📮`பச்சக்கிளி' கடிதமும் NSE பங்குச்சந்தை கதையும்!
Today Edition Highlights: 28 வங்கிகளை ஏமாற்றிய குஜராத் நிறுவனம்? | டெல்லியில் சந்திக்கும் எதிர்க்கட்சி முதல்வர்கள் | IPL ஏலம்; சென்னை நிலவரம் என்ன? | Reading Time: ⏱ 6 Mins
Good Morning ☕️
இன்றைய தினத்தின் டாப் அப்டேட்ஸ் இதோ…
வடிவேலுவின் `பச்சக்கிளி’ காமெடியையே விஞ்சும் ஒரு சம்பவம் மும்பையில் நடந்திருக்கிறது. அதுவும் சாதாரண இடத்தில் இல்ல. இந்தியாவின் மிகப்பெரிய பங்குச்சந்தையான NSE (National Stock Exchange)-ல்.
என்ன நடந்தது?
2013 முதல் 2016-ம் ஆண்டு வரை NSE-ன் CEO-வாக இருந்தவர் சித்ரா ராமகிருஷ்ணன். இவர் 90-களில் தொடக்கத்திலிருந்தே NSE-ன் தோற்றம் & வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியவர். இந்த சித்ரா சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேல், கம்பெனியின் முக்கியமான முடிவுகளை, முகம்தெரியாத இமயமலையில் வாழ்வதாக நம்பப்படும் ஒரு சாமியாரின் அறிவுரையைக் கேட்டு எடுத்திருக்கிறார். இந்த விவரங்கள் அனைத்தையும் கடந்த வெள்ளிக்கிழமையன்று தன் விசாரணை அறிக்கையில் வெளியிட்டிருக்கிறது செபி.
என்ன விசாரணை, என்ன அறிக்கை? 📃
கதையே இங்குதான் தொடங்குகிறது. பங்குச்சந்தையில் IPO வெளியிடவேண்டும் என்பது NSE-ன் நீண்டகால திட்டம். இதற்கான பணிகளை 2016 வாக்கில் தீவிரமாக மேற்கொண்டுவந்தது அந்நிறுவனம். ஆனால், அச்சமயத்தில்தான் Colocation முறைகேட்டில் சிக்கியது. சில குறிப்பிட்ட புரோக்கர்கள் மட்டுமே பலனடையும் வகையில் நடந்த மோசடி இது.
இதுகுறித்து எழுந்த புகாரில் செபி NSE-யை விசாரிக்க, முறைகேடு நடந்தது உறுதியானது. அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த சமயத்தில் சித்ராவும் CEO பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்தார். NSE-ன் IPO கனவும் தள்ளிப்போனது.
இதே காலகட்டத்தில் செபி இன்னொரு பிரச்னை தொடர்பாகவும் விசாரணையைத் தொடங்கியது. அது, 2013-ம் ஆண்டு NSE-ன் CSA (Chief Strategic Advisor)-வாக நியமிக்கப்பட்ட ஆனந்த் சுப்ரமணியம் தொடர்பானது.
யார் இவர்?
இந்தக் கேள்விதான் பலரின் சந்தேகங்களுக்கு தொடக்கப்புள்ளி. 2013 வரைக்கும் பங்குச்சந்தை வட்டாரத்திற்கு அதிக பரிச்சயமில்லாதவர், ஆனந்த். ஆனால், திடீரென NSE-ன் CSA-வாக 2013-ம் ஆண்டு 1.5 கோடி ரூபாய் சம்பளத்திற்கு நியமிக்கப்பட்டார். இதற்கு முன் வேறொரு நிறுவனத்தில் அவர் பெற்றுக்கொண்டிருந்த சம்பளம் ஆண்டுக்கு 15 லட்சம் மட்டுமே. அதிர்ச்சி இதோடு நிற்கவில்லை.
2014-லிலேயே ஆனந்திற்கு அப்ரைசல் கிடைக்கிறது. 20% உயர்வுடன் சம்பளம் 2.01 கோடி ரூபாயாக உயர்கிறது. 💰
அதற்கு அடுத்த 5 வாரத்திலேயே இன்னொரு அப்ரைசல்; இப்போது 15% உயர்வு. சம்பளம் 2.31 கோடி ரூபாய். இப்படியே போக 2015-ம் ஆண்டு அவரின் ஆண்டு சம்பளம் (CTC) 5 கோடி ரூபாயைத் தொடுகிறது. இதெல்லாம் பங்குச்சந்தையில் பழுத்த அனுபவம் கொண்ட NSE-ன் மூத்த ஊழியர்களுக்கே கிடைக்காத சம்பளம்! 😳
CEO-வான சித்ராவுக்கு அருகிலேயே கேபின், வாரத்திற்கு 3 நாள் மட்டும் வேலை, First Class விமானப் பயணம் எனப் பல சலுகைகள் அடுத்தடுத்து ஆனந்திற்கு கிடைக்கின்றன. CEO-வான சித்ராவுக்கு இருக்கும் அதிகாரங்கள், சலுகைகள் என அனைத்தும் ஆனந்திற்கு குவிய, விரைவில் Group Operating Officer-ராகவும் பதவி உயர்வு பெறுகிறார். இதையடுத்துதான், NSE-யிலிருந்து ஆனந்த் தொடர்பாக மொட்டை கடுதாசிகள் புகார்களாக செபிக்குப் பறக்கின்றன. 📮
இதுதொடர்பாக நடந்த விசாரணையில்தான் எல்லா விஷயங்களும் தெரியவந்திருக்கின்றன.
சரி, ஏன் ஆனந்திற்கு இவ்வளவு சலுகைகள்? 🤔
இங்குதான் சூட்சுமமே! பங்குச்சந்தையில் அனுபவமே இன்றி NSE-க்குள் ஆனந்த் நுழைந்தது முதல் அடுத்தடுத்து அங்கு உச்சிக்கு சென்றது வரை எதுவுமே தற்செயலாகவோ, தகுதியின் அடிப்படையிலோ நடந்ததல்ல. மாறாக, அந்த மர்ம சாமியாரின் வேலைகளால் நடந்தது.
சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சித்ரா ஒரு சாமியாரிடம் அறிவுரை கேட்டு நடக்கிறார் என மேலே பார்த்தோம் அல்லவா? அந்த சாமியாரிடம் நிர்வாகத்தின் ஒவ்வொரு முடிவு தொடர்பாகவும் அறிவுரை கேட்டிருக்கிறார் சித்ரா.
அந்த சாமியாரின் மின்னஞ்சல் முகவரியான rigyajursama@outlook.com-க்கு NSE-யின் நிர்வாக விவரங்கள், எதிர்காலத் திட்டங்கள், கம்பெனி ரகசியங்கள், இவ்வளவு ஏன்… பணியாளர்களின் அப்ரைசல் விவரம் 😲 முதற்கொண்டு அனைத்தையும் பகிர்ந்திருக்கிறார். பதிலுக்கு அந்த சாமியாரும் சித்ராவுக்கு ஒவ்வொரு இடத்திலும் அறிவுரை வழங்கியிருக்கிறார்.
அப்படி ஒரு அறிவுரை மூலமாகத்தான் ஆனந்த் உள்ளே நுழைந்தார்; ஆனந்தின் பதவி உயர்வு, வாரத்திற்கு 3 நாள் வேலை என எல்லா சலுகைகளும் அவரின் சித்து வேலைகளே! இதை இருவருக்குமிடையேயான மின்னஞ்சல் உரையாடல்கள் மூலம் உறுதிப்படுத்தியிருக்கிறது செபி.
இதெப்படி சாத்தியம்? 🧐
இரண்டே சாத்தியங்கள்தான்; ஒன்று, சித்ரா அந்தளவுக்கு ஆன்மிக நம்பிக்கையில் மூழ்கியிருந்து, அந்த மர்ம சாமியாரின் விளையாட்டில் ஏமாந்திருக்கவேண்டும். அல்லது சித்ரா தெரிந்தே, ஏதோ ஒரு ஆதாயத்திற்காக ஆனந்திற்கு கூடுதல் சலுகைகள் வழங்கியிருக்கவேண்டும்.
``நிர்வாக விஷயத்திற்காக பிற நபர்கள் தங்கள் நண்பர்களிடமோ, ஆலோசகர்களிடமோ ஆலோசனைகள் பெறுவதில்லையா? அப்படித்தான் இதுவும். இது என் பணியை சிறப்பாக செய்ய உதவியது. வேறு எந்த ஆதாயமும் நான் அடையவில்லை” என இதற்கு முட்டுக்கொடுத்திருக்கிறார் சித்ரா.
இந்த விஷயம் NSE-யின் பிற நிர்வாகிகளுக்குத் தெரிந்துமேகூட, கம்பெனி பெயர் கெட்டுவிடக்கூடாது என நேரடியாக செபியிடம் புகார் அளிக்காமல் கமுக்கமாக இருந்திருக்கின்றனர். சிலபல மொட்டைக் கடுதாசிகள்தான் செபியை விசாரணை வரை இழுத்து வந்திருக்கிறது.
யார் அந்த சாமியார்?
வேறு யார்? ஆனந்தாகத்தான் இருக்கமுடியும் என்கிறது செபி. தனிப்பட்ட முறையில் சித்ராவின் நம்பிக்கைக்குரிய ஊழியராகவும், இன்னொருபுறம் முகம்தெரியாத சாமியாருமாக இரண்டு வாழ்க்கை நடத்தி ஆதாயம் அடைந்திருக்கிறார். இந்தியாவின் மிகப்பெரிய பங்குச்சந்தையான NSE-ன் CEO-வை ஒரு பொம்மைபோல ஆட்டுவித்திருக்கிறார் என்றிருக்கிறது செபி (இன்னும் இதை வேறு ஆதாரங்கள் வழி உறுதிப்படுத்தவில்லை; மின்னஞ்சல் உரையாடல்களை வைத்துமட்டுமே இந்த முடிவுக்கு வந்திருக்கிறது).
சரி, இனி என்ன நடக்கும்?
முறையாக நியமனங்களை மேற்கொள்ளாதது, NSE-ன் முக்கிய தகவல்களை 3-ம் நபருக்கு கசியவிட்டது ஆகிய குற்றங்களுக்காக சித்ரா, ஆனந்த், முன்னாள் NSE CEO விஜய் நரேன் ஆகிய மூவருக்கும் தலா 2 கோடி ரூபாய் அபராதம் விதித்திருக்கிறது செபி. மேலும், அடுத்த 3 ஆண்டுகளுக்கு பங்குச்சந்தை தொடர்பான எந்தவொரு நிறுவனங்கள் பக்கமும் எட்டிப்பார்க்கவே கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது (நரேனுக்கு மட்டும் 2 ஆண்டுகள்).
கூடவே அடுத்த 6 மாதங்களுக்கு எந்தவொரு புதிய சேவையையும் தொடங்கக்கூடாது என NSE-க்கும் குட்டு வைத்திருக்கிறது.
இப்படியாக, ஒரு ஹைடெக் பச்சைக்கிளி Episode-ஐ வெளிச்சத்திற்கு கொண்டுவந்திருக்கிறது செபி. அவ்வளவு பெரிய பங்குச்சந்தை நிர்வாகத்தில் எப்படி இந்த இருவரும் யாரின் தடங்கலுமின்றி, நினைத்ததையெல்லாம் சாதித்திருக்கின்றனர் என ஆச்சர்யமாகப் பார்க்கிறது வர்த்தக உலகம்.
1. மேற்கு வங்க ஆளுநர் vs தமிழக முதல்வர்
மாநில சட்டமன்ற கூட்டத்தொடர்கள் முறைப்படி குறிப்பிட்ட நாள்களுக்குப் பிறகு நிறைவடைய வேண்டும். அப்படி இல்லாமல் நீண்டநாள்களுக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கும் பட்சத்தில், அதற்கடுத்த கூட்டத்தொடருக்கு முன்பு கவர்னர் முந்தைய தொடரை முடித்துவைக்கவேண்டும். புதிய கூட்டத்தொடருக்கு அவரின் அனுமதியும் பெறவேண்டும்.
இதன்படி, கடந்தாண்டு நடந்த மேற்கு வங்க மாநில சட்டமன்றக் கூட்டத்தொடரை ஜனவரி 12-ம் தேதி முடித்துவைத்தார் அம்மாநில கவர்னர் ஜக்தீப் தன்கர். இதுகுறித்த அறிவிப்பையும் வெளியிட்டார்.
ஆனால் இதற்கு, ``இது உயர்பொறுப்பில் உள்ள ஓர் ஆளுநர் செய்யும் செயல் அல்ல. அரசியல் மரபுகளுக்கு எதிரானது” எனக் கண்டனம் தெரிவித்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். இதையடுத்து, இந்த விமர்சனத்திற்கு விளக்களித்த ஜக்தீப், ``மாநில அமைச்சரவையின் பரிந்துரையின்பேரில்தான் அந்த நடவடிக்கையே எடுத்தேன்; தமிழக முதல்வரின் விமர்சனத்தில் உண்மை இல்லை” எனத் தெரிவித்தார். இதை திரிணமுல் காங்கிரஸின் செய்தித் தொடர்பாளவும் உறுதி செய்திருக்கிறார்.
இந்நிலையில் நேற்று மாலை, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தன்னிடம் உரையாடியதாகவும், பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் கவர்னர்களின் அரசியல் தலையீடு குறித்து தன்னிடம் விவாதித்ததாகவும் ட்வீட் செய்திருக்கிறார் ஸ்டாலின். விரைவில் டெல்லியில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த முதல்வர்களின் சந்திப்பு நடக்கும் எனவும் தெரிவித்திருக்கிறார்.
2. முடிந்த ஐ.பி.எல் ஏலம்; சென்னை நிலவரம் என்ன?
2022-ம் ஆண்டு ஐ.பி.எல்-லுக்கான மெகா ஏலம் கடந்த இரண்டு நாள்களாக நடந்து முடிந்திருக்கிறது. சென்னைக்கு சில சோகங்கள்; சில ஆறுதல்கள்.
டூப்ளெசியை RCB-யிடமும், ஷர்துலை DC-யிடமும் பறிகொடுத்தது CSK. ரெய்னாவையும் CSK கண்டுகொள்ளாமல்விட, இந்த சீசனில் Unsold ப்ளேயராக முடிந்திருக்கிறார் சின்ன தல!
தீபக் சஹார், அம்பத்தி ராயுடு, பிராவோ,உத்தப்பா, ஜகதீசன், ஹரி நிஷாந்த் என மற்றவர்கள் ரீ-யூனியனில் கன்ஃபார்ம். ஷிவம் துபே, ஆடம் மில்னே, டேவன் கான்வே, கிறிஸ் ஜோர்டான், மஹீஷ் தீக்ஷனா ஆகியோர் சென்னையின் குறிப்பிடத்தக்க புதுவரவுகள்.
அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்களின் பட்டியல் 👇
CSK Squad 👇
முழுமையாக அனைத்து அணி வீரர்கள் விவரங்களையும் பார்க்க இங்கே பார்க்கலாம். (Espn Cricinfo)
மொத்தம் 14 தமிழக வீரர்கள் இந்தாண்டு ஐ.பி.எல்-லில் விளையாடுகின்றனர் 👇
ஏலத்தின் முதல் நாள், ஏலம் நடத்துபவரான ஹியூக் எட்மடீஸ், குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவருக்கு மருத்துவ சிகிச்சையளிக்கப்பட்டது. இதையடுத்து சாரு ஷர்மா ஏலத்தை நடத்திச் சென்றார். இந்நிலையில், நேற்று ஏலத்தின் கடைசி நேர செசஷனில் கலந்துகொண்டு வெற்றிகரமாக ஏலத்தை முடித்துவைத்தார் ஹியூக். திரும்பிவந்த ஹியூக்கை அனைவரும் எழுந்துநின்று வாழ்த்தினர்.
3. சென்சொடைன் விளம்பரங்களுக்கு ஏன் தடை?
நீங்கள் டிவி பார்ப்பவராக இருந்தால் சென்சொடைன் டூத்பேஸ்ட் விளம்பரத்தைப் பார்க்காமல் கடந்திருக்க முடியாது. குறிப்பிட்ட சில விதிமுறைகளை மீறியதாகக் கூறி இந்த டூத்பேஸ்ட் விளம்பரங்களுக்கு தடைவிதித்துள்ளது மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA). மேலும், விளம்பரத்தில் சொல்லப்பட்ட விஷயங்களின் உண்மைத் தன்மை குறித்தும் CCPA ஆராயவிருக்கிறது.
இந்தியாவில் பிராக்டீஸ் செய்யும் மருத்துவர்கள் யாரும் எந்தவொரு பொருளையும், மருந்துரையும் விளம்பரங்களில் பரிந்துரைக்கக்கூடாது. இந்த விதியிலிருந்து தப்பிக்கும்விதமாக வெளிநாட்டு மருத்துவர்கள் சென்சொடைனைப் பரிந்துரைக்கும்படி விளம்பரம் செய்திருக்கிறது அந்நிறுவனம். இது விதிகளுக்கு எதிரானது எனச் சொல்லி விளம்பரங்களுக்கு தடை விதித்திருக்கிறது CCPA.
மேலும், `உலகின் நம்பர் 1 டூத்பேஸ்ட்’, `உலகம் முழுக்க பல் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் டூத்பேஸ்ட், `60 நொடிகளில் நிவாரணம் தரும் டூத்பேஸ்ட்’ என அந்நிறுவனம் விளம்பரத்தில் சொன்ன விஷயங்கள் குறித்தும் ஆராயவிருக்கிறது. இவற்றில் பொய் சொல்லியிருப்பது உறுதியானால், 10 லட்ச ரூபாய் அபராதமும், ஒரு வருடம் விளம்பரங்கள் மேற்கொள்ள அந்நிறுவனத்திற்கு தடையும் விதிக்கப்படும்.
தமிழகத்தில் நேற்று பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை: 2,296 (நேற்று முன்தினம்: 2,812) 🔻
- அதிகபட்சமாக, சென்னையில்: 461 (546) 🔻
- தமிழகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை: 11 (17) 🔻
இந்தியாவில் நேற்று பதிவான கொரோனா பாதிப்பு: 44,877 (50,407) 🔻
☔️ Rain Alert: இன்று மற்றும் நாளைக்கான வானிலை முன்னறிவிப்பு 🌦
உக்ரைன் விவகாரம் தொடர்பாக ரஷ்ய அதிபர் புடினும், பிரான்ஸ் அதிபர் மேக்ரானும் அண்மையில் மாஸ்கோவில் சந்தித்து விவாதித்தனர். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே போடப்பட்டிருந்த நீண்ட மேஜை பலரது கவனத்தையும் ஈர்த்தது. ஆனால், இதற்குப் பின்னால் இருக்கும் காரணம்தான் சுவாரஸ்யமானது.
புடினோடு நெருக்கமாக அமர்ந்து வழக்கம்போல உரையாட வேண்டுமென்றால், RT-PCR டெஸ்ட் எடுக்கவேண்டும் எனச் சொல்லியிருக்கிறது ரஷ்யா. இல்லையெனில், குறைந்தது 6 அடி இடைவெளியில்தான் உரையாட வேண்டும் எனச் சொல்லியிருக்கிறது. மேக்ரான் இரண்டாவது ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். காரணம், RT-PCR டெஸ்ட் எடுத்தால் ரஷ்யர்கள் மேக்ரானின் DNA விவரங்களைச் சேகரித்து விடுவர் என்ற அச்சமாம்! 👀
பஜாஜ் குழுமத்தின் தலைவரும், நாட்டின் முன்னணி தொழிலதிபருமான ராகுல் பஜாஜ் சனிக்கிழமையன்று காலமானார். கடைசி நாள்களில் இதய நோய் மற்றும் நிமோனியாவால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு வயது 83.
உத்தரப் பிரதேசத்தில் இன்று இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு 55 தொகுதிகளில் நடைபெறவிருக்கிறது. உத்தரகாண்டில் 70 தொகுதிகளிலும், கோவாவில் 40 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.
கடந்த வார விடுமுறைக்குப் பின், 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, கர்நாடகாவில் இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இந்நிலையில் நேற்று உடுப்பி மாவட்டத்தில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் ஒரு சுமுக முடிவு எட்டப்பட்டிருக்கிறது. இதன்படி, இதற்கு முன்புவரை எந்தெந்த பள்ளிகளெல்லாம் குறிப்பிட்ட சீருடைகள் இல்லையோ, ஏற்கெனவே ஹிஜாப் அணிய அனுமதிக்கப்பட்டதோ, அங்கெல்லாம் மாணவிகள் இன்று முதல் தொடர்ந்து ஹிஜாப் அணியலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த வழக்கு அம்மாநில உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
இந்தியாவில் இயங்கிவரும் மனித உரிமை ஆர்வலர்கள், செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோர் மீது `ModifiedElephant’ என்ற மால்வேர் மூலம் சைபர் தாக்குதல் நடந்துள்ளது எனத் தெரிவித்துள்ளது அமெரிக்க சைபர் பாதுகாப்பு நிறுவனமான சென்டினல் ஒன். அரசால் கைது செய்யப்படுபவர்களும், இந்த மால்வேரால் தாக்கப்படுபவர்களும் பல சமயங்களில் ஒரே நபராக இருக்கின்றனர் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய வங்கி மோசடி இது என்கிறது CBI. குஜராத்தில் இயங்கிவரும் கப்பல் தயாரிப்பு நிறுவனமான ABG நிறுவனம், SBI உள்பட மொத்தம் 28 வங்கிகளிடம் 22,842 கோடி ரூபாய் கடனாகப் பெற்றிருக்கிறது. ஆனால், இந்த தொகையை வங்கிகளிடம் சொன்ன காரணங்களின்றி, வேறு பயன்பாடுகளுக்காகத் திருப்பிவிட்டதாக குற்றச்சாட்டு எழவே, இதுகுறித்து CBI-யிடம் புகார் அளித்திருக்கிறது SBI. தற்போது இந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்து CBI விசாரணையைத் தொடங்கியிருக்கிறது.
- ஆண்ட்ராய்டு 13 வெர்ஷனின் டெவலப்பர் பிரிவ்யூவை வெளியிட்டுவிட்டது கூகுள். இந்த முறை பிரைவசி விஷயங்களில் அதிகம் கவனம் செலுத்தி, அதற்கேற்ப UI-களில் சில மாற்றங்கள் செய்திருக்கிறது. இதன் பீட்டா வெர்ஷன் ஏப்ரலில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதைக்கு Pixel 6, Pixel 6 Pro, Pixel 5a 5G, Pixel 5, Pixel 4a (5G), Pixel 4a, Pixel 4 XL மற்றும் Pixel 4 மொபைல் யூசர்கள் மட்டும் பிரிவ்யூவை டவுன்லோடு செய்யலாம்.
- நீண்ட நாள்களாக எதிர்பார்த்த LIC-யின் IPO ஒருவழியாக இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. IPO-வுக்கு அனுமதி கேட்டு நேற்று செபியிடம் முறைப்படி விண்ணப்பித்திருக்கிறது LIC. விரைவில் இந்த அலுவல் பணிகளையெல்லாம் முடித்து, இந்த நிதியாண்டிலேயே 5% பங்குகளை விற்று சுமார் 75,000 கோடி ரூபாய் திரட்ட முடிவு செய்துள்ளது மத்திய அரசு. இந்தியாவின் மிகப்பெரிய IPO-வுக்காக சந்தை வெயிட்டிங்!
On This Day, Feb 14
- உலக காதலர் தினம் 💜
- சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் குற்றவாளிகள் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த தினம், 2017. இதையடுத்து பிப்ரவரி 15-ம் தேதி மூவரும் சிறைசென்றனர். ஜெயலலிதா அச்சமயம் உயிருடன் இல்லை என்பதால், அவரின் வழக்கு நின்றுபோனது.
- புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 40 CRPF வீரர்கள் உயிரிழந்த தினம், 2019
அவ்வளவுதான்!
The Subject Line-னோட இன்னைக்கு அப்டேட்ஸ் உங்களுக்குப் பிடிச்சிருக்கும்னு நம்புறேன். பிடிச்சிருந்தா கீழ இருக்க பட்டன் மூலமா உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க… இன்னும் ஏதாச்சும் இந்த TSL-ல் மாத்தணும்னா எனக்கு மெசேஜ் பண்ணுங்க! உங்க கருத்துகள் எங்களுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். 🤞
திரும்ப நாளைக்கு காலைல 7 மணிக்கு சந்திப்போம்!
Have a Nice day ☕️
The Subject Line-ஐ சமூக வலைதளங்களில் பின்தொடர:
Telegram | Twitter | Facebook | Insta
Today Edition பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க! ❤️