The Subject Line

Share this post
👩🏻‍💻 மாற்றத்திற்கு தயாரான ஆப்பிள்; நுகர்வோருக்கு கிடைத்த வெற்றியா இது? ✌️
www.thesubjectline.in

👩🏻‍💻 மாற்றத்திற்கு தயாரான ஆப்பிள்; நுகர்வோருக்கு கிடைத்த வெற்றியா இது? ✌️

In Today's Edition: ஆப்பிளின் புதிய முடிவு சொல்லும் செய்தி என்ன? | இந்திய எல்லையில் தொடர்ந்து அத்துமீறும் சீனா; என்ன நடக்கிறது எல்லையில்? | தமிழக மழை நிலவரம் | முதல் நாளிலேயே சரிந்த பேடிஎம் பங்குகள் | Reading Time: 6 Mins ⏳

ஞா.சுதாகர்
Nov 19, 2021
Comment
Share

ஹாய், ஹலோ… வணக்கம் 👋

⚠️ வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று அதிகாலை, சென்னை அருகே கரையைக் கடப்பதால் இன்றும், நாளையும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ⛈🌧

  • மொத்தம் 14 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் அதிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய இரு மாவட்டங்களில் மட்டும், அதிக கனமழைக்கு வாய்ப்பு இல்லை என்பதால், நேற்று இரவு ரெட் அலர்ட் வாபஸ் வாங்கப்பட்டு, ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

Source: IMD Chennai
Source: IMD Chennai
  • சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், தருமபுரி, பெரம்பலூர், நீலகிரி, சேலம், கிருஷ்ணகிரி மற்றும் புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

  • கடலூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


🍟 Front Page படிக்கிறதுக்கு முன்னாடி உங்ககிட்ட ஒரு கேள்வி.

பாஸ்வேர்டு மேனேஜர் சேவையை வழங்கிவரும் `நோர்டுபாஸ்’ என்னும் நிறுவனம், 2021-ம் ஆண்டில் மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் பாஸ்வேர்டுகள் குறித்து, 50 நாடுகள்ல ஆராய்ச்சி செய்து, அந்தப் பட்டியலை நேற்று வெளியிட்டிருக்காங்க. அதில், இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் பாஸ்வேர்டுகளையும் பட்டியலிட்டிருக்காங்க. அதில் முதலிடத்தில் இருக்கும் பாஸ்வேர்டு என்னவா இருக்கும்னு சரியா யூகிங்க பார்ப்போம். பதில் இன்றைய TSL-ன் கடைசியில்... (கண்டிப்பா அது 123456 இல்ல 😉)


👩🏻‍💻 ஆப்பிளின் புதிய முடிவு: `இது நுகர்வோருக்கு கிடைத்த வெற்றி!’ ✌️

ஆப்பிள் வாடிக்கையாளர்கள் தாங்களாகவே தங்கள் ஐபோன்களை ரிப்பேர் செய்துகொள்வதற்கு வழி செய்து, நேற்று புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது ஆப்பிள் நிறுவனம். பல ஆண்டுகளாக இந்த வசதிகளுக்காகப் போராடி வரும் நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகள் இந்த முடிவை வரவேற்றுள்ளன. ஏன் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது? அதைத் தெரிந்துகொள்ள Right To Repair பற்றி கொஞ்சம் புரிந்துகொள்ள வேண்டும்.

iPhone | AP Photo

Right To Repair

  • மொபைல், டிவி, கணினி போன்ற எலெக்ட்ரானிக் பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள்மீது, நுகர்வோர் அமைப்புகள் பல ஆண்டுகளாக வைக்கும் ஒரு குற்றச்சாட்டு, ``வாடிக்கையாளர்களை அடிக்கடி தங்களின் புதிய பொருள்களை வாங்க வைப்பதற்காக இந்த நிறுவனங்கள், அந்தப் பொருள்களின் ஆயுட்காலத்தை வேண்டுமென்றே பலவகைகளில் குறைக்கின்றன” என்பதே.

  • அதிலும் குறிப்பாக, இவற்றை ரிப்பேர் செய்வதற்கு அதிக விலை நிர்ணயம் செய்வது, நிறுவனங்களின் சொந்த சர்வீஸ் சென்டர்களில் மட்டுமே ரிப்பேர் செய்ய வற்புறுத்துவது, எளிதில் ரிப்பேர் செய்யமுடியாதபடி அவற்றை வடிவமைப்பது போன்ற செயல்களால் வாடிக்கையாளர்கள் அடிக்கடி தங்கள் கேட்ஜெட்களை மாற்றவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகின்றனர். இதனால் அவர்களுக்கு செலவு மட்டுமன்றி, பூமியிலும் அதிகமான இ-குப்பைகள் குவிகின்றன. இந்தப் பிரச்னைக்கு தீர்வாக, நுகர்வோர் மற்றும் சூழலியல் அமைப்புகள் பரிந்துரைத்தவைதான், Right To Repair.

  • 2012-ல் அமெரிக்காவின் மசாசூட்ஸ் மாகாணத்தில் கார்களுக்கு முதன்முதலாக Right To Repair-ஐ அனுமதிக்கவேண்டும் என சட்டமியற்றப்பட்டது. அதாவது, காரின் உதிரி பாகங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சொந்தமாக அவர்களே பழுது பார்க்கும் வகையில் கிடைக்கவேண்டும். அவர்களே ரிப்பேர் செய்யும் வகையிலும் இருக்கவேண்டும். இதனை கார் நிறுவனங்கள் உறுதி செய்யவேண்டும். இதுதான் Right To Repair. இதை ஸ்மார்ட்போன் உள்ளிட்ட அனைத்து எலெக்ட்ரானிக் கேட்ஜெட்களுக்கும் கொண்டுவரவேண்டும் என்பதே ஆர்வலர்களின் கோரிக்கையாக இருந்தது.

ஏன் இதுவரை இது சாத்தியமாகவில்லை?

காரணம், கூகுள், ஆப்பிள், மைக்ரோசாஃப்ட், அமேசான் உள்ளிட்ட பல நிறுவனங்களும் தங்கள் தரப்பு நியாயங்களை முன்வைத்து இந்தக் கோரிக்கையை எதிர்த்து வந்தன. அவை குறிப்பிட்ட சில காரணங்கள்…

  • மொபைல் போனில் பேட்டரி, டிஸ்ப்ளே போன்றவற்றை, அதைக் கையாளும் அனுபவம் அற்ற ஒரு சாமானியர் ரிப்பேர் செய்வது சுலபமல்ல. இப்படிச் செய்யும்போது அவர் தெரியாமல் ஏதேனும் செய்து, பிற உதிரிபாகங்கள் பழுதாகவும் வாய்ப்புண்டு. உதாரணமாக, ஒரு ஐபோனின் பேட்டரி தீப்பற்றி எரியக்கூட வாய்ப்பிருக்கிறது.

  • எங்களின் உரிமம் பெற்ற சர்வீஸ் சென்டர்கள் தவிர்த்து, பிற சென்டர்களில் வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போனை ரிப்பேர் செய்யும்போது, வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்படவும் வாய்ப்பு இருக்கிறது.

  • நாங்கள் அனுமதிக்காத மூன்றாம் நபர்கள் ரிப்பேர் செய்யும் வகையில் எங்கள் கேட்ஜெட்களை வடிவமைத்தால், எங்களின் முக்கியமான தொழில் ரகசியங்கள் களவுபோகவும் வாய்ப்பிருக்கிறது.

  • புதுப்புது தொழில்நுட்பங்களை கேட்ஜெட்களில் அறிமுகம் செய்வதும் இதனால் கடினமாகும்.

இப்படி பல கோரிக்கைகளை டெக் நிறுவனங்கள் முன்வைத்தாலும், இதைப் பலரும் முழுமையாக ஏற்கவில்லை.

அரசாங்கங்களின் நிலைப்பாடு என்ன?

எனவேதான் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த ஜூலை மாதத்தில், Right To Repair-ஐ டெக் நிறுவனங்கள் அமல்படுத்துவதற்கான விதிமுறைகளை உருவாக்கச் சொல்லி, ஒரு உத்தரவில் கையெழுத்திட்டார். மேலும், இந்த ஆண்டு மட்டும் 20-க்கும் மேற்பட்ட அமெரிக்க மாகாணங்களில் Right To Repair-ஐ வலியுறுத்தி மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

  • இப்படி கொஞ்சம் கொஞ்சமாக அழுத்தம் அதிகரிக்கவேதான் தற்போது ஆப்பிள் இந்த முக்கியமான முடிவை எடுத்திருக்கிறது.

இனி என்ன நடக்கும்?

  • முதல்கட்டமாக அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இதை அமெரிக்காவில் அமல்படுத்துகிறது ஆப்பிள். இதன்படி இனி ஐபோன் 12 மற்றும் 13 வாடிக்கையாளர்கள் டிஸ்ப்ளே, பேட்டரி, கேமரா உள்ளிட்ட சில பாகங்களை மட்டும் தாங்களே ரிப்பேர் செய்துகொள்ளும் வகையில் உதிரிபாகங்கள், கையேடுகள் மற்றும் கருவிகள் ஆப்பிளால் ஆன்லைன் ஸ்டோர் மூலம் விற்பனை செய்யப்படும். அடுத்தகட்டமாக இது மேக்புக் கணினிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டு, பின் பிற நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

  • சுமார் 200 உதிரிபாகங்களையும், ரிப்பேர் செய்வது குறித்த கையேடுகளையும் இந்த திட்டத்தின் கீழ் விற்பனை செய்யத் திட்டமிட்டிருக்கிறது ஆப்பிள். எனவே, இனி அமெரிக்காவில் ஒரு ஐபோன் 12 வாடிக்கையாளரின் கேமரா பிரச்னை செய்தால், சர்வீஸ் சென்டருக்கு சென்று அதிகப்பணம் செலவு செய்யவேண்டும் என்ற அவசியமில்லை. ஒன்று, வாடிக்கையாளர் அவரே ஆன்லைனில் பாகங்களை வாங்கி சரிசெய்யலாம்; அல்லது ஆப்பிள் சர்வீஸ் சென்டரைவிட குறைந்த கட்டணத்தில் பிற சர்வீஸ் சென்டர்களில் கொடுத்து ரிப்பேர் செய்யலாம் (இவ்வளவு நாள்கள் ஒரிஜினல் உதிரிபாகங்கள் கிடைக்காததும், அவற்றிற்காக தொழில்நுட்பங்கள் இல்லாததே இவர்களுக்குப் பெரிய பிரச்னையாக இருந்தது).

அப்படியெனில், ஆப்பிள் முழுமையாக மாறிவிட்டதா?

  • இன்னும் இல்லைதான். குறிப்பாக அனைத்து பாகங்களையும் இப்படி நாமே சரிசெய்யும் வகையில் வசதிகளைத் தராத வரை, ரிப்பேர் செய்வதை எளிமையாகும் வரை ஆப்பிளை மொத்தமாக மெச்ச முடியாதுதான். ஆனாலும்கூட, டெக் நிறுவனங்களில் முதல் அடியாக, ஆப்பிள் இவ்வளவு பெரிய முயற்சியை (மைக்ரோசாஃப்ட் இன்னும் ஆலோசனை அளவில் மட்டும் இருக்கிறது) முன்னெடுத்திருப்பது வரவேற்க்கத்தக்க மாற்றமே. இது பிற நிறுவனங்களையும் இதே திசையில் பயணிக்கவைக்கும்.

  • அப்படி நடக்கும்பட்சத்தில், ஸ்மார்ட்போன் முதல் ஸ்மார்ட் டிவி வரை, நாம் பயன்படுத்தும் கேட்ஜெட்களின் ஆயுள் எதிர்காலத்தில் இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உண்டு.

Right To Repair பற்றி இப்ப தெரிஞ்சுக்கிட்டீங்கள்ல? இதுபற்றி உங்க கருத்து என்ன?

Leave a comment


🚨 சீன எல்லையில் என்ன நடக்கிறது? ⚠️

மோதல்கள் எதுவும் இல்லையெனினும் தொடர்ந்து, இந்திய சீன எல்லைப் பகுதியில் பதற்றம் குறையாமலேயேதான் இருக்கிறது. அதற்கு உதாரணமாக, இரண்டு சம்பவங்கள் அண்மையில் நடந்திருக்கின்றன.

  1. ஒன்று, லடாக்கில் இருக்கும் சுஷுல் கிராமத்தின் கவுன்சிலர், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் அளித்திருக்கும் 3 பக்க கடிதம்.

  2. இரண்டாவது, இந்திய எல்லைக்குள் அருணாச்சலப்பிரதேசத்தில் சீனா கட்டியிருக்கும் இரண்டாவது குடியிருப்பு குறித்த செய்தி.

என்ன இருக்கிறது கடிதத்தில்?

சுஷுல் கிராமத்தின் கவுன்சிலர் கொன்சோக் ஸ்டான்ஸின் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கும் சில முக்கியமான விஷயங்கள்…

  • ``சீனாவின் எல்லைப் பகுதிக்குள் இருக்கும் நாடோடி மக்களை அவர்கள் ராணுவம் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கிறது. ஆனால், நம் எல்லைக்குள் அப்படி நாங்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

  • கடந்த ஒரு வருடங்களாக இந்தப் பகுதியில் போர் நடப்பது போன்ற சூழல் நிலவுகிறது. இதுபோன்ற சூழலை இதற்கு முன்பு நாங்கள் பார்த்ததே இல்லை. இது எங்கள் பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதுபோன்ற நேரத்தில் எங்கள் மக்களைப் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு லே பகுதியில் எல்லைப்பகுதி மக்கள் தங்குவதற்கு மாற்று இடம் வழங்கவேண்டும்.” என அமைச்சரிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்.

சீனாவின் புதிய குடியிருப்பு அமைந்திருப்பது எங்கே?

கடந்த 2020-ம் ஆண்டு அருணாச்சலப்பிரதேசத்தில் சீனா சத்தமின்றி, ஒரு கிராமத்தையே கட்டி முடித்திருப்பதை என்.டி.டி.வி ஊடகம் முதன்முதலாக வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. அந்தக் கிராமம் இருக்கும்பகுதி, இந்தியாவு சொந்தம் கொண்டாடும் பகுதியே. இந்நிலையில், அதேபோல தற்போது மீண்டும் சீனாவின் புதிய ஆக்கிரமிப்பு பற்றி செய்தி வெளியிட்டுள்ளது என்.டி.டி.வி.

  • இந்தமுறை சர்வதேச எல்லை மற்றும் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டிற்கு இடையே இருக்கும் இந்தியப் பகுதியில், அதாவது இந்தியாவுக்குள் சுமார் 6 கி.மீ தொலைவுக்குள் வந்து தன் புதிய குடியிருப்புகளை கட்டி முடித்திருக்கிறது சீனா. இதுகுறித்து என்.டி.டி.வி ராணுவத்திடம் விளக்கம் கேட்டபோது, அவர்கள் இந்த செய்திக்கு எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை.

  • இந்தக் குடியிருப்பில் ஏறத்தாழ 60 வீடுகள் இருக்கின்றன. 2019-க்கு முன்பு இந்தப் பகுதியில் குடியிருப்புகள் ஏதும் இல்லை. எனவே அதற்குப் பின்பே கட்டப்பட்டிருக்கிறது.

இதன் மூலம் சீனா என்ன சாதிக்கிறது?

  • சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதிகளில் இதுபோல மக்கள் குடியேற்றங்களை ஏற்படுத்தி, பின்னர் அதை சொந்தப் பகுதியாகவே உரிமை கொண்டாடுவதுதான் சீனாவின் திட்டமாகப் பார்க்கப்படுகிறது.

  • சில தினங்களுக்கு முன்பு சீனாவில் இயற்றப்பட்ட எல்லைப் பாதுகாப்பு சட்டம்கூட இதையே மறைமுகமாக வலியுறுத்தும் வகையில் இருந்தது.

அரசு என்ன செய்யவிருக்கிறது?

இந்த ஆக்கிரமிப்பு குறித்து இன்னும் அரசோ, ராணுவமோ வெளிப்படையாக ஏதும் கருத்து தெரிவிக்கவில்லை. இந்நிலையில், எல்லைப் பகுதிகளில் நிலவும் மோதல் போக்கை முடிவுக்கு கொண்டுவர விரைவில் 14-வது முறையாக இருநாட்டு அதிகாரிளும் சந்தித்துப் பேசவிருக்கிறார்கள்.

Share


இந்தியா

  1. உடல்கள் ஒப்படைப்பு:

    ஶ்ரீநகரை உலுக்கிய 4 பேரின் என்கவுன்ட்டர் குறித்து நேற்று பார்த்தோம் இல்லையா? அவர்கள் குடும்பங்களின் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, 4 பேரில் இருவரின் உடல்கள் குடும்பத்தினரிடம் வழங்கப்படவிருக்கின்றன. மேலும், ஜம்மு காஷ்மீரின் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, என்கவுன்ட்டர் குறித்து மாஜிஸ்திரேட் தலைமையில் விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளார். ``காவல்துறையினரால், சுட்டுக்கொல்லப்பட்ட நால்வரில், 3 பேர் தீவிரவாதிகள் இல்லை; சாதாரண குடிமக்களே” என அந்தப் பகுதி மக்கள் குற்றம்சாட்டிய நிலையில், இந்தப் பிரச்னை அங்கு விஸ்வரூபம் எடுத்தது.

  2. இஸ்லாமியர்களுக்கு இடம் அளித்த சீக்கியர்கள்:

    டெல்லி, குருகிராமில் இருக்கும் 37 வெவ்வேறு பகுதிகளில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அங்கிருக்கும் இஸ்லாமியர்கள் நமாஸ் செய்வது வழக்கம். ஆனால், இதை எதிர்த்து அந்தப் பகுதியிலிருக்கும் இந்துத்துவ கும்பல் தொல்லை செய்யவே, 37-ல் 8 பகுதிகளுக்கு உள்ளூர் நிர்வாகத்தால் அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில், வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் இஸ்லாமியர்கள் நமாஸ் செய்ய, ஶ்ரீகுரு சிங் சபா குருத்வாராவினர் அனுமதியளித்துள்ளனர். சீக்கியர்களின் இந்த அன்பை, அந்தப் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய அமைப்பினரான ஜாமியா உலமா அமைப்பினரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

  3. அட்டர்னி ஜெனரல் எதிர்த்த இரண்டாவது உயர்நீதிமன்ற வழக்கு:

    ``ஆடைக்கு மேலே கையை வைத்து மார்பகங்களை அழுத்துவது பாலியல் தாக்குதல் என்ற பிரிவின்கீழ் வராது." எனச் சொல்லி சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு அளித்தவரை, மும்பை உயர்நீதிமன்றம் போக்சோ சட்டத்திலிருந்து விடுவித்து சில மாதங்களுக்கு முன்பு தீர்ப்பளித்தது. இது நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த தீர்ப்பை எதிர்த்து இந்தியாவின் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கில் உச்சநீதிமன்றம்,``சட்டத்தை சரியாகப் புரிந்துகொள்ளாமல் அளிக்கப்பட்ட தீர்ப்பு இது” எனச் சொல்லி, அதை ரத்து செய்துவிட்டது. ஒரு உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, அட்டர்னி ஜெனரல் தாமாக முன்வந்து வழக்கு தொடுப்பது இதுவே 2-வது முறை. இதற்கு முன்பு, 1985-ல் கே.பராசரன் அட்டர்னி ஜெனரலாக இருந்தபோது, ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் ஒரு பெண்ணை கொடிய குற்றத்திற்கு தண்டனையாக, பொது வெளியில் தூக்கிலிட உத்தரவிட்டதை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருந்தார். அதையும் உச்சநீதிமன்றம் அப்போது ரத்து செய்திருந்தது.

  4. அசாம் NRC விவகாரத்தில் புதிய தகவல்:

    அசாமில் இருக்கும் 3.29 கோடி பேர் NRC-யில் பதிவு செய்ய விண்ணப்பித்ததில், மொத்தம் 19 லட்சம்பேர் அந்தப் பட்டியலிலிருந்து தங்கள் குடியுரிமையை நிரூபிக்க முடியாததால் நீக்கப்பட்டிருந்தனர். இந்தப் பட்டியலை தற்போதைய ஆளும் பா.ஜ.க அரசு எதிர்க்கிறது. லட்சக்கணக்கான வெளிநாட்டினர் எப்படியோ NRC-யில் புகுந்துவிட்டனர். எனவே இது செயல்படுத்தப்பட்டவிதமே தவறு எனக் குற்றம்சாட்டுகிறது. ஆனால், இதுவரை NRC-யில் பதிவு செய்யப்பட்டவர்கள் எத்தனைபேரின் பெயர்கள், சந்தேகத்துக்குரியவை என `தி இந்து’ ஊடகம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேட்டதில் வெறும் 1,032 பேர் மட்டுமே எனத் தெரியவந்துள்ளது. எனவே மீண்டும் NRC-க்கான பணிகளை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதிக்க மிகவும் வாய்ப்பு குறைவு.

  5. வீழ்ச்சியடைந்த பேடிஎம் பங்குகள்:

    பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பேடிஎம்மின் பங்குகள் நேற்று பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டன. முதல்நாளான நேற்றே வெளியீட்டு விலையைவிடவும், 27% வரை பங்கு விலை சரிந்திருக்கிறது.


தமிழகம்

  1. தமிழ்நாடு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு 3% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில் சிலம்பம் விளையாட்டையும் புதிதாக சேர்த்திருக்கிறது தமிழக அரசு.

  2. கொரோனா காலத்தில் ஓயாது உழைத்துவந்த மயானப் பணியாளர்களையும், முன்களப் பணியாளர்கள் பட்டியலில் சேர்த்திருக்கிறது தமிழக அரசு. இதன்மூலம் முன்களப் பணியாளர்களுக்கான சில சிறப்பு சலுகைகள் அவர்களுக்கும் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


அவ்வளவுதான்..!

💡 சரி, அந்த பாஸ்வேர்டு கேள்விக்கு வருவோம். அதற்கான பதில் பாஸ்வேர்டேதான். அட, ஆமாம்… ̀Password’ன்ற வார்த்தைதான் இந்தியர்களால் அதிகம் பயன்படுத்தப்பட்ட பாஸ்வேர்டாம். இந்தியாவின் டாப் 5 பாஸ்வேர்டுகள் இதோ… 👇

Source: Nordpass.com

👉 ஆராய்ச்சி நடந்த 50 நாடுகளில் 43-ல், `123456’-தான் டாப் பாஸ்வேர்டா இருந்திருக்கு. இந்த மாதிரியான பாஸ்வேர்டுகளை சில நொடிகளில் யூகிச்சு, அக்கவுன்ட்ஸை ஹேக் செய்திட முடியும்ன்றதால், ``ஆன்லைன் அக்கவுன்ட்ஸ்க்கு இப்படிப்பட்ட பாஸ்வேர்டுகளை வைக்காதீங்க”ன்னு இந்த ஆராய்ச்சு மூலம் மெசேஜூம் சொல்லியிருக்காங்க சைபர் பாதுகாப்பு நிபுணர்கள். நோட் பண்ண வேண்டிய விஷயம்!


The Subject Line-னோட இன்னைக்கு அப்டேட்ஸ் உங்களுக்குப் பிடிச்சிருக்கும்னு நம்புறேன். பிடிச்சிருந்தா கீழ இருக்க பட்டன் மூலமா உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க… இன்னும் ஏதாச்சும் இந்த லிஸ்ட்ல சேர்க்கணும், இருக்குற விஷயங்கள்ல ஏதாச்சும் மாத்தணும்னா எனக்கு மெசேஜ் பண்ணுங்க!

திரும்ப நாளைக்கு காலைல 7 மணிக்கு சந்திப்போம்!

Have a Nice day! ☕️

The Subject Line-ஐ சமூக வலைதளங்கள் மூலம் பின்தொடர:

Twitter | Facebook | Insta

CommentComment
ShareShare

Create your profile

0 subscriptions will be displayed on your profile (edit)

Skip for now

Only paid subscribers can comment on this post

Already a paid subscriber? Sign in

Check your email

For your security, we need to re-authenticate you.

Click the link we sent to , or click here to sign in.

TopNewCommunity

No posts

Ready for more?

© 2022 The Subject Line
Privacy ∙ Terms ∙ Collection notice
Publish on Substack Get the app
Substack is the home for great writing