⚠️ விவசாயிகள் கொலை வழக்கு: பா.ஜ.க-விற்கு முற்றும் நெருக்கடி!
இன்றைய TSL-ன் பிற ஹைலைட்ஸ்: உயர்ந்த மொத்த விலை பணவீக்கம் | ஒருநாள் தொடரிலிருந்து விலகுகிறாரா கோலி? | கட்டணங்களை குறைத்த நெட்ஃபிளிக்ஸ் | தமிழக அரசு தொடங்கிய Internet De-addition மையம் | Reading Time: ⏱ 4 Mins
ஹாய், ஹலோ… வணக்கம் 👋
💌 TSL-க்கு உங்களின் உதவி வேணும்; ரொம்ப சின்ன விஷயம்தான். அது என்னனு இந்த TSL-ன் இறுதியில் இருக்கு. மறக்காம அதைப் பண்ணிடுங்க; அதற்கு முன் இன்றைய அப்டேட்ஸைப் பார்த்திடலாம்.
இந்திய அளவில் மற்றும் தமிழக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய இரண்டு விவகாரங்களில் அடுத்தகட்ட தகவல்கள் நேற்று வெளிவந்திருக்கின்றன. முதலாவது,
1️⃣ லக்கிம்பூர் கெரி விவசாயிகள் கொலை வழக்கு:
உத்தரப்பிரதேச மாநிலம், லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் கடந்த அக்டோபர் 3-ம் தேதி 4 விவசாயிகள் மற்றும் ஒரு பத்திரிகையாளர் கார் ஏற்றிக் கொல்லப்பட்டனர். அதன்பின் ஏற்பட்ட கலவரத்தில், மூவர் பலியாயினர். இந்த விபத்தை ஏற்படுத்திய மூன்று SUV-களும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஷ்ராவின் மகனான, ஆஷிஷ் மிஷ்ராவுக்கு சொந்தமானவை.
உத்தரப்பிரதேசம் மட்டுமன்றி, நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக, அம்மாநில சிறப்பு புலனாய்வுக்குழு கடந்த இரண்டு மாதங்களாக விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் இந்த புலனாய்வுக் குழுவானது, நேற்று லக்கிம்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு விண்ணப்பம் தாக்கல் செய்திருக்கிறது. அதில்,
``இந்த விபத்தானது, கவனக்குறைவால் நடந்த ஒன்று அல்ல; அவர்களை கொலை செய்யவேண்டுமென்றே திட்டமிட்டு செய்த சதி; எனவே இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 13 பேரையும் கொலைத்திட்டம் மற்றும் ஆயுதங்களைப் பயன்படுத்தியதற்கான வழக்குகளில் புதிதாக சேர்க்கவேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை மாவட்ட நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டுள்ளது.
ஆரம்பத்திலிருந்தே, ``இந்தக் கொலை வழக்கில் அஜய் மிஷ்ராவுக்கும் தொடர்பு இருக்கிறது. எனவே அவரை அமைச்சரவையிலிருந்து நீக்கவேண்டும்” என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். ஆனாலும், அவர் நீக்கப்பட்டவில்லை.
மேலும், ``விவசாயிகள் அன்றைக்கு கலவரத்தில் ஈடுபட்டதாலேயே, இந்த விபத்து நடந்தது” என அஜய் மிஷ்ராவும் விளக்கம்கூறி விவசாயிகள் மீதே பழிபோட்டு வந்தார். இந்நிலையில்தான், சிறப்பு புலனாய்வுக் குழுவின் இந்த அறிக்கையானது அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.
பா.ஜ.க-விற்கு முற்றும் நெருக்கடி
வேளாண் சட்ட விவகாரம், இந்த லக்கிம்பூர் கெரி சம்பவம் ஆகியவற்றால் உத்தரப்பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் மாநில விவசாயிகள் பா.ஜ.க மீது கடும் கோபத்தில் இருந்தனர். அண்மையில் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற்று இழந்த செல்வாக்கை மீட்க நினைத்தது பா.ஜ.க.
ஆனால், தற்போது இந்த அறிக்கையால் இன்னும் நெருக்கடி முற்றியிருக்கிறது.
2️⃣ மாணவர் மணிகண்டன் விவகாரம்
ராமநாதபுரம் மாவட்டம், கீழத்தூவல் காவல் நிலைய போலீஸாரால் கடந்த வாரம் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட கல்லூரி மாணவர் மணிகண்டன், வீடு திரும்பிய சில மணி நேரங்களிலேயே மரணம் அடைந்தது, பலத்த சந்தேகங்களைக் கிளப்பியது. காவல் துறையினர் அடித்ததால்தான் அவர் மரணமடைந்தார் எனக் குற்றம்சாட்டினர் மணிகண்டனின் பெற்றோர்.
இந்நிலையில், மணிகண்டனின் உடற்கூராய்வுக்குப் பின் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி தாமரைக்கண்ணன், ``மணிகண்டன் விஷம் அருந்தியதால்தான் இறந்திருக்கிறார்” எனத் தெரிவித்திருக்கிறார்.
மேலும், ``மணிகண்டன் காவல்துறையினர் தாக்கியதால் இறக்கவில்லை. அவரின் உடலில் எந்தக் காயமும் இல்லை. விஷ பாட்டில் ஒன்றும் மணிகண்டனின் வீட்டில் கைப்பற்றப்பட்டிருக்கிறது. அவரை காவல்நிலையத்துக்கு அழைத்து வந்ததும், விசாரணை நடைபெற்றதும் உண்மை. மறுநாள் வந்து ஆவணங்களை மட்டுமே சமர்ப்பிக்கச் சொன்னோம். மணிகண்டனின் மரணம் தொடர்பாக பெற்றோர்கள் கூறும் புகாருக்கு நான் விளக்கம் அளிக்க முடியாது." என்றும் தெரிவித்திருக்கிறார்.
இந்த விவகாரத்தில், காவல் துறையின் மீது உரிய விசாரணை நடத்தவேண்டும் என தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சிகள் அனைத்துமே வலியுறுத்தியிருந்து குறிப்பிடத்தக்கது.
இந்தியா
உயர்ந்த மொத்தவிலை பணவீக்கம் 📈
கடந்த அக்டோபர் மாதம் 12.54% ஆக இருந்த நாட்டின் மொத்த விலை பணவீக்கமானது (Wholesale price-based inflation - WPI), நவம்பரில் 14.23% ஆக உயர்ந்திருக்கிறது. இது 16 ஆண்டுகளில் இல்லாத உயர்வு ஆகும். உற்பத்தியாளர்களை பாதிக்கும், மொத்த விலை பணவீக்கம் உயர்ந்தால், அடுத்த சில வாரங்களில் பொதுமக்கள் பயன்படுத்தும் பொருள்களின் விலையும் (உணவுப்பொருள்கள், கட்டுமானப் பொருள்கள், எலக்ட்ரானிக் பொருள்கள் உள்ளிட்டவை) உயரும்.
இதனால் விலைவாசி உயர்ந்து சில்லறை பணவீக்கமும் உயரும். தற்போது கொரோனா காரணமாக பொருளாதாரம் கொஞ்சம் மந்தமாக இருப்பதால், இந்த விலைவாசி உயர்வு துறைக்கு துறைக்கு மாறுபடலாம்; தள்ளிப்போகலாம். ஆனால், உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் சந்திக்கும் இந்த விலைவாசி உயர்வு எப்படியும், இறுதியாக பொதுமக்களை பாதித்தே தீரும். அதனால்தான், இந்த WPI உயர்வு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
எண்ணெய் மற்றும் எரிவாயு, உலோகங்கள், தாதுப்பொருள்கள், உணவுப்பொருள்கள் ஆகியவற்றின் விலை உயர்வு காரணமாகவே WPI அதிகரித்திருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.
ராணுவத்துடனான உறவைத் துண்டிக்கும் மோன் கிராம மக்கள்:
நாகலாந்தின் மோன் மாவட்டத்தில் கடந்த 4-ம் தேதி 14 அப்பாவிகள் ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதையடுத்து, அப்பகுதியில் பெரும்பான்மை சமூகமாக வாழும் நாகா கோன்யக் பழங்குடியினர், தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை, இந்திய ராணுவத்திற்கு எவ்வித ஒத்துழைப்பும் வழங்குவதில்லை என முடிவு செய்துள்ளனர்.
அப்பாவிகளை சுட்ட ராணுவ வீரர்களுக்கு தண்டனை வழங்கும் வரை, இந்திய ராணுவத்தினர் மோன் கிராமத்தில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவதற்கு தடை விதித்துள்ளனர். மேலும், ராணுவத்துடன் அப்பகுதி மக்கள் செய்துள்ள நில மற்றும் கட்டட ஒப்பந்தங்களை ரத்து செய்யவும், அப்பகுதி இளைஞர்கள் யாரும் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம்களில் கலந்துகொள்ளக்கூடாது எனவும் உத்தரவிட்டிருக்கின்றனர். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டையும், குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும்வரை பெற்றுக்கொள்ளப்போவதில்லை எனத் தெரிவித்திருக்கின்றனர். இதையடுத்து, அரசுக்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையேயான உறவு மேலும் சிக்கலாகியிருக்கிறது.
தமிழகம்
அரசு மருத்துவமனையில் இன்டர்நெட் டி-அடிக்ஷன் மையம்:
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில், முதியோர்களுக்கான அறிவுத்திறன் மேம்பாடு மையம், பிரசவத்திற்குப் பிந்தைய மன அழுத்தத்திற்கான மையம் உள்பட 5 சிறப்பு மையங்கள் நேற்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டன. அதில், இன்டர்நெட் டி-அடிக்ஷன் மையமும் ஒன்று. ஸ்மார்ட்போன் மற்றும் இணையத்திற்கு அடிமையானவர்களுக்கு இங்கு ஆலோசனை வழங்கப்படுமாம். விரைவில் இந்த வசதி அனைத்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் விரிவுபடுத்தப்படவிருக்கிறது.
தமிழகத்தில் நேற்று பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை: 649
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை: 9
இன்று மற்றும் நாளைக்கான வானிலை முன்னறிவிப்பு ☔️👇
சிறார்களுக்கான நோவாவாக்ஸ் கோவிட் தடுப்பூசியை இன்னும் ஆறு மாதத்தில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக சீரம் இன்ஸ்டிடியூட்டின் தலைவர் அடார் பூனவாலா தெரிவித்திருக்கிறார்.
முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத்தின் மரணத்தையும், தமிழக அரசையும் குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய கருத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார் வலதுசாரி யூடியூபர் மாரிதாஸ். இதையடுத்து அவர்மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாகக் கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கை நேற்று ரத்து செய்து உத்தரவிட்டிருக்கிறது மதுரை உயர்நீதிமன்ற கிளை. மற்றொரு ஃபோர்ஜரி வழக்கும் அவர்மீது இருப்பது குறிப்பிடத்தக்கது.
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். பா.ஜ.க-விற்கு எதிரான எதிர்க்கட்சிகளின் கூட்டணி பற்றியும், இருமாநில விவகாரங்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டதாக தகவல்.
18 வயதுக்கு மேற்பட்ட இந்தியர்களில், நேற்று வரை 55.52% பேருக்கு முழுமையாக இரண்டு டோஸ் கோவிட் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன. 87% பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி மட்டும் செலுத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேலைச் சேர்ந்த NSO நிறுவனத்தின் பெகாசஸ் மென்பொருளானது உலகம் முழுக்க அரசியல் தலைவர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்களை உளவுபார்க்க பல்வேறு நாட்டு அரசாங்கங்களால் பயன்படுத்தப்பட்டு, அது மிகப்பெரும் சர்ச்சையானது. இதையடுத்து அமெரிக்கா அந்நிறுவனத்தை தடை செய்தது. இத்துடன் உலகம் முழுக்க எதிர்ப்புகளையும் சந்தித்து வருகிறது இந்நிறுவனம். எனவே, நிறுவனத்தை மொத்தமாக வேறு யாரிடமாவது விற்றுவிடலாமா அல்லது சர்ச்சைக்குரிய பெகாசஸ் யூனிட்டை மட்டும் மூடிவிடலாமா எனத் தீவிரமாக ஆலோசித்து வருகிறதாம் NSO.
2022-23-ம் ஆண்டிற்கான பொது பட்ஜெட் தயாரிக்கும் பணிகளைத் தொடங்கும் பொருட்டு, நாளை முதல் அதற்கான ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்கவிருக்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். முதல் கட்டமாக வேளாண் துறை சார்ந்தவர்களை சந்திக்கிறார்.
``பாலியல் தொழிலாளர்களும் இந்நாட்டின் குடிமக்களே; எனவே, அவர்களுக்கு ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டைகளை வழங்கும் பணிகளை உடனே தொடங்குங்கள்” என நேற்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.
கடந்த 3 நிதியாண்டுகளில் மட்டும் பெட்ரோல் மற்றும் டீசல் மீது விதிக்கப்பட்ட வரிகளின் மூலம், மத்திய அரசு 8 லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டியிருப்பதாக நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
``ஓமிக்ரான் வேரியன்ட் இதுவரை 77 நாடுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய வேரியன்ட்களில் நாம் காணாத அளவுக்கு இது மிகவும் வேகமாகப் பரவுகிறது. எனவே அலட்சியமாக இல்லாமல், தடுப்பூசி, சமூக இடைவெளி, மாஸ்க் என அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு கவனமுடன் இருங்கள்” என நேற்று எச்சரித்திருக்கிறார் WHO-வின் இயக்குநர் டெட்ரோஸ்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி விளையாட மாட்டார் என நேற்று காலையிலிருந்து தகவல்கள் பரவிக்கொண்டிருந்தன. ரோஹித் ODI கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த நிலையில், இப்படி தகவல்கள் வெளியாயின. ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர் பி.சி.சி.ஐ நிர்வாகிகள். ``இதுவரை அப்படி கோலி எங்களிடம் எந்த தகவலும் சொல்லவில்லை. எனவே அப்படி வரும் செய்திகள் உண்மையல்ல” என விளக்கமளித்திருக்கின்றனர்.
- நெட்ஃபிளிக்ஸ் கட்டணங்கள் குறைப்பு: இந்தியாவில் கால் பதித்ததிலிருந்து, முதல்முறையாக சப்ஸ்கிரிப்ஷன் கட்டணங்களின் விலையைக் குறைத்திருக்கிறது நெட்ஃபிளிக்ஸ். புதிய கட்டண விவரம் 👇
- வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்:
நாளை மற்றும் நாளை மறுநாள் ஒருங்கிணைந்த வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பினர், பொதுத்துறை வங்கிகளை தனியார் மயப்படுத்துவதை எதிர்த்து வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் சில வங்கி சேவைகள் பாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
SBI, RBL, PNB மற்றும் Central Bank ஆகிய 4 வங்கிகளின் சேவைகள் இந்த வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்படவிருக்கின்றன.
🔴 மேலே சொன்ன அந்த உதவி இதுதான் 👇
இதுவரைக்கும் TSL-ஐ தொடர்ந்து படிச்சிட்டு வர்றீங்க; எனவே இதுபற்றிய உங்க கருத்தை தெரிஞ்சுக்க விரும்புறோம். அதனால், இந்த லிங்கை க்ளிக் பண்ணி உங்களோட பதிலை பதிவு பண்ணிடுங்க. TSL-ஐ மேம்படுத்த இது எங்களுக்கு உதவியா இருக்கும் 🤗
அவ்வளவுதான்!
The Subject Line-னோட இன்னைக்கு அப்டேட்ஸ் உங்களுக்குப் பிடிச்சிருக்கும்னு நம்புறேன். பிடிச்சிருந்தா கீழ இருக்க பட்டன் மூலமா உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க… இன்னும் ஏதாச்சும் இந்த TSL-ல் மாத்தணும்னா எனக்கு மெசேஜ் பண்ணுங்க! உங்க கருத்துகள் எங்களுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். 🤞
திரும்ப நாளைக்கு காலைல 7 மணிக்கு சந்திப்போம்!
Have a Nice day! ☕️
The Subject Line-ஐ சமூக வலைதளங்களில் பின்தொடர: