🛕 உத்தரப்பிரதேச தேர்தல் சொல்லப்போகும் மெசேஜ்!
Today Edition Highlights: 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்ட ஹிஜாப் வழக்கு | இந்தியாவில் ட்ரோன் இறக்குமதிக்கு தடை | அணு ஆற்றலில் புதிய சாதனை | Reading Time: ⏱ 5 Mins
Good Morning ☕️
இன்றைய தினத்தின் டாப் அப்டேட்ஸ் இதோ…
நாடு முழுக்க எப்போதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் தேர்தல்களில் ஒன்று, உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தல். 403 உறுப்பினர்களைக் கொண்ட மெகா சட்டசபை, தேசிய அரசியலில் ஏற்படுத்தும் விவாதங்கள், நாடாளுமன்றத் தேர்தல்களுக்கு 2 ஆண்டுகள் முன் வருவது என இந்த எதிர்பார்ப்பிற்கு பல காரணங்கள். அப்படிப்பட்ட உ.பி தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்குகிறது.
`இந்த உ.பி சட்டமன்றத் தேர்தல் 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டம்’ என மட்டும் மேலோட்டமாகச் சொல்லப்பட்டாலும், தற்போதைய அரசியல் சூழலில் அதைத் தாண்டியும் சில முக்கியமான விஷயங்களை உ.பி தேர்தல் முடிவுகள் முடிவு செய்யவிருக்கின்றன. அவை என்ன?
2024-ல் பா.ஜ.க-வின் வெற்றி வாய்ப்பு? இந்த உ.பி சட்டமன்றத் தேர்தலில் ஒருவேளை பா.ஜ.க வென்று ஆட்சியமைத்தாலும்கூட, அதை வைத்து மட்டுமே 2024-லும் பா.ஜ.க-வே மத்தியிலும் ஆட்சியமைக்கும் என்றோ அல்லது 2024-ல் பா.ஜ.க தோற்கும் என்றோ சொல்லிவிடமுடியாது.
காரணம், 2024-க்கும், 2022-க்கும் இடையே இந்த 5 மாநில தேர்தல்கள் தவிர்த்து இன்னும் 10-க்கும் மேற்பட்ட சட்டமன்றத் தேர்தல்கள் இருக்கின்றன. மேலும், மக்களும் மாநில தேர்தல்களில் வாக்களிப்பவர்களுக்கே அப்படியே மக்களவைத் தேர்தலிலும் வாக்களிப்பதில்லை.
உதாரணமாக, 2012-ல் பா.ஜ.க உ.பி-யில் வென்ற இடங்கள் வெறும் 47-தான். ஆனால், 2014-ல் மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது.
அதேபோல 2018-ம் ஆண்டு நடந்த மாநில சட்டமன்றத் தேர்தல்களிலும் ராஜஸ்தான், கர்நாடகா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க, பா.ஜ.க பின்னடைவைச் சந்தித்தது. ஆனால், 2019-ல் நடந்ததோ வேறு. எனவே இது 2024-க்கான முன்னோட்டமெல்லாம் இல்லை.
தேசிய அரசியலில் யோகியின் இடம்? 2017-க்கு முன்புவரை, யோகி ஆதித்யநாத் கோரக்பூரில் ஆதிக்கம் செலுத்திவந்த ஒரு எம்.பி மட்டுமே. ஆனால், இந்த 2022-ல் `அடுத்த மோடியே அவர்தான்!’ என்ற ரேஞ்சுக்கு வந்துவிட்டார்.
2017-ல் அம்மாநில முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் உ.பி-க்கே உரிய இந்துத்துவ அரசியலை தீவிரமாக முன்னெடுத்தார். அயோத்தி ராமர் கோயில், மாட்டிறைச்சிக்கு தடை, காசி கோயில் விரிவாக்கத் திட்டம், சிறுபான்மையினரைக் குறிவைக்கும் `லவ் ஜிஹாத்’ சட்டங்கள் என இந்துத்துவ அரசியலின் எந்தக் கூறையும் அவர் விட்டுவைக்கவில்லை.
முதல்முறையாக இந்தமுறை தன் பலத்தை நிரூபிக்க சட்டமன்றத் தேர்தலிலும் நேரடியாகப் போட்டியிடுகிறார். குஜராத் காலத்தில் மோடி தொடங்கியதைப் போலவே, ஊடகங்களில் மாநில வளர்ச்சிப் பணிகள் குறித்த படோடோபமான விளம்பரங்கள், தனி நபர் துதி என `மினி மோடியாக’ அவர் தயாராகிவிட்டார். இந்தப் பயணம் எங்குபோய் முடியும் என்பதுதான் அடுத்த கேள்வி. இதற்கு இருவேறு யூகங்கள் சொல்லப்படுகின்றன.
முதலாவது, பிரதமர் பதவி. 2024 மக்களவைத் தேர்தலின்போது மோடிக்கு வயது 73 ஆக இருக்கும். 75 வயதுக்கு மேற்பட்ட யாரும் நேரடி அரசியல் பதவிகளில் இருக்கக்கூடாது என்பது பா.ஜ.க-வில் எழுதப்படாத விதி (எடியூரப்பா போல விதிவிலக்குகளும் உண்டு). அப்படி, `பிரதமர் மோடி 75 வயதுக்குப் பிறகு பிரதமர் பொறுப்பைத் தொடரமாட்டார் (ஒருவேளை தேர்தலில் வென்றால்) எனில், அதற்கு யோகியே அடுத்த சாய்ஸாக இருப்பார்; அதற்கான அச்சாரம்தான் அவரின் உ.பி அரசியல்!’ என்பது ஒரு யூகம்.
இரண்டாவது, உத்தரப்பிரதேசத்தில் மட்டுமே பா.ஜ.க-வை இன்னும் பலப்படுத்துவது. இந்த இரண்டு டாஸ்க்குகளிலும் யோகியின் பெயர் இருக்கவேண்டுமென்றால், நிச்சயம் இந்த தேர்தலில் அவருக்கு வெற்றி அவசியம். எனவே யோகியின் முதல் பலப்பரீட்சையாக இந்த தேர்தல் இருக்கப்போகிறது.
குடியரசுத் தலைவர் தேர்தல்: தற்போதைய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலையுடன் முடிவடைகிறது. இதற்கடுத்து நடக்கும் தேர்தலில் பா.ஜ.க-வின் வேட்பாளருக்கு செக் வைக்க திட்டமிடுகின்றன எதிர்க்கட்சிகள். எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக சரத் பவாராக இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய NDA கூட்டணி கணக்குகளின்படி, பா.ஜ.க-வால் 49.9% வாக்குகளை மட்டுமே தன் வேட்பாளருக்குப் பெற்றுத்தர முடியும். மற்ற எதிர்க்கட்சிகள் நினைத்தால் 51.1% வாக்குகளைப் பெற முடியும். இதுவே 2017-ல் பா.ஜ.க-வின் பலம் 65.65% ஆக இருந்தது.
அப்போது பா.ஜ.க-வுடன் கூட்டணியில் இருந்த சிவசேனா, அகாலி தளம் போன்ற கட்சிகள் தற்போது இல்லை. அ.தி.மு.க-வும் பெருவாரியான இடங்களை இழந்துவிட்டது. எனவே பா.ஜ.க குடியரசுத் தலைவர் தேர்தலில் ஜெயிக்கவேண்டுமென்றால் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி, பிஜூ ஜனதா தள் உள்ளிட்ட கட்சிகளின் தயவு அவசியம்.
மேலும், கடந்தமுறை அக்கட்சிக்கு அதிகம் கைகொடுத்ததே உ.பி-யில் ஜெயித்த 312 சீட்டுகள்தான். ஒருவேளை இந்தமுறை அதிலிருந்து 100 சீட்டுகள் குறைந்தாலும்கூட, உ.பி-யில் ஆட்சியமைக்கலாம். ஆனால், குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்குக்கான சதவீதம் இன்னும் (~47% ஆகிவிடும்) குறைந்துவிடும். (பிற 4 மாநிலங்கள் சிறியவை என்பதால் வாக்கு சதவீதத்தில் மிகக்குறைந்த அளவே சரிவு ஏற்படும்.)
எனவே, உ.பி-யில் மீண்டும் 300+ சீட்டுகளைப் பெறுவது பா.ஜ.க-விற்கு மிக முக்கியமாகிறது. ஒருவேளை இந்த 5 மாநில தேர்தலில் பா.ஜ.க சறுக்கிவிட்டால், அதனால் பிற கட்சிகளுடனும் வெற்றிகரமாகப் பேச்சுவார்த்தை நடத்துவதிலும் சிக்கல்கள் ஏற்படலாம். இதுவும் எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக அமையும்.
இதைப் பயன்படுத்தி முதல்முறையாக 2014-க்குப் பிறகு பா.ஜ.க-விற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் சேர்ந்து செக் வைக்கலாம். இந்த விஷயமும் உ.பி தேர்தல் முடிவுகளைப் பொறுத்தே தீர்மானிக்கப்படவிருக்கிறது.
மத்திய அரசின் போக்கு: அனைத்து தேர்தல்களிலும் ஒரு விஷயத்தைப் பொதுவாக காணமுடியும். ஆளும்கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சில குறிப்பிட்ட விஷயங்களை பெரிதாக கையிலெடுக்கும். அதையொட்டியே பிரசாரக் களமும் இருக்கும்.
ஆனால், இந்த உ.பி தேர்தலில் தாக்கம் செலுத்தக்கூடிய போராட்டங்களாகக் கருதப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கெதிரான போராட்டங்கள், வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள், வேலைவாய்ப்புக்காக மாணவர்களின் போராட்டங்கள் ஆகிய மூன்றுமே எந்தவொரு அரசியல் கட்சியின் பின்னணியின்றி மக்கள் தாங்களாக முன்னெடுத்த போராட்டங்கள்.
இவற்றிற்குப் பிறகும்கூட பா.ஜ.க இந்துத்துவா கொள்கையை முன்னிறுத்தியே தேர்தலை எதிர்கொள்கிறது. எனவே, மக்களிடையே எழுந்துள்ள அதிருப்தி தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்துமா அல்லது பா.ஜ.க-வின் வழக்கமான இந்துத்துவா ஃபார்முலா பயனளிக்குமா என்பதும் இந்த தேர்தலில் உற்றுநோக்கப்படுகிறது.
இந்துத்துவா ஃபார்முலா மீண்டும் ஜெயித்துவிட்டால், அடுத்த 2 ஆண்டுகளுக்கு மத்திய பா.ஜ.க அரசு தைரியமாக அதைத் தொடரும். எனவேதான், இந்த முடிவுகள் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு மத்திய அரசின் அணுகுமுறையிலும், தேசிய அரசியலிலும் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதவிர, மாயாவதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் எதிர்காலம், உ.பி காங்கிரஸில் பிரியங்கா காந்தி ஏற்படுத்திய தாக்கம், OBC மக்களின் வாக்கு அகிலேஷுக்கா, யோகிக்கா என்ற கணக்குகள் என அம்மாநிலத்திற்குரிய மற்ற சில எதிர்பார்ப்புகளும் இருக்கின்றன.
இவை அனைத்திற்கும் விடை மார்ச் 10-ல் தெரியும்!
1. அணு ஆற்றலில் முக்கியமான மைல் கல்
இன்றைக்கு நாம் உலகில் பயன்படுத்தும் அணு உலைகள் அனைத்துமே அணுக்கருவு பிளவு (Nuclear Fission) தத்துவத்தின் அடிப்படையில் இயங்குபவை. இதற்கு எதிர்மாறாக அணுக்கருவு இணைவு (Nuclear Fission) தத்துவத்தின் அடிப்படையில் இயங்குபவை சூரியன் உள்ளிட்ட நட்சத்திரங்கள்.
இந்த தத்துவத்தின் அடிப்படையில் அணு ஆற்றலை உற்பத்தி செய்வதற்கான முயற்சிகள் பல ஆண்டுகளாகவே நடந்து வருகின்றன.
இந்நிலையில்தான், பிரிட்டனில் உள்ள ஜெட் ஆய்வகத்தில் நேற்று 5 நொடிகளுக்கு அணுக்கருவு இணைவு விளைவை நிகழ்த்தி, 11 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து முதல்முறையாக சாதித்திருக்கின்றனர் சர்வதேச விஞ்ஞானிகள்.
எதிர்காலத்தில் இதைப் பெரிய உள்கட்டமைப்பு வசதிகளுடன் செய்யும்போது, தற்போதைய அணு உலைகளைப் போலவே இவற்றிலிருந்தும் ஆற்றலைப் பெறமுடியும். சரி, இதில் அப்படியென்ன சிறப்பு?
ஒன்று, இது பசுமை இல்ல வாயுக்களை வெளியிடுவதில்லை. தற்போதைய அணு உலைகளைப் போல ஆபத்தான அணுக்கழிவுகளையும் வெளியிடுவதில்லை. மிகக்குறைவான, குறுகிய காலத்தில் செயலிழக்கும் கழிவுகள் மட்டுமே இதிலிருந்து வெளியாகும். எனவே பருவநிலை மாற்றத்திற்கு எதிரான பயணத்தில் இது ஒரு முக்கிய மைல் கல்லாகப் பார்க்கப்படுகிறது.
தற்போதைய அணு உலைகளை விடவும் இது பல மடங்கு பாதுகாப்பானவையும்கூட. எனவே எதிர்காலத்தில் எண்ணெய், இயற்கை எரிவாயு போன்றவற்றிற்கு மாற்றாகவும் இந்த அணுக்கரு இணைவு உலைகள் கருதப்படுகின்றன. அப்படியென்றால் விரைவில் இவை பயன்பாட்டுக்கு வந்து பூமியின் பிரச்னைகள் தீர்ந்துவிடுமா?
அதுதான் இல்லை. எப்படியும் ஆராய்ச்சிகள் முடிந்து, தற்போதைய உலைகள் போலவே பயன்பாட்டுக்கு வர 20 ஆண்டுகளுக்கு மேலாகிவிடுமாம்.
2. நேர்காணலில் மோடி சொன்னவை என்ன?
இன்றைக்கு உத்தரப்பிரதேசத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில், நேற்று ANI ஊடகத்திற்குப் பேட்டியளித்திருக்கிறார் பிரதமர் மோடி. இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என இதை எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. சரி, நேர்காணலில் என்ன சொன்னார்?
வழக்கம்போல எதிர்க்கட்சிகள் குறித்தே அதிகம் விமர்சனங்களை முன்வைத்தார். முதல்முறையாக லக்கிம்பூரில் விவசாயிகள் கொல்லப்பட்டது தொடர்பாக தன் மௌனத்தைக் கலைத்திருக்கிறார்.
``நீதிமன்ற கண்காணிப்பில் நடக்கும் விசாரணைகளுக்குகு மாநில அரசு சார்பில் ஒத்துழைப்பு வழங்குகிறோம். மாநில அரசும் வெளிப்படையாக விசாரணை நடத்தி வருகிறது” என அந்த சம்பவம் குறித்து தெரிவித்திருக்கிறார்.
இதேபோல வேளாண் சட்டங்கள் வாபஸ் வாங்கியது பற்றி கூறுகையில், விவசாயிகளின் நலனுக்காகவே அந்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டதாகவும், நாட்டின் நலன் கருதியே மசோதா திரும்பப் பெறப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க அரசின் ஊதுகுழலாகவே பார்க்கப்படும் ஊடகம் ANI. எனவே தேர்தல் பிரசாரம் போல குற்றச்சாட்டுகள் மட்டுமே பிரதமரின் பதில்களில் இருந்ததே தவிர, வேறு எந்தவொரு முக்கியமான அம்சங்களும் அதில் இடம்பெறவில்லை.
3. SIT-க்கு மாற்றப்பட்ட ராமஜெயம் கொலை வழக்கு
தி.மு.க-வின் மூத்த அமைச்சரான கே.என்.நேருவின் தம்பியான ராமஜெயம் 2012-ம் ஆண்டு திருச்சியில் கொலை செய்யப்பட்டார். முதலில் சி.பி.சி.ஐ.டி விசாரித்து வந்த இந்த வழக்கு 2017-ம் ஆண்டு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது.
ஆனால், 4 ஆண்டுகள் ஆகியும் இதுவரையிலும் கொலைக்கான காரணமோ, கொலையாளியோ கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே இந்த வழக்கை மீண்டும் மாநில அரசுக்கே மாற்றவேண்டும் என ராமஜெயத்தின் சகோதரர் ரவிச்சந்திரன், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் கோரிக்கை வைத்திருந்தார்.
இதையடுத்து இந்த வழக்கை விசாரிக்க தூத்துக்குடி எஸ்.பி ஜெயக்குமார் தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்துள்ளது நீதிமன்றம். 15 நாள்களுக்கு ஒருமுறை அறிக்கை தாக்கல் செய்யவும் இந்தக் குழுவுக்கு உத்தரவிட்டுள்ளது.
இப்படி சி.பி.ஐ-யிடமிருந்து மாநில காவல்துறைக்கே மீண்டும் வழக்கு மாற்றப்படுவது அரிதான ஒன்று.
தமிழகத்தில் நேற்று பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை: 3,971 (நேற்று முன்தினம்: 4,519) 🔻
- அதிகபட்சமாக, சென்னையில்: 742 (792) 🔻
- தமிழகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை: 28 (37) 🔻
இந்தியாவில் நேற்று பதிவான கொரோனா பாதிப்பு: 71,365 (67,597) 🔺
ஹிஜாப்பிற்கு எதிரான போராட்டங்களால் ஏற்பட்ட பதற்றம் காரணமாக, கல்வி நிலையங்களின் அருகே 2 வாரங்களுக்கு போராட தடைவிதித்துள்ளது கர்நாடகா அரசு. ஹிஜாப் விவகாரம் தொடர்பான உயர்நீதிமன்ற வழக்கு, ஒரு நீதிபதி கொண்ட அமர்விலிருந்து 3 பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டிருக்கிறது. கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான இந்த அமர்வு, இன்று வழக்கு விசாரணையைத் தொடங்குகிறது.
கடந்தாண்டு டிசம்பர் மாதம் இறுதியில் தமிழகத்தில் நடத்தப்பட்ட 4-ம் கட்ட சீரோ சர்வே முடிவுகள் நேற்று வெளிவந்துள்ளன. அதன்படி சுமார் 87% பேர் கொரோனாவிற்கு எதிரான ஆன்டிபாடிக்களைக் (Seropositivity) கொண்டுள்ளனர். இதற்கு முன்பு கடந்த ஜூலை / ஆகஸ்ட் மாதங்களில் எடுக்கப்பட்ட சீரோ சர்வேயில் இந்த விகிதம் 70% ஆக இருந்தது.
வெளிநாடுகளிலிருந்து ட்ரோன்களை இறக்குமதி செய்வதற்கு மொத்தமாக தடைவிதித்துள்ளது மத்திய அரசு. ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு பணிகளுக்கு மட்டும் இதிலிருந்து விதிவிலக்கு. உள்ளூர் ட்ரோன் நிறுவனங்களை ஊக்குவிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்திருக்கிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட் செய்த இந்திய அணி 237 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 65 ரன்கள் அடித்திருந்தார். 238 ரன்களை என்ற இலக்கை சேஸ் செய்த வெஸ்ட் இண்டீஸ் 193 ரன்களுக்கே ஆல் அவுட் ஆனது. சிறப்பாக பந்துவீசிய பிரசித் கிருஷ்ணா 12 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றுள்ளது. கடைசி போட்டி நாளை நடைபெறவுள்ளது.
2018-20 காலகட்டத்தில் இந்தியாவில் வேலையின்மை காரணமாக தற்கொலை செய்துகொண்டோரின் எண்ணிக்கை: 9,140, இதே காலகட்டத்தில் கடன்தொல்லையால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை: 16,091. இந்த தகவல்களை நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய்.
கேரளாவில் குரும்பச்சி மலையில் இரு தினங்களுக்கு முன் ட்ரெக்கிங் செய்த பாபு என்ற இளைஞர் மலையிலிருந்து சரிந்து, ஒரு குகைபோன்ற பள்ளத்தில் விழுந்தார். ஒன்றரை நாளுக்கும் மேலாக, அவரை மீட்க தீயணைப்புத் துறையினர் மற்றும் பேரிடர் மீட்புப் படையினர் முயன்றனர். ஆனால், செங்குத்தான மலை என்பதால் மீட்புப்பணிகள் கடினமாயின.
இதையடுத்து ராணுவம் அழைக்கப்பட்டது. அவர்கள் மேற்கொண்ட மீட்புப்பணியில் சுமார் 48 மணி நேரம் கழித்து பாபு பத்திரமாக நேற்று மீட்கப்பட்டார். இந்திய ராணுவத்தின் இந்த மீட்புப் பணியும், வீடியோவும் நேற்று வைரல்!
- தமிழகத்தில் வரும் 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதையொட்டி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோல தினந்தோறும் அன்றாட அப்டேட்கள் சுவாரஸ்யமான வடிவில் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரி கொடுத்து The Subject Line நியூஸ்லெட்டரை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்!
அவ்வளவுதான்!
The Subject Line-னோட இன்னைக்கு அப்டேட்ஸ் உங்களுக்குப் பிடிச்சிருக்கும்னு நம்புறேன். பிடிச்சிருந்தா கீழ இருக்க பட்டன் மூலமா உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க… இன்னும் ஏதாச்சும் இந்த TSL-ல் மாத்தணும்னா எனக்கு மெசேஜ் பண்ணுங்க! உங்க கருத்துகள் எங்களுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். 🤞
திரும்ப நாளைக்கு காலைல 7 மணிக்கு சந்திப்போம்!
Have a Nice day ☕️
The Subject Line-ஐ சமூக வலைதளங்களில் பின்தொடர:
Telegram | Twitter | Facebook | Insta
Today Edition பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க! ❤️