💳 மாறும் கார்டு பேமென்ட் விதிமுறைகள்; ஜனவரி 1-க்குப் பிறகு என்னாகும்?
இன்றைய TSL-ன் பிற ஹைலைட்ஸ்: சென்னையின் டாப் உணவு எது தெரியுமா? | மாநிலங்களுக்கு மத்திய அரசு கொடுத்த ஓமிக்ரான் அலர்ட் | இன்று தொடங்கப்படும் CM Dashboard | ⏱ Reading Time: 5 Mins
ஹாய், ஹலோ… வணக்கம் 👋
இன்றைய தினத்தின் டாப் அப்டேட்ஸ் இதோ…
வரும் ஜனவரி 1, 2022-லிருந்து டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பேமென்ட்களுக்கான ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள் அமலாகின்றன. இதனால், ஆன்லைன் கார்டு பேமென்ட்களில் பெரியளவில் மாற்றங்கள் நடக்கவிருக்கின்றன.
என்ன மாற்றம்?
இதைப் புரிந்துகொள்வதற்கு முன்பு தற்போது ஆன்லைன் பேமென்ட்கள் எப்படி நடக்கின்றன என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
இப்போது, ஆன்லைனில் ஏதேனும் சேவைகளுக்காக (உதாரணம் ஸ்விக்கி, அமேசான்) பேமென்ட் மேற்கொள்ள வேண்டுமென்றால், பில்லிங் அல்லது செக் அவுட் பகுதிக்குச் சென்று 3 வேலைகளைச் செய்யவேண்டும்.
நம்முடைய டெபிட் / கிரெடிட் கார்டு எண்ணை கொடுப்பது.
கார்டின் CVV எண்ணை கொடுப்பது
பிறகு OTP-யைப் பதிவு செய்து, பணம் செலுத்துவது.
இந்த மூன்றும்தான் பொதுவாக நடக்கும் விஷயம். இதில், இந்த சேவை நிறுவனங்கள் கூடுதலாக நம்மை இன்னொரு விஷயமும் செய்யச்சொல்லும். அது, நம் கார்டு விவரங்களை நிரந்தரமாக அந்த இணையதளம் / App-ல் சேமித்து வைத்துக்கொள்வது. `இதுதான் தவறான விஷயம்!’ என்கிறது ரிசர்வ் வங்கி.
இதில் என்ன பிரச்னையாம்?
வாடிக்கையாளர்கள் ஒவ்வொருமுறையும் கார்டு விவரங்களைப் பதிவுசெய்யாமல், எளிமையாகவும் விரைவாகவும் பணம் செலுத்தத்தான் அவர்களின் கார்டு விவரங்களை சேமித்து வைக்கின்றன வணிக நிறுவனங்கள்.
இன்று நாம் ஒவ்வொருவரும் குறைந்தது 5 வெவ்வேறு தளங்களிலாவது நம் கார்டு விவரங்களை இப்படி சேமித்து வைத்திருப்போம். இங்குதான் பிரச்னையே.
ஹேக்கிங், டேட்டா கசிவு போன்ற நிகழ்வுகளில் இதுபோன்ற நிறுவனங்களின் டேட்டாபேஸில் இருந்து மொத்தமாக கார்டு விவரங்கள் களவு போகவும், அதை வைத்து அந்த டேட்டா உரிமையாளர்களின் பணத்தை அபேஸ் செய்யவும் வாய்ப்பு அதிகம்.
அதென்ன வணிக நிறுவனங்கள் மட்டும்? அப்படியெனில் வங்கிகளின் டேட்டா மட்டும் முழு பாதுகாப்புடன் இருக்குமா? இல்லை; அங்கும் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்படலாம்தான். ஆனால், இப்படி பல்வேறு இடங்களில் நம் தகவல்கள் இருந்தால் அவை திருடப்படும் வாய்ப்பு அதிகமல்லவா? ``அதைத்தான் குறைக்க நினைக்கிறோம்” எனச் சொல்கிறது ரிசர்வ் வங்கி.
அப்படியெனில் ஆன்லைன் நிறுவனங்கள் எப்படி இயங்கும்? ஒவ்வொருமுறையும் வாடிக்கையாளர்களையே கார்டு விவரங்களை பதியச் சொல்வதெல்லாம் மிகவும் சிரமமான காரியமாச்சே? ஆமாம், அதனால்தான் `Tokenisation’ வழிமுறையைப் பின்பற்றச் சொல்லி வலியுறுத்துகிறது ரிசர்வ் வங்கி. இதன்படி,
இப்போது வாடிக்கையாளர்களின் கார்டு விவரங்களைச் சேமித்து வைத்திருக்கும் அனைத்து நிறுவனங்களும், அவற்றை டிசம்பர் 31, 2021 உடன் தங்கள் டேட்டாபேஸிலிருந்து அழித்துவிட வேண்டும். ஜனவரி 1 முதல் எந்த நிறுவனமும் வாடிக்கையாளர்களின் கார்டு விவரங்களைச் சேமிக்கக்கூடாது.
மாறாக, வாடிக்கையாளர்களின் கார்டு விவரங்களை Tokenisation செய்து, அந்த Token-களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அதென்ன Tokenisation?
ஆன்லைன் பேமென்ட் எப்படி நடக்கிறது என மேலே பார்த்தோம் இல்லையா? இனி, இந்த Tokenisation எப்படி நடக்கும் எனப் பார்ப்போம்.
நீங்கள் அமேசானில் கார்டு மூலம் பணம் செலுத்துவதாக வைத்துக்கொள்வோம். முதலில் கார்டு எண்ணை பதிவு செய்வீர்கள். பின்னர் CVV.
இது நடந்ததும், அமேசானானது இந்த கார்டு விவரங்களை, tokenise செய்ய உங்களிடம் அனுமதி கேட்கும். நீங்கள் அனுமதியளித்ததும் சம்பந்தப்பட்ட கார்டு நிறுவனத்திற்கு (Visa, RuPay போன்றவை) உங்கள் கார்டு விவரங்களை அனுப்பும்.
உடனே அந்த கார்டு நிறுவனம், உங்கள் கார்டு விவரங்களை உறுதி செய்துவிட்டு, கார்டின் 16 இலக்க எண்ணிற்கு பதிலாக, வேறு 16 இலக்க எண்களை Token-னாக அமேசானிற்கு அனுப்பிவைக்கும். இப்போது அமேசானிடம் இருப்பது உங்கள் கார்டு எண் அல்ல; மாறாக, உங்கள் கார்டு நிறுவனம் தந்திருக்கும் Token மட்டுமே.
இப்போது, இந்த டோக்கனை எதிர்கால பரிவர்த்தனைகளுக்காக அமேசான் சேமித்து வைத்துக்கொள்ளலாம்; நீங்கள் அனுமதி கொடுத்தால் மட்டும்.
அடுத்து, எதிர்காலத்தில் நீங்கள் அதே கார்டைப் பயன்படுத்தி, அமேசானில் பணம் செலுத்த வேண்டுமென்றால் நீங்கள் ஏற்கெனவே பெற்ற இந்த Token-ஐ CVV மற்றும் OTP கொடுத்து பயன்படுத்தலாம். அது அமேசான் தளத்தில் சேமித்து வைக்கப்பட்டிருப்பதால், நீங்கள் பதிவிட வேண்டியதில்லை.
ஆனால் இதே கார்டை, உதாரணமாக வேறொரு தளத்தில் பயன்படுத்தினால், அமேசானில் கிடைத்த அதே Token எண் கிடைக்காது. அங்கு, உங்கள் கார்டு நிறுவனம் வேறு Token வழங்கும். இப்படி ஒரே கார்டை வெவ்வேறு தளங்களில் பயன்படுத்தினால், புதுப்புது Token-கள் தனித்தனியே உருவாகும். எங்குமே உங்கள் கார்டு எண்கள் சேமிக்கப்படாது.
இப்படி, கார்டு விவரங்களை நேரடியாக சேமிக்காமல், அதற்கு பதிலாக Token சிஸ்டமை பயன்படுத்துவதுதான் Tokenisation. ``நாளை இந்த Token-களை யாரேனும் ஹேக் செய்தால் கூட, அதை வைத்து நம் கார்டு விவரங்களைக் கண்டுபிடிப்பதும் கடினம்” என்கிறது ரிசர்வ் வங்கி.
இப்படி உங்கள் கார்டுகளுக்கு நீங்கள் பெறும் Token-கள் அனைத்தும், உங்கள் வங்கி அல்லது கார்டு நிறுவனத்தின் இணையதளத்தில் சேமிக்கப்பட்டிருக்கும். அவற்றை குறிப்பிட்ட இணையதளத்திலிருந்து நீக்கவேண்டுமென்றால், அதை நீங்களே செய்து கொள்ளலாம்.
ஜனவர் 1-க்குப் பிறகு செய்யவேண்டியது என்ன?
ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள்படி, ஜனவரி 1-க்குப் பிறகு, ஆன்லைன் தளங்கள் / App-களில் இதுவரை நீங்கள் சேமித்து வைத்த கார்டு விவரங்கள் அனைத்தும் நீக்கப்பட்டுவிடும். அதன்பின்பு, மேலே சொன்னதுபோல ஒவ்வொரு தளத்திலும் மீண்டும் உங்கள் கார்டு விவரங்களைக் கொடுத்து Tokenisation-க்கு சம்மதம் தெரிவிக்க வேண்டும். இல்லையெனில், ஒவ்வொரு முறையும் கார்டு எண்களைப் பதிவு செய்தே, பணம் செலுத்தமுடியும்.
வங்கிகள், கார்டு நிறுவனங்கள் விரைவில் இதுதொடர்பான அலர்ட்களை உங்களுக்கு அனுப்பும்; அல்லது ஏற்கெனவே அனுப்பியிருக்கும். அதில் உங்கள் கார்டுக்கான பிரத்யேக வழிகாட்டல்கள் இருந்தால் அவற்றைப் பின்பற்றலாம்.
ஸ்விக்கி, ஸொமோட்டோ, கூகுள் ப்ளே போன்ற தளங்கள் வாடிக்கையாளர்களை, தங்கள் கார்டு விவரங்களை இப்போதே மீண்டும் கொடுத்து பதிவு செய்யச் சொல்கின்றன.
இப்படி சின்னச் சின்ன விஷயங்களைத் தாண்டி, வாடிக்கையாளர்கள் தரப்பிலிருந்து இப்போதைக்கு செய்ய எதுவும் இல்லை. ஜனவரி 1-க்குப் பிறகுதான் எந்த நிறுவனம், என்ன செய்கிறது எனத் தெரியும்.
ஆனால், வங்கிகளும், பேமென்ட் நிறுவனங்களும்தான் இன்னும் 10 நாள்களுக்குள் நடக்கவிருக்கும் இந்த மாற்றங்களுக்கு தயாராகாமல் திணறிக்கொண்டிருக்கின்றன.
என்ன காரணம்?
சில மாதங்களுக்கு முன்பு, நெட்ஃப்ளிக்ஸ், ஹாட்ஸ்டார் போன்றவற்றிற்கெல்லாம் சப்ஸ்கிரிப்ஷனை புதுப்பிக்க முடியாமல் உங்களில் பலரும் திணறியிருக்கலாம். அந்தப் பிரச்னைக்கு காரணம், அண்மையில் ரிசர்வ் வங்கி கொண்டு வந்த Recurring Payment விதிமுறைகள்தான். அப்போது பல நிறுவனங்களும், வங்கிகளும் இந்த மாற்றத்தை எதிர்கொள்ள முடியாமல் திணறின. மக்கள் அவதிப்பட்டனர்.
தற்போது ஜனவரிக்குப் பிறகும் இதேபோல நிலை ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.
காரணம், ``இந்த மாற்றங்களுக்காக ரிசர்வ் வங்கி, கார்டு நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கு கொடுத்த கால அவகாசம் மிகவும் குறைவு” என்கின்றனர் வங்கி தரப்பினர். எனவே இதை நீட்டிக்கச் சொல்லியும் கோரிக்கைகள் எழுந்திருக்கின்றன.
மேலும், கிரெடிட் கார்டில் EMI மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு இந்த Token சிஸ்டம் எப்படி சரிவரும் என்ற குழப்பமும் நிலவுகிறது. கூடவே ஜனவரி 1 அன்று வங்கிகள், பேமென்ட் அக்ரிகேட்டர் மற்றும் பேமென்ட் கேட்வே நிறுவனங்கள் முழுவதும் தயாராகவில்லையெனில், அது ஆன்லைன் கார்டு பரிவர்த்தனைகளில் பெரியளவில் சிக்கலை ஏற்படுத்துமோ என்ற அச்சமும் நிலவுகிறது.
எனவே கார்டு பேமென்ட்களை அதிகளவில் சார்ந்திருப்பவர்கள், இந்த விவகாரத்தை அடுத்த சில நாள்களுக்கு தொடர்ந்து கவனித்து வாருங்கள்.
ராஜ்ய சபாவிலும் நிறைவேறிய மசோதா:
ஆதார் எண்ணையும், வாக்காளர் அடையாள அட்டையையும் இணைக்க வழிசெய்யும், லோக் சபாவில் நிறைவேற்றப்பட்ட தேர்தல் சட்டங்கள் திருத்த மசோதா பற்றி நேற்று TSL-ல் பார்த்தோம் அல்லவா? அந்த மசோதா நேற்று ராஜ்யசபாவிலும் நிறைவேறிவிட்டது. இந்த ஆதார் & வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு கட்டாயமில்லை என அரசு சொன்னாலும் தற்போது அரசு கொண்டுவந்திருக்கும் சட்டதிருத்தத்தில் இடம்பெற்றிருக்கும் வரிகள் அதற்கு முரணாக இருக்கின்றன.
``தகுந்த காரணங்களால், ஆதார் அட்டையை ஒருவர் சமர்ப்பிக்கவில்லையெனில், அவரை வாக்காளர் பட்டியலில் சேர்க்காமல் விடவோ, அவரை பட்டியலிலிருந்து நீக்குவதோ கூடாது” என்கின்றன இந்த சட்டத்திருத்தத்தில் உள்ள வரிகள். அப்படியெனில், அந்த `தகுந்த காரணங்களை’ அரசே வரையறை செய்து, மற்ற அனைவரையும் ஆதாரை, வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கச் சொல்லி கட்டாயப்படுத்துமா எனக் கேள்வி எழுப்புகின்றனர் வழக்கறிஞர்கள்.
மாநில அரசுகளுக்கு அலர்ட்:
இந்தியா முழுவதும் ஓமிக்ரான் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 200-ஐத் தாண்டியிருக்கிறது. இந்நிலையில், கொரோனா தொற்று உயரும்பட்சத்தில், உள்ளூர் அளவில் எடுக்கவேண்டிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை குறிப்பிட்டு மாநிலங்களுக்கு கடிதம் எழுதியுள்ளது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம். ஏதேனும் சில குறிப்பிட்ட பகுதிகளில் அதிகமான தொற்றுகள் கண்டறியப்பட்டாலோ அல்லது மாவட்டத்தில் அதிகமான தொற்று விகிதம் கண்டறியப்பட்டாலோ உடனடியாக நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்கவும், தேவைப்பட்டால் இரவு ஊரடங்கு, பொது நிகழ்ச்சிகளுக்கு தடை உள்ளிட்ட அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்கவும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஏன் வெட்கப்பட வேண்டும்?
தடுப்பூசி சான்றிதழில் பிரதமரின் படம் இடம்பெற்றிருப்பது, தன்னுடைய அடிப்படை உரிமைகளை மீறுவதாகக் கூறி, அண்மையில் கேரள உயர்நீதிமன்றத்தில் பீட்டர் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி குன்ஹிகிருஷ்ணன், ``அரசுடனோ, பிரதமர் மீதோ குடிமக்களுக்கு கொள்கை வேறுபாடுகள், கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில், ஊக்கமளிக்கும் வாசகங்களுடன் தடுப்பூசி சான்றிதழில் இடம்பெற்றிருக்கும் பிரதமரின் படத்தைப் பார்த்து வெட்கப்பட அவசியமில்லை. இந்த மனுவானது விளம்பரத்திற்காகவும், அரசியல் உள்நோக்கங்களுக்காகவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது; எனவே இதை தள்ளுபடி செய்து, மனுதாரருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கிறேன்” எனத் தீர்ப்பளித்துள்ளார்.
தமிழகம்
68 ஆக உயர்ந்த மீனவர்கள் கைது: கடந்த திங்கள் கிழமை மாலையன்று, மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 13 மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டத்தைத் தொடர்ந்து, கடந்த மூன்று நாள்களில் இலங்கையால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து நேற்று விளக்கமளித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், ``யாழ்ப்பாணம் தூதரக அதிகாரிகள், மீனவர்களை சந்தித்து அவர்களைத் தேவையான உதவிகளை செய்ததாகவும், அவர்களை விடுதலை செய்யும் பணிகள் நடந்துவருகின்றன” என்றும் தெரிவித்துள்ளது.
மறைந்த கருணாநிதியின் நிழல்:
கருணாநிதியிடம் சுமார் 50 ஆண்டுக்காலம் நேர்முக உதவியாளராகப் பணியாற்றிய, அவரின் நிழலாக கருதப்பட்ட சண்முகநாதன் (80) நேற்று உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவரின் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னையின் டாப் உணவு எது தெரியுமா?
இந்தியாவில் 2021-ல் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு வகைகளின் விவரங்களை வெளியிட்டிருக்கிறது ஸ்விக்கி. அதன்படி, இந்தியாவிலேயே அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட ஸ்நாக்ஸ் எது தெரியுமா?
சமோசா 😋 - 50 லட்சம் சமோசாக்கள் ஆர்டர் செய்யப்பட்டிருக்கின்றன.
சென்னையில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு, சிக்கன் பிரியாணி 🍲
தமிழகத்தில் நேற்று பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை: 602
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை: 5
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு எதிராக அப்போலோ மருத்துவமனை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கின் விசாரணையில், ஆறுமுகசாமி ஆணைய குழுவில் எய்ம்ஸ் மருத்துவர்களையும் இடம்பெறச் செய்ய, அண்மையில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, ``ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு வழங்க தயார்” என நேற்று அறிவித்திருக்கிறது அப்போலோ நிர்வாகம்.
அதிகளவில் இந்தியாவிலிருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பணத்தை திரும்ப எடுத்துக்கொண்டிருப்பதால், ஆசிய அளவில், இந்த காலாண்டில் மிக பலவீனமான கரன்சியாக மாறியிருக்கிறது இந்திய ரூபாய்.
ESPN Cricinfo தளத்திற்கு விரிவான பேட்டியளித்திருக்கிறார் ரவிச்சந்திரன் அஷ்வின். அதில், 2018-20-க்கு இடைப்பட்ட காலத்தில், காயத்தாலும் அது தந்த பாதிப்பாலும் கிரிக்கெட்டிலிருந்தே ஓய்வுபெற்றுவிடலாமா என சிந்தித்ததாகவும், அந்த சமயத்தில் உழைத்த கடின உழைப்பிற்கு பலன் கிடைக்காதபோது அந்த எண்ணம் இன்னும் அதிகரித்தது என்றும் தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவின் வான்வெளிப் பாதுகாப்பை அதிகரிப்பதற்காக ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்ட ஐந்து அதிநவீன S-400 ட்ரையம்ப் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளில், முதலாவதை பஞ்சாப் பகுதியில் நிறுவியுள்ளது இந்திய விமானப்படை. பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு எதிராக இந்தப் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த இது உதவியாக இருக்குமாம்.
உள்நாட்டில் சமையல் எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், லைசென்ஸ் இன்றி அடுத்த ஓராண்டுக்கு வெளிநாட்டிலிருந்து வணிகர்கள் பாமாயில் இறக்குமதி செய்ய அனுமதித்துள்ளது மத்திய அரசு.
2014 முதல் 2021 வரையிலான காலகாலத்தில் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் மற்றும் பிற மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் படித்துவந்த 122 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்.
- புதிய டேஷ்போர்டு: தமிழக அரசுத் திட்டங்களின் தற்போதைய நிலவரங்களை, ஒரே இடத்தில் காணும்படி வடிவமைக்கப்பட்டிருக்கும், `முதல்வரின் தகவல் பலகையை' (CM Dashboard) இன்று முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார். துறைவாரியாக, அரசுத்திட்டங்களின் செயல்பாடுகளை முதல்வர் கண்காணிக்க இது உதவுமாம்.
On This Day - Dec 22
- பார் போற்றிய கணிதமேதை ஸ்ரீநிவாச ராமானுஜரின் பிறந்தநாள் இன்று, 1887. இதையொட்டி, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 22-ம் தேதி, தேசிய கணித தினமாகக் கொண்டாடப்படுகிறது.
🔴 இதுவரைக்கும் TSL-ஐ தொடர்ந்து படிச்சிட்டு வர்றீங்க; எனவே இதுபற்றிய உங்க கருத்தை தெரிஞ்சுக்க விரும்புறோம். அதனால், இந்த லிங்கை க்ளிக் பண்ணி உங்களோட ரேட்டிங்கைப் பதிவு பண்ணிடுங்க. TSL-ஐ மேம்படுத்த இது எங்களுக்கு உதவியா இருக்கும்!
அவ்வளவுதான்!
The Subject Line-னோட இன்னைக்கு அப்டேட்ஸ் உங்களுக்குப் பிடிச்சிருக்கும்னு நம்புறேன். பிடிச்சிருந்தா கீழ இருக்க பட்டன் மூலமா உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க… இன்னும் ஏதாச்சும் இந்த TSL-ல் மாத்தணும்னா எனக்கு மெசேஜ் பண்ணுங்க! உங்க கருத்துகள் எங்களுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். 🤞
திரும்ப நாளைக்கு காலைல 7 மணிக்கு சந்திப்போம்!
Have a Nice day! ☕️
The Subject Line-ஐ சமூக வலைதளங்களில் பின்தொடர: