👨🏽⚖️ தஞ்சை மாணவி வழக்கு ஏன் CBI-க்கு மாற்றப்பட்டது?
Today Edition Highlights: ஆளுநரை பிளாக் செய்த மம்தா பானர்ஜி | ஜஸ்டின் ட்ரூடோ ஸ்டேட்டஸ் என்ன? | பெகாசஸ் விவகாரத்தில் புதிய தகவல் | பொருளாதார ஆய்வறிக்கை ஹைலைட்ஸ் | Reading Time: ⏱ 5 Mins
ஹாய், ஹலோ… வணக்கம் 👋
இன்றைய தினத்தின் டாப் அப்டேட்ஸ் இதோ…
தஞ்சை பள்ளி மாணவியின் தற்கொலை வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றியிருக்கிறது சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை. பா.ஜ.க-வினர் இந்தப் பிரச்னையை பெரியளவில் கையிலெடுத்திருந்த நிலையில், இந்த தீர்ப்பு ஆளும் தி.மு.க அரசுக்குப் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. சரி, இந்த வழக்கை ஏன் சிபிஐ-க்கு மாற்றியது நீதிமன்றம்? அதற்காக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் குறிப்பிட்ட காரணங்கள் என்னென்ன?
வழக்கின் சுருக்கம்: தஞ்சை மாவட்டம் மைக்கேல்பட்டியில் உள்ள ஒரு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்துவந்த மாணவி, விடுதிக்காப்பாளர் சகாயமேரி என்பவர் தன்னை அதிக வேலை வாங்கி துன்புறுத்தியதாகச் சொல்லி, தற்கொலை செய்துகொண்டு இறந்துபோனார்.
அவர், இறந்ததற்குப் பின்பு வெளியான ஒரு வீடியோவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியில் ரக்கேல் மேரி என்பவர் அவரை மதமாற்றம் செய்யச் சொல்லிக் கேட்டது தெரியவந்தது. இதனால்தான் மாணவி கொடுமைப்படுத்தப்பட்டார் என அந்த மாணவியின் பெற்றோர்கள் மற்றும் பா.ஜ.க-வினர் குற்றம்சாட்ட, அரசு அதை மறுத்துவந்தது.
இதையடுத்து வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக்கோரி (முதலில் சிபிசிஐடி விசாரணை கேட்டிருந்தனர்) மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் பெற்றோர் கோரிக்கை வைத்தனர். அந்த வழக்கின் தீர்ப்புதான் நேற்று வெளியாகியுள்ளது.
இனி நேற்றைய தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டவை…
மாவட்ட எஸ்.பி-யின் நடவடிக்கைகள்: வழக்கின் ஆரம்பத்தில் (இறப்பதற்கு முன்பு) மாணவி காவல்துறையிடம் அளித்த வாக்குமூலத்திலும், மாஜிஸ்திரேட்டிடம் அளித்த வாக்குமூலத்திலும் மதமாற்றம் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.
ஆனால், மாணவி இறந்தபின்பு முத்துவேல் என்பவரின் மூன்றாவது வீடியோ வெளியானது; அதில் மதமாற்றம் குறித்து அந்த மாணவி குறிப்பிட்டிருந்தார். ஆனால், மாவட்ட எஸ்.பி அதன்பிறகும், முதல்கட்ட விசாரணையின்படி இந்த வழக்கிற்கும் மதமாற்றத்திற்கும் தொடர்பில்லை என மறுத்துவந்தார். அந்தக் கோணத்தில் விசாரணை நடத்துவதற்கு பதிலாக, அந்த வீடியோ எடுத்த முத்துவேல் மீது FIR பதிவு செய்ய உத்தரவிட்டார்.
அமைச்சர்களின் வாதங்கள்: தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் இன்னும் இரு அமைச்சர்கள் விசாரணை முடிவதற்கு முன்பாகவே பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாக பொதுவெளியில் கருத்து தெரிவித்தனர். பள்ளிக்கல்வித்துறையும் பள்ளி நிர்வாகத்திற்கு சாதகமான ஒரு அறிக்கையை வெளியிட்டது.
மாநிலத்தின் அமைச்சரே இந்த விவகாரத்தில் தன் நிலைப்பாட்டை விசாரணைக்கு முன்பே அறிவித்ததால், அதன்பின்பும் இந்த வழக்கு விசாரணை மாநில காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தால் சரியான வழியில் செல்லாது. எனவே, ``இந்த வழக்கு விசாரணை நேர்மையாக நடக்காது” என மாணவியின் பெற்றோர் நம்புவதற்கு முகாந்திரம் இருக்கிறது.
எதிர்ப்பிரசாரம்: அந்த மாணவி வீட்டில் கொடுமைப்படுத்தப்பட்டதாகவும், அவரின் தந்தை மற்றும் சித்தியால் துன்புறுத்தப்பட்டதாகவும் அந்தக் குடும்பத்தினருக்கு எதிரான பிரசாரங்கள் இணையத்தில் நடந்துள்ளன.
ஆனால், அந்த மாணவி தன்னுடைய வாக்குமூலங்களில் இந்தக் கொடுமைகள் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. விடுதிக்காப்பாளர் சகாயமேரியை மட்டும்தான் அவர் குற்றம்சாட்டியிருக்கிறார்.
இன்னொருபுறம், ஆளும்கட்சியின் ஐ.டி விங் சார்பில் பள்ளி நிர்வாகத்திற்கு சாதகமான வீடியோக்களும் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும், மதமாற்ற குற்றச்சாட்டிற்கு பதிலடி கொடுக்கும் வகையில், காவல்துறையினர் வேண்டுமென்றே மாணவியின் மரண வாக்குமூலத்தை வெளியிட்டு, பள்ளிக்கு சாதகமாக நடந்துகொண்டுள்ளதாக மாணவியின் பெற்றோர் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. இப்படி விசாரணையின் மத்தியில் வீடியோக்கள், பிற ஆதாரங்கள் வெளியாவது விசாரணையின் நம்பகத்தன்மையை கேள்விக்குட்படுத்துகிறது.
``மதமாற்ற குற்றச்சாட்டை புறக்கணிக்க முடியாது”:
நீதிபதி தீர்ப்பில் நவாஸுதீன் சித்திக் நடித்த `Serious Men’ மற்றும் கே.பாலச்சந்தரின் `கல்யாண அகதிகள்’ ஆகிய இரு படங்களிலும் வரும் மதமாற்றம் தொடர்பான காட்சிகளைக் குறிப்பிட்டு, ``திரைப்படங்கள் பொதுவாக மிகைப்படுத்தப்பட்டவையே என்றாலும், அவற்றில் உண்மை இல்லாமல் இல்லை” எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும், ``மதமாற்றம் என்பது கிறிஸ்துவத்தின் ஒரு பகுதியாகவே இருக்கிறது” எனத் தெரிவித்துள்ள அவர்,
``மற்ற அனைத்தையும் விடுங்கள். அந்த ஊரின் பெயரே மைக்கேல்பட்டிதான். நிச்சயமாக அது அந்தக் கிராமத்தின் உண்மையான பெயராக இருந்திருக்காது. இதுகுறித்து யாரேனும் ஆராய்ச்சிகூட செய்யலாம்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இறுதியாக, ``மேற்கண்ட விஷயங்களையெல்லாம் வைத்து பார்க்கும்போது மதமாற்றம் என்பது எளிதில் புறக்கணிக்கக்கூடிய ஒரு குற்றச்சாட்டு இல்லைதான். அது பொய்யாகவும் இருக்கலாம்; உண்மையாகவும் இருக்கலாம். ஆனால், அதுகுறித்து விசாரித்து நாம் உண்மையை அறியவேண்டும். நிச்சயம் சி.பி.ஐ உண்மையை வெளிக்கொண்டுவரும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள சகாயமேரியின் ஜாமீன் மனு மீதான விசாரணையையும் மேற்கொண்டு தொடங்கிட, மாவட்ட நீதிபதிக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த தீர்ப்பை பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலை வரவேற்றுள்ளார்.
Note: மேலே இருப்பவை அனைத்தும் நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கும் அம்சங்களின் சுருக்கமான வடிவமே. முழு தீர்ப்பின் PDF வடிவத்திற்கு இங்கே கிளிக் செய்க (Source: Live Law)
1. பொருளாதார ஆய்வறிக்கை சொல்வது என்ன?
ஆண்டுதோறும் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முதல்நாள் வெளியாகும் அரசின் பொருளாதார ஆய்வறிக்கை நேற்று வெளியானது. அதன் முக்கியமான 5 ஹைலைட்ஸ்…
2022-23-ம் ஆண்டின் ஜிடிபி வளர்ச்சியானது 8 முதல் 8.5 சதவீதம் வரை இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல நடப்பு நிதியாண்டின் (2021-22) ஜிடிபி வளர்ச்சி விகிதம் 9.2% ஆக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்தியப் பொருளாதாரம் மீண்டும், கொரோனாவுக்கு முந்தைய நிலைக்கு மீண்டு வந்திருப்பதை இது உணர்த்துகிறது.
அரசின் வருவாயும் கொரோனா நடப்பு நிதியாண்டில் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக ஏப்ரல் - நவம்பர் 2021-க்கு இடையே அரசின் வருவாய் 67% (முந்தைய ஆண்டு பருவத்தைவிட) அதிகரித்திருக்கிறது.
கொரோனா தொற்றால் வேளாண் மற்றும் அதுசார்ந்த துறைகள் குறைவாகவும், சேவைத்துறைகள் (குறிப்பாக மனிதவளம் அதிகம் தேவைப்படும் துறைகள்) அதிகமாகவும் பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்தாண்டு ஏப்ரல் - நவம்பர் 2021 இடைவெளியில் தேசிய பங்குச்சந்தையில் தனிநபர் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை (வருமான அடிப்படையில்) 39 சதவிகிதத்திலிருந்து 45 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. இதே கால அளவில் சுமார் 2.21 கோடி டீமேட் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.
கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு தொழில்நுட்ப முன்னேற்றங்கள், உலக அரசியல், நுகர்வோரின் பழக்கவழக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள், பருவநிலை மாற்றம் எனப் பல எதிர்பாராத விஷயங்கள் இந்தியப் பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்த வாய்ப்புள்ளது என்பதால், அவற்றால் நாட்டின் உற்பத்தி திறன் பாதிக்காத அளவுக்கு, நம் விநியோகச்சங்கிலியை தயார்ப்படுத்தும் வகையில், அரசு தன் கொள்கை முடிவுகளை வகுக்கவேண்டும் எனவும் இந்த ஆய்வறிக்கை அறிவுறுத்தியுள்ளது.
பொருளாதார ஆய்வறிக்கை குறித்து முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் விமர்சனம் 👇
2. தமிழக உள்ளாட்சித் தேர்தல் அப்டேட்ஸ்
நகரப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்கியிருக்கும் நிலையில் அனைத்துக் கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை இறுதிசெய்யும் பணிகளையும், கூட்டணிக் கட்சிகளிடம் வார்டுகளைப் பகிர்ந்துகொள்ளும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன.
இந்நிலையில் அ.தி.மு.க - பா.ஜ.க இடையே இரண்டுகட்டப் பேச்சுவார்த்தை நடந்த நிலையில், இறுதியாக இந்த உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது பா.ஜ.க.
ஆனால், இந்தத் தேர்தலுக்குப் பிறகும் இருகட்சிகளிடையேயான நல்லுறவும், கூட்டணியும் தொடரும் என அறிவித்திருக்கிறார் அண்ணாமலை. இதை எடப்பாடி பழனிசாமியும் உறுதி செய்திருக்கிறார். பா.ஜ.க கேட்ட அளவிற்கு அ.தி.மு.க-வால் இடங்களை அளிக்க முடியாததே பிரிவுக்கு காரணம்.
இன்னொருபுறம் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியில் சிறுசிறு சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.
கரூரில் நேற்று தி.மு.க - காங்கிரஸ் இடையே நடந்த கூட்டணிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் தி.மு.க சார்பில் அமைச்சர் செந்தில் பாலாஜியும், காங்கிரஸ் சார்பில் எம்.பி. ஜோதிமணியும் கலந்துகொண்டனர்.
பேச்சுவார்த்தைக்கு இடையே திடீரென வார்த்தைப் போர் முற்ற ஜோதிமணி அங்கிருந்து, தி.மு.க நிர்வாகிகளை திட்டியபடியே வெளியேறினார். தி.மு.க-வினர் ஒருமையில் திட்டியதாகவும் வெளியேறச் சொன்னதாகவும் குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து செந்தில் பாலாஜியிடம் செய்தியாளர் கேட்டபோது, ``கரூரில் நடந்த இந்த சிறு சம்பவத்தால் ஒட்டுமொத்தமாக கூட்டணிக் கட்சியினருக்கு சங்கடங்கள் வந்துவிடக்கூடாது; எனவே ஜோதிமணியின் குற்றச்சாட்டு பற்றி பேச விரும்பவில்லை” எனத் தெரிவித்துவிட்டார்.
3. பெகாசஸ் பாதிப்பு உறுதி
பெகாசஸ் உளவு மென்பொருள் குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட முன்னாள் நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் தலைமையிலான குழுவினர், பாதிக்கப்பட்ட நபர்களின் மொபைல் போன்களை ஆராய்ந்து வருகின்றனர்.
அப்படி இந்தக் குழுவோடு இணைந்து ஆராய்ச்சி செய்த இரண்டு சைபர் செக்யூரிட்டி நிபுணர்கள், சில போன்களில் பெகாசஸ் மென்பொருள் பயன்படுத்தப்பட்டிருப்பதற்கான தடயத்தைக் கண்டறிந்திருக்கின்றனர். இதை `இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகை உறுதி செய்திருக்கிறது.
2 ஐபோன்களிலும், 6 ஆண்ட்ராய்டு போன்களிலும் பெகாசஸின் பாதிப்பை இவர்கள் உறுதிசெய்து, உச்சநீதிமன்ற குழுவிடம் அறிக்கை அளித்திருக்கின்றனர். இந்த விவகாரங்கள் எப்போது உச்சநீதிமன்றத்தில் அதிகாரபூர்வமாக தாக்கல் செய்யப்படும் எனத் தெரியவில்லை.
தமிழகத்தில் நேற்று பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை: 19,280 (நேற்று முன்தினம்: 22,238) 🔻
- அதிகபட்சமாக, சென்னையில்: 2,897 (3,998) 🔻
- தமிழகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை: 20 (38) 🔻
இந்தியாவில் நேற்று பதிவான கொரோனா பாதிப்பு: 2,09,918 (2,34,281) 🔻
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. அப்போது, நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் ஜனாதிபதி தலையிட்டு தமிழகத்திற்கு விலக்கு அளிக்கவேண்டும் என தி.மு.க, காங்கிரஸ் எம்.பி-க்கள் அவையில் முழக்கங்களை எழுப்பினர்.
தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக செயல்பட்டுவரும் முனீஷ்வர்நாத் பண்டாரியை, தலைமை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் நேற்று பரிந்துரை செய்துள்ளது.
``என்னையும், என் அரசின் அதிகாரிகள் பற்றியும் தினந்தோறும் விமர்சிக்கிறார். நாங்கள் ஏதோ கொத்தடிமைகள் போல எங்களுக்கு உத்தரவிடுகிறார். என்னால் இதற்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாது என்பதால், அவரை ட்விட்டரிலிருந்து பிளாக் செய்துவிட்டேன்” எனத் தெரிவித்திருக்கிறார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. இவர் பிளாக் செய்தது அம்மாநில ஆளுநர் ஜக்தீப் தன்கரை!
- இதற்கு அந்த ஆளுநர் அளித்திருக்கும் பதில் இதுவரை அரசியலில் யாரும் பார்த்திடாத ரகமாக இருக்கிறது! 👇
WB Guv Message to Hon’ble CM on her WHATSAPP today and read by her at 10.25 am today- “Dialogue and harmony amongst constitutional functionaries is essence and spirit of democracy and mandate of the constitution. This can blossom with mutual regard and respect…1/2மம்தாவுக்கு காலையில் வாட்ஸ்அப்பில் அனுப்பிய மெசேஜை இப்படி ட்வீட் செய்திருக்கிறார் ஜக்தீப்.
2012-ம் ஆண்டு இரண்டு இத்தாலிய மாலுமிகள், கேரளாவைச் சேர்ந்த இரண்டு இந்திய மீனவர்களை சுட்டுக்கொன்றனர். பல ஆண்டுகளாக நீடித்துவந்த இந்த வழக்கை, 10 கோடி ரூபாயை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்குமாறு கூறி, கடந்தாண்டு முடித்துவைத்தது உச்சநீதிமன்றம். ஆனால், அந்த மாலுமிகளின் மீது இத்தாலியில் குற்றவியல் விசாரணை நடக்கவேண்டும் என அறிவுறுத்தியிருந்தது. அப்படி நடந்த விசாரணையில் போதிய ஆதாரங்கள் இன்றி, வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு, இரு மாலுமிகளும் நேற்று வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கனடாவுக்குள் நுழையும் டிரக் டிரைவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொண்டிருக்க வேண்டும் என்ற விதிக்கு எதிராகவும், தீவிர கோவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிராகவும் அந்நாட்டு தலைநகரில் இருநாள்களாகப் போராட்டங்கள் நடந்துவருகின்றன. இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ரகசிய இடத்திற்கு மாற்றப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வந்தன. இந்நிலையில், தனக்கு கோவிட் தொற்று உறுதியாகியிருப்பதாகவும், தனிமைப்படுத்திக்கொண்டு அங்கிருந்து அலுவல்களைக் கவனிக்கவுள்ளதாகவும் நேற்று தெரிவித்திருக்கிறார் ஜஸ்டின்.
- மத்திய பட்ஜெட் 2022-23: இன்று காலை 11 மணிக்கு மக்களவையில் 2022-23-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். 2019-ம் ஆண்டு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டோடு சேர்த்து, மோடி அரசின் 10-வது பட்ஜெட் இது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு 4-வது பட்ஜெட்.
On This Day - Feb 01
- தமிழ் நாடகத் தந்தை என அழைக்கப்படும் பம்மல் சம்பந்த முதலியார் பிறந்தநாள், 1873
- விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா நினைவு நாள், 2003
அவ்வளவுதான்!
The Subject Line-னோட இன்னைக்கு அப்டேட்ஸ் உங்களுக்குப் பிடிச்சிருக்கும்னு நம்புறேன். பிடிச்சிருந்தா கீழ இருக்க பட்டன் மூலமா உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க… இன்னும் ஏதாச்சும் இந்த TSL-ல் மாத்தணும்னா எனக்கு மெசேஜ் பண்ணுங்க! உங்க கருத்துகள் எங்களுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். 🤞
திரும்ப நாளைக்கு காலைல 7 மணிக்கு சந்திப்போம்!
Have a Nice day ☕️
The Subject Line-ஐ சமூக வலைதளங்களில் பின்தொடர:
Telegram | Twitter | Facebook | Insta
Today Edition பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க! ❤️