The Subject Line

Share this post
🛰 எலான் மஸ்க்கிற்கு முட்டுக்கட்டை போடுகிறதா இந்தியா?
www.thesubjectline.in

🛰 எலான் மஸ்க்கிற்கு முட்டுக்கட்டை போடுகிறதா இந்தியா?

In Today's Edition: ராணுவத்தால் கொல்லப்பட்ட அப்பாவிகள்; என்ன நடந்தது நாகலாந்தில்? | பேச்சுவார்த்தைக்கு தயாரான விவசாயிகள் | இன்று இந்தியா வரும் புடின் | இந்தியாவில் 21 ஆக அதிகரித்த ஓமிக்ரான் தொற்றின் எண்ணிக்கை | Reading Time: 6 Mins ⏳

ஞா.சுதாகர்
Dec 6, 2021
1
Share this post
🛰 எலான் மஸ்க்கிற்கு முட்டுக்கட்டை போடுகிறதா இந்தியா?
www.thesubjectline.in

ஹாய், ஹலோ… வணக்கம் ☕️

1️⃣அப்பாவிகளை சுட்ட ராணுவம்; என்ன நடந்தது நாகலாந்தில்?

நாகலாந்தில் ராணுவம் மற்றும் பொது மக்களிடையே ஏற்பட்ட மோதலில் நேற்று இரவு வரைக்கும் 15 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இதையடுத்து நாகலாந்தின் மோன் மாவட்டத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.

என்ன நடந்தது?

  • நாகலாந்தின் மோன் மாவட்டத்தில் இருக்கிறது ஓடிங் கிராமம். இங்குள்ள சுரங்க தொழிற்சாலைகளில் பணிபுரிந்துவிட்டு, தொழிலாளர்கள் ஒன்றாக வேனில் வீடு திரும்புவது வழக்கம். அப்படி சனிக்கிழமை மாலை பணிமுடிந்து சுமார் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வீடு திரும்பியிருக்கின்றனர்.

  • அந்த சமயத்தில், அதே வழியில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத [NSCN-K(YA)] இயக்கத்தைச் சேர்ந்தவர்களின் - வாகனமும் வருவதாக அசாம் ரைஃபிள்ஸ் படைப்பிரிவினருக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. அவர்களைப் பிடிக்கச் சென்ற ராணுவ வீரர்கள், தொழிலாளர்களின் வாகனத்தை பயங்கரவாதிகளுடையது எனக் கருதியிருக்கின்றனர். அதைத் தொடர்ந்து துப்பாக்கிச்சூடும் நடந்திருக்கிறது. இதில் 6 அப்பாவி தொழிலாளர்கள் பலியாகிவிட்டனர்.

  • இந்தத் தகவல் கிராமத்தில் பரவவும் கோபத்தில் ராணுவ வீரர்களைச் சுற்றிவளைத்த கிராம மக்கள், அவர்களின் வாகனங்களுக்கும் தீ வைத்திருக்கின்றனர். இதையடுத்து வீரர்களுக்கும், பொது மக்களுக்கும் ஏற்பட்ட மோதலின்போது, மீண்டும் ராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தவே அதில் மீண்டும் 8 அப்பாவிகள் பலியாகியிருக்கின்றனர். ஒரு ராணுவ வீரரும் உயிரிழந்திருக்கிறார்.

தவறு நடந்தது எங்கே?

உறுதியான புலனாய்வுத்தகவல் கிடைத்ததன் பேரிலேயே அங்கு வீரர்கள் தாக்குதலுக்காக சென்றதாகவும், பொது மக்களை அவர்கள் தவறாக அடையாளம் கண்டுகொண்டதுதான் இந்த துயரச்ச்சம்பவத்திற்கு காரணம் எனவும் விளக்கம் அளித்து வருத்தம் தெரிவித்திருக்கிறது அசாம் ரைஃபிள்ஸ். இந்த விவகாரம் குறித்து விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது.

  • நாகலாந்து முதலமைச்சர் தரப்பில் இருந்தும் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நாகலாந்தில் கள நிலவரம் என்ன?

  • சனிக்கிழமை நடந்த இந்த சம்பவம் நாகலாந்து முழுக்க சோகத்தை ஏற்படுத்தவே, அம்மாநிலத்தில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் புகழ்பெற்ற ஹார்ன்பில் திருவிழா நிறுத்தப்பட்டுள்ளது.

  • மோன் மாவட்டம் முழுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நேற்று பொது மக்களால் அசாம் ரைஃபிள்ஸ் படைப்பிரிவின் தளம் தாக்கப்பட்டுள்ளது.

  • ராணுவ தளத்தை சுற்றிவளைத்த கோபமுற்ற பொதுமக்கள், அங்கிருந்த முகாம்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். அதைத் தொடர்ந்து மீண்டும் ராணுவம் தரப்பில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட, அதிலும் ஒருவர் பலியாகியிருக்கிறார். மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

இதையடுத்து மாநில மற்றும் மத்திய அரசின் தரப்பிலிருந்து அவசர கூட்டம் நடத்தப்பட்டு, நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று திடீரென டெல்லிக்கு கிளம்பிச் சென்றார். நாகலாந்து பிரச்னை தொடர்பான கூட்டத்தில் கலந்துகொள்ளவே அவரும் சென்றுள்ளார் எனக் கூறப்படுகிறது.

இதுபோக, நாகலாந்தைச் சேர்ந்த போராளி குழுக்களிடமும் மாநிலத்தில் அமைதி நிலவ, மத்திய அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

Share


2️⃣எலான் மஸ்க்கிற்கு முட்டுக்கட்டை போடுகிறதா இந்தியா?

`சாட்டிலைட் இன்டர்நெட்’ சேவையை அடுத்த ஆண்டு முதல் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டிருந்த எலான் மஸ்க்கின் `ஸ்டார்லிங்க்’ நிறுவனத்தின் முயற்சிகளுக்கு தற்காலிகமாக முட்டுக்கட்டை போட்டிருக்கிறது ட்ராய்.

என்ன பிரச்னை?

அதைப் பற்றி பார்க்கும் முன்பு இந்த ஸ்டார் லிங்க் என்பது என்ன எனப் பார்த்துவிடுவோம்.

இன்றைக்கு நாம் பயன்படுத்திவரும் வழக்கமான இணைய சேவைகள் (3G, 4G), ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள், செல்லுலார் டவர்கள் போன்ற பெரியளவில் உள்கட்டமைப்பு வசதிகளைக் கோருபவை. நாட்டின் எந்த இடத்தில் இணைய வசதியை வழங்கவேண்டுமென்றாலும், இதுபோன்ற உள்கட்டமைப்பு வசதிகளின்றி, இணையம் சாத்தியமில்லை. இதற்கு மாற்றாக இருப்பவைதான் சாட்டிலைட் இன்டர்நெட் சேவைகள்.

  • இதில், வாடிக்கையாளர்களுக்குத் தேவைப்படுவது எல்லாம் ஒரு ரௌட்டர், ஒரு செயற்கைக்கோள் ஆன்டனா (டிவி டிஷ் போல) மட்டுமே. மீதியெல்லாம் சேவை வழங்கும் நிறுவனங்களின் செயற்கைக் கோள்கள் பார்த்துக்கொள்ளும். இதற்காக ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பிக்கொண்டிருக்கின்றன இந்நிறுவனங்கள். அந்த நிறுவனங்களில் ஒன்றுதான் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.

  • அமேசானின் `புராஜெக்ட் குபர்’, பிரிட்டிஷ் அரசு மற்றும் ஏர்டெல் உள்ளிட்ட பல தனியார் நிறுவனங்களின் கூட்டணியில் உருவாகிவரும் `ஒன்வெப்’ போன்றவை கோதாவில் இருக்கும் பிற போட்டியாளர்கள்.

ஏன் சாட்டிலைட் இன்டர்நெட் சேவைகள் தேவைப்படுகின்றன?

  • உண்மையில், இணைய வேகத்தில் தற்போது இருக்கும் 4G, அடுத்து வரவிருக்கும் 5G போன்ற சேவைகளே மக்களின் இணைய தேவையைப் பூர்த்தி செய்ய போதுமானது. ஆனால், சிக்கல் என்னவென்றால் இவற்றை உலகின் எல்லா மூலைகளுக்கும் உள்கட்டமைப்பு வசதிகளின்றி கொண்டு செல்லமுடியாது. இதனால்தான் இன்னும் உலகின் பல்வேறு பகுதிகள் இணைய வசதியின்றி தவிக்கின்றன. இந்தப் பகுதிகளுக்கும் இணையத்தைக் கொண்டு செல்வதுதான் சாட்டிலைட் இன்டர்நெட் சேவைகளின் இலக்கு.

அப்படியெனில் உலகம் முழுவதும் அதிவேக இணையம் கிடைத்துவிடுமா?

  • இல்லை. முதலில் ஸ்டார் லிங்க்கின் இலக்கு, நகரங்கள் இல்லை; இணைய வசதி இன்னும் கிடைக்கப்பெறாத கிராமங்கள் மட்டும்தான். ஸ்டார் லிங்க் சேவைகள் அதற்கேற்பத்தான் வடிவமைக்கப்பட்டுள்ளன. 10 - 40 Mbps வேகம்தான் இப்போதைக்கு இதன் சராசரி. மேலும், மிக அதிகமான மக்கள் குறைந்த இடத்தில் (நெரிசல் மிக்க நகரங்களைப் போல) பயன்படுத்தினால், இது சிறப்பாக இருக்காது.

  • மேலும், உலகில் இன்னும் இணையம் தொட்டுப்பார்க்காத 5% மக்களை சென்றடைவதுதான் ஸ்டார் லிங்க்கின் இலக்கு என எலான் மஸ்க்கே குறிப்பிட்டிருக்கிறார். அத்துடன் இதன் விலையும் சாதாரண இணைய வசதியோடு ஒப்பிட்டால் மிகவும் அதிகம். டெபாசிட் தொகை: சுமார் ₹37,000. மாதக் கட்டணம்: சுமார் ₹7,000. இவ்வளவு பணம் கொடுத்து கிராமப்புறங்களில் யார் இவற்றை வாங்குவார்கள்?

ஸ்டார் லிங்க்கின் கணக்கு

  • வாங்க மாட்டார்கள்தான். அதனால்தான் இந்த சாட்டிலைட் இன்டர்நெட் சேவை மட்டுமே கிராமப்புற மக்களின் இணைய தேவையைப் பூர்த்தி செய்துவிடாது என விமர்சனங்களும் எழுகின்றன.

  • அதனால்தான் ஸ்டார் லிங்க்கும், இணைய வசதி கிடைக்கப்பெறாத கிராமங்களில் உள்ள தொழில்நிறுவனங்கள், ராணுவம், அரசு அலுவலகங்கள் போன்ற அரசு துறைகள், நகரங்களுக்கு வெளியே வாழும் உயர்தர வர்க்க மக்கள் ஆகியவர்களையே முதலில் குறிவைக்கிறது.

இந்தியாவில் ஸ்டார்லிங்க் எப்போது?

2018 முதலே இந்த சாட்டிலைட் இன்டர்நெட் சேவைகளுக்கு தேவைப்படும் செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவத்தொடங்கிவிட்டார் எலான் மஸ்க். இதுவரைக்கும் 1,844 செயற்கைக்கோள்கள் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் சேவையை வழங்க 42,000 செயற்கைக் கோள்களாவது தேவை. எனவே படிப்படியாக அமெரிக்கா, கனடா என ஒவ்வொரு நாடாக சேவையை வழங்கத் தொடங்கியிருக்கிறது ஸ்டார்லிங்க். இப்படியாக உலகம் முழுவதும் 20 நாடுகளில் சுமார் 1.4 லட்சம் பேருக்கு ஸ்டார்லிங்க் இணைப்பு பரிசோதனைக்காக வழங்கப்பட்டுள்ளது.

  • இதேபோல இந்தியாவிலும் விரைவில் சோதனை ஓட்டத்தைத் தொடங்கத்தான், கடந்த மார்ச் மாதம் ப்ரீ புக்கிங்க்கைத் தொடங்கியிருந்தது ஸ்டார் லிங்க். புக்கிங்கும் நடந்திருந்தது.

  • இந்நிலையில் கடந்த நவம்பர் 26-ம் தேதி, இந்தியாவின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய், ``ஸ்டார்லிங்க் இந்தியாவில் இயங்குவதற்கு எந்த அனுமதியும் பெறவில்லை. எனவே வாடிக்கையாளர்கள் அவற்றை முன்பதிவு செய்யவேண்டாம். மேலும், ஸ்டார்லிங்க் நிறுவனம் சாட்டிலைட் இன்டர்நெட் சேவைக்காக லைசென்ஸ் கேட்டு விண்ணப்பிக்கவேண்டும்” எனத் தெரிவித்திருக்கிறது.

  • இதனால் அந்நிறுவனத்தின் திட்டங்களில் சுணக்கம் ஏற்பட்டிருக்கிறது.

என்ன செய்யப்போகிறது ஸ்டார்லிங்க்?

  • இந்நிலையில், வரும் ஜனவரி 31-ம் தேதிக்குள் ட்ராயிடம் லைசென்ஸ் கேட்டு விண்ணப்பிக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறார் ஸ்டார் லிங்க்கின் இந்திய இயக்குநர் சஞ்சய் பார்கவா.

  • டிசம்பர், 2022-க்குள் இந்தியாவில் சுமார் 2,00,000 இணைப்புகளை வழங்கவும், அதில் 80% இணைப்புகளை கிராமப்புறங்களில் மட்டுமே வழங்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Share The Subject Line


  1. உயரும் ஓமிக்ரான் பாதிப்பு:

    மகாராஷ்டிராவில் 7 பேர், ராஜஸ்தானில் 9 பேர் மற்றும் டெல்லியில் ஒருவருக்கு நேற்று கொரோனாவின் ஓமிக்ரான் வேரியன்ட் தொற்று உறுதியானதைத் தொடர்ந்து இந்தியாவில் ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

  2. பேச்சுவார்த்தைக்கு தயாரான விவசாயிகள்:

    குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட 6 கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லியில் போராட்டத்தைத் தொடர்ந்துவரும் விவசாய சங்கங்களிடம், அவர்கள் சார்பிலிருந்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த 5 நபர்களைக் கேட்டிருந்தது மத்திய அரசு. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை டெல்லி எல்லை சிங்குவில் நடந்த கூட்டத்திற்குப் பிறகு 5 பேர் கொண்ட குழுவை அறிவித்து பேச்சுவார்த்தைக்குத் தயார் என அறிவித்திருக்கின்றனர் விவசாயிகள்.

  3. பொலிவிழக்கும் தாஜ் மஹால்; காரணம் இதுதானாம்!

    மாசுபாடுகள் காரணமாக தாஜ் மஹால் பல ஆண்டுகளாக பொலிவிழந்து வருவது பலருக்கும் தெரிந்த விஷயமே. அதற்கு காரணமாக பல நிபுணர்களும் சொல்லிவந்தது, டெல்லி தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகும் சல்ஃபர் டை ஆக்ஸைடையே. ஆனால், அண்மையில் நடந்த ஆய்வின் முடிவில், அந்த சல்ஃபர் டை ஆக்ஸைடை விடவும், மாசடைந்த யமுனை ஆற்றிலிருந்து வெளியேறும் ஹைட்ரஜன் சல்ஃபைடு வாயுதான் தாஜ் மஹாலின் பாதிப்புக்கு அதிக காரணம் எனத் தெரியவந்திருக்கிறது. மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் அதிகாரி ஒருவர் நடத்திய ஆய்வில்தான் இந்த விஷயம் தெரியவந்துள்ளது.

  4. தேங்காய் - 1, சாலை - 0

    உத்தரப்பிரதேச மாநிலத்தின் பிஜ்னோர் தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருப்பவர் சுச்சி சௌதாரி. பா.ஜ.க-வைச் சேர்ந்தவர். அண்மையில், தன் தொகுதியில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள சாலையைத் திறந்துவைப்பதற்காக, அதில் தேங்காய் உடைத்திருக்கிறார்; ஆனால், தேங்காய் உடையவில்லை; மாறாக, அந்த சாலைதான் உடைந்திருக்கிறது. 🙊 உடனே உஷாரானவர், மோசமான கட்டுமானப் பணியால்தான் இப்படி நடந்திருக்கிறது எனச்சொல்லிவிட்டு, உடைந்த சாலையின் மாதிரிகளையும் ஆய்வுக்காக அனுப்பியிருக்கிறார்.

  5. இன்று இந்தியா வரும் புடின்

    21-வது இந்திய - ரஷ்ய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ரஷ்ய அதிபர் புடின் இன்று இந்தியா வருகிறார். பிரதமர் மோடியை அவர் டெல்லியில் சந்திக்கிறார். இதேபோல இந்திய பாதுகாப்புத்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்களும், ரஷ்ய பாதுகாப்புத்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்களை சந்தித்து, இருநாட்டுக்கும் பொதுவான பிரச்னைகள், இருநாட்டு ஒப்பந்தங்கள் குறித்துப் பேசவிருக்கின்றனர்.


  • தமிழகத்தில் நேற்று பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை: 724

    உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை: 10

  • இன்றைய வானிலை முன்னறிவிப்பு 👇

    Source: IMD Chennai
  • தகுதியுள்ள அனைவருக்கும் இரண்டு டோஸ் கோவிட் தடுப்பூசிகளையும் செலுத்தி, இந்தியாவின் முதல் மாநிலமாக 100% தடுப்பூசி இலக்கை எட்டியிருக்கிறது இமாசலப்பிரதேசம்.

  • இதேபோல இந்திய அளவிலும் நேற்று ஒரு மைல்கல்லை தொட்டிருக்கிறோம். நேற்றுடன் 18 வயதுக்கு மேற்பட்டோரில் 50% பேருக்கு மேல் முழுமையாக இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன.

  • BWF பேட்மின்டன் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெள்ளி வென்றுள்ளார். நேற்று நடந்த இறுதிப்போட்டியில் தென்கொரிய வீராங்கனை ஆன் சீயங்கிடம் 16-21, 12-21 என்ற செட்களில் தோல்வியடைந்தார். 2018-ன் BWF தொடரில் தங்கம் வென்று, முதல் இந்தியராக அந்தச் சாதனையை சிந்து படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


On This Day - December 6

- இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய, பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவுதினம் இன்று, 1956

- அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம், 1992

- இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா பிறந்தநாள், 1988


📣 Note: The Subject Line (TSL) நியூஸ்லெட்டரின் இந்த மெயில் உங்களின் Promotions Tab-ல வந்திருந்தா, அதை அப்படியே Move பண்ணி, Primary Tab-க்கு மாத்திடுங்க. இதன்மூலம் தினமும் TSL-ஐ நீங்க மிஸ் பண்ணாம படிக்கமுடியும். ஒருவேளை இந்த மெயில் உங்க நண்பர்கள் மூலம் வந்திருந்தா, தினமும் உங்க இன்பாக்ஸிற்கு நேரடியாக வர, சப்ஸ்கிரைப் பண்ணிடுங்க. ✅


அவ்வளவுதான்!

The Subject Line-னோட இன்னைக்கு அப்டேட்ஸ் உங்களுக்குப் பிடிச்சிருக்கும்னு நம்புறேன். பிடிச்சிருந்தா கீழ இருக்க பட்டன் மூலமா உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க… இன்னும் ஏதாச்சும் இந்த TSL-ல் மாத்தணும்னா எனக்கு மெசேஜ் பண்ணுங்க! உங்க கருத்துகள் எங்களுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். 🤞

திரும்ப நாளைக்கு காலைல 7 மணிக்கு சந்திப்போம்!

Have a Nice day! ☕️

The Subject Line-ஐ சமூக வலைதளங்களில் பின்தொடர:

Telegram | Twitter | Facebook | Insta

Share this post
🛰 எலான் மஸ்க்கிற்கு முட்டுக்கட்டை போடுகிறதா இந்தியா?
www.thesubjectline.in
Comments
TopNewCommunity

No posts

Ready for more?

© 2023 The Subject Line
Privacy ∙ Terms ∙ Collection notice
Start WritingGet the app
Substack is the home for great writing