✌️உள்ளாட்சித் தேர்தல்: உடைந்த `கொங்கு' கோட்டை!
In Today's Edition: தமிழகத்தில் வளர்ந்திருக்கிறதா பா.ஜ.க? | அ.தி.மு.க வி.ஐ.பி தொகுதிகளின் நிலை என்ன? | கோவை தேர்தல் முடிவுகளுக்கு சிக்கல்? | மூன்றாவது இடம் யாருக்கு? | Reading Time: ⏱ 4 Mins
Good Morning ☕️
இன்றைய TSL உள்ளாட்சித் தேர்தல் ஸ்பெஷல். எனவே இந்த தேர்தலின் முக்கியமான ஹைலைட்ஸ் இங்கே உங்களுக்காக…
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியாகியிருக்கின்றன. சுமார் 10 ஆண்டு காலத்திற்குப் பிறகு நடைபெற்ற இந்த தேர்தலில் மொத்தம்,
- 1,374 மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள்,
- 3,843 நகராட்சி வார்டு உறுப்பினர்கள்,
- 7,621 பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
உள்ளாட்சி அமைப்புகளில் மொத்தம்,
21 மாநகராட்சிகள்,
138 நகராட்சிகள்,
490 பேரூராட்சிகளுக்கு விரைவில் இவர்களிலிருந்து தலைவர்கள் தேர்வு செய்யப்படவிருக்கின்றனர்.
இதில் முன்னணி கட்சிகளின் நிலை என்ன?
மெகா வெற்றி பெற்ற தி.மு.க
சட்டமன்றத் தேர்தலுக்காக அமைத்த அதே கூட்டணியுடனே, இந்த உள்ளாட்சித் தேர்தலையும் எதிர்கொண்டது தி.மு.க. இந்தக் கூட்டணி 21 (21) மாநகராட்சிகளையும், 133 (138) நகராட்சிகளையும் தனிப்பெரும்பான்மையுடன் கைப்பற்றியிருக்கிறது.
தகர்க்கப்பட்ட அ.தி.மு.க-வின் கோட்டை
கடந்தாண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில், மேற்கு மண்டலத்தில் உள்ள 57 சட்டமன்றத் தொகுதிகளில் 40-ஐ அ.தி.மு.க கூட்டணியிடம் இழந்திருந்தது தி.மு.க. குறிப்பாக கோவையில் 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் தோல்வியடைந்திருந்தது.
ஆனால், இந்த உள்ளாட்சித் தேர்தலில் கோவையில் உள்ள 100 மாநகராட்சி வார்டுகளில் 95-க்கும் மேல் கைப்பற்றியிருக்கிறது தி.மு.க கூட்டணி. அ.தி.மு.க வெறும் 3-ல் மட்டுமே வென்றிருக்கிறது. இதையடுத்து முதல்முறையாக கோவையின் மேயர் பதவி தி.மு.க வசம் வந்திருக்கிறது.
நகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டுகளிலும் பெரும்பான்மை வார்டுகள் தி.மு.க கூட்டணி வசம்தான். திருப்பூர், ஈரோடு, கரூர், சேலம், ஓசூர், தர்மபுரி ஆகிய மாவட்டங்களிலும் அ.தி.மு.க-வை பின்னுக்குத்தள்ளி, பெரும்பான்மை இடங்களைப் பெற்றிருக்கிறது.
மேற்கு மாவட்டங்களில், 9 மாதங்களில் நிகழ்ந்திருக்கும் தலைகீழ் மாற்றம் இது.
சரிந்த அ.தி.மு.க-வின் செல்வாக்கு
பா.ஜ.க, பா.ம.க ஆகிய கட்சிகளைத் தவிர்த்துவிட்டு களம்கண்ட அ.தி.மு.க, இந்தத் தேர்தலில் பெரும் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. எந்த மாநகராட்சியையும் பெரும்பான்மையுடன் கைப்பற்றாத அ.தி.மு.க, நகராட்சியில் 2 (138) இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. மொத்தமுள்ள 7,621 பேரூராட்சி வார்டுகளில் 1206 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது.
மேற்கு மண்டலத்தில் பின்னடைவை சந்தித்தது மட்டுமல்லாமல், முக்கிய தலைவர்களின் தொகுதிகளிலும் அக்கட்சி சோபிக்கவில்லை.
உதாரணமாக, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வேலுமணி ஆதிக்கத்திலிருக்கும் தொண்டாமுத்தூரில் நகராட்சியை தி.மு.க-விடம் இழந்திருக்கிறது.
இதேபோல, எடப்பாடி பழனிசாமியின் சொந்த வார்டிலேயே அ.தி.மு.க தோல்வியடைந்திருக்கிறது. இத்துடன் சேர்த்து, சேலத்தில் பெரும்பாலான நகராட்சி இடங்களையும் தி.மு.க கூட்டணியே வென்றிருக்கிறது.
காலம்காலமாக அ.தி.மு.க-வின் செல்வாக்கு மிக்க மாவட்டமாக கருதப்படும் தேனியிலும் கோட்டைவிட்டிருக்கிறது அக்கட்சி. ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளம் உள்பட 6 நகராட்சிகளையும் தி.மு.க-வே கைப்பற்றியிருக்கிறது. கம்பம், போடி, பெரியகுளம், சின்னமனூர் என அனைத்து இடங்களிலும் கணிசமான இடங்களைப் பிடித்திருக்கிறது தி.மு.க.
இதேபோல முன்னாள் அமைச்சர்களான தங்கமணி, ஆர்.பி.உதயகுமார், ஜெயகுமார், ராஜேந்திர பாலாஜி ஆகியோர் சார்ந்த சட்டமன்றத் தொகுதிகளிலும், தி.மு.க-வே பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகளை வென்றிருக்கிறது.
ஆக மொத்தம், இந்த தேர்தல் அ.தி.மு.க-விற்கு மிகப்பெரிய பின்னடைவைப் பரிசாகக் கொடுத்திருக்கிறது.
மலர்ந்ததா தாமரை?
அ.தி.மு.க கூட்டணியிலிருந்து பிரிந்து தனித்து களம் கண்டதால், இந்தமுறை பா.ஜ.க-வின் மீதும் எதிர்பார்ப்பு இருந்தது.
மொத்தமுள்ள 7,621 பேரூராட்சி வார்டுகளில் 230-ஐயும், 3,843 நகராட்சி வார்டுகளில் 56-ஐயும், 1,374 மாநகராட்சி வார்டுகளில் 22-ஐயும் கைப்பற்றியிருக்கிறது அக்கட்சி.
இந்த 22 மாநகராட்சி வார்டுகளில் ஒன்று, சென்னை மாநகராட்சியின் 134-வது வார்டு. அந்த வார்டில் வென்ற உமா ஆனந்தன் காந்தியைக் கொலைசெய்த கோட்சேவுக்கு ஆதரவாக அண்மையில் பேசியவர் என்பது நேற்று சர்ச்சையாகியிருக்கிறது.
சரி, தமிழகத்தில் பா.ஜ.க வளர்ந்திருக்கிறதா?
2011-ம் ஆண்டு மொத்தம் 12,816 இடங்களுக்கு நடந்த, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 226 இடங்களைக் கைப்பற்றியிருந்தது பா.ஜ.க. அதாவது, 1.76%.
இந்தமுறை 12,838 இடங்களுக்கு நடந்த தேர்தலில் 308 இடங்களை கைப்பற்றியிருக்கிறது. இது 2.4%. இந்த 308-ல் 200 இடங்களை கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து மட்டுமே வென்றிருக்கிறது பா.ஜ.க.
Note: உள்ளாட்சித் தேர்தல்களில் மாநில தேர்தல் ஆணையம் கட்சிவாரியாக வாக்கு சதவீதத்தை வெளியிடுவதில்லை என்பதால், இடங்களை வைத்து மட்டுமே கணக்கிடமுடிகிறது.
பிற கட்சிகளின் வெற்றி விவரங்களை மாநில தேர்தல் ஆணையத்தின் இந்த தளத்தில் காணலாம்.
- தேர்தல் வெற்றிகுறித்து நேற்று மக்களுக்கு நன்றி தெரிவித்த மு.க.ஸ்டாலின், இந்த வெற்றியை,``தமிழகத்தில் நடைபெறும் திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் கொடுத்திருக்கும் அங்கீகாரம்” எனக் குறிப்பிட்டார். தேசிய அளவில் தமிழகத்தின் வளர்ச்சி குறித்தும், தேசிய அரசியலில் தி.மு.க-வின் நோக்கம் குறித்தும் நடக்கும் உரையாடல்களில், அண்மைக்காலமாக, தி.மு.க-வினரால் முன்வைக்கப்படும் முக்கியமான அம்சமாக மாறியிருக்கிறது இந்த, `திராவிட மாடல்’.
- தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளும் வழக்கம்போல முதலிடத்தைப் பிடிக்க, யார் தமிழகத்தின் மூன்றாவது கட்சி எனக் கேள்வி எழுந்திருக்கிறது. `அதிகமான இடங்களைப் பிடித்ததால் நாங்கள்தான் மூன்றாமிடம்’ என காங்கிரஸ் சொல்ல, `தனித்துப் போட்டியிட்டு அதிக இடங்களை வென்றதால் நாங்கள்தான் முதலிடம்’ என பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும் இதற்கு உரிமை கோரியிருக்கிறார்.
ஆனால், வென்ற வார்டுகள் அடிப்படையில் காங்கிரஸ்தான் உண்மையில் அந்த இடத்தைப் பிடிக்கிறது.
இந்த இரு கட்சியினருக்கும் அதிகமாக இடங்களைப் பிடித்திருக்கின்றனர் சுயேச்சைகள்!
- வழக்கமாக சட்டமன்றத்தில், ஆட்சியின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்போது, எம்.எல்.ஏ-க்கள் விலைபோகாமல் இருக்க, ஆளுங்கட்சியினர் அவர்களை ரிசார்ட்டுகளில் தங்கவைப்பது வழக்கம். ஆனால், இந்த டெம்ப்ளேட் இப்போதெல்லாம் உள்ளாட்சித் தேர்தல்களுக்கே வந்துவிட்டது. நெல்லையில் மார்ச் 4-ம் தேதி நடக்கவிருக்கும் மேயர் மறைமுகத் தேர்தலுக்கு முன்பு, மாநகராட்சி கவுன்சிலர்களிடம் யாரும் குதிரைபேரம் நடத்திவிடக்கூடாது என்பதால், அவர்களை கேரளாவில் உள்ள ரிசார்ட்டுக்கு அழைத்துச் செல்லத் திட்டமிட்டுள்ளார் நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க செயலாளரான அப்துல் வஹாப்.
- கடந்தாண்டு நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க சார்பில் நாமக்கல்லில் ஒரு வார்டில் போட்டியிட்ட திருநங்கை ரியா என்பவர் வெற்றி பெற்றிருந்தார். தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் வென்ற முதல் திருநங்கை அவர்தான். அதேபோல இந்தமுறை வேலூர் மாவட்டத்தின் நகராட்சி வார்டில், திருநங்கை கங்கா நாயக் என்பவர் வெற்றிபெற்றிருக்கிறார். இவரும் தி.மு.க வேட்பாளரே.
- கோவை மாநகராட்சி தேர்தலில் வாக்காளர்களுக்கு கட்சிகள் தாராளமாக பணப்பட்டுவாடா செய்வதாகவும், இதனால் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி, நடந்த தேர்தலை ரத்துசெய்யவேண்டும் எனவும் ஈஸ்வரன் என்பவர் அண்மையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால், வாக்கு எண்ணிக்கைக்கு தடைவிதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. மாறாக, ``வேட்பாளர்களின் வெற்றியானது இந்த வழக்கின் இறுதித்தீர்ப்புக்கு உட்பட்டதே” என அறிவித்தது. அதாவது, பணப்பட்டுவாடா புகார் காரணமாக, உயர்நீதிமன்றம் தேர்தலை ரத்துசெய்தாலோ, குறிப்பிட்ட வேட்பாளரின் வெற்றியை செல்லாது என அறிவித்தாலோ, அது இந்த முடிவுகளை பாதிக்கும். அதன்படி, நேற்று கோவை மாநகராட்சியில் வென்ற வேட்பாளர்களுக்கு அளிக்கப்பட்ட வெற்றிச்சான்றிதழிலும், ``இந்த வெற்றி உயர்நீதிமன்ற வழக்கின் இறுதித்தீர்ப்புக்கு உட்பட்டது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் எங்கும் இல்லாத அளவுக்கு கோவையில்தான் தேர்தலில், ஹாட்பாக்ஸ், கொலுசு என தி.மு.க, அ.தி.மு.க கட்சிகள் போட்டிபோட்டுக்கொண்டு பரிசுப்பொருள்களையும் பணத்தையும் விநியோகித்தன. மொத்தம் 4 முறை தேர்தல் பார்வையாளர்களும் இங்கு மாற்றப்பட்டனர். எனவே உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் இந்த வழக்கு விசாரணை முக்கியத்துவம் பெறுகிறது.
கோவையில் விநியோகிக்கப்பட்ட பணம் மற்றும் பரிசுப்பொருள்கள் தொடர்பாக கூடுதல் விவரங்களை அறிய விரும்பினால், இந்த வீடியோவைப் பார்க்கலாம்!
அவ்வளவுதான்!
The Subject Line-னோட இந்த எடிஷன் உங்களுக்குப் பிடிச்சிருந்தா, கீழ இருக்க பட்டன் மூலமா உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க… இன்னும் ஏதாச்சும் இந்த TSL-ல் மாத்தணும்னா எனக்கு மெசேஜ் பண்ணுங்க! உங்க கருத்துகள் எங்களுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். 🤞
திரும்ப நாளைக்கு காலைல 7 மணிக்கு சந்திப்போம்!
Have a Nice day ☕️
The Subject Line-ஐ சமூக வலைதளங்களில் பின்தொடர:
Telegram | Twitter | Facebook | Insta
Today Edition பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க! ❤️