⛷️ நார்வேயின் `நம்பர் 1' ரகசியம்
Also in today's edition: ஷிமோகாவில் நடந்தது என்ன? | கைதான அமைச்சர் ஜெயக்குமார் | மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா | போருக்குத் தயாராகும் புடின் | Reading Time: ⏰ 4 Mins
Good Morning ☕️
இன்றைய தினத்தின் டாப் அப்டேட்ஸ் இதோ…
🇳🇴 நார்வே ஏன் `நம்பர் 1’
வழக்கமான கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் யார் நம்பர் 1 என்றால், அனைவருமே தயங்காது சீனாவை சொல்லிவிடுவோம். ஒவ்வொரு ஒலிம்பிக்கிலும் அனைத்து நாடுகளுக்கும் டஃப் கொடுத்து, பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடிப்பது சீனாவின் ஸ்டைல். ஆனால், அண்மையில் நடந்துமுடிந்த குளிர்கால ஒலிம்பிக்ஸில் சீனாவுக்கு கிடைத்திருப்பது 3-வது இடம்.
இத்தனைக்கும் குளிர்கால ஒலிம்பிக்கில் சீனாவின் அதிகபட்ச பதக்கங்களே இந்தமுறைதான். ஏன் இப்படி? காரணம், குளிர்கால ஒலிம்பிக்ஸில் கதையே வேறு. இங்கு நார்வேதான் 3 ஒலிம்பிக் சீசன்களாக டான். எப்படி சாதித்தது நார்வே? இரண்டு முக்கியமான காரணங்கள் இதற்கு சொல்லப்படுகிறது.
ஒன்று, நார்வேயின் புவியியல் சூழல். வெறும் 50 லட்சம் மக்களை மட்டுமே கொண்டிருந்தாலும்கூட, நார்வேயின் பனிப்பிரதேசங்கள் அவர்கள் இயல்பாகவே குளிர்கால விளையாட்டைத் தேர்ந்தெடுக்கவும், அதில் சிறப்பாக பயிற்சி பெறவும் உதவுகின்றன.
இரண்டாவது, நார்வேயின் பொருளாதாரம். மொத்த GDP படி பார்த்தால், உலகின் 35-வது பணக்கார நாடு நார்வே. தனிநபர் GDP படி பார்த்தால், முதல் 10 இடங்களுக்குள் வந்துவிடும். குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகளுக்குத் தேவையான விளையாட்டு பொருள்கள், பயிற்சி போன்ற செலவுகளையெல்லாம் இந்நாட்டு மக்களால் எளிதாக சமாளிக்க முடிகிறது.
சரி, அப்படியென்றாலும் ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளிலும் இதேபோன்ற பனிப்பிரதேசங்கள்தானே இருக்கின்றன? அமெரிக்கா, சீனா போன்றவை நார்வேவைவிடவும் பணக்கார நாடுகளாயிற்றே? அவர்கள் ஏன் நம்பர் 1 ஆகவில்லை? காரணம், மேற்கண்டவற்றுடன் இணைந்த நார்வேயின் கூடுதல் மெனக்கெடல்.
குறிப்பிட்ட விளையாட்டில் ஆர்வமுள்ள இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பயிற்சி வழங்காமல், சிறு வயதிலிருந்தே ஏதாவதொரு விளையாட்டை அனைத்து சிறார்களையும் விளையாட ஊக்குவிக்கிறது. இத்தனைக்கும் சிறுவர்களுக்கு என அங்கு சாம்பியன்ஷிப் போட்டிகள்கூட கிடையாது. ஆனால், சுமார் 10,000 ஸ்போர்ட்ஸ் கிளப்கள் இருக்கின்றன. அவர்கள், மகிழ்ச்சியாக விளையாடவேண்டும் என்பது மட்டுமே இதன் நோக்கம். இப்படி 93% சிறார்கள் குளிர்கால விளையாட்டுகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டுள்ளனர். இவர்களிலிலிருந்தே அடுத்த தலைமுறை வீரர்களையும் உருவாக்குகிறது.
இப்படி இயற்கையாகவே அமைந்த புவியியல் சூழல், நாட்டின் பொருளாதாரம் ஆகியவை ஒருசில நாடுகளுக்கே அதிக வெற்றிவாய்ப்பை வழங்குவதாலும், பிற விளையாட்டுகளைப் போல சமவாய்ப்பு உறுதிசெய்யப்படாததாலும்தான், குளிர்கால ஒலிம்பிக்ஸை ஒட்டுமொத்த உலக நாடுகளுக்கான போட்டியாக கருதமுடியாது என விமர்சனங்களும் எழுகின்றன.
🚨 என்ன நடக்கிறது ஷிமோகாவில்?
கர்நாடகா மாநிலம் ஷிமோகா மாவட்டத்தில் இந்துத்துவ இயக்க உறுப்பினர் ஒருவரின் கொலை மற்றும் அதைத் தொடர்ந்த வன்முறைகள் காரணமாக, நேற்று பதற்றம் சூழ்ந்திருக்கிறது. பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த 23 வயதான ஹர்ஷா என்ற இளைஞர் கடந்த ஞாயிறன்று, மர்ம நபர்களால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
கொலையாளிகளை காவல்துறையினர் அடையாளம் காணாத நிலையில், இதன் பின்னணியில் இஸ்லாமிய இயக்கங்கள் இருப்பதாகக் கூறியும், ஹர்ஷாவுக்கு நியாயம் வேண்டும் எனக் கூறியும் இந்துத்துவ இயக்க தொண்டர்கள் வன்முறைகளில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று இரவு 3 பேர் இந்த கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். ``இதற்குப் பின் பயங்கரவாத இயக்கங்கள் உள்ளனரா?” என விசாரித்து வருவதாகவும் அம்மாநில உள்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
ஏற்கெனவே கடந்த ஒரு மாதமாக ஹிஜாப் பிரச்னை காரணமாக, ஷிமோகாவில் பதற்றம் நிலவிவந்த நிலையில், தற்போது ஹர்ஷாவின் மரணம் மீண்டும் அங்கு இரு தரப்பினரிடையே பதற்றத்தை உண்டாக்கியிருக்கிறது.
உயிரிழந்த ஹர்ஷா மீது, மதக்கலவரங்கள் மற்றும் மதரீதியான மோதல்களில் ஈடுபட்டது தொடர்பாக 5 வழக்குகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
🇷🇺 போருக்குத் தயாரா புடின்?
உக்ரைனின் அங்கமாக இருந்துவரும் டொனெட்ச்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய கிழக்கு பகுதிகளை சுதந்திரப் பிரதேசங்களாக அங்கீகரிப்பதாக அறிவித்திருக்கிறார் புடின். இந்த இரு பகுதிகளும், ரஷ்ய ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கத்தில் இருப்பவை.
இதன்மூலம் மேலை நாடுகளுக்கு ஒரு விஷயத்தை தெளிவாகச் சொல்லிவிட்டார் புடின். ``இதற்கு முன் கையெழுத்தான எந்த ஒப்பந்தங்களும் இனி செல்லாது; அமைதிப் பேச்சுவார்த்தைகளும் இனி கிடையாது”.
ஏன் இந்த நடவடிக்கை முக்கியமாக பார்க்கப்படுகிறது?
2014-ம் ஆண்டு முதலே இந்தப் பகுதிகள் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்துவருகின்றன. ``இவற்றை தனிப்பிரதேசங்களாக அறிவிக்கக்கூடாது; இவை உக்ரைனின் அங்கங்களே” என்பது அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட மேலை நாடுகளின் வாதம். இதற்கு மாறாக, இந்தப் பகுதிகளை தனிப்பிரதேசங்களாக அறிவித்தாலோ, அந்தப் பகுதிகளை தன்னுடன் இணைத்துக்கொள்ள முயற்சி செய்தாலோ, மேலை நாடுகளின் பொருளாதாரத் தடைகளுக்கு ரஷ்யா ஆளாக நேரிடும்.
இந்தக் கட்டுப்பாட்டை நேற்று வரை பின்பற்றிவந்த புடின், இன்று திடீரென காற்றில் பறக்கவிட்டுவிட்டார். அந்த இரண்டு பகுதிகளையும், சுதந்திரம் பெற்ற தனிப்பிரதேசங்களாக அங்கீகரித்திருக்கிறார். இதன்மூலம் மேலை நாடுகளுனான அமைதிப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்திருக்கிறது.
அதைவிட முக்கியம், புடின் அடுத்து என்ன செய்வார் என்பது. காரணம், தற்போது புடின் அங்கீகரித்திருக்கும் இருபிரதேசங்களின் எல்லையும் (கிளர்ச்சியாளர்கள் கோருவது) முழுமையாக ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் வசம் இல்லை. குறிப்பிட்ட பகுதி மட்டுமே இவர்கள் வசம் இருக்கிறது. மீதி உக்ரைன் ராணுவத்தின் கட்டுப்பாட்டில்.
இப்போது, இந்தப் பிரதேசங்களின் எல்லைகளை மீட்க, ரஷ்யா படைகளை அனுப்புமா, அல்லது இப்போது இருக்கும் பகுதிகளை மட்டுமே பாதுகாக்குமா என்பதுதான் அடுத்த கேள்வி. நேற்று, ரஷ்ய மக்களிடையே புடின் ஆற்றிய உரையை வைத்துப் பார்க்கையில் இரண்டாவதற்கே வாய்ப்பு அதிகம்!
ஒருவேளை இந்தப் பிரதேசங்களின் எல்லைகளை மீட்க, ரஷ்ய படைகள் உள்ளே நுழைந்தால், அது உக்ரைன் மீதான நேரடி போர் அன்றி வேறில்லை. புடின் அதற்கான பணிகளைத் தொடங்கிவிட்டார். முழுமையாகத் தயாரா என்பது அடுத்தடுத்த நடவடிக்கைகளில் தெரிந்துவிடும்.
தமிழகத்தில் நேற்று பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை: 788 (நேற்று முன்தினம்: 949) 🔻
- அதிகபட்சமாக, சென்னையில்: 191 (223) 🔻
- தமிழகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை: 1 (3) 🔻
இந்தியாவில் நேற்று பதிவான கொரோனா பாதிப்பு: 16,051 (19,968) 🔻
🌦 இன்று மற்றும் நாளைக்கான வானிலை முன்னறிவிப்பு ☔️
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தமிழகம் முழுவதும் இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. மொத்தம் 268 மையங்களில் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெறவிருக்கின்றன. உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை tnsec.tn.nic.in என்ற இணையதளத்தில் நேரடியாகத் தெரிந்துகொள்ளலாம்.
உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு அன்று, கள்ள ஓட்டு போட்டதாக குற்றம்சாட்டப்பட்ட தி.மு.க நபரை அ.தி.மு.க-வினர் தாக்கியதும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவரை சாலையில் இழுத்துச்சென்றதும் கடும் கண்டனத்துக்குள்ளானது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சென்னை தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் ஜெயக்குமார் மற்றும் 40-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க-வினர் மீது நேற்று மதியம் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று இரவு ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். இதை அ.தி.மு.க கண்டித்துள்ளது. இதேபோல பூத்தில் தன்னை தாக்கியதாக ஜெயக்குமாரின் ஓட்டுநர், 3 தி.மு.க தொண்டர்கள் மீது புகார் அளித்திருந்தார். அவர்களும் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர்.
5-வது மாட்டுத்தீவன வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்த முன்னாள் பீகார் முதல்வர் லாலு பிரசாத் யாதவிற்கு, 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 60 லட்ச ரூபாய் அபராதமும் அறிவித்திருக்கிறது சி.பி.ஐ நீதிமன்றம். இதில் ஏற்கெனவே மூன்று ஆண்டுகளை அவர் சிறையில் கழித்துவிட்டதால், விரைவில் அவருக்கு பெயில் கிடைக்கவும் வாய்ப்புள்ளாது.
15 லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்ட சுவிட்சர்லாந்தின் இரண்டாவது மிகப்பெரிய வங்கி, Credit Suisse. உலகின் பல மூலையிலிருந்தும் பணக்காரர்கள் இங்கு பணத்தை பதுக்கிவைத்தாலும், விதிமுறைப்படி முக்கியமான குற்றவாளிகளுக்கு இங்கு இடமில்லை. ஆனால், அண்மையில் சர்வதேச ஊடகங்களின் புலனாய்வில் வெளியான சுமார் 18,000-க்கும் மேற்பட்ட வங்கிக்கணக்கு விவரங்களின்படி, இந்த வங்கியில் பல சர்வதேச ஊழல் குற்றவாளிகளும், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட சர்வாதிகாரிகளும் பணத்தைப் பதுக்கி வைத்துள்ளது தெரியவந்துள்ளது. இந்தப் புலனாய்வு முடிவுகள், சுவிட்சர்லாந்து வங்கித்துறைக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியா தொடர்பாக இந்தப் புலனாய்வில் இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
16 வயதே ஆன இந்தியன் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் 1 செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்சனை நேற்று நடந்த Airthings Masters செஸ் போட்டியில் வீழ்த்தியிருக்கிறார்.
Always proud of our talents! Very good day for @rpragchess https://t.co/vIcFUwAzmZR Praggnanandhaa becomes the latest Indian to beat Magnus Carlsen in tournament play after Viswanathan Anand and P Harikrishna 👏 @rpragchess 🤝@vishy64theking 🤝 @HariChessESPN India @ESPNIndiaமொத்தம் 39 மூவ்களில் முடிவுக்கு வந்த கேம் மூலம், விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் ஹரிகிருஷ்ணாவுக்கு அடுத்து கார்ல்சனை வீழ்த்திய மூன்றாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் பிரக்ஞானந்தா. 👏👏
மத்திய அரசு எதிர்க்கட்சியினர் மற்றும் மக்களை உளவுபார்க்க, பெகாசஸ் உளவு மென்பொருளை பயன்படுத்தியதா என ஆராய உச்சநீதிமன்றம் ஓய்வுபெற்ற நீதிபதி ரவீந்திரன் தலைமையில் ஒரு குழு அமைத்திருந்தது. இந்தக் குழு தன் இடைக்கால அறிக்கையை நேற்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறது. இதையடுத்து பெகாசஸ் தொடர்பான வழக்குகள் நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன.
அவ்வளவுதான்!
The Subject Line-னோட இன்னைக்கு அப்டேட்ஸ் உங்களுக்குப் பிடிச்சிருக்கும்னு நம்புறேன். பிடிச்சிருந்தா கீழ இருக்க பட்டன் மூலமா உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க… இன்னும் ஏதாச்சும் இந்த TSL-ல் மாத்தணும்னா எனக்கு மெசேஜ் பண்ணுங்க! உங்க கருத்துகள் எங்களுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். 🤞
திரும்ப நாளைக்கு காலைல 7 மணிக்கு சந்திப்போம்!
Have a Nice day ☕️
The Subject Line-ஐ சமூக வலைதளங்களில் பின்தொடர:
Telegram | Twitter | Facebook | Insta
Today Edition பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க! ❤️