🎯 பெகாசஸ் விவகாரம்: பொய் சொன்னதா மத்திய அரசு?
Today Edition Highlights: இன்று தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் | NeoCov வைரஸ் நிலவரம் என்ன? | புதிதாக வரும் ஒரே டிஜிட்டல் ID? | வரலாறு படைத்த நடால் | Reading Time: ⏱ 6 Mins
ஹாய், ஹலோ… வணக்கம் 👋
இன்றைய தினத்தின் டாப் அப்டேட்ஸ் இதோ…
தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் 🏛
2022-23-ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், குடியரசுத்தலைவரின் உரையுடன் இன்று தொடங்குகிறது.
மத்திய பட்ஜெட்டிற்கு முன்பு ஆண்டுதோறும் தாக்கல் செய்யப்படும், பொருளாதார ஆய்வறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. இந்த ஆய்வறிக்கை குறித்து, மத்திய அரசின் புதிய பொருளாதார ஆலோசகர் வி.அனந்த நாகேஸ்வரன் மதியம் 3:45 மணிக்கு பத்திரிகையாளர்களைச் சந்தித்து விளக்கவிருக்கிறார்.
இதற்கடுத்து நாளை (பிப்ரவரி 1) மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக நடக்கிறது. முதல்கட்டம் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 11 வரையிலும், இரண்டாம் கட்டம் மார்ச் 14 முதல் ஏப்ரல் 8 வரையிலும் நடக்கிறது.
ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் இது என்பதால் அது கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. இன்னொருபுறம் எதிர்க்கட்சிகள் வேளாண் பிரச்னைகள், பீகாரில் நடக்கும் வேலையில்லா திண்டாட்டத்திற்கு எதிரான போராட்டங்கள், இந்தியா - சீனா எல்லைப் பிரச்னை, பெகாசஸ் உளவு விவகாரம் எனப் பல முக்கியமான பிரச்னைகளை இந்தக் கூட்டத்தொடரில் எழுப்பவிருக்கின்றன. முக்கியமாக பெகாசஸ் பிரச்னை. அது என்ன? 👇
பெகாசஸ்: நியூயார்க் டைம்ஸ் கட்டுரை சொன்னது என்ன?
இஸ்ரேலின் NSO நிறுவனம் பற்றி, கடந்த வெள்ளிக்கிழமையன்று `நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை வெளியிட்டிருக்கும் கட்டுரை பல புதிய தகவல்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. நாடாளுமன்றத்தில் இன்று முதல் புயலையும் கிளப்பவிருக்கிறது. அப்படி என்ன புதிதாக தெரியவந்திருக்கிறது?
பெகாசஸ் (Pegasus) என்னும் உளவு மென்பொருளைத் தயாரித்து உலக நாடுகள் பலவற்றிற்கும் விற்பனை செய்யும் நிறுவனம்தான் இந்த NSO. இந்த மென்பொருளை வைத்துக்கொண்டு இஸ்ரேல் எப்படி உலக அரசியலில் தாக்கம் செலுத்தியது, அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஏன் இந்த மென்பொருளை வாங்கின, NSO நிறுவனத்தின் எதிர்காலம் எனப் பல முக்கியமான விஷயங்களுக்கு விடைசொல்லியிருக்கிறது அந்தக் கட்டுரை. அதிலிருந்து மிக முக்கியமான 5 பாயின்ட்டுகளை மட்டும் இன்றைய TSL-ல் பார்ப்போம்.
1. பெகாசஸ் ஏன் ஆபத்தானது?
குற்றவாளிகள், பயங்கரவாத அமைப்புகள் மற்றும் மக்களைக் கண்காணிக்க அரசாங்கங்கள் உளவு மென்பொருள்கள் மற்றும் பிற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது வழக்கம்.
2011-ம் ஆண்டு NSO நிறுவனம் பெகாசஸ் மென்பொருளை உருவாக்குவதற்கு முன்பே பல தொழில்நுட்பங்கள் புழக்கத்தில் இருந்தாலும், அவையனைத்தும் End to End Encryption (வாட்ஸ்அப் போல) சேவைகளின் வருகைக்கு முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவை. எனவே அவற்றால் Encrypted மெசேஜ்களைப் படிக்க முடியவில்லை. அந்தப் பிரச்னையை பெகாசஸ் தீர்த்தது.
மேலும், பெகாசஸின் ஸ்பெஷலே Zero Click Exploitation-தான். ``இந்த லிங்க்கை க்ளிக் செய்தால் உங்களுக்கு விழுந்திருக்கும் ஒரு கோடி ரூபாய் லாட்டரியை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்” என்றெல்லாம் உங்கள் போன்களுக்கு Phishing மெசேஜ்கள் வரும் அல்லவா? அப்படி ஏதேனும் ஒரு லிங்கை நாம் க்ளிக் செய்து, அதனால் நம் போன் ஹேக் செய்யப்பட்டால் அது, One-Click Exploit. ஆனால், பெகாசஸ்க்கு அதெல்லாம் தேவையில்லை. நம் தரப்பிலிருந்து எந்த தவறும் நேராமலேயே, சத்தமின்றி நம் போனுக்குள் அதனால் நுழைய முடியும்.
இப்படி, ஆண்ட்ராய்டு, iOS, வாட்ஸ்அப் உள்ளிட்டவற்றில் இருக்கும் பாதுகாப்பு குறைபாடுகளைக் (Zero days) கண்டுபிடித்து அவற்றைப் பயன்படுத்திக்கொள்ள நூற்றுக்கணக்கான இன்ஜினீயர்களை வைத்திருக்கிறது NSO.
2. இஸ்ரேலின் அரசியல் கணக்கு
முதன்முதலில் தனியார் நிறுவனமாக மட்டுமே தொடங்கப்பட்ட NSO, பிற நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொள்வதற்காக, இஸ்ரேல் அரசுடன் இணைந்து செயல்படத் தொடங்கியது.
அதாவது, எந்த நாட்டிற்கு பெகாசஸை விற்பனை செய்யவேண்டுமென்றாலும், அதற்கு இஸ்ரேல் பாதுகாப்புத்துறையின் அனுமதி வேண்டும்.
NSO தனிமனிதர்களுக்கோ, தனியார் நிறுவனங்களுக்கோ இந்த பெகாசஸை விற்காது. அரசாங்கங்கள் மற்றும் அரசாங்கத்தின் அமைப்புகளுக்கு மட்டுமே விற்கும்.
அமெரிக்க நிறுவனங்கள்கூட தயாரிக்காத ஒரு சக்திவாய்ந்த உளவு மென்பொருளை வைத்திருந்த NSO-வின் மதிப்பு விரைவில் உலக நாடுகளுக்கு தெரியவந்தது. அதன் லாபமும் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்தது. ஐரோப்பிய நாடுகள், மெக்சிகோ, ஹங்கேரி, பனாமா, ஐக்கிய அரபு அமீரகம் எனப் பல நாடுகள் இதை வாங்க ஆர்வம் காட்டின. இதை அரசியல் ரீதியாக பயன்படுத்திக்கொண்டது இஸ்ரேல்.
ஐ.நா சபை, ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ஆகியவற்றில் பாலஸ்தீன் விவகாரங்கள் வரும்போது, மேற்கண்ட நாடுகள் இஸ்ரேலுக்கே ஆதரவளிக்கும்படி பார்த்துக்கொண்டது. இப்படி பெகாசஸை வைத்து நாட்டின் வெளியுறவு விவகாரங்களில் ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது இஸ்ரேல்.
ஆயுத வர்த்தகங்கள் (விமானங்கள், ஏவுகணைகள்) உலக அரசியலில் தாக்கம் செலுத்துவது வழக்கமான விஷயம்தான் என்றாலும், இப்படி ஒரு டிஜிட்டல் உளவு மென்பொருள் உலக அரசியலில் தாக்கம் செலுத்தியிருப்பது இதுவே முதல்முறை.
3. இந்தியாவின் பங்கு
நாட்டின் அமைச்சர்கள், முக்கியமான எதிர்க்கட்சித் தலைவர்கள், உச்சநீதிமன்ற நீதிபதிகள், தேர்தல் ஆணையர், பத்திரிகையாளர்கள், செயற்பாட்டாளர்கள் என 174 பேர் பெகாசஸ் உளவு மென்பொருளின் டார்கெட் லிஸ்ட்டில் இருந்தார்கள் எனக் கடந்தாண்டு செய்தி வெளியிட்டது `தி வயர்’ பத்திரிகை.
இதற்காக 2017-ம் ஆண்டு பிரதமர் மோடி இஸ்ரேலுக்குச் சென்றபோது சுமார் 15,000 கோடி மதிப்பில் பெகாசஸ் மற்றும் பிற ஆயுதங்கள் வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது என்கிறது `நியூயார்க் டைம்ஸ்.’
இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகே அப்போதைய இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹூ இந்தியா வந்ததாகவும், 2019-ம் ஆண்டு ஐ.நா பொருளாதார மற்றும் சமூக மன்றத்தில் பாலஸ்தீன் மனித உரிமைக் கழகத்திற்கு எதிராக இந்தியா வாக்களித்ததாகவும் குறிப்பிடுகிறது அந்தக் கட்டுரை. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை அப்போதைய ஐ.நா-வின் இந்திய தூதர் சையது அக்பருதீன் மறுத்துள்ளார்.
4. வில்லனான பெகாசஸ்
``பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராட மட்டுமே அரசாங்களுக்குத் தரப்படும்” என NSO நிறுவனம் சொன்ன பெகாசஸ் மென்பொருள் அதை மட்டுமே செய்யவில்லை.
மெக்சிகோ, ஹங்கேரி, இந்தியா, சவுதி அரேபியா உள்ளிட்ட பல நாடுகளில் எதிர்க்கட்சிகள், செயற்பாட்டாளர்களை உளவு பார்க்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 2019-ம் ஆண்டு முதலே பிரச்னையைக் கிளப்ப, NSO-வுக்கு சிக்கல் ஆரம்பித்தது.
5. அமெரிக்காவின் நெருக்கடி
இந்த பெகாசஸ் மென்பொருளை வாங்கி சோதனை செய்த நாடுகளில் அமெரிக்காவும் ஒன்றுதான். 2019-ம் ஆண்டு இதை வாங்கிய அமெரிக்கா, அடுத்தடுத்து இதனால் பல நாடுகளில் பிரச்னை எழவும் 2021-ல் இதைக் கைவிட்டது.
அதைத்தொடர்ந்து கடந்தாண்டு நவம்பரில் NSO நிறுவனத்தை கறுப்பு பட்டியலிலும் சேர்த்தது. இதன்மூலம் NSO-வுக்கு இனி எந்தவொரு அமெரிக்க நிறுவனங்களும் தங்கள் பொருள்களை / சேவைகளை விற்பனை செய்யமுடியாது. (உதாரணம்: அமேசான் கிளவுட் சேவை, டெல் நிறுவன கணினிகள்.)
இது NSO-விற்கு சிக்கலையும், உலக நாடுகளில் பெரியளவில் கெட்ட பெயரையும் ஏற்படுத்தியது. இஸ்ரேலும், ``இது தனியார் நிறுவனம் ஒன்றின் மீதான தாக்குதல் அல்ல; இஸ்ரேல் மீதான தாக்குதலும்கூட” என்றது. இருப்பினும் எதுவும் நடக்கவில்லை.
இந்த விவகாரங்களால் தற்போது NSO-வுடன் சேர்த்து இஸ்ரேலுக்கும் உலக அரங்கில் அழுத்தம் கூடியிருக்கிறது.
நியூயார்க் டைம்ஸ் கட்டுரையின் ஹைலைட்ஸ் இவ்வளவுதான். தற்போது இந்த தகவல்கள் மத்திய அரசுக்கு என்ன பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதையும் சுருக்கமாகப் பார்த்துவிடுவோம்.
பொய் சொன்னதா மத்திய அரசு?
பெகாசஸ் மூலம் பொதுமக்களை உளவு பார்த்ததாக பத்திரிகைகள் சொன்னாலும், இதுவரை அதை ஒப்புக்கொள்ளவே இல்லை மத்திய அரசு. இந்தக் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை எனவும், இந்தியாவில் குற்றவாளிகளை உளவுபார்க்க சட்டபூர்வமான நடைமுறைகள் மட்டுமே பின்பற்றப்படுவதாகவும், தேசப்பாதுகாப்பு கருதி இதற்கு மேல் எதுவும் சொல்ல முடியாது எனவும் தெரிவித்தது அரசு.
இதையடுத்துதான் இந்த விவகாரம் குறித்து ஆராய்ந்து, அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் தலைமையில் குழு அமைத்தது உச்சநீதிமன்றம்.
இந்நிலையில்தான், இந்தியா பெகாசஸை வாங்கியது உண்மைதான் என மீண்டும் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறது `நியூயார்க் டைம்ஸ்’ கட்டுரை. இதையடுத்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட், சிவசேனா உள்ளிட்ட கட்சிகள், மத்திய அரசு நாடாளுமன்றத்தில் பொய் சொல்லிவிட்டதாக விமர்சித்திருக்கின்றன. இன்று நாடாளுமன்றம் தொடங்குவதால் அவையிலும் இந்தப் பிரச்னை எதிரொலிக்கும்.
மத்திய அரசு ஏன் சமாளிக்கிறது?
இந்தியாவில் பெகாசஸ் பயன்படுத்தப்பட்டிருப்பதற்கு பல ஆதாரங்கள் கிடைத்தும், மத்திய அரசு மௌனம் காக்க காரணம், அதைப் பயன்படுத்த இதுவரை எந்த சட்டமும் அனுமதிக்காததே.
தற்போது இருக்கும் சட்டங்கள், குற்றவாளிகள் பிறரிடம் பகிரும் தகவல்களை உளவுபார்க்க அனுமதிக்கிறதே தவிர, பெகாசஸ் போல 24 மணி நேரமும் ஒருவரைக் கண்காணிப்பதை அனுமதிப்பதில்லை. பத்திரிகையாளர்கள், நீதிபதிகளையெல்லாம் இதன்படி கண்காணிக்கவும் முடியாது.
மேலும், ``எதிர்க்கட்சியினர், தேர்தல் ஆணையர், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள் என இவ்வளவு பேரை பலநூறு கோடிகள் செய்து உளவுபார்த்ததை ஒரு அரசால் நியாயப்படுத்தவே முடியாது. அது பல அரசியல் சிக்கல்களைக் கொண்டுவரலாம்.” என்கிறார் `தி வயர்’ பத்திரிகையின் ஆசிரியர் சித்தார்த் வரதராஜன்.
எனவேதான் அனைவரும் உச்சநீதிமன்ற குழுவின் அறிக்கைக்காக காத்திருக்கின்றனர். அதன்பிறகே இந்தப் பிரச்னை தேசிய அரசியலில் எப்படிப்பட்ட தாக்கம் செலுத்தும் எனத் தெரியும்.
1. NeoCov-க்கு அச்சம் வேண்டாம்
NeoCov என்ற கொரோனா வைரஸ் சீன விஞ்ஞானிகளால் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அது 3-ல் ஒருவருக்கு உயிரிழப்பை ஏற்படுதுத்தும் எனவும் செய்திகளில் நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால், அதில் இப்போதைக்கு அச்சப்பட எதுவுமே இல்லை. காரணம்,
இது ஏற்கெனவே கண்டறியப்பட்ட ஒரு வைரஸ்தான். இது இப்போதைக்கு வௌவால்களில் மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தும். இன்னொருமுறை உருமாறினால் (Mutation) மட்டுமே மனிதர்களைப் பாதிக்க வாய்ப்பு உண்டு. அப்படி பாதித்தாலும், அது பெருந்தொற்றாக (Pandemic) மாறுவதற்கும் வாய்ப்பு மிக மிகக்குறைவு.
இப்போது சீன விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் அறிக்கையும், சக இன்னும் விஞ்ஞானிகளால் ஆய்வுக்கு உட்படுத்தப்படாததே. எனவே இப்போதைக்கு NeoCov மற்றுமொரு சாதாரண வைரஸே.
2. நடாலின் கை சேர்ந்த 21-வது கிராண்ட்ஸ்லாம்
5 மணி நேரம் 24 நிமிடங்கள் நடந்த நீ…ண்ட ஆஸ்திரேலிய ஓப்பன் இறுதிப்போட்டியில் வென்று, நேற்று வாகை சூடியிருக்கிறார் ரஃபேல் நடால்.
ஜோகோவிச், ஃபெடரர் ஆகிய இருவரையும் விஞ்சி, முதல்முறையாக 21-வது கிராண்ட்ஸ்லாமையும் நேற்று கைப்பற்றியிருக்கிறார். இது நடால் வெல்லும் இரண்டாவது ஆஸ்திரேலிய ஓப்பன் பட்டம்.
கடந்தாண்டு நடந்த அமெரிக்க ஓப்பனில் ஜோகோவிச்சை வீழ்த்தி ஆச்சர்யப்படுத்தியிருந்தார் மெத்வதேவ். எனவே நடாலுக்கு எதிராகவும் மாயங்கள் நிகழ்த்தலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மெத்வதேவ் ஆரம்பத்தில் இரண்டு செட்களைக் பற்றியிருந்தாலும் கைப்பற்றினாலும், அதிலிருந்து மீண்டுவந்து 2-6, 6-7 (5), 6-4, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் போராடி வென்றார் நடால்.
தமிழகத்தில் நேற்று பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை: 22,238 (நேற்று முன்தினம்: 24,418) 🔻
- அதிகபட்சமாக, சென்னையில்: 3,998 (4,508) 🔻
- தமிழகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை: 38 (46) 🔻
இந்தியாவில் நேற்று பதிவான கொரோனா பாதிப்பு: 2,34,281 (2,35,532) 🔻
இன்று மற்றும் நாளைய தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு 🌦 ☔️
தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் சி.பி.ஐ விசாரணை கோரியிருந்தார் அம்மாணவியின் தந்தை. இந்த வழக்கை கடந்தவாரம் விசாரித்து வந்த சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை, வெள்ளிக்கிழமையன்று இருதரப்பு வாதங்களையும் கேட்டபிறகு, தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
நேற்று `மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, வறுமைக்கு நடுவிலும் பள்ளிக்கு ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கிய திருப்பூரைச் சேர்ந்த தாயம்மாள் என்பவரைப் பாராட்டினார். 💐
பா.ஜ.க-வுடனான தொகுதிப் பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்துவரும் நிலையில், நேற்று முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருக்கிறது அ.தி.மு.க.
தனிநபரின் பான் கார்டு, ஆதார், டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட அனைத்தையும் ஒரே டிஜிட்டல் ஐடியின் கீழ் இணைத்து, ஆன்லைனில் அவற்றைப் பயன்படுத்த வழிசெய்யும் புதிய திட்டம் ஒன்றை தயார் செய்து வருகிறது மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம். `இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியின் படி, இந்த திட்டத்தின் வரைவு பொதுமக்களின் கருத்துக்காக பிப்ரவரி 27-ம் தேதி வெளியிடப்படும் எனத் தெரிகிறது. இந்த திட்டம் குறித்து விரிவாக அப்போது பார்ப்போம்.
இந்திய ரயில்வே நடத்திய Non-Technical Popular Categories (NTPC) தேர்வுகளில் குளறுபடிகள் நடந்துள்ளதாகக் கூறி பீகாரில் போராட்டங்கள் நடந்துவருகின்றன. இந்நிலையில் இந்திய ரயில்வேக்கு கடிதம் எழுதியுள்ள மத்திய அரசின் மின் உற்பத்தி நிறுவனமான NTPC, ``ஊடகங்களில் தேர்வு குறித்து குறிப்பிடும்போது வெறும் NTPC என்றே குறிப்பிடுகிறார்கள். எனவே இது எங்கள் நிறுவன தேர்வு எனப் பலரும் நினைக்க வாய்ப்புள்ளது. மேலும், இதனால் எங்களுக்கு கெட்ட பெயர் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே இந்தப் பெயரை மாற்றுங்கள்” எனத் தெரிவித்துள்ளது. 🤭
இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோரில் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் எடுத்துக்கொண்டவர்களின் எண்ணிக்கை நேற்றுடன் 75%-ஐக் கடந்திருக்கிறது. 👏
துருக்கியின் பணவீக்க விகிதமானது 19 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துவிட்டது என அரசின் வழக்கமான ஆய்வறிக்கையை நேற்று முன்தினம் வெளியிட்டார் அந்நாட்டின் புள்ளியியல் நிறுவன தலைவர் டின்சர். இதையடுத்து, ``இவர் துருக்கியின் பொருளாதாரப் பிரச்னையை பூதாகரப்படுத்திச் சொல்கிறார்” எனக்கூறி டின்சரை அந்தப் பதவியிலிருந்தே தூக்கிவிட்டார் அந்நாட்டு அதிபர் எர்டோகன். இதேபோல, அந்நாட்டின் பொருளாதாரப் பிரச்னைகளுக்காக 2019-ம் ஆண்டிலிருந்து 3 மத்திய வங்கி கவர்னர்கள் மற்றும் ஒரு நிதியமைச்சரை இதுவரை பதவிநீக்கம் செய்திருக்கிறார் எர்டோகன்.
ஆனால், பொருளாதாரம் மோசமாக காரணம் யார் என்றால், எர்டோகனையும் அவரின் பொருளாதாரக் கொள்கைகளையுமே கைகாட்டுகின்றனர் நிபுணர்கள்!
- கடற்கரைகளுக்குச் செல்லலாம்: கொரோனா பரவல் காரணமாக சென்னை கடற்கரைகளுக்குச் செல்ல மாநகராட்சி ஜனவரி 31 வரை தடைவிதித்திருந்தது. அது இன்றுடன் முடியும் நிலையில், நாளை முதல் (பிப்ரவரி 1) பொதுமக்கள் கடற்கரைகளுக்குச் செல்லலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
On This Day - Jan 31
- அமெரிக்காவில் அடிமை முறையை ஒழிக்கும் 13-வது சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்ட நாள், 1865
- முன்னணி எழுத்தாளரும், இலக்கிய விமர்சகருமான க.நா.சுப்ரமணியம் பிறந்தநாள், 1912
- `ஞானபீட விருது’ பெற்ற சித்திரப்பாவை நூலை எழுதிய எழுத்தாளர் அகிலன் நினைவு நாள், 1988
- நகைச்சுவைக் கலைஞர் நாகேஷ் நினைவு நாள், 2009
அவ்வளவுதான்!
The Subject Line-னோட இன்னைக்கு அப்டேட்ஸ் உங்களுக்குப் பிடிச்சிருக்கும்னு நம்புறேன். பிடிச்சிருந்தா கீழ இருக்க பட்டன் மூலமா உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க… இன்னும் ஏதாச்சும் இந்த TSL-ல் மாத்தணும்னா எனக்கு மெசேஜ் பண்ணுங்க! உங்க கருத்துகள் எங்களுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். 🤞
திரும்ப நாளைக்கு காலைல 7 மணிக்கு சந்திப்போம்!
Have a Nice day ☕️
The Subject Line-ஐ சமூக வலைதளங்களில் பின்தொடர:
Telegram | Twitter | Facebook | Insta
Today Edition பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க! ❤️