☀️ சூரியனைத் தொட்ட நாசாவின் பார்க்கர்
இன்றைய TSL-ன் பிற ஹைலைட்ஸ்: ஜியோவின் 1 ரூபாய் பிளான் | பொய் சொன்னாரா கங்குலி? | தமிழகத்தில் முதல் ஓமிக்ரான் தொற்று | பிரிட்டனில் உச்சம்தொட்ட தினசரி கொரோனா பாதிப்பு |⏱ Reading Time: 4 Mins
ஹாய், ஹலோ… வணக்கம் 👋
வரலாற்றிலேயே முதல்முறையாக, சூரியனை தொட்டுவிட்டு வந்திருக்கிறது மனிதனால் அனுப்பப்பட்ட விண்கலன் ஒன்று. 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவின் நாசாவால் அனுப்பப்பட்ட பார்க்கர் விண்கலன்தான், இந்த சாதனையைச் செய்திருக்கிறது.
இதனால் என்ன பயன்?
விண்வெளி ஆராய்ச்சிகள் தொடங்கிய காலத்திலிருந்தே, பிற கோள்களைப் போலவே சூரியனையும் ஆய்வு செய்யும் பணிகள் தொடங்கின. ஆனால், நேரடியாக சூரியனுக்கே விண்கலன் அனுப்பும் பணிகள் மட்டும் அவ்வளவு சுலபமாக இல்லை. இதனால், இத்தனை ஆண்டுகள் கழித்தும்கூட சூரியன் குறித்த பல கேள்விகளுக்கு நம்மிடம் விடை இல்லை.
அதில் முக்கியமானவை இரண்டு.
சூரியனின் மேற்பரப்பு என்பது பூமியைப் போல திடமான (மலைகள், பாறைகள்) ஒன்றல்ல; அது முழுக்கவும் வாயுவால் ஆன ஒரு நட்சத்திரம். அந்த நட்சத்திரத்தின் மையம்தான் (Core) அதிக வெப்பம் கொண்டது. சுமார் 27 மில்லியன் டிகிரி ஃபாரன்ஹீட்.
அதற்கடுத்த அடுக்குகளைத் தாண்டி, சூரியனின் வெளிப்புறத்தை எடுத்துக்கொண்டால் (நாம் இன்று கண்ணால் காணும் மேற்பகுதி) சுமார் 10,000 டிகிரி ஃபாரன்ஹீட்தான். ஆனால், இதைத் தாண்டி சூரியனுக்கு ஒரு வளிமண்டலமும் இருக்கிறது. இதற்கு கொரோனா எனப் பெயர். இதை நாம் வெறும் கண்களால் பார்க்க முடியாது. ஆனால், சூரிய கிரகண நாட்களில் பார்க்கலாம். அப்போது, சூரியனைச் சுற்றி மங்கலாக ஒரு ஒளிவட்டம் தெரியுமல்லவா? அதுதான்.
அந்த வளிமண்டலத்தின் வெப்ப அளவு சுமார் 3 மில்லியன் டிகிரி ஃபாரன்ஹீட். இங்குதான் விஞ்ஞானிகளுக்கு குழப்பம். உலை போல கொதிக்கும் சூரியனின் மேற்பரப்பில் வெப்பம் குறைவாக இருக்கிறது. ஆனால், அதற்கடுத்து சூழ்ந்திருக்கும் வளிமண்டலத்தில் வெப்பம் அதிகமாக இருக்கிறது?
குளிர்காய தீ மூட்டிவிட்டு, தீயிலிருந்து விலக விலக வெப்பம் குறையாமல், அதிகரித்துக்கொண்டே போனால் எப்படி இருக்கும்? அதுதான் சூரியனிலும் நடக்கிறது. இது எப்படி சாத்தியம், அங்கே எப்படி வெப்பம் உருவாகிறது எனக் குழம்பிப் போய் நிற்கின்றனர் விஞ்ஞானிகள்.
இதற்கு காரணங்களாக பல யூகங்கள் சொல்லப்பட்டாலும் உறுதியான பதில் யாரிடமும் இல்லை. இந்தக் கேள்விக்குத்தான் விடைகாண புறப்பட்டிருக்கிறது பார்க்கர். இதன்மூலம் சூரியனின் இயல்பையும், அதன் செயல்பாட்டையும் நம்மால் கூடுதலாகப் புரிந்துகொள்ள முடியும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
இன்னொரு கேள்வி?
சூரியனிலிருந்து நமக்கு ஒளியும், வெப்பமும் மட்டும் கிடைப்பதில்லை. தொடர்ந்து அங்கிருந்து அதிவேகத்தில் கதிர்வீச்சுகளும், வெப்ப அலைகளும் கூட பூமியை நோக்கி வருகின்றன. இந்த சூரிய புயல்களை புவியின் காந்தப் புலங்கள் தடுத்துவிடுகின்றன.
இருப்பினும், பூமியிலிருந்து 93 மில்லியன் மைல் தொலைவிலிருக்கும் சூரியனிலிருந்து, எப்படி அதிவேகத்தில் சூரிய புயல்கள் வரமுடிகிறது? நமக்கு அடுத்து இருக்கும் கோள்களைக் கூட இவை சென்றடைகின்றன? இந்த ஆற்றல் எங்கிருந்து வருகிறது?
இந்தக் கேள்விக்கும் பார்க்கர் மூலமாக விடை தேடுகின்றனர் நாசா விஞ்ஞானிகள். இந்த சூரிய புயல்களைப் புரிந்துகொள்வது பூமியைப் பாதுகாக்க உதவும் என்றும் நம்புகின்றனர். அதனால்தான் இந்த பார்க்கர் விண்கலனின் பயணம் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.
அப்படியெனில் பார்க்கரின் முயற்சி வெற்றியா?
இன்னும் முழு வெற்றியை எட்டவில்லை. மொத்தம் 21 முறை சூரியனை சுற்றிவந்து அதைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்க வேண்டும் என்பதுதான் பார்க்கரின் டாஸ்க். அதில் 8-வது முறையாக சுற்றிவந்தபோதுதான் முதன்முறையாக சூரியனின் வளிமண்டலத்திற்குள் நுழைந்திருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் நடந்த இந்த நிகழ்வை பலகட்ட ஆய்வுகளுக்குப் பின் நேற்று முன்தினம்தான் நாசா அறிவித்திருக்கிறது. எனவே இன்னும் பல சுற்றுகள் மீதமிருக்கின்றன. 2025-ல் எப்படியும் சூரியனுக்கு மிக நெருக்கமாக, 4 மில்லியன் மைல் தொலைவு வரை செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதுவரைக்கும் சூரியனின் காந்தப்புலம் பற்றிய அனைத்து தகவல்களையும் சேகரிப்பதுதான் பார்க்கரின் பணி. அதைத் தொடர்ந்தே பார்க்கரின் பயணம் நிறைவடையும்.
ஏற்கெனவே 2019-ல் பார்க்கர் சேகரித்த தகவல்கள், சூரிய புயல் குறித்து நிறைய புதிய தகவல்களை வழங்கியிருக்கின்றன.
இன்னும் 3 ஆண்டுகள் நமக்கு கிடைக்கும் தகவல்கள், சூரியன் குறித்த இன்னும் பல புதிர்களுக்கு விடை சொல்லும் என்பதே விஞ்ஞானிகளின் எதிர்பார்ப்பு.
இந்தியா
குரூப் கேப்டன் வருண் சிங் மரணம்:
குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், உயிருடன் மீட்கப்பட்ட ஒரே வீரரான குரூப் கேப்டன் வருண் சிங், பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் கடந்த சில நாள்களாக தீவிர சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், நேற்று அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். வருண் சிங்கின் மறைவுக்கு பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
செமிகண்டக்டர் உற்பத்திக்கு ₹76,000 கோடி ஒதுக்கீடு
பெட்ரோல், டீசல் போலவே செமிகண்டக்டர்களும் நாட்டின் பொருளாதாரத்தில் முக்கியமான பங்கு வகிக்கும் காலம் இது. அதுவும் குறிப்பாக தற்போது உலகெங்கும் நிலவும் செமிகண்டக்டர் தட்டுப்பாட்டால் ஆட்டோமொபைல் முதல் எலக்ட்ரானிக் வரை பல துறை நிறுவனங்களும் சிப்கள் கிடைக்காமல் திண்டாடுகின்றன. இந்நிலையில், நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு இந்தியாவில் செமிகண்டக்டர் மற்றும் டிஸ்ப்ளே உற்பத்தியை ஊக்குவிக்க, நேற்று 76,000 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறது மத்திய அரசு. இதன்மூலம் 1.7 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு புதிய முதலீடுகளும், 1.35 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும் என அரசு கணித்துள்ளது.
தள்ளிப்போகும் கிரிப்டோகரன்சி மசோதா?
கிரிப்டோகரன்சிகளுக்கான ஒழுங்குமுறை மசோதா நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது அது சாத்தியமில்லை என தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மசோதா அறிமுகமாக வாய்ப்பு குறைவு என்றும், அப்படியே மசோதா தயாரானாலும் அது பாராளுமன்ற நிலைக்குழுவுக்கு விரிவான ஆலோசனைகளுக்கு அனுப்பப்பட்டு அதன்பின்பே அவையில் தாக்கல் செய்யப்படும் என்றும் அரசு தரப்பு வட்டாரங்கள் சொல்வதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வங்கி ஊழியர்கள் 2 நாள்கள் வேலை நிறுத்தம்:
வங்கிகளை தனியார் மயப்படுத்துவதற்கான மசோதாவை இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கொண்டுவரக்கூடாது என வலியுறுத்தி இன்றும் நாளையும் நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் வேலை நிறுத்தல் நடைபெறுகிறது. இதையடுத்து, வங்கி சேவைகள் இந்த இரண்டு நாள்கள் பாதிக்கப்படலாம்.
பொய் சொன்னாரா கங்குலி?
ODI கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி ஏன் நீக்கப்பட்டார், ரோஹித்துக்கும் கோலிக்கும் என்ன பிரச்னை, தென்னாப்பிரிக்க தொடரில் விளையாடுவாரா மாட்டாரா என இரண்டு நாள்களாகப் பல்வேறு சர்ச்சைகள் ஓடிக்கொண்டிருந்தன. இதுதொடர்பாக நேற்று பத்திரிகையாளர்களிடம் பேசிய கோலி, தென்னாப்பிரிக்க தொடரில் தான் பங்கேற்பதாகவும், ரோஹித்துக்கும் தனக்கும் இடையில் எந்தப் பிரச்னையும் இல்லையெனவும் தெரிவித்தார். ODI கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்படுவது தொடர்பாக தேர்வுக்குழுவினர், டெஸ்ட் தொடரின் தேர்வுக்குழு மீட்டிங்கிற்கு ஒன்றரை மணி நேரம் முன்னர்தான் தன்னிடம் கூறியதாகவும் குறிப்பிட்டார். மேலும், ``T20 கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக பி.சி.சி.ஐ நிர்வாகத்தை தொடர்புகொண்டு தெரிவித்தபோது யாரும் அதை ஆட்சேபிக்கவில்லை. என் முடிவை யாரும் மறுபரிசீலனை செய்யவும் சொல்லவில்லை. அது தொடர்பாக வந்த தகவல்கள் சரியல்ல” என்றும் தெரிவித்தார். இதுதான் புதிய சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. ஏனெனில், அண்மையில்தான் பி.சி.சி.ஐ தலைவர் கங்குலி, கோலியை T20 பதவியிலிருந்து ராஜினாமா செய்யவேண்டாம் என தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொண்டதாகக் கூறியிருந்தார்.
தமிழகம்
தமிழகத்தில் முதல் ஓமிக்ரான் தொற்று:
நைஜீரியாவிலிருந்து தமிழகம் வந்த 47 வயதைச் சேர்ந்த ஒரு நபருக்கு கொரோனா ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடன் பயணம் செய்த ஒருவருக்கும், அவர் குடும்பத்தினர் 7 பேருக்கும் கோவிட் 19 உறுதியாகியுள்ளது. ஓமிக்ரானா என அறிய இவர்கள் அனைவரின் மாதிரிகளும் ஜீனோம் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன.
முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் ரெய்டு:
முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் தங்கமணியின் வீடு, அலுவலகம், அவர் உறவினர்கள் வீடு என தமிழகம், ஆந்திரா முழுக்க மொத்தம் 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சார்பில் நேற்று சோதனை நடைபெற்றது. சோதனையின் முடிவில் கண்டுபிடிக்கப்பட்ட 2.37 கோடி ரூபாயில், 2.16 கோடி ரூபாய் கணக்கில் காட்டப்படவில்லை என்பதால் அதை லஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்திருக்கின்றனர். மேலும், 1.13 கிலோ தங்கம், 40 கிலோ வெள்ளி, முக்கிய ஆவணங்கள், செல்போன்கள், வங்கி பாதுகாப்பு பெட்டக சாவிகள் மற்றும் கணினி ஹார்டு டிஸ்க்குகள் உள்ளிட்டவையும் கைப்பற்றப்பட்டுள்ளன.
நீர்நிலை ஆக்கிரமிப்பு விவகாரத்தில் தமிழக அரசு பதில்
தமிழக நீர்நிலைகளில் செய்யப்பட்டிருக்கும் ஆக்கிரமிப்புகள் குறித்து, விரிவான அறிக்கை தாக்கல் செய்யவில்லையெனில், அரசின் தலைமைச் செயலாளர் நேரில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்திருந்தது. இந்நிலையில், நேற்று தமிழக அரசு சார்பில், தமிழகத்தின் 313 தாலுகாக்களிலும் உள்ள நீர்நிலைகளின் விவரங்கள் அடங்கிய சிடி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்தது நீதிமன்றம்.
தமிழகத்தில் நேற்று பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை: 640
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை: 11
இன்று மற்றும் அடுத்த இரு நாளைக்கான வானிலை முன்னறிவிப்பு ☔️👇
ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதிலிருந்து இதுவரைக்கும் 7 மனைகள் மட்டுமே, வெளிநபர்களால் வாங்கப்பட்டுள்ளது என நேற்று நாடாளுமன்றத்தில், உள்துறை இணை அமைச்சர் அளித்த பதிலில் தெரியவந்துள்ளது.
பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் 78,610 கொரோனா தொற்றுகள் உறுதியாகியிருக்கின்றன. கொரோனா பெருந்தொற்று தொடங்கிய காலத்திலிருந்து, அந்நாட்டில் இதுதான் ஒருநாளின் உச்சபட்சம்.
நீண்ட தாமதத்திற்குப் பிறகு நேற்று தன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை, முதல் 100 வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்துவிட்டது ஓலா நிறுவனம். உற்பத்தியை வேகப்படுத்தி பிற வாடிக்கையாளர்களுக்கும் விரைவில் டெலிவரி செய்துவிடுவோம் என்றும் அறிவித்துள்ளது.
- 30 நாள் வேலிடிட்டி மற்றும் 100 MB டேட்டா கொண்ட ப்ரீபெய்டு பிளானை ஒரு ரூபாய்க்கு அறிமுகம் செய்திருக்கிறது ஜியோ நிறுவனம். வாய்ஸ்கால் மட்டுமே பேச விரும்புபவர்களுக்கு ஏற்ற பிளான் இது.
On This Day - 1971
- 1971-ல் வங்கதேச விடுதலைக்காக இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த 13 நாள் போர் முடிவுக்கு வந்த தினம் இன்று. இதையடுத்து ஆண்டுதோறும் டிசம்பர் 16-ம் தேதி விஜய் திவாஸாக கொண்டாடப்படுகிறது.
🔴 இதுவரைக்கும் TSL-ஐ தொடர்ந்து படிச்சிட்டு வர்றீங்க; எனவே இதுபற்றிய உங்க கருத்தை தெரிஞ்சுக்க விரும்புறோம். அதனால், இந்த லிங்கை க்ளிக் பண்ணி உங்களோட ரேட்டிங்கைப் பதிவு பண்ணிடுங்க. TSL-ஐ மேம்படுத்த இது எங்களுக்கு உதவியா இருக்கும் 🤗
அவ்வளவுதான்!
The Subject Line-னோட இன்னைக்கு அப்டேட்ஸ் உங்களுக்குப் பிடிச்சிருக்கும்னு நம்புறேன். பிடிச்சிருந்தா கீழ இருக்க பட்டன் மூலமா உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க… இன்னும் ஏதாச்சும் இந்த TSL-ல் மாத்தணும்னா எனக்கு மெசேஜ் பண்ணுங்க! உங்க கருத்துகள் எங்களுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். 🤞
திரும்ப நாளைக்கு காலைல 7 மணிக்கு சந்திப்போம்!
Have a Nice day! ☕️
The Subject Line-ஐ சமூக வலைதளங்களில் பின்தொடர: