ஆப்பிரிக்காவை தண்டிக்கின்றனவா உலக நாடுகள்? 🌍
In Today's Edition: நாடாளுமன்றத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 எம்.பிக்கள் | ட்விட்டரின் புதிய CEO; யார் இந்த பராக் அகர்வால்? | ஹர்பஜன் சாதனையை முறியடித்த அஷ்வின் | போராடும் விவசாயிகளின் அடுத்த திட்டம் | Reading Time: 5 Mins ⏳
ஹாய், ஹலோ… வணக்கம் 👋
திரும்பும் பக்கமெல்லாம் ஓமிக்ரான் வேரியன்ட் பற்றிய செய்திகளா இருக்கா? எங்க, என்ன நடக்குது, எதை நம்புறதுன்னு குழப்பமா இருக்கா? கவலையே வேண்டாம். ஓமிக்ரான் குறித்த முக்கியமான, ஊர்ஜிதமான அப்டேட்கள் அனைத்தும், இனி தினசரி TSL-ல் இடம்பெறும். நீங்க தெரிஞ்சுக்க வேண்டிய எதுவுமே இங்க மிஸ் ஆகாது. வாங்க… இன்றைய அப்டேட்ஸைப் பார்த்திடலாம்.
🚨 ஒரு நிமிஷம்! : The Subject Line (TSL) நியூஸ்லெட்டரின் இந்த இந்த மெயில் உங்களின் Promotions Tab-ல வந்திருந்தா, அதை அப்படியே Move பண்ணி, Primary Tab-க்கு மாத்திடுங்க. இதன்மூலம் தினமும் TSL-ஐ நீங்க மிஸ் பண்ணாம படிக்கமுடியும். ஒருவேளை இந்த மெயில் உங்க நண்பர்கள் மூலம் வந்திருந்தா, தினமும் உங்க இன்பாக்ஸிற்கு நேரடியாக வர, சப்ஸ்கிரைப் பண்ணிடுங்க. Happy Reading! 😊
1️⃣ ஆப்பிரிக்க நாடுகளை தண்டிக்கின்றனவா உலக நாடுகள்? ⚠️
கொரோனா ஓமிக்ரான் வேரியன்ட்டின் முதல் நோய்த்தொற்று கடந்த வாரம், தென்னாப்பிரிக்காவில் பதிவு செய்யப்பட்டு, உடனடியாக உலக சுகாதார மையத்திற்கு (WHO) தகவல் தரப்பட்டு, விரைவாக அது Variant Of Concern-னாகவும் அறிவிக்கப்பட்டது. ஒரு ஆபத்தான வேரியன்ட்டை இவ்வளவு விரைவில் கண்டறிந்து, அதை உலக நாடுகளுக்கு அறிவிப்பது இதுவே முதல்முறை. இந்த வேகத்திற்கு காரணம், ஜீனோம் கண்காணிப்பில் தென்னாப்பிரிக்க விஞ்ஞானிகளுக்கு இருக்கும் நிபுணத்துவமும், உடனடியாக இதை உலகிற்கு அறிவிக்கவேண்டும் என்ற அந்நாட்டின் அக்கறையும்தான். ஆனால், ``ஏன்தான் இப்படிச் செய்தோமோ?” என அவர்கள் புலம்பும்படி நடந்துகொண்டிருக்கின்றன பிற உலக நாடுகள்.
என்ன செய்தன அவை?
WHO ஓமிக்ரானை Variant Of Concern-னாக அறிவித்தவுடன், நமீபியா, ஜிம்பாப்வே உள்ப்ட 9 தென்னாப்பிரிக்க பிராந்திய நாடுகளுடனான சர்வதேச பயணங்களை ரத்து செய்தது அமெரிக்கா. தொடர்ந்து பிரிட்டன், ஐரோப்பிய யூனியன், ஜப்பான் எனப் பல நாடுகளும் இதேபோல பயணத்தடைகளை விதித்தன. இந்தியா கடுமையான குவாரன்டைன் விதிகளை அறிவித்திருக்கிறது. இந்த தீவிரமும், அவசரமும்தான் தென்னாப்பிரிக்காவை கோபம் கொள்ளச் செய்திருக்கிறது.
பயணத்தடைகள் விதிப்பது நியாயம்தானே?
நியாயம்தான். ஆனால், தென்னாப்பிரிக்கா கோபப்படுவதற்கும் சில நியாயங்கள் இருக்கின்றன. அவை…
தென்னாப்பிரிக்க பிராந்திய நாடுகளில் வெறும் இரண்டு நாடுகளில் மட்டுமே (தென்னாப்பிரிக்கா & போட்ஸ்வானா) இதுவரை ஓமிக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆனால், உலக நாடுகள் மொத்தம் 9 நாடுகளுக்கும் சேர்த்து பயணத்தடைகளை விதிக்கின்றன. இது அறிவியல்பூர்வமானதா?
பெல்ஜியம் நாட்டில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் தொற்றுக்கும், தென்னாப்பிரிக்காவுக்கும் நேரடியாக எந்தத் தொடர்புமே இல்லை. இந்த வேரியன்ட் பரவலுக்கு தென்னாப்பிரிக்கா மட்டுமே காரணம் இல்லையென்பதற்கு இதுவே சாட்சி. இது மட்டுமல்ல; இதேபோல ஆப்பிரிக்க நாடுகளைத் தவிர்த்து, வேறு நாடுகளில் தொற்றுகள் கண்டறியப்பட்டாலும், ஆப்பிரிக்க நாடுகளிடம் நடந்துகொள்வதைப் போல அவர்களிடம் ஏன் யாரும் நடந்துகொள்வதில்லை?
ஓமிக்ரான் தொற்று, முதலில் தென்னாப்பிரிக்காவில் பதிவு செய்யப்பட்டாலும், அது இங்கிருந்து மட்டுமே உருவாகவில்லை. அதேபோல, பயணத்தடைகளால் வேறு எங்கும் செல்லாமல் இருக்கவும் போவதில்லை. ஏற்கெனவே பிரிட்டன் உள்பட பல நாடுகளில் ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் எங்களை மட்டும் தனிமைப்படுத்தி என்ன பயன்?
மேலும், ``தென்னாப்பிரிக்க நாடுகள் இவ்வளவு விரைவாக செயல்பட்டு, உலகிற்காக உதவியிருப்பதை நீங்கள் பாராட்ட வேண்டும். ஆனால், இதுபோன்ற பயணத்தடைகளால் எங்களை தண்டிக்கிறீர்கள்” என்கின்றனர் அந்நாட்டு தலைவர்கள்.
ஒவ்வொரு நாடுமே தங்கள் மக்களைப் பாதுகாக்க, இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது நியாயமே. ஆனால், அவை அறிவியல்பூர்வமாக இல்லாமல், துணிச்சலாக செயல்பட்டதற்காக பொத்தாம் பொதுவாக ஆப்பிரிக்க நாடுகளை தண்டிப்பது போல இருப்பதுதான் பிரச்னையே. இதையேதான் WHO-வும் வலியுறுத்தியிருக்கிறது. ஆப்பிரிக்க நாடுகள் கோபப்பட இது மட்டும் காரணமல்ல.
வளர்ந்த நாடுகளின் அலட்சியம்:
தென்னாப்பிரிக்க நாடுகளில், மக்களுக்கு மிக முக்கியமான வாழ்வாதாரமாக இருப்பது சுற்றுலா துறை. ஏற்கெனவே இரண்டு ஆண்டுகளாக சுற்றுலா சார்ந்த தொழில்கள் கடும் நலிவுற்று தற்போதுதான் மீண்டு வந்திருக்கின்றன. தற்போது உலக நாடுகளின் இதுபோன்ற அலட்சியமான நடவடிக்கைகளால் மீண்டும் சுற்றுலா துறை பெரும் சரிவை சந்தித்திருக்கிறது.
மேலும், ஆப்பிரிக்காவில் இருக்கும் பல ஏழை நாடுகள் இன்னும் தடுப்பூசி கிடைக்காமல் திண்டாடிக்கொண்டிருக்க அமெரிக்கா, பிரிட்டன் போன்ற பணக்கார நாடுகளோ பூஸ்டர் டோஸ்களுக்காக அவற்றை சேமித்து வைத்துக்கொண்டிருக்கின்றன. பலமுறை WHO உள்பட பல சர்வதேச அமைப்புகள் வலியுறுத்தியும், வளர்ந்த நாடுகள் ஆப்பிரிக்க நாடுகளுக்கு முழுமையாக தடுப்பூசி கிடைக்க உருப்படியாக எந்த ஏற்பாடுகளையும் செய்யவில்லை. இதனால் அந்த நாடுகளில், கொரோனா அடிக்கடி உருமாற்றம் அடைய வாய்ப்பிருக்கிறது. இப்படி இந்த வேரியன்ட் பிரச்னைக்கு முக்கிய காரணமே வளர்ந்த நாடுகள்தான் என கை காட்டுகின்றனர் நிபுணர்கள்.
இன்றைக்கு கொரோனாவை உலகம் மொத்தமும் ஒற்றுமையாக எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காக, தென்னாப்பிரிக்க ஓடோடி வந்து, புதிய வேரியன்ட் பற்றி WHO-வுக்கு தகவல் சொல்கிறது. இதேபோல, கொரோனா வைரஸை முழுமையாக ஒழிக்க, வளர்ந்த நாடுகளும் ஓடோடி வந்து, ஆப்பிரிக்க நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்கி உதவியிருக்க வேண்டுமல்லவா? அது நடக்கவேயில்லை.
மாறாக, தற்போது மீண்டும் கொரோனா பிரச்னை பெரிதாகவும், வளர்ந்த நாடுகளின் தலைவர்கள் ஆப்பிரிக்க நாடுகளை பலிகடாவாக்குகிறார்கள் என்பதுதான் அவர்களையும், நிபுணர்களையும் அதிகம் கோபம் கொள்ளச் செய்திருக்கிறது. .
சரி, ஓமிக்ரான் பற்றிய புது அப்டேட்?
மிக அதிகமான முறை உருமாறிய வைரஸ் என்பதால், ஓமிக்ரான் வேரியன்ட் நிச்சயம் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் என நேற்று அறிவித்திருக்கிறது WHO. மேலும், தடுப்பூசி செலுத்தியோர் குறைவாக உள்ள நாடுகளில் இதன் பாதிப்பு அதிகமாக இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.
ஓமிக்ரான் எந்தளவு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பது குறித்து இன்னும் உறுதியான ஆராய்ச்சி முடிவுகள் எதுவும் வரவில்லை. ஆனால், முதன்முதலாக பதிவுசெய்யப்பட்ட தென்னாப்பிரிக்க தொற்றாளர்களிடையே, இது லேசான அறிகுறிகளை மட்டுமே ஏற்படுத்தியிருக்கிறது.
2️⃣ ட்விட்டரின் புதிய CEO-வான பராக் அக்ரவால்
ட்விட்டர் நிறுவனத்தின் CEO பதவியிலிருந்து நேற்று திடீரென விலகியிருக்கிறார் ஜேக் டோர்ஸி. ட்விட்டரின் இணை நிறுவனரான ஜேக், 2007-ல் அந்நிறுவனத்தின் CEO-வாகப் பொறுப்பேற்றார். ஆனால், அடுத்த ஆண்டே நிறுவனத்திலிருந்து, தலைமைப் பண்புக்கு தகுதியில்லை எனச் சொல்லி வெளியேற்றப்பட்டார். பின்னர் 2015-ம் ஆண்டுதான் மீண்டும் CEO-வாக ட்விட்டருக்குள் நுழைந்தார். அன்றிலிருந்து நேற்று வரை CEO-வாக செயல்பட்டு வந்த ஜேக், நேற்று அந்தப் பதவியிலிருந்தும் விலகியிருக்கிறார். ட்விட்டரின் நிர்வாகக் குழுவில் இருந்தும் விரைவில் விலகவிருக்கிறார். இதுகுறித்து, நேற்று ட்வீட் செய்திருக்கும் ஜேக்,
``இந்த நிறுவனம், அதன் நிறுவனர்களிடமிருந்து அடுத்த கட்டத்திற்கு செல்லவேண்டிய காலம் வந்துவிட்டது. இது நிறுவனர்களின் துணையின்றி, தனியாகவே இயங்கும் நிலைக்கும் வந்துவிட்டது. எனக்கு அடுத்து பராக் அக்ரவால் ட்விட்டரின் CEO-வாக பொறுப்பேற்கவிருக்கிறார். பராக் மீது நான் மீது வைத்திருக்கும் நம்பிக்கை அளப்பரியது. கடந்த 10 வருடங்களாக ட்விட்டர் நிறுவனத்தில் அவருடைய உழைப்பு அபாரமானது. அவருடைய அன்புக்கும், அன்பான உள்ளத்திற்கும், பணிக்கும் நான் நன்றியுடையவனாக இருப்பேன். பராக் தலைமைப் பொறுப்பை ஏற்கும் நேரம் வந்துவிட்டது” எனத் தெரிவித்திருக்கிறார்.
பராக் அக்ரவால், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவராவர். ஐ.ஐ.டி பாம்பே-யில் இன்ஜினீயரிங் முடித்துவிட்டு, பின்னர் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். 2011-ல் ட்விட்டரில் விளம்பரப்பிரிவில் இன்ஜினீயராக கரியரைத் தொடங்கிய பராக், ட்விட்டரின் சேவைகளில் AI-ஐ சிறப்பாகப் பயன்படுத்துவதில் கில்லாடி. 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் CTO-வாக பொறுப்பேற்றிருந்த பராக், நேற்று முதல் CEO-வாக சார்ஜ் எடுத்திருக்கிறார்!
விவாதங்களுக்கு `நோ’ சொன்ன பா.ஜ.க:
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் முதல்நாளான நேற்று, மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதற்கான மசோதா, இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டது. லோக் சபாவில் மதியம் 12:06 மணிக்கு தாக்கல் செய்யப்பட்ட மசோதா, 12:10-க்கே நிறைவேற்றப்பட்டது. ராஜ்ய சபாவிலும் அடுத்த 2 மணி நேரத்திற்குள் நிறைவேற்றப்பட்டது. இப்படி, மசோதா குறித்து விவாதிக்காமல், அவசர அவசரமாக அவற்றைத் தாக்கல் செய்ததற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. விவசாயிகளின் மற்ற கோரிக்கைகள் குறித்துப் பேச எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்த நிலையில், மத்திய அரசு இப்படி நடந்துகொண்டிருக்கிறது. இதற்கு முன்பு சட்டங்களைத் திரும்பப் பெறும் மசோதாக்களின்போது, விவாதங்கள் நடைபெற்றுள்ளதையும் சுட்டிக்காட்டுகின்றனர் எதிர்க்கட்சியினர்.
12 எம்.பி-க்கள் சஸ்பெண்ட்:
கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், ராஜ்ய சபாவில் அவை ஒழுங்குகளை மீறி நடந்ததாகவும், அவை பாதுகாவலர்களை தாக்கியதாகவும் கூறி 12 எம்.பி-க்களை இந்தக் குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்துள்ளது மத்திய அரசு. இதில் 6 காங்கிரஸ், 2 திரிணமுல் காங்கிரஸ், 2 சிவசேனா, 2 கம்யூனிஸ்ட் (சி.பி.எம் மற்றும் சி.பி.ஐ) எம்.பி-க்கள் அடக்கம். இப்படி முந்தைய கூட்டத்தொடருக்காக, நடப்பு கூட்டத்தொடரிலிருந்து எம்.பி-க்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவது இதுவே முதல்முறை. இந்நிலையில், அரசின் இந்த முடிவை எதிர்த்து காங்கிரஸ், தி.மு.க, சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் கூட்டாக கண்டனம் தெரிவித்திருக்கின்றன. அடுத்தகட்டமாக என்ன செய்யலாம் என்பது குறித்து நாளை ஆலோசனையும் நடத்தவிருக்கின்றன.
விவசாயிகளின் அடுத்த மூவ்:
மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்பட்டுள்ள நிலையில், வரும் டிசம்பர் 4-ம் தேதியன்று விவசாயிகள் மீண்டும் கூடிப்பேசவிருக்கின்றனர். போராட்டத்தின் அடுத்தகட்டம் குறித்தும், அரசிடம் வைக்கப்பட்டிருக்கும் பிற கோரிக்கைகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவிருக்கிறது.
ஹர்பஜன் சாதனையை முறியடித்த அஷ்வின்:
இந்தியா- நியூசிலாந்து இடையே கான்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி, டிராவில் முடிந்திருக்கிறது. இந்தப் போட்டியில், டாம் லாதமின் விக்கெட்டை எடுத்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தன் 418-வது விக்கெட்டைக் கைப்பற்றி, இந்தியாவின் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த பவுலர்களின் வரிசையில் மூன்றாம் இடம் பிடித்தார் அஷ்வின். 417 விக்கெட்டுகளுடன் 3-வது இடத்திலிருந்த ஹர்பஜன் சிங்கின் சாதனையை அஷ்வின் தன் 80-வது போட்டியில் முறியடித்திருக்கிறார்.
Stat Alert - With 418 wickets, @ashwinravi99 becomes India's third-highest wicket-taker in Tests. #TeamIndiaமுதல் இரண்டு இடங்களில் அனில் கும்ளே (619) மற்றும் கபில் தேவ் (434) இருக்கின்றனர்.
இன்றைய Weather Alert: ☔️
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று சில கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விவரம்… 👇
சென்னையில், சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தே.மு.தி.க தனித்துப் போட்டியிடும் எனவும், போட்டியிட விரும்புபவர்கள் டிசம்பர் 1 முதல் 7-ம் தேதிக்குள் மாவட்ட தலைமை அலுவலகங்களில் விருப்ப மனுக்களைத் தாக்கல் செய்யவேண்டும் எனவும் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
ஏழைகளுக்கான நலத்திட்ட விளம்பர பேனர்களில், தமிழகத்தின் மூத்த எழுத்தாளர் பெருமாள் முருகனின் படத்தை, பயனாளர்களில் ஒருவராக இடம்பெறச் செய்து சர்ச்சையைக் கிளப்பியிருக்கின்றனர் டெல்லி பா.ஜ.க-வினர்.
கொரோனா ஓமைக்ரான் வேரியன்ட் தொற்றிற்கான பரிசோதனைகள், தமிழகம் முழுக்க அரசின் 12 ஆய்வகங்களில் நடைபெறவிருக்கின்றன.
2016-ல் பதிவு செய்யப்பட்ட தங்க மோசடி வழக்கு தொடர்பாக, நேற்று கேரளாவில் நேரில் ஆஜராகி, அமலாக்கத்துறையினரிடம் விளக்கம் அளித்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.
சென்னையைச் சேர்ந்த தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனமான ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸின் ஐ.பி.ஓ இன்று வெளியாகிறது. இந்த ஐ.பி.ஓ-வில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் இன்று முதல் டிசம்பர் 2-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
2022-ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் மெகா ஏலம் விரைவில் நடக்கவிருக்கிறது. அதற்கு முன்பாக 8 அணிகளும், யார் யாரை ரீட்டெயின் செய்கின்றன என்ற விவரங்களை இன்று வெளியிடவிருக்கின்றன. ஒவ்வொரு அணியும் அதிகபட்சம் 4 வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம்.
On This Day - Nov 30
- இந்திய விஞ்ஞானி ஜெகதீஷ் சந்திர போஸின் பிறந்தநாள், 1858
- மைக்கேல் ஜாக்சனின் உலகப்புகழ் பெற்ற திரில்லர் ஆல்பம் வெளியான நாள், 1982
அவ்வளவுதான்!
The Subject Line-னோட இன்னைக்கு அப்டேட்ஸ் உங்களுக்குப் பிடிச்சிருக்கும்னு நம்புறேன். பிடிச்சிருந்தா கீழ இருக்க பட்டன் மூலமா உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க… இன்னும் ஏதாச்சும் இந்த லிஸ்ட்ல சேர்க்கணும், இருக்குற விஷயங்கள்ல ஏதாச்சும் மாத்தணும்னா எனக்கு மெசேஜ் பண்ணுங்க!
திரும்ப நாளைக்கு காலைல 7 மணிக்கு சந்திப்போம்!
Have a Nice day! ☕️
The Subject Line-ஐ சமூக வலைதளங்கள் மூலம் பின்தொடர: