🚨 இந்தியாவில் ஓமிக்ரான்; நிபுணர்கள் சொல்வது என்ன?
In Today's Edition: ஓமிக்ரான் குறித்த விஞ்ஞானிகளின் அப்டேட்ஸ் | காங்கிரஸூடன் மோதும் பிரசாந்த் கிஷோர் | மத்திய அரசை எச்சரித்த உச்சநீதிமன்றம் | தள்ளிப்போகும் இந்தியா - தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் தொடர்? | Reading Time: 4 Mins ⏳
Dec 3, 2021
ஹாய், ஹலோ… வணக்கம் ☕️
📣 Note: The Subject Line (TSL) நியூஸ்லெட்டரின் இந்த மெயில் உங்களின் Promotions Tab-ல வந்திருந்தா, அதை அப்படியே Move பண்ணி, Primary Tab-க்கு மாத்திடுங்க. இதன்மூலம் தினமும் TSL-ஐ நீங்க மிஸ் பண்ணாம படிக்கமுடியும். ஒருவேளை இந்த மெயில் உங்க நண்பர்கள் மூலம் வந்திருந்தா, தினமும் உங்க இன்பாக்ஸிற்கு நேரடியாக வர, சப்ஸ்கிரைப் பண்ணிடுங்க. Happy Reading! 😊
👉 இந்தியாவிலும் உறுதியான ஓமிக்ரான்; இதுவரை நடந்தது என்ன?
முதன்முதலாக, நேற்று இந்தியாவிலும் இருவருக்கு கொரோனா ஓமிக்ரான் வேரியன்ட் உறுதியாகியிருக்கிறது. இதையடுத்து மீண்டும் மக்களை கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை தீவிரமாகப் பின்பற்றச் சொல்லி அலர்ட் செய்திருக்கிறது மத்திய அரசு.
யார் அந்த இரண்டுபேர்?
நம் நாட்டில் பதிவாகியுள்ள இந்த இரண்டு தொற்றுகளுமே கர்நாடகா மாநிலத்தில்தான் உறுதி செய்யப்பட்டுள்ளன.
முதல் நபர் தென்னாப்பிரிக்காவிலிருந்து, நவம்பர் 20-ம் தேதி பெங்களூருவுக்கு வந்த அந்நாட்டின் 66 வயது குடிமகன்.
இரண்டாம் நபர் 46 வயதாகும், பெங்களூருவில் வசிக்கும் ஒரு தனியார் மருத்துவமனை மருத்துவர்.
இதில் முதலாம் நபர் விஷயத்தில் சிக்கல் இல்லை. காரணம், அவர் நவம்பர் 27-ம் தேதியே மீண்டும் தென்னாப்பிரிக்காவுக்கு கிளம்பிச் சென்றுவிட்டார். முதன்முதலில் பெங்களூரு ஏர்போர்ட்டுக்கு அவர் வந்தபோது எடுக்கப்பட்ட டெஸ்ட்டில் அவருக்கு பாசிட்டிவ் என வந்திருக்கிறது. பின்னர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார். அதற்கடுத்து அவர் மீண்டும் மூன்று நாள்கள் கழித்து எடுத்த டெஸ்ட்டில் நெகட்டிவ் என வரவே, நவம்பர் 27-ம் தேதியே மீண்டும் அவர் நாட்டுக்கே திரும்பிவிட்டார்.
இரண்டாம நபர் எங்கே இருக்கிறார்?
இதேபோல, நவம்பர் 22-ம் தேதி தொற்று உறுதி செய்யப்பட்ட இரண்டாம் நபர், நவம்பர் 25-ம் தேதி சிகிச்சைக்காக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். பின்னர், குணமானதும் 27-ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார்.
இவர்கள் இருவரிடமும் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் நவம்பர் 22-ம் தேதி ஜீனோம் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டிருக்கின்றன. அதன் முடிவுகள் நேற்றுதான் வெளியாகியுள்ளன. அதில்தான் இருவருக்கும் ஓமிக்ரான் வேரியன்ட் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இருவருமே இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் எடுத்துக்கொண்டவர்கள்.
மொத்தமே இவர்கள் இருவர் மட்டும்தானா?
இப்போதைக்கு இவர்கள் இருவருக்கு மட்டும்தான் ஜீனோம் பரிசோதனையில் ஓமிக்ரான் வேரியன்ட் என்பது உறுதியாகியிருக்கிறது. மேலும், முதல் நபருடன் தொடர்பில் இருந்த 264 பேருக்கும், இரண்டாம் நபருடன் தொடர்பில் இருந்த 218 பேருக்கும் கோவிட் பர்சோதனை செய்யப்பட்டிருக்கிறது. அதில் இரண்டாம் நபருடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கு மட்டும் கோவிட் உறுதியாகியிருக்கிறது. அவர்களின் மாதிரிகளும் ஜீனோம் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.
இந்த இரண்டாம் நபருக்கு, தென்னாப்பிரிக்காவோடு எவ்வித பயணத் தொடர்பும் இல்லாதததால், அவருக்கு எப்படி ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. வெளிநாட்டுப் பயணங்களில் தொடர்பு இல்லாத ஒருவருக்கு ஓமிக்ரான் உறுதியாகியிருப்பதால், அது ஏற்கெனவே இங்கு இன்னும் பலருக்குப் பரவியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
இதுவரை ஓமிக்ரான் குறித்து தெரியவந்திருக்கும் விஷயங்கள்?
தென்னாப்பிரிக்காவில் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரிடமும் மிதமான நோய் அறிகுறிகள் மட்டுமே தென்படுகின்றன. ஆனால், இதைவைத்து மட்டுமே, ``ஓமிக்ரான் ஆபத்தானது இல்லையென்று சொல்ல முடியாது” என்கின்றனர் அந்நாட்டு நிபுணர்கள். காரணம், இப்போதைக்கு அங்கு இளைஞர்களிடம் மட்டுமே இது அதிக பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, ``காத்திருந்து பார்ப்போம் என்கின்றனர்” அவர்கள்.
அதேசமயம், மிகக்குறுகிய காலத்தில், தென்னாப்பிரிக்காவில் தினசரி தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை இருமடங்காகியிருக்கிறது. அதில் ஓமிக்ரான் பாதிப்பும் அதிகம். எனவே இதன் விரைவாகப் பரவும் தன்மையை மட்டும் இதிலிருந்து புரிந்துகொள்ளலாம். மற்றபடி, தீவிர நோய் பாதிப்பை ஏற்படுத்துமா, தடுப்பூசியைத் தாண்டி பாதிப்பை ஏற்படுத்துமா போன்ற கேள்விகளுக்கெல்லாம் விடைதெரிய இன்னும் சில தினங்கள் காத்திருக்கவேண்டும்.
இந்திய நிபுணர்கள் சொல்வது என்ன?
நேற்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய சுகாதாரத்துறை அதிகாரிகளும், நிபுணர்களும் குறிப்பிட்ட சில விஷயங்கள்…
``டெல்டா வந்தபோதும் அதற்கு எதிராக தடுப்பூசி செயல்படுமா என்ற கேள்வி இருந்தது. தடுப்பூசிகளின் செயல்திறனில் சில பின்னடைவுகள் ஏற்படலாம். ஆனால், அவை நிச்சயம் நமக்குத் தேவை. இந்தமுறையும் அதேபோல நாம் தடுப்பூசிகளையே, நம்மைத் தற்காத்துக்கொள்ள பயன்படுத்தவேண்டும்.”
``ஓமிக்ரானால் நாம் மீண்டும் லாக்டௌன் போடவேண்டிய அவசியம் இல்லை. மாறாக மாஸ்க் அணிவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மட்டும் தீவிரப்படுத்தவேண்டும்.”
``பூஸ்டர் டோஸ்களை எடுத்துக்கொள்ள அனுமதிக்கலாமா என்பதுகுறித்து ஆய்வு செய்துவருகிறோம். ஓமிக்ரானைப் பற்றிய கூடுதல் தகவல் எதிர்காலத்தில் தெரியவந்தால், பூஸ்டர் டோஸ் விவகாரத்திலும் அதற்கேற்ப முடிவெடுப்போம்”
இப்படியாக, நேற்று இந்தியாவோடு சேர்த்து, ஓமிக்ரான் உறுதியான நாடுகளின் பட்டியல் 30-ஆக உயர்ந்திருக்கிறது.
நிறைவேறிய அணைப்பாதுகாப்பு மசோதா 2019:
நாட்டிலிருக்கும் அணைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், அவற்றின் மீதான மத்திய அரசின் கட்டுப்பாட்டை அதிகரிக்கவும் 2019-ல் கொண்டுவரப்பட்ட அணைப் பாதுகாப்பு மசோதா, லோக் சபாவில் அப்போதே தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ஆனால், ராஜ்யசபாவில் நிறைவேறவில்லை. இந்நிலையில், நேற்று சுமார் 4 மணி நேர விவாதத்திற்குப் பிறகு இந்த மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்த மசோதா மாநில உரிமைகளுக்கு எதிரானது என தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன.
காங்கிரஸ் தலைமையை சீண்டிய பிரசாந்த் கிஷோர்:
மம்தா பானர்ஜியும், அவரின் தேர்தல் ஆலோசகராக செயல்பட்டு வரும் பிரசாந்த் கிஷோரும், காங்கிரஸை தினமும் சீண்டுவது என முடிவே கட்டிவிட்டார்கள் போல. நேற்று முன்தினம், மம்தா பானர்ஜி ஐக்கிய முற்போக்கு கூட்டணி பற்றி விமர்சித்திருந்த நிலையில், நேற்று பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் தலைமையை விமர்சித்து மீண்டும் அக்கட்சியினரைக் கடுப்பேற்றியிருக்கிறார்.
``ஒரு வலுவான எதிர்க்கட்சி அமைவதற்கு காங்கிரஸின் பங்கு மிக முக்கியமானது. ஆனால், அதனாலேயே காங்கிரஸின் தலைமை என்பது ஒருவருக்கு மட்டுமே சொந்தமான ஒன்றல்ல; அதுவும் கடந்த 10 ஆண்டுகளில் 90%-க்கும் மேற்பட்ட தேர்தல்களில் தோற்றிருக்கும் நிலையில். எனவே எதிர்க்கட்சிகளுக்குத் தலைமை யார் என்பது ஜனநாயக முறைப்படி தீர்மானிக்கப்படட்டும்” என ட்வீட் செய்திருந்தார் பிரசாந்த். இதற்கு காங்கிரஸ் தலைவர் கடுமையாக எதிர்வினையாற்றி வருகின்றனர்.
தள்ளிப்போகும் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம்?
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளை முடித்துவிட்டு, டிசம்பர் 17-ம் தேதி ஜோகன்னஸ்பெர்க்கில் நடைபெறவிருக்கும் டெஸ்ட் போட்டிக்காக விரைவில் தென்னாப்பிரிக்கா கிளம்ப திட்டமிட்டிருந்தது இந்திய கிரிக்கெட் அணி. ஆனால், இப்போது தென்னாப்பிரிக்காவில் கோவிட் பாதிப்புகள் மற்றும் ஓமிக்ரானின் தாக்கம் அதிகமாவதால், பயணத்தை தள்ளிப்போடவும், திட்டத்தில் இருக்கும் 3 டெஸ்ட்களுக்கு பதிலாக, இரண்டு டெஸ்ட்கள் மட்டுமே விளையாடவும், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை வைக்கவிருக்கிறது பி.சி.சி.ஐ.
சீனாவில் போட்டிகளை ரத்து செய்த மகளிர் டென்னிஸ் சம்மேளனம்:
சீனாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை பெங் ஷூவாய், அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜாங் காலி மீது, கடந்த மாதம் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தார். அதைத்தொடர்ந்து அவர் சில நாள்கள் காணாமல்போகவே அவரின் பாதுகாப்பு குறித்து உலக பிரபலங்கள் பலரும் குரல் எழுப்பியிருந்தனர். இதைத்தொடர்ந்து அவர் அச்சுறுத்தல் இன்றி இருப்பதுபோன்ற, சில படங்களையும், வீடியோக்களையும் சீன ஊடகங்கள் வெளியிட்டன. மகளிர் டென்னிஸ் சம்மேளனத்தின் (WTA) தலைவருடன் பெங் வீடியோ காலில் பேசவும் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், பெங் சுமத்திய குற்றச்சாட்டுகள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துவந்தது சீனா. இந்நிலையில் பெங்கின் பாதுகாப்பு, சுதந்திரம் குறித்து உறுதியான தகவல்கள் தெரியாததாலும், அவர் வைத்த குற்றச்சாட்டுகளை சீன அரசு விசாரிக்காததாலும், சீனாவில் நடைபெறவிருந்த டென்னிஸ் தொடர்களை ரத்து செய்திருக்கிறது WTA. இதனால், WTA-வுக்குப் பொருளாதார ரீதியாக பாதிப்பு என்றாலும்கூட, உறுதியாக இந்த முடிவை எடுத்திருக்கிறது.
மத்திய அரசுக்கு கெடு விதித்த உச்சநீதிமன்றம்:
டெல்லியின் காற்று மாசுபாடு தொடர்பாக எந்தவொரு உருப்படியான நடவடிக்கையும் எடுக்காததால், மத்திய அரசைக் கடுமையாக சாடியிருக்கிறார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி. ``இந்தப் பிரச்னையைத் தீர்க்க நாம் செய்யவேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. நாங்கள் உங்கள் ஆட்சி நிர்வாகத்துக்குள் தலையிட விரும்பவில்லை. எனவே என்ன செய்யலாம் என நீங்களே சொல்லுங்கள். உங்களுக்கு 24 மணி நேரம் அவகாசம் அளிக்கிறோம். அதற்குள் சொல்லவில்லையெனில், நாங்கள் என்ன செய்யவேண்டும் எனச் சொல்வோம். எங்கள் மனதில் நிறைய திட்டங்கள் வைத்திருக்கிறோம்” என மத்திய அரசின் வழக்கறிஞரிடம் நேற்றைய வழக்கு விசாரணையின்போது தெரிவித்திருக்கிறார் தலைமை நீதிபதி. அரசு என்ன செய்யப்போகிறது என்பது இன்று தெரியும்.
தமிழகத்தில் நேற்று பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை: 715
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை: 12
முல்லைப்பெரியாறு அணையிலிருந்து பகல் நேரத்தில் மட்டுமே தண்ணீர் திறந்துவிடப்படுவதையும், அதற்கு முன்பாக உரிய முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை வழங்குவதையும் தமிழக அரசு உறுதி செய்யவேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியிருக்கிறார்.
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவர் வெங்கடாசலம் நேற்று சென்னையில் தற்கொலை செய்துகொண்டார். அவர் வீட்டில் அண்மையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி ரூ.13.50 லட்சம் ரொக்கம், 11 கிலோ தங்கம், 4 கிலோ வெள்ளிப் பொருள்கள், 15 கிலோ சந்தன மரக்கட்டைகள் ஆகியவற்றை கைப்பற்றி, வழக்கும் பதிவு செய்திருந்தனர். அந்த விசாரணை நடந்துகொண்டிருக்கும் நிலையில்தான் திடீரென தற்கொலை செய்துகொண்டிருக்கிறார் வெங்கடாசலம்.
வங்க்கடலில் இன்று உருவாகவிருக்கும் ஜாவத் புயல் காரணமாக, ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம், அசாம், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் இன்றும் அடுத்த சில நாள்களும் கடும் கனமழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து இந்த மாநிலங்களில் பேரிடர் மீட்புப் படைகளும் தயார் நிலையில் உள்ளன.
இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான வருடாந்திர மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வரும் திங்கள் கிழமை, இந்தியாவுக்கு வருகிறார் ரஷ்ய அதிபர் புடின். பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் புடினும் கடைசியாக 2019-ல் நேரில் சந்தித்துப் பேசியிருந்தனர்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை நேற்று சந்தித்துப் பேசியிருக்கிறார் தொழிலதிபர் அதானி. சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த இந்த சந்திப்பில், மேற்கு வங்கத்தில் முதலீடு செய்வது குறித்து இருவரும் விவாதித்ததாக அதானி ட்வீட் செய்திருக்கிறார்.
Uber App இன்றி, வாட்ஸ்அப் மூலமாகவே டாக்ஸி புக் செய்யும் வசதியை நேற்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது உபெர் நிறுவனம். முதல்கட்டமாக லக்னோவில் மட்டும் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் பிற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படவிருக்கிறது.
On This Day - Dec 03
- சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்.
- இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜின் பிறந்தநாள், 1982
அவ்வளவுதான்!
The Subject Line-னோட இன்னைக்கு அப்டேட்ஸ் உங்களுக்குப் பிடிச்சிருக்கும்னு நம்புறேன். பிடிச்சிருந்தா கீழ இருக்க பட்டன் மூலமா உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க… இன்னும் ஏதாச்சும் இந்த TSL-ல் மாத்தணும்னா எனக்கு மெசேஜ் பண்ணுங்க! உங்க கருத்துகள் எங்களுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். 🤞
திரும்ப நாளைக்கு காலைல 7 மணிக்கு சந்திப்போம்!
Have a Nice day! ☕️
The Subject Line-ஐ சமூக வலைதளங்கள் மூலம் பின்தொடர:







