🗳 தோல்வியில் முடிந்ததா மம்தாவின் முயற்சி?
இன்றைய TSL-ன் பிற ஹைலைட்ஸ்: முடிவுக்கு வரும் விவசாயிகள் போராட்டம் | ரஜினியை சந்தித்த சசிகலா | பணி நாள்களில் மாற்றம் கொண்டுவந்த UAE | ஓமிக்ரான் வீரியம் குறித்த அப்டேட் 🔴 Reading Time: 4 Mins ⏳
ஹாய், ஹலோ… வணக்கம் 👋
பலனளிக்காத மம்தாவின் முயற்சிகள்? 👎
2024 நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க-வை எதிர்த்து எத்தனை அணிகள் போட்டியிடப்போகின்றன என்பதுதான் தேசிய அரசியலில் கடந்த சில மாதங்களாக ஹாட் டாபிக். வழக்கம்போல காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் கீழ், அனைத்து எதிர்க்கட்சிகளும் அணிதிரளும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் ட்விஸ்ட்டாக, மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்று திரட்டும் பணியில் ஈடுபடத் தொடங்கினார் மம்தா பானர்ஜி. கோவா, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸூக்கு சவாலாகவும் களமிறங்கியிருக்கிறார். இதையடுத்து,
காங்கிரஸே மீண்டும் 2024-ல் எதிர்க்கட்சிகளுக்கு தலைமை தாங்குமா?
அல்லது காங்கிரஸ் அங்கமாக இருக்கும் கூட்டணிக்கு வேறு கட்சிகள் (திரிணமுல், தேசியவாத காங்கிரஸ் போன்ற) தலைமை தாங்குமா?
அல்லது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு மாற்றாக, திரிணமுல் தலைமையில் புதியதொரு கூட்டணி உருவாகுமா?
எனப் பல்வேறு கேள்விகள் எழுந்திருக்கின்றன. இந்த திட்டப்படிதான், மம்தா பானர்ஜியின் கடந்த மாத மும்பை பயணமும் இருந்தது.
அப்போது, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனா கட்சியின் ஆதித்ய தாக்கரே ஆகியோரை சந்தித்தார் மம்தா. அதைத் தொடர்ந்து மம்தா காங்கிரஸ் கூட்டணியை விமர்சித்ததும், மம்தாவின் தேர்தல் ஆலோசகராக இருக்கும் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் தலைமையை விமர்சித்ததும் இந்த விவகாரத்தை இன்னும் பரபரப்பாக்கியது. இந்நிலையில்தான், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா ஆகிய இரு கட்சிகளும் காங்கிரஸூக்கே மீண்டும் க்ரீன் சிக்னல் காட்டியிருக்கின்றன.
என்ன சொல்கின்றன இரண்டு கட்சிகளும்?
இரண்டு நாட்களுக்கு முன்பு, காங்கிரஸூக்கு எதிராக அரசியல் செய்துவரும் மம்தா பானர்ஜியை கடுமையாக விமர்சித்து, தன் கட்சிப் பத்திரிகையில் தலையங்கம் தீட்டியிருந்தது சிவசேனா. இந்நிலையில்தான், நேற்று அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத், டெல்லி சென்று ராகுல் காந்தியை சந்தித்துப் பேசியிருக்கிறார்.
அதன்பின் ஊடகங்களிடம் பேசிய அவர், ``பா.ஜ.க-விற்கு எதிராக ஒரே ஒரு எதிர்க்கட்சி கூட்டணிதான் இருக்கவேண்டும். அதில் கட்டாயம் காங்கிரஸ் இடம்பெறவேண்டும். இரண்டு மூன்று அணிகளாகப் பிரிந்து என்ன பயன்?” எனத் தெரிவித்திருக்கிறார்.
கூட்டணிக்கு யார் தலைமை தாங்குவார், மம்தா பானர்ஜியும் கூட்டணியில் இருப்பாரா என்ற கேள்விகளுக்கு, ``எதிர்க்கட்சிகளின் கூட்டணி யார் தலைமையில் அமையவேண்டும் என்பது, அனைத்துக் கட்சிகளும் கூடிப்பேசி முடிவு செய்யவேண்டியது. மம்தா பானர்ஜியையும், காங்கிரஸையும் கூட்டணிக்குள் கொண்டுவருவதையெல்லாம் சரத் பவார் பார்த்துக்கொள்வார்” எனப் பதிலளித்திருக்கிறார். இப்படியாக, மம்தாவுக்கு நோ சொல்லி, காங்கிரஸை வெளிப்படையாக ஆதரித்திருக்கிறது சிவசேனா.
தேசிய வாத காங்கிரஸின் பதில்?
இந்த பரபரப்பான சூழ்நிலையில், நேற்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடந்து முடிந்திருக்கிறது. அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய, அக்கட்சியின் மூத்த தலைவர் நவாப் மாலிக்,
பா.ஜ.க, காங்கிரஸூக்கு எதிராக மூன்றாம் அணி அமைக்கும் எண்ணம் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு இல்லை எனவும், சரத் பவார், பா.ஜ.க அல்லாத கட்சிகள் அனைத்தையும் ஓரணியில் திரட்டுவார் எனவும் தெரிவித்திருக்கிறார்.
திரிணமுல் காங்கிரஸை கூட்டணிக்குள் கொண்டுவர தேசியவாத காங்கிரஸ் முயற்சி செய்யுமா என்ற கேள்விக்கு, ``காங்கிரஸையும் சிவசேனாவையும் எங்களால் ஒருங்கிணைக்க முடிந்தது. அதேபோல மம்தா பானர்ஜியிடமும் பேச்சுவார்த்தை நடத்துவோம்” என பதிலளித்திருக்கிறார்.
சரத் பவாருடனான சந்திப்பிற்குப் பிறகுதான், ``ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்ற ஒன்று இருக்கிறதா?” எனக் கடுமையாக காங்கிரஸைச் சாடியிருந்தார் மம்தா. ஆனால், இப்போது சரத் பவாரும் மம்தாவின் பின் வரத் தயாராக இல்லை என்பது உறுதியாகியிருக்கிறது.
இதையடுத்து,
- காங்கிரஸ் அமைக்கும் அணியில் மம்தா சேர்வாரா,
- ஒருவேளை மம்தா காங்கிரஸ் கூட்டணியில் இடம்பிடித்தால், அவரின் தேசிய அரசியல் கனவும் அத்துடன் முடிவுக்கு வருமா,
- வழக்கம்போல, காங்கிரஸே இந்த முறையும் கூட்டணிக்கு தலைமை தாங்குமா அல்லது பிற மாநில கட்சிகளுக்கு வழிவிடுமா,
என தற்போது புதிதாக வேறு சில கேள்விகள் முளைத்திருக்கின்றன. அடுத்து வரப்போகும் மாதங்களில் விடைகள் தெரிந்துவிடும்.
முடிவுக்கு வரும் விவசாயிகள் போராட்டம்?
மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற்றுவிட்டாலும், தங்களின் மற்ற 6 கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்றும் வரை போராட்டத்தை தொடருவோம் என அறிவித்திருந்தனர் டெல்லியில் போராடும் விவசாயிகள். இந்தக் கோரிக்கைகள் தொடர்பாக, விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர முயற்சி செய்துவருகிறது மத்திய அரசு. இதையடுத்து விவசாயிகள் இன்று மதியம் 2 மணிக்கு ஒன்றுகூடிப் பேசி அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கவிருக்கின்றனர். அரசுடன் சுமுக நிலை ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளியான TNPSC தேர்வுகளின் அறிவிப்பு:
கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளாக TNPSC தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில், 2022-ம் ஆண்டுக்கான திட்ட அட்டவணையை நேற்று வெளியிட்டிருக்கிறது தமிழக அரசு. இதன்படி குரூப் 2 தேர்வுகளுக்கான அறிவிப்பாணைகள் வரும் பிப்ரவரி மாதமும், குரூப் 4 தேர்வுகளுக்கு வரும் மார்ச் மாதமும் வெளியாகவிருக்கின்றன. அதன்பின் 75 நாள்கள் கழித்து தேர்வு நடக்கும். சுமார் 11,000 காலிப்பணியிடங்கள் இந்த தேர்வின் மூலம் நிரப்பப்படவிருக்கின்றன. வரும் ஆண்டு முதல் TNPSC தேர்வுகளில் தமிழ் தகுதி தேர்வும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வைரலான வீடியோ; அரசு நடவடிக்கை:
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில், அரசுப்பேருந்தில் பயணம் செய்த பெண்மணி ஒருவரை, மீன் வாசம் வீசுகிறது எனச் சொல்லி நடத்துநர் பேருந்திலிருந்து இறக்கிவிட்டிருக்கிறார். இதையடுத்து அந்தப் பெண்மணி பேருந்து நிலையத்தில் அழுத வீடியோ நேற்று வெளியானது. இதைத்தொடர்ந்து அந்தப் பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர் மற்றும் பேருந்து நிலையத்தின் நேரக்காப்பாளர் ஆகிய மூவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இந்த சம்பவம் தொடர்பாக தன் கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார்.
வீக்கெண்டை நீட்டித்த UAE 🏝
வெளிநாட்டு முதலீட்டாளர்களையும், பணியாளர்களையும் ஈர்க்க ஐக்கிய அரபு அமீரகமானது (UAE) கடந்த சில ஆண்டுகளாகவே, தன் விதிமுறைகளில் பல்வேறு மாற்றங்களைச் செய்துவருகிறது.
அதன் ஒருபகுதியாக இதுவரை அங்கு வார இறுதி நாள்களாகப் பின்பற்றப்படும் வெள்ளி - சனிக்கிழமைகளுக்குப் பதிலாக, இனி வெள்ளி - சனி - ஞாயிற்றுக்கிழமைகள் வார இறுதி நாள்களாகப் பின்பற்றப்படும் என அறிவித்திருக்கிறது. இதில் வெள்ளிக்கிழமை அரைநாள் மட்டுமே விடுமுறை.
இதன்படி, உலகம் முழுவதும் பின்பற்றப்படும் வாரத்தின் `5 பணி நாள்’ நடைமுறையை, முதல்முறையாக 4.5 ஆகவும் குறைத்திருக்கிறது. பணியாளர்களின் நலன்களைக் கருத்தில்கொண்டும், மேற்கத்திய மற்றும் பிற நாடுகளின் பொருளாதாரத்தோடு ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு ஏதுவாகவும் இந்த மாற்றங்களை வரும் ஜனவரி 1, 2022 முதல் அமல்படுத்தவிருக்கிறது UAE. முதலில் அரசாங்க துறைகள், அலுவலகங்களில் இந்த மாற்றம் அமலுக்கு வருகிறது. தனியார் நிறுவனங்கள் தங்கள் வசதிக்கேற்ப முடிவெடுத்துக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்டா அளவுக்கு ஆபத்தில்லை! 🚨
``ஓமிக்ரான் வேரியன்ட்டின் வீரியம் குறித்து முழுமையாகத் தெரிந்துகொள்ள இன்னும் சில வாரங்கள் நாம் காத்திருக்க வேண்டும். ஆனால், ஆரம்பகட்ட தரவுகளை வைத்துப் பார்க்கையில், இதற்கு முந்தைய வேரியன்ட்களை விடவும் இது தீவிரம் குறைந்தது என்றே தெரிகிறது. அதுவும் குறிப்பாக டெல்டா வேரியன்ட்டை விட, தீவிரமானதல்ல என உறுதியாகச் சொல்லலாம். அதைவிட வீரியம் குறைந்தது என்றுகூட கருதலாம்." என நேற்று ஓமிக்ரான் பற்றி தெரிவித்திருக்கிறார் அமெரிக்காவின் மூத்த விஞ்ஞானியான ஆன்டனி ஃபாசி.
நாசாவின் புதிய விண்வெளி வீரர்கள்:
அமெரிக்காவின் விண்வெளிப் பயணங்களில் பங்கெடுப்பதற்காக, பொதுமக்களிலிலிருந்து அவ்வப்போது விண்வெளி வீரர்களைத் தேர்ந்தெடுப்பது நாசாவின் வழக்கம். அப்படி நேற்று புதிதாக பயிற்சிபெறவிருக்கும் 10 விண்வெளி வீரர்களை அறிவித்திருக்கிறது நாசா. சுமார் 12,000 விண்ணப்பங்களிலிருந்து இந்த 10 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அடுத்து 2 ஆண்டுகளுக்கு விண்வெளி வீரர்களுக்கான பயிற்சிகளைப் பெறுவர். அதற்கடுத்து வரும் ஆண்டுகளில் நாசாவின் மிஷன்களில் ஈடுபடுத்தப்படுவர். இந்த 10 பேரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனில் மேனனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் நேற்று பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை: 710
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை: 10
இன்று மற்றும் நாளைக்கான வானிலை முன்னறிவிப்பு: ☔️👇
வடகிழக்குப் பருவமழை காரணமாக, டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த், தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்கு வாழ்த்துவதற்காகவும் அவரது உடல்நிலை குறித்து விசாரிக்கவும் நேற்று முன்தினம் ரஜினிகாந்தின் போயஸ் கார்டின் வீட்டில் அவரை நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறார் சசிகலா.
ஜாமீனில் வெளிவரும் சுதா பரத்வாஜ்: பீமா கோரேகான் வழக்கில் 2018-ம் ஆண்டு கைது செய்யப்பட்ட செயற்பாட்டாளரான சுதா பரத்வாஜிற்கு, அண்மையில் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருந்தது மும்பை உயர்நீதிமன்றம். இதை எதிர்த்து தேசிய புலனாய்வு முகமை (NIA) நேற்று உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. ஆனால், உச்சநீதிமன்றம் அந்த உத்தரவை தடைசெய்ய மறுத்துவிட்டது. இதையடுத்து விரைவில் சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவருகிறார் சுதா பரத்வாஜ்.
இங்கிலாந்து & ஆஸ்திரேலியா இடையேயான 72-வது ஆஷஸ் தொடர், இன்று காலை ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் தொடங்கியிருக்கிறது.
LIC IPO 📈: மிக விரைவில் பங்குச்சந்தையில் LIC-க்கான IPO (Initial public offering)-ஐ வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது மத்திய அரசு. இந்தப் பங்கு வெளியீட்டில் 10% பங்குகளை காப்பீட்டு தாரர்களுக்கு ஒதுக்கவும் முடிவு செய்திருக்கிறது. இதன்படி, நீங்கள் LIC காப்பீட்டு தாரராக இருந்து, இந்த IPO-வைப் பெற விரும்பினால், முதலில் LIC நிறுவனத்திடம் உங்கள் பான் எண்ணைக் கொடுத்து அப்டேட் செய்துகொள்ளவேண்டுமாம்.
உயரும் ஏடிஎம் கட்டணங்கள் 💵:
ஏடிஎம்களில் வங்கிகள் அனுமதித்திருக்கும் அளவைத் தாண்டி, பரிவர்த்தனைகள் மேற்கொள்ளும்பட்சத்தில் 20 ரூபாய் + வரியானது தற்போது கூடுதல் சேவைக்கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. வரும் ஜனவரி, 2022 முதல் இது 21 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. கூடவே அதற்கான வரியும் வசூலிக்கப்படும்.
📣 Note: The Subject Line (TSL) நியூஸ்லெட்டரின் இந்த மெயில் உங்களின் Promotions Tab-ல வந்திருந்தா, அதை அப்படியே Move பண்ணி, Primary Tab-க்கு மாத்திடுங்க. இதன்மூலம் தினமும் TSL-ஐ நீங்க மிஸ் பண்ணாம படிக்கமுடியும். ஒருவேளை இந்த மெயில் உங்க நண்பர்கள் மூலம் வந்திருந்தா, தினமும் உங்க இன்பாக்ஸிற்கு நேரடியாக வர, சப்ஸ்கிரைப் பண்ணிடுங்க. ✅
அவ்வளவுதான்!
The Subject Line-னோட இன்னைக்கு அப்டேட்ஸ் உங்களுக்குப் பிடிச்சிருக்கும்னு நம்புறேன். பிடிச்சிருந்தா கீழ இருக்க பட்டன் மூலமா உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க… இன்னும் ஏதாச்சும் இந்த TSL-ல் மாத்தணும்னா எனக்கு மெசேஜ் பண்ணுங்க! உங்க கருத்துகள் எங்களுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். 🤞
திரும்ப நாளைக்கு காலைல 7 மணிக்கு சந்திப்போம்!
Have a Nice day! ☕️
The Subject Line-ஐ சமூக வலைதளங்களில் பின்தொடர: