🇺🇦 உக்ரைன் - ரஷ்யா போர்: தவறு செய்கிறதா இந்தியா?
In Today's Edition: தொடங்கிய போர்; புடினின் அடுத்த திட்டம்? | என்ன செய்யப்போகிறது NATO? | ரஷ்யாவை பாதிக்குமா பொருளாதார தடைகள்? | Reading Time: ⏱ 4 Mins
Good Morning ☕️
உக்ரைன் ரஷ்யா போர் தொடர்பான ஸ்பெஷல் எடிஷன் இது. எனவே வழக்கமான செய்திகளுக்கு பதில், இந்தப் பிரச்னையைப் பற்றியே இன்று பல முக்கிய அப்டேட்ஸை பார்க்கப்போகிறோம்.
பல வார பதற்றத்திற்குப் பிறகு, நேற்று உக்ரைனைத் தாக்கத் தொடங்கிவிட்டார் புடின். ``இது போர் அல்ல; உக்ரைனியர்களைக் காப்பதற்கான ராணுவ நடவடிக்கைதான்” என அவர் தொலைக்காட்சியில் பேசிய சில நிமிடங்களிலேயே உக்ரைன் நகரங்களில் குண்டுகள் விழத்தொடங்கிவிட்டன. நேற்று இரவு வரைக்கும் 11 விமான படைத்தளங்கள், ஒரு கடற்படை தளம் உள்பட மொத்தம் 70 ராணுவ தளங்களை நேற்று கைப்பற்றியிருக்கிறது ரஷ்யா.
- உலக நாடுகளின் எச்சரிக்கைகள்,
- ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள்,
- உக்ரைன் மக்களின் அழுகுரல்கள்,
- உலக சந்தைகளின் வீழ்ச்சி என இந்தப் பிரச்னையின் எதிரொலிகள் நேற்றே அனைத்து திக்குகளிலும் ஒலிக்கத் தொடங்கிவிட்டன. இந்நிலையில், உக்ரைன் விவகாரத்தின் அடுத்தகட்ட நகர்வுகளை இன்றைய TSL-ல் அலசுவோம்.
புடினின் திட்டம் என்ன?
``ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைனில், மேலை நாடுகளின் NATO படைகள் ஒருபோதும் இறங்கக்கூடாது; உக்ரைனை எக்காலமும் NATO-வில் சேர்க்கக்கூடாது” என்பதுதான் சில வாரங்கள் முன்புவரைக்கும் புடினின் ஒரே வாதமாக இருந்தது.
ஆனால், கடந்த இருநாள்களாக அவர் பேசியதை வைத்துப் பார்க்கையில், ``நிச்சயம் இதுமட்டுமே உக்ரைன் பிரச்னைக்கு காரணமில்லை” என்கின்றனர் நிபுணர்கள். வேறு என்னதான் திட்டமிடுகிறார் புடின்?
சோவியத் யூனியன் வீழ்ந்ததையும், அதன் வெற்றிடத்தை மேலை நாடுகள் NATO மூலம் நிரப்பியதையும் புடின் விரும்பவில்லை. முந்தைய சோவியத் உறுப்பு நாடுகளான எஸ்டோனியா, லத்துவியா, லித்துவேனியா ஆகியவை ஏற்கெனவே NATO அமைப்பில் சேர்ந்ததையும், உக்ரைன் இப்போது சேர முயற்சி செய்வதையும், ரஷ்யாவின் வல்லரசு பிம்பத்திற்கு அச்சுறுத்தலாகக் கருதுகிறார் புடின்.
அதனால், உக்ரைனுக்கும் மேலைநாடுகளுக்கும் கொஞ்சம் பயம்காட்டி, மீண்டும் உலகில் சோவியத் யூனியன் கால ஆதிக்கத்தை நிலைநாட்டுவதை இலக்காகக் கொண்டிருக்கிறார் புடின். இந்த `ஆண்ட பெருமைக்கு’ முதல் பலியாகியிருக்கிறது உக்ரைன்.
போர் வரை பிரச்னை சென்றவிட்டதால், உக்ரைன் NATO-வில் சேர்வதற்கான வாய்ப்பு இப்போதைக்கு இல்லை. எனவே அடுத்த இலக்குகளாக புடின் கீழ்க்கண்ட 3 திட்டங்களுள் ஒன்றை வைத்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
1. உக்ரைனில் தற்போது நடக்கும் ஜெலன்ஸ்கி தலைமையிலான ஆட்சியை, உடனே கவிழ்த்துவிட்டு, அங்கு ரஷ்யாவுக்கு கட்டுப்பட்ட பொம்மை ஆட்சியை நிறுவுவது.
2. மொத்தமாக, ராணுவத்தை சரணடைய வைத்து, பின் உக்ரைனை ரஷ்யாவுடன் இணைத்துக் கொள்வது.
3. இதன்பிறகு உக்ரைனை மையமாக வைத்தே ரஷ்யாவின் எல்லை நாடுகளிலும் ஆதிக்கத்தை அதிகப்படுத்துவது.
`இவற்றில் எது நடந்தாலும், இங்கே அமைதி தொலைவது உறுதி!’ என அஞ்சுகின்றன ஐரோப்பிய நாடுகள்.
என்ன செய்யப்போகிறது NATO?
உக்ரைன் எல்லைகளில் ரஷ்யா படைகளைக் குவிக்கும்போதே, பதிலுக்கு NATO-வும் ருமேனியா, போலந்து, ஹங்கேரி ஆகிய ரஷ்யாவின் நாடுகளுக்கு தன் படைகளை அனுப்பியது. கூடுதலாக அமெரிக்காவும் ஆயுதங்களையும், படைகளையும் அனுப்பிவைத்து ரஷ்யாவை எச்சரித்தது.
ஒருவேளை உக்ரைனை ரஷ்யா தாக்கினால், அந்நாட்டிற்கு ஆதரவாக இந்தப் படைகள் களமிறங்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ``அப்படி எந்த திட்டமும் இல்லை!” எனச் சொல்லி நழுவியிருக்கிறது NATO.
``உக்ரைன், NATO-வின் உறுப்பு நாடு இல்லை என்பதால் நாங்கள் எங்கள் படைகளை அனுப்பப்போவதில்லை. அதேசமயம், போலந்து, ஹங்கேரி உள்ளிட்ட எங்களின் உறுப்பு நாடுகளுக்கு ரஷ்யாவால் அச்சுறுத்தல் என்றால், நாங்கள் திருப்பியடிக்க தயங்கமாட்டோம்” என முஷ்டி முறுக்கியிருக்கிறார் NATO-வின் செயலாளர் ஸ்டோல்ட்டன்பெர்க்.
NATO-வை வைத்து தொடங்கப்பட்ட இந்தப் பிரச்னையில், தற்போது NATO-வே ஓரமாக நின்று வேடிக்கை பார்ப்பது, ரஷ்யாவுக்கு சாதகமாக மாறியிருக்கிறது.
ரஷ்யாவை பாதிக்குமா பொருளாதார தடைகள்?
நேரடியாக ரஷ்யாவுடன் ஆயுதப்போர் நடத்தாத நிலையில், மேலை நாடுகளிடம் ரஷ்யாவை அச்சுறுத்த இருக்கும் ஒரே ஆப்ஷன் பொருளாதாரத் தடைகள்தான். பனிப்போர் காலத்திலிருந்தே, பல பொருளாதாரத் தடைகளை சந்தித்து வந்துள்ளதால், ரஷ்யாவுக்கும் பொருளாதார தடைகள் புதிதல்ல.
ஆனால், இந்த உக்ரைன் விவகாரத்தில் ஒட்டுமொத்தமாக சர்வதேச அளவில் நிறைய பொருளாதார தடைகள் விதிக்கப்படும்போது அது நிச்சயம் அந்நாட்டின் பொருளாதாரத்தை ஆட்டம் காணச் செய்யும். அந்நாட்டு மக்களை பெரும் பொருளாதார சிக்கலுக்கு உள்ளாக்கும்.
அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகிய மூன்றும் ஏற்கெனவே இரு தினங்களுக்கு முன், ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்திருந்தன. தற்போது ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்துவது, அந்நாட்டை சர்வதேச வங்கி சேவை கட்டமைப்பான SWIFT-லிருந்து வெளியேற்றுவது, ரஷ்யாவுக்கு முக்கியமான எலெக்ட்ரிக் பொருள்கள், வர்த்தகப் பொருள்கள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்வதை நிறுத்துவது என இன்னும் கடுமையான விஷயங்களை ஆலோசித்து வருகின்றன.
மேலைநாடுகள் எண்ணியது போல, இதுவரையிலான பொருளாதார தடை அச்சுறுத்தல்கள் புடினின் முடிவை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. அவர் அனைத்திற்கும் தயாராகவே இருக்கிறார். இந்நிலையில், இதுபோன்ற கூடுதல் பொருளாதாரத் தடைகள் எந்தமாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது முக்கியமான கேள்வி.
காரணம், இவற்றால் பாதிக்கப்படுவது ரஷ்யா மட்டுமல்ல; மொத்த உலகமும்தான். உதாரணமாக, ரஷ்யாவை SWIFT-லிருந்து வெளியேற்றினால், அந்நாட்டுடன் அதிகமான பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் ஐரோப்பிய நாடான ஜெர்மனியும் அதிகம் பாதிக்கப்படும்.
SWIFT மூலம் மட்டுமே ரஷ்யா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஏற்றுமதிக்கு ஐரோப்பிய நாடுகளிடமிருந்து பணம் பெற்றுவருகிறது. இது தடைப்பட்டால், பிறகு ஐரோப்பாவிற்கு அங்கிருந்து எண்ணெயும் வராது; எரிவாயுவும் வராது!
ஐரோப்பாவின் 26% கச்சா எண்ணெய் மற்றும் 38% இயற்கை எரிவாயு ரஷ்யாவிடமிருந்துதான் வருகிறது. இதில் சிறிய பிரச்னை ஏற்பட்டாலும், ஐரோப்பிய சந்தைகளில் கடும் விலை உயர்வு ஏற்படும். இது பிறநாடுகளிலும் எதிரொலிக்கும்.
ரஷ்யாவிற்கு வர்த்தகப் பொருள்களின் ஏற்றுமதியை நிறுத்துவது, பிற நாடுகளின் தொழில்துறையையும் பாதிக்கும்.
இப்படி, கடும் பொருளாதாரத் தடைகள் ரஷ்யாவிற்கு மட்டுமன்றி, பிற நாடுகளையும் பாதிக்கும் என்பதால், மேலை நாடுகளின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனிக்கிறது வணிக உலகம்.
தவறு செய்கிறதா இந்தியா?
உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பெரும்பான்மை உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இந்தியாவோ இன்னமும் நடுநிலைதான் வகிக்கிறது. ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலிலும் ரஷ்யாவை நேரடியாக கண்டிக்காமல், ``உக்ரைனில் அமைதி நிலவவேண்டும் என்பதே எங்கள் விருப்பம்” என சுருக்கமாக முடித்துக்கொண்டது. ஏன் இப்படி செய்கிறது? இந்தியா செய்வது சரியா?
அமெரிக்கா, ரஷ்யா என இரண்டு நாடுகளும் இந்தியாவுக்கு ஏன் முக்கியம், சீனாவுடனான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இந்த விவகாரத்தை இந்தியா எப்படி கையாள நினைக்கும் என்பது குறித்து ஏற்கெனவே TSL-ல் பார்த்திருந்தோம்.
தற்போது அத்துடன் கூடுதலாக சில கேள்விகள் எழுந்திருக்கின்றன. இந்தியாவுடன் QUAD கூட்டணியில் இருக்கும் ஆஸ்திரேலியா, ஜப்பானுக்கும் சீன அச்சுறுத்தல் இருக்கிறது. ஆனால், அவை ரஷ்யாவைக் கண்டித்துவிட்டன. ஆனால், இந்தியா மட்டும் சீனாவை காரணம் காட்டி ரஷ்யாவை கண்டிக்காமல் இருக்கலாமா எனவும் ஒரு கேள்வி எழுகிறது.
இதற்கு பதிலாக மேலைநாடுகளின் இரட்டை நிலைப்பாட்டையும், ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவையும் சுட்டிக்காட்டுகின்றனர் நிபுணர்கள். உதாரணமாக, NATO கூட்டணியில் இல்லாத உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தால் மேலை நாடுகள், அதன் இறையாண்மைக்காகவும், பாதுகாப்புக்காகவும் குரல்கொடுக்கின்றன. ஆனால், இந்தியப் பகுதிகளை சீனா ஆக்கிரமித்திருப்பது குறித்து கேள்வி எழும்போது இவை இதுபோன்ற தீவிர நிலைப்பாட்டை எடுப்பதில்லை.
எந்தவொரு நாட்டின் பாதுகாப்பும் முக்கியம் என்றால், இஸ்ரேலானது சிரியாவின் கோலன் குன்றுகளை ஆக்கிரமித்தபோது ஏன் மேலைநாடுகள் அமைதிகாத்தன என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.
இப்படி, அந்தந்த நாடுகள் தங்களின் நலனுக்கேற்ப வெளியுறவுக் கொள்கைகளைப் பின்பற்றும்போது, இந்தியாவும் அப்படித்தான் நடந்துகொள்ள வேண்டியதாகிறது. மேலும், ஏற்கெனவே பார்த்ததுபோல பல தசாப்தங்களாக இந்தியாவின் தோழனாக விளங்கும் ரஷ்யாவை, இப்போது சர்வதேச அரங்கில் விட்டுக்கொடுக்க இந்தியா விரும்பவில்லை.
அதனால்தான், நேற்று புடினிடம் தொலைபேசியில் பேசிய இந்திய பிரதமர் மோடியும், இந்தப் பிரச்னைக்கு அமைதி வழியில் தீர்வுகாண வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம் என மட்டும் கேட்டுக்கொண்டார். இத்தனைக்கும் நேற்று காலைதான் இந்தியாவுக்கு உக்ரைன் தூதர், இந்தியாவின் நிலைப்பாடு குறித்து கடும் அதிருப்தி தெரிவித்திருந்தார்.
எனவே, சர்வதேச அரங்கிலிருந்து வரும் அழுத்தங்களைவிடவும், உள்நாட்டு அரசியல் நிலவரங்களே இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளைத் தீர்மானிக்கின்றன. அது, இந்த விவகாரத்திலும் தொடர்கிறது.
#UkrainRussiaUpdates
1986-ம் ஆண்டு நடந்த செர்னோபில் அணு உலை விபத்தை யாரும் மறந்திருக்க முடியாது. நேற்று உக்ரைனில் தாக்குதல் நடத்திய ரஷ்யா, இந்த அணுமின் நிலையத்தை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருக்கிறது. அந்தப் பகுதியில் ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தினால், செயலிழந்த அணு உலையிலிருந்து மீண்டும் கதிரியக்கம் வெளிப்படலாம் என அஞ்சப்பட்ட நிலையில்தான், நேற்று அணு உலை ரஷ்யாவின் வசம் சென்றிருக்கிறது. இதுவரைக்கும் அங்கு ஏதும் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை.
உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக, நேற்று இந்தியப் பங்குச்சந்தைகள் பெரும் சரிவை சந்தித்தன.
நேற்றைய வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ், 2702.15 (-4.72%) புள்ளிகளும், நிஃப்டி, 815.30 (-4.78%) புள்ளிகளும் சரிவை சந்தித்திருந்தன.
இன்னொருபுறம் தங்கத்தின் விலை உயர்ந்திருந்தது. சென்னையில் 24 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.108 உயர்ந்து ரூ.4,827-க்கு விற்பனையானது.
ஒருபுறம் புடின் போரின்மீது ஆர்வமாக இருந்தாலும், ரஷ்யாவில் அதற்கு மக்களிடையே எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது.
மாஸ்கோ மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க்கில் நேற்று போருக்கு எதிராக நூற்றுக்கணக்கானோர் பேரணி நடத்தி, தங்கள் எதிர்ப்பை பதிவுசெய்திருக்கின்றனர். இதற்காக சுமார் 1,400 பேரை கைது செய்திருக்கிறது ரஷ்ய அரசு.
இப்படி சீரியஸான போராட்டங்கள் ஒருபக்கம் சென்றுகொண்டிருக்க, இன்னொருபக்கம் ட்விட்டரில் ரஷ்யாவை எதிர்த்து வித்தியாசமாக `சண்டை செய்து’ வருகிறது உக்ரைன். அந்நாட்டின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ரஷ்யாவைக் கிண்டல் செய்து பதிவிடும் மீம்கள்தான் அவை. சாம்பிளுக்கு இரண்டு இங்கே…
மாணவர்கள், தொழிலாளர்கள் என உக்ரைனில் சுமார் 20,000 இந்தியர்கள் வசித்துவருகின்றனர். நேற்று ரஷ்யா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து திடீரென வான்வழிப் பாதைகளில் விமானங்கள் பறக்க தடைவிதித்தது உக்ரைன். இதையடுத்து இந்தியர்களை உடனடியாக விமானம் மூலம் மீட்கமுடியாத நிலை ஏற்பட்டது. நேற்று இரவு இதுகுறித்து விளக்கமளித்த அதிகாரிகள், ஏற்கெனவே 4,000 இந்தியர்கள் நாடு திரும்பிவிட்டதாகவும், மீதம் உள்ளவர்களையும் அண்டை நாடுகள் வழியாக சாலைமூலம் அழைத்துவர திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். உக்ரைனில் தங்கியிருக்கும் சுமார் 5,000 மாணவர்கள், தொழிலாளர்களை மீட்கக்கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் நேற்று வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அவ்வளவுதான்!
திரும்ப நாளைக்கு காலைல 7 மணிக்கு சந்திப்போம்!
Have a Nice day ☕️
Today Edition பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க! ❤️