💰 மத்திய பட்ஜெட் உங்களை எப்படி பாதிக்கும்?
Today Edition Highlights: பட்ஜெட்டின் + / - அம்சங்கள் | புதிய அறிவிப்புகள் | பட்ஜெட்டால் பலன்பெறும் / பாதிக்கப்படும் துறைகள் | பட்ஜெட் மீதான விமர்சனங்கள் | Reading Time: ⏱ 5 Mins
ஹாய், ஹலோ… வணக்கம் 👋
TSL-ன் பட்ஜெட் ஸ்பெஷல் எடிஷன் இது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் நேற்றைய பட்ஜெட் உரையில் இடம்பெற்றிருந்த மொத்த வார்த்தைகள் 9,701. அவற்றிலிருந்து மிக முக்கியமான விஷயங்களை மட்டும் இன்றைய TSL-ல் Decode செய்வோம் வாங்க!
என்ன ஸ்பெஷல் இந்த பட்ஜெட்டில்?
அடுத்த வாக்கியத்தில் இருக்கும் விஷயத்தை நீங்கள் படிப்பது, கேட்பது 1498-வது தடவையாகக்கூட இருக்கலாம் 😉.
ஆம், 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களின் இடையே தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் இது; எனவே நிச்சயம் `ஐஸ் வைக்கும்’ அறிவிப்புகள் இடம்பெறலாம் என்பதுதான் பலரின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், ஆச்சர்யம்.
அப்படிச் செய்யவில்லை! குறிப்பாக தேர்தல் நடைபெறவிருக்கும் (உ.பி, பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட்) மாநிலங்கள் சார்ந்து பெரிய, கவர்ச்சியான அறிவிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை.
விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை, நதிநீர் இணைப்புத்திட்டங்களுக்கான அறிவிப்புகள், வடகிழக்கு மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு என அந்த மாநிலங்கள் தொடர்பான சாதாரண அம்சங்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தன. இந்த மாற்றத்தை வரவேற்றுள்ளனர் நிபுணர்கள்.
அதேபோல, இந்த விஷயத்தையும் நீங்கள் பலமுறை ஏற்கெனவே படித்திருப்பீர்கள் / கேட்டிருப்பீர்கள்.
`கொரோனா இரண்டாவது அலை பாதிப்புக்குப் பிறகு தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் இது!’
இதற்கு விடையாக, `அம்ரித் கால்’ என்ற விஷயத்தை ஹைலைட் செய்தார் நிர்மலா சீதாராமன். அப்படியென்றால்?
அதாவது, இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் அடைந்ததை `அம்ரித் மஹோத்சவ்’ என தற்போது கொண்டாடி வருகிறோம் அல்லவா? அதேபோல இந்த 75-லிருந்து 100 ஆண்டுகள் வரையிலான காலத்தை, கடந்தாண்டு `அம்ரித் கால்’ எனக் குறிப்பிட்டார் பிரதமர் மோடி. இந்த 25 ஆண்டுகளில் இந்தியா அனைத்து துறைகளிலும் முன்னேறி, சுயசார்புத் தன்மையை அடையவேண்டுமென்பதுதான் இதன் இலக்கு.
இந்த 25 ஆண்டுகால இலக்குக்கு ஏற்பவே, இந்தாண்டு பட்ஜெட் இருக்கும் எனவும், எதிர்கால வளர்ச்சியை மனதில் வைத்தே அரசின் கொள்கைகள் இருக்கும் என்பதையும் குறிப்பிட்டார்.
இதைவிட முக்கியமான பாசிட்டிவ் அம்சம், உள்கட்டமைப்பு திட்டங்களுக்குத் தேவைப்படும் மூலதனச் செலவினங்களை (Capital Expenditure / Capex) 5.54 கோடி ரூபாயிலிருந்து, 7.5 லட்சம் கோடி ரூபாயாக (35.4%) உயர்த்தியிருக்கிறார். இது ஏன் முக்கியம்?
ஒரு நாட்டின் பொருளாதாரம் மந்தமான நிலையிலிருந்து மீண்டெழ வேண்டுமெனில், அரசு இந்த Capex-க்கு செலவிடும் தொகை உயரவேண்டும்.
உதாரணம்: புதிய நெடுஞ்சாலைத் திட்டங்கள், புதிய ரயில்வே திட்டங்கள், நாட்டின் பிற உள்கட்டமைப்பு திட்டங்கள் போன்றவை. இதனால், நாட்டில் வேலைவாய்ப்பு பெருகும்; வருங்காலத்தில் அரசுக்கும் இந்தக் கட்டமைப்புகளிலிருந்து வருமானம் வரும்;
கட்டுமானம், தகவல் தொழில்நுட்பம், மின்சாரம் எனப் பல்வேறு துறைகளும் இதுசார்ந்து வளரும். இறுதியாக பொருளாதாரமும் உயரும். இதுதான் லாஜிக். அரசைப் போலவே தனியார் நிறுவனங்களும் தங்கள் Capex-ஐ அதிகப்படுத்தினால் அது நாட்டுக்கு இன்னும் நல்லது.
அந்த வகையில்தான், வரும் 2022-23-ம் நிதியாண்டுக்கான Capex-ஐ 35% அதிகம் உயர்த்தியிருக்கிறது அரசு. அதிலும் கிராமங்களின் டிஜிட்டல் கனெக்டிவிட்டியை மேம்படுத்தும் திட்டங்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் தெரிவித்திருக்கிறது. இது இந்த பட்ஜெட்டின் இரண்டாவது பாசிட்டிவ் அம்சம்.
அடுத்து, பட்ஜெட்டின் புதிய அறிவிப்புகளைப் பார்த்துவிட்டு, நெகட்டிவ் அம்சங்களுக்குள் நுழைவோம்.
டாப் 5 அறிவிப்புகள்
1. கிரிப்டோகரன்சிகளுக்கு வரி:
பிட்காயின், எதீரியம் உள்ளிட்ட கிரிப்டோகரன்சிகளிலிருந்து கிடைக்கும் லாபத்திற்கு இனி வரும் நிதியாண்டு முதல் 30% வரி விதிக்கப்படும். மேலும், ஒவ்வொருமுறை கிரிப்டோவில் முதலீடு செய்யும்போதும், பரிவர்த்தனை செய்யும்போதும், அதை அரசாங்கம் அறிந்துகொள்ளும் வகையில் 1% TDS பிடித்தம் செய்யப்படும். அப்படியென்றால் கிரிப்டோகரன்சிகளை இந்தியா அங்கீகரித்துவிட்டதா?
`இல்லை’ என்கிறார் நிர்மலா சீதாராமன். கிரிப்டோகரன்சிகளை எப்படி நெறிமுறைப்படுத்தலாம் என்பதுகுறித்து, சம்பந்தபட்ட துறையினரும் நிபுணர்களும் ஒருபக்கம் தனியாக ஆலோசனை செய்துகொண்டு வருகின்றனர். ``அது முடிந்தபின்புதான் கிரிப்டோ குறித்த நிலைப்பாட்டை அறிவிக்கமுடியும்” என்கிறார் அவர்.
எனவே, கிரிப்டோவில் யார் யார் முதலீடு செய்கிறார்கள், எவ்வளவு பணம் புழங்குகிறது என்பதை அறியவும், பிற முதலீடுகளைப் போலவே அதன் லாபத்தையும் வருமானமாகக் கணக்கிட்டு வரி விதிப்பதும்தான் இந்த நடவடிக்கையின் நோக்கம்.
2. ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் கரன்சி:
தற்போது புழக்கத்திலிருந்து கிரிப்டோகரன்சிகளுக்கு மாற்றாக, பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் செயல்படும் புதிய கரன்சி (Central bank digital currency - CBDC) ஒன்று ரிசர்வ் வங்கியால் வரும் நிதியாண்டில் அறிமுகப்படுத்தப்படும்.
இதற்கான பணிகளை ஏற்கெனவே ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வரும் நிலையில், விரைவில் இதற்கான விதிமுறைகளையும் அறிவிக்கவிருக்கிறது. அதன்பின்பு மக்களிடையே தற்போதைய கரன்சிக்கு இணையாக இது புழக்கத்தில் விடப்படும்.
கிரிப்டோகரன்சிகள் போல இதுவும் பிளாக்செயினில் இயங்கினாலும், இது ரிசர்வ் வங்கியின் அங்கீகாரத்தோடு வருவதால், இது அரசின் இன்னொரு கரன்சியாகவே கருதப்படும். இதற்கு எந்த வரியும் கிடையாது.
3. ட்ரோன்களுக்கு முக்கியத்துவம்
விவசாயம், பாதுகாப்பு, ஆராய்ச்சி எனப் பல துறைகளில் பயன்பட்டுக்கொண்டிருக்கும் ட்ரோன்களுக்கு (Drones) இந்த பட்ஜெட்டில் முதல்முறையாக முக்கியத்துவம் அளித்திருக்கிறது அரசு.
இதன்படி ட்ரோன் சேவைகளை வழங்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை அரசு ஊக்கப்படுத்தவிருக்கிறது. இதற்காக `ட்ரோன் சக்தி’ என்ற திட்டத்தையும் செயல்படுத்தவிருக்கிறது.
எப்படி மென்பொருள் நிறுவனங்கள் மென்பொருள்களை Software as a Service (Saas) ஆக வழங்குகின்றனவோ, அதேபோல அரசு மற்றும் தனியாருக்கு ட்ரோன் சேவைகளை Drone as a Service (DrAAS) ஆக, ட்ரோன் ஸ்டார்ட் அப்கள் வழங்கும் வகையில் அவர்களுக்கு உதவிகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
4. ஒரே நாடு; ஒரே பதிவு
தொழில்தொடங்குவதை ஊக்குவிக்கும் வகையில், மாநில அரசுகளுடன் இணைந்து Ease of Doing Business 2.0 திட்டம் கொண்டுவரப்படும்.
இதன் ஒருபகுதியாக நாட்டில் எந்தப் பகுதியிலிருந்து வேண்டுமானாலும் நிலங்களை நிறுவனங்கள் பதிவுசெய்துகொள்ளும் வகையில், `One Nation, One Registration’ திட்டம் கொண்டுவரப்படும்.
5. எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு ஊக்குவிப்பு
எலெக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரி தீர்ந்துவிட்டால், அதற்கு பல மணி நேரங்கள் சார்ஜ் போட்டபிறகே மீண்டும் பயன்படுத்த முடியும். இந்த சிக்கலைத் தீர்க்க வந்ததுதான் Battery Swapping நடைமுறை.
இதன்படி, சார்ஜிங் ஸ்டேஷனில் சார்ஜ் தீர்ந்த பேட்டரியைக் கொடுத்துவிட்டு, புதிய பேட்டரியை மாட்டிக்கொண்டு நிற்காமல் பயணத்தை தொடரலாம். பயன்படுத்திய மின்சாரத்திற்கு மட்டும், பெட்ரோல் போலவே கட்டணம் செலுத்தவேண்டும்.
ஆனால், இது இந்த நடைமுறை இன்னும் பரவலாகவில்லை. இந்நிலையில், விரைவில் இதற்கான விதிமுறைகளை வகுத்து, எலெக்ட்ரிக் நிறுவனங்கள் மற்றும் பேட்டரி தொழில்நுட்ப நிறுவனங்கள் இரண்டும் இணைந்து செயல்பட அரசு உதவி செய்யும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
கூடுதலாக கவனிக்க வேண்டிய சில அறிவிப்புகள்
மாநிலங்கள் உள்கட்டமைப்பு திட்டங்களில் செலவிட ஒரு லட்சம் கோடி ரூபாய், வட்டியில்லா கடனாக (50 ஆண்டுகளுக்கு வட்டியில்லை) வழங்கப்படும்.
LIC-க்கான பங்கு வெளியீடு விரைவில் தொடங்கும். இதுபோக வரும் நிதியாண்டில் அரசு தன் முதலீடுகளை விற்பதன் மூலம் 65,000 கோடி ரூபாய் வரை திரட்ட திட்டமிட்டுள்ளது.
2022-23 நிதியாண்டுக்குள் டெலிகாம் நிறுவனங்கள் 5G சேவையை வழங்கிடும் வகையில், இந்த ஆண்டே 5G அலைக்கற்றை ஏலம் நடத்தப்படும்.
நாட்டின் சூரிய சக்தி மின்சார உற்பத்தியில் புதிதாக 2,80,000 MW மின்சாரம் தயாரிப்பதற்கான உள்கட்டமைப்புகள் உருவாக்கப்படும். இதற்காக Production-linked incentive திட்டத்தின்கீழ் 19,500 கோடி ரூபாய் ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்கள் டிவி மூலம் பாடங்கள் கற்க மத்திய அரசால் இ-வித்யா திட்டத்தின்கீழ் 12 சேனல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதை அனைத்து மாநில மொழிகளிலும் வழங்கும் நோக்கில், சேனல்களின் எண்ணிக்கை 200 ஆக உயர்த்தப்படவுள்ளது.
மக்கள் உரிய மனநல ஆலோசனைகள் பெற உதவியாக நாடு முழுக்க 23 தொலைபேசி ஆலோசனை மையங்கள் அமைக்கப்படவிருக்கின்றன.
தமன்கங்கா - பிஞ்சால், பர் - தபி - நர்மதா, கோதாவரி - கிருஷ்ணா, கிருஷ்ணா - பெண்ணாறு, பெண்ணாறு - காவிரி ஆகிய 5 நதிநீர் இணைப்பு திட்டங்களுக்கு இறுதி திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. உரிய மாநில அரசுகள் தங்களுக்குள் பேசி ஒப்புதல் தெரிவிக்கும்பட்சத்தில், மத்திய அரசு இந்த திட்டங்களுக்கு உதவி செய்யும்.
நாட்டிலுள்ள 1.5 லட்சம் தபால் நிலையங்களும் வரும் நிதியாண்டில், வங்கி சேவை கட்டமைப்புகளுடன் தொழில்நுட்ப ரீதியாக இணைக்கப்படவிருக்கின்றன. இதன்மூலம், தற்போது தபால் நிலையங்களில் கணக்கு வைத்திருக்கும் சுமார் 35 லட்சம் பேர், இனி அந்தக் கணக்கிலிருந்து வங்கிக்கணக்குகளுக்கு பணத்தை மாற்றுதல், வங்கிகளின் ஏ.டி.எம் சேவைகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றைச் செய்யமுடியும்.
பட்ஜெட்டால் பலன் பெறும் நிறுவனங்கள் / துறைகள்
எலெக்ட்ரிக் பேட்டரி தயாரிப்பு நிறுவனங்கள் | போக்குவரத்து துறை | சிமென்ட் & கட்டுமானத்துறை | உலோக நிறுவனங்கள் | சூரிய மின்சக்தி நிறுவனங்கள் | டெலிகாம் நிறுவனங்கள் | டிஜிட்டல் ஃபைனான்ஸ் நிறுவனங்கள் | பாதுகாப்புத் துறை மற்றும் அதுசார்ந்த நிறுவனங்கள்.
வரும் நிதியாண்டில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள துறைகள்
வங்கித்துறை | கிரிப்டோகரன்சி நிறுவனங்கள் | நிலக்கரி நிறுவனங்கள் | அனல்மின் நிலையங்கள் | ஆட்டோமொபைல் நிறுவனங்கள் | இரும்பு உற்பத்தி நிறுவனங்கள்.
பட்ஜெட்டிற்குப் பிறகு விலை உயரும் முக்கியமான பொருள்கள்
குடைகள் | எத்தனால் கலக்காத பெட்ரோல், டீசல் | ஸ்பீக்கர்கள் | ஹெட்போன் & இயர்போன்கள் | ஸ்மார்ட் மீட்டர்கள் | சோலார் செல்கள், கருவிகள் | எக்ஸ்-ரே-மெஷின்கள் | சில எலெக்ட்ரானிக் பொம்மைகள்
விலை குறையும் முக்கியமான பொருள்கள்
துணிகள் | வைரம் மற்றும் ரத்தினக் கற்கள் | கேமரா லென்ஸ் | மொபைல் போன்கள் | மொபைல் போன் சார்ஜர்கள் | பெருங்காயம் | கோகோ விதைகள் | பெட்ரோ கெமிக்கல் பொருள்கள்
பட்ஜெட்டின் நெகட்டிவ் அம்சங்கள்
விலைவாசி உயர்வு, வேலையிழப்பு, கொரோனாவினால் கரைந்த சேமிப்பு எனப் பல்வேறு இன்னல்களை சந்தித்துவந்த சம்பள தாரர்களுக்கும், நடுத்தரக் குடும்பத்தினருக்கும் பயனளிக்கும் வகையில், வருமான வரி வரம்பு இந்த ஆண்டு உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
ஏற்கெனவே வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்கள், ஏதேனும் வருமானத்தைக் குறிப்பிடாமல் விட்டிருந்தால், அதைத் திருத்தி அடுத்த 2 ஆண்டுகளுக்குள் மீண்டும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இப்படி நடுத்தரக் குடும்பத்தினருக்கு சலுகைகள் எதுவும் இல்லாதது ஏமாற்றமாக அமைந்தது.
மேலும், ஏன் இந்தமுறை சம்பள்தாரர்களுக்கு சலுகைகள் தரப்படவில்லை எனக்கேட்டதற்கு, ``நாங்கள் 2 ஆண்டுகளாக ஒரு ரூபாய் கூட வரியை உயர்த்தவில்லையே?” எனப் பதிலளித்திருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
இதேபோல கிராமப்புற ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நிதியும் இந்த ஆண்டு செலவிடப்பட்டதைவிட (₹98,000 கோடி), 25% குறைவாகவே (₹73,000 கோடி) அடுத்தாண்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தேவை அதிகரிப்பின் அதற்கேற்ப கூடுதலாக நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில், கடந்தாண்டும் ₹73,000 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. பின்னர் தேவை அதிகமானதும்தான் ₹98,000 கோடி செலவிடப்பட்டுள்ளது. எனவே இந்தாண்டும் நிதிக்குறைப்பு கிராமப்புற மக்களை பாதிக்காது என நம்பலாம். இருப்பினும் இந்த ஊரக வேலைவாய்ப்பு திட்டம், நகர்ப்புறத்திற்கும் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அது நடக்கவில்லை.
பட்ஜெட் பற்றி எதிர்க்கட்சிகள் என்ன சொல்கின்றனர்?
``இதுவரை நிதியமைச்சர்கள் வாசித்ததிலேயே அதிக முதலாளித்துவமான பட்ஜெட் இதுதான். தற்போதைய பிரச்னைகள் எதற்குமே கவனம் தேவைப்படுவதில்லை என்பதைப் போல அடுத்த 25 ஆண்டுகளுக்கான திட்டங்களை வகுக்கிறார்கள். இன்று உதவி தேவைப்படும் மக்களை 25 ஆண்டுகள் காத்திருக்கச் சொல்கிறார்கள்; இது ஏழைகளை அவமதிப்பதே அன்றி வேறில்லை” என விமர்சித்திருக்கிறார் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்.
இதேபோல தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் பட்ஜெட்டை, ``மக்கள் நலனை மறந்த நிதிநிலை அறிக்கை” என விமர்சித்திருக்கிறார்.
தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், ``மூலதனச் செலவினங்களை அதிகமாக ஒதுக்கியிருப்பதால் நாட்டில் வேலைவாய்ப்புகள் பெருகும், வருவாய் கூடும் என்றெல்லாம் சொல்லமுடியாது. ஏனெனில் அந்த தொகையில் பெரும்பகுதியை இவர்கள், ஏதேனும் ஒரு அரசு நிறுவனத்தின் கடனை அடைக்கத்தான் செலவிடுகிறார்கள். மேலும், `ஒரே நாடு; ஒரே பதிவு’ என்ற திட்டத்தையும் இந்த மத்திய அரசால் நிச்சயம் செயல்படுத்த முடியாது; பத்திரப்பதிவு விவகாரங்களில் அவ்வளவு சிக்கல்கள் இருக்கின்றன. அதனை மத்திய அரசு சரிசெய்யவே முடியாது.” என விமர்சித்திருக்கிறார்.
அவ்வளவுதான்!
இன்றைய TSL-ல் பார்த்தது பட்ஜெட்டின் முதல் நாள் அலசல்தான். வரும் நாள்களில் பட்ஜெட் தொடர்பான கூடுதல் விவரங்கள், கோணங்களையும் காண்போம்.
The Subject Line-னோட இன்னைக்கு அப்டேட்ஸ் உங்களுக்குப் பிடிச்சிருக்கும்னு நம்புறேன். பிடிச்சிருந்தா கீழ இருக்க பட்டன் மூலமா உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க… இன்னும் ஏதாச்சும் இந்த TSL-ல் மாத்தணும்னா எனக்கு மெசேஜ் பண்ணுங்க! உங்க கருத்துகள் எங்களுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். 🤞
திரும்ப நாளைக்கு காலைல 7 மணிக்கு சந்திப்போம்!
Have a Nice day ☕️
The Subject Line-ஐ சமூக வலைதளங்களில் பின்தொடர:
Telegram | Twitter | Facebook | Insta
Today Edition பிடிச்சிருந்தா லைக் பண்ண மறக்காதீங்க! ❤️