🦠 ஓமிக்ரான்: What We Know So Far?
Today Edition Highlights: சீக்கியர்களை ஏன் கண்டிப்பதில்லை அரசியல் கட்சிகள்? | உலக பேட்மின்டன் தொடரில் சாதித்த கிடாம்பி ஶ்ரீகாந்த் | தமிழகம் வரும் பிரதமர் | ⏱Reading Time: 4 Mins
ஹாய், ஹலோ… வணக்கம் 👋
உலகின் முதல் கொரோனா ஓமிக்ரான் வேரியன்ட் தொற்று பதிவாகி இன்றுடன் 25 நாள்களாகின்றன. ஆரம்பத்திலேயே இதுகுறித்து அச்சம் தரும் வகையில் செய்திகள் வந்தநிலையில், அப்போது நம்மிடையே போதுமான Data இல்லாததால், ஓமிக்ரான் பற்றி எந்தவொரு உறுதியான முடிவுக்கும் வரமுடியாமல் இருந்தனர் நிபுணர்கள். தற்போது 25 நாள்கள் கடந்துவிட்ட நிலையில், ஓமிக்ரானின் தன்மை குறித்து நமக்கு புதிய தகவல்கள் தெரியவந்திருக்கின்றன. அவை என்ன?
இதுவரை எந்தெந்த நாடுகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன?
உலகம் முழுக்க 90 நாடுகள் இதுவரை ஓமிக்ரான் தொற்றை உறுதி செய்திருக்கின்றன. இதன் பரவும் வேகம் காரணமாக, தினசரி கொரோனா எண்ணிக்கையும் தற்போது உலகம் முழுக்க உயர்ந்து வருகிறது.
கொரோனாவின் முதல் அலையில் அதிகம் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய, அமெரிக்கா நாடுகள்தான் இந்த ஓமிக்ரான் அலையிலும் அதிகம் தொற்றுகளை உறுதி செய்துவருகின்றன.

பிரிட்டன் மற்றும் தென்னாப்பிரிக்காவில் தினசரி பாதிப்புகளில், டெல்டாவோடு ஒப்பிட்டால், ஓமிக்ரானின் பங்கும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. எனவே, விரைவில் டெல்டாவை விடவும், உலகில் அதிகம் பரவிய வேரியன்ட்டாக ஓமிக்ரான் மாறுவது உறுதி.
இந்தியாவில் கடந்த டிசம்பர் 13-ம் தேதி நிலவரப்படி, Genome sequencing செய்ததில் தெரியவந்த வேரியன்ட்களின் சதவீதம்.👇 (இந்தியாவில் இதற்கடுத்த ஒரு வாரத்தில்தான் ஓமிக்ரான் தொற்று எண்ணிக்கை உயர்ந்தது. எனவே இது ஓமிக்ரான் அலையின் தொடக்க கட்ட நிலவரம்)

எவ்வளவு வேகமாகப் பரவும் ஓமிக்ரான்?
ஓமிக்ரான் குறித்து அனைத்து நாட்டு நிபுணர்களும், WHO-வும் இதுவரை உறுதியாக ஒப்புக்கொண்ட ஒரே விஷயம் இதுதான்.
இதற்கு முன்பு நாம் கண்டுபிடித்த எல்லா வேரியன்ட்களைவிடவும், ஓமிக்ரான் அதிவேகமாகப் பரவும் தன்மை கொண்டதே… இதில் யாருக்கும் மாற்றுக்கருத்தே இல்லை! ஆனால்,
இந்த அதிவேகப் பரவல் எதனால் நடக்கிறது? தடுப்பூசி அல்லது ஏற்கெனவே தொற்றால் பாதிக்கப்பட்டு உருவான நோய் எதிர்ப்பு சக்தியை ஓமிக்ரான் வீழ்த்துவதாலா?
அல்லது மற்ற வேரியன்ட்களைவிட அதிகம் உருமாறியதால் ஏற்பட்ட மாற்றத்தாலா?
அல்லது, இந்த இரண்டும் காரணங்களும் சேர்ந்ததாலா?
இந்தக் கேள்விகளுக்கு மட்டும் இன்னும் விடைதெரியவில்லை. பிரிட்டனில் மட்டும் கடந்த 7 நாள்களின் தினசரி கொரோனா தொற்று, அதற்கு முந்தைய வாரத்தைவிட 51.9% உயர்ந்திருக்கிறது. தென்னாப்பிரிக்காவிலும், ஓமிக்ரானின் ஆரம்ப கட்டத்தில் மிக அதிகமாக தொற்று எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது.
``இதனால்தான், ஓமிக்ரான் தொற்றின் சமூகப்பரவல் நிகழும் இடங்களில், சுகாதாரக் கட்டமைப்பு திணறும் அளவுக்கு புதிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகலாம் என எச்சரித்திருக்கிறது” WHO.
``பிரான்ஸ், பிரிட்டன் அளவுக்கு இந்தியாவிலும் ஓமிக்ரான் பரவினால், நம்முடைய மக்கள் தொகையின் அளவை வைத்து பார்க்கையில், இங்கு ஒருநாளைக்கு தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை 13 லட்சமாக கூட உயரலாம்” என எச்சரித்திருக்கிறார் இந்தியாவின் கோவிட் கட்டுப்பாட்டுக்குழு தலைவர் வி.கே.பால்.
இந்தியாவின் நிலை என்ன?
கடந்த 7 தினங்களாக தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்தே வருகிறது.
நேற்று இந்தியாவில் பதிவான கொரோனா தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை: 7,081
நேற்று வரை இந்தியாவில் பதிவான ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை: 147
- தமிழகம் 1
இதுவரைக்கும் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள்: 60%
- இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் எடுத்துக்கொண்டவர்கள்: 40%
நோயின் தன்மை & தீவிரம் எப்படி இருக்கும்?
இதுவரையிலான தென்னாப்பிரிக்கா மற்றும் பிரிட்டனின் நோய் பாதிப்பு Data-விலிருந்து தெரியவந்திருக்கும் விஷயம், டெல்டாவை விடவும் ஓமிக்ரானின் தீவிரம் குறைவு என்பதே. ஆனால், இதை நிபுணர்கள் இன்னும் உறுதியாக ஏற்றுக்கொள்வதில்லை. காரணம்,
ஓமிக்ரானின் அதிவேகப் பரவல் காரணமாக, ஏற்கெனவே நோய் பாதித்து எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள், தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் ஆகியோரும் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு முந்தைய அலைகளோடு ஒப்பிடுகையில், தற்போது இப்படிப்பட்ட எதிர்ப்பு சக்தி கொண்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்பதால் ஓமிக்ரானின் இயல்பான தன்மை மற்றும் தீவிரத்தை இன்னமும் அறுதியிட்டுக் கூறமுடியவில்லை.
மேலும், இது எதிர்ப்பு சக்தி கொண்டவர்களை பாதிப்பதோடு, விரைவில் அவர்களைத் தாண்டி, எதிர்ப்பு சக்தியற்றவர்களையும் பாதிக்கும். இன்னும் உலகில் 52% பேர் தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்களே இருக்கின்றனர். அவர்களிடமும், இதற்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்படாதவர்களிடமும் இது அதிக ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்கின்றனர் நிபுணர்கள். எனவேதான், ``இப்போதைக்கு இதை சாதுவாகக் கருதமுடியாது” என்கின்றனர்.
மேலும், மிகக்குறைந்த கால அளவில் இப்படி மிக அதிகமானோர் பாதிக்கப்பட்டால், அது நிச்சயம் சுகாதாரக் கட்டமைப்புகளுக்கு மிகப்பெரிய அழுத்தத்தைக் கொடுக்கும். அதுவுமே ஆபத்தில் போய்தான் முடியும். இப்படி, ஓமிக்ரான் தீவிர நோய் பாதிப்பை ஏற்படுத்தவில்லையென்றாலும், அதன் வேகமாகப் பரவும் தன்மை நமக்கு வேறு சில ஆபத்துகளைக் கொண்டுவர வாய்ப்பு அதிகம். எனவேதான், ஓமிக்ரானை உஷாராகவே பார்க்கின்றனர் நிபுணர்கள்.
தடுப்பூசி பாதுகாப்பு அளிக்குமா?
தீவிர நோய் பாதிப்புகளுக்கு எதிராக மற்றும் மரணங்களுக்கு எதிராக ஓமிக்ரானை எதிர்த்து தடுப்பூசிகள் (ஃபைஸர், ஆஸ்ட்ராஜெனிகா உள்ளிட்டவை) குறிப்பிட்ட அளவு வேலை செய்கின்றன.
ஆனால், நோய்த்தொற்று (Infection) விஷயத்தில் கொஞ்சம் பலமிழந்திருக்கின்றன. இதனால் மறுதொற்று (Reinfection) ஏற்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது.
பூஸ்டர் டோஸ் தேவையா?
தடுப்பூசி அளிக்கும் நோய் எதிர்ப்பு சக்தியானது குறிப்பிட்ட மாத கால இடைவெளிக்குப் பிறகு குறைவது இயல்பே. அது எத்தனை மாதங்கள் என்பது இன்னும் தெரியவில்லை. மேலும், ஓமிக்ரானுக்கும் இதற்கு முன்பு போட்ட இரு டோஸ் தடுப்பூசிகளின் நோய் எதிர்ப்பு சக்தி போதவில்லை. இப்படியிருக்கையில் பூஸ்டர் டோஸ்கள் தொற்றுக்கு எதிராக கூடுதல் பாதுகாப்பு அளிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
ஓமிக்ரான் பரவும் வேகத்திற்கு, விரைவில் மருத்துவமனை படுக்கைகள் நிரம்பிவிடலாம் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் தங்கள் நாட்டு மக்களை, மூன்றாவதாக டோஸாக பூஸ்டர் டோஸ்களை எடுத்துக்கொள்ளச் சொல்லிவிட்டன. இந்தியா இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை.
ஆஸ்ட்ராஜெனிகாவின் பூஸ்டர் டோஸ்கள் (இதன் இந்திய வெர்ஷன் கோவிஷீல்டு) 70 - 75% வரை தொற்றிலிருந்து பாதுகாப்பு அளிப்பதாக அண்மையில் பிரிட்டனில் நடந்த ஆய்வில் தெரியவந்திருக்கிறது. ஆனால், இதுவும் தொடக்கநிலை ஆய்வு முடிவு மட்டுமே. கோவாக்சின் பற்றி இன்னும் எதுவும் தகவல் இல்லை.
அடுத்து என்ன நடக்கும்?
தடுப்பூசி, சிகிச்சை மருந்துகள் போன்ற நிரந்தரத் தீர்வுகள் இல்லாதபோதெல்லாம் பெருந்தொற்றுகளின்போது அரசுகளுக்கு உதவுவது இரண்டே இரண்டுதான்.
Policy (அரசாங்கம் அறிவிக்கும் லாக்டௌன், WFH விதிமுறைகள், இதர கட்டுப்பாடுகள், தடுப்பூசி திட்டமிடல்கள் போன்றவை)
Behaviour (மக்கள் பின்பற்ற வேண்டிய மாஸ்க் அணிதல், சோசியல் டிஸ்டன்ஸிங், தொற்றை விரைவில் கண்டறிந்து தனிமைப்படுத்திக்கொள்ளுதல் போன்றவை)
இதில் இரண்டாவது, இப்போது கட்டாயம்; முதலாவதில் அரசு என்ன செய்யப்போகிறது என்பதை ஓமிக்ரானின் அடுத்த சில வாரங்களே முடிவு செய்யும்.
சாதனை படைத்த கிடாம்பி ஸ்ரீகாந்த்:
உலக பேட்மின்டன்ஷிப் போட்டியில் முதல்முறையாக இந்தியா சார்பில், தனிநபர் ஆண்கள் பிரிவில் வெள்ளி வென்று சாதித்திருக்கிறார் கிடாம்பி ஸ்ரீகாந்த். நேற்று சிங்கப்பூரைச் சார்ந்த லோ கியான் யூ-வுடன் நடந்த இறுதிப்போட்டியில் 15-21, 20-22 என்ற செட்களில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, தங்கத்தை தவறவிட்டார். இதற்கு முன்பு, தனிநபர் ஆண்கள் பிரிவில் பதக்கம் வென்றிருந்த பிரகாஷ் படுகோனே (1983) மற்றும் சாய் பிரனீத் (2019) ஆகிய இருவருமே வெண்கலம் மட்டுமே வென்றிருந்தனர். இந்த உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இன்னொரு பதக்கமாக, வெண்கலமும் இந்தியாவுக்கு கிடைத்திருக்கிறது. அதை சாதித்திருப்பது 20 வயதாகும் லக்ஷ்யா சென்.
அமிர்தசரஸ் படுகொலைகள்:
2015-க்குப் பிறகு மீண்டும் மத அவமதிப்புக் குற்றங்கள் பஞ்சாப்பில் வெடித்திருக்கின்றன. கடந்த சனிக்கிழமை மாலை அமிர்தசரஸ் பொற்கோயிலில் சீக்கியர்களின் புனிதமாகக் கருதப்படும் குரு கிரந்த சாஹிப்பை அவமதித்தாகக் கூறியும், நேற்று நிஜாம்பூர் குருத்வாராவில் சீக்கிய கொடியை இழிவுபடுத்தியதாகக் கூறியும் தனித்தனியாக இருவேறு இடங்களில், இரண்டு இளைஞர்கள், கொடூரமாக அடித்தே கொல்லப்பட்டுள்ளனர். இதில் முதல் சம்பவம் தொடர்பாக, இறந்த இளைஞர் மீது, மத உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இரண்டு சம்பவங்களிலும் அடித்துக்கொன்றவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த அரசியல் தலைவர்கள்கூட சீக்கியர்களைக் கண்டிக்கவில்லை. காரணம், இந்த மத அவமதிப்புக் குற்றங்கள் கடந்தகாலங்களில் தேர்தல் அரசியலில் ஏற்படுத்திய தாக்கமும், விரைவில் வரவிருக்கும் பஞ்சாப் தேர்தலும்தான்.
2015-ல் இதேபோல குற்றங்கள் நடந்தபோது, அப்போதைய ஷிரோமணி அகாலி தளம் ஒழுங்காக செயல்படாததால்தான் 2017 சட்டமன்றத் தேர்தலில், அக்கட்சி பெரும் பின்னடைவை சந்தித்தது. எனவேதான் இம்முறையும் இந்தக் குற்றச்செயல்களுக்கு மௌனம் காக்கின்றன அரசியல் கட்சிகள்.
55 இந்திய மீனவர்கள் கைது:
ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதியைச் சேர்ந்த 55 மீனவர்களை, எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி, நேற்று கைது செய்திருக்கிறது இலங்கை கடற்படை. அவர்களின் படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதையடுத்து, இவர்களை இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை உடனே விடுதலை செய்யவேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம், கேட்டுக்கொண்டிருக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
தமிழகத்தில் நேற்று பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை: 610
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை: 4
வரும் ஜனவரி 12-ம் தேதி தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவக்கல்லூரிகளைத் திறந்துவைக்க தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி. விருதுநகரில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர், தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் மேடையைப் பகிர்ந்துகொள்ளவிருக்கிறார்.
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு அனுமதி வழங்கும், தேர்தல் விதிகள் திருத்த மசோதா 2021 இன்று மக்களவையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவிருக்கிறது.
🔴 இதுவரைக்கும் TSL-ஐ தொடர்ந்து படிச்சிட்டு வர்றீங்க; எனவே இதுபற்றிய உங்க கருத்தை தெரிஞ்சுக்க விரும்புறோம். அதனால், இந்த லிங்கை க்ளிக் பண்ணி உங்களோட ரேட்டிங்கைப் பதிவு பண்ணிடுங்க. TSL-ஐ மேம்படுத்த இது எங்களுக்கு உதவியா இருக்கும் 🤗
அவ்வளவுதான்!
திரும்ப நாளைக்கு காலைல 7 மணிக்கு சந்திப்போம்!
Have a Nice day! ☕️
The Subject Line-ஐ சமூக வலைதளங்களில் பின்தொடர: