💴 மாறாத ரெப்போ விகிதங்கள்; நமக்கு நல்லதா கெட்டதா?
Today Edition Highlights: ஹிஜாப் விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவு | நிறைவடைந்த உ.பி முதல்கட்ட வாக்குப்பதிவு | யோகிக்கு கவுன்ட்டர் கொடுத்த பினராயி விஜயன் | Reading Time: ⏱ 5 Mins
Good Morning ☕️
இன்றைய தினத்தின் டாப் அப்டேட்ஸ் இதோ…
ரெப்போ மற்றும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதங்களை தொடர்ந்து 10-வது முறையாக மாற்றாமல் விட்டிருக்கிறது ரிசர்வ் வங்கி.
கோவிட்டின் பாதிப்பிலிருந்து பொருளாதாரம் மீளத்தொடங்கி, தற்போது விலைவாசி உயர்வு நடுத்தர மக்களையும், ஏழைகளையும் பாதிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்த சமயத்தில் எப்படியும் ரிசர்வ் வங்கி ரிவர்ஸ் ரெப்போவை ஏற்றும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும், ஏற்றவில்லை.
இந்த முடிவு நம்மை எப்படி பாதிக்கும், நம் நிதி திட்டமிடல்கள் எப்படி இதனால் மாறலாம் என்பதை இன்றைய TSL-ல் காண்போம்.
ரெப்போவுக்கும் நமக்கும் என்ன தொடர்பு? 🏦
இந்தியப் பொருளாதாரத்தில் பணப்புழக்கத்தை அதிகரிக்கவும், குறைக்கவும் ரிசர்வ் வங்கி கையில் வைத்திருக்கும் ஆயுதம்தான் இந்த ரெப்போ வட்டி விகிதங்கள். நமக்குத் தெரிந்தோ, தெரியாமலோ இவை தினந்தோறும் நம் நிதி வாழ்க்கையில் தாக்கம் செலுத்தி வருகின்றன. எப்படி? அதற்கு முன்பு இரண்டிற்கும் இடையேயான வித்தியாசத்தைப் பார்த்துவிடுவோம்.
👉 ரெப்போ: ரிசர்வ் வங்கி, பிற வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம். இந்த ரெப்போ வட்டிவிகிதம் அதிகமானால்…
வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வாங்கும் கடன்களைக் குறைக்கும்.
இதனால், வங்கிகளிடையே பணப்புழக்கம் குறைந்து, சந்தையிலும் பணப்புழக்கம் குறையும்.
உங்களுக்கு வங்கிகள் வழங்கும் கடன்களின் (வீட்டுக்கடன், வாகன கடன்) வட்டி விகிதம் அதிகரிக்கும்.
வங்கியில் டெபாசிட் செய்திருக்கும் பணத்திற்கும் வட்டி விகிதங்கள் குறையும்.
👉 ரிவர்ஸ் ரெப்போ: இது ரிசர்வ் வங்கி, வங்கிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளும் பணத்திற்கு தரும் வட்டி. இந்த ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் அதிகமானால்…
வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் அதிகப் பணத்தைக் கொடுத்து சேமிக்கும். இதனால் சந்தையில் பணப்புழக்கம் குறையும். வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்குவதும் குறையும்.
இதுவே ரிவர்ஸ் ரெப்போ குறைந்தால், மேற்கண்டவை அப்படியே தலைகீழாக நடக்கும்.
விளக்கங்கள் போதும்; இனி விஷயத்திற்கு வருவோம். 🎯
2020-ம் ஆண்டு இந்தியப் பொருளாதாரத்தை கொரோனா முற்றிலுமாக முடக்கியபோது, நாட்டில் பணப்புழக்கம் குறைந்தது. இதை சரிசெய்ய வேண்டுமல்லவா? அதற்காக எப்போதும் இல்லாத அளவிற்கு ரெப்போ வட்டி விகிதத்தை 4.0% ஆகவும், ரிவர்ஸ் ரெப்போவை 3.35% ஆகவும் குறைத்தது ரிசர்வ் வங்கி. (இதுவே பிப்ரவரி 2020-ல் இரண்டும் முறையே 5.15% மற்றும் 4.90%)
இதனால் வங்கி சேமிப்புகளுக்கான வட்டி விகிதங்கள் குறைந்தன. இதன்மூலம், வங்கிகளில் மக்கள் அதிகம் பணத்தை சேமிக்காமல், அவற்றை செலவிடவும் முதலீடு செய்யவும் ரிசர்வ் வங்கி ஊக்குவித்தது.
இதேபோல வங்கிகளும் கடன் வட்டி விகிதங்களைக் குறைத்தன. இதனால், வீட்டுக்கடன் உள்பட பல கடன்களுக்கான வட்டி விகிதங்கள் குறையவே, கடன் வாங்குவோர் எண்ணிக்கை உயர்ந்தது. இதனால் பணப்புழக்கமும் அதிகரிக்கத் தொடங்கியது. இவையனைத்தும் 2020 மற்றும் 2021-ன் கதை.
இப்போது அப்படியே 2022-க்கு வருவோம். தற்போது கொரோனாவின் பாதிப்பு குறைய ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக பொருளாதாரம் மீளத் தொடங்கிவிட்டது. இரண்டு ஆண்டுகளாக பணப்புழக்கம் அதிகரித்து, அதனால் தற்போது பணவீக்கமும் (Inflation) உயரத் தொடங்கிவிட்டது. எனவே பணப்புழக்கத்தை ஊக்குவிக்கும் பணியைக் கொஞ்சம் குறைத்து, மீண்டும் ரிசர்வ் வங்கி இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
அண்மையில் நடந்த Monetary Policy Committee (MPC) கூட்டத்தில், ரிவர்ஸ் ரெப்போவை மட்டுமாவது 20 புள்ளிகள் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரிசர்வ் வங்கி அப்படிச் செய்யவில்லை.
என்ன காரணம்?
``கொரோனாவின் பாதிப்பு குறைந்துவிட்டதுதான். ஆனால், ஓமிக்ரானால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து சர்வதேச சந்தைகள் இன்னும் முழுமையாக மீளவில்லை. உலக வர்த்தகத்தில் 2020-ம் ஆண்டு தொடங்கிய ஏற்பட்ட லாஜிஸ்டிக்ஸ் பிரச்னைகளும் இன்னும் முழுமையாக சரியாகவில்லை. உலக அரசியல் நிகழ்வுகளும் நம்பிக்கை தரும்படி இல்லை. எனவே இந்தியப் பொருளாதாரம் பழைய நிலைக்குத் திரும்ப இன்னும் சில காலம் தேவைப்படுகிறது” எனக் கருதுகிறது ரிசர்வ் வங்கி.
இதனால்தான் ரெப்போவை அப்படியே விட்டு, இன்னும் பொருளாதாரம் கொஞ்சம் மீளட்டும் எனக் காத்திருக்கிறது.
இதனால் என்ன பாதிப்புகள் ஏற்படும்?
கடந்த ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி இந்தியாவின்,
- மொத்த சில்லறை பணவீக்கம் (Retail Inflation) - 5.59%
- மொத்த விலை பணவீக்கம் (Wholesale Price Inflation) - 13.56%
ரிசர்வ் வங்கியின் நேற்றைய முடிவால் இன்னும் சில மாதங்களுக்கு பணவீக்கம் / விலைவாசி உயர்ந்தேதான் இருக்கும். இப்போதைக்கு குறைய வாய்ப்பில்லை. இந்த ஆண்டின் இறுதியில்தான் பணவீக்கம் கொஞ்சம் கட்டுக்குள் வரும் எனச் சொல்கிறது ரிசர்வ் வங்கி. எனவே நுகர்வோரின் விலைவாசிப் பிரச்னை இன்னும் தொடரும்.
வேறு யார் பாதிக்கப்படுவார்கள்?
தொழில் நிறுவனங்கள்தான். எரிபொருள் மற்றும் மூலப்பொருள்கள் விலை உயர்வு காரணமாக உற்பத்தியாளர்கள் மற்றும் தொழில்நிறுவனங்களின் உற்பத்திச் செலவு கணிசமாக உயர்ந்திருக்கிறது. ஆனாலும்கூட, பொருளாதார மந்தநிலை காரணமாக, அவற்றை உடனே வாடிக்கையாளர்களுக்கு கடத்த முடிவதில்லை.
உதாரணமாக, ஒரு உணவகத்தில் பிரியாணி தயாரிக்க 80 ரூபாய் செலவாகிறது என வைத்துக்கொள்வோம். அதை 100 ரூபாய்க்கு உரிமையாளர் விற்பனை செய்கிறார். தற்போது விலைவாசி உயர்வால் தயாரிப்பு செலவு 90 ஆகியிருக்கும். ஆனாலும், அந்த 10 ரூபாயை இந்த சமயத்தில் ஏற்றினால் வாடிக்கையாளர்கள் வரமாட்டார்கள் என ஏற்றாமலே வைத்திருப்பார். அல்லது 5 ரூபாய் மட்டும் ஏற்றியிருப்பார். இப்படி சந்தையில் Demand இன்னும் கொரோனாவுக்கு முந்தைய நிலைக்கு முழுமையாகச் செல்லவில்லை என்பதால் நிறுவனங்கள்தான் நஷ்டக் கணக்கை தாங்கிக் கொள்கின்றன
ஆட்டோமொபைல், கட்டுமானம், உலோகங்கள், சிறு குறு தொழில்நிறுவனங்கள் என எல்லா இடங்களுக்கும் இந்த உதாரணம் பொருந்தும். தொழில்நிறுவனங்களே நஷ்டத்தை தாங்கிக்கொள்ளும் இந்த நிலையைச் சரிசெய்ய ரிசர்வ் வங்கியும் சரி, அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டும் சரி; பெரியளவில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. (பிரிட்டன் ரெப்போவை ஏற்றியிருக்கிறது; அமெரிக்காவும் விரைவில் ஏற்றவிருக்கிறது) எனவே இவர்களுக்கும் சிக்கல்கள் தொடர்கின்றன.
ரிசர்வ் வங்கி முடிவால் நன்மைகளும் உண்டுதானே?
நிச்சயமாக. ஏற்கெனவே பார்த்ததுபோல, இனியும் சில மாதங்களுக்கு வீட்டுக்கடன், வாகன கடன், தனிநபர் கடன் ஆகியவை குறைந்த வட்டியில் கிடைக்கும். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கடன்பெறலாம். வீட்டுக்கடன்கள் 6.65%-யிலிருந்துகூட கிடைக்கின்றன.
ஏற்கெனவே வாங்கிய வீட்டுக் கடன் இன்னமும் 5 ஆண்டுகளுக்கும் மேல் மிச்சம் இருக்கிறது எனில், அதன் வட்டி விகிதமானது BPLR, MCLR ஆகியவற்றின்படி மாற்றியமைக்கப்படுகிறதா என உறுதி செய்துகொள்ளலாம். அப்படி இருப்பின் அதை EBLR - External Benchmark-Linked Rate-க்கு வங்கியில் விண்ணப்பித்து மாற்றிக்கொள்வதன் மூலம், நீங்கள் கட்டும் வட்டிவிகிதத்தையும் குறைத்துக்கொள்ளலாம்.
இப்படி நன்மையும் சிக்கல்களும் சேர்ந்த கலவையாக அமைந்திருக்கிறது ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை!
1. கர்நாடக ஹிஜாப் வழக்கில் என்ன நடந்தது?
பள்ளி, கல்லூரி மாணவிகள் ஹிஜாப் அணிந்துகொள்வது தொடர்பான வழக்கு நேற்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது.
விசாரணையை முடித்து இறுதியாக உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், ``நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படலாம். இந்த வழக்கு விசாரணை மொத்தமாக முடியும் வரை, பள்ளிகளுக்கு ஹிஜாப், காவித்துண்டு உள்பட எந்தவொரு மத அடையாள உடைகளையும் அணிந்துகொண்டு மாணவர்கள் பள்ளிகளுக்குச் செல்லக்கூடாது. பள்ளிகளில் அமைதி நிலவவேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர்.
ஆனால், அரசியலமைப்புச் சட்டம் மத சுதந்திரத்திற்காக தந்த உரிமைகளை இப்படி தற்காலிகமாக நீதிபதிகள் பறிப்பது தவறானது என இந்த உத்தரவுக்கு விமர்சனங்களும் எழுந்துள்ளன. மீண்டும் இந்த வழக்கு திங்கள் கிழமைக்கு விசாரணைக்கு வருகிறது.
இந்நிலையில், ``வரும் திங்கள் முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பள்ளி வளாகங்களில் எந்த மத உடைகளுக்கும் அனுமதியில்லை. 11-ம் வகுப்புக்கு மேற்பட்ட மாணவர்கள் குறித்து பிறகு முடிவெடுக்கப்படும்” எனத் தெரிவித்திருக்கிறார் அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை.
2. நிறைவடைந்த முதல்கட்ட வாக்குப்பதிவு
உத்தரப்பிரதேசத்தின் 11 மாவட்டங்களில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவுற்றது. 2017-ல் 63.47% ஆக இருந்த வாக்குப்பதிவு சதவிகிதம், நேற்று 60.17% ஆக குறைந்திருக்கிறது.
இந்தப் பகுதிகள் அனைத்தும் பெருவாரியான அளவில் ஜாட் சமூகத்தினரும் விவசாயிகளும் வசிக்கும் பகுதி. வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களை தீவிரமாக முன்னெடுத்த பகுதியும்கூட. எனவே இந்தப் பகுதி பா.ஜ.க-விற்கு சவாலானதாகவும், சமாஜ்வாதிக்கு சாதகமானதாகவும் கருதப்படுகிறது.
தேர்தல் நாளான நேற்று இன்னொரு சம்பவமும் உ.பி-யில் நடைபெற்றுள்ளது. லக்கிம்பூரில் விவசாயிகளை கார் ஏற்றி கொலைசெய்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்த, மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஷ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா நேற்று ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார்.
உத்தரப்பிரதேச உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருக்கிறது. அந்த கொலை சம்பவம் நடைபெற்ற லக்கிம்பூர் பகுதிக்கு, 4-ம் கட்ட தேர்தலின் போது வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.
தமிழகத்தில் நேற்று பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை: 3,592 (நேற்று முன்தினம்: 3,971) 🔻
- அதிகபட்சமாக, சென்னையில்: 663 (742) 🔻
- தமிழகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை: 25 (28) 🔻
இந்தியாவில் நேற்று பதிவான கொரோனா பாதிப்பு: 67,084 (71,365) 🔻
☔️ Rain Alert: இன்று மற்றும் நாளைக்கான வானிலை முன்னறிவிப்பு 🌦
தமிழக பா.ஜ.க அலுவலகமான கமலாலயத்தில் நேற்று முன்தினம் இரண்டு பெட்ரோல் குண்டுகள் வீசிய கருக்கா வினோத் என்ற நபரை நேற்று சென்னை போலீசார் கைது செய்தனர். ஏற்கெனவே குற்றப்பின்னணி கொண்ட வினோத் மீது, 4 கொலைமுயற்சி வழக்குகள் உள்பட 10 வழக்குகள் உள்ளன. நீட் தேர்வு விவகாரத்தில் பா.ஜ.க-வின் நிலைப்பாட்டிற்காகவே குண்டு வீசியதாக வினோத் தெரிவித்திருக்கிறார். ஆனால், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, இந்தக் காரணம் நம்பும்படி இல்லையென்றும், இந்த வழக்கை என்.ஐ.ஏ விசாரிக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியிருக்கிறார்.
வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் 7 நாள்கள் கட்டாயம் குவாரன்டைன் செய்துகொள்ள வேண்டும் என்ற விதியை பிப்ரவரி 14-ம் தேதி முதல் தளர்த்துகிறது மத்திய அரசு. கொரோனா நெகட்டிவ் என்ற டெஸ்ட் ரிசல்ட்டும், 2 டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டதற்கான ஆதாரம் மட்டுமே இனிமேல் போதும்.
தஞ்சை பள்ளி மாணவியின் தற்கொலை வழக்கை அண்மையில் சி.பி.ஐ-க்கு மாற்றி உத்தரவிட்டிருந்தது சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை. இதை எதிர்த்து தமிழக டி.ஜி.பி, தஞ்சாவூர் எஸ்.பி ஆகியோர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு வரும் திங்கள் கிழமை விசாரணைக்கு வருகிறது.
தேர்தல் பிரசார வீடியோ ஒன்றில் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், ``உத்தரப்பிரதேசம் காஷ்மீரைப் போலவோ, கேரளாவைப் போலவோ, மேற்கு வங்கம் போலவோ மாற நீண்ட நாள்கள் பிடிக்காது. அப்படி நடக்காமல் இருக்க உங்கள் வாக்கு முக்கியம்” எனப் பேச, அதற்கு ட்விட்டரில் கவுன்ட்டர் கொடுத்திருக்கிறார் கேரள முதல்வ பினராயி விஜயன். ``ஒருவேளை யோகி பயப்படுவது போல கேரளாவாக மாறினால், சிறந்த கல்வி, சிறந்த சுகாதாரக் கட்டமைப்பு, நல்ல வாழ்க்கைத்தரம் ஆகியவற்றை உத்தரப்பிரதேசம் பெறும். இங்கு யாரும் சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் கொல்லப்படுவதுமில்லை.” என யோகிக்கு ட்வீட் செய்திருக்கிறார்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில், அணுக்கழிவு மையம் அமைப்பதற்கான ஒப்பந்தங்களைக் கோரியுள்ளது தேசிய அணுமின் கழகம். அணுக்கழிவுகளைக் கையாளும் தொழில்நுட்பம் இந்திய அரசிடம் இல்லாததால், தற்காலிகமாக இன்றி கூடங்குளத்திலேயே இந்தக் கழிவுகள் நிரந்தரமாக சேமிக்கப்பட்டுவிட வாய்ப்புள்ளது என இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் சூழலியல் ஆர்வலர்கள்.
On This Day, Feb 11
- விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்தநாள், 1847
- அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில், `International Day of Women and Girls in Science' இன்று கடைபிடிக்கப்படுகிறது.
அவ்வளவுதான்!
The Subject Line-னோட இன்னைக்கு அப்டேட்ஸ் உங்களுக்குப் பிடிச்சிருக்கும்னு நம்புறேன். பிடிச்சிருந்தா கீழ இருக்க பட்டன் மூலமா உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க… இன்னும் ஏதாச்சும் இந்த TSL-ல் மாத்தணும்னா எனக்கு மெசேஜ் பண்ணுங்க! உங்க கருத்துகள் எங்களுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். 🤞
திரும்ப நாளைக்கு காலைல 7 மணிக்கு சந்திப்போம்!
Have a Nice day ☕️
The Subject Line-ஐ சமூக வலைதளங்களில் பின்தொடர:
Telegram | Twitter | Facebook | Insta
Today Edition பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க! ❤️