😷 Omicron: சில முன்னெச்சரிக்கைகளும் சில நற்செய்திகளும்!
இன்றைய TSL-ன் பிற ஹைலைட்ஸ்: அதிர்ச்சி ஏற்படுத்திய ஹரித்வார் வெறுப்பு பேச்சுகள் | பிரசாந்த் கிஷோருக்கும் திரிணமுல் காங்கிரஸூக்கும் பிரச்னையா? | ஓலா தாமதிப்பது ஏன்? | டெஸ்ட் அணியில் இடம்பெறாத அஜாஸ் பட்டேல் | ⏱ Reading Time: 5 Mins
ஹாய், ஹலோ… வணக்கம் 👋
இந்தியாவில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை நேற்று 300-ஐத் தாண்டியுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 80 பேருக்கும், டெல்லியில் 64 பேருக்கும் ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஓமிக்ரான் தொடர்பாக அண்மையில் நடந்த சில முக்கியமான அப்டேட்களைப் பார்த்துவிடுவோம்.
தமிழக நிலவரம்: தமிழகத்தில் நேற்று மட்டும் 33 பேருக்கு புதிதாக ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் இரண்டு குழந்தைகளைத் தவிர, மீதம் 31 பேரும் 2 டோஸ் தடுப்பூசியும் எடுத்துக்கொண்டவர்கள். (தடுப்பூசிகள் ஓமிக்ரான் தொற்றைத் தடுக்கவில்லை என்றாலும், நோய் பாதிப்பையும் உயிரிழப்பையும் தடுக்க வல்லவையே). தமிழகத்தில் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 3 பேர் நேற்று வீடு திரும்பியிருக்கின்றனர். (முதல் நோயாளி மற்றும் அவரின் உறவினர்கள்)
பிரதமரின் ஆலோசனைக் கூட்டம்: கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நேற்று பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அப்போது, ஓமிக்ரான் காரணமாக கொரோனா பரவலின் வேகம் அதிகரித்தால், அதை எதிர்கொள்ள நாடு முழுக்கவும் அதற்கேற்ப சுகாதாரக் கட்டமைப்புகளை தயார்ப்படுத்துவது, மாநில அரசுகளுடன் மத்திய ஒருங்கிணைந்து பணியாற்றுவது ஆகியவை குறித்து அதிகாரிகளுக்கு பிரதமரின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்: மத்திய அரசு மாநிலங்களுக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில், பண்டிகை காலம் வருவதையொட்டி, மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த உள்ளூர் அளவில் ஊரடங்கு, கட்டுப்பாடுகள் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுப்பதை பரிசீலிக்க வலியுறுத்தியிருக்கிறது. மேலும், சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் மாநிலங்களை தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவுபடுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.
சில நற்செய்திகள் 📰
தென்னாப்பிரிக்கா நிலவரம்: ஓமிக்ரான் வேரியன்ட்டின் முதல் தொற்று கடந்த நவம்பர் 25-ம் தேதி தென்னாப்பிரிக்காவின் கௌடங் பிராந்தியத்தில்தான் உறுதிசெய்யப்பட்டது. ஓமிக்ரானின் அதிவேக பரவும் தன்மை காரணமாக, இதற்கடுத்து தென்னாப்பிரிக்காவில் தினசரி கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே வந்தது. டிசம்பர் 15 அன்று அதிகபட்சமாக, சுமார் 26,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. டெல்டா வேரியன்ட்டைத் தாண்டி, ஓமிக்ரான் அந்நாட்டில் அதிகம் பரவும் வேரியன்ட்டாகவும் மாறியது. ஆனால், தற்போது அங்கு கொஞ்சம் கொஞ்சமாக தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
இதுகுறித்து பேசியிருக்கும் நிபுணர்கள், ``ஓமிக்ரான் அலை தென்னாப்பிரிக்காவில் உச்சம்தொட்டுவிட்டு, இறங்கிக்கொண்டிருக்கிறது என இதை வைத்து யூகிக்கலாம். இதற்கு முந்தைய அலைகளை விட, ஓமிக்ரான் மிகக்குறைவான நாட்களிலேயே முடிவுக்கு வரவும் வாய்ப்பிருக்கிறது” எனத் தெரிவித்துள்ளனர்.
இதன்கூடவே தெரியவந்திருக்கும் இன்னொரு நல்ல விஷயம், முந்தைய கொரோனா அலைகளை விடவும், இம்முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் சதவீதமும் (13-லிருந்து 5.7%), மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழப்போரின் சதவீதமும் (19-லிருந்து 5.6%) வெகுவாகக் குறைந்திருக்கிறது.
புதிய ஆய்வுகள் சொல்லும் நற்செய்தி 🔬
மேலும், தென்னாப்பிரிக்காவின் தேசிய தொற்றுநோய் நிறுவனத்தின் ஆய்விலும், முந்தைய வேரியன்ட்களை விட, ஓமிக்ரான் குறைவான பாதிப்பையே ஏற்படுத்துவதாக தெரியவந்துள்ளது.
இதேபோல, ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்விலும் இதேபோன்ற முடிவுகள் கிடைத்துள்ளன. இருப்பினும்,``இவற்றை வைத்து மட்டும் ஓமிக்ரான் குறித்து ஒரு முடிவுக்கு வராதீர்கள் என எச்சரிக்கிறது” WHO.
அதற்கு WHO நிபுணர்கள் சொல்லும் காரணங்கள்…
``இது முதல்கட்ட ஆய்வு முடிவுகள் மட்டுமே. எனவே இதுமட்டுமே ஓமிக்ரானைப் புரிந்துகொள்ள நமக்கு போதாது.
ஓமிக்ரான் இன்னும் பல நாடுகளில் இப்போதுதான் பரவத் தொடங்கியிருக்கிறது. எனவே அங்கும் அவை எப்படி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன எனப் பார்க்க வேண்டும்.
மேலும், ஆப்பிரிக்காவில் இருக்கும் பெரும்பாலானோர் ஏற்கெனவே கொரோனா தொற்றுக்கு உள்ளாகி, அதற்கான எதிர்ப்பு சக்தியை பெற்றவர்கள்; மீதமிருப்பவர்கள் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள். எனவே இங்கு எடுக்கப்படும் ஆய்வுகளின் முடிவை வைத்து, எதிர்ப்பு சக்தியற்ற மக்களிடையேயும் ஓமிக்ரான் இதேபோல லேசான பாதிப்பையே ஏற்படுத்தும் எனக் கூறமுடியாது. பிற நாடுகளிலும் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் மற்றும் முந்தைய பாதிப்பு எதிர்ப்பு சக்தி போன்றவை ஆய்வின் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஒருவேளை நோய் பாதிப்பில் டெல்டாவை விட குறைவான பாதிப்பை ஓமிக்ரான் ஏற்படுத்தினாலும்கூட, இதன் பரவும் வேகத்திற்கு விரைவில் மருத்துவமனைகள் நிரம்பிவிடும். எனவே, நாம் எச்சரிக்கையுடன்தான் இதனை அணுகவேண்டும்.”
இன்னொரு நற்செய்தி:
ஃபைஸர் நிறுவனம் உற்பத்தி செய்த, Paxlovid கோவிட் மாத்திரைகளை 12 வயதுக்கு மேற்பட்ட அதிக ரிஸ்க் உள்ள நபர்கள் எடுத்துக்கொள்ளலாம் என அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு, அவசரகால பயன்பாடு அடிப்படையில் அனுமதி அளித்துள்ளது.
நோய் பாதிப்பை தடுப்பதில் 89% செயல்திறன் கொண்ட இந்த் மாத்திரைகளை ஜெனரிக் மருந்துகளாக பிற நிறுவனங்கள் தயாரிக்கவும் ஏற்கெனவே ஃபைஸர் அனுமதி அளித்திருந்தது. எனவே விரைவில் இந்திய நிறுவனங்களும் இந்த மாத்திரையை உற்பத்தி செய்யும்பட்சத்தில், தடுப்பூசிகளோடு சேர்த்து கொரோனாவை எதிர்த்துப் போராட மக்களுக்கு கூடுதல் ஆயுதமாகவும் இது அமையும்.
💡எனவே ஓமிக்ரான் குறித்து உறுதியான விவரங்கள் தெரியும் வரையிலும், அதைச் சமாளிக்க நாம் 100% தயாராகும் வரையிலும், மாஸ்க்கை கழற்றவோ, சமூக இடைவெளியைப் பின்பற்ற மறக்கவோ வேண்டாம்!
லூதியானா நீதிமன்ற குண்டுவெடிப்பு:
விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் பஞ்சாப் மாநில சட்ட ஒழுங்கிற்கு சவால்விடும் வகையில் குற்றச்செயல்கள் நடந்துவருகின்றன. அண்மையில், மதநிந்தனை குற்றச்சாட்டில் இருவர் கொல்லப்பட்ட நிலையில், நேற்று லூதியானா நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்திருக்கிறது. மதியம் நீதிமன்றம் பரபரப்பாக இயங்கிவந்த நேரத்தில் நிகழ்ந்த இந்த குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
பிரசாந்த் கிஷோரை தள்ளி வைக்கிறதா திரிணமுல் காங்கிரஸ்?
கட்சியில் புதிதாக இணைந்தவர்கள் பிரசாந்த் கிஷோரின் துதி பாடியதாலும், காங்கிரஸூக்கு எதிராக பிரசாந்த் தன்னிச்சையாக கருத்து தெரிவித்ததாலும், அவர்மீது திரிணமுல் காங்கிரஸ் நிர்வாகிகளும், மம்தா பானர்ஜியும் அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் வெளியாகின. அக்கட்சியின் எம்.பி டெரிக் ஓபிரையன், ஐபேக் குறித்து அண்மையில் எதிர்மறையான கருத்து தெரிவித்ததும் சந்தேகத்தைக் கிளப்பியது. ஆனால், நேற்று மாலை, ``ஐபேக்குக்கும், திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே எந்தப் பிரச்னையுமில்லை. மம்தா பானர்ஜியின் தலைமையில் நாங்கள் ஒன்றாகவே செயல்படுகிறோம்” என விளக்கம் அளித்திருக்கிறது அக்கட்சி.
சுனிதாவுக்கு நீதி?
உத்தரகாண்ட் மாநிலம், சம்பவட் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் சத்துணவுப்பணியாளராகப் பணியாற்றி வந்தவர் தலித் பெண் சுனிதா தேவி. கடந்த சில நாள்களுக்கு முன்பு, இவர் சமைத்த உணவை அப்பள்ளியில் பயிலும் 66 மாணவர்கள் உண்ண மறுத்து, வீட்டிலிருந்து உணவு கொண்டுவந்திருக்கின்றனர். சுனிதா தேவி அங்கு பணி புரிவதற்கு, அம்மாணவர்களின் பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். அவர்கள் சொன்ன குற்றச்சாட்டு, `தகுதிவாய்ந்த உயர்சாதி பெண்மணி ஒருவருக்கு பதிலாக’ சுனிதா நியமிக்கப்பட்டார் என்பது. இதையடுத்து, சுனிதா முறைகேடாக நியமிக்கப்பட்டதாகக் கூறி அப்பணியிலிருந்து நிர்வாகத்தால் நீக்கப்பட்டார். இந்நிலையில், மாணவர்களின் பெற்றோரால் தான் இழிவுபடுத்தப்பட்டதாகக் கூறியும், பிள்ளைகளை தன் உணவை சாப்பிடக்கூடாது எனத் தூண்டியதற்கு நடவடிக்கை கோரியும் காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடமும் நேற்று புகார் அளித்திருக்கிறார் சுனிதா.
சர்ச்சையைக் கிளப்பிய ஹரித்வார் பேச்சு
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் கடந்த 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை, `தர்ம சன்சாட்’ என்ற பெயரில் இந்துத்துவ தலைவர்கள் பங்கேற்ற மாநாடு மூன்று நாள்கள் நடந்துள்ளது. அதில் பேசிய தலைவர்கள் பலரும் இஸ்லாமிய வெறுப்பைத் தூண்டும் விதமாகவும், இந்துக்களை வன்முறைக்கு அழைக்கும் வகையிலும், இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறையைப் பிரயோகிக்கும் வகையிலும் இருந்தது, நேற்று பெரும் சர்ச்சையானது. இவர்களில் பல தலைவர்கள் பா.ஜ.க தலைவர்களுக்கு நெருக்கமானவர்களும்கூட.
A Thread with **TRIGGER WARNING*** A three day hate speech conclave was organized by hate monger Yati Narsinghanand. At the event, multiple calls to k!ll minorities and attack their religious spaces were made. #HaridwarHateAssembly Thread 👇இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று இரவு உத்தரகாண்ட் காவல்துறையினர் அந்த மாநாட்டில் பேசியவர்களின் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்திருக்கின்றனர்.
ஓலாவுக்கு என்னதான் பிரச்னை?
வாடிக்கையாளர்கள் புக் செய்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்த டிசம்பர் மாதத்திலிருந்து டெலிவரி செய்யத் தொடங்கியிருக்கிறது ஓலா நிறுவனம். நிர்ணயிக்கப்பட்ட இலக்கின்படி ஓலா, சுமார் 90,000 ஸ்கூட்டர்களையும் வரும் பிப்ரவரி மாதத்திற்குள் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யவேண்டும். ஆனால், தற்போது ஒருநாளைக்கு 150 ஸ்கூட்டர்கள் வரைதான் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது என்பதால், இந்த இலக்கை அடைவது சாத்தியம் இல்லை என `ப்ளூம்பெர்க்’ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. தொழிற்சாலையில் பல துறைகளும் முழுமையாக இயங்காமல் இருப்பதுதான் இந்தப் பிரச்னைக்கு காரணமாம்.
தமிழகத்தில் நேற்று பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை: 607
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை: 8
மாநில அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் மாநிலத்தின் முக்கிய புள்ளிவிவரங்களை தமிழக முதல்வர் ஒரே இடத்தில் பார்ப்பதற்கான, `முதல்வருக்கான தகவல் பலகை’ (CM Dashboard) நேற்று மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. இது முதல்வரின் பயன்பாட்டுக்கு மட்டுமே; பொதுமக்களின் பார்வைக்கு இல்லை.
இதேபோல, பிளாஸ்டிக் பை பயன்பாட்டை ஒழித்து, மஞ்சப்பை பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசால் முன்னெடுக்கப்படும், `மீண்டும் மஞ்சப்பை’ திட்டத்தையும் நேற்று முதல்வர் தொடங்கி வைத்தார்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 30 ஆண்டுகளுக்கும் மேல் சிறைக்கைதியாக இருக்கும் நளினிக்கு, அவர் தாயாரின் கோரிக்கையின் பேரில் 30 நாள்களுக்கு பரோல் வழங்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது.
இஸ்லாமியர்களை தவறாகச் சித்தரித்து, வீடியோ வெளியிட்ட புகாரில் வலதுசாரி யூடியூபர் மாரிதாஸ் மீது, நெல்லையில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டிருந்தார். இந்த வழக்கை நேற்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி, அந்த எஃப்.ஐ.ஆரை ரத்து செய்தார்.
இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 60% பேருக்கு இதுவரை, இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன.
கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு வரும் ஜனவரி 1, 2022 முதல் ரிசர்வ் வங்கியின் புதிய tokenisation விதிமுறைகள் அமலாகிறது என நேற்று முன்தினம் TSL-ல் பார்த்தோம் அல்லவா? நேற்று, அந்த விதிகளை அமல்படுத்துவதற்கான கால அவகாசத்தை ஜூன் 30, 2022 வரை நீட்டித்திருக்கிறது ரிசர்வ் வங்கி.
மதமாற்றங்களுக்கான விதிமுறைகளை கடுமையாக்கும் பொருட்டு கொண்டுவரப்பட்ட கர்நாடக மாநிலத்தின் மதமாற்ற தடை மசோதாவானது, நேற்று அம்மாநில சட்டமன்றத்தில் கடும் எதிர்ப்புகளுக்கிடையே நிறைவேற்றப்பட்டது.
வங்கதேசத்துடனான இரு போட்டிகள் டெஸ்ட் தொடருக்கு நேற்று வீரர்களை அறிவித்தது நியூசிலாந்து. இதில், அண்மையில் இந்தியாவின் வான்கடே மைதானத்தில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்த அஜாஸ் பட்டேலுக்கு இடமில்லை. நியூசிலாந்தில் டெஸ்ட் போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமானவை என்பதால், அஜாஸை நீக்கியிருக்கிறது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம்.
- சென்னை சர்வதேச திரைப்பட விழா: 19-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவானது, இம்மாதம் 30-ம் தேதி தொடங்கி ஜனவரி 6-ம் தேதி வரை நடக்கிறது. 53 நாடுகளிலிருந்து, 121 படங்கள் இம்முறை திரையிடப்படவிருக்கின்றன. 11 தமிழ்ப்படங்களும் திரையிடப்படுகின்றன.
On This Day - Dec 24
- தந்தை பெரியார் நினைவு தினம் (1973)
- முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் நினைவு தினம் (1987)
- பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன் நினைவு தினம் (2020)
🔴 இதுவரைக்கும் TSL-ஐ தொடர்ந்து படிச்சிட்டு வர்றீங்க; எனவே இதுபற்றிய உங்க கருத்தை தெரிஞ்சுக்க விரும்புறோம். அதனால், இந்த லிங்கை க்ளிக் பண்ணி உங்களோட ரேட்டிங்கைப் பதிவு பண்ணிடுங்க. TSL-ஐ மேம்படுத்த இது எங்களுக்கு உதவியா இருக்கும்!
அவ்வளவுதான்!
The Subject Line-னோட இன்னைக்கு அப்டேட்ஸ் உங்களுக்குப் பிடிச்சிருக்கும்னு நம்புறேன். பிடிச்சிருந்தா கீழ இருக்க பட்டன் மூலமா உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க… இன்னும் ஏதாச்சும் இந்த TSL-ல் மாத்தணும்னா எனக்கு மெசேஜ் பண்ணுங்க! உங்க கருத்துகள் எங்களுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். 🤞
திரும்ப நாளைக்கு காலைல 7 மணிக்கு சந்திப்போம்!
Have a Nice day! ☕️
The Subject Line-ஐ சமூக வலைதளங்களில் பின்தொடர: