🛫 விமானங்கள் 5G-க்கு பயப்படுவது ஏன்?
Today Edition Highlights: ஓய்வை அறிவித்த சானியா மிர்சா | பா.ஜ.க-வில் இணைந்த பிபின் ராவத் தம்பி | இந்திய சிறுவனைக் கடத்தியதா சீனா? | Reading Time: ⏱ 5 Mins
ஹாய், ஹலோ… வணக்கம் 👋
இன்றைய தினத்தின் டாப் அப்டேட்ஸ் இதோ…
ஏர் இந்தியா, எமிரேட்ஸ், லுஃப்தான்ஸா, ஜப்பான் ஏர்லைன்ஸ், கொரியன் ஏர்லைன்ஸ் எனப் பல சர்வதேச விமான நிறுவனங்கள் நேற்று அமெரிக்காவிற்கு செல்லும் அல்லது அமெரிக்காவுக்குள் இயங்கும் தங்கள் விமான சேவைகளில் பலவற்றை (சரக்கு விமானங்கள் உள்பட) ரத்து செய்திருக்கின்றன. சில விமானங்களின் நேரத்தை திடீரென மாற்றியிருக்கின்றன.
ஏர் இந்தியா மட்டும் மொத்தம் 8 விமானங்களை நேற்றும் இன்றும் ரத்து செய்திருக்கிறது. ஏன் நேற்று ஒரே நாளில் இவ்வளவு குழப்பம்? காரணம், அமெரிக்காவில் நேற்று செயல்பாட்டுக்கு வந்த 5G சேவை.
இதற்கும் அதற்கும் என்ன தொடர்பு? 🤔
இந்தியாவில் ஏர்டெல், ஜியோ எப்படியோ, அதேபோல அமெரிக்காவில் டெலிகாம் துறையில் பெரிய தலைக்கட்டுகள், AT&T மற்றும் Verizon Communications.
அந்நாட்டில் 5G சேவையைத் தொடங்குவதற்கான பணிகளைக் கடந்த சில ஆண்டுகளாக செய்துவந்த இந்நிறுவனங்கள், இறுதியாக எல்லா உள்கட்டமைப்பு பணிகளையும் முடித்து, நேற்றைக்கு அவற்றை `On’ செய்வதற்கு தயாராக இருந்தன. எப்படி இப்போது 4G இருக்கிறதோ, அதேபோல 5G-யை அமெரிக்க வாடிக்கையாளர்கள் பயன்படுத்துவதற்கான முதல் படி இது.
ஆனால், ``டெலிகாம் நிறுவனங்கள் 5G சேவையை ஆன் செய்தால், அது விமான போக்குவரத்துக்கே ஆபத்தாகப் போய் முடியும்” எனப் போர்க்கொடி உயர்த்தின விமான நிறுவனங்கள். இதையடுத்து, ஆபத்து இருப்பதாகக் கூறி, பல விமானங்களை ரத்தும் செய்துவிட்டன; இதுதான் நேற்றைய குழப்பத்திற்கு காரணம்.
ஏன் 5G-யைப் பார்த்து பயப்படுகின்றன விமான நிறுவனங்கள்? 🛩
காரணம், C band.
5G சேவையை வழங்க அமெரிக்க டெலிகாம் நிறுவனங்கள், பல லட்சம் கோடிகள் கொட்டி C band ரேடியோ அலைக்கற்றைகளை ஏலத்தில் எடுத்திருக்கின்றன. இது இப்போது விமான நிறுவனங்கள் மட்டுமே பயன்படுத்திக்கொண்டிருக்கும் ஒரு விஷயம். 5G மூலம் டெலிகாம் நிறுவனங்களின் கைக்கும் சென்றுள்ளது.
தற்போது டெலிகாம் நிறுவனங்கள் ஏலத்தில் எடுத்திருக்கும் அலைவரிசை, 3.7 - 3.98 GHz வரை. விமான நிறுவனங்கள் பயன்படுத்தி வருபவை, 4.2 - 4.4 GHz வரை.
``இரண்டிற்கும் இடைவெளி மிகக்குறைவு என்பதால், 5G சேவைகளின் C band ஆனது, விமான நிறுவனங்களின் C band-ஐ பாதிக்கலாம்; இதன்மூலம் விமானங்களின் தகவல் தொடர்பு பாதிக்கப்படலாம்” என்பது விமான நிறுவனங்களின் வாதம்.
அதிலும் மிக முக்கியமாக விமான நிறுவனங்கள் சுட்டிக்காட்டுவது, விமானங்களின் Radar altimeter-களை; விமானங்கள் தரையிலிருந்து எவ்வளவு உயரத்தில் உள்ளது என விமானிக்குச் சொல்வதும், மோசமான வானிலையின்போது அவர் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்க உதவுவதும் இந்த altimeter-தான். 5G சேவைகளின் C band இவற்றை நேரடியாக பாதிக்கலாம் என அஞ்சுகின்றன விமான நிறுவனங்கள். விஞ்ஞானிகளும் இப்படி நடக்க சாத்தியம் இருப்பதாகவே கருதுகின்றனர்.
ஆனால், டெலிகாம் நிறுவனங்கள் இவற்றை முற்றிலுமாக மறுக்கின்றன. ``அமெரிக்காவில் மட்டுமல்ல; இதற்கு முன்பே சுமார் 40 நாடுகளில் 5G சேவைக்கான C band இயக்கத்தில் இருக்கிறது; அங்கேயும் விமான நிலையங்கள் இருக்கின்றன; அமெரிக்க விமானங்களும் இருக்கின்றன. அங்கெல்லாம் வராத பிரச்னை அமெரிக்காவில் மட்டும் எப்படி வரும்?” என்கின்றன அவை. நியாயம்தானே? அப்படித்தான் தெரியும். ஆனால், இதற்கும் அதற்கும் சின்ன வித்தியாசம் இருக்கிறது.
பிற நாடுகளில் நடந்தது என்ன? 📶
ஐரோப்பிய யூனியனை எடுத்துக்கொண்டால் அது 5G C band-டிற்காக ஒதுக்கியிருக்கும் அலைவரிசை 3.4-3.8 GHz.
தென் கொரியாவை எடுத்துக்கொண்டால், 3.42-3.7 GHz. பிரான்ஸை எடுத்துக்கொண்டால் 3.6-3.8 GHz. இவையனைத்துமே அமெரிக்காவை விடக் குறைவு (3.7 - 3.98 GHz). அமெரிக்காவை தவிர 4-க்கு அருகில் வேறு எதுவும் வரவில்லை. அமெரிக்க விமான நிறுவனங்களின் அலைவரிசையும் 4.2 - 4.4 GHz.
இப்படி, அமெரிக்காவில்தான் டெலிகாம்களின் அலைவரிசையும் அதிகம்; விமான நிறுவனங்களின் அலைவரிசைக்கும் அது மிக நெருக்கமும் கூட. எனவே, இங்கு பிரச்னையே வேறு என்கின்றன விமான நிறுவனங்கள்.
மேலும், அமெரிக்காவில் செயல்பாட்டுக்கு வரும் 5G-யை விடவும் இந்த நாடுகளில் 5G-யின் ஆற்றலும் குறைவுதான். வேறு எந்த நாடுகளில் இருந்தும் இதுவரைக்கும் 5G சேவைகளால் விமானங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக எதுவும் புகார்கள் இல்லை. இருப்பினும் அமெரிக்காவின் கதையே வேறு என்பது இவர்கள் வாதம். யார் சொல்வதுதான் சரி? அரசு என்னதான் செய்கிறது?
அதிகாரிகள் செய்த பஞ்சாயத்து
டெலிகாம் நிறுவனங்கள் முதன்முதலாக 5G சேவைகளை நாடெங்கும் தொடங்க திட்டமிட்டது கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி. ஆனால், அப்போதும் இதே பாதுகாப்பு பிரச்னைகளை எழுப்பி, டெலிகாம் நிறுவனங்களை 5G சேவையைத் தள்ளிவைக்குமாறு கேட்டுக்கொண்டன விமான நிறுவனங்கள் பின்னர், இந்த மாத தொடக்கத்தில் தொடங்கலாம் என இருக்கையில், மீண்டும் இதே பிரச்னை; இதே கோரிக்கை. இறுதியாக நேற்று எப்படியும் தொடங்கிவிடலாம் என இருந்தன டெலிகாம் நிறுவனங்கள்.
ஆனால், மீண்டும் விமான நிறுவனங்கள் ஒன்றாக, நேற்று முன்தினம் அமெரிக்க அதிகாரிகளிடம் போய் நிற்க, அவர்களும் டெலிகாம் நிறுவனங்களிடம் பேச, ``இப்போதைக்கு விமான நிலையங்களுக்கு அருகில் 2 மைல் தூரத்திற்கு மட்டும் 5G சேவைகளைத் தொடங்க மாட்டோம்; ஆனால், பிற இடங்களில் 5G செயல்பாட்டுக்கு வரும்” என இறுதியாக அறிவித்தனர். இந்த முடிவுக்காக அமெரிக்க அதிபர் பைடனும் டெலிகாம் நிறுவனங்களுக்கு நன்றி சொன்னார். அப்படியிருந்தும் ஏன் நேற்று ஏன் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன?
இரண்டு காரணங்கள்
அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படவில்லை. இந்தப் புதிய மாற்றங்களால் சிக்கல் ஏற்படலாம் எனக் கருதப்பட்ட போயிங் 777 வகை விமானங்கள் மட்டுமே பெருமளவில் ரத்து செய்யப்பட்டன. இதேபோல பழைய வகை altimeter வைத்திருந்த விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.
இரண்டாவது, எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் தலைவர் டிம் கிளார்க் சொல்லும் காரணம்.
``அமெரிக்காவின் 5G ஆன்டனாக்களில் ஆற்றலானது, பிற நாடுகளில் உள்ளதைவிடவும் இருமடங்கு அதிகம் என எங்களுக்கு நேற்றுதான் தெரியவந்தது. இதனால் altimeter மட்டுமல்ல; விமானத்தின் மொத்த தகவல் தொடர்புமே பாதிக்கப்படலாம் என நாங்கள் சந்தேகிப்பதால்தான் திடீரென நேற்று விமானங்களை நிறுத்தினோம்” எனச் சொல்கிறார் அவர்.
இதனால்தான், பலமுறை வாய்தா வாங்கியும்கூட, இறுதி நேரத்தில் பஞ்சாயத்து செய்து, டெலிகாம் நிறுவனங்களின் முடிவை மாற்றியிருக்கின்றனர்.
எப்போதுதான் பிரச்னை சரியாகும்? 🧐
அது அமெரிக்க அரசின் கைகளில்தான் இருக்கிறது. இப்போதைக்கு விமான நிறுவனங்கள் இரண்டு விஷயங்களை உறுதி செய்யவேண்டும்.
அமெரிக்காவில் செயல்பாட்டுக்கு வரும் 5G சேவை, விமானங்களில் தகவல் தொடர்பை பாதிக்கிறதா, இல்லையா?
அப்படி, பாதித்தால் அதற்கேற்ப விமானங்களின் தொழில்நுட்பங்களை அப்டேட் செய்ய முடியுமா?
இந்த இரண்டிற்கும் அமெரிக்க அரசு அதிகாரிகளும், விமான நிறுவனங்களும் உறுதியான விடைகாணும் வரையில் பிரச்னை தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.
1. பா.ஜ.க-வில் இணைந்த அபர்ணா யாதவ்
இதுவரை 3 மந்திரிகளை தன் பக்கம் அகிலேஷ் யாதவ்வுக்கு, அவர் குடும்பத்திலிருந்தே ஒரு உறுப்பினரை பா.ஜ.க-வில் சேர்த்து கவுன்ட்டர் கொடுத்திருக்கிறது அக்கட்சி.
அகிலேஷின் தம்பி ப்ரதீக் யாதவ்வின் மனைவிதான் இந்த அபர்ணா யாதவ். என்னதான் முலாயம் சிங் வீட்டு மருமகளாக இருந்தாலும், இதற்கு முன்பே பலமுறை மோடிக்கு ஆதரவாகவும், யோகி ஆதித்யநாத்திற்கு ஆதரவாகவும் கருத்து தெரிவிக்க தயங்காதவர்தான் இந்த அபர்ணா
கடந்த சட்டமன்றத் தேர்தலில் லக்னோ கன்டோன்மென்ட் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த இவர், இந்தமுறை பா.ஜ.க சார்பில் அதே தொகுதியில் நிற்க விரும்புகிறார்.
அரசியலின் எதிர்முகாமுக்கு சென்றாலும், அபர்ணாவுக்கு இதனால் குடும்பத்தில் எந்தப் பிரச்னையும் இருக்காதாம். காரணம், அகிலேஷின் மனைவியான டிம்பிளும் அபர்ணாவும் அப்படிப்பட்ட தோழிகள்.
2. காம்ரேடு இன் அமெரிக்கா
சிகிச்சைக்காக கடந்த ஜனவரி 15-ம் தேதி அமெரிக்கா கிளம்பிவிட்டார் கேரள முதல்வர் பினராயி விஜயன். அங்குள்ள மேயோ கிளினிக்கில் தங்கி, தற்போது சிகிச்சை பெற்று வரும் அவர், ஜனவரி 29-ல் ஊர் திரும்புகிறார்.
இதற்கு முன்பு இதேபோல அமெரிக்காவிற்கு சென்றபோது, தொழில்துறை அமைச்சரான இ.பி. ஜெயராஜனிடம் சில பொறுப்புகளைக் கொடுத்துவிட்டுச் சென்றிருந்தார்.
ஆனால், இந்தமுறை அப்படியெதுவும் இல்லாமல், அவரே பொறுப்புகளை ஆன்லைன் மூலம் கவனித்துக்கொள்கிறாராம். அமெரிக்காவிலிருந்தபடியே அனைத்து முக்கியமான அரசு மீட்டிங்குகளிலும் கலந்துகொள்கிறார்.
அதேசமயம், பெருந்தொற்றுக் காலத்தில் இப்படி முதல்வர் இங்கு இல்லாமல் இருப்பதும், அதிகாரத்தை யாரிடமும் தராமல் இருப்பதும், அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என விஜயனை விமர்சித்திருக்கின்றன எதிர்க்கட்சிகள்.
3. ஓய்வை அறிவித்த சானியா மிர்சா 🎾
6 முறை கிராண்ட்ஸ்லாம், உலக இரட்டையர் டென்னிஸில் நம்பர் 1 இடம், எனப் பல சாதனைகள் புரிந்த சானியா மிர்சாவின் டென்னிஸ் பயணம் விரைவில் முடிவுக்கு வருகிறது.
தற்போது விளையாடி வரும் ஆஸ்திரேலிய ஓப்பன் தொடர்தான் தனக்கு கடைசித்தொடர் என நேற்று அறிவித்திருக்கிறார் சானியா.
முன்புபோல காயங்களிலிருந்து மீண்டு வர முடியாததையும், உடல் முன்பு போல ஒத்துழைப்பது இல்லை என்பதைக் குறிப்பிட்டும், இந்த ஓய்வு முடிவை அறிவித்தார் சானியா.
தமிழகத்தில் நேற்று பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை: 26,981 (நேற்று முன்தினம்: 23,888) 🔺
- அதிகபட்சமாக, சென்னையில்: 8,007 (8,305) 🔻
- தமிழகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை: 35 (29) 🔺
இந்தியாவில் நேற்று பதிவான கொரோனா பாதிப்பு: 2,82,970 (2,38,018) 🔺
இன்று மற்றும் நாளைக்கான வானிலை முன்னறிவிப்பு ☔️ 👇

இந்தியன் வங்கிக்கு கட்டவேண்டிய சுமார் 120 கோடி ரூபாய் கடனை திருப்பிக் கட்டாததால், தி.நகர் ரங்கநாதன் தெரிவிலிருந்த பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கு நேற்று வங்கி அதிகாரிகள் சீல் வைத்து, ஜப்தி செய்யும் நடவடிக்கையைத் தொடங்கினர்.
காவல்துறையினருக்கும், மக்களுக்கும் இடையேயான உறவை மேம்படுத்தவும், காவல்துறை ஊழியர்களுக்கு நலத்திட்டங்களை செயல்படுத்தவும், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில், புதிய காவல் ஆணையம் தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் ஆணையம் வழங்கும் பரிந்துரைகள் அடிப்படையில் தமிழக அரசு செயல்படும்.
விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நேற்று உத்தரகாண்ட் மாநில பா.ஜ.க-வில் இணைந்திருக்கிறார் அண்மையில் மறைந்த முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத்தின் தம்பி விஜய் ராவத்.
இந்திய எல்லைக்குள் புகுந்து, அருணாச்சலப் பிரதேசத்தில் 17 வயது சிறுவன் ஒருவனை சீன ராணுவத்தினர் நேற்று கடத்தி கொண்டுபோய் விட்டனர் என ட்விட்டரில் தெரிவித்து, பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார் பா.ஜ.க எம்.பி தபில் காவ்.
ஓமிக்ரான் பரவல் காரணமாக, இந்தியா மற்றும் வெளிநாடுகள் இடையேயான சர்வதேச விமானப் போக்குவரத்தை பிப்ரவரி 28-ம் தேதி வரைக்கும் ரத்து செய்திருக்கிறது மத்திய அரசு. இருப்பினும், இந்தியா ஏற்கெனவே 28 வெளிநாட்டு நாடுகளுடன் Air Bubble ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது; அந்த நாடுகளுடனான போக்குவரத்து தொடர்ந்து நடைபெறும்.
கொரோனா காரணமாக, கடந்தாண்டு குடியரசு தின விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. இதையடுத்து விருந்தினர்களே இல்லாமல், நிகழ்ச்சிகள் நடந்தன. தற்போது இந்த ஆண்டும் அதேபோல வெளிநாட்டு சிறப்பு விருந்தினர்கள் யாருமின்றிதான் குடியரசு தின விழா நடக்கவிருக்கிறது.
சூழலியல் நெருக்கடிகள் காரணமாகவும், மக்கள் நெருக்கடியை சமாளிக்கவும், நீரில் மூழ்கிக்கொண்டிருக்கும் ஜகார்தாவுக்கு பதிலாக, வேறோர் இடத்திற்கு தலைநகரை மாற்ற 2019-ம் ஆண்டு முதல் திட்டமிட்டு வருகிறது இந்தோனேசியா. இந்நிலையில், தற்போது, ஒரு புதிய இடத்தை தலைநகராகத் தேர்ந்தெடுத்து அதற்கு `நுசந்தரா’ (பொருள்: தீவுக்கூட்டம்) எனப் பெயர் வைத்திருக்கிறது இந்தோனேசியா.
3 போட்டிகள் கொண்ட தென்னாப்பிரிக்காவுடனான ஒருநாள் தொடர் நேற்று பார்லில் தொடங்கியது. முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா 4 விக்கெட் இழப்பிற்கு 296 ரன்கள் குவித்தது. அதற்கடுத்து பேட் செய்த இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் மட்டுமே எடுத்ததால், 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
- ஆவினின் புதிய பொருள்கள்: பாயாசம் மிக்ஸ், பால் புரத நூடுல்ஸ், ப்ரீமியம் மில்க் கேக், யோகர்ட் பானம் (மேங்கோ மற்றும் ஸ்ட்ராபெர்ரி), டெய்ரி ஒயிட்னர் எனப் புதிதாக 5 பொருள்களை தன் கிளைகளில் நேற்று அறிமுகம் செய்திருக்கிறது ஆவின்.
🔴 இதுவரைக்கும் TSL-ஐ தொடர்ந்து படிச்சிட்டு வர்றீங்க; எனவே இதுபற்றிய உங்க கருத்தை தெரிஞ்சுக்க விரும்புறோம். அதனால், இந்த லிங்கை க்ளிக் பண்ணி உங்களோட ரேட்டிங்கைப் பதிவு பண்ணிடுங்க. TSL-ஐ மேம்படுத்த இது எங்களுக்கு உதவியா இருக்கும். ஏற்கெனவே கருத்தைப் பதிவு செய்தவர்களுக்கு நன்றி!
அவ்வளவுதான்!
The Subject Line-னோட இன்னைக்கு அப்டேட்ஸ் உங்களுக்குப் பிடிச்சிருக்கும்னு நம்புறேன். பிடிச்சிருந்தா கீழ இருக்க பட்டன் மூலமா உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க… இன்னும் ஏதாச்சும் இந்த TSL-ல் மாத்தணும்னா எனக்கு மெசேஜ் பண்ணுங்க! உங்க கருத்துகள் எங்களுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். 🤞
திரும்ப நாளைக்கு காலைல 7 மணிக்கு சந்திப்போம்!
Have a Nice day ☕️
The Subject Line-ஐ சமூக வலைதளங்களில் பின்தொடர:
Telegram | Twitter | Facebook | Insta
LikeCommentShare