🎯 ஏன் விவசாயிகள் இன்னும் வீடு திரும்பவில்லை?
In Today's Edition: போராடும் விவசாயிகளின் அடுத்த திட்டம் என்ன? | வெள்ளத்தில் தத்தளிக்கும் ஆந்திரா | வருத்தம் தெரிவித்த ஜெய்பீம் இயக்குநர் | தமிழக அரசு வெளியிட்ட குழந்தைகளுக்கான கொள்கை | Reading Time: 4½ Mins
ஹாய், ஹலோ… வணக்கம்! 👋
வீக்கெண்ட் ஹேங் ஓவர் முடிஞ்சு, இந்த வாரத்தைத் தொடங்க சுறுசுறுப்பா ரெடியாகிட்டு இருப்பீங்க. வாங்க… கூடவே இந்த நாளோட மிக முக்கியமான அப்டேட்ஸை வேகமா பார்த்துடுவோம்.
Weather Alert
தமிழகத்தில் பெய்துவந்த மிக அதிக கனமழை வெள்ளிக்கிழமைக்குப் பின் குறைந்துவிட்டது. இருப்பினும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
பிற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் லேசான அல்லது மிதமான மழை பெய்யலாம்.
1. விவசாயிகள் ஏன் இன்னும் வீடு திரும்பவில்லை?
கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக, கடந்த வெள்ளிக்கிழமை தொலைக்காட்சிகளில் தோன்றி அறிவித்தார் இந்தியப் பிரதமர் மோடி. இந்த அறிவிப்பு டெல்லி, பஞ்சாப், உ.பி எல்லைகளில் போராடும் விவசாயிகளிடையே பெரும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. ``ஓராண்டுக்கும் மேலாக நடக்கும் உறுதியான போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி” எனக் கொண்டாடினர். ஆனால், இன்னும் விவசாயிகளுக்கும் அரசுக்குமான முரண்பாடுகள் முடியவில்லை. வெள்ளிக்கிழமை பிரதமர் மோடி பேசும்போது, ``போராடும் விவசாயிகள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார். ஆனால், இன்னும் விவசாயிகள் வீடு திரும்பவில்லை.
என்ன பிரச்னை?
ஆரம்பம் முதலே, வேளாண் சட்டங்களில் இருந்த பிரச்னைகளைவிடவும், விவசாயிகளுக்கு பெரிய பிரச்னையாக இருந்தது மத்திய அரசின் அணுகுமுறைதான்.
- இந்த சட்டங்கள் குறித்து முன்பே, மாநில அரசுகளுடன் சரியாக கலந்தாலோசிக்காமல் இருந்தது,
- விவசாயப் பிரதிநிதிகளிடம், விவசாயிகளிடம் முறையாக கருத்து கேட்காதது,
- முறையாக நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்து விவாதத்துக்கு உட்படுத்தாமல் முதலில் அவசர சட்டமாகவும், பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலமாக அதை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது
- நாடாளுமன்ற குழுவுக்கு மசோதாவை அனுப்பச் சொன்ன எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்தது என ஆரம்பம் முதலே இந்த வேளாண் சட்ட மசோதா விவகாரத்தில் மத்திய அரசு யதேச்சையாகவே செயல்பட்டு வந்தது. தற்போது 3 சட்டங்களையும் திரும்பப் பெறுகிறோம் என அறிவித்ததைக் கூட, விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி அறிவிக்காமல், நேரடியாக பிரதமரே அறிவித்திருக்கிறார் (இதை தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கின்றனர் விவசாயிகள்).
எனவே, ``3 வேளாண் சட்ட விவகாரத்தில் பிரதமர் அவற்றை திரும்பப் பெறுவதாக அறிவித்தது மட்டும் போதாது. சட்டங்களை நாடாளுமன்றத்தில் திரும்பப்பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும். எங்கள் கோரிக்கை அந்த வேளாண் சட்டங்கள் மட்டுமே இல்லையே?” என அறிவித்திருக்கிறார்கள் விவசாயிகள்.
போராட்டத்தின் அடுத்த கட்டம்?
ஏற்கெனவே முடிவு செய்தபடி, இன்று லக்னோவில் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான `சம்யுக்த் கிசான் மோர்ச்சா’ சார்பில் மகா பஞ்சாயத்து நடைபெறுகிறது. இதில் உ.பி, பஞ்சாப், ஹரியானா மாநிலங்களிலிருந்து விவசாயிகள் கலந்துகொள்கிறார்கள்.
வரும் நவம்பர் 26-ம் தேதி, விவசாயிகளின் போராட்டம் தொடங்கி ஓராண்டு நிறைவடைவதால் அதை அனுசரிக்கவும் முடிவு செய்திருக்கிறார்கள்.
அதற்கடுத்து 27-ம் தேதி விவசாய சங்கங்கள் ஒன்றுகூடிப் பேசி, அடுத்த கட்டப் போராட்டம் குறித்து திட்டமிடவிருக்கிறார்கள். இதற்கு முன்பு நவம்பர் 29-ம் தேதி, அதாவது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் நாள் முதல் நாடாளுமன்றத்தை நோக்கி டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டிருந்தனர். அதில் மட்டும் மாற்றங்கள் இருக்க வாய்ப்புள்ளது.
2. வேளாண் சட்டங்களோடு முடிந்ததா போராட்டம்?
இல்லை. மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வேண்டும் என்பதே விவசாயிகளின் முதல் கோரிக்கை. ஆனால், அதைத் தாண்டியும் பல பிரச்னைகளை எழுப்பி வந்தார்கள். தற்போது போராட்டம் இன்னும் நீடிக்கவிருக்கும் நிலையில், அந்தக் கோரிக்கைகளையும் பிரதமர் பரிசீலிக்கவேண்டும் என வலியுறுத்தத் தொடங்கியிருக்கிறார்கள் விவசாயிகள்.
என்னென்ன கோரிக்கைகள்?
நேற்று `சம்யுக்த் கிசான் மோர்ச்சா’ சார்பில் பிரதமருக்கு, ``இந்த 6 கோரிக்கைகளுக்கான பேச்சு வார்த்தையை உடனே அரசு தொடங்கவேண்டும்” என வலியுறுத்தி கடிதம் எழுதப்பட்டுள்ளது. அவை சுருக்கமாக…
``விவசாயிகளின் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை கிடைப்பதை அரசு சட்டரீதியாக உறுதிசெய்ய வேண்டும். விளைபொருள்களுக்கு நியாயமான விலை கிடைப்பதற்கும் உறுதி வேண்டும்.
மின்சார சட்டத்திருத்த மசோதா 2020-ஐ திரும்பப்பெற வேண்டும். (மாநில அரசின் அதிகாரம் இதனால் பாதிக்கப்படுவதாகவும், தனியாரின் பங்களிப்பு மின்சாரத்துறையில் அதிகரிக்கும் என்றும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர் விவசாயிகள்).
காற்று மாசுபாட்டிற்கு விவசாயிகளைக் குற்றவாளிகளாக்கி, அவர்களைத் தண்டிக்கும் சட்டங்களில் திருத்தம் செய்யவேண்டும்.
டெல்லி, உத்தரப்பிரதேசம், சண்டிகர், ஹரியானா எனப் பல மாநிலங்களிலும் போராடிய விவசாயிகள் மீது ஆயிரக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றை உடனே வாபஸ் பெறவேண்டும்.
லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் மரணத்திற்கு காரணமாக இருந்த அஜய் மிஷ்ரா, இன்னும் உங்கள் கேபினட்டில்தான் அமைச்சராக இருக்கிறார். அவர் உடனே பதவி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்படவேண்டும்.
இந்த ஓராண்டு போராட்டத்தில் 700-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மரணமடைந்துள்ளனர். அவர்கள் குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடும், மறுவாழ்வுக்கான உதவிகளும் வழங்கவேண்டும். சிங்கு எல்லையில் உயிரிழந்த விவசாயிகள் நினைவாக, நினைவகம் கட்டுவதற்கு இடம் ஒதுக்கவேண்டும்.” என்பவையே அந்தக் கோரிக்கைகள்.
இவற்றில் குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் மின்சார சட்டத்திருத்தம் ஆகிய இரண்டு விவகாரங்களில் மிகவும் தீவிரமாக இருக்கின்றனர் விவசாயிகள். எனவே, அரசு நாடாளுமன்றத்தில் சட்டத்தை திரும்பப் பெறும் முன்னரே (நவம்பர் 29), மீண்டும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்தியா
தூய்மையான நகரம்: இந்த ஆண்டுக்கான, இந்தியாவின் தூய்மையான நகரங்களின் பட்டியல் (Swachh Survekshan 2021) வெளியிடப்பட்டுள்ளது. இதில் பெரிய நகரங்களுக்கான பட்டியலில் மத்தியப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இந்தூர், தொடர்ந்து 5-வது முறையாக முதலிடம் பிடித்துள்ளது. டாப் 10 பட்டியலில் தமிழக நகரங்கள் எதுவும் இடம்பெறவில்லை. தமிழக அளவில் முதல் நகரமாக சென்னை 43-வது இடத்தைப் பிடித்துள்ளது. அதற்கடுத்து கோவை 46-வது இடத்தையும், மதுரை 47-வது இடத்தையும் பிடித்துள்ளன.
ராஜஸ்தான் அமைச்சரவை விரிவாக்கம்: ராஜஸ்தானில் 2018-ம் ஆண்டு, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததிலிருந்து முதல்முறையாக மாநில அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. இதன்படி நேற்று புதிதாக 15 பேர் அமைச்சராகப் பதவியேற்றனர். தற்போது கேபினட்டின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. 2023-ல் சட்டமன்றத் தேர்தல் வரவிருப்பதையடுத்து அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் ஆகிய இரு பிரிவினரையும் சமாதானப்படுத்தும் வகையில், அவர்களின் ஆதரவாளர்களுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ராஜஸ்தான் காங்கிரஸில் இருந்த உள்கட்சிப் பூசல் இப்போதைக்கு முடிவுக்கு வருகிறது!
நடைபெறாத வழிபாடு: ``டெல்லி குருகிராமில் இஸ்லாமியர்கள் வெள்ளிக்கிழமைகளில் நமாஸ் செய்ய, சீக்கியர்கள் தங்கள் குருத்வாராக்களில் இடமளிக்க முன்வந்துள்ளனர்” என்ற செய்தி இரண்டு நாள்களுக்கு முன்பாக ஊடகங்களில் (TSL உள்பட) வெளியானது. ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை இந்த வழிபாடு நடக்கவில்லை. இந்துத்துவ இயக்கங்கள் சீக்கிய அமைப்புகளுக்கு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக இது நடைபெறவில்லை என `ஸ்க்ரோல்’ நிறுவனம் விரிவாக செய்தி வெளியிட்டிருக்கிறது. ``பொதுவெளியில் நமாஸ் செய்வதே பிரச்னை” என இதற்கு முன்பு இந்துத்துவ இயக்கங்கள் கூறியது குறிப்பிடத்தக்கது.
தத்தளிக்கும் ஆந்திரா:
கடந்த வாரம் கடுமையாக பெய்த மழை காரணமாக ஆந்திராவின் பல பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. திருப்பதி தொடர்ந்து 4 நாள்களாக வெள்ளத்தில் மிதக்கிறது.
ராயலசீமா, நெல்லூர், கடப்பா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, சாலைகள் துண்டிக்கப்பட்டு, அப்பகுதி மக்கள் ஆங்காங்கே சிக்கியிருக்கின்றனர்.
ஆந்திராவின் முக்கியமான தேசிய நெடுஞ்சாலைகள் உள்பட பல சாலைகளும் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதால் பயணிகள் எங்கு செல்லமுடியாது தவித்து வருகின்றனர். சாலைப்போக்குவரத்து பெருமளவில் முடங்கிப்போயிருக்கிறது. சுமார் 100 ரயில்கள் நேற்று ரத்து செய்யப்பட்டுள்ளன. 29 ரயில்கள் திருப்பிவிடப்பட்டுள்ளன.
யார் செய்த தாமதம்? 🛵
வாடிக்கையாளர்கள் செப்டம்பர் மாதம் புக்கிங் செய்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இன்னும் டெலிவரி செய்யாமல் இருக்கிறது ஓலா.
எப்படியும் இந்த நவம்பர் மாத இறுதிக்குள் டெலிவரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் தாமதமாகியுள்ளது. ஆனால், டிசம்பர் 15 முதல் எப்படியும் டெலிவரியைத் தொடங்கி விடுவோம் என தற்போது தெரிவித்திருக்கிறது ஓலா. உலக அளவில் ஏற்பட்ட சிப் தட்டுப்பாடே இதற்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளது.
தமிழகம்
̀ஜெய்பீம்’ இயக்குநர் வருத்தம்: `ஜெய்பீம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற காலண்டர் உள்ளிட்ட சில விஷயங்கள், குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்துவதாக எழுந்த விமர்சனங்களை அடுத்து, இயக்குநர் த.செ.ஞானவேல் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில்,
``- 1995 காலத்தைப் பிரதிபலிப்பதே அந்த காலண்டரின் நோக்கமே அன்றி, குறிப்பிட்ட சமூகத்தின் குறியீடாக அதைக் காட்ட வேண்டும் என்பது எங்கள் யாருடைய நோக்கமும் அல்ல.
- யாரும் கேட்பதற்கு முன்பே, அந்த காலண்டர் படம் மாற்றப்பட்ட பிறகு, எங்களுக்குத் தனிப்பட்ட உள்நோக்கம் எதுவும் இல்லை என்பது எல்லோருக்கும் புரியும் என்று நம்பினேன். இதன் பொருட்டு மன வருத்தம் அடைந்தவர்களுக்கும், புண்பட்டவர்களுக்கும் என் உளப்பூர்வமான வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- இயக்குநராக என்பொருட்டு சூர்யாவுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தத்தைப் பதிவு செய்ய விரும்புகிறேன். ” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
ஏற்கெனவே அன்புமணி ராமதாஸ் எழுதியிருந்த கடிதத்திற்கு, சூர்யா பதில் அளித்திருந்தார். ஆனாலும், வன்னியர் சங்கத்திலிருந்து வக்கீல் நோட்டீஸ், இணையத்தில் சூர்யா மீது தாக்குதல், பின் திரையுலகினரின் ஆதரவு, எழுத்தாளர் கண்மணி குணசேகரனின் கடிதம் என விவகாரம் தீராமலேயே இருந்து வந்தது. இந்நிலையில்தான் இயக்குநரும் தற்போது வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
எஸ்.ஐ.பூமிநாதன் கொலை:
திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல்நிலையத்தில் எஸ்.ஐ-யாக பணியாற்றி வந்தவர் பூமிநாதன். இவர் நேற்று முன்தினம் இரவு ஆடு திருடிய, திருடர்களை விரட்டிச் சென்றபோது, அவர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 1 கோடி ரூபாய் நிதியுதவியும், வீட்டில் ஒருவருக்கு அரசுப்பணியும் வழங்கப்படும் எனத் தெரிவித்திருக்கிறார். 4 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.
தமிழக அரசின் குழந்தைகளுக்கான கொள்கை: குழந்தைகள் நலனில் கூடுதல் அக்கறை செலுத்தவும், அவர்களுக்கான சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்யும் வகையிலும், மாநில குழந்தைகளுக்கான கொள்கையை வெளியிட்டிருக்கிறது தமிழக அரசு. இதில் அரசு சார்பில் கவனத்தில் கொள்ளப்போகும் சில பிரச்னைகள்… 👇
கிராம சபை போலவே, 12 முதல் 18 வயதுக்குட்பட்டோருக்காக பாலர் சபைகளை, அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளிலும் அமைக்கவும் இந்தக் கொள்கையில் திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய நீதிபதி பதவியேற்பு: சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக, முனீஸ்வர் நாத் பண்டாரி இன்று பதவியேற்கவுள்ளார். இன்று காலை 11:30 மணிக்கு ராஜ்பவனில் நடக்கும் பதவியேற்பு நிகழ்வில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
தமிழகத்தின் கொரோனா பாதிப்பு:
நேற்றைய கொரோனா பாதிப்பு: 756
உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை: 14
உலகம்:
வெளியான பெங் ஷூவாயின் வீடியோ: சீன டென்னிஸ் வீராங்கனையான பெங் ஷூவாய், அந்நாட்டின் மூத்த கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த அடுத்த சில நாள்களில் காணாமல்போனார். அவரின் பாதுகாப்பு குறித்து உலக அளவில் பல முன்னணி நட்சத்திரங்களும் கேள்வி எழுப்பினர். இந்நிலையில், சீன அரசின் ஊடகம் ஒன்று அவர் உள்ளூர் டென்னிஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வீடியோ ஒன்றை வெளியிட்டு, அவர் நலமாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், இதன் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுந்துள்ளது.
அவ்வளவுதான்!
The Subject Line-னோட இன்னைக்கு அப்டேட்ஸ் உங்களுக்குப் பிடிச்சிருக்கும்னு நம்புறேன். பிடிச்சிருந்தா கீழ இருக்க பட்டன் மூலமா உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க… இன்னும் ஏதாச்சும் இந்த லிஸ்ட்ல சேர்க்கணும், இருக்குற விஷயங்கள்ல ஏதாச்சும் மாத்தணும்னா எனக்கு மெசேஜ் பண்ணுங்க!
திரும்ப நாளைக்கு காலைல 7 மணிக்கு சந்திப்போம்!
Have a Nice day! ☕️
The Subject Line-ஐ சமூக வலைதளங்கள் மூலம் பின்தொடர: