🌈 காவல்துறையினருக்கு புதிய விதி; தமிழக அரசின் நடவடிக்கை ஏன் முக்கியம்?
Today Edition Highlights: இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் பாலிசி | மத்திய அரசை விளாசிய மன்மோகன் சிங் | உயரும் விமான கட்டணங்கள் | சாமியாரைத் தேடி வருமான வரித்துறை | Reading Time: ⏱ 5 Mins
Good Morning ☕️
இன்றைய தினத்தின் டாப் அப்டேட்ஸ் இதோ…
தமிழக காவல்துறையின் நடத்தை விதிமுறைகளில் நேற்று புதிய திருத்தம் ஒன்றைக் கொண்டுவந்திருக்கிறது தமிழக அரசு. LGBTIQ+ (Lesbian, Gay, Bisexual, Transgender, Queer, Intersex, Asexual) சமூகத்தினரின் நலனுக்கான பணிகளில், மாநில அரசு சரியான திசையில் நகர்வதற்கான அறிகுறி இது. இந்த திருத்தம் ஏன் முக்கியமானது என்பதை இன்றைய TSL-ல் பார்ப்போம்.
என்ன திருத்தம் இது?
காவல்துறையினர் நடத்தை விதிகளில் புதிதாக 24-C என்ற பிரிவைச் சேர்த்திருக்கிறது தமிழக அரசு.
இதன்படி, காவல்துறையினர் LGBTIQ+ சமூகத்தைச் சேர்ந்தவர்களையோ, LGBTIQ+ சமூகத்திற்காகப் பணியாற்றுபவர்களையோ எந்த விதத்திலும் துன்புறுத்தக்கூடாது. அதேசமயம், அவர்களிடம் முறையான வழக்கு விசாரணைகளை மேற்கொள்ளவோ, சட்ட நடவடிக்கைகள் எடுக்கவோ தடையில்லை. இந்த விதிமுறையை மீறினால் தண்டனை உறுதி. இதுதான் அந்தத் திருத்தம் சொல்லும் செய்தி.
இது ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?
இதைப் புரிந்துகொள்ள, கடந்தாண்டு ஜூன் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பைப் பற்றி அறிந்துகொள்வது அவசியமாகிறது. அது என்ன? வழக்கின் சுருக்கம் இதுதான் 👇
மதுரையைச் சேர்ந்த இரண்டு தன்பாலீர்ப்பு பெண்கள் (Lesbian), தங்கள் காதல் காரணமாக சென்னைக்கு இடம்பெயர்கின்றனர். ஆனால், இதற்கு இருவரது வீட்டிலும் எதிர்ப்பு எழவே, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைக் காணவில்லை என காவல்துறையில் புகார் அளிக்கின்றனர். இதையடுத்து காவல்துறையினர் அந்த தம்பதியை வீடுதேடி வந்து விசாரிக்கின்றனர். அவர்களுக்கு அடைக்கலம் அளித்த ஒரு வழக்கறிஞரையும் அச்சுறுத்துகின்றனர்.
இதைத் தொடர்ந்து, பாதுகாப்பு கருதி, அவர்கள் இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தை நாட, இந்த வழக்கை தீர விசாரித்து மிக முக்கியமான தீர்ப்பொன்றை எழுதினார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். இந்த இரு பெண்களின் பிரச்னை என மட்டும் சுருக்காமல், மொத்த LGBTIQ+ சமூகத்தினரும் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கும் தீர்வைத் தேடச்சொன்னது அந்த தீர்ப்பு.
திருநர் சமூகத்திற்கு வழங்கப்படும் அறிவியல்பூர்வமற்ற போலி மருத்துவத்தை தடைசெய்யச் சொன்னது, காவல்துறையினரிடமிருந்து LGBTIQ+ சமூகத்திற்கு பாதுகாப்பு வழங்கச் சொன்னது, மருத்துவ படிப்புகளில் LGBTIQ+ சமூகத்திற்கு எதிரான பாடங்களை நீக்கச்சொன்னது எனப் பல்வேறு அம்சங்கள் அதில் இடம்பெற்றிருந்தன.
சட்டமியற்றுபவர்கள் LGBTIQ+ சமூகத்தின் பிரச்னைகளைப் புரிந்துகொண்டு, காவல்துறையிடமிருந்து அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு எதிராக ஒரு சட்டம் இயற்றவேண்டும் எனவும் அப்போது குறிப்பிட்டிருந்தார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். அதன்படிதான், நேற்று தமிழக அரசு சட்டத்திருத்தம் மேற்கொண்டு விதிமுறைகளில் மாற்றம் செய்திருக்கிறது.
இதனால் LGBTIQ+ சமூகத்தினருக்கு என்ன நன்மை?
மேலே பார்த்த தம்பதிகளின் உதாரணத்தையே எடுத்துக்கொள்வோம். அந்த இடத்தில் வழக்கமான ஆண் - பெண் காதல் என்றால் காவல்துறை என்ன செய்திருக்கும்? 18 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்து, சுய விருப்பத்தின்பேரில் வீட்டைவிட்டு வெளியேறியிருந்தால், சட்டப்படி எதுவும் செய்யாமல் விட்டிருக்கும் (சட்டத்திற்கு வெளியே நடக்கும் கட்டப்பஞ்சாயத்துகள் விதிவிலக்குகள்).
ஆனால், LGBTIQ+ சமூகத்தினருக்கு இப்படி நடப்பதில்லை. அவர்களின் பெற்றோரின் விருப்பத்தின்பேரிலோ அல்லது தாமாகவோ, காவல்துறையினர் தேவையற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். மிரட்டுவது, கட்டாயமாகப் பெற்றோருடன் அனுப்பிவைப்பது, துன்புறுத்துவது போன்ற செயல்களையும் செய்கின்றனர்.
இதுபோக LGBTIQ+ செயற்பாட்டாளர்களும் அவ்வப்போது தங்கள் பணிகளுக்காக காவல்துறையின் துன்புறுத்தல்களுக்கு ஆளாவது நடக்கிறது. எனவேதான், காவல்துறையினரின் அத்துமீறல்களிலிருந்து LGBTIQ+ சமூகத்தினரை பாதுகாக்க சட்டமியற்றவும், அவர்களுக்கு LGBTIQ+ சமூகத்தினர் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உத்தரவிட்டிருந்தார் நீதிபதி.
``LGBTIQ+ சமூகம் சந்திக்கும் ஒடுக்குமுறைகளை, அவர்கள் மீதான நம் புரிதலின்மையும், அறியாமையும் வைத்து ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது” எனவும் தெரிவித்திருந்தார்.
அந்தவகையில் காவல்துறையினரை எச்சரிக்கும் வகையில் முதல் முயற்சியை எடுத்திருக்கிறது தமிழக அரசு. இப்படியொரு சட்டத்திருத்தம் செய்திருப்பது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறையும்கூட.
அடுத்து என்ன?
சட்டத்தோடு சேர்த்து LGBTIQ+ சமூகத்தினரை கையாள காவல் துறையினருக்கு பயிற்சிகளும் வழங்கவேண்டும் என்பது அடுத்த எதிர்பார்ப்பு. ஆனால், இதைத்தாண்டியும் இன்னும் நிறைய இருக்கின்றன.
``தன்பாலின உறவு என்பது குற்றமல்ல” என 2018-ம் ஆண்டு மிக முக்கியமான தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம். இது அவர்களை `குற்றவாளி’ என்ற பார்வையிலிருந்து மட்டும்தான் விடுவித்தது. (இன்னமும்கூட அவர்களின் திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் இல்லை.)
இந்த சமூகத்தில் அனைத்துவிதமான ஒடுக்குமுறைகளிலிருந்தும் பால்புதுமையினரைக் (LGBTIQ+) காப்பது, கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் உரிய பிரதிநிதித்துவம் பெறச் செய்வது, அனைத்து இடங்களிலும் அவர்களுக்கான சமவாய்ப்பை உறுதிசெய்வது ஆகியவையே முக்கியமான அடுத்த கட்டங்கள்.
அந்த திசையை நோக்கி விரைவில் அனைத்து மாநில அரசாங்கங்களும், மத்திய அரசும் நடைபோடத்தொடங்கும் என நம்புவோம்! 🌈
1. என்ன சொன்னார் சிங்கப்பூர் பிரதமர்?
சிங்கப்பூர் நாடாளுமன்ற விவாதத்தின்போது, அந்நாட்டு பிரதமர் லீ ஹிசன் லூங் பேசிய விஷயங்கள் இந்தியாவில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கின்றன. நாட்டின் ஜனநாயக நிலை பற்றி ஓரிடத்தில் குறிப்பிட்டுப் பேசிய அவர்,
``ஒரு தேசத்தை அதன் விடுதலையிலிருந்து தொடங்கி, கொஞ்சம் கொஞ்சமாக கட்டமைத்த தலைவர்கள் துணிச்சலானவர்களாகவும், மிகச்சிறந்த மனிதர்களாகவும் இருந்தனர். இஸ்ரேலின் டேவிட் பென் குரியன், இந்தியாவின் நேரு போன்றவர்கள் அப்படிப்பட்டவர்களே. ஆனால், காலம் மாற மாற அந்த நாடுகளில் நிலைமையும் மாறியிருக்கிறது. இன்று, நேருவின் இந்தியாவில் 50%-க்கும் மேற்பட்ட எம்.பி-க்கள் மீது குற்றவழக்குகள் நிலுவையில் இருக்கின்றன” எனப் பேசினார்.
இதில், நேருவைப் புகழ்ந்து பேசியதை வைத்தும், அண்மையில் பிரதமர் மோடி நேருவை விமர்சித்ததை வைத்தும் காங்கிரஸ் கட்சியினர் பா.ஜ.க-வை விமர்சித்து வந்தனர்.
ஆனால் இன்னொருபுறமோ, லூங்கின் கமென்ட்களால் கடுப்பான மத்திய அரசு, சிங்கப்பூர் தூதரகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. `` இந்திய எம்.பி-க்கள் குறித்த சிங்கப்பூர் பிரதமரின் கருத்துகள் தேவையற்றவை எனவும், இதுகுறித்து அந்நாட்டிடம் விளக்கம் கேட்கப்படும்” எனவும் தெரிவித்திருக்கிறது இந்திய வெளியுறவுத்துறை.
2. யார் அந்த சாமியார்?
முகம் தெரியாத ஓர் இமயமலை சாமியாரிடம், NSE பங்குச்சந்தையின் ரகசியங்கள் அனைத்தையும் பகிர்ந்துகொண்டவர் அதன் முன்னாள் சி.இ.ஓ, சித்ரா ராமகிருஷ்ணன். இவர்மூலம், NSE-ல் அதிக ஆதாயம் அடைந்த ஆனந்த் சுப்ரமணியம்தான் சாமியாராக சித்ராவை ஏமாற்றியிருக்கிறார் என்றது செபியின் விசாரணை அறிக்கை.
ஆனாலும், ஆனந்த்தான் குற்றவாளி என்பதற்கு எந்த ஆதாரங்களையும் அதில் வெளியிடவில்லை. இந்நிலையில் ஆனந்த் மற்றும் சித்ரா ராமகிருஷ்ணன் ஆகிய இருவரது வீடுகளிலும் நேற்று வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தினர்.
இந்த ரெய்டில் கிடைக்கும் ஆவணங்களை சேகரித்து, சித்ரா மற்றும் ஆனந்தின் பணப்பரிமாற்றங்களை வைத்தும், அந்த சாமியார் பயன்படுத்திய மின்னஞ்சல் முகவரியை வைத்தும், கூடிய விரைவில் அந்த சாமியார் யார் என்பதைக் கண்டறிய திட்டமிட்டிருக்கிறது வருமான வரித்துறை.
3. தேசிய ஹைட்ரஜன் பாலிசி எதற்காக?
எப்படி வீட்டுக்குத் தேவையான மின்சாரத்தை சூரிய ஒளி, காற்றாலை என புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் உற்பத்தி செய்து, பசுமை இல்ல வாயுக்களைக் குறைக்கிறோமோ… அதேபோல தொழிற்சாலைகளுக்குத் தேவையான ஹைட்ரஜனையும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் தயார் செய்து, பசுமை இல்ல வாயுக்களைக் குறைக்கவேண்டும் என்பது அரசின் இலக்கு. அதில் ஒரு திட்டம்தான் பசுமை ஹைட்ரஜன்.
பொதுவாக ஹைட்ரஜனானது, பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலைகளிலும், அமோனியாவானது உரத் தொழிற்சாலைகளிலும் பயன்பட்டு வருகிறது. ஆனால், இப்போது பயன்படுத்தப்படுபவை இயற்கை எரிவாயு மற்றும் நாப்தாவிலிருந்து தயாரிக்கப்படும் Grey Hydrogen. இதுவே புதுப்பிக்கத்தக்க ஆற்றலிலிருந்து தயாரிக்கப்பட்டால் அது, Green Hydrogen (பசுமை ஹைட்ரஜன்).
இந்த பசுமை ஹைட்ரஜனின் உற்பத்தியைப் பெருக்கவும், தொழிற்சாலைகளில் அதன் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் முதல்முறையாக, நாட்டின் தேசிய ஹைட்ரஜன் பாலிசியை நேற்று வெளியிட்டுள்ளது மத்திய அரசு.
இந்தியாவின் எரிசக்தி வளர்ச்சியில் பசுமை ஹைட்ரஜனின் பங்கு என்ன, இதன் பின் இருக்கும் போட்டிகள் ஆகியவை குறித்து வரும் TSL எடிஷன்களில் காண்போம்.
தமிழகத்தில் நேற்று பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை: 1,252 (நேற்று முன்தினம்: 1,310) 🔻
- அதிகபட்சமாக, சென்னையில்: 285 (296) 🔻
- தமிழகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை: 6 (10) 🔻
இந்தியாவில் நேற்று பதிவான கொரோனா பாதிப்பு: 30,757 (30,615) 🔺
🌦 இன்று மற்றும் நாளைக்கான வானிலை முன்னறிவிப்பு ☔️
முதல்வர் வீட்டின் முன்பு, அதிகாரிகளின் பாதுகாப்பை மீறிச்சென்று, போராட முயன்ற ABVP அமைப்பைச் சேர்ந்த 32 பேரை கைது செய்து புழல் சிறையில் அடைத்திருக்கிறது காவல்துறை. இவர்களைச் சிறையில் சென்று சந்தித்ததற்காக, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை புற்றுநோய்ப் பிரிவின் தலைவர் பொறுப்பிலிருந்த மருத்துவர் சுப்பையா சஸ்பெண்ட் செய்திருக்கிறது சுகாதாரத்துறை. அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது என்பது அரசு ஊழியர்களின் விதிகளுக்கு எதிரானது என்பதால் இந்த நடவடிக்கை.
முதல்வர் ஸ்டாலினின் சுயசரிதையான `உங்களில் ஒருவன்’ வரும் 28-ம் தேதி சென்னையில் வெளியிடப்படவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தி, உமர் அப்துல்லா, பினராயி விஜயன், தேஜஸ்வி யாதவ் ஆகிய நாட்டின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.
தமிழக அரசின், `மகளிர்க்கு கட்டணமில்லா பேருந்து’ திட்டத்தைக் கேள்விப்பட்டு பாராட்டிவிட்டு, உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க-வுக்கு ஆதரவாக கோவையில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார் ருமேனிய நாட்டைச் சேர்ந்த நெகோட்டா ஸ்டீபன் மேரியஸ் என்பவர். முதல்வர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேட்டியும் கொடுத்திருந்தார். ஆனால், பிசினஸ் விசாவில் வந்துவிட்டு, இங்கு அரசியல் பிரசாரத்தில் ஈடுபடுவது விசா விதிமுறைகளுக்கு எதிரானது என்பதால், அவரை இன்று நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளது இந்திய குடியேற்றத்துறை.
தேனியில் அமைக்க திட்டமிடப்பட்டிருந்த நியூட்ரினோ ஆய்வுமையம் குறித்த தன் நிலைப்பாட்டை நேற்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது தமிழக அரசு. அதில், ``சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் இந்த திட்டம் வருவதாலும், இதை அனுமதித்தால் இங்கிருக்கும் புலிகள் மற்றும் பிற பல்லுயிர்கள் பாதிக்கப்படும் என்பதாலும், தமிழக அரசு இந்த திட்டத்தை எதிர்க்கிறது” எனத் தெரிவித்துள்ளது.
பஞ்சாப் தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சிக்காக வீடியோ கான்ஃபரன்சிங் வழியாக, நேற்று பிரசாரம் மேற்கொண்டார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். அப்போது பேசிய அவர், ``வெளிநாட்டுத் தலைவர்களை கட்டிப்பிடிப்பதாலும், அவர்கள் அழைக்காமலே சென்று பிரியாணி சாப்பிடுவதாலோ மட்டும், வெளியுறவுக் கொள்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுவிடாது. ஓராண்டுக்கும் மேலாக சீனா நம் இடத்தை ஆக்கிரமித்து வைத்திருக்கிறது. ஆனால், அதைப் பற்றி அரசு பேச மறுக்கிறது. உலக அரங்கில் இந்தியாவின் நண்பர்கள் நம்மை கைவிட்டுவிட்டனர். இந்த அரசுக்கு சுத்தமாகப் பொருளாதாரமும் தெரியவில்லை” எனக் கடுமையாக விமர்சித்தார். பஞ்சாப் தேர்தலுக்கு இன்னும் 2 நாள்களே உள்ளன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, விமானங்களுக்கான எரிபொருள் (Aviation turbine fuel) விலை, இந்த ஆண்டில் 4-வது முறையாக உயர்ந்துள்ளது. நேற்று 5.2% விலை உயர்ந்து டெல்லியில், ஒரு கிலோ லிட்டர் எரிபொருள் 90,519.79 ரூபாய்க்கு விற்பனையானது. இந்திய வரலாற்றில் இதுவரை இதுதான் உச்சபட்ச விலை. இதைத் தொடர்ந்து மீண்டும் விமானக் கட்டணங்கள் உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது.
நாட்டில் தினசரி நீதிமன்ற நடவடிக்கைகளை நேரலை செய்யும் நீதிமன்றங்களில் ஒன்று, கர்நாடகா உயர்நீதிமன்றம். பிற வழக்குகளைப் போலவே, கடந்த ஒரு வாரமாக இங்கு நடந்துவரும் ஹிஜாப் தொடர்பான வழக்கும், நீதிமன்றத்தின் யூடியூப் பக்கத்தில் நேரலை செய்யப்பட்டு வருகிறது. இந்த வழக்கின் விசாரணைகள் இதுவரை இல்லாத அளவுக்கு யூடியூபில் கவனம் பெற்றிருக்கின்றன. பிற வழக்குகளின் யூடியூப் வியூஸ் எண்ணிக்கை சில ஆயிரக்கணக்கில் மட்டுமே இருக்க, ஹிஜாப் வழக்கின் வியூஸோ லட்சங்களைத் தொடுகிறது தினமும்.
எப்போதும் பத்திரிகையாளர்கள் மட்டுமே கவனிக்கும் இதுபோன்ற நீதிமன்ற நேரலைகளை, மக்களும் முதன்முதலாக இந்த வழக்கில் ஆர்வமாக கவனிக்கின்றனர். நீதிமன்றத்தின் செயல்பாடுகளை அவர்கள் உணர்ந்துகொள்ளவும் இது உதவுகிறது.
- TNPSC குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுகளுக்கான தேதிகள் இன்று மதியம் 12:30 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளது. மொத்தம் 5,831 காலிப் பணியிடங்களுக்காக இந்த தேர்வு நடத்தப்படவிருக்கிறது.
அவ்வளவுதான்!
The Subject Line-னோட இன்னைக்கு அப்டேட்ஸ் உங்களுக்குப் பிடிச்சிருக்கும்னு நம்புறேன். பிடிச்சிருந்தா கீழ இருக்க பட்டன் மூலமா உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க… இன்னும் ஏதாச்சும் இந்த TSL-ல் மாத்தணும்னா எனக்கு மெசேஜ் பண்ணுங்க! உங்க கருத்துகள் எங்களுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். 🤞
திரும்ப நாளைக்கு காலைல 7 மணிக்கு சந்திப்போம்!
Have a Nice day ☕️
The Subject Line-ஐ சமூக வலைதளங்களில் பின்தொடர:
Telegram | Twitter | Facebook | Insta
Today Edition பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க! ❤️