😷 கொரோனாவின் ஒமிக்ரான் வேரியன்ட்; நம் பதற்றம் சரியா?
In Today's Edition: இந்தியாவில் வறுமையின் நிலை என்ன? | இன்று தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் | உயர்ந்த ஜியோவின் கட்டணங்கள் | தமிழக அரசின் `மீண்டும் மஞ்சப்பை' | Reading Time: 5 Mins ⏳
ஹாய், ஹலோ… வணக்கம் 👋
இந்த வீக்கெண்டில் நடந்த முக்கியமான விஷயங்கள் மற்றும் இன்றைக்கான சிறப்பு அப்டேட்களைப் பார்க்கலாமா?
📣 Note: The Subject Line (TSL) நியூஸ்லெட்டரின் இந்த இந்த மெயில் உங்களின் Promotions Tab-ல வந்திருந்தா, அதை அப்படியே Move பண்ணி, Primary Tab-க்கு மாத்திடுங்க. இதன்மூலம் தினமும் TSL-ஐ நீங்க மிஸ் பண்ணாம படிக்கமுடியும். ஒருவேளை இந்த மெயில் உங்க நண்பர்கள் மூலம் வந்திருந்தா, தினமும் உங்க இன்பாக்ஸிற்கு நேரடியாக வர, சப்ஸ்கிரைப் பண்ணிடுங்க. Happy Reading! 😊
முதலில் இன்றைய Weather Alert: ⛈☔️
தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்கள் பலவற்றிலும் நேற்று கனமழை பெய்திருக்கிறது. இந்நிலையில் இன்றும் கீழ்க்கண்ட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் சில இடங்களில் லேசான மற்றும் மிதமான மழைபெய்யலாம். நாளை வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவின் ஒமிக்ரான் வேரியன்ட்; நம் பதற்றம் சரியா? 😷
இந்த பேண்டெமிக்கின் `டைம் லூப்’பில் சிக்கி, திரும்பத் திரும்ப திணறுவது போன்ற உணர்வு உங்களுக்கு மட்டுமல்ல; உலக நாடுகள் அனைத்துக்குமே மீண்டும் வந்துவிட்டது. ஒரு கொரோனா வேரியன்ட், மீண்டும் உலக நாடுகளைப் பதற்றம்கொள்ளச் செய்திருக்கிறது. என்ன காரணம்?
இதுவரை இல்லாத அளவு ஏன் ஒமிக்ரான் (B.1.1.529) வேரியன்ட்டுக்கு மட்டும் இவ்வளவு பதற்றம்?
காரணம், அதன் உருமாறும் தன்மைதான். ஒரு வைரஸ் ஒருமுறை / இருமுறை உருமாறினால், அதனால் பெரியளவில் பிரச்னைகள் இருக்காது. நம்முடைய தடுப்பூசிகள் தொடர்ந்து அதை எதிர்த்தும் வேலை செய்யும்; ஏற்கெனவே தொற்று வந்து உடலில் ஆன்டிபாடி இருப்பவர்களும் கொஞ்சம் பயமில்லாமல் இருக்கலாம். ஆனால், 50 முறை உருமாறினால்..? அதுவும், தடுப்பூசிகள் கொரோனா வைரஸின் ஸ்பைக் புரோட்டீன்கள் எனப்படும் பகுதியைக் குறிவைத்தே பணி செய்பவை. அந்த ஸ்பைக் புரோட்டீனில் மட்டுமே 30 முறை உருமாறினால்? கிட்டத்தட்ட கொரோனாவின் புது அவதாரம் போன்றது அது. அதனால்தான் உடனடியாக உலகிற்கு எச்சரிக்கை மணியை அடித்திருக்கிறார்கள் தென்னாப்பிரிக்க ஆராய்ச்சியாளர்கள். உலக சுகாதார நிறுவனமும் இதை Variant Of Concern என அறிவித்திருக்கிறது.
அப்படியெனில் திரும்பவும் அடுத்தடுத்த அலைகள் வருமா? 🦠
இந்தக் கேள்வி மட்டுமல்ல; ஏற்கெனவே எடுத்துக்கொண்ட தடுப்பூசிகள் பலனளிக்குமா, இனிமேலும் இதே தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ளலாமா, ஏற்கெனவே நோய் வந்து குணமானவர்களைத் தாக்குமா, தடுப்பூசி அதிகம் செலுத்தப்பட்ட நாடுகளிலும் இது பரவுமா என எக்கச்சக்க கேள்விகள் ஒமிக்ரானைச் சுற்றி எழுகின்றன.
ஆனால், ``இந்த வேரியன்ட் பெருமளவில் உருமாறியிருப்பதால், வேகமாகப் பரவவும், ஏற்கெனவே தொற்று வந்தவர்களை மீண்டும் தாக்கவும், தடுப்பூசியால் வந்த ஆன்டிபாடிகளிடமிருந்து தப்பிக்கவும் வாய்ப்பு அதிகம்” என்று மட்டுமே இதுவரை கணித்துள்ளனர் நிபுணர்கள். வரும் நாள்களில் இதுகுறித்து கிடைக்கும் கூடுதல் தகவல்களுக்குப் பிறகே உறுதியான முடிவுக்கு வரமுடியும் என்கின்றனர் அவர்கள்.
அதேசமயம், தென்னாப்பிரிக்காவில் சில இடங்களில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்துவருவதால், அது மட்டும், `ஓமிக்ரான் வேலையாக இருக்கலாம்!’ எனக் கை காட்டுகிறார்கள். எனவே, டெல்டா வேரியன்ட் போலவே, இதுவும் உலகம் முழுக்க அடுத்த அலையை ஏற்படுத்தலாம் என்பதால்தான் உலக நாடுகள் அனைத்தும் அலர்ட்டாகியிருக்கின்றன.
பிற நாடுகளில் நிலை என்ன? 🌍
தென்னாப்பிரிக்காவிலிருந்து பிற நாடுகளுக்குச் சென்றவர்களுக்கும் தொற்று உறுதியானது தெரிந்ததுமே, உடனே ஆப்பிரிக்க நாடுகளுடனான விமானப் பயணத்தைத் துண்டித்துவிட்டது அமெரிக்கா. சர்வதேச விமானப் போக்குவரத்தை தடைசெய்யும் இதேபோன்ற கடுமையான விதிமுறைகளைப் பிற நாடுகளும் ஒவ்வொன்றாக அமல்படுத்தி வருகின்றன.
இதுவரை இங்கிலாந்து, நெதர்லாந்து, ஜெர்மனி, இத்தாலி, பெல்ஜியம், ஹாங்காங், இஸ்ரேல், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலெல்லாம் ஓமிக்ரான், `உள்ளேன் ஐயா’ சொல்லிவிட்டது. எனவே விரைவில் இன்னும் பல நாடுகளில் ஓமிக்ரான் கண்டறியப்பட்டாலும் வியப்பேதும் இல்லை.
இந்தியா என்ன செய்கிறது?
தமிழகம் உட்பட பல மாநிலங்களும், தங்கள் சர்வதேச விமான நிலையங்களில் வெளிநாட்டுப் பயணிகளுக்கான கண்காணிப்பையும், பரிசோதனைகளையும் தீவிரப்படுத்தியிருக்கின்றன.
நேற்று இரவு மத்திய அரசும் சீனா, ஹாங்காங், இஸ்ரேல், ஐரோப்பிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு கடுமையான குவாரன்டைன் விதிகளை அறிவித்திருக்கிறது.
ஏற்கெனவே இரண்டாம் மற்றும் மூன்றாம் அலைகள் பல நாடுகளிலும் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், மீண்டும் அதேபோன்றதொரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுவிடக்கூடாது என்பது மட்டுமே உலக நாடுகளின் இப்போதைய முதல் கவலை. அதனால்தான் இவ்வளவு பதற்றமும், ஏற்பாடுகளும்.
நாடாளுமன்ற கூட்டத்தொடர்: எதிர்க்கட்சிகளின் திட்டம் என்ன? 💼
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி டிசம்பர் 23-ம் தேதி வரை நடக்கவிருக்கிறது. 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதற்கான மசோதா, முதல் நாளான இன்றே தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லியில் போராடும் விவசாயிகள், வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறுவதைத் தாண்டி, மத்திய அரசிடம் குறைந்தபட்ச ஆதார விலைக்கான (MSP) சட்டபூர்வமான உறுதி உள்பட மொத்தம் 6 கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர். அவற்றிற்கு எதிர்க்கட்சிகளும் ஆதரவளித்திருந்தன. எனவே, எதிர்க்கட்சிகள் அந்தப் பிரச்னையை இந்தக் கூட்டத்தொடரில் எழுப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கூட்டத்தொடரை முன்னிட்டு, நேற்று நடந்த அனைத்துக் கட்சியினர் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கவில்லை. அந்தக் கூட்டத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங், பியூஷ் கோயல் ஆகியோர் அரசு சார்பில் கலந்துகொண்டனர்.
இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், விலைவாசி உயர்வு, பெகாசஸ் விவகாரம், CAA சட்டம், MSP-க்கான சட்டம், சீன ஆக்கிரமிப்பு, போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு, வேலையில்லா திண்டாட்டம், மகளிர் இடஒதுக்கீடு உள்ளிட்ட முக்கியமான பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பினர். எனவே, இவை இந்தக் கூட்டத்தொடரிலும் எதிரொலிக்கலாம்.
இந்தியா
1. வறுமையின் பிடியில் 25% பேர்:
முதல்முறையாக MPI (Multidimensional Poverty Index) என்னும் இந்தியாவின் வறுமையைக் கணக்கிடும் புதிய அட்டவணை ஒன்றை வெளியிட்டிருக்கிறது நிதி ஆயோக். இதற்கு முன்பு இருந்த வறுமைக்கோடு கணக்கிடும் முறையில் மக்களின் தனிநபர் வருமானம் மற்றும் நுகர்வுத்திறன் ஆகியவை மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டு வந்தன. ஆனால், இந்த MPI-ல் மக்களின் வாழ்க்கைத் தரம், கல்வி, உடல்நலம் ஆகிய மூன்று பிரிவுகள் மற்றும் அவற்றின் உட்பிரிவுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. 2015-16 ஆகிய காலத்தில் தேசிய குடும்பநல சர்வே வெளியிட்ட தகவல்களின் படி, இந்த MPI கணக்கிடப்பட்டுள்ளது.
இதன்படி, இந்தியாவிலேயே அதிகம்பேர் வறுமையில் வாடும் மாநிலம் பீகார் (51.91%). அதற்கடுத்த இடத்தில் ஜார்க்கண்ட் (42.16%), உத்தரப்பிரதேசம் (37.79%) ஆகிய மாநிலங்கள் இருக்கின்றன.
கேரளா (0.71%), கோவா (3.76%), சிக்கிம் (3.82%) ஆகிய மாநிலங்கள் இந்தப் பட்டியலில் கடைசி இடங்களில் இருக்கின்றன. தமிழகம் (4.89%) இதில் கடைசியிலிருந்து 4-வது இடத்தில் இருக்கிறது.
மொத்தமாக இந்தியாவில் 25.01% பேர் வறுமையில் இருக்கின்றனர்.
ஒருவரின் தனிநபர் வருமானம் மட்டுமே அவருடைய வறுமையைக் கணக்கிட சரியான் அளவுகோல் இல்லை என நிபுணர்களால் கருதப்பட்டாதாலேயே, அது கைவிடப்பட்டு, தற்போது நிதி ஆயோக்கால் MPI முறை பின்பற்றப்படுகிறது.
2. திரிபுராவில் பா.ஜ.க அமோக வெற்றி:
மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் போலவே, திரிபுராவின் உள்ளாட்சித் தேர்தலிலும் பா.ஜ.க-வுக்கும், திரிணமுல் காங்கிரஸூக்கும் கடும் போட்டி நிலவியது. கடந்த சில வாரங்களாக அங்கு நடந்த வன்முறை சம்பவங்கள், இரு கட்சியினருக்கு இடையேயான மோதல்களை அடுத்து, இந்த உள்ளாட்சித் தேர்தலில் திரிணமும் காங்கிரஸ், ஆளும் பா.ஜ.க அரசுக்கு அதிர்ச்சியளிக்குமா என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேர்தல் நடைபெற்ற 222 வார்டுகளில் 217 வார்டுகளை வென்று, பா.ஜ.க அமோக வெற்றி பெற்றிருக்கிறது. 112 வார்டுகளில் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் யாரும் நிற்காததால் ஏற்கெனவே அவற்றையும் பா.ஜ.க கைப்பற்றியிருந்தது. இப்படியாக மொத்தமாக திரிபுராவில் 334 வார்டுகளில் 329 வார்டுகளை வென்றுள்ளது பா.ஜ.க. திரிணமுல் ஒரே ஒரு வார்டிலும், கம்யூனிஸ்ட் கட்சி 3 வார்டுகளிலும், சுயேட்சை ஒரு வார்டிலும் மட்டும் வென்றுள்ளனர்.
3. மன் கி பாத்தில் தூத்துக்குடி:
`மன் கி பாத்’ நிகழ்ச்சியில் நேற்று பேசிய பிரதமர் மோடி, தூத்துக்குடி கிராம மக்களின் ஒரு முயற்சியைக் குறிப்பிட்டு பேசினார். அங்குள்ள மக்கள், தீவுகள் மற்றும் மணல் திட்டுகளில் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள பனைமரங்களை நடுவதையும், அந்த மரங்கள், சூறாவளி, புயல் என இயற்கைப் பேரிடர் காலங்களிலும் உறுதியுடன் நிற்பதையும் குறிப்பிட்டு அவர்களைப் பாராட்டினார்.
4. முடிவுக்கு வந்த முனாவரின் பயணம்:
பெங்களூருவில் நடக்கவிருந்த ஸ்டாண்ட் அப் காமெடியன் முனாவர் ஃபரூக்கியின் நிகழ்ச்சி ஒன்று வலதுசாரி குண்டர்களின் எதிர்ப்பாலும், காவல் துறையின் அழுத்தத்தாலும் நேற்று நிறுத்தப்பட்டது. கடந்த 2 மாதங்களில் இதேபோன்ற மிரட்டல்களால் நிறுத்தப்படும் முனாவரின் 12-வது நிகழ்ச்சி இது. இதனால் மனமுடைந்த அவர், ``வெறுப்பு வென்றது; கலைஞன் தோற்றான் - அநீதி” என இன்ஸ்டாவில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ``இது அநியாயம். அந்த நிகழ்ச்சிக்கு நாங்கள் சென்சார் சர்ட்டிஃபிகேட் கூட வைத்திருக்கிறோம். அதில் பிரச்னைக்குரியதாக எதுவுமே இல்லை. மிரட்டல்களால் நாங்கள் ரத்து செய்யும் 12-வது நிகழ்ச்சி இது. நான் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன். இனி அவ்வளவுதான்; அனைவருக்கும் நன்றி!” எனத் தெரிவித்திருக்கிறார். இந்து கடவுள்களை அவமதித்ததாகக்கூறி ஏற்கெனவே ஒருமுறை ஆதாரமின்றி, மத்தியப் பிரதேச போலீஸாரால் கைது செய்யப்பட்டவர் முனாவர். தற்போது மீண்டும் வெறுப்பரசியலால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.
தமிழகம்
5. ஆளுநரிடம் வலியுறுத்திய முதல்வர்:
நீட் தேர்விலிருந்து தமிழகம் விலக்கு பெறுவதற்கான சட்ட முன்வரைவை குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கச் சொல்லி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் நேரில் சந்தித்து வலியுறுத்தினார். ஆனால், இதுகுறித்த ராஜ் பவனின் செய்திக்குறிப்பில், நீட் சட்டம் குறித்த முதல்வரின் கோரிக்கை பற்றி எதுவும் குறிப்பிடப்படாமல், மழை வெள்ளம் மற்றும் கொரோனா குறித்த பாதிப்பு பற்றி மட்டுமே இருவர் தரப்பிலும் விவாதிக்கப்பட்டதாக இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழகத்தின் கொரோனா பாதிப்பு:
நேற்று பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை: 736
உயிரிழப்புகள்: 09
அண்ணாமலை வேண்டுகோள்: ``திரைப்படம் என்பது பெரும்பாலும் இயக்குநரின் கற்பனையின் வெளிப்பாடு. அவர்கள் பார்த்த படித்த மற்றும் கேள்விப்பட்ட சம்பவங்களின் அடிப்படையில் ஒரு திரைப்படம் உருவாகிறது. நமது கட்சி சகோதர சகோதரிகள், சில நேரங்களில் பொழுதுபோக்கு திரைப்படங்களையும் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். கட்சியில் முக்கியப்பதவியில் இருக்கும் யார் சொல்லும் கருத்தும் கட்சியின் கருத்தாக மாறுகின்ற சூழல் இருக்கிறது. எனவே திரைப்படத்துறை குறித்து தேவையற்ற விமர்சனங்கள் விவாதங்கள் கருத்துக்களை கட்சி நிர்வாகிகள் தவிர்க்க வேண்டும்” என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார். அண்மையில் வெளியான மாநாடு திரைப்படம் குறித்து பா.ஜ.க நிர்வாகி ஒருவர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அண்ணாமலை அறிக்கை.
மீண்டும் மஞ்சப்பை: ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டைக் குறைக்கவும், தடுக்கவும் தமிழக அரசு சார்பில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தமிழக சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது. அந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவும், மக்களிடையே மஞ்சப்பை பயன்பாட்டை அதிகரிக்கவும், `மீண்டும் மஞ்சப்பை’ என்னும் விழிப்புணர்வு திட்டமும் செயல்படுத்தப்படவிருக்கிறது.
உயர்ந்த ஜியோ கட்டணங்கள்: ஏர்டெல், Vi (வோடஃபோன் - ஐடியா)-வைத் தொடர்ந்து ஜியோ நிறுவனமும் தன் கட்டணங்களை உயர்த்தியுள்ளது. இதுவரை ₹75-ஆக இருந்த ஜியோவின் மினிமம் பிளான் இனிமேல் ₹91
சாவரின் தங்கப் பத்திரங்கள் இன்று வெளியீடு: 2021-22 ஆண்டிற்கான 8-வது Sovereign Gold Bond (SGB) சீரிஸை ரிசர்வ் வங்கி இன்று வெளியிடுகிறது. இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு இதில் முதலீடு செய்யலாம். ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹4,791 ஆகவும், ஆன்லைன் மூலம் வாங்குபவர்களுக்கு ₹4,741 ஆகவும் இந்தமுறை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நேரடியாக தங்கம் வாங்காமல், `பேப்பர் கோல்டு’ எனப்படும் மாற்று வழிகளில் முதலீடு செய்பவர்கள் SGB-ஐ தேர்வு செய்யலாம்.
On This Day - Nov 29
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்த தினம், 1908
உலகப் புகழ்பெற்ற பார்சிலோனா ஃபுட்பால் கிளப் தொடங்கப்பட்ட தினம், 1899
அவ்வளவுதான்!
The Subject Line-னோட இன்னைக்கு அப்டேட்ஸ் உங்களுக்குப் பிடிச்சிருக்கும்னு நம்புறேன். பிடிச்சிருந்தா கீழ இருக்க பட்டன் மூலமா உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க… இன்னும் ஏதாச்சும் இந்த லிஸ்ட்ல சேர்க்கணும், இருக்குற விஷயங்கள்ல ஏதாச்சும் மாத்தணும்னா எனக்கு மெசேஜ் பண்ணுங்க!
திரும்ப நாளைக்கு காலைல 7 மணிக்கு சந்திப்போம்!
Have a Nice day! ☕️
The Subject Line-ஐ சமூக வலைதளங்கள் மூலம் பின்தொடர: