🤔 கிரிப்டோகரன்சிக்கான மசோதா வருமா வராதா?
In Today's Edition: விஜய் மல்லையாவால் கடுப்பான உச்சநீதிமன்றம் | அமலாகும் ட்விட்டரின் புதிய விதி | இந்திய குடியுரிமையைத் துறந்த 6 லட்சம் பேர் | அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட அன்வர் ராஜா | Reading Time: 4½ Mins ⏳
Dec 1, 2021
ஹாய், ஹலோ… வணக்கம் ☕️
📣 Note: The Subject Line (TSL) நியூஸ்லெட்டரின் இந்த மெயில் உங்களின் Promotions Tab-ல வந்திருந்தா, அதை அப்படியே Move பண்ணி, Primary Tab-க்கு மாத்திடுங்க. இதன்மூலம் தினமும் TSL-ஐ நீங்க மிஸ் பண்ணாம படிக்கமுடியும். ஒருவேளை இந்த மெயில் உங்க நண்பர்கள் மூலம் வந்திருந்தா, தினமும் உங்க இன்பாக்ஸிற்கு நேரடியாக வர, சப்ஸ்கிரைப் பண்ணிடுங்க. Happy Reading! 😊
💰கிரிப்டோகரன்சிக்கான மசோதா வருமா, வராதா?
கிரிப்டோகரன்சிகளை நெறிப்படுத்த Cryptocurrency and Regulation of Official Digital Currency Bill, 2021 இந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படும் என சில நாள்களுக்கு முன்பு மக்களவை குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், மசோதா குறித்த அறிமுகத்தில், ` அனைத்து தனியார் கிரிப்டோகரன்சிகளையும் தடைசெய்யவேண்டும்’ எனவும் குறிப்பிடப்பட்டிருந்ததால், கிரிப்டோ முதலீட்டாளர்கள் கலக்கமடைந்தனர். ஆனால், அந்த மசோதா குறித்து இன்னும் எந்த தகவலும் தெரியவில்லை.
என்ன ஆனது மசோதா?
இதே கேள்வியைத்தான், நேற்று நாடாளுமன்றத்தில், பா.ஜ.க எம்.பியான சுஷில் குமார் மோடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேட்டார். மேலும், ``இதற்கு முந்தைய கூட்டத்தொடரிலேயே கிரிப்டோ ஒழுங்குமுறை மசோதா கொண்டுவரப்படும் எனச் சொல்லப்பட்டது; ஆனால், அப்போதும் மசோதா தாக்கல் செய்யப்படவில்லையே?” எனவும் கேள்வியெழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன்,
``கடந்தமுறை நாங்கள் மசோதாவைக் கொண்டுவர முடிவுசெய்த பின்பு, சில முக்கியமான அம்சங்களை அதில் மீண்டும் சேர்க்க வேண்டியிருந்தது. அதனால்தான் அப்போது எங்களால் தாக்கல் செய்யமுடியவில்லை. இப்போது, இந்தக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படவிருப்பது, அந்த அம்சங்கள் சேர்க்கப்பட்ட புதிய மசோதாதான். கடந்த முறை நாங்கள் கொண்டுவருவதாகச் சொன்ன மசோதா அல்ல. இந்த மசோதாவுக்கு கேபினட் ஒப்புதல் அளித்ததும் அவையில் தாக்கல் செய்யப்பட்டும்” எனத் தெரிவித்தார்.
இந்த தாமதத்திற்கு என்ன காரணம்?
இதுகுறித்து `நியூஸ் 18’ ஊடகத்திற்கு பேட்டியளித்திருக்கிறார், முன்னாள் நிதித்துறைச் செயலாளரும், கிரிப்டோ மசோதாவின் உருவாக்கத்தில் பங்களித்தவருமான சுபாஷ் கார்க். அதில் அவர் சொல்லியிருக்கும் சில காரணங்கள்…
``இந்த மசோதா இதுவரைக்கும் கேபினட்டால் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. எனவே இந்தக் கூட்டத்தொடரில் இது தாக்கல் ஆவதும் சந்தேகம்தான். அரசு கிரிப்டோ விவகாரத்தில் கிரிப்டோகரன்சிகளை மட்டுமே பார்க்கிறது. ஆனால், கிரிப்டோ பொருளாதாரம் அதையும் தாண்டியது. அரசின் மசோதா அவற்றையும் உள்ளடக்கியதா எனத் தெரியவில்லை.
கிரிப்டோகரன்சிகளால் பல நன்மைகள் இருக்கலாம். ஆனால், அவற்றிலிருக்கும் ஆபத்துகளையும் நாம் மறந்துவிடக்கூடாது. குறிப்பாக தனியார் அமைப்புகள் ஒரு கிரிப்டோகரன்சியை வெளியிடுவதை அனுமதிக்கக்கூடாது என்பதே அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் நிலைப்பாடு. இதற்கு முந்தைய கிரிப்டோ மசோதா, அந்த விஷயத்தில்தான் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தது. ஆனால், இப்போது கிரிப்டோ உலகம், கிரிப்டோகரன்சிகளைத் தாண்டியும் வளர்ந்துவிட்டது. எனவே அவற்றையும் கருத்தில் கொள்ளவேண்டிய தேவை எழுந்திருக்கிறது.
மசோதாவே இன்னும் தயாராகாத நிலையில், மக்களவை குறிப்பின் அறிமுகத்தில், ``அனைத்து தனியார் கிரிப்டோகரன்சிகளையும் தடைசெய்யவேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தது பிழைதான். இந்த பிளாக்செயின் தொழில்நுட்பம் குறித்து அரசுக்கும், தனியாருக்குமே பல்வேறு குழப்பங்கள் இருக்கின்றன. எனவே நாட்டின் நலனைக் கருத்தில்கொண்டு, பல்வேறு விவாதங்களுக்குப் பிறகே முடிவெடுக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இனி முடிவு கேபினட்டின் கையில்தான்.
இந்தியா
விஜய் மல்லையாவால் கடுப்பான உச்சநீதிமன்றம்:
SBI உள்ளிட்ட வங்கிகளுக்கு செலுத்தவேண்டிய சுமார் 9,000 கோடி ரூபாயை செலுத்தாததால் 2017-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார் விஜய் மல்லையா. ஆனால், அவர் பிரிட்டனில் இருப்பதால் அவருக்கான தண்டனை விவரங்கள் மட்டும் அறிவிக்கப்படவில்லை. இதையடுத்து 4 ஆண்டுகளாக காத்திருந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், ``இந்த வழக்கில் இன்னும் தண்டனை மட்டுமே பாக்கி. ஏற்கெனவே போதுமான அளவுக்கு காத்திருந்துவிட்டோம். இனிமேலும் இந்த வழக்கைத் தொடர்ந்து ஒத்திவைக்க முடியாது. எனவே வரும் ஜனவரியில் இந்த வழக்கில் இறுதி முடிவு எடுக்கவிருக்கிறோம்” என அறிவித்துள்ளனர்.
உயர்ந்த இந்தியாவின் ஜிடிபி விகிதம்:
கடந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டோடு ஒப்பிடுகையில், இந்த 2021-22-ன் இரண்டாம் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி வகிதம் 8.4% ஆக இருப்பதாக நேற்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த 2020-21-ன் இரண்டாம் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி விகிதம் -7.4% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
``எம்.பி-க்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்” - பிரகலாத் ஜோஷி
காங்கிரஸ், சிவசேனா, திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 12 எம்.பி-க்களை இந்த குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது மத்திய அரசு. இதுதொடர்பாக நேற்றும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்ப்புகள் எழுந்தன. இதுகுறித்து விளக்கம் அளித்திருக்கும் அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ``12 நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்களும் அவையின் மரபுகளுக்கு எதிரானவை. அவர்கள் அந்த செயலுக்காக மன்னிப்பு கேட்டால், மீண்டும் இந்த அவைக்குள் வரலாம்” எனத் தெரிவித்திருக்கிறார்.
மும்பையில் மம்தா:
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இருநாள் பயணமாக நேற்று மும்பை சென்றிருக்கிறார். பா.ஜ.க-விற்கு எதிராக எதிர்க்கட்சிகளைத் திரட்டும் முயற்சிகளிலும், கோவா உள்ளிட்ட பிற மாநிலங்களில் திரிணமுல் காங்கிரஸை விரிவுபடுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கும் இந்த சமயத்தில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை இன்று சந்திக்கிறார் மம்தா. மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவையும் சந்திக்க அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால், அவர் உடல்நிலை காரணமாக அந்த சந்திப்பு நடைபெறவில்லை.
விமர்சிக்கப்படும் பராக்கின் ட்வீட்:
பிரபலங்களின் பழைய ட்வீட்களை நோண்டியெடுத்து, அதற்காக அவர்களை விமர்சித்து அழகுபார்ப்பது ட்விட்டரின் `பாரம்பர்யங்களில்’ ஒன்று 😉. அதற்கு, ட்விட்டரின் புதிய CEO-வாக பொறுப்பேற்றிருக்கும் பராக் அக்ரவாலும் தப்பவில்லை. அவரின் 11 ஆண்டுகால பழைய ட்வீட் ஒன்று, நேற்று திடீரென வைரலாகியிருக்கிறது. ``இஸ்லாமியர்களையும் பயங்கரவாதிகளையும் உங்களால் பிரித்துப் பார்க்க முடியாது என்றால், வெள்ளையர்களையும் நிறவெறியர்களையும் மட்டும் நான் ஏன் பிரித்துப் பார்க்கவேண்டும்" என்ற அந்த ட்வீட்டானது, இந்திய மற்றும் அமெரிக்க வலதுசாரிகளால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த ட்வீட்டானது பராக்கின் சொந்தக் கருத்து அல்ல; மாறாக 2010-ல் ஒரு தனியார் நிகழ்ச்சியில், அமெரிக்க விமான நிலையங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிராக காட்டப்படும் பாகுபாடு குறித்து, காமெடியன் ஒருவரால் சொல்லப்பட்ட வரிகளே அவை. அதைத்தான் பராக்கும் அப்போது ட்வீட் செய்திருக்கிறார். அவ்வளவே!
யார் யார் எந்த அணியில்?
2022 ஐ.பி.எல் சீசனுக்காக எந்தெந்த அணிகள் யார் யாரைத் தக்கவைத்துக்கொள்கின்றன (அதிகபட்சம் 4 பேர்) என்பதை நேற்று அறிவித்திருக்கின்றன. சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் தோனி, ஜடேஜா, மொயின் அலி, ருத்துராஜ் ஆகியோர் ரீட்டெய்ன் செய்யப்பட்டிருக்கின்றனர். மும்பையில், ரோகித் ஷர்மா, பொல்லார்டு, சூர்யகுமார் யாதவ், பும்ரா ஆகியோர் ரீட்டெயின் செய்யப்பட்டிருக்கின்றனர்.
தமிழகம்
இன்றைய வானிலை முன்னறிவிப்பு ☔️
கனமழை எச்சரிக்கை எங்கும் இல்லை. சில இடங்களில் மட்டும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. சென்னையில் சில இடங்களில் மட்டும் லேசான அல்லது மிதமான மழை பெய்யலாம். தெற்கு அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஒன்று உருவாகியிருக்கிறது. ஆனால், இதனால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை.
உலகம்
ட்விட்டரின் புதிய விதி:
தொடர்பு எண்கள், முகவரி உள்ளிட்ட தனிநபர்களின் அந்தரங்க தகவல்களை, பிறர் பகிர்வதற்கு ட்விட்டர் ஏற்கெனவே தடை விதித்திருந்தது. இந்நிலையில், தனிநபர்களின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை, அவர்களின் அனுமதியின்றி மூன்றாம் நபர் வெளியிடுவதற்கும் நேற்று முதல் தடைவிதித்திருக்கிறது ட்விட்டர். இதன்படி, ஒரு தனிநபர், வேறு ஒருவரின் புகைப்படத்தை ட்வீட் செய்யும் முன்பே அனுமதி பெறவேண்டும் என்பதில்லை. ஆனால், அந்தப் புகைப்படத்திலிருப்பவர் இதுகுறித்து ஆட்சேபனை தெரிவித்தால், அந்த ட்வீட் நீக்கப்படும். இந்த விதிகள் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டவர்களுக்குப் பொருந்தாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் ட்விட்டரில் நடக்கும் தனிமனித தாக்குதல்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குடியரசாக மாறிய பார்படோஸ் தீவு:
உலகின் புதிய குடியரசாக நேற்று மாறியிருக்கிறது பார்படோஸ் தீவு. ஆங்கிலேயர்களின் கீழ் இருந்த இந்த தீவு 1966-லேயே சுதந்திரம் பெற்றுவிட்டிருந்தாலும், பிரிட்டிஷ் ராணியை தலைமையாகக் கொண்டு இயங்கும் காமன்வெல்த் கூட்டமைப்பிலேயேதான் தொடர்ந்து இருந்துவந்தது. இதன்படி பிரிட்டிஷ் ராணியின் ஆளுகையின் கீழ்தான் பார்படோஸ் இருக்கும். இந்நிலையில் பார்படோஸ் நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து ராணியை நீக்கி, நேற்று முதல் முழு குடியரசாக மாற்றியிருக்கிறது. பிரிட்டிஷ் ராணியும் இந்த மாற்றத்திற்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
கட்சியின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாகக் கூறி, முன்னாள் எம்.பி அன்வர் ராஜா, அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். அக்கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெறவுள்ள நிலையில் கட்சித்தலைமை நடவடிக்கை.
தமிழகத்தில் நேற்று பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை: 720
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை: 09
2014-ம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பிற்குப் பிறகு நேற்று 4-வது முறையாக முல்லைப்பெரியாறு அணையில், 142 அடிக்கு தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் பெண் எம்.பிக்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை, `நாடாளுமன்றம் பணி செய்ய அழகான இடமல்ல என யார் சொன்னது?’ எனக் குறிப்பிட்டு காங்கிரஸ் எம்.பி சசிதரூர் ட்வீட் செய்திருந்தது நேற்று முன்தினம் சர்ச்சையானது. இந்நிலையில், சக பெண் எம்.பிக்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை, ``என் மதிப்புக்குரிய, வலிமையான மற்றும் அறிவார்ந்த நாடாளுமன்ற தோழர்களுடன்” என கேப்ஷன் வைத்து ஷேர் செய்திருக்கிறார் கனிமொழி.
இந்திய கடற்படையின் தலைமைத் தளபதியாக இருந்த அட்மிரல் கரம்பீர் சிங் ஓய்வுபெற்றதையடுத்து, புதிய தளபதியாக நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார் அட்மிரல் ஆர்.ஹரிகுமார்.
தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்களுக்கு, கொரோனாவுக்கான இலவச சிகிச்சை வழங்கப்படாது என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் பற்றி மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த, போராட்டம் நடத்தும் விவசாய அமைப்புகளின் சார்பிலிருந்து 5 பேரை கேட்டிருக்கிறது மத்திய அரசு. வரும் டிசம்பர் 4-ம் தேதி நடக்கவிருக்கும் கூட்டத்தில் யார் அந்த 5 பேர் என்பதை விவசாயிகள் முடிவு செய்யவிருக்கிறார்கள்.
2017-ம் ஆண்டு முதல் 2021 செப்டம்பர் 10-ம் தேதி வரைக்கும், சுமார் 6 லட்சம் இந்தியர்கள் தங்கள் குடியுரிமையைத் துறந்திருக்கின்றனர். இந்த தகவலை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளது.
இந்திய அளவில் 2021-ம் ஆண்டின் சிறந்த ஆப்கள் எவை என்று நேற்று கூகுள் அறிவித்துள்ளது. இதன்படி,
- இந்தியாவின் சிறந்த ஆப் - Bitclass: Learn Anything. Live. Together!
- இந்தியாவின் சிறந்த கேம் - Battlegrounds Mobile India.
தமிழகத்தில் நிலவும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் டிசம்பர் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கேரளா - தமிழ்நாடு இடையேயான பொதுப்போக்குவரத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
On This Day - Dec 01
- இந்தியாவின் 16-வது மாநிலமாக நாகலாந்து உதயமான தினம், 1963
- உலக எய்ட்ஸ் தினமாக, டிசம்பர் 1-ம் தேதி 1988 முதல் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. முதல் நோயாளி கண்டறியப்பட்ட 1981 முதல் 2021 வரை, இந்த 40 ஆண்டுகளில் மொத்தம் 3.63 கோடி பேர் எய்ட்ஸ் நோயால் உயிரிழந்துள்ளனர்.
அவ்வளவுதான்!
The Subject Line-னோட இன்னைக்கு அப்டேட்ஸ் உங்களுக்குப் பிடிச்சிருக்கும்னு நம்புறேன். பிடிச்சிருந்தா கீழ இருக்க பட்டன் மூலமா உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க… இன்னும் ஏதாச்சும் இந்த லிஸ்ட்ல சேர்க்கணும், இருக்குற விஷயங்கள்ல ஏதாச்சும் மாத்தணும்னா எனக்கு மெசேஜ் பண்ணுங்க!
திரும்ப நாளைக்கு காலைல 7 மணிக்கு சந்திப்போம்!
Have a Nice day! ☕️
The Subject Line-ஐ சமூக வலைதளங்கள் மூலம் பின்தொடர: