ஏன் நிராகரிக்கப்படுகின்றன மாநிலங்களின் அலங்கார ஊர்திகள்?
Today Edition Highlights: தேதி மாற்றப்பட்ட பஞ்சாப் தேர்தல் | பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட 11 மேயர் தொகுதிகள் | ஜோகோவிச்சிற்கு அடுத்த சிக்கல் | சர்ச்சையான Zee தமிழ் நிகழ்ச்சி | Reading Time: ⏱ 6 Mins
ஹாய், ஹலோ… வணக்கம் 👋
இன்றைய தினத்தின் டாப் அப்டேட்ஸ் இதோ…
டெல்லியில் நடைபெறவிருக்கும் குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்குபெற, தமிழகம் சார்பில் பரிந்துரைக்கப்பட்ட, அலங்கார ஊர்திக்கு (Tableau) மத்திய அரசு அனுமதி மறுத்திருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும், இப்படி சில மாநிலங்களின் அலங்கார ஊர்திகளை மத்திய அரசு புறக்கணிப்பதும், அதைத்தொடர்ந்து எதிர்ப்புகள் எழுதுவதும் வாடிக்கையாக இருக்கிறது. ஏன் இந்தக் குழப்பங்கள்?
எப்படி தேர்வு செய்யப்படுகின்றன அலங்கார ஊர்திகள்?
குடியரசு தின அணிவகுப்புகள், அதற்கான ஏற்பாடுகள் அனைத்துமே மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் பொறுப்புதான்.
ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதம் வந்தவுடன், அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள், மத்திய அரசின் அமைச்சகங்கள், தேர்தல் ஆணையம் / நிதி ஆயோக் போன்ற பிற அமைப்புகள் என அனைவருக்கும், குடியரசு தின விழா அலங்கார ஊர்திகளுக்கான பரிந்துரைகளைக் கேட்டு பாதுகாப்புத்துறை அமைச்சகத்திலிருந்து கடிதம் போய்விடும்; பின்னர் அக்டோபர் மாதம் முதல் அவற்றைத் தேர்வு செய்யும் பணிகள் தொடங்கும்.
இதற்கடுத்து, இவற்றைத் தேர்வு செய்ய மத்திய அரசின் சார்பில் ஓவியம், இசை, பண்பாடு, சிற்பம், கட்டடக்கலை எனப் பல்வேறு நிபுணர்களைக் கொண்ட குழு அமைக்கப்படும்.
முதலில் இந்தக் குழுவிடம், அலங்கார ஊர்திகளுக்கான ஓவியங்களைக் காட்டி, ஒப்புதல் வாங்கவேண்டும். இவர்கள் ஓகே சொன்னால், அடுத்து 3D மாடல். அதுவும் ஓகே ஆனால், அடுத்து அலங்கார ஊர்திகள் இறுதிப்பட்டியலில் இடம்பெறும்.
ஒவ்வொரு அலங்கார ஊர்தியும் அந்த மாநிலத்தின் பண்பாட்டை பிரதிபலிக்கிறதா, போதுமான கலைநயத்துடன் இருக்கிறதா, பிற ஊர்திகளுடன் ஒப்பிடும்போது தனித்து தெரிகிறதா எனப் பல்வேறு விஷயங்களை மனதில் வைத்தே இவற்றை நிபுணர்கள் தேர்வு செய்வார்கள். ஒவ்வொரு கட்டத்திலும் மெருகேற்றுவதற்கு பரிந்துரைகளையும் வழங்குவார்கள். எந்தக் கட்டத்தில் வேண்டுமானாலும், மாநிலங்களின் மாதிரிகள் நிராகரிக்கப்படலாம்.
ஒருவேளை, இறுதிப்பட்டியலில் இடம்பெற்றிருந்தாலுமேகூட, நிபுணர்கள் குழுவுக்கு திருப்தி இல்லை எனில், அந்த ஊர்திகள் ஊர்வலத்தில் இடம்பெறாமலும் போகலாம்.
ஏன் தமிழக அரசின் ஊர்தி நிராகரிக்கப்பட்டிருக்கிறது?
இந்த ஆண்டு குடியரசு தின விழாவுக்கான Theme-மாக கொடுக்கப்பட்டது, இந்தியாவின் 75 ஆண்டுகால சுதந்திர வரலாறு. எனவே, ஒவ்வொரு மாநிலங்களும் இந்தியாவின் 75 ஆண்டுகால சுதந்திரத்தைப் போற்றும் வகையில், சுதந்திர இந்தியாவின் வரலாற்றைப் பிரதிபலிக்கும் வகையில் அலங்கார ஊர்திகளைத் தயார் செய்யவேண்டும்.
அதன்படி தமிழ்நாடு அரசு, `சுதந்திரப் போராட்டத்தில் தமிழகம்” என்ற தலைப்பில், வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், பாரதியார், வ.உ.சிதம்பரனார் உள்ளிட்ட தலைவர்களின் உருவங்களுடன் கூடிய அலங்கார ஊர்தியைப் பரிந்துரைத்துள்ளது.



மூன்று முறை தமிழக அதிகாரிகள், மத்திய அரசின் நிபுணர் குழு முன்பு இந்த ஊர்தி குறித்து விளக்கம் அளித்துள்ளனர். மொத்தம் 7 மாதிரிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இருந்தும், தமிழக அரசின் ஊர்திக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதை மறுபரிசீலனை செய்யக்கோரி, நேற்று தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
ஏன் தமிழக அரசின் மாதிரிகளை நிராகரித்தனர் என்பதற்கான காரணங்களை மத்திய அரசு இதுவரை வெளிப்படையாக சொல்லவில்லை. ஆனால், மிகவும் பிரபலமான சுதந்திரப்போராட்ட வீரர்களை மத்திய அரசு அதிகாரிகள் எதிர்பார்ப்பதாகவும், வ.உ.சி, வேலுநாச்சியார் போன்றவர்களை வெளிநாட்டினருக்கு தெரியாது என அதிகாரிகள் சொன்னதாகவும் `புதிய தலைமுறை’ செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழகத்தின் வாகனம் மட்டும்தான் நிராகரிப்பட்டுள்ளதா?
இல்லை. ஶ்ரீ நாராயணகுருவின் படம் இடம்பெற்றிருந்த கேரளாவின் ஊர்தி, சுபாஷ் சந்திரபோஸ் படம் இடம்பெற்றிருந்த மேற்கு வங்கத்தின் ஊர்தி ஆகியவையும் நிராகரிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் சார்பிலிருந்து 12 ஊர்திகளும், மத்திய அமைச்சகங்களிலிருந்து 9 ஊர்திகளுமாக, மொத்தம் 21 ஊர்திகள் மட்டுமே பங்கேற்கும் எனத் தெரிகிறது. (பரிந்துரைக்கு சென்றவை 56)
தமிழகம், போலவே கேரளா மற்றும் மேற்கு வங்கத்திலும், அந்தந்த மாநில வரலாற்றுத் தலைவர்களை மத்திய அரசு அவமதிப்பதாக எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
இந்நிலையில், நேற்று இரவு மத்திய அரசின் சார்பிலிருந்து, அதிகாரபூர்வமாக இல்லாமல் எந்தவித அதிகாரிகளின் பெயர்களும் இல்லாமல், செய்தியாளர்களுக்கு ஒரு விளக்கம் அனுப்பப்பட்டுள்ளது.


அதில், மாநிலங்களின் ஊர்திகள் நிராகரிக்கப்படுவதற்கும், அந்தந்த மாநில சுதந்திரப் போராட்ட வீரர்களை அவமதிப்பதற்கும் எவ்வித தொடர்பும் இல்லையெனவும், முறையான பரிசீலனைக்குப் பிறகே இவை நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கு முந்தைய ஆண்டுகளில் கேரளா, தமிழகம், மேற்கு வங்கத்தின் மாதிரிகள் அனுமதிக்கப்பட்டுள்ளதையும் குறிப்பிட்டு இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ள மாநில முதல்வர்களையும் விமர்சித்திருக்கிறது அந்தப் பெயரில்லா அறிக்கை!
1. தொடரும் காவல் துறை விசாரணை:
கடந்த டிசம்பர் மாதம் குன்னூரில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்து குறித்து, முப்படைகள் சார்பில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு தன் அறிக்கையை தாக்கல் செய்துவிட்டது; மோசமான வானிலைதான் விபத்திற்கான காரணம் எனச் சொல்லிவிட்டது அந்த அறிக்கை.
ஆனால், இந்த விபத்து குறித்த தமிழக காவல்துறை விசாரணை இன்னும் முடியவில்லை. இந்நிலையில், விபத்து நடந்த நாளன்று, ஹெலிகாப்டர் பைலட்டுக்கு கொடுக்கப்பட்ட வானிலை அறிக்கை விவரங்களைக் கேட்டு சூலூர் விமானப்படை தளத்திற்கு கடிதம் எழுதியுள்ளது காவல் துறை.
மேலும், வானிலை ஆய்வு மையத்திடம் அன்றைய தினத்தின் வானிலை அறிக்கைகளையும் கேட்டிருக்கிறது. மோசமான வானிலை எனத் தெரிந்தும் ஹெலிகாப்டர் பயணம் தொடர்ந்ததா, அந்த முடிவை எடுத்தது யார் உள்ளிட்ட விவரங்களைத் தெரிந்துகொள்ள கறுப்பு பெட்டியின் தகவல்களையும் ஆய்வுசெய்ய முயற்சி செய்துவருகிறது காவல்துறை. இதன்பின்பு, காவல் துறையும் நீதிமன்றத்தில் ஓர் அறிக்கை தாக்கல் செய்யும்.
2. Zee தமிழ் நிகழ்ச்சி; பா.ஜ.க செயலால் சர்ச்சை
Zee தமிழ் தொலைக்காட்சியில் அண்மையில் ஒளிபரப்பான Junior super stars நிகழ்ச்சியில், இடம்பெற்ற இரு சிறுவர்களின் காமெடி நிகழ்ச்சி, அண்மையில் சமூக வலைதளத்திலும் வைரலானது.
மத்திய அரசின் பணமதிப்பிழப்பு, பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம், மோடியின் ஆடம்பரம் எனப் பல விஷயங்களை விமர்சிக்கும் வகையில் இருந்த அந்த நிகழ்ச்சி, நேரடியாக பா.ஜ.க-வையோ, பிரதமர் மோடியையோ குறிப்பிடாமல், ஒரு மன்னரை வைத்து கிண்டல் செய்யும் வகையில் இருந்தது.
இந்நிலையில், அந்த நிகழ்ச்சி பிரதமர் மோடியின் மாண்பை குலைக்கும் வகையில் இருந்ததாகவும், அதுபற்றி மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் முருகன் தன்னிடம் கேட்டறிந்ததாகவும், விரைவில் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாகவும், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை நேற்று ட்வீட் செய்திருக்கிறார்.


மேலும், இந்த நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பா.ஜ.க ஐ.டி விங்கும், Zee நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. ஆனால், இந்த நிகழ்ச்சி குறிப்பிட்ட விதிகளை ஏதேனும் மீறியதா, எதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து பா.ஜ.க தரப்பிலிருந்தோ, மத்திய அரசு தரப்பிலிருந்தோ எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
அந்த சேனலுக்கு 7 நாள்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி கேட்டு ஒரு நோட்டீஸ் மட்டும் மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை சார்பில் அனுப்பப்பட்டுள்ளது. பா.ஜ.க-வின் இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
3. தேதி மாற்றப்பட்ட பஞ்சாப் தேர்தல்; ஏன்?
பஞ்சாப் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 14-ம் தேதி நடப்பதாக இருந்தது. ஆனால், பிப்ரவரி 16-ம் தேதி குரு ரவிதாஸ் ஜெயந்தி அனுசரிக்கப்படுவதால், வாக்குப்பதிவை ஒத்திவைக்கவேண்டும் என பஞ்சாப் கட்சிகள் வேண்டுகோள் விடுத்திருந்தன.
பஞ்சாப் மாநிலத்தில் சுமார் 32% பட்டியலினத்தவர்கள். இவர்களில் பெரும்பாலானோர், குரு ரவிதாஸ் ஜெயந்தியை முன்னிட்டு 10-ம் தேதியே, வாரணாசிக்குப் பயணம் மேற்கொள்வர். பின்னர் 16-ம் தேதிதான் திரும்புவர்.
எனவே இந்த சமயத்தில் தேர்தல் வைத்தால், அவர்கள் வாக்களிக்க முடியாத சூழல் ஏற்படும் என தேர்தல் ஆணையத்திடம் அம்மாநில கட்சிகள் கோரிக்கை வைத்திருந்தன.
இதை ஏற்றுக்கொண்டு, தேர்தல் ஆணையமும் பிப்ரவரி 14 அன்று நடக்கவிருந்த தேர்தலை, தற்போது பிப்ரவரி 20-ம் தேதிக்கு மாற்றியிருக்கிறது.
4. நாமக்கல் மாற்றுத்திறனாளி மரணம்; CBCID விசாரணை
நகைத்திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு, நாமக்கல் கிளைச்சிறையில் அடைக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பிரபாகரன் கடந்த 12-ம் தேதி திடீரென உயிரிழந்தார்.
4 நாள்களாக நடந்த காவல்துறை சித்திரவதையால்தான் பிரபாகரன் உயிரிழந்ததாகவும், செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி பிரபாகரனை அதிகாரிகள் வற்புறுத்தியதாகவும் காவல்துறை மீது, அவரின் குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து 3 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, இந்த மரணம் குறித்து வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி நேற்று உத்தரவிட்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். மேலும், பிரபாகரனின் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் நிவாரணமும் அறிவித்துள்ளார்.
``இந்த ஆண்டில் இதுவரை நிகழ்ந்த 3-வது லாக்கப் மரணம் இது” என்கிறார் மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஹென்றி டிபேன்.
5. பொருளாதார சமத்துவமின்மை
இந்தியாவில் இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் நிகழ்ந்த பொருளாதார சமத்துவமின்மை குறித்து நேற்று முன்தினம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது Oxfam அமைப்பு. மிக முக்கியமானதாகக் கருதப்படும் இந்த அறிக்கையின் சில முக்கியமான அம்சங்கள் மட்டும் இங்கே…
``2021-ம் ஆண்டில் இந்தியாவில் 84% குடும்பங்களின் வருமானம் குறைந்திருக்கிறது. இதே காலகட்டத்தில் இந்தியாவில் பில்லினர்களின் எண்ணிக்கை 102-லிருந்து 142 ஆக உயர்ந்திருக்கிறது. சீனா, அமெரிக்காவிற்கு அடுத்து இந்தியாவில்தான் பில்லினர்களின் எண்ணிக்கையும் அதிகம்.
இந்தியாவின் மொத்த சொத்து மதிப்பில், வருமானம் அடிப்படையில் கீழே இருக்கும் இருக்கும் 50% மக்களின் சொத்து மதிப்பு என்பது வெறும் 6%-தான். ஆனால், டாப் 10% மக்களின் சொத்துமதிப்பு சுமார் 45%.
2020-ல் மட்டும் சுமார் 4.6 கோடி இந்தியர்கள் வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர்.
2020-21-ம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் பெட்ரோல், டீசலுக்கு விதிக்கப்படும் வரிகள் 33% உயர்ந்துள்ளன. கோவிட்டிற்கு முந்தைய காலத்தைவிட இது 79% அதிகம்.
கார்பரேட் நிறுவனங்களுக்கு வரிகளில் மத்திய அரசு அளித்த வரிக்குறைப்பு சலுகை காரணமாக, பெருந்தொற்றுக் காலத்திலும் மக்கள்தான் அதிகமான வரிசெலுத்த (எரிபொருள் மீதான வரிகள்) வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.”
தமிழகத்தில் நேற்று பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை: 23,443 (நேற்று முன்தினம்: 23,975) 🔻
- அதிகபட்சமாக, சென்னையில்: 8,591 (8,987) 🔻
- தமிழகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை: 20 (22)🔻
இந்தியாவில் நேற்று பதிவான கொரோனா பாதிப்பு: 2,58,089 (2,71,202) 🔻
இன்று மற்றும் நாளைக்கான வானிலை முன்னறிவிப்பு ☔️ 👇
11 மாநகராட்சிகள் பெண்களுக்காக ஒதுக்கீடு: தமிழகத்தின் மேயர் தேர்தலில், கடலூர், திண்டுக்கல், வேலூர், கரூர், சிவகாசி, காஞ்சிபுரம், மதுரை, கோவை, ஈரோடு ஆகிய 9 தொகுதிகள் பொதுப்பிரிவு பெண்களுக்கும் மற்றும் சென்னை, தாம்பரம் ஆகிய இரு தொகுதிகள் பட்டியலினப் பெண்களுக்கும் என மொத்தம் 11 மேயர் தொகுதிகள் பெண்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் வேகமாக நடைபெற்றுவருகின்றன.
பிர்ஜூ மகாராஜ் மறைவு: இந்தியாவின் புகழ்பெற்ற கதக் கலைஞரான பண்டிட் பிர்ஜூ மகாராஜ் (83) நேற்று உடல்நலக்குறைவால் காரணமானார். விஸ்வரூபம் படத்தில் இடம்பெற்ற, `உன்னை காணாது நான் இன்று நானில்லையே’ என்ற பாடலின் நடனத்தை இயக்கி, அதற்காக தேசிய விருதும் வென்றிருந்தார் இவர். பத்ம விருதுகளில் உயர்ந்த விருதான, பத்ம விபூஷண் விருது பெற்றவர் பிர்ஜூ மகாராஜ்.


இருவர் கைது: ஹரித்துவாரில் நடைபெற்ற விழாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பு பேச்சுகள் பரப்பப்பட்ட நிலையில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது உத்தரகாண்ட் மற்றும் டெல்லி அரசுகள் வெறும் FIR மட்டுமே பதிவு செய்திருந்தன. ஆனால், அண்மையில் உச்சநீதிமன்றம் இதில் தலையிடவே, தற்போது இந்த விவகாரத்தில் தியாகி மற்றும் யதி நர்சிங்கானந்த் என இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேச்சுவார்த்தை நடத்தும் நேதன்யாஹூ: இஸ்ரேல் நாட்டின் முன்னாள் பிரதமரான நேதன்யாஹூ மீது சுமத்தப்பட்டிருக்கும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, அந்நாட்டு நீதிமன்றத்தில் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த வழக்குகள் தொடர்பாக, அரசுடன் நேதன்யாஹூ சமாதானப் பேச்சுவார்த்தையை தொடங்கியிருப்பதாகவும், அரசின் அனைத்து நிபந்தனைகளையும் நேதன்யாஹூ ஏற்றுக்கொண்டால், அவர் 7 ஆண்டுகளுக்கு அரசியலிலிருந்தே விலக நேரிடும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மாத இறுதிக்குள் பேச்சுவார்த்தை நிறைவுற்றால், நேதன்யாஹூ சிறைத்தண்டனையிலிருந்து மட்டும் தப்பிக்கலாம்!
Metaverse ரிசப்ஷன்: தினேஷ் மற்றும் ஜனகநந்தினி இருவருக்கும் வரும் பிப்ரவரி 6-ம் தேதி கிருஷ்ணகிரியில் திருமணம். அன்று மாலை திருமண வரவேற்பு (Reception). இதில் இரண்டாவதுதான் ஸ்பெஷல். வழக்கமாக அரங்கங்களில் நடக்கும் வரவேற்பு இல்லை இது. முழுக்க முழுக்க Metaverse Concept-ல் நடக்கவிருக்கிறது இந்த ரிசப்ஷன்.
- இதில் கலந்துகொள்ள, விருந்தினர்கள் யாரும் நேரில் கிருஷ்ணகிரிக்கு வரவேண்டாம். அவர்களின் மொபைலில் லாகின் செய்து, Virtual-லாக வந்தால் போதும். அங்கு, ஹாரிபாட்டரின் `Hogwarts Castle’ தீமில் விழா அரங்கம் ரெடியாக இருக்கும். அங்கு அவர்கள் தங்களுக்கான விர்ச்சுவல் கேரக்டரை தேர்வு செய்துவிட்டு, தம்பதிகளை வாழ்த்தலாம். இதெல்லாம் சரி; மொய்? G Pay, கிரிப்டோ, கிஃப்ட் வவுச்சர்கள் என எப்படி வேண்டுமானாலும் அனுப்பலாம் என்கின்றனர் இதன் ஏற்பாட்டாளர்கள்.
`தடுப்பூசியை கட்டாயப்படுத்தவில்லை’: மாற்றுத்திறனாளிகள் கட்டாயமாக தடுப்பூசி சான்றிதழை சமர்ப்பிப்பதிலிருந்து விலக்கு அளிக்கவேண்டும் என்ற கோரிக்கையுடன் தொண்டு நிறுவனம் ஒன்று, உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது. இதற்கு பதிலளித்துள்ள மத்திய அரசு, ``தடுப்பூசி சான்றிதழ்களை இதுவரை எந்தவொரு விஷயத்திற்கும் கட்டாயமாக்கவில்லை; தடுப்பூசிகளும் கட்டாயப்படுத்தி போடப்படுவதில்லை. அதேசமயம், பொதுநலன் கருதி அனைவரையும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள மட்டுமே அறிவுறுத்துகிறோம்” எனத் தெரிவித்துள்ளது.
அபுதாபி சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே நிகழ்ந்த தீவிரவாத ட்ரோன் தாக்குதலில் 2 இந்தியர்கள் உள்பட மொத்தம் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஹௌதி அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர்.
ஜோகோவிச்சிற்கு அடுத்த சிக்கல்: தடுப்பூசி செலுத்திக்கொள்ளாததால், ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் தொடரில் பங்கேற்க முடியாமல், அந்நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட ஜோகோவிச்சிற்கு ஃபிரெஞ்ச் ஓப்பனில் பங்கேற்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த வாரம் முதல் அந்த நாட்டிலும், தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் பொது இடங்களில் நடமாட முடியாது என்பதால், மே மாதம் நடக்கவிருக்கும் ஃபிரெஞ்ச் ஓப்பன் தொடரில் ஜோகோவிச் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் கலந்துகொள்ள முடியாது.
இ-காமர்ஸ் தளங்களில் ஜனவரி மாதம் நடைபெறும் குடியரசு தின சிறப்பு விற்பனைகள் நேற்று முதல் தொடங்கியுள்ளன. அமேசானின் Great Republic Day Sale 20-ம் தேதி வரையிலும், ஃப்ளிப்கார்ட்டின் Big Savings Day விற்பனை 22-ம் தேதி வரையிலும் நடைபெறுகிறது.
🔴 இதுவரைக்கும் TSL-ஐ தொடர்ந்து படிச்சிட்டு வர்றீங்க; எனவே இதுபற்றிய உங்க கருத்தை தெரிஞ்சுக்க விரும்புறோம். அதனால், இந்த லிங்கை க்ளிக் பண்ணி உங்களோட ரேட்டிங்கைப் பதிவு பண்ணிடுங்க. TSL-ஐ மேம்படுத்த இது எங்களுக்கு உதவியா இருக்கும். ஏற்கெனவே கருத்தைப் பதிவு செய்தவர்களுக்கு நன்றி!
அவ்வளவுதான்!
The Subject Line-னோட இன்னைக்கு அப்டேட்ஸ் உங்களுக்குப் பிடிச்சிருக்கும்னு நம்புறேன். பிடிச்சிருந்தா கீழ இருக்க பட்டன் மூலமா உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க… இன்னும் ஏதாச்சும் இந்த TSL-ல் மாத்தணும்னா எனக்கு மெசேஜ் பண்ணுங்க! உங்க கருத்துகள் எங்களுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். 🤞
திரும்ப நாளைக்கு காலைல 7 மணிக்கு சந்திப்போம்!
Have a Nice day ☕️
The Subject Line-ஐ சமூக வலைதளங்களில் பின்தொடர: