நேற்று மட்டும் 5 ஓமிக்ரான் தொற்று பாதிப்பு உறுதியானதையடுத்து, இந்தியாவின் ஓமிக்ரான் பாதிப்பின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்திருக்கிறது. கேரளாவில் நேற்று முதல் தொற்று பதிவாகியிருக்கிறது.
நேற்று முன்தினம் தமிழகம் முழுக்க நடத்தப்பட்ட மெகா தடுப்பூசி முகாமில் 20.45 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருக்கும் கே.வி.சுப்பிரமணியனின் பதவிக்காலம் விரைவில் முடியவிருக்கிறது. இதையடுத்து அந்தப் பதவியில் பமி துவா, பூனம் குப்தா, சஞ்சீவ் சன்யால் ஆகிய மூவரில் ஒருவர் நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது. இதில் இடம்பெற்றுள்ள சஞ்சீவ் சன்யால், தற்போதைய அரசின் முதன்மை பொருளாதார ஆலோசகராக இருப்பவர்.
- வங்கி டெபாசிட் இன்ஷூரன்ஸ் உயர்வு:
வங்கியில் டெபாசிட் செய்திருக்கும் பணத்திற்கு இதுவரை ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே இன்ஷூரன்ஸ் தொகையாக இருந்தது. இதன்மூலம் வங்கிகள் திடீரென திவாலானலோ அல்லது மூடப்பட்டாலோ, வாடிக்கையாளர்கள் ஒரு லட்சத்திற்கு மேல் எவ்வளவு முதலீடு செய்திருந்தாலும் ஒரு லட்சம் மட்டுமே வழங்கப்படும் என இருந்தது. இதை தற்போது 5 லட்ச ரூபாயாக உயர்த்தியிருக்கிறது மத்திய அரசு. வங்கிகள் மூடப்பட்டால் 90 நாள்களுக்குள் வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் இதை வழங்கவேண்டும்.
``இந்தியாவில் தற்போது 252.6 கோடி டெபாசிட் கணக்குகள் இருக்கின்றன. இதில் 247.8 கணக்குகள் 5 லட்சம் ரூபாய்க்கும் குறைவான டெபாசிட்டையே கொண்டிருக்கின்றன. எனவே இந்தப் புதிய இன்ஷூரன்ஸ் திட்டம் மூலம் 98% பயனாளிகள் பலனடைகிறார்கள்” எனத் தெரிவித்திருக்கிறார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்.
📣 Note: The Subject Line (TSL) நியூஸ்லெட்டரின் இந்த மெயில் உங்களின் Promotions Tab-ல வந்திருந்தா, அதை அப்படியே Move பண்ணி, Primary Tab-க்கு மாத்திடுங்க. இதன்மூலம் தினமும் TSL-ஐ நீங்க மிஸ் பண்ணாம படிக்கமுடியும். ஒருவேளை இந்த மெயில் உங்க நண்பர்கள் மூலம் வந்திருந்தா, தினமும் உங்க இன்பாக்ஸிற்கு நேரடியாக வர, சப்ஸ்கிரைப் பண்ணிடுங்க. ✅
அவ்வளவுதான்!
The Subject Line-னோட இன்னைக்கு அப்டேட்ஸ் உங்களுக்குப் பிடிச்சிருக்கும்னு நம்புறேன். பிடிச்சிருந்தா கீழ இருக்க பட்டன் மூலமா உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க… இன்னும் ஏதாச்சும் இந்த TSL-ல் மாத்தணும்னா எனக்கு மெசேஜ் பண்ணுங்க! உங்க கருத்துகள் எங்களுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். 🤞
திரும்ப நாளைக்கு காலைல 7 மணிக்கு சந்திப்போம்!
Have a Nice day! ☕️
The Subject Line-ஐ சமூக வலைதளங்களில் பின்தொடர: