💉 தடுப்பூசிகளின் காலாவதி தேதி சர்ச்சை எதனால்?
இன்றைய TSL-ன் பிற ஹைலைட்ஸ்: `குட்பை' பிளாக்பெர்ரி | கொரோனா பாதிப்பில் புதிய உச்சம் தொட்ட அமெரிக்கா | கலக்கிய ஷர்துல் தாக்கூர் | இன்று தொடங்கும் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் | Reading Time: ⏱5 Mins
ஹாய், ஹலோ… வணக்கம் 👋
இந்தியாவில் கோவாக்சின் தடுப்பூசிகளின் காலாவதி தேதி அண்மையில் நீட்டிக்கப்பட்டதாலும், புதிய காலாவதி தேதியை முந்தைய தடுப்பூசிகளில் அச்சிட பாரத் பயோடெக் முயன்றதாலும் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகின்றன. இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை இன்றைய TSL-ல் பார்க்கலாம்.
எங்கே தொடங்கியது பிரச்னை?
15-18 வயது வரையிலான சிறார்களுக்கு ஜனவரி 3-ம் தேதி முதல் கோவாக்சின் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. அப்படி தன்னுடைய மகனுக்கு தடுப்பூசி செலுத்தச் சென்ற இடத்தில், காலாவதி தேதி நீட்டிக்கப்பட்ட கோவாக்சின் போடப்படுவதை அறிந்த ட்விட்டர் பயனாளி ஒருவர், அந்த விவரங்களை அப்படியே ட்விட்டரில் ஷேர் செய்திருந்தார்.


அதில், கோவாக்சினின் காலாவதி தேதி நீட்டிக்கப்பட்ட விவரங்கள் இருக்கவே, ``அப்படியெனில் பழைய தடுப்பூசிகளைத்தான் சிறார்களுக்கு செலுத்துகின்றன்றனரா?” எனப் பலரும் கேள்வி எழுப்பினர்.
மேலும், பெங்களூருவில் உள்ள சில தனியார் மருத்துவமனைகளில், விரைவில் காலாவதியாகவிருக்கும் கோவாக்சின் தடுப்பூசிகளை திரும்ப எடுத்துக்கொண்டு, அவற்றில் புதிய காலாவதி தேதியை அச்சிட்டு மீண்டும் அந்த மருத்துவமனைகளுக்கே வழங்கும் வேலைகளிலும் பாரத் பயோடெக் நிறுவனம் இறங்கியிருக்கிறது.
இந்த இரண்டு சம்பவங்களும் சமூக வலைதளங்களில் வைரலாக, உடனே விவகாரம் பெரிதானது. இதைத் தொடர்ந்துதான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கமும் அளித்தது.
ஏன் தடுப்பூசிகளின் காலாவதி தேதிகள் மாற்றப்படுகின்றன?
இந்தியாவின் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் இரண்டிற்குமே, காலாவதி தேதியை மாற்ற மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) ஏற்கெனவே ஒப்புதல் அளித்திருக்கிறது.
கோவிஷீல்டின் கால அளவை 6 மாதங்களிலிருந்து 9 மாதங்களாக உயர்த்த கடந்த ஆண்டு பிப்ரவரி மாதமும், கோவாக்சினின் கால அளவை 9 மாதங்களிலிருந்து 12 மாதங்களாக உயர்த்த கடந்த நவம்பர் மாதமும் CDSCO அனுமதியளித்திருக்கிறது.
ஏன் இப்படி காலாவதி தேதிகள் மாற்றப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள `Stability data’ பற்றி சுருக்கமாக தெரிந்துகொள்ளவேண்டும். ஒரு தடுப்பூசியின் காலாவதி தேதியானது இந்த Stability Data-வை வைத்துதான் முடிவு செய்யப்படுகிறது. இது என்ன?
தடுப்பூசிகளின் கால அளவைத் தீர்மானிப்பதில் முக்கியமான காரணி, அதன் செயலாற்றும் தன்மைதான். ஒரு தடுப்பூசியின் நோக்கம், குறிப்பிட்ட வைரஸூக்கு எதிராக தேவையான அளவு ஆன்டிபாடிகளை உருவாக்குவதே.
இது எவ்வளவு நாள்கள் வரை, சிறப்பாக செயலாற்றும் என்பதை உறுதிசெய்ய, தடுப்பூசிகள் பல்வேறு வெப்பநிலைகளில், பல்வேறு கால அளவில் பரிசோதிக்கப்படும். இதில் எப்போதிருந்து, அதன் செயலாற்றும் திறன் குறைக்கிறதோ, அதுவரைதான் அதற்கான காலாவதி தேதியும் நிர்ணயிக்கப்படும்.
இந்த Stability ஆராய்ச்சிகள் தடுப்பூசிகளுக்கு தொடர்ந்து நடத்தப்படும். இதில், முன்பு கிடைத்ததைவிடவும், புதிய தகவல்கள் கிடைக்கும்போது, அந்த Stability Data-வை CDSCO-விடம் விண்ணப்பித்து, அதன் ஒப்புதல் பெற்று, பின்னர் காலாவதி தேதியை நீட்டித்துக்கொள்ளலாம்.
அப்படி Stability Data-வைக் கொடுத்து நீட்டித்துக்கொண்டவைதான், மேற்கண்ட இரண்டு தடுப்பூசிகளும்.
வெளிநாடுகளில் என்ன நடக்கிறது?
இப்படி தடுப்பூசிகளின் காலாவதி தேதியை உரிய ஆய்வுகளுக்குப் பிறகு நீட்டித்துக்கொள்ள அனுமதிக்கும் முறை வெளிநாடுகளிலும் இருக்கிறது.
உதாரணமாக, பைஸர் தடுப்பூசியின் கால அளவை, 5 நாள்களிலிருந்து 1 மாதமாக மாற்றிக்கொள்ள, கடந்த ஆண்டு மே மாதம் அமெரிக்காவின் FDA அனுமதித்திருந்தது.
இதேபோல கடந்த ஜூலை மாதம், ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசியின் கால அளவை 4.5 மாதங்களிலிருந்து 6 மாதங்களாக நீட்டித்துக்கொள்ளவும் அனுமதித்திருந்தது.
பிரிட்டனும் மாடர்னா நிறுவனத்தின் ஸ்பைக்வேக்சின் கால அளவை 7-லிருந்து 9 மாதங்களாக உயர்த்த அண்மையில் அனுமதித்துள்ளது.
எனவே, இது உலகெங்கும் உள்ள நடைமுறைதான். ஆனால், அங்கெல்லாம் வராத குழப்பம் இந்தியாவில் மட்டும் வரக் காரணம், CDSCO-யின் செயல்பாடுகள்தான் என்கின்றனர் நிபுணர்கள்.
ஆரம்பத்திலேயே CDSCO அதிகாரிகள் இதற்கான காரணங்களை மக்களிடம் விளக்கிச் சொல்லியிருந்தால், சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் இந்நேரத்தில் தேவையற்ற அச்சம், குழப்பமெல்லாம் வந்திருக்காது. ஆனால், பாரத் பயோடெக் மட்டுமே அதுகுறித்து சொல்லிக்கொண்டிருந்ததும், காலாவதியாகப் போகும் தடுப்பூசிகளுக்கு ரீ-லேபிள் செய்யும் பணிகளைச் செய்ததும்தான் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை உண்டாக்கிவிட்டது என்பது அவர்களின் கருத்து.
அதில் உண்மை இல்லாமலும் இல்லை!
மூடப்பட்ட `அம்மா மினி கிளினிக்குகள்’
- கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம், முந்தைய அ.தி.மு.க ஆட்சியால் தமிழகம் முழுவதும் திறந்துவைக்கப்பட்ட சுமார் 2,000 அம்மா மினி கிளினிக்குகள் மொத்தமாக மூடப்படுவதாக நேற்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அறிவித்திருக்கிறார்.
- ஒரு வருடத்திற்காக தற்காலிகமாகத் தொடங்கப்பட்ட இந்த கிளினிக்குகள், சிறப்பாக செயல்படவில்லை என்பதாலேயே இந்த முடிவை எடுத்திருப்பதாகவும், இதற்காக தற்காலிக பணி நியமனம் செய்யப்பட்ட மருத்துவர்கள் வேறு பணிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
`குட்பை’ பிளாக்பெர்ரி
- ஒரிஜினல் பிளாக்பெர்ரி ஆபரேட்டிங் சிஸ்டமில் இயங்கிவரும் தன்னுடைய கீபோர்டு போன்களுக்கான சேவைகளை நேற்றுடன் முற்றிலுமாக நிறுத்திக்கொண்டது பிளாக்பெர்ரி நிறுவனம். ஆண்ட்ராய்டு ஆபரேட்டிங் சிஸ்டமில் இயங்கும் பிளாக்பெர்ரி மொபைல்களுக்கு இதனால் பிரச்னையில்லை.
- 2000-ம் ஆண்டுகளில் தொடக்கத்தில் தன்னுடைய பிரத்யேக கீபோர்டு டிசைன் மற்றும் பாதுகாப்பு வசதிகளுக்காக, வி.ஐ.பி-க்களின் நம்பர் 1 சாய்ஸாக இருந்தவை பிளாக்பெர்ரி போன்கள். அந்த இடத்தைப் பின்னர் ஐபோன்களும், ஆண்ட்ராய்டு போன்களும் பிடிக்கவே கொஞ்சம் கொஞ்சமாக சந்தையை இழந்தது பிளாக்பெர்ரி.
Valuations - January 2022: Apple: $3 trillion BlackBerry: $5 billion Valuations - January 2007: Apple: $73 billion BlackBerry: $26 billion2016-க்குப் பிறகு போன் தயாரிப்பிலிருந்து முற்றிலும் விலகிவிட்ட அந்நிறுவனம், மென்பொருள் சேவைகள் மற்றும் பிற நிறுவனங்களின் மொபைல்களுக்கு லைசென்ஸ்கள் மட்டும் வழங்கிவந்தது. இந்நிலையில்தான், நேற்று கிளாசிக் பிளாக்பெர்ரி மொபைல்கள், வாடிக்கையாளர்களிடமிருந்து மொத்தமாக விடைபெற்றிருக்கின்றன!
குற்றவாளியான எலிசபெத் ஹோம்ஸ்
- உங்களுக்கு நேரமிருந்தால், எலிசபெத் ஹோம்ஸின் கதையைப் படிக்கலாம். ஒன்றுமே இல்லாத ஈமு கோழியை, ஆஹோ ஓஹோவென மார்க்கெட்டிங் செய்து, இங்கு ஏமாற்றியது போல, இல்லாத ரத்தப்பரிசோதனை (Blood Testing) தொழில்நுட்பம் ஒன்றை வைத்து உலகம் முழுக்க புரட்சி செய்வதாகக் கிளம்பி, பெரும் முதலீட்டாளர்களையெல்லாம் ஏமாற்றி, மொத்த உலகையும் அதிர வைத்த சுவாரஸ்யமான கதை ஹோம்ஸூடையது.
- Theranos என்ற பயோடெக் நிறுவனத்தைத் தொடங்கி, எல்லோருக்கும் கண்ணாமூச்சி காட்டிய ஹோம்ஸை, ஒரு காலத்தில் சிலிக்கான் வேலியின் அடுத்த ஸ்டீவ் ஜாப்ஸ் என்றே கொண்டாடின ஊடகங்கள். ஆனால், 2016-க்குப் பின் இவரின் சாம்ராஜ்யமும் பிம்பமும் ஒருசேர சரியத் தொடங்கியது.
- இந்நிலையில், முதலீட்டாளர்களை ஏமாற்றிய சில வழக்குகளில், ஹோம்ஸ் குற்றவாளி என நேற்று தீர்ப்பே வந்துவிட்டது; தற்போது மேல்முறையீடு செய்யும் முயற்சியில் இருக்கிறார்.
அடி தூள் ஷர்துல்!
- ஜோஹன்னஸ்பெர்க் டெஸ்ட்டின் இரண்டாவது நாள் ஆட்டமான நேற்று, தென்னாப்பிரிக்கா அணி, முதல் இன்னிங்ஸில் 229 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கீகன் பீட்டர்சன் மட்டும் 62 (118) ரன்கள் எடுத்திருந்தார்.
இந்த இன்னிங்ஸில் வேற லெவலில் கலக்கிய ஷர்துல் தாக்கூர் 61 ரன்கள் கொடுத்து, மொத்தம் 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஷமி 2 விக்கெட்டுகள்.
இதையடுத்து தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 27 ரன்கள் முன்னிலை பெற்றது.
- அடுத்து தன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்தியா, நேற்றைய ஆட்ட நேர முடிவில், 85 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து, மொத்தம் 58 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
ரஹானே 11(22),
புஜாரா 35(42) இருவரும் களத்தில் இருக்கின்றனர்.
கொரோனா ஸ்பெஷல் அப்டேட்ஸ்…
தமிழகத்தில் நேற்று பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை: 2,731 (நேற்று முன்தினம்: 1,728)
- அதிகபட்சமாக, சென்னையில்: 1489 (876)
- தமிழகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை: 9 (6)
இந்தியாவில் நேற்றைய கொரோனா பாதிப்பு: 37,379 (33,750)
- இதுவரை பதிவான ஓமிக்ரான் பாதிப்பு: 1,892 (1,700)
உலகம் முழுக்க ஓமிக்ரான் வேரியன்ட் பரவிவரும் இந்த சூழலில், பிரான்ஸ் நாட்டில் `IHU’ என்னும் புதிய வேரியன்ட்டின் தொற்று 12 பேரிடம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் குணங்கள் குறித்து முழுமையாக அறிந்த பின்னரே, ஓமிக்ரான் போல இதுவும் Variant Of Concern-னா எனத் தெரியவரும்.
நேற்று ஒரே நாளில் மட்டும் அமெரிக்காவில் 1,080,211 கொரோனா தொற்றுகள் பதிவாகியிருக்கின்றன. இப்படி ஒருநாள் பாதிப்பு, ஒரு நாட்டில் 10 லட்சத்தைத் தாண்டுவது உலகளவில் இதுவே முதல்முறை.
ஓமிக்ரான் பரவல் காரணமாக இந்த மாதம் தொடங்கவிருந்த ரஞ்சி கோப்பை போட்டிகளை ஒத்திவைத்திருக்கிறது பி.சி.சி.ஐ.
மகாராஷ்டிர மாநிலத்தின் 13 அமைச்சர்கள் மற்றும் 70 சட்டமன்ற / சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களையொட்டி, அரசியல்வாதிகள் இந்தக் கொரோனா சமயத்தில் பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கு தொடர்ந்து எதிர்ப்புகள் கிளம்பிவருகின்றன. கடந்த 3 நாள்களாக டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலின் கூட்டத்திற்கும் அப்படி எதிர்ப்புகள் கிளம்பியிருந்தன. இந்நிலையில், நேற்று அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதாகவும், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிற அப்டேட்ஸ்…
இஸ்லாமிய பெண்களை Github தளத்தில் Bulli bai App மூலம் இழிவாக சித்திரித்த விவகாரத்தில், நேற்று முன்தினம் 21 வயது இளைஞனான விஷால் ஜாவை கைது செய்திருந்தது மும்பை காவல்துறை. இந்நிலையில், நேற்று இந்த செயல்களுக்கு உடந்தையாக இருந்ததாக, 18 வயதாகும் ஸ்வேதா சிங் என்ற பெண்ணையும் உத்தரகாண்டில் வைத்து கைது செய்திருக்கிறது மும்பை காவல்துறை.
முதுகலை நீட் கலந்தாய்வில் முன்னேறிய பிரிவினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10% இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இதனால், கலந்தாய்வும் தள்ளிப்போகவேதான், பயிற்சி மருத்துவர்கள் அண்மையில் டெல்லி சாலைகளில் இறங்கிப் போராடினர். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க, 3 நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வை அமைத்திருக்கிறது உச்சநீதிமன்றம். இன்று முதல் விசாரணையும் தொடங்குகிறது.
கவர்னர் ஆர்.என்.ரவியின் உரையுடன் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தொடர் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் நடக்கவிருப்பதாகவும், முதல்முறையாக கேள்வி நேரம் உள்ளிட்ட நிகழ்வுகள் நேரலை செய்யப்படும் எனவும் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஓமிக்ரான் பரவல் காரணமாக, இந்தக் கூட்டத்தொடரும் சென்னை கலைவாணர் அரங்கிலேயே நடக்கிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஷேசாயி தீர்ப்பளித்திருந்தார். இதை எதிர்த்து அ.தி.மு.க மற்றும் சி.என்.சண்முகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகிறது.
On This Day - Jan 05
- தாஜ் மஹாலைக் கட்டிய, முகலாய மன்னர் ஷாஜகான் பிறந்தநாள், 1592
- மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிறந்தநாள், 1955
🔴 இதுவரைக்கும் TSL-ஐ தொடர்ந்து படிச்சிட்டு வர்றீங்க; எனவே இதுபற்றிய உங்க கருத்தை தெரிஞ்சுக்க விரும்புறோம். அதனால், இந்த லிங்கை க்ளிக் பண்ணி உங்களோட ரேட்டிங்கைப் பதிவு பண்ணிடுங்க. TSL-ஐ மேம்படுத்த இது எங்களுக்கு உதவியா இருக்கும்!
அவ்வளவுதான்!
The Subject Line-னோட இன்னைக்கு அப்டேட்ஸ் உங்களுக்குப் பிடிச்சிருக்கும்னு நம்புறேன். பிடிச்சிருந்தா கீழ இருக்க பட்டன் மூலமா உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க… இன்னும் ஏதாச்சும் இந்த TSL-ல் மாத்தணும்னா எனக்கு மெசேஜ் பண்ணுங்க! உங்க கருத்துகள் எங்களுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். 🤞
திரும்ப நாளைக்கு காலைல 7 மணிக்கு சந்திப்போம்!
Have a Nice day ☕️
The Subject Line-ஐ சமூக வலைதளங்களில் பின்தொடர: