📱வாட்ஸ்அப் டேட்டாவுக்கு கூகுளால் என்ன சிக்கல்?
Today Edition highlights: பற்றவைத்த ராகுல் உரை | 37 கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த ஸ்டாலின் | சீனாவில் தொடங்கும் குளிர்கால ஒலிம்பிக்ஸ் | ஏன் குடைகளின் விலை உயர்கிறது? | Reading Time: ⏱ 4 Mins
ஹாய், ஹலோ… வணக்கம் 👋
இன்றைய தினத்தின் டாப் அப்டேட்ஸ் இதோ…
பற்றவைத்த ராகுலின் உரை
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவித்துப் பேசிய ராகுல் காந்தியின் உரைதான் நேற்றைய அரசியல் ட்ரெண்டிங்! அப்படி என்ன பேசினார்? பேசிய உரையின் முக்கியமான சாராம்சம் மட்டும் இங்கே…
``இந்தியாவை ஆளும் முறை பற்றி இருவிதமான பார்வைகள் இருக்கின்றன. ஒன்று, இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்பது. பல தரப்பட்ட கலாசாரம், மொழி உள்ளிட்டவை அடங்கிய பூங்கொத்து இந்த நாடு. மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் உரையாடலால் உருவாகும் உறவு இது.
இன்னொன்று, அனைத்தையும் ஒற்றை நபரிடம் குவிக்கும் மன்னராட்சி முறை. பா.ஜ.க இதில் இரண்டாவதைத்தான் கையில் எடுத்திருக்கிறது. இது மிகவும் ஆபத்தானது. இன்றைக்கு நாடு சந்தித்திருக்கும் பிரச்னைகளுக்கு இந்த அணுகுமுறைதான் காரணம்.
தமிழக எம்.பி-க்கள் நீட் விவகாரம் தொடர்பான முடிவு குறித்து உங்களிடம் கேட்கிறார்கள். ஆனால், அந்தக் குரலை மதிப்பதில்லை. பஞ்சாப் விவசாயிகள் உங்களுக்கு எதிராக குரல் எழுப்பியபோதும் நீங்கள் கேட்கவில்லை. இறுதியாக அவர்கள் ஓராண்டு காலம் போராடினார்கள்.
ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன். நீங்கள் ஒருபோதும் தமிழ்நாட்டை ஆளவே (ஆட்சியமைக்கவே) முடியாது. மன்னராட்சி மனப்பான்மையை இன்னமும் நீங்கள் கைவிடவில்லையென்றால், அது நாட்டிற்கு மேலும் ஆபத்தானது.

இங்கு இரண்டு இந்தியா இருக்கிறது; ஒன்று ஏழைகளுக்கு; இன்னொன்று பணக்காரர்களுக்கு; இந்த இரண்டிற்கும் இடையேயான இடைவெளி அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
5 - 10 பேருக்கு உதவுவதற்காக நாட்டின் சிறு குறு தொழில்நிறுவனங்களை கைவிட்டு விட்டீர்கள். பெரிய நிறுவனங்கள் அவசியம்தான். ஆனால், அவை மட்டுமே நாட்டில் வேலைவாய்ப்பை உருவாக்கிவிடாது. சிறு குறு தொழில் நிறுவனங்கள்தான் அவற்றைச் செய்யும். காங்கிரஸின் 10 ஆண்டு கால ஆட்சியில் 27% பேரை வறுமையிலிருந்து மீட்டோம். ஆனால், நீங்கள் 7 ஆண்டு காலத்தில் மீண்டும் 23% பேரை வறுமையை நோக்கித் தள்ளியிருக்கிறீர்கள்.
இன்றைக்கு நீதித்துறை, தேர்தல் ஆணையம் மற்றும் பிற அமைப்புகள் என அனைத்தும் மத்திய அரசால் பாதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் இஸ்ரேலுக்குச் சென்றுவிட்டு திரும்பிவந்தால், சொந்த நாட்டு மக்கள் மீதே பெகாசஸ் உளவு மென்பொருளைப் பயன்படுத்துகிறார்.
மோடியின் தலைமையில் இந்தியாவுக்கு வெளியேயும் உள்ளேயும் நம் பலம் குறைந்திருக்கிறது. சீனாவிடம் ஒரு விரிவான திட்டமுள்ளது. நம் எதிரிகளைக் குறைத்து மதிப்பிட வேண்டாம். சீனாவும் பாகிஸ்தானும் ஒன்று சேராமல் பார்த்துக்கொள்வது நம்முடைய முக்கியமான வெளியுறவுக் கொள்கையல்லவா? இன்று அதற்கு நேர்மாறாகத்தான் நடந்துள்ளது” என நாட்டின் பல்வேறு பிரச்னைகள் குறித்தும் பேச, நேற்று இரவே உடனடியாக அமைச்சர்கள் அவசர அவசரமாக ராகுலின் பேச்சுக்கு எதிராக ட்விட்டரில் பதில்களைப் பதிவு செய்தனர்.
சட்டத்துறை அமைச்சரின் ட்வீட் 👇


வெளியுறவுத்துறை அமைச்சரின் ட்வீட் 👇

இனி அடுத்து நாடாளுமன்றம் இன்று மாலை 4 மணிக்கு கூடுகிறது.
வாட்ஸ்அப் பேக்கப்பிற்கு வரும் புதிய சிக்கல்
ஐபோன்களில் வாட்ஸ்அப்பை பயன்படுத்தினால் அதிகபட்சம் 5 GB வரை ஐ-கிளவுடில் வாட்ஸ்அப் டேட்டாவை பேக்கப் எடுத்துப் பயன்படுத்த முடியும். அதற்கு மேல் என்றால் ஐ-கிளவுடிற்கு கூடுதல் கட்டணம் செலுத்தவேண்டும்.

ஆனால், ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு இந்தப் பிரச்னையே இல்லை. எவ்வளவு GB வாட்ஸ்அப் டேட்டாவை வேண்டுமானாலும் கூகுள் டிரைவில் பேக்கப் எடுத்து வைத்துக்கொள்ளலாம். உங்கள் கூகுள் அக்கவுன்ட்டின் மொத்த ஸ்டோரேஜ் கணக்குகளிலும் வாட்ஸ்அப் டேட்டாவை கூகுள் கணக்கில் எடுத்துக்கொள்ளாது.
ஆனால், இந்த முறையை கூகுள் விரைவில் மாற்றவுள்ளதாக `wabetainfo’ தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி, புதிய முறை அமலுக்கு வந்தால் தற்போது கூகுள் ஒவ்வொரு இலவச அக்கவுன்ட்டிற்கும் அளிக்கும் 15 GB வரை மட்டுமே வாட்ஸ்அப் டேட்டாவை பேக்கப் எடுக்கமுடியும். அதற்கு மேல் கூகுளின் டிரைவ் ஸ்டோரேஜுக்குப் பணம் செலுத்தவேண்டும்.
வாட்ஸ்அப் குறித்த நம்பகமான செய்திகளை வழங்கும் தளம்தான் wabetainfo. எனவே இந்த தகவல் உண்மையாக இருக்கவே வாய்ப்பு அதிகம். ஆனால், இதுவரைக்கும் வாட்ஸ்அப் தரப்பிலிருந்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
கூகுள் தன்னுடைய வாடிக்கையாளர்கள், அதன் ப்ரீமியம் ஸ்டோரேஜ் சேவைகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவே இப்படி செய்கிறது. கடந்தாண்டுதான் இதேபோல கூகுள் போட்டோஸ்க்கு வழங்கப்பட்ட Unlimited Storage வசதியும் நீக்கப்பட்டது.
1. நாளை தொடங்கும் குளிர்கால ஒலிம்பிக்ஸ்
குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நாளை சீனாவின் பீஜிங் நகரில் தொடங்குகிறது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் அந்நாட்டு அதிபரி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புடின், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோர் பங்கேற்கவிருக்கின்றனர்.
ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் முஸ்லிம்களுக்கு எதிராக சீனா மேற்கொள்ளும் அடக்குமுறைகளைக் கண்டிக்கும் வகையில் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் ஏற்கெனவே தங்கள் நாட்டு அதிகாரிகளை இந்த ஒலிம்பிக்கிற்கு அனுப்பப்போவதில்லை (வீரர்கள் கலந்துகொள்வார்கள்) என அறிவித்தன. அப்போது, ஒலிம்பிக்கை வைத்து அரசியல் செய்யவேண்டாம் என்றது சீனா.
ஆனால், நேற்று நடைபெற்ற ஒலிம்பிக் தீபம் ஏந்தும் நிகழ்ச்சியில், 2020-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக கால்வன் பள்ளத்தாக்கில் சண்டையிட்ட கி ஃபேபோ என்ற ராணுவ தளபதியிடம் தீபத்தை அளித்திருக்கிறது சீனா. இதன்மூலம் மீண்டுமொருமுறை இந்தியாவைச் சீண்டியிருக்கிறது.
இந்தியா சார்பாக இந்த ஒலிம்பிக்கில் ஒரே ஒரு வீரர் மட்டுமே கலந்துகொள்கிறார். அவர் காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த 31 வயது பனிச்சறுக்கு வீரரான ஆரிஃப் கான்.
2. ஏன் குடைகளின் விலை அதிகமாகிறது?
நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் அதிகம் கிண்டல் செய்யப்பட்ட விஷயங்களில் ஒன்று, குடைகளுக்கான இறக்குமதி வரி உயர்வு. ஏன் திடீரென குடைகளுக்காக இப்படியோர் அறிவிப்பு?
காரணம், உள்நாட்டு குடை உற்பத்தியாளர்கள் கொரோனா லாக்டௌன்களாலும், சீனாவிலிருந்து இறக்குமதியான விலை மலிவான குடைகளாலும் பாதிக்கப்பட்டதுதான். குறிப்பாக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் குடைகளுக்கு 10% மட்டுமே வரி விதிக்கப்பட்டிருக்கிறது. இது உள்ளூர் சந்தைகளை வியாபாரிகளை பாதிக்கவும்தான் தற்போது 20% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
எனவே உள்ளூர் குடை உற்பத்தியாளர்கள் இதை வரவேற்கின்றனர். அதேசமயம், இன்னமும் குடைக்குத் தேவையான நைலான் வெளிநாடுகளிலிருந்துதான் கொள்முதல் செய்யப்படுகிறது. அதற்கான வரியைக் குறைக்கச்சொல்லி கோரிக்கை வைத்திருக்கின்றனர் உள்ளூர் உற்பத்தியாளர்கள். ஆனால், அதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை.
அப்படியெனில் இறக்குமதி குடைகள் மட்டும்தான் விலையேறுமா? இல்லை. மூலப்பொருள்களின் விலை அண்மைக்காலத்தில் கடுமையாக உயர்ந்துள்ளதால், உள்ளூர் குடைகளின் விலையும் தற்காலிகமாக உயர்த்தப்படும் என்கின்றனர் உற்பத்தியாளர்கள்.
சரி, இந்தியாவில் ஆண்டுக்கு எவ்வளவு குடைகள் விற்பனையாகின்றன?
ஆண்டுக்கு சுமார் 1.2 கோடி குடைகள் விற்பனையாகின்றனவாம். இதன் சந்தை மதிப்பு சுமார் 2,000 கோடி ரூபாய். இந்தியாவில் அதிகபட்ச சந்தை மதிப்பு உள்ள மாநிலம் கேரளா: சுமார் 700 கோடி ரூபாய்.
தமிழகத்தில் நேற்று பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை: 14,013 (நேற்று முன்தினம்: 16,096) 🔻
- அதிகபட்சமாக, சென்னையில்: 2,054 (2,348) 🔻
- தமிழகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை: 37 (35) 🔺
இந்தியாவில் நேற்று பதிவான கொரோனா பாதிப்பு: 1,61,386 (1,67,059) 🔻
நாடு முழுவதும் சமூகநீதி மற்றும் கூட்டாட்சி தத்துவம் தொடர்பான முன்னெடுப்புகளை மேற்கொள்ளும் வகையில், `அகில இந்திய சமூகநீதிக் கூட்டமைப்பு’ என ஒரு அமைப்பு ஏற்படுத்தப்படும் எனக் குடியரசு தினத்தன்று அறிவித்திருந்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
Today, I've written this letter to 37 leaders of key political parties inviting them to be part of the All India Federation for Social Justice, I had announced on 26 January 2022. Let's come together as a true Union of States with conviction, to ensure 'Everything for Everyone'.இந்நிலையில் இந்த அமைப்பிற்கு, தங்கள் கட்சிகளிலிருந்து உறுப்பினர்களைப் பரிந்துரைக்குமாறு நாட்டின் 37 கட்சித்தலைவர்களுக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளார்.
மீன்வளத்துறை அமைச்சராக இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் மீது 2001 - 2006 காலகட்டத்தில் வருமானத்துக்கும் அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பான வழக்கு ஒன்று நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் இதுதொடர்பான நடவடிக்கையாக, அமைச்சரின் 160 ஏக்கர் நிலம் மற்றும் 6.5 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை நேற்று முடக்கியிருக்கிறது அமலாக்கத்துறை.
இந்தியாவின் புகழ்பெற்ற பதிப்பகங்களில் ஒன்றான, Westland Publications-ஐ மூட முடிவு செய்துள்ளது அமேசான் நிறுவனம். இந்த பதிப்பகத்தை டாடாவிடமிருந்து 2017-ல் அமேசான் வாங்கியிருந்தது. அந்த பதிப்பக புத்தகங்களின் எதிர்காலம் என்ன என்பது குறித்து இன்னும் அமேசான் தரப்பிலிருந்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
சீன ராணுவத்தினரால் கடந்த மாதம் 18-ம் தேதி கடத்தப்பட்ட, அருணாச்சலப்பிரதேச மாநில சிறுவன், சுமார் இரண்டு வாரங்களுக்குப் பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான். சீன அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சிறுவனை மீட்டது இந்திய ராணுவம். இந்நிலையில், சிறுவனை தங்கள் கஸ்டடியில் வைத்திருந்தபோது சீன வீரர்கள் பலமுறை அவனை உதைத்தாகவும், விசாரணையின்போது எலெக்ட்ரிக் ஷாக் கொடுத்ததாகவும் குற்றம்சாட்டியிருக்கிறார் அச்சிறுவனின் தந்தை.
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி, வரும் ஞாயிற்றுக்கிழமையன்று அகமதாபாத்தில் தொடங்குகிறது. இந்நிலையில், இந்திய அணியின் வீரர்கள் ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் இயர், நவ்தீப் சைனி, ருத்துராஜ் கெய்க்வாட் ஆகிய நால்வருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர்கள் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். ஒருநாள் போட்டிக்கான அணியில் மயங்க் அகர்வால் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளார்.
``அமெரிக்காவின் நோக்கமெல்லாம் உக்ரைன் மீது ரஷ்யாவை போர் தொடுக்கவைத்து, அதைக் காரணமாக வைத்து ரஷ்யாவின் மீது அதிகமான பொருளாதாரத் தடைகளை விதிக்கச் செய்வதுதான். அதனால்தான் எங்கள் கோரிக்கைகளுக்கு செவிமடுக்க மறுக்கிறது” என அமெரிக்காவை கடுமையாக விமர்சித்திருக்கிறார் ரஷ்ய அதிபர் புடின். இன்னொருபுறம் விரைவில் சுமார் 3,000 வீரர்களை ஐரோப்பாவுக்கு அனுப்பத் திட்டமிட்டு வருகிறது அமெரிக்கா.
ஓமிக்ரானின் துணை வடிவமான BA.2 வேரியன்ட் உலகின் பல நாடுகளில் பரவி வருவது குறித்து சில நாள்களுக்கு முன்பு பார்த்தோம் அல்லவா? அதுபற்றிய புது அப்டேட் ஒன்றை வெளியிட்டிருக்கிறது WHO. அதன்படி BA.2 வேரியன்ட்டானது, தற்போதைய ஓமிக்ரான் வேரியன்ட்டான BA.1-ஐ விடவும் அதிகம் நோய் பாதிப்பு ஏற்படுத்தும் என்பதற்கு இன்னும் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. தடுப்பூசிகளும் BA.1 ஓமிக்ரானைப் போலவே இந்த BA.2-விற்கு எதிராகவும் செயலாற்றுகின்றன.எனவே இவற்றில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் ஏதுமில்லை. ஆனால், கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயம் BA.1 வெர்ஷனை விடவும், இது இன்னும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாம். அதனால்தான் பல நாடுகளில் மிக விரைவாக BA.1-ஐ விடவும் அதிகம் ஆதிக்கம் செலுத்தும் வேரியன்ட்டாக மாறியிருக்கிறது.
On This Day - Feb 03
- ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் பிறந்தநாள், 1963
- தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திராவிட இயக்கத் தலைவருமான சி.என்.அண்ணாதுரை நினைவுதினம், 1969
அவ்வளவுதான்!
The Subject Line-னோட இன்னைக்கு அப்டேட்ஸ் உங்களுக்குப் பிடிச்சிருக்கும்னு நம்புறேன். பிடிச்சிருந்தா கீழ இருக்க பட்டன் மூலமா உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க… இன்னும் ஏதாச்சும் இந்த TSL-ல் மாத்தணும்னா எனக்கு மெசேஜ் பண்ணுங்க! உங்க கருத்துகள் எங்களுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். 🤞
திரும்ப நாளைக்கு காலைல 7 மணிக்கு சந்திப்போம்!
Have a Nice day ☕️
The Subject Line-ஐ சமூக வலைதளங்களில் பின்தொடர:
Telegram | Twitter | Facebook | Insta
Today Edition பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க! ❤️