🏷 இந்தியர்களின் டேட்டா விற்பனைக்கு! - என்ன செய்கிறது மத்திய அரசு?
In Today's Edition: புடினின் முடிவுக்கு உலகின் ரியாக்ஷன் | ஃபேஸ்புக்கிற்கும் வந்த Reels | கிரிப்டோ விளம்பரங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் | ஜாமீன் கிடைக்காத ஜெயக்குமார் | Reading Time: ⏱ 5 Mins
Good Morning ☕️
இன்றைய தினத்தின் டாப் அப்டேட்ஸ் இதோ…
மத்திய அமைச்சகங்கள் தங்கள் வசம் வைத்திருக்கும் தரவுகளை (Data), தனியார் மற்றும் தனிநபர்களுக்கு விற்பதற்கு ஆலோசித்து வருகிறது மத்திய அரசு. இதற்கான வரைவு அறிக்கையை அண்மையில் வெளியிட்டிருக்கிறது மத்திய மின்னணு மற்றும் தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சகம்.
இதன் முக்கியத்துவம் என்ன?
இதைத் தெரிந்துகொள்வதற்கு முன் Personal & Non Personal Data-வைப் பற்றி ஓர் உதாரணத்துடன் பார்த்துவிடுவோம்.
தற்போது நாம் வைத்திருக்கும் வாகனங்களின் பதிவு எண், மாடல், இன்ஷூரன்ஸ், காலாவதி தேதி போன்ற அனைத்து விவரங்களும், நம் பெயர், பாலினம், முகவரி உள்ளிட்ட தகவல்களோடு சேர்ந்து மத்திய அரசின் Vahan தளத்தில் இருக்கும்.
இந்த Data-வை வைத்து, ஒவ்வொரு தனிநபரின் வாகன விவரங்களையும் அரசு அறிந்துகொள்ள முடியும். இப்படி ஒரு தனிநபரின் அடையாளத்தோடு அறியப்படுபவை Personal Data. பெயர், முகவரி, தொலைபேசி எண் போன்ற அடையாளங்களோடு சேர்ந்தது இது.
இதுவே தனிநபரின் அடையாளம் இன்றி, ஒரு ஊரில் இத்தனைபேர் இந்த மாடல் பைக் வைத்திருக்கிறார்கள், இத்தனைபேர் இன்ஷூரன்ஸ் இல்லாமல் இருக்கிறார்கள், இத்தனை வாகனங்கள் இருக்கிறார்கள் எனப் பலரின் தகவல்களை சேர்த்து பொதுவாக தொகுத்தால், அது Non Personal Data.
தற்போது இந்த Non Personal Data-வைத்தான் விற்பனை செய்ய திட்டமிட்டிருக்கிறது அரசு.
எதற்காக இந்த திட்டம்?
மக்கள் தொகை விவரங்கள், ஆதார், பான், வாஹன் எனப் பல தரவுத்தொகுப்புகளை (Data set) தன்வசம் வைத்திருக்கிறது மத்திய அரசு. கொள்கை முடிவுகள் எடுக்கவும், திட்டங்களை செயல்படுத்தவும் இவற்றைப் பயன்படுத்திக்கொள்கிறது. ஆனால், முழுமையாகப் பயன்படுத்தப்படுத்திக்கொள்கிறதா என்றால் இல்லை. ஒரு அமைச்சகத்தின் தரவுகளை இன்னொரு அமைச்சகம் பயன்படுத்துவதிலேயே நிறைய சிக்கல்கள் இருக்கின்றன.
இந்தப் பிரச்னைகளைத் தீர்த்து, அனைத்து அமைச்சகங்களும் தங்களுக்குள் பொதுவான தரவுகளைப் பகிர்ந்துகொள்ள வழி செய்வது முதல் இலக்கு.
இப்படிப்பட்ட தரவுகளை அரசு துறைகளுக்கு மட்டுமன்றி, மாநில அரசுகள், ஆய்வாளர்கள், தனியார் நிறுவனங்கள், தனிநபர்களுக்கு விற்று லாபம் பார்ப்பதும், பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படுத்துவதும் முக்கிய இலக்கு.
இதற்காகத்தான், `India Data Accessibility and Use Policy’-ஐ வடிவமைத்திருக்கிறது அரசு.
என்ன சொல்கிறது இந்த வரைவு அறிக்கை?
வரைவு அறிக்கையில் சொல்லப்பட்டிருப்பதன்படி,
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின்கீழ், `India Data Office’ என்ற புதிய துறை உருவாக்கப்படும். இதேபோல அனைத்து அமைச்சகங்களிலும் தனி Data Management Unit-கள் அமைக்கப்பட்டு, அதற்கென Chief Data Officer (CDO)-ரும் நியமிக்கப்படுவார். துறைசார்ந்த Data-வுக்கு இவர்களே பொறுப்பு.
அனைத்து அமைச்சகங்களும் வணிகரீதியாக (நிறுவனங்களுக்கு) அல்லது சமூக / பொருளாதாரரீதியாக (அரசுக்கு) மிகவும் உபயோகமுள்ள Data set-களைக் கண்டறிந்து அவற்றை தரம் உயர்த்தி வெளியிடவேண்டும். இதற்கான விலைகளை சம்பந்தப்பட்ட துறைகளே நிர்ணயித்து விற்பனை செய்துகொள்ளலாம்.
இந்த டேட்டாவை பிற துறைகளுடன் எளிமையாகப் பகிர்ந்துகொள்வதற்கும், சம்பந்தப்பட்ட துறைகள் ஆவனசெய்யவேண்டும்.
இவைதான் பொதுவான அம்சங்கள். இந்த வரைவு குறித்து பொதுமக்கள் மார்ச் 18-ம் தேதி வரை தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம்.
இதனால் தனியாருக்கு என்னென்ன நன்மை?
மேலே பார்த்த Vahan உதாரணத்தையே எடுத்துக்கொள்வோம். தற்போதைய இந்த முயற்சிக்கு முன்பாகவே, 2019-ம் ஆண்டு ஆர்.சி புக் மற்றும் லைசென்ஸ் விவரங்கள் கொண்ட தரவுகளை மொத்தமாக தனியார் நிறுவனங்களுக்கு விற்றது மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சகம். வங்கிகள், கார் நிறுவனங்கள், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் என மொத்தம் 142 நிறுவனங்கள் இந்த டேட்டாவை வாங்கின.
இப்படி அரசிடமிருந்து கிடைக்கும் இதுபோன்ற துல்லியமான Data set-கள், இந்திய சந்தையைப் புரிந்துகொள்ளவும், அதற்கேற்ப திட்டங்களை வகுக்கவும் தனியாருக்கு உதவிபுரிகின்றன.
தற்போது பல்வேறு துறைகளில் கால்பதித்திருக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு இந்த Data set-கள் வரப்பிரசாதம். 2025-க்குள் இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள பொருளாதாரமாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டிருக்கும் நிலையில், அதற்கு இந்த தரவுப்பகிர்வு ஊக்கமாக இருக்கும் என அரசு கருதுகிறது. கூடவே, அனைத்து துறைகளுக்கும் வருமானமும் கிடைக்கிறது.
அப்படியெனில் ரொம்ப நல்ல விஷயம்தானே?
நிச்சயமாக, இது வரவேற்கத்தக்க முயற்சிதான். ஆனால், இதில் பிரைவசி சிக்கல்களும் இல்லாமல் இல்லை. உதாரணமாக, Vahan டேட்டாவை 2019 முதல் தனியாருக்கு விற்கத்தொடங்கிய அரசு, ஓராண்டிலேயே அதைக் கைவிட்டது. காரணம், Vahan-ல் Personal Data-வும் இருந்தது. அது மிகப்பெரிய பிரைவசி அச்சுறுத்தலாக மாறியது.
இப்படிப்பட்ட பிரைவசி சிக்கல்களை எதிர்கொள்ள, இப்போது இருக்கும் சட்டங்கள் போதாது. நீண்டகாலமாக தயாராகிக்கொண்டிருக்கும் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதாவும் (Personal Data Protection Bill) இன்னும் சட்டமாகவில்லை. எனவே உரிய பாதுகாப்பு நடைமுறைகளுக்குப் பிறகே, இந்த முயற்சிகளை முன்னெடுக்கவேண்டும் என்பது நிபுணர்களின் கருத்து.
இதில் விற்பனை செய்யப்படும் தரவுகள், Non Personal Data என்றாலும், அவற்றிலிருந்து Personal Data-ஐப் பெறவும் வாய்ப்புகள் இருக்கின்றன. அப்படி நடக்கும்பட்சத்தில் அந்த தரவு கசிவுகளை, அரசு எப்படி கையாளும் என்ற கேள்வி எழுகிறது. உதாரணமாக, Vahan டேட்டாவை விற்பனை செய்வதை அரசு நிறுத்தினாலும், ஏற்கெனவே விற்ற 142 நிறுவனங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை தடுக்க எதுவும் செய்யவில்லை.
இதுபோன்ற பிரைவசி பிரச்னைகளைப் பின்தள்ளிவிட்டு, வணிகரீதியான முயற்சியாக மட்டுமே இதை முன்னெடுத்தால், இந்தியர்களின் Data-விற்கு அரசிடமிருந்தே அச்சுறுத்தல் உருவாகும் என்பதுதான் இதிலிருக்கும் சிக்கல். திட்டத்தின் இறுதிவடிவத்தில் இந்த சிக்கலுக்கு தீர்வு இருக்குமா எனப் பார்ப்போம்.
1. புடினின் முடிவுக்கு உலகின் ரியாக்ஷன் என்ன?
கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவுபெற்ற கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள இரண்டு பகுதிகளை தன்னாட்சி பெற்ற தனிப்பிரதேசங்களாக அறிவித்திருந்தார் புடின். அதையடுத்த கடந்த இரண்டு நாள்களில், ரஷ்யாவைச் சுற்றி நிறைய நடந்துவிட்டது.
புடின் தன் முடிவை அறிவித்தபிறகு நடைபெற்ற ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில், எந்த நாடுகளும் ரஷ்யாவுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இந்தியாவும், புடினின் இந்த முடிவு குறித்து எதுவும் கருத்து தெரிவிக்காமல், உக்ரைனில் அமைதி நிலவவேண்டும் என மட்டும்கூறி நடுநிலை வகித்தது. இதை ரஷ்யாவும் வரவேற்றுள்ளது. மேலும், அமெரிக்கா அண்மையில் ரஷ்யா விதித்துள்ள பொருளாதார தடை, இந்தியாவுடனான S-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு ஒப்பந்தத்தை எந்த வகையிலும் பாதிக்காது எனவும் தெரிவித்துள்ளது.
இதுவரை அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய யூனியன், ஜெர்மன் ஆகியவை ரஷ்யா மீதும், ரஷ்ய தொழிலதிபர்கள் மீதும், ரஷ்ய வங்கிகள் மீதும் முதல்கட்ட பொருளாதாரத் தடைகளை விதித்திருக்கின்றன. ரஷ்யா மீண்டும் உக்ரைனில் எல்லை மீறினால் இன்னும் தீவிரமான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் எனவும் இந்நாட்டு தலைவர்கள் எச்சரித்திருக்கின்றனர்.
எந்நேரமும் ரஷ்யாவின் ஊடுருவல் இருக்கலாம் என்பதால், ஹை அலர்ட்டில் இருக்கிறது உக்ரைன். ரஷ்யாவில் வசிக்கும் 30 லட்சம் உக்ரைனியர்களையும் அங்கிருந்து சொந்த நாட்டிற்கு திரும்ப அறிவுறுத்தியிருக்கிறது. நாடு முழுக்க எமெர்ஜென்சியும் அறிவித்துவிட்டது.
முன்பைவிட ரஷ்யாவின் படைகள், உக்ரைனுக்கு இன்னும் நெருக்கமாக வந்து முகாமிட்டிருப்பதாக அமெரிக்கா தெரிவித்திருக்கிறது. இந்தப் பதற்றத்தால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும், 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நேற்று ஒரு பேரல் 99 டாலராக உயர்ந்திருக்கிறது.
2. கிரிப்டோ விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு
கிரிப்டோ முதலீடுகளின் லாபத்திற்கு, பட்ஜெட்டில் 30% வரிவிதித்த மத்திய அரசு, அதைத்தாண்டி அதன் வர்த்தகத்திற்கு எந்தக் கட்டுப்பாடும் விதிக்கவில்லை. இந்நிலையில், கிரிப்டோ விளம்பரங்களுக்கு முதல்முறையாக கட்டுப்பாடுகளை அறிவித்திருக்கிறது இந்திய விளம்பர தர நிர்ணய கவுன்சில்.
இதன்படி, ஏப்ரல் 1-ம் தேதி முதல் அனைத்து பத்திரிகை, தொலைக்காட்சி, சமூக வலைதள ஊடகங்களிலும் கிரிப்டோ / NFT விளம்பரங்களில் அது தொடர்பான எச்சரிக்கைகளையும் சேர்த்தே குறிப்பிட வேண்டும்.
``கிரிப்டோ எந்தவொரு கட்டுப்பாடுகளுக்கும் உட்படாதது மற்றும் அதிக ரிஸ்க்கானது. இதில் அடையும் நஷ்டங்களுக்கு சட்டரீதியாக எந்த தீர்வும் கிடையாது” என்ற வரிகளை நிச்சயம் அந்நிறுவனங்கள் இடம்பெறச் செய்யவேண்டும். இன்னும் சில கூடுதல் விதிமுறைகளும் உண்டு.
கடந்த ஓராண்டாகவே, கிரிப்டோ / NFT முதலீடு தொடர்பான விளம்பரங்கள் அதிகரித்துவந்த நிலையில், ஆசைவார்த்தை காட்டி இந்நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்துகின்றன எனக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த விளம்பரக் கட்டுப்பாடுகள் அவற்றைக் கட்டுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
3. ஜாமீன் கிடைக்காத ஜெயக்குமார்
உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின்போது, தி.மு.க தொண்டரை தாக்கியதற்காக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் 40-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க தொண்டர்களின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில், கடந்த திங்கள் கிழமையன்று ஜெயக்குமார் தண்டையார்பேட்டை காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்த ஜெயக்குமாரின் மனுவை, ஜார்ஜ் டவுன் 15-வது குற்றவியல் நீதிமன்றம் ரத்து செய்தது. மார்ச் 7 வரை அவருக்கு நீதிமன்றக் காவல் விதித்திருக்கிறது.
இதேபோல, அரசு உத்தரவை மீறி சாலை மறியலில் ஈடுபட்டதற்காக ராயபுரம் காவல்துறை நேற்று அவரை மீண்டும் கைது செய்தது. இந்த வழக்கிலும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இதையடுத்து, மார்ச் 9-ம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை: 618 (நேற்று முன்தினம்: 671) 🔻
- அதிகபட்சமாக, சென்னையில்: 156 (169) 🔻
- தமிழகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை: 4 (8) 🔻
இந்தியாவில் நேற்று பதிவான கொரோனா பாதிப்பு: 15,102 (13,405) 🔺
வங்கி மோசடிகளுக்குப் பிறகு இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குப் பறந்த நிரவ் மோடி, விஜய் மல்லையா, மெஹூல் சோக்சி உள்ளிட்ட தொழிலதிபர்களிடமிருந்து இதுவரை 18,000 கோடி ரூபாய் மீட்கப்பட்டு வங்கிகளிடம் அளிக்கப்பட்டுள்ளதாக, தெரிவித்துள்ளது மத்திய அரசு.
சாலை விபத்துகளில் பாதிக்கப்படுபவர்களின் உயிரைக் காக்கும் விதமாக கடந்தாண்டு டிசம்பர் மாதம், `இன்னுயிர் காப்போம்’ என்ற திட்டம் தமிழக அரசால் தொடங்கப்பட்டது. இதன்படி விபத்தில் பாதிக்கப்படுபவர்களின் முதல் 48 மணி நேரத்துக்கான சிகிச்சையை அரசே ஏற்கும். இந்த திட்டத்தின்கீழ் இதுவரை 21,762 பேர் பயன்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது தமிழக அரசு. இதில், 86% அரசு மருத்துவமனைகளிலும், 14% பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றுள்ளனர்.
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் வழங்கப்பட்ட வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு சென்னை உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டிருந்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நேற்றுடன் விசாரணைகள் முடிந்து, நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளனர். விரைவில் இந்த வழக்கில் தீர்ப்பு வரலாம்.
பல்லுயிர் வளம் மிக்க மன்னார்வளைகுடா பகுதியில் விலங்குகள் வேட்டையாடப்படுதல் / கடத்தல் போன்றவற்றைத் தவிர்க்கவும், அப்பகுதியின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் புதிதாக `மரைன் எலைட் படை’ என்ற ஒரு பிரிவை உருவாக்க முடிவு செய்திருக்கிறது தமிழக அரசு.
18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முதல்முறையாக தன் தினசரி பயனாளர்களின் எண்ணிக்கை குறையவே, ``இனி ஃபேஸ்புக்கில் ஷார்ட் வீடியோக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்போகிறோம்” என அறிவித்திருந்தார் மார்க் ஸூக்கர்பெர்க். அதன்படி, நேற்று முதல் இன்ஸ்டா போலவே, ஃபேஸ்புக்கிலும் `Reels’ வசதியைக் கொண்டுவந்துவிட்டார்.
தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மகாராஷ்டிர கேபினட் அமைச்சருமான நவாப் மாலிக்கை நேற்று கைது செய்திருக்கிறது அமலாக்கத்துறை. தாவூத் இப்ராஹிமுடன் தொடர்புடைய பணமோசடியில் மாலிக்கிற்கு பங்கு இருப்பதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியிருக்கிறது. பா.ஜ.க-வை அண்மைக்காலமாக கடுமையாக எதிர்த்தும், விமர்சித்தும் வந்தவர் மாலிக். குறிப்பாக ஆர்யன் கான் வழக்கில் மத்திய அரசுக்கு எதிரான பல ஆதாரங்களை வெளிக்கொண்டு வந்திருந்தார்.
On This day - பிப்ரவரி 24
- முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள், 1948
- ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் பிறந்தநாள், 1955
- ஒருநாள் போட்டி வரலாற்றில் முதல்முறையாக சச்சின் இரட்டை சதம் அடித்த தினம், 2010
அவ்வளவுதான்!
The Subject Line-னோட இன்னைக்கு அப்டேட்ஸ் உங்களுக்குப் பிடிச்சிருக்கும்னு நம்புறேன். பிடிச்சிருந்தா கீழ இருக்க பட்டன் மூலமா உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க… இன்னும் ஏதாச்சும் இந்த TSL-ல் மாத்தணும்னா எனக்கு மெசேஜ் பண்ணுங்க! உங்க கருத்துகள் எங்களுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். 🤞
திரும்ப நாளைக்கு காலைல 7 மணிக்கு சந்திப்போம்!
Have a Nice day ☕️
The Subject Line-ஐ சமூக வலைதளங்களில் பின்தொடர:
Telegram | Twitter | Facebook | Insta
Today Edition பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க! ❤️