🚁 பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்திற்கு காரணமான CFIT
இன்றைய TSL-ன் பிற ஹைலைட்ஸ்: கொரோனா விதிமுறைகளை மீறியதற்காக வசூலிக்கப்பட்ட ₹105 கோடி | மெஸ்ஸிக்கு கொரோனா | சீன மொபைல் நிறுவனங்களுக்கு அபராதம் | ஸ்விக்கி, ஜொமேட்டோ வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பா? | Reading Time: ⏱ 6 Mins
ஹாய், ஹலோ… வணக்கம் 👋
💡 பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவதற்கான மசோதா அண்மையில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அது நிறைவேற்றப்படாமல் நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்காக அனுப்பப்பட்டது. தற்போது அந்த மசோதா குறித்து ஆய்வுசெய்ய 31 எம்.பி-க்கள் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுவிட்டது. அதில் எத்தனை பெண்கள் இடம்பெற்றிருப்பார்கள் என நினைக்கிறீர்கள்? யூகிச்சுட்டே, இன்றைய அப்டேட்ஸை படிச்சுட்டு TSL-ன் கடைசிக்கு வாங்க…
இன்றைய தினத்தின் டாப் அப்டேட்ஸ் இதோ…
கடந்த டிசம்பர் மாதம் 8-ம் தேதி, சூலூரிலிருந்து குன்னூரை நோக்கி பயணம் செய்த Mi-17v5 ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த இந்தியாவின் முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேரும் அந்த துயர விபத்தில் உயிரிழந்தனர்.
நாட்டை அதிரச்செய்த இந்த விபத்து குறித்து முழுமையாக விசாரிக்க, முப்படைகள் சார்பில் ஏர் மார்ஷல் மன்வேந்திர சிங் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அக்குழு தற்போது விசாரணையை முடித்து, அறிக்கையை சட்டரீதியான ஆய்வுக்காக அனுப்பியிருப்பதாக, `தி இந்து’ நாளிதழ் தெரிவித்துள்ளது.
இந்த விசாரணையில், விபத்துக்கான காரணமாக, CFIT (Controlled Flight Into Terrain) எனத் தெரியவந்துள்ளதாக அந்தப் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
இந்த CFIT என்றால் என்ன?
விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் விபத்துகளை பொதுவாக மூன்று வகைக்குள் அடக்கிவிடலாம். ஒன்று, ஹெலிகாப்டர்களில் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகள் (இன்ஜின் பழுது, எரிபொருள் பற்றாக்குறை, முக்கியமான சாதனங்கள் செயலிழத்தல் போன்றவை).
இரண்டாவது, ஹெலிகாப்டருக்கு வெளியே இருக்கும் சவால்கள். (மோசமான வானிலை, திடீர் தடைகள் போன்றவை).
மூன்றாவது, பைலட்டால் நிகழும் மனிதத் தவறுகள் (முறையான விதிமுறைகளைப் பின்பற்றாதது, சவாலான சூழ்நிலையில் எடுக்கப்படும் தவறான முடிவுகள் போன்றவை)
இந்த மூன்று விஷயங்களும் ஏற்படுத்தும் ஹெலிகாப்டர் விபத்துகளை, அதன் தன்மைக்கேற்ப சரியாக இனம்காண ஒவ்வொன்றிற்கும் ஒரு பெயரைக் குறிப்பிடுகின்றனர் விமானத்துறை நிபுணர்கள்.
உதாரணமாக, தொழில்நுட்பக் கோளாறுகளால் பைலட் ஹெலிகாப்டரின் கட்டுப்பாட்டை இழந்தால் அது, Loss of Control In-flight (LOC-I) அல்லது UFIT (Uncontrolled Flight into Terrain).
இதேபோல, ஹெலிகாப்டரின் பாகங்கள் அனைத்தும் சரியாக இருந்து, பைலட்டும் சரியாகவே இயக்கி, இருந்தும்கூட வானிலை உள்ளிட்ட காரணங்களால் ஏற்படும் விபத்துகள்தான் CFIT (Controlled Flight Into Terrain).
இது ஏன் ஏற்படுகிறது?
ஹெலிகாப்டரோ, விமானங்களோ… இவை இரண்டிலும் அதிக உயிர்ச்சேதம் ஏற்படுத்தும் விபத்துக் காரணிகளில் ஒன்றாக இந்த CFIT இருக்கிறது.
இது ஏற்பட முக்கியமான காரணம், பைலட் `Situation awareness’-ஐ இழப்பது. அதாவது, ஹெலிகாப்டரை பைலட் வானில் இயக்கும்போது, அதைச் சுற்றியிருக்கும் தடைகளை அறியாதது, கீழிருந்து அதன் உயரத்தைக் கணிப்பதில் ஏற்படும் குழப்பம், பாதையில் ஏற்படும் எதிர்பாரா சிக்கல்கள் போன்றவற்றால், ஹெலிகாப்டர் முழு கட்டுப்பாட்டில் இருந்தும்கூட, நீரிலோ, நிலத்திலோ, மலைகளிலோ மோதிவிடுவது. அப்படியெனில் இது பைலட்டின் பிழையா?
இல்லை. காரணம், இதுபோன்ற CFIT விபத்துகள் அதிகளவில் நடக்க காரணமே, எதிர்பாராத நிகழ்வுகளை (மரம், மலை, தரைகளில் மோதுவது) பைலட்கள் தாமதமாக அறிவதே. `டைட்டானிக்’ பனிப்பாறையில் மோதியபிறகே, அதுகுறித்து தெரியவந்தால் எப்படியிருக்கும்? அதுபோலத்தான் இதுவும்.
அந்த நிகழ்வுகளுக்குப் பிறகு பைலட், சுதாரித்து நிலைமையைச் சரிசெய்வதற்குள் விபத்து நடந்து முடிந்திருக்கும். ஏன் பைலட் இப்படி தாமதமாக அறிந்துகொள்கிறார்? முக்கிய காரணம், மோசமான வானிலை.
அப்படி, குன்னூரில் நிகழ்ந்த விபத்தில் பனிமூட்டம், அதனால் ஏற்பட்ட இடைஞ்சல் போன்றவை பைலட்டைக் குழப்பி, அங்கிருக்கும் ஏதாவது ஒன்றில் மோதி விபத்தை ஏற்படுத்தியிருக்கும் என்கின்றனர் விமானப்படை உயரதிகாரிகள்.
சூலூரிலிருந்து காலை 11:48 மணிக்கு கிளம்பிய ஹெலிகாப்டர், குன்னூரில் 12:15-க்கு இறங்க திட்டமிடப்பட்டிருந்தது. பின்னர் 12:08 அளவில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. அதாவது, தரையிறங்குவதற்கு சில நிமிடங்கள் முன்பாக விபத்து நடந்திருக்கிறது.
CFIT-யும் சவாலான இடங்களில் ஹெலிகாப்டர் அல்லது விமானம் பயணம் செய்யும்போது, தரையிறங்கும் நேரங்களில்தான் பெரும்பாலும் ஏற்படுமாம்.
இதைத் தவிர்ப்பதற்கு ஒரே வழி, இதுபோன்ற விபத்துகளைக் கையாளும் அளவுக்கு ஹெலிகாப்டரின் சிஸ்டமை தொழில்நுட்ப ரீதியில் இன்னும் அப்கிரேடு செய்வது மட்டும்தான். வேறு எதுவும் பைலட் கையில் இல்லை!
வேறு காரணங்களாகவும் இருக்கலாமா?
விமான விபத்துகள் குறித்து புலனாய்வு செய்வதில் இந்தியாவிலேயே தலைசிறந்த அதிகாரி மன்வேந்தர் சிங்தான் என்கின்றனர்.
ஹெலிகாப்டரின் கறுப்புப்பெட்டி, அதிலிருந்த தகவல்கள், சம்பவ இடத்தில் நடைபெற்ற விசாரணைகள் மற்றும் பிற ஆதாரங்களை வைத்து, எல்லா கோணங்களிலும் ஆராய்ந்தே மன்வேந்தர் சிங் தலைமையிலான குழுவினர் இந்த முடிவுக்கு வந்திருக்க முடியும்.
இன்னும் இவர்கள் விமானப்படையிடம் தங்கள் இறுதி அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை. மேலே சொன்னதுபோல, விசாரணை ராணுவ முறைப்படி நடந்துள்ளதா என்பதை சட்டரீதியாக ஆய்வு செய்து, உறுதி செய்தபின்னரே இறுதி அறிக்கையை தாக்கல் செய்வர்.
அதற்கு இன்னும் ஓரிரு வாரங்கள் ஆகலாம் எனத் தெரிகிறது. பின்னர் இந்திய விமானப்படை, அறிக்கையின் விவரங்களை பொது வெளியில் வெளியிடலாம்.
அதன்பிறகே, விபத்து நிகழக் காரணமாக வேறு ஏதேனும் காரணிகள் இருந்தனவா என்பது குறித்தும் விரிவாகத் தெரிய வரும்.
உயரும் கொரோனா எண்ணிக்கை:
கடந்த 4 நாள்களாகவே இந்தியாவின் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்துவருகிறது. நேற்று 27,553 கொரோனா தொற்றுகள் உறுதிசெய்யப்பட்டுள்ளன. மும்பை, டெல்லி, சென்னை உள்பட பல முக்கிய நகரங்களிலும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. நாடு முழுக்க ஓமிக்ரான் வேரியன்ட் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1525-ஐத் தொட்டுள்ளது.
- தமிழகத்தில் நேற்று பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை: 1594
- உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை: 6
- ஓமிக்ரான் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை இதுவரை: 118,
இதில் டிஸ்சார்ஜ் ஆனவர்கள்: 98
- மாவட்டவாரியான ஓமிக்ரான் விவரம் கீழே 👇👇
இஸ்லாமிய பெண்கள் மீது நடந்த இணைய தாக்குதல்
- சமூக வலைதளங்களில் தங்கள் படங்களைப் பகிர்ந்திருந்த, இஸ்லாமியப் பெண்களின் படங்களைச் சேகரித்து, அவற்றை இழிவாகச் சித்திரித்து கடந்த வருடம் `Sully deals’ என்ற பெயரில் Github தளத்தில் ஒரு App உருவாக்கப்பட்டது.
- நாடு முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவத்தைத் தொடர்ந்து, டெல்லி மற்றும் உத்தரப்பிரதேச காவல்துறையால் அதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்த App-ம் முடக்கப்பட்டது. ஆனால், வேறு எந்த நடவடிக்கையும் அதன்பின் இல்லை.
- இதேபோல, இந்த புத்தாண்டு தினத்தன்றும் Github-ல் `Bulli bai’ என்ற பெயரில் ஒரு App உருவாக்கப்பட்டு, மீண்டும் அவர்களை இழிவாகச் சித்திரித்து படங்கள் பகிரப்பட்டிருக்கின்றன. சமூக செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்களும் இதில் அடக்கம். இதைத் தொடர்ந்து, இதனால் பாதிக்கப்பட்ட `தி வயர்’ நிறுவனத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் இஸ்மத் அரா, உ.பி காவல்துறையியில் புகார் அளித்துள்ளார்.
- அந்த App-ன் உரிமையாளர் முடக்கப்பட்டுவிட்டதாக மத்திய தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருக்கிறார். கடந்தமுறை போல, இந்தமுறையும் FIR மற்றும் App முடக்கத்தோடு நின்றுவிடாமல், அரசு சம்பந்தப்பட்டவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே பாதிக்கப்பட்டவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
டார்கெட்டை தவறவிட்டதா இந்தியா?
- டிசம்பர் 31, 2020-க்குள், இந்தியா 18 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் செலுத்திவிடும் (100% தடுப்பூசி இலக்கு) எனக் கடந்த வருடம் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்திருந்தார். ஆனால், டிசம்பர் 31, 2021 நிலவரப்படி இந்தியா 64% தடுப்பூசி இலக்கையே அடைந்துள்ளது; ஒரு டோஸ் எடுத்துக்கொண்டவர்கள் 90%. இதுகுறித்து பிபிசி உள்பட சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இந்நிலையில் அப்படி வெளியான செய்திகள் குறித்து விளக்கம் அளித்திருக்கிறது மத்திய சுகாதாரத்துறை.
- ``இந்த செய்திகள் முழு உண்மைகளை தெரிவிப்பதில்லை. உலக நாடுகளோடு ஒப்பிடுகையில், இந்தியா மிகச்சிறப்பாகவே தடுப்பூசி செலுத்துவதில் செயல்பட்டிருக்கிறது. இப்போதே 3 மாநிலங்கள் 100% தடுப்பூசி இலக்கை எட்டியிருக்கின்றன. விரைவில் அனைத்து மாநிலங்கள் அதை எட்டும்” எனத் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் வசித்த கடைசி புல்வாமா தீவிரவாதியும் பலி?
2019-ம் ஆண்டு புல்வாமாவில் நடந்த தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களாக 19 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர். அவர்களில் 4 பேர் தலைமறைவாக பாகிஸ்தானில் வசிக்கின்றனர். 7 பேர் கைது செய்யப்பட்டுவிட்டனர். 7 பேர் கொல்லப்பட்டுவிட்டனர். இறுதியாக ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் கமாண்டர் சமீர் தார் மட்டும் இந்தியாவில் மறைந்து வாழ்ந்துவந்தார். இவரும் அனந்த் நாக் மாவட்டத்தில் அண்மையில் நடந்த என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்துள்ளது ஜம்மு காஷ்மீர் காவல்துறை. இவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படாததால் குழப்பம் நீடிக்கிறது.
புதிய ஜி.எஸ்.டி விதியால் பாதிப்பா?
ஜனவரி 1-ம் தேதி முதல் ஸ்விக்கி, ஜொமேட்டோ நிறுவனங்கள், ஒவ்வொரு டெலிவரிக்கும் 5% ஜி.எஸ்.டி வசூலிக்கவேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவு அமலாகிவிட்டது. ஆனால், இந்த மாற்றத்தால் வாடிக்கையாளர்கள் கூடுதலாக எந்தக் கட்டணமும் செலுத்த தேவையில்லை எனத் தெரிவித்துள்ளார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். ``இதற்கு முன்பு, ஹோட்டல்கள் இந்த வரியை வசூலித்து வந்தன; இனி ஸ்விக்கி, ஜொமேட்டோ நிறுவனங்கள் அதற்கு பதிலாக வசூலிக்கப்போகின்றன” எனத் தெரிவித்துள்ளார். ஆனால், இதற்கு முன்பு வரி வசூலிக்காத, ஆண்டுக்கு 20 லட்சத்திற்கும் கீழ் வருமானம் ஈட்டிவந்த ஹோட்டல்கள் இதனால் பாதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர் தேசிய உணவக கூட்டமைப்பினர்.
இன்று மற்றும் நாளைக்கான வானிலை முன்னறிவிப்பு 👇☔️
தென் தமிழகத்தில் மட்டும் இன்று மிதமான மழை பெய்யும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு தினத்தன்று சிவகாசி பட்டாசு ஆலை ஒன்றில் நிகழ்ந்த வெடிவிபத்தில் 4 பேர் பலியாயினர். இந்த ஆலையின் உரிமையாளர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
கடந்த டிசம்பர் 21-ம் தேதி ஷியோமி, ஒப்போ உள்ளிட்ட சீன மொபைல் நிறுவனங்கள் மற்றும் அவற்றின் விநியோகஸ்தர்களின் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இதில் தெரியவந்த முறைகேடுகளுக்காக, அந்த இரு நிறுவனங்களும் சுமார் 1,000 கோடிக்கும் மேல் அரசுக்கு அபராதம் கட்ட நேரிடும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
ஜம்முவில் உள்ள வைஷ்ணவி தேவி கோயிலில் கடந்த புத்தாண்டு தினத்தன்று ஆயிரக்கணக்கான மக்கள் வழிபாட்டுக்காக காத்திருந்தனர். அப்போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து இன்று முதல் அடுத்த 2 வாரங்களுக்கு நேரடி விசாரணைகளுக்குப் பதிலாக, வழக்கு விசாரணைகள் மொத்தமும் இணையம் மூலமாகவே நடைபெறும் என அறிவித்துள்ளது உச்சநீதிமன்றம்.
தலித் சத்துணவுப் பணியாளர் சுனிதா தேவி சமைக்கும் உணவை உண்ணாமல், உத்தரகாண்டில் உள்ள ஒரு பள்ளி மாணவர்கள் தவிர்த்ததும், அதையொட்டி சுனிதா தேவி பணியிட நீக்கம் செய்யப்பட்டது குறித்தும் நாம் ஏற்கெனவே TSL-ல் பார்த்திருந்தோம். தற்போது அவர் மீண்டும் அதே பள்ளியில் பணியமர்த்தப்பட்டுவிட்டார்.
கரும்பு விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் மானியமானது, சர்வதேச விதிகளுக்கு எதிரானது எனக் கடந்த மாதம் தீர்ப்பளித்தது உலக வர்த்தக நிறுவனம் (WTO). நேற்று இந்த தீர்ப்புக்கு எதிராக இந்தியா மேல்முறையீடு செய்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் அமையவிருக்கும், மேஜர் தயான்சந்த் விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு நேற்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
எதிர்க்கட்சியினர், பத்திரிகையாளர் ஆகியோரை அரசு சட்டவிரோதமாக பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவுபார்ப்பதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து ஆராய, உச்சநீதிமன்றம், ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் தலைமையில் ஒரு குழு அமைத்திருந்தது. இந்நிலையில், குடிமக்கள் யாருக்கேனும் தங்களுடைய போன்கள் உளவுபார்க்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்தால், ஜனவரி 7-ம் தேதிக்குள் தங்களைத் தொடர்பு கொண்டு, போனை தொழில்நுட்ப பரிசோதனைக்கு அளிக்குமாறு மக்களுக்கு அந்தக் குழு அழைப்பு விடுத்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றாத சுமார் 50 லட்சம் பேரிடம், இதுவரை 105 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
காயத்திலிருந்து ரோகித் ஷர்மா இன்னும் மீண்டுவராத நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டிருக்கிறார். பும்ரா துணை கேப்டன்.
லயோனல் மெஸ்ஸி உள்பட மொத்தம் 4 PSG அணி வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த அணி நிர்வாகம் நேற்று அறிவித்துள்ளது.
இயற்கை எரிவாயு மற்றும் அணுசக்தி இரண்டையும், பசுமையான ஆற்றல் மூலங்களாக (Green Energy) அங்கீகரிக்க மசோதா ஒன்றைத் தயாரிக்கிறது ஐரோப்பிய யூனியன். இதன்படி, அணுக்கழிவுகளை மேலாண்மை செய்ய அனைத்து வசதிகளையும்கொண்ட, நவீன அணுமின் உலைகள் பசுமை ஆற்றல் மூலங்களாகக் கருதப்படும். ஆனால், இந்த முடிவுக்கு ஜெர்மன் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இஸ்ரேலில் முதல்முறையாக ஒருவருக்கு `Florona’ உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கொரோனாவின் புதிய வேரியன்ட் அல்ல; மாறாக, கோவிட் மற்றும் இன்ஃப்ளூயன்ஸா இரண்டாலும் ஒரே நேரத்தில், ஒருவர் பாதிக்கப்படுவதைத்தான் அந்நாட்டு விஞ்ஞானிகள் இவ்வாறு அழைக்கின்றனர். இதில் நாம் அச்சப்பட எதுவுமில்லை.
அகில இந்திய முதுகலை நீட் கலந்தாய்வில் முன்னேறிய பிரிவினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10% இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது தொடர்பாக, எப்படி ஆண்டு வருமானம் 8 லட்ச ரூபாய் வரம்பை நிர்ணயித்தீர்கள் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. இதையடுத்து, இதுகுறித்து பரிசீலிக்க மத்திய அரசு ஒரு குழு அமைத்து, அக்குழுவும் நேற்று அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில், ``8 லட்சம் ரூபாய் ஆண்டு வருமானம் என்பது சரியான அளவுகோல்தான்” என அந்தக் குழு தெரிவித்திருக்கிறது.
வெளிநாடுகளிலிருந்து நிதியுதவி பெறும் அனைத்து தொண்டு நிறுவனங்களுக்கும் FCRA லைசென்ஸ் வைத்திருக்கவேண்டும். அண்மையில், அன்னை தெரசாவால் ஆரம்பிக்கப்பட்ட `Missionaries of Charity’ அமைப்புக்கு இந்த லைசென்ஸ் மறுக்கப்பட்டதுதான் பெரிய சர்ச்சையானது. இந்நிலையில், ஜனவரி 1-ம் தேதியுடன் சுமார் 6,000 தொண்டு நிறுவனங்களின் FCRA லைசென்ஸ்கள் காலாவதியாகிவிட்டதாக அறிவித்துள்ளது மத்திய உள்துறை அமைச்சகம். இதில் பல்வேறு சமூகநல இயக்கங்களும் அடக்கம்.
💡Answer: பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவது குறித்த சட்டத்தை ஆய்வுசெய்ய அமைக்கப்பட்ட நாடாளுமன்ற நிலைக்குழுவில் இடம்பெற்றுள்ள பெண் எம்.பி-க்களின் எண்ணிக்கை… வெறும் ஒன்று! திரிணமுல் காங்கிரஸைச் சேர்ந்த சுஷ்மிதா தேவ்தான் அந்த ஒருவர்.
On This Day - Jan 03
- வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள், 1760
- சமூக சீர்திருத்தவாதி சாவித்திரி பாய் பூலே பிறந்தநாள், 1831
- இஸ்ரோவின் முன்னாள் தலைவரும், இந்திய விண்வெளித்துறையின் ஜாம்பவானுமான சதீஷ் தவான் நினைவு தினம், 2002
🔴 இதுவரைக்கும் TSL-ஐ தொடர்ந்து படிச்சிட்டு வர்றீங்க; எனவே இதுபற்றிய உங்க கருத்தை தெரிஞ்சுக்க விரும்புறோம். அதனால், இந்த லிங்கை க்ளிக் பண்ணி உங்களோட ரேட்டிங்கைப் பதிவு பண்ணிடுங்க. TSL-ஐ மேம்படுத்த இது எங்களுக்கு உதவியா இருக்கும்!
அவ்வளவுதான்!
The Subject Line-னோட இன்னைக்கு அப்டேட்ஸ் உங்களுக்குப் பிடிச்சிருக்கும்னு நம்புறேன். பிடிச்சிருந்தா கீழ இருக்க பட்டன் மூலமா உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க… இன்னும் ஏதாச்சும் இந்த TSL-ல் மாத்தணும்னா எனக்கு மெசேஜ் பண்ணுங்க! உங்க கருத்துகள் எங்களுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். 🤞
திரும்ப நாளைக்கு காலைல 7 மணிக்கு சந்திப்போம்!
Have a Nice day ☕️
The Subject Line-ஐ சமூக வலைதளங்களில் பின்தொடர: