😪 நாகலாந்து துப்பாக்கிச்சூடு; எங்கே தவறு நடந்தது?
இன்றைய TSL-ன் பிற ஹைலைட்ஸ்: நாகலாந்து துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் பின்னணி | வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட் | சர்ச்சையான முதுகுளத்தூர் மாணவர் மரணம் | தமிழகத்தின் 16-வது பறவைகள் சரணாலயம் 🔴 Reading Time: 5 Mins ⏳
ஹாய், ஹலோ… வணக்கம் 👋
💡 இந்த 2021-ம் ஆண்டில் உலகம் முழுக்க மக்களால் அதிகமுறை பயன்படுத்தப்பட்ட எமோஜிக்களின் பட்டியலை Unicode Consortium அண்மையில் வெளியிட்டிருக்கிறது. இதில் எந்த எமோஜி நம்பர் 1 இடத்தைப் பிடித்திருக்கும் என உங்களால் யூகிக்க முடியுதா? 🤔
விடை, இன்றைய TSL-ன் இறுதியில்!
நாகலாந்து துப்பாக்கிச்சூடு: இதுவரை தெரியவந்திருப்பது என்ன?
நாகலாந்தில் கடந்த சனிக்கிழமை அப்பாவி மக்கள் மீது, ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூடு தொடர்பாக நேற்று சில புதிய தகவல்கள் தெரியவந்திருக்கின்றன.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நேற்று இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, சம்பவ தினத்தன்று என்ன நடந்தது என விளக்கம் அளித்திருக்கிறார். அவர் சொன்னதில் கவனிக்கத்தக்கவை…
வீடு திரும்பிய தொழிலாளிகள்
கடந்த சனிக்கிழமை, தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்கள், நாகலாந்தின் மோன் மாவட்டத்தின் ஓடிங் பகுதிக்கு வரவிருப்பதாக ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அதன்படி, அவர்களை எதிர்பார்த்து அந்த சாலைப் பகுதியில் பதுங்கியிருந்திருக்கின்றனர்.
அதேசமயத்தில், அந்த சாலையில் 8 சுரங்க தொழிலாளர்களைக் கொண்ட வாகனமும் வந்திருக்கிறது. அதைப் பார்த்த வீரர்கள், அந்த வாகனத்தை நிறுத்தும்படி உத்தரவிட்டிருக்கின்றனர். ஆனால், வாகனம் நிற்காமல் வேகமாக சென்றிருக்கிறது. இதையடுத்து, வாகனத்தில் இருப்பவர்கள் பயங்கரவாதிகள் என நினைத்து ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் தவறுதலாக 6 அப்பாவிகள் கொல்லப்பட்டிருக்கின்றனர். மீதி இரண்டு பேர் காயமடைந்திருக்கின்றனர்.
தவறு நடந்ததை உணர்ந்துகொண்ட வீரர்கள் காயமுற்ற இருவரை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றிருக்கின்றனர். அதேசமயம், துப்பாக்கிச்சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, கிராம மக்கள் ராணுவ வீரர்களை சுற்றி வளைக்கவே, நிலைமை மோசமாகியிருக்கிறது. இதையடுத்து, தற்காப்புக்காக ராணுவ வீரர்கள் மீண்டும் பொதுமக்களை நோக்கி சுட்டிருக்கின்றனர். இதில் 7 பேர் பலியாகியிருக்கின்றனர். ஒரு ராணுவ வீரரும் உயிரிழந்திருக்கிறார்.
இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை, பொதுமக்களில் சுமார் 250 பேர் இந்திய ராணுவ முகாம்களை தாக்கியிருக்கின்றனர். அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். இந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக நடத்தப்படும் விசாரணையில் நிச்சயம், தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என உறுதியளித்திருக்கிறார் அமித்ஷா.
ஆனால்…
களத்திலிருந்த மக்கள் சொல்லும் சில விஷயங்கள், அமித் ஷா சொல்லும் விஷயங்களிலிருந்து வேறுபடுகின்றன. பொது மக்கள் கூறுவதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால்,
முதலில் 6 அப்பாவிகள் சுட்டுக்கொல்லப்பட்டதும், அதைக் கேட்டு பொதுமக்கள் ஓடிவந்திருக்கின்றனர். அப்போது ராணுவ வீரர்கள், இறந்தவர்களின் உடல்களை தார்பாலினை வைத்து மறைத்து, அவர்களின் வாகனங்களில் எடுத்துச் சென்றதாகவும், அதை மீட்கச் சென்ற போதுதான் ராணுவ வீரர்கள் மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தினர் என்றும் `தி ப்ரின்ட்’ ஊடகத்திடம் பேசியிருக்கும் மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.
🚨 காவல்துறை சொல்வது என்ன?
கிட்டத்தட்ட மக்கள் கூறும் இதே சம்பவங்களை நாகலாந்து காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையும் உறுதி செய்கிறது. பல்வேறு சாட்சியங்களின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ள அந்த அறிக்கையில், ``சம்பவம் நடந்த இடத்தில் காவல்துறையினர் இல்லை; காவல்துறையின் ஒத்துழைப்பை ராணுவத்தினர் கேட்கவும் இல்லை. எனவே குடிமக்களைக் கொல்வதுதான் அவர்களின் ஒரே நோக்கமாக இருந்திருக்கிறது” என்று கூறப்பட்டுள்ளது. மேலும், முதல் துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் உடலை ராணுவத்தினர் அவர்கள் முகாமிற்கு எடுத்துச்செல்ல முயன்றதுதான், மோதலுக்கு காரணம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மறைக்க முயன்றனரா ராணுவத்தினர்?
இதுதவிர, மற்றுமொரு குற்றச்சாட்டையும் முன்வைத்திருக்கிறார் மோன் மாவட்டத்தின் பா.ஜ.க தலைவர் கோன்யக். முதலில் 6 பேர் இறந்ததைக் கேள்விப்பட்டு, தான் அந்த இடத்திற்குச் சென்றதாகவும் அப்போது காரில் கட்சிக்கொடி இருந்தும்கூட ராணுவத்தினர் அவரையும், அவர் உடன் இருந்தவர்களையும் நோக்கி சுட்டதாகவும் கூறியிருக்கிறார்.
இதற்கு காரணமாக அவர் சொல்வது, ``நான் அந்த இடத்திற்குச் சென்றபோது ஒரு டிரக் முழுக்க ரத்தக்கறைகளுடன் இருந்தது. இறந்தவர்களின் உடைகளை அகற்றிவிட்டு, ராணுவத்தினர் காக்கி உடையை அவர்களுக்கு அணிவித்துக் கொண்டிருந்தனர். அதை நாங்கள் பார்த்ததுதான் எங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தக்காரணம்” எனத் தெரிவித்திருக்கிறார்.
இப்படி தவறாக அடையாளம் கண்டு பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தியது, அதன்பின்னர் அதை மறைக்க முயன்றது, அந்த சமயத்தில் மீண்டும் பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தியது என ராணுவத்தினர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்துமே அதிர்ச்சிகரமாக உள்ளன.
இதைத் தொடர்ந்து, ராணுவத்தினருக்கு வடகிழக்கு மாநிலங்களில் அதிக அதிகாரம் வழங்கும் AFSPA (Armed Forces Special Powers Act)-ஐ திரும்பப்பெற வேண்டும் எனவும் குரல்கள் வலுத்துவருகின்றன.
கையெழுத்தான 28 ஒப்பந்தங்கள்:
21-வது இந்திய - ரஷ்ய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நேற்று டெல்லி வந்திருந்தார் ரஷ்ய அதிபர் புடின். ஆப்கன் அரசியல் சூழல், சீனாவின் அச்சுறுத்தல் ஆகியவை இந்தியாவிற்கு சவாலாக இருக்கும் சூழ்நிலையில், புடினின் இந்தப் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த சந்திப்பில் பேசிய பிரதமர் மோடி மற்றும் புடின் இருவரும், இந்தியா - ரஷ்யா இடையிலான உறவின் முக்கியத்துவம் குறித்தும், பொதுவான பிரச்னைகள் குறித்தும் குறிப்பிட்டனர். மொத்தம் 28 ஒப்பந்தங்கள் இந்த மாநாட்டில் கையெழுத்தாகியிருக்கின்றன.
ஆங் சான் சூ கி-க்கு 4 ஆண்டுகள் சிறை
மியான்மரின் தேசிய தலைவராக பதவி வகித்து வந்த, ஆங் சான் சூ கி, கடந்த பிப்ரவரி மாதம், ராணுவம் அந்நாட்டு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதும் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டு வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டார். மேலும், பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக 11 வழக்குகளும் அவர்மீது போடப்பட்டு அதற்கான விசாரணைகள் நடந்துவருகின்றன. அதில் கொரோனா விதிகளை மீறியது தொடர்பாகவும், மக்களைத் தூண்டியது தொடர்பாகவும் தொடரப்பட்ட வழக்கில் நேற்று தீர்ப்பு வெளியாகியிருக்கிறது. அதில் அவருக்கு நீதிமன்றத்தால் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது; பின்னர் அது, ராணுவ உயர் அதிகாரிகளால் 2 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. ஆங் சான் சூ கி-யை முடக்குவதற்காக தொடர்ந்து இதுபோன்ற நெருக்கடிகளை அவருக்கு அளித்துவருகிறது மியான்மர் ராணுவம்.
சர்ச்சையான மாணவர் மரணம்:
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே நீர்கோழியேந்தலைச் சேர்ந்த மணிகண்டன் கல்லூரியில் இறுதியாண்டு படித்துவந்த மாணவர். நேற்று முன்தினம் நடந்த காவல்துறையினரின் வாகன சோதனையின்போது, மணிகண்டன் வண்டியை நிறுத்தாமல் சென்றதால் அவரைப் பின்தொடர்ந்து சென்று, பிடித்து பின்னர் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர் போலீஸார். பின்னர், அவரின் பெற்றோர் வந்ததும் அவர்களுடன் அனுப்பி வைத்திருக்கின்றனர். இந்நிலையில், வீடுதிரும்பிய மணிகண்டன் சிறிதுநேரத்தில் உயிரிழந்துவிட்டார். ``காவல்துறையினர் காவல்நிலையத்தில் அவரை தாக்கியதே இதற்கு காரணம்” எனக் குற்றம்சாட்டியிருக்கின்றனர் அவரின் பெற்றோர். ஆனால், காவல் துறையினர் இதை மறுத்துள்ளனர். பிரேதப் பரிசோதனை முடிவுகள் வந்தால்தான் உண்மை தெரியும் எனவும் தெரிவித்திருக்கின்றனர். இந்த சம்பவத்தையடுத்து, பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும், இதில் முழு விசாரணை தேவை எனக் குரல் எழுப்பி வருகின்றனர்.
முற்றும் 🇨🇳 சீன - அமெரிக்க 🇺🇸 பனிப்போர்
கடந்த சில ஆண்டுகளாகவே சீனா மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வந்த மோதல் போக்கானது தற்போது புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது. 2022-ம் ஆண்டின் பிப்ரவரி மாதம் சீனாவில் நடக்கவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டியில், அரசு சார்பில் எந்த அதிகாரிகளும் கலந்துகொள்ள மாட்டார்கள் என அறிவித்திருக்கிறது அமெரிக்கா. சீனாவின் உய்குர் முஸ்லீம்கள் மீதான மனித உரிமை மீறல்கள், இனப்படுகொலை ஆகியவற்றைக் கருத்தில்கொண்டே இந்த முடிவை எடுத்திருப்பதாகவும், அதேசமயம் அமெரிக்க விளையாட்டு வீரர்கள் கலந்துகொள்ள எந்த தடையும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக்ஸை புறக்கணிக்கும் இதுபோன்ற முடிவை எடுத்தால், அதற்கு நிச்சயம் பதிலடி தரப்படும் என ஏற்கெனவே சீன அதிகாரிகள் எச்சரித்திருந்தனர்.
தமிழகத்தில் நேற்று பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை: 719
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை: 10
இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவரான சாரதா மேனன், நேற்று முன்தினம் இரவு தன் 98-வது வயதில் சென்னையில் காலமானர். இவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரங்கல் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க உட்கட்சித் தேர்தலின் முடிவில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக நேற்று அக்கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 🗳
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கழுவேலி ஈரநிலத்தை, பறவைகள் சரணாலயமாக அறிவித்து நேற்று அரசாணை வெளியிட்டிருக்கிறது தமிழக அரசு. இது தமிழகத்தின் 16-வது பறவைகள் சரணாயலயமாக அமைகிறது.
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ₹50,000 நிவாரணம் வழங்குவதற்கு தமிழக அரசு நேற்று அரசாணை வெளியிட்டுள்ளது. நேற்று வரை தமிழகத்தில் 36,539 கொரோனா உயிரிழப்புகள் பதிவாகியிருக்கின்றன.
இன்று மற்றும் நாளைக்கான தமிழக வானிலை முன்னறிவிப்பு ☔️👇
நேற்று மகாராஷ்டிராவில் 2 பேருக்கு ஓமிக்ரான் வேரியன்ட் தொற்று உறுதியானதைத் தொடர்ந்து இந்தியாவின் ஓமிக்ரான் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.
ஆண்டுதோறும் 30 ஏழை மாணவர்களுக்கு ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வு கோச்சிங் அளித்து, பெருமளவில் அவர்களைத் தேர்ச்சிபெறச் செய்த Super 30 ஆனந்த் குமாரை உங்களுக்குத் தெரிந்திருக்கும். அவர் அடுத்த ஆண்டு முதல், தன் கோச்சிங்கை பீகாரைத் தாண்டி, நாட்டின் பிற பகுதி மாணவர்களுக்கும் விரிவுபடுத்த திட்டமிட்டிருக்கிறார். 👏
Disappearing Message வசதி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் வாட்ஸ்அப்பில் இருப்பது அனைவரும் அறிந்ததே. அதன்படி, ஒரு பிரைவேட் சாட்டில் Disappearing Message வசதியை ஆன் செய்தால், அடுத்த 7 நாள்களுக்குப் பிறகு அந்த மெசேஜ் அழிந்துவிடும். இந்த வசதியை நேற்று இன்னும் அப்டேட் செய்திருக்கிறது வாட்ஸ்அப். இதன்மூலம் இனிமேல் ஒவ்வொரு பிரைவேட் சாட்டாக இல்லாமல், மொத்தமாகவே உங்கள் வாட்ஸ்அப் அக்கவுன்ட்டிற்கு Disappearing Message வசதியை ஆன் செய்து கொள்ளலாம். 24 நாள், 7 நாள், 90 நாள் என மூன்று ஆப்ஷன்களிலும் இதைப் பயன்படுத்தலாம். அதன் பின்னர் உங்கள் மெசேஜ்கள் தானாகவே அழிந்துவிடும்.
On This Day - Dec 7
- இந்தியாவின் முப்படைகளைச் சேர்ந்த வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கவும், தேசம் முழுக்க உள்ள பொதுமக்களிடமிருந்து நிதியைப் பெற்று அவர்களின் நலன்களைப் பாதுகாக்கவும் 1949-ம் ஆண்டு முதல் டிசம்பர் 7, கொடி நாளாக அனுசரிக்கப்படுகிறது.
- ஜப்பான், அமெரிக்காவின் கடற்படைத் தளமான பேர்ல் ஹார்பரை தாக்கிய தினம் இன்று (1941). இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா கலந்துகொள்ள இந்த சம்பவமே தூண்டுகோலாக அமைந்தது.
💡எமோஜி கேள்விக்கான விடை:
பெருந்தொற்று, லாக்டௌன், பொருளாதார மந்தநிலை என இரண்டு ஆண்டுகளாகப் பல சோகங்களைத் தாண்டி வந்திருந்தாலும், நாம் அதிகமுறை பயன்படுத்தியிருக்கும் எமோஜி 😂-தானாம். உண்மைதானா?!
2019 மற்றும் 2021-ன் டாப் 10 எமோஜிக்கள் இதோ…
2019: 😂 ❤️ 😍 🤣 😊 🙏 💕 😭 😘 👍
2021: 😂 ❤️ 🤣 👍 😭 🙏 😘 🥰 😍 😊
📣 Note: The Subject Line (TSL) நியூஸ்லெட்டரின் இந்த மெயில் உங்களின் Promotions Tab-ல வந்திருந்தா, அதை அப்படியே Move பண்ணி, Primary Tab-க்கு மாத்திடுங்க. இதன்மூலம் தினமும் TSL-ஐ நீங்க மிஸ் பண்ணாம படிக்கமுடியும். ஒருவேளை இந்த மெயில் உங்க நண்பர்கள் மூலம் வந்திருந்தா, தினமும் உங்க இன்பாக்ஸிற்கு நேரடியாக வர, சப்ஸ்கிரைப் பண்ணிடுங்க. ✅
அவ்வளவுதான்!
The Subject Line-னோட இன்னைக்கு அப்டேட்ஸ் உங்களுக்குப் பிடிச்சிருக்கும்னு நம்புறேன். பிடிச்சிருந்தா கீழ இருக்க பட்டன் மூலமா உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க… இன்னும் ஏதாச்சும் இந்த TSL-ல் மாத்தணும்னா எனக்கு மெசேஜ் பண்ணுங்க! உங்க கருத்துகள் எங்களுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். 🤞
திரும்ப நாளைக்கு காலைல 7 மணிக்கு சந்திப்போம்!
Have a Nice day! ☕️
The Subject Line-ஐ சமூக வலைதளங்களில் பின்தொடர: