🤷♂️ பழங்குடியினர் மீது மோடிக்கு ஏன் தீடீர் பாசம்? 🎯
In Today's Edition: மோடியின் திடீர் பழங்குடியினர் பாசம் | ஓவைசியின் ராஜஸ்தான் என்ட்ரி | டெல்லி காற்று மாசுபாட்டிற்கு விவசாயிகள் மட்டும்தான் காரணமா? | சர்ச்சையில் விராட் கோலி | சூர்யாவுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் | Reading Time: 4½ mins.
ஹாய், ஹலோ… வணக்கம்! 👋
❶ மோடி பங்கேற்ற 2 நிகழ்ச்சிகள்
பிரதமர் மோடி, நேற்று இரண்டு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இரண்டுமே பழங்குடியினர்களை சிறப்பிக்கும் வகையிலான நிகழ்வுகள்.
ஒன்று, மத்தியப் பிரதேசம் போபாலில் நடந்த நாட்டின் முதலாவது `ஜன்ஜாதிய கவுரவ் திவாஸ்’ நிகழ்ச்சி. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பழங்குடியினர்களின் பங்களிப்பை நினைவுகூரும் வகையில், பழங்குடியின வீரரான பிர்சா முண்டாவின் பிறந்தநாளான நவம்பர் 15-ம் தேதி இந்த ஆண்டு முதல் `ஜன்ஜாதிய கவுரவ் திவாஸ்’ ஆக அனுசரிக்கப்படுகிறது. இதற்கான தொடக்க நிகழ்ச்சியில் தேச விடுதலையில் பழங்குடியினரின் பங்களிப்பை பற்றி பேசினார்.
இரண்டாவது, மத்திய பிரதேசத்தின் ஹபிப்கஞ்ச் ரயில் நிலையம், ராணி கமலாபதி ரயில் நிலையமாக பெயர் மாற்றம் மற்றும் புனரமைப்பு செய்யப்பட்டு புதிதாக திறக்கப்படும் நிகழ்ச்சி. இந்த ராணி கமலாபதி, 18-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கோண்டு பழங்குடியினர்களின் முதல் ராணி ஆவார்.
ஏன் பழங்குடியினர்களின் மீது பா.ஜ.க-விற்கு திடீர் அக்கறை?
இந்தியாவின் 75-வது சுதந்திர ஆண்டையொட்டி, பல்வேறு விடுதலைப் போராட்ட நிகழ்வுகள், சுதந்திரப் போராட்ட தலைவர்களை கௌரவிக்கும் நிகழ்வுகள் இந்த ஆண்டு முழுக்க நடக்கின்றன. அதன் ஒருபகுதியாக, பழங்குடியினர்களின் பங்களிப்பிற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இது முதல் காரணம்.
இரண்டாவது, கோண்டு பழங்குடியினர் இந்தியாவின் மிகப்பெரிய பழங்குடி குழுவினர். கிட்டத்தட்ட 1.2 கோடி பேர் மத்தியப்பிரதேசம், ஜார்க்கண்ட், சத்திஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் வசிக்கின்றனர்.
இந்த மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல்களில் இவர்கள் மத்தியில் பா.ஜ.க-வின் செல்வாக்கு வெகுவாக சரிந்திருக்கிறது. பழங்குடியினருக்கான ரிசர்வ் தொகுதிகளில்,
- ஜார்க்கண்டில் 28-ல் 2 தொகுதிகளையும்,
- சத்திஸ்கரில் 29-ல் 3 தொகுதிகளையும்,
- மத்தியப் பிரதேசத்தில் 47-ல் 16 தொகுதிகளை மட்டுமே பா.ஜ.க கைப்பற்றியது.
எனவே பழங்குடியினர் மத்தியில் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்கவும் பா.ஜ.க இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்கிறது.
❷திரிபுரா கலவரம் வழக்கு: 2 பத்திரிகையாளர்களுக்கும் ஜாமின்
திரிபுராவில் கடந்த வாரம் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினரால், தர்காபஜாரில் இருக்கும் மசூதி ஒன்று தாக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. ஆனால், “இது உண்மையில்லை” என மத்திய உள்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்தது.
இந்தப் பிரச்னை தொடர்பாக, திரிபுராவுக்கு செய்தி சேகரிக்க சென்ற சம்ருதி சகுன்யா மற்றும் ஸ்வர்னா ஜா ஆகிய இருவரும், 3 நாள்களுக்கும் மேலாக திரிபுராவின் பல பகுதிகளுக்குச் சென்றுள்ளனர். இந்நிலையில், அங்கு ஒரு மசூதி எரிக்கப்பட்டதாகவும் ட்வீட் செய்திருக்கின்றனர். ஆனால், இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை எனக்கூறிய திரிபுரா போலீஸ் அவர்கள் மீது, “சமூக நல்லிணக்கத்திற்கு ஊறுவிளைவிப்பதாகக் கூறி” வழக்குப் பதிவு செய்தது. மேலும், அஸ்ஸாமில் இருவரும் ஞாயிற்றுக்கிழமை அன்று கைது செய்யப்பட்டு, திரிபுராவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரான இந்த நடவடிக்கைக்கு நாடு முழுக்க எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில், இருவரும் திரிபுராவின் உதய்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டது.
திரிபுரா வன்முறை தொடர்பாக தவறான தகவல் பரப்பியதாக, ஏற்கெனவே உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள், செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட 71 பேர் மீது அம்மாநில அரசு அண்மையில் வழக்குகள் பதிந்தது குறிப்பிடத்தக்கது.
❸ டெல்லி காற்று மாசுபாடு: அத்தனையும் பொய்யா கோபால்?!
ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் டெல்லி காற்று மாசுபாட்டால் தவிப்பதும், அதற்கு பக்கத்து மாநில விவசாயிகள், வைக்கோல்களை எரிப்பதே காரணம் என டெல்லி அரசாங்கம் சொல்வதும் பல ஆண்டுகளாகத் தொடர்கிறது. இந்நிலையில் முதல்முறையாக அதை மறுக்கும் வகையில் உச்சநீதிமன்றத்தில் ஒரு உண்மையை ஒப்புக்கொண்டிருக்கிறது மத்திய அரசு.
என்ன உண்மை?
டெல்லி காற்று மாசுபாட்டை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்காக, அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இதில் நேற்றைய விசாரணையின்போது, மத்திய அரசின் வழக்கறிஞர் ஒரு அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறார்.
அதில், “பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேச விவசாயிகள் வைக்கோல் எரிப்பது டெல்லி காற்று மாசுபாட்டிற்கு 10% மட்டுமே காரணம். வாகனப் போக்குவரத்து, தொழிற்சாலைகள், தூசு மற்றும் கட்டுமானப் பணிகள் ஆகியவையே 76% காரணம்” எனத் தெரிவித்திருக்கிறார்.
இதையடுத்து, விவசாயிகளை வெறுமனே பழிசொல்லாமல் உடனடியாக காற்று மாசுபாட்டிற்கான மூல காரணங்களைக் கண்டறிந்து தடுக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசையும், டெல்லி அரசையும் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியிருக்கிறது.10% காரணம் என்றாலும்கூட, விவசாயிகளை வைக்கோல்களை எரிக்கவிடாமல் இப்போதைக்கு நிறுத்தி வைக்கவும் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
இந்தியா
சல்மான் குர்ஷித்தின் வீட்டிற்கு தீ வைப்பு: உத்தரகண்ட் மாநிலம், நைனிடாலில் இருக்கும் மூத்த காங்கிரஸ் தலைவரான சல்மான் குர்ஷித்தின் வீட்டை சுமார் 20 பேர் கொண்ட கும்பல் தீ வைத்து சேதப்படுத்தியுள்ளது. சேதமடைந்த வீட்டின் படங்களை அவர் தன் ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருக்கிறார்.
என்ன பிரச்னை?
முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான சல்மான் குர்ஷித் கடந்த புதன்கிழமை, ‘Sunrise over Ayodhya: Nationhood in our times’ என்ற புத்தகத்தை வெளியிட்டிருந்தார்.
இதில், அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு குறித்து தன் பார்வையை பதிவு செய்திருந்தார். மேலும், “தீவிர இந்துத்துவா என்பது இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளான ஐ.எஸ்.ஐ.எஸ், போகோஹரம் போன்ற அமைப்புகளுக்கு ஒப்பானது” என்றும் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பா.ஜ.க, இந்துசேனா உள்ளிட்ட இந்துத்துவா ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில்தான் இந்த தாக்குதல் நடந்திருக்கிறது. இந்த தாக்குதல் தொடர்பாக 21 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
உயரும் பணவீக்கம்: நாட்டின் மொத்த விலை பணவீக்கம் (wholesale inflation) 12.54 சதவீதமாக உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, உணவுப்பொருள்கள், உலோகங்கள் ஆகியவற்றின் விலைவாசி உயர்ந்ததால்தான், கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் மொத்த விலை பணவீக்கம் உயர்ந்துள்ளதாக மத்திய தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சந்தையில் சரக்கு பொருள்களுக்கான தேவை அதிகரித்துள்ளதையும், விரைவில் மக்களை நேரடியாக பாதிக்கவிருக்கும் சில்லறை பணவீக்கம் உயர் வாய்ப்பிருப்பதையும் இது உணர்த்துகிறது.
கிரிப்டோகரன்சிகளுக்கான மசோதா: நவம்பர் 29 முதல் டிசம்பர் 23 வரை 3 வாரங்களுக்கு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கூடவிருக்கிறது. இதில் கிரிப்டோகரன்சிகளின் வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் வகையில், புதிய மசோதா ஒன்று தாக்கல் செய்யப்படலாம் என ‘பிசினஸ் ஸ்டாண்டர்டு’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
ராஜஸ்தானிலும் ஓவைசி என்ட்ரி: பா.ஜ.க-வின் பி டீம் என விமர்சிக்கப்படும் ஓவைசி விரைவில் ராஜஸ்தானிலும் தன் AIMIM கட்சியைத் தொடங்கவிருக்கிறார். 2023 சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிடவும் திட்டமாம்.
சர்ச்சையில் விராட் கோலி: கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு சொந்தமான `One8 Commune’ நிறுவனத்தின் உணவகங்களில் தன்பாலின ஈர்ப்பாளர்கள், திருநங்கைகள் உள்ளிட்ட LGBTQ+ சமூகத்தினருக்கு எதிராக பாகுபாடு காட்டப்படுவதாக, LGBTQ+வினருக்காக குரல்கொடுத்து வரும் அமைப்பு ஒன்று குற்றம்சாட்டியுள்ளது. இதனை `One8 Commune’ நிறுவனம் மறுத்திருக்கிறது. இருப்பினும் விராட் கோலிக்கு எதிராகவும், இந்தப் பிரச்னை தொடர்பாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துவருகின்றன.
உ.பி-யை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்: உத்தரப்பிரதேசத்தில் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 127 ஆக உயர்வு. இதில் கான்பூர் நகரில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மட்டுமே 123.
அகமதாபாத் சர்ச்சை: குஜராத் அகமதாபாத்தில் அசைவ உணவு விற்பனை செய்யும் சாலையோர கடைகளை, நகரின் பிரதான சாலைகள் மற்றும் மதவழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்து நீக்க அண்மையில் மாநகராட்சி சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இருப்பினும், இந்த உத்தரவை இன்று முதல் தீவிரமாகப் பின்பற்ற முடிவுசெய்து, சாலைகளில் சோதனையும் மேற்கொள்ளவிருக்கிறது அகமதாபாத் மாநகராட்சி.
இனி இரவிலும் உடற்கூறாய்வு செய்யலாம்: இரவு வேளைகளில் உடற்கூறாய்வு செய்யக்கூடாது என இருந்த பல ஆண்டுகால விதிமுறையை மாற்றி, இனி இரவிலும் உடற்கூறாய்வு செய்யலாம் என அனுமதி வழங்கியிருக்கிறது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம். பாலியல் வன்கொடுமை, கொலை, தற்கொலை உள்ளிட்ட சில மரணங்கள் தவிர, பிற வழக்குகளில் இனி இரவிலும் உடற்கூறாய்வு செய்யலாம். தற்போது பல மருத்துவமனைகளில் உரிய தொழில்நுட்பங்கள் வந்துவிட்டதாலும், உறுப்பு தானம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு உதவும் வகையிலும் இந்த முடிவை எடுத்திருக்கிறது அரசு.
கொரோனாவிற்குப் பிறகு இந்தியாவின் வளர்ச்சியை எப்படி அதிகரிப்பது என்பது தொடர்பான மாநிலங்களுடனான ஆலோசனைக் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடந்தது. இதில் 15 மாநில முதல்வர்களும், 3 மாநில துணை முதல்வர்களும், பிற மாநில நிதியமைச்சர்களும் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், “இந்த மாதம் நவம்பர் 22-ம் தேதி ₹95,082 கோடி மாநிலங்களுக்கு வழங்கப்படவிருக்கிறது” எனத் தெரிவித்திருக்கிறார்.
மோடியின் அமைச்சரவையில் உள்ள 77 அமைச்சர்களும், 8 குழுக்களாக பிரிக்கப்பட்டிருப்பதாக நேற்று சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. அமைச்சர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பணி தொடர்பாக பிறருடன் தகவல்களைப் பகிர்ந்துகொண்டு சிறப்பாகப் பணியாற்றவும், அனைத்து துறைகளிலும் பணிகளை வேகப்படுத்தவும் இந்த முடிவாம்.
தமிழ்நாடு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நேற்று: 802
- உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை: 12
இடமாற்றம் செய்யப்பட்ட தலைமை நீதிபதி: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் சஞ்சீப் பானர்ஜியை, மேகாலயா நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்வதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருந்தது. இந்நிலையில், கொலிஜீயத்தின் பரிந்துரையை ஏற்று, நேற்று அவரை இடமாற்றம் செய்திருக்கிறார் குடியரசுத்தலைவர்.
புதிய கல்லூரிகளுக்குத் தடை: தமிழக இந்து சமய அறநிலையத் துறை சார்பில், கோயில்களின் நிதி உதவியுடன் 8 கல்லூரிகள் தொடங்க முடிவு செய்யப்பட்டு, அதில் 4 கல்லூரிகளுக்கு கல்வித்துறையின் அனுமதியும் பெறப்பட்டுள்ளது. இந்நிலையில், இதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், “ஏற்கெனவே தொடங்கப்பட்ட 4 கல்லூரிகள் தவிர இனி புதிய கல்லூரிகள் எதுவும் தொடங்கப்படக்கூடாது. கோயில் நிதியைப் பயன்படுத்துவது என்றால் சட்ட விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும். தொடங்கப்பட்டிருக்கும் 4 கல்லூரிகளிலும் விரைவில் மதவகுப்புகளும் நடைபெறவேண்டும். இந்த 4 கல்லூரிகள் திறப்பது குறித்த முடிவும் இந்த வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டதே” எனத் தெரிவித்துள்ளது. இதனால், இந்து அறநிலையத் துறை அடுத்த 4 கல்லூரிகள் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வழக்கு 5 வாரங்கள் கழித்து மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
பவர்பேங்க் செயலி மோசடி: குறைந்த காலத்தில் முதலீடு செய்த பணத்தை இரட்டிப்பாக்கலாம் என நம்பி பவர் பேங்க் செயலியில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார் அளிப்பதற்காக தொலைபேசி எண்ணை (94441 28512) அறிவித்துள்ளது சி.பி.சி.ஐ.டி. இந்த செயலியில் முதலீடு செய்து பலரும் கோடிக்கணக்கில் ஏமாந்துள்ளது தெரியவந்துள்ளது.
கைவிடப்பட்ட பெட்ரோ கெமிக்கல் மண்டலம்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் செயல்படுத்தப்படவிருந்த பெட்ரோ கெமிக்கல் மண்டல திட்டத்தை கைவிடுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
சூர்யாவுக்கு வக்கீல் நோட்டீஸ்: “ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமூகத்தினரை தவறாக சித்தரித்ததற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்” எனவும், “நடிகர் சூர்யா மற்றும் அமேசான் நிறுவனம் 5 கோடி ரூபாய் அபராதம் செலுத்தவேண்டும்” எனவும் வன்னியர் சங்கம் சார்பில் சூர்யா மற்றும் அமேசான் நிறுவனத்தினருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மீண்டும் கனமழை: 🌧
- இன்று மற்றும் அடுத்த 2 நாள்களுக்கான வானிலை முன்னறிவிப்பு.
அவ்வளவுதான்!
The Subject Line-னோட இன்னைக்கு அப்டேட்ஸ் உங்களுக்குப் பிடிச்சிருக்கும்னு நம்புறேன். பிடிச்சிருந்தா கீழ இருக்க பட்டன் மூலமா உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க… இன்னும் ஏதாச்சும் இந்த லிஸ்ட்ல சேர்க்கணும், இருக்குற விஷயங்கள்ல ஏதாச்சும் மாத்தணும்னா எனக்கு மெசேஜ் பண்ணுங்க!
திரும்ப நாளைக்கு காலைல 7 மணிக்கு சந்திப்போம்!