🏠 கட்டுக்குள் வந்துவிட்டதா இந்தியாவின் மக்கள் தொகை?
In Today's Edition: தேசிய குடும்ப நல சர்வே சொல்வது என்ன? | ஐரோப்பாவில் உயரும் கோவிட் | பரவும் புதிய வகை கொரோனா; மத்திய அரசு அலர்ட் | சாதனை படைத்த T20 உலகக்கோப்பை TRP | Reading Time: 4 Mins
ஹாய், ஹலோ… வணக்கம் ☕️
📣 Note: The Subject Line (TSL) நியூஸ்லெட்டரின் இந்த இந்த மெயில் உங்களின் Promotions Tab-ல வந்திருந்தா, அதை அப்படியே Move பண்ணி, Primary Tab-க்கு மாத்திடுங்க. இதன்மூலம் தினமும் TSL-ஐ நீங்க மிஸ் பண்ணாம படிக்கமுடியும். ஒருவேளை இந்த மெயில் உங்க நண்பர்கள் மூலம் வந்திருந்தா, தினமும் உங்க இன்பாக்ஸிற்கு நேரடியாக வர, சப்ஸ்கிரைப் பண்ணிடுங்க. Happy Reading! 😊
இன்றைய Weather Alert: ⛈
வங்ககடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்றும் தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்யவிருக்கு. நேற்று இரவு நிலவரப்படி 10 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டிருக்கு.
- சென்னையில் இன்றைக்கு ஒரு சில இடங்களில் மட்டும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யலாம்.
இன்றும், நாளைக்குமான வானிலை முன்னெச்சரிக்கை 👇
தேசிய குடும்ப நல சர்வே: என்ன சொல்கிறது? 🏡
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியாவில் எடுக்கப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு, நாட்டு மக்களின் நிலையைப் பற்றி புரிந்துகொள்ள துல்லியமான தரவுகளைத் தரும். எனவே அதன் முடிவுகள் மீது மக்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் அதிக எதிர்பார்ப்பு இருக்கும்.
அந்த அளவுக்கு துல்லியம் இல்லையென்றாலும்கூட, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் தேசிய குடும்ப நல சர்வே (National Family Health Survey- NFHS)-யின் முடிவுகளையும் ஆய்வாளர்களும், அரசு நிர்வாகிகளும் அதேபோல கூர்ந்து கவனிப்பார்கள். மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு முந்தைய ட்ரெய்லராகவே இதைக் கருதுவார்கள்.
1992-93-லிருந்து 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த NFHS எடுக்கப்பட்டு வருகிறது. அப்படி 2019-21 ஆகிய ஆண்டுகளில் எடுக்கப்பட்ட நாட்டின் ஐந்தாவது NFHS-யின் முடிவுகள் நேற்று முன்தினம் மத்திய சுகாதாரத் துறையால் வெளியிடப்பட்டது. அதில் தெரியவந்திருக்கும் புள்ளி விவரங்களில் சில மகிழ்ச்சியளிப்பவையாகவும், சில கவலையளிப்பதாகவும் உள்ளன.
NFHS எதற்காக?
நாட்டின் பாலின விகிதம், குழந்தை பிறப்பு விகிதம், ஊட்டச்சத்து இலக்குகள், தனிநபர் ஆரோக்கியத்திற்கான இலக்குகள் உள்ளிட்டவற்றைத் தெரிந்துகொள்ள நடத்தப்படுவதுதான் NFHS. இந்தமுறை 2019-21-க்கு இடைப்பட்ட காலத்தில் நாட்டின் 636,699 குடும்பங்களிடம் இந்த சர்வே நடத்தப்பட்டு அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதில் தெரியவந்திருக்கும் நல்ல செய்தி?
முதல் நல்ல செய்தி, நாட்டின் மொத்த குழந்தை பெற்றுக்கொள்ளும் விகிதம் (Total Fertility Rate - TFR) 2.0 ஆக குறைந்திருக்கிறது. இதற்கு முன்பு வெளியான NFHS-4-ல் (2015-16 ஆண்டுக்கானது) இந்த TFR 2.2 ஆக இருந்தது. இதன் முக்கியத்துவம் என்ன?
ஒரு பெண் தன் வாழ்நாளில் பெற்றுக்கொள்ளும் சராசரி குழந்தைகள் 2 என்பதைத்தான், TFR = 2.0 என்பது உணர்த்துகிறது. ஐ.நா-வின் கணக்குப்படி, ஒரு நாட்டின் TFR 2.1 ஆக இருந்தால், அந்நாட்டின் மக்கள் தொகை சீராக இருக்கும். இதைவிட அதிகரித்தாலோ, குறைந்தாலோ அதற்கேற்ப மக்கள் தொகையும் வேகமாக அதிகரிக்கும் அல்லது குறையும். தற்போது இந்தியாவின் TFR 2.0 ஆக இருப்பதால் இந்தியாவின் மக்கள் தொகை வளர்ச்சி கொஞ்சம் கட்டுக்குள் வந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
அப்படியெனில், இந்தியாவின் மக்கள் தொகை குறைகிறதா?
2.1-லிருந்து 2.0 ஆக மாறியதே பெரிய வீழ்ச்சி எனப் பார்க்க முடியாது. உதாரணமாக சீனாவின் TFR 1.5-க்கும் குறைவு. இந்தியா அந்த அளவுக்கெல்லாம் செல்லவில்லை.
மேலும், மக்கள் தொகைப் பெருக்கம் என்பது இந்தியாவின் மிக முக்கியமான பிரச்னையாக பார்க்கப்பட்டு, 1970-களிலிருந்தே அதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடங்கின. இருந்தும்கூட இந்தியாவின் வளர்ச்சி அதிகமாக இருந்ததால், சீனா போல இங்கும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் எனக் குரல்கள் எழுந்தன. ஆனால், அப்படி எதுவும் இல்லாமல், விழிப்புணர்வு மற்றும் கருத்தடை சாதனங்களின் உதவியுடனே இந்தியா மக்கள் தொகையைக் கட்டுக்குள் கொண்டுவந்திருப்பது சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. எனவே இப்போதைக்கு இந்தியாவின் மக்கள் தொகை குறையவில்லை. மாறாக, வளர்ச்சி விகிதம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே அதிக TFR கொண்ட மாநிலம் - பீகார் - 3.0 , குறைவான TFR கொண்ட மாநிலங்கள் - பஞ்சாப், மேற்கு வங்கம் - 1.6
மத்திய அரசின் கணிப்பு படி, 2031-ல் இந்தியா சீனாவின் மக்கள் தொகையை விஞ்சலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
NFHS-ன் பிற முக்கியமான ஹைலைட்ஸ்
இந்த சர்வேயில் தெரியவந்த இன்னொரு சிறப்பம்சம், முதல்முறையாக நாட்டில் ஆண்களின் எண்ணிக்கையைவிட பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. நாட்டில் 1020 பெண்களுக்கு 1000 ஆண்களே இருக்கின்றனர். 1881-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு முதல் இப்போது வரை, இப்படி பெண்களின் விகிதம் அதிகமாக இருப்பது இதுவே முதல்முறை.
NFHS 4-ன் படி 15-49 வயது வரையிலான பெண்களில் ரத்தசோகையால் பாதிக்கப்படுபவர்களின் சதவீதம் 53% ஆக இருந்தது. அதன்பின் அரசு இதைத் தடுக்க பல்வேறு முயற்சிகள் எடுத்தபின்பும்கூட, இந்தமுறை இது 57% ஆக அதிகரித்திருக்கிறது.
நவீன கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்துவோரின் சதவீதம் 47.8%-லிருந்து 56.5 ஆக உயர்ந்திருக்கிறது.
பெண்கள் தாங்களே தங்கள் வங்கிக்கணக்குகளை நிர்வகிப்பது, 53%-லிருந்து 78% ஆக உயர்ந்திருக்கிறது.
உடல் பருமன், ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவை குழந்தைகள் மற்றும் பெண்களிடையே அதிகமாக காணப்படுகின்றன.
குழந்தை திருமணங்கள் 27%-லிருந்து 23% ஆக குறைந்திருக்கிறது.
உத்தரப்பிரதேச தேர்தல் நெருங்குவதையொட்டி, பிரதமர் மோடி அடிக்கடி அங்கு விசிட் அடிக்கத் தொடங்கிவிட்டார். அண்மையில் பூர்வாஞ்சல் தேசிய நெடுஞ்சாலையைத் திறந்துவைத்தவர், நேற்று நொய்டாவில் சர்வதேச விமான நிலையம் ஒன்றிற்கு அடிக்கல் நாட்டியிருக்கிறார். இந்த விமான நிலையம் பயன்பாட்டுக்கு வந்தால், இந்தியாவிலேயே அதிக சர்வதேச விமான நிலையங்கள் இருக்கும் மாநிலமாக உத்தரப்பிரதேசம் (மொத்தம் 5) இருக்கும்.
முன்னேறிய பிரிவினர் மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இடஒதுக்கீட்டில் பயன்பெறுவதற்கு, ஆண்டு வருமானம் 8 லட்சத்திற்குள் இருக்கவேண்டும் என விதி இருக்கிறது. இந்த 8 லட்சம் என்ற வரம்பு எப்படி நிர்ணயைக்கப்பட்டது என உச்சநீதிமன்றம் பலமுறை கேள்வி எழுப்பியிருந்தது. இந்நிலையில், அந்த வரம்பை மறுபரிசீலனை செய்வதாக நேற்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது அரசு. நீட் அகில இந்திய கலந்தாய்வும் அதுவரை நடத்தப்பட மாட்டாது எனவும் தெரிவித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்றின் மையமாக மீண்டும் மாறியிருக்கிறது ஐரோப்பா. கடந்த வாரத்தில் பதிவான கொரோனா தொற்றுகளில் கிட்டத்தட்ட 60% ஐரோப்பிய நாடுகளில் பதிவானவையே. பிரிட்டன் (~43,000 - புதன்கிழமை நிலவரம்), போலந்து (~28,000), செக் குடியரசு (~25,000), நெதர்லாந்து (~24,000), பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் தினந்தோறும் பதிவாகும் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை அதிக அளவில் உயர்ந்திருக்கிறது.
தமிழகத்தில் கோவிட் தடுப்பூசியின் முதல் டோஸ் இதுவரை 76% பேருக்கு போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இரண்டு டோஸ்களும் 40% பேருக்கு போடப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்களைச் செயல்படுத்த, கரூர் மாவட்ட ஆட்சியர் முட்டுக்கட்டை போடுவதாகக்கூறி, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் கரூர் எம்.பி.ஜோதிமணி.
``கரூர் பள்ளி மாணவியின் தற்கொலை வழக்கில், தன்னை இணைத்து தவறாகப் பேசுகின்றனர்” எனக் கடிதம் எழுதிவைத்துவிட்டு, தற்கொலை செய்துகொண்டிருக்கிறார் அந்தப் பள்ளியின் ஆசிரியர்.
நீலகிரி மாவட்டத்தின் ஆட்சியராகப் பணியாற்றிய இன்னசன்ட் திவ்யாவை இடமாறுதல் செய்ய தமிழக அரசு செய்த முயற்சிகள் அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்தின. இந்நிலையில் நீலகிரியின் புதிய ஆட்சியராக எஸ்.பி.அம்ரித் நியமிக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் முடிந்த T20 உலகக்கோப்பையில், இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போட்டிதான் இதுவரை T20 வரலாற்றிலேயே அதிகம்பேர் பார்த்த போட்டி என அறிவித்திருக்கிறது ஐ.சி.சி. 2016-ல் நடந்த இந்தியா - மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான அரையிறுதிப் போட்டியே இதற்கு முன்பு அந்த சாதனையை தன்வசம் வைத்திருந்தது.
தென்னாப்பிரிக்கா, ஹாங்காங், போட்ஸ்வானா ஆகிய நாடுகளில் கொரோனாவின் புதிய வேரியன்ட் B.1.1529 பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதால் இந்த நாடுகளிலிருந்து வரும் பயணிகளை தீவிரமாக பரிசோதிக்கவும், கண்காணிக்கவும் மத்திய அரசு மாநிலங்களை எச்சரித்துள்ளது.
10 ரூபாயாக இருந்த ரயில்வே பிளாட்ஃபார்ம் கட்டணம், சில மாதங்களுக்கு முன் கோவிட் 19-ஐ காரணம் காட்டி 50 ரூபாயாக உயர்த்தப்பட்டது. தற்போது அதை மீண்டும் பழையபடி 10 ரூபாயாக குறைத்திருக்கிறது தென்னக ரயில்வே. 🚇
அமெரிக்காவில் இன்று Black Friday என்பதால், அங்கு அனைத்து கடைகள் மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் தளங்களிலும் ஏராளமான தள்ளுபடிகள் வழங்கப்படும். அங்கிருந்த இந்தக் கலாசாரத்தை இ-காமர்ஸ் தளங்கள் தற்போது இந்தியாவிலும் பின்பற்றுகின்றன. எனவே இங்கும் சிலபல தள்ளுபடிகளை இன்று எதிர்பார்க்கலாம். எனவே, உங்கள் Wishlist-ல் இருக்கும் பொருள்கள் ஏதேனும் இன்று ஆஃபரில் வருகிறதா என செக் செய்துகொள்ளுங்கள்! 🛍
அவ்வளவுதான்!
The Subject Line-னோட இன்னைக்கு அப்டேட்ஸ் உங்களுக்குப் பிடிச்சிருக்கும்னு நம்புறேன். பிடிச்சிருந்தா கீழ இருக்க பட்டன் மூலமா உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க… இன்னும் ஏதாச்சும் இந்த லிஸ்ட்ல சேர்க்கணும், இருக்குற விஷயங்கள்ல ஏதாச்சும் மாத்தணும்னா எனக்கு மெசேஜ் பண்ணுங்க!
திரும்ப நாளைக்கு காலைல 7 மணிக்கு சந்திப்போம்!
Have a Nice day! ☕️
The Subject Line-ஐ சமூக வலைதளங்கள் மூலம் பின்தொடர:
செய்திகளை காணொளியிலேயே பார்த்து தெரிந்து கொண்ட அண்மைக்காலத்தில், மறுபடியும் செய்தித்தாள் படித்தது போன்ற தெளிவு..நன்றி