📚 நீட் மசோதா: சட்டவிதிகளை மீறினாரா ஆளுநர்?
Today Article Highlights: முதல்முறையாக சரிந்த ஃபேஸ்புக் பயனாளர்கள் | ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் முக்கிய தலைவரை வீழ்த்திய அமெரிக்கா | சீனாவுக்கு இந்தியாவின் பதில் Reading Time: ⏱ 5 Mins
ஹாய், ஹலோ… வணக்கம் 👋
இன்றைய தினத்தின் டாப் அப்டேட்ஸ் இதோ…
நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிப்பதற்காக, கடந்த செப்டம்பர் 13-ம் தேதி தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாவை (Undergraduate Medical Degree Courses Bill, 2021) திருப்பி அனுப்பியிருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
இனி இந்த மசோதா என்னாகும், தமிழக அரசின் சட்டப்போராட்டத்தின் அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் என்பதை இன்றைய TSL-ல் பார்ப்போம்.
முதலில் ஆளுநர் ஏன் மசோதாவை திருப்பிய அனுப்பினார் என்பதைப் பார்த்துவிடுவோம்.
ஆளுநர் சொன்னது என்ன?
தமிழக அரசின் மசோதா, கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு எதிராக உள்ளதாக கருதுவதால் ஆளுநர் இந்த மசோதாவை சபாநாயகருக்கே திருப்பியனுப்புவதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.


மேலும், சி.எம்.சி கல்லூரி தொடர்ந்த ஒரு வழக்கில், நீட் தேர்வை சமூகநீதி பார்வையில் அணுகி, பொருளாதார சுரண்டலிலிருந்து தப்பிக்க நீட் தேர்வு தேவை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆளுநரின் அதிகாரங்கள் என்னென்ன?
இந்த நாட்டில் சட்டங்கள் இயற்றுவதில் உச்சபட்ச அதிகாரம் பெற்ற அமைப்பு நாடாளுமன்றம் மட்டுமே. அவற்றிற்கு ஒப்புதல் அளிப்பது மட்டுமே குடியரசுத்தலைவரின் வேலை. ஒருவேளை மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் குடியரசுத்தலைவர் திருப்பி அனுப்பினால், மத்திய அரசு அந்த மசோதாவில் திருத்தம் செய்தோ அல்லது அப்படியேவோ மீண்டும் அவர் ஒப்புதலுக்கு அனுப்பலாம். அப்படி இரண்டாவது முறை வரும் மசோதாவுக்கு, அவர் ஒப்புதல் அளித்துதான் ஆகவேண்டும். நாடு தழுவிய மத்திய அரசின் சட்டங்களுக்கு இதுதான் நடைமுறை.
இதேபோல மாநில அரசாங்கங்களும் மாநில பட்டியலில் உள்ள விவகாரங்கள் மற்றும் பொதுப்பட்டியலில் உள்ள விவகாரங்களில் சட்டங்கள் இயற்றலாம். ஆனால், இந்த சட்டங்கள் மத்திய அரசின் சட்டங்களை மீறுவதாக இருக்கக்கூடாது. அப்படி மத்திய அரசின் சட்டத்திற்குட்பட்டு இருக்கும்பட்சத்தில், ஆளுநரேகூட ஒப்புதல் அளித்துவிடலாம். 💡 உதாரணம்: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நீட் கலந்தாய்வில் 7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா.
இல்லையெனில் அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 254(2)-ன் படி குடியரசுத்தலைவருக்கு அனுப்பி குடியரசுத்தலைவர் ஒப்புதல் பெறவேண்டும்.
அவர் மாநில அரசின் மசோதாவை பரிசீலினை செய்துவிட்டு, ஒப்புதலும் அளிக்கலாம். நிராகரிக்கவும் செய்யலாம்.
💡 உதாரணம்: 2017-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழக அரசின் மசோதா. இது தமிழக ஆளுநரால், குடியரசுத்தலைவருக்கு அனுப்பப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. அந்த மசோதா மிருகவதை தடுப்புச்சட்டம் 1960-க்கு எதிராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
சரி, இப்போது ஆளுநரின் பங்கு என்ன?
இந்த விஷயத்தில் ஆளுநரின் வேலை என்பது குடியரசுத் தலைவருக்கும் மாநில அரசுக்கும் இடையே பாலமாக செயல்படுவதுதான். முதலில் மாநில அரசு மசோதாவை அனுப்பியதும் அவற்றைப் பரிசீலித்து, அந்த மசோதா மத்திய அரசின் சட்டங்களை மீறுவதாக இருந்தால், அதை குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்புவதுதான் ஆளுநரின் பணி.
மத்திய அரசின் சட்டங்களுக்கு உட்பட்ட மசோதா என்றால், ஒப்புதல் அளிப்பதில் ஆளுநருக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கிறது எனில் அவற்றைக் குறிப்பிட்டு, மசோதாவில் திருத்தங்கள் மேற்கொள்ளச் சொல்லி மாநில அரசுக்கே மசோதாவை திருப்பி அனுப்பலாம் (அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 200-ன் படி). பின்னர் மீண்டும் மசோதா அனுப்பப்பட்டால் அதற்கு ஒப்புதல் வழங்கலாம். ஆனால், தமிழக அரசின் நீட் மசோதாவிற்கு அப்படிச் செய்யமுடியாது.
அதனால்தான் தமிழக அரசும் குடியரசுத்தலைவருக்கு அனுப்பச் சொல்லி கேட்டே மசோதாவை அனுப்பி வைத்திருந்தது. ஆனாலும், ஆளுநர் தற்போது திருப்பி அனுப்பியிருக்கிறார். இது சட்டவிதிமுறைகளுக்கே எதிரானது என தி.மு.க எம்.பியும் மூத்த வழக்கறிஞருமான வில்சன் சுட்டிக்காட்டியிருக்கிறார். மேலும் ஆளுநர் மாளிகை அறிக்கையில் குறிப்பிட்ட சி.எம்.சி மருத்துவமனை வழக்கும், ``சிறுபான்மையினர் மருத்துவக் கல்லூரிகளில் அனுமதிக்கப்படுவதுதானே தவிர, இந்த மசோதாவுக்கும் அதற்கும் தொடர்பில்லை” எனச் சொல்லியிருக்கிறார்.
அடுத்து?
மீண்டும் இந்த மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றி, இன்னொருமுறை ஆளுநருக்கு அனுப்பிவைக்க திட்டமிட்டுள்ளது தமிழக அரசு. அப்போது ஆளுநர் மீண்டும் திருப்பி அனுப்ப முடியாது. குடியரசுத் தலைவருக்கு மட்டுமே அனுப்பிவைக்க முடியும். குடியரசுத்தலைவரும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் அது சட்டமாகும். இல்லையெனில், இந்த மசோதாவின் பயணம் மீண்டும் அதோடு முடிந்துவிடும்.
2017-ல் நிராகரிக்கப்பட்ட மசோதா இந்தமுறை மட்டும் சட்டமாகும்?
அ.தி.மு.க அனுப்பிய மசோதாவுக்கும், தி.மு.க அரசு மசோதாவுக்கும் இடையே இருக்கும் முக்கியமான வித்தியாசம் முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் கமிட்டியின் அறிக்கை.
நீட் தேர்வினால் மருத்துவப்படிப்பு மாணவர் சேர்க்கைகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள், அதனால் தமிழக பொது சுகாதாரத்துறையில் ஏற்பட சாத்தியமுள்ள பாதிப்புகள், சமூகத்தில் பின்தங்கிய மாணவர்கள் சந்திக்கும் சவால்கள் எனப் பல்வேறு தரவுகளைத் தொகுத்திருந்த அந்த அறிக்கையும் சேர்த்துதான் ஆளுநருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
இன்னொன்று, மசோதாவில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள். இதற்கு முன் அனுப்பப்பட்ட மசோதா மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வால் ஏற்பட சாத்தியமுள்ள பாதிப்புகளை மட்டுமே பேசியது. ஆனால், இந்த இரண்டாவது மசோதா, நீட்டிலிருந்து விதிவிலக்கு பெறுவது மாநிலத்தின் பொது சுகாதாரக்கட்டமைப்புக்கு எவ்வளவு முக்கியம் என்பதையும் சேர்த்து பேசுகிறது.
``இந்த இரண்டு விஷயங்களும், தமிழக அரசின் கோரிக்கைக்கு நியாயம் சேர்க்கின்றன” என குடியரசுத்தலைவர் நினைத்தால், மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்கும். இல்லையெனில், தமிழக அரசின் இந்த முயற்சி முடிவுக்கு வந்துவிடும். பின்னர் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் நீட் தேர்வை எதிர்த்து வழக்கு தொடுப்பதுதான் ஒரே வழி.
தமிழக அரசு என்ன செய்யவிருக்கிறது?
நீட் விவகாரத்தில் அடுத்தகட்ட முடிவுகள் எடுப்பது குறித்து விவாதிக்க நாளை அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்டவிருக்கிறது. அதன்பின்பு சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தொடர் கூட்டப்படும் எனத் தெரிகிறது.
ஆளுநரின் நடவடிக்கை குறித்த முதல்வர் ஸ்டாலினின் அறிக்கை 👇




ஒருவேளை தமிழக அரசு சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரைக் கூட்டி, மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி, அவர் குடியரசுத்தலைவருக்கு விரைவில் மசோதாவை அனுப்பிவைத்தாலும்கூட, அவர் விரைவாக முடிவைச் சொல்ல வாய்ப்பு குறைவுதான்.
காரணம், ஆளுநர், குடியரசுத் தலைவர் ஆகிய இருவருக்கும் இதுபோன்ற விவகாரங்களில் முடிவெடுக்க எந்தவொரு காலக்கெடுவும் இல்லை என்பதால், இப்படி அனுப்பப்படும் மசோதாக்கள் பல மாதங்கள் தேங்குவது வழக்கமாகிவிட்டது. தமிழக ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கே 141 நாள்கள் ஆகியிருக்கிறது!
1. முதல்முறையாக சரிந்த ஃபேஸ்புக் பயனாளர்கள்
18 ஆண்டுகால வரலாற்றில் இல்லாதபடியாக முதல்முறையாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் (தற்போது மெட்டா) தினசரி பயனாளர்கள் (Daily Active Users) எண்ணிக்கை குறைந்திருக்கிறது.
கடந்தாண்டு மூன்றாம் காலாண்டில் 193 கோடியாக இருந்த தினசரி பயனாளர்கள் எண்ணிக்கை, நான்காம் காலாண்டில் 192.9 கோடியாக சரிந்திருக்கிறது. மிகவும் குறைந்த வித்தியாசம்தானே என்கிறீர்களா? இதுவரைக்கும் ஃபேஸ்புக் வரலாற்றில் இப்படி நடந்ததே இல்லை.
சரி, ஏன் இந்த திடீர் சரிவு? டிக்டாக் உள்ளிட்ட போட்டி நிறுவனங்களுக்கு இளம் பயனாளர்கள் வேகமாகத் தாவுவதுதான் முக்கிய காரணம். மேலும், புதிய பயனாளர்களும் ஃபேஸ்புக் பக்கம் வருவது வெகுவாகக் குறைந்திருக்கிறது. இந்த தகவலால் நேற்றைய பங்குச்சந்தையில் மெட்டாவின் பங்குகள் 26% வீழ்ச்சியடைந்திருக்கின்றன.
என்ன செய்யப்போகிறார் மார்க்? ஒருபுறம் டிக்டாக், யூடியூப் ஆகிய இரண்டுடனும் போட்டிபோடும் வகையில் வீடியோக்களிலும், வீடியோ விளம்பர வருவாயிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார் மார்க். மற்றொருபுறம் அவர் பெரிதாக நம்பிக்கொண்டிருப்பது, எதிர்கால திட்டமான மெட்டாவெர்ஸ்! அதில் முதல் நிறுவனமாக காலடி எடுத்துவைப்பதன் மூலம் மீண்டும் டெக் உலகில் ஆதிக்கத்தை வலுப்படுத்த முடியும் என நம்புகிறார்.
2. கர்நாடகா ஹிஜாப் சர்ச்சை
சமூக வலைதளங்களில் நேற்று இந்த வீடியோவைப் பார்த்திருப்பீர்கள். 👇

கர்நாடக மாநிலத்தில் உள்ள 4-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிகளுக்கு வருவதும், அதைத் தொடர்ந்து அவர்கள் வகுப்புக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படுவதுமான சம்பவங்கள் அண்மையில் அதிகம் நடந்துவருகின்றன.
அதில் ஒரு கல்லூரியான குந்தப்பூர் அரசு கல்லூரி மாணவிகளின் வீடியோதான் மேலே பார்த்தது. ஏற்கெனவே பல நாள்களாக அந்தக் கல்லூரியில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்திருந்தாலும், நேற்று திடீரென பள்ளிக்குள் அனுமதிக்கப்படாமல் வெளியே நிற்கவைக்கப்பட்டிருக்கின்றனர். இதையடுத்து மாணவிகள் பள்ளி ஆசிரியர்களிடம், இன்னும் 2 மாதத்தில் பரீட்சை உள்ளதால், உள்ளே விடுமாறு கோரிக்கை விடுக்கின்றனர். ஆனாலும் அனுமதி கிடைக்கவில்லை.
முதலில் கர்நாடகாவின் பி.யூ தனியார் கல்லூரியில் தொடங்கிய இந்தப் பிரச்னை மெதுவாக மற்ற கல்லூரிகளிலும் பரவி வருகிறது. குறிப்பாக இந்துத்துவ இயக்கத்தைச் சார்ந்த மாணவர்கள், காவி துண்டு அணிந்துகொண்டு பள்ளிகளுக்கு வந்தது சர்ச்சையானது.
இன்னொருபுறம் அரசும் இது மாணவிகள் தனிப்பட்ட உரிமை / மதச்சுதந்திரம் என அனுமதிப்பதா, இல்லை பள்ளிகளில் விதிமுறைகளைக் கொண்டுவந்து ஹிஜாப்பை தடைசெய்வதா என முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.
இதுகுறித்து முடிவெடுக்க ஒரு நிபுணர் குழு மட்டும் அமைத்துள்ளது. அந்தக் குழுவின் முடிவுகள் வரும்வரை, அனைவரும் சீருடைகளைத் தவிர வேறு எதுவும் அணியக்கூடாது என உத்தரவிட்டுள்ளது கல்வித்துறை.
3. சீனாவிற்கு இந்தியாவின் பதில்
குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் தீபம் ஏந்தும் நிகழ்வில், கால்வன் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்களுடன் மோதிய சீன ராணுவ வீரரைப் பயன்படுத்தியிருந்தது அந்நாடு. இதற்கு நேற்று தன் எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறது இந்தியா.
ஒலிம்பிக் போன்ற ஒரு நிகழ்வில் சீனா அரசியல் செய்வது வருந்தத்தக்கது என இந்த சம்பவத்தை விமர்சித்துள்ளார் இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர். இதையடுத்து குளிர்கால ஒலிம்பிக்கின் தொடக்க மற்றும் இறுதிநாள் நிகழ்வில் இந்திய அதிகாரிகள் கலந்துகொள்ள மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு கால்வன் பள்ளத்தாக்கில் நடைபெற்ற இந்திய - சீன வீரர்கள் மோதல் குறித்து நேற்று புதிய தகவல்கள் சில வெளிவந்துள்ளன.
ஆஸ்திரேலிய செய்தித்தாளான `The Klaxon’ வெளியிட்டுள்ள செய்தியில், சீன ராணுவம் சார்பில் மொத்தம் 38 பேர், இந்திய வீரர்களுடனான மோதலின்போது ஏரியில் மூழ்கி உயிரிழந்ததாகவும், 4 பேர் தாக்குதலில் உயிரிழந்தனர் எனவும் தெரிவித்துள்ளது. அதாவது, மொத்தம் 42 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் சீனா, 4 பேர் மட்டுமே உயிரிழந்ததாக இதுவரை சொல்லி வருகிறது.
தமிழகத்தில் நேற்று பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை: 11,993 (நேற்று முன்தினம்: 14,013) 🔻
- அதிகபட்சமாக, சென்னையில்: 1,751 (2,054) 🔻
- தமிழகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை: 30 (37) 🔻
இந்தியாவில் நேற்று பதிவான கொரோனா பாதிப்பு: 1,72,433 (1,61,386) 🔺
தஞ்சை மாணவி தற்கொலை வழக்கில் சி.பி.ஐ விசாரணை தேவை என, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அண்மையில் உத்தரவிட்டிருந்தது. இதற்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
AIMIM கட்சித்தலைவர் அசாதுதீன் ஓவைசி நேற்று உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் பணிகளுக்காக சென்றுவிட்டு திரும்பியபோது 4 பேர் அவர் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கின்றனர். காயமின்றி தப்பிய அவர், உடனே வேறு காரில் ஏறி அங்கிருந்து சென்றிருக்கிறார். இதுதொடர்பாக உ.பி போலீசார் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
2019-ம் ஆண்டு அனுப்பப்பட்ட சந்திரயான் 2 செயற்கைக்கோளின் ரோவரானது, கடைசி நிமிடங்களில், நிலவில் இறங்கும்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளால் தோல்வியடைந்தது. இந்நிலையில், இந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் ரோவருடன் கூடிய சந்திரயான் 3 செயற்கைக்கோளை நிலவுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது இஸ்ரோ.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவரான அபு இப்ராஹின் அல்-ஹாஷிமி அல்-குரேஷியை சிரியாவில் வைத்து தீர்த்துக்கட்டியிருக்கிறது அமெரிக்க ராணுவம். இந்த செய்தியை நேற்று உலகிற்கு அறிவித்திருக்கிறார் ஜோ பைடன். ஏற்கெனவே அந்த அமைப்பின் முன்னாள் தலைவரான அபு பக்கிர் அல் பாக்தாதியும் 2019-ம் ஆண்டு இதேபோல் கொல்லப்பட்ட நிலையில், அடுத்த தலைவரும் தற்போது உயிரிழந்திருக்கிறார்.
- ஆண்டுதோறும் நடைபெறும் சென்னை புத்தகக் காட்சி இந்தாண்டு ஜனவரி 6-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா காரணமாக பின்னர் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், பிப்ரவரி 16-ம் தேதி முதல் மார்ச் 6-ம் தேதி வரை, சென்னை ஒய்.எம்.சி.ஏ நந்தனம் மைதானத்தில் புத்தக்காட்சியை நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
On This Day - Feb 04
- உலக புற்றுநோய் தினம்
- நிறவெறிக்கு எதிராகவும், மக்களின் குடியுரிமைகளுக்காகவும் போராடிய செயற்பாட்டாளர் ரோசா பார்க்ஸ் பிறந்த தினம், 1913
அவ்வளவுதான்!
The Subject Line-னோட இன்னைக்கு அப்டேட்ஸ் உங்களுக்குப் பிடிச்சிருக்கும்னு நம்புறேன். பிடிச்சிருந்தா கீழ இருக்க பட்டன் மூலமா உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க… இன்னும் ஏதாச்சும் இந்த TSL-ல் மாத்தணும்னா எனக்கு மெசேஜ் பண்ணுங்க! உங்க கருத்துகள் எங்களுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். 🤞
திரும்ப நாளைக்கு காலைல 7 மணிக்கு சந்திப்போம்!
Have a Nice day ☕️
The Subject Line-ஐ சமூக வலைதளங்களில் பின்தொடர:
Telegram | Twitter | Facebook | Insta
Today Edition பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க! ❤️